குமார சம்பவம்: பாகம் – 2

அத்யாயம்-11

ப்ரும்மா முதலான தேவர்கள் கங்கையிடம் வந்தனர்.  அவளிடம் விவரங்களைச் சொல்லி அந்த சிசுவை, மனித உருவில் உன் மகனாக ஏற்றுக் கொள். தாயாக அதற்கு உன் பாலைக் கொடு. மகேஸ்வரனின் மகன் வளர வேண்டும் என்றனர்.  கங்கையும் சம்மதித்து பெண் உருக் கொண்டு தன் மார்போடு அணைத்து பாலூட்டினாள். அந்த பாலைக் குடித்த சிசு நொடிக்கு நொடி வளர்ந்தது.  க்ருத்திகா பெண்களும் சீராட்ட வந்தனர்.  உலகத்தில் மிகச் சிறந்த அழகிய வடிவம் உடையவனாக வளர்ந்து விட்டான்.

பாவனமான பாகீரதியும். க்ருத்திகா பெண்கள் அரவணத்தும் செய்த உபசாரங்களாலும்  உலகத்தோர் அனைவரும் கொண்டாடி மகிழும் அந்த குழந்தையை போட்டி போட்டுக் கொண்டு பெருமிதத்தோடு தங்களுக்குள் ரசித்து பேசியபடி வளைய வந்தனர்.    ஆனந்த கண்ணீர் பெருக திவ்யமான குல நந்தனான  குழந்தையை சீராட்டினர். 

அந்த சமயம், பர்வத ராஜ குமாரியுடன், மகேஸ்வரன், விமானத்தில் ஆகாய மார்கமாக அங்கு வந்து சேர்ந்தார். 

இருவரும் இயல்பான அன்பினால் கண்களில் நீர் பெருக , மகிழ்ச்சியுடன், மலை மகளும், கைலாச அரசனும்  ஆறுமுகம் கொண்ட பிறந்து ஆறே தினங்களில் குமாரனாக  வளர்ந்து விட்டவனைக் கண்டனர். 

தேவி,   மகேஸ்வரனைப் பார்த்து, யார் இந்த குழந்தை, திவ்யமான உடலுடன், எந்த பெற்றோர் பாக்யசாலிகள்,  யார் இவன் தாய், அவள் மகா பாக்யசாலியாக இருப்பாள், என்றாள்.  அக்னி, கங்கா, இந்த க்ருத்திகா பெண்கள் அனைவரும் தங்களுடையதாக போட்டி போட்டுக் கொண்டு உரிமை கொண்டாடுகிறார்களே என்பது போல பார்த்தாள்.  இவர்களில் யார் இந்த குமாரனின் தாய்? தந்தை?  ஈசனே! இவர்கள் அல்லாமல், தேவ, கந்தர்வ,சித்த, உரக ,ராக்ஷஸர்கள் இவர்களில் யாரோ இதன் பெற்றோர்களா ?

தெரிந்து கொண்டே கேட்கிறாள் என்பதால் மெள்ள சிரித்த படி, பிரியமான மனைவியை நோக்கிய சந்திரமௌளியான மகேஸ்வரன், தன் மனதின் மகிழ்ச்சி வெளிப்பட குதூகலத்துடன் பதில் சொன்னார். 

கல்யாணி! இந்த வீரன், மூவுலக நந்தனன். சிறந்த வீர நங்கையான உன் மகனே.  தேவர்களுக்கு மிகப் பெரிய நன்மை செய்யவே அவதரித்திருக்கிறான்.  உன்னையன்றி வேறு யாரால் இப்படி ஒரு மகனை பெற முடியும்?

தேவீ! நீதான் இதன் தாய்.  இவன் பிறக்க காரணமானவள். சமுத்திரத்தை ரத்னாகரம் என்கிறோம். அதில் விளையும் ரத்னங்களை வைத்து சமுத்திரம் ரத்னாகரம் ஆவது போல், உன்னில் விளைந்த இந்த சிசுவை, உலகம் புகழும் . உலக மக்களின்  பாட்டின் பொருளாவான்.  காவியங்கள், கீதங்கள் இவைகள் இவன் புகழை பரப்பவே இயற்றப் படும்.  

தேவி, பொறுமையாக கேள். நடந்ததைச் சொல்கிறேன்.  உன்னுடன் இருந்த நான் தான், இந்த பீஜத்தை அக்னியிடம் கொடுத்தேன்.  அவன் தாங்க முடியாமல் கங்கையில் விட்டான். கங்கையிடமிருந்து இவை க்ருத்திகா பெண்களின் உடலில் பரவி அவர்கள் கர்பம் தரித்தனர்.  அமோகமான வீர்யத்துடன் இருந்த கர்பத்தை அவர்களாலும் நிர்வகிக்க முடியவில்லை. சரவண பொய்கையில் விட்டனர். ஆறு பிண்டங்களாக இருந்தவை  ஒன்றாகி இந்த சிசுவாக  உருவாகியது. சராசரமும் கொண்டாடும் படி இந்த பாலகன் வந்துள்ளான். தந்தை தாயின்  இடையில் உள்ள சம்பந்தத்தால், இந்த சிசு பிறந்துள்ளது.  உலகமே கொண்டாட வேண்டிய மகோத்சவம் இது என்றார். 

அசலராஜபுத்ரீ! மலை மகளே இனியும் ஏன் யோசிக்கிறாய். நன் மக்களை பெற்ற தாயார்களின் வரிசையில் நீ முதலாக எண்ணப் படுவாய்.  உலகமே இவனைக் கண்டு பரவசமாகி நிற்கிறது. பிரிய தர்சனன்-  கண்களால் காண அழகன்,  தயங்காதே.  உன் மகன், அள்ளி அணைத்துக் கொள், என்றார். 

அதன் பின், தேவி, அம்ருத மயமான சந்திரமௌளியின் வார்த்தைகளால் மகிழ்ந்தவள், வேகமாக குழந்தையை எடுத்து அணைத்துக் கொண்டாள்.  பரமேஸ்வரனின் மகனை வாழ்த்திக் கொண்டு வந்த தேவலோகவாசிகள், தலை மேல் வைத்த கூப்பிய கைகளோடு வந்து வணங்கினர்.  பரபரப்புடன் விமானங்களில் வந்து இறங்கியவர்கள், ஒருவரையொருவர் முந்திக் கொண்டு குழந்தையைக் காண ஆவலுடன் வந்தனர். 

தேவலோக பாவனமான கங்கா நதியும், க்ருத்திகா பெண்களையும் வணங்கினர். மகன் பிறந்தால் உத்சாகத்துக்கு அளவேது.  பார்வதி தேவியோ, கண்ணெதிரில் இருந்த குமாரனைக் காணக் கூட முடியாமல் கண்களில் நீர் பெருக நின்றிருந்தாள்.  அதன் மேல் இருந்த  கை விரல்களை எடுக்கவே மனமில்லாமல், உணர்ச்சி வசத்தில் இருந்தாள்.  அபூர்வமான அந்த அனுபவத்துக்கு ஈடு ஏது. 

குரல் கம்ம, ஆச்சர்யமும், ஆனந்தமுமாக, மேன் மேலும் பெருகி வளர்ந்த வாத்சல்யம், இவைகளுடன் தேவி தன் மகனைப் பார்த்தாள்.  பல்லாயிரம் கண்கள் இருக்காதா விடாமல் கண்டு கொண்டே இருக்க என்பது போல பார்த்து கொண்டேயிருந்தாள். பிறந்த குழந்தையைக் காண ஒவ்வொரு வினாடியும் புது புது உணர்ச்சிகளுடன்  தாய் மார்களுக்கு அலுப்பே இல்லாமல் இருப்பது இயல்பே. 

வணங்கி முடித்த தேவர்கள் கூட்டத்தை விலக்கி சுகுமாரனான குமாரனை தன் கையில் எடுத்து மடியில் கிடத்திக் கொண்டாள்.  உதயமான பௌர்ணமி சந்திரன் போன்று அழகிய தன் மகனை தன் மலர் போன்ற கைகளால் வருடி மகிழ்ந்தாள்.

ஜகதேக வீரன், உலகில் வீரன் என்றால் இவன் தான் எனும் படி வரப் போகும் தன் மகனை தன் சிசுவாகவே மட்டுமே நினைத்து, அம்ருத்தை வர்ஷிக்கும் கண்களின் கருணாமயமான பார்வையால் பார்த்தாள்.  மூவுலகிலும் முதன்மையான தாயாராக  மதிக்கப்படுபவள்,  தற்சமயம் தன் மடியில் இருப்பவன் தன் மகன் என்றே பெருமிதத்தோடு நோக்கினாள். 

இயல்பான தாய் பாசம்.  அதனால் பெருகிய தாய் பாலை புகட்டினாள். பார்த்துக் கொண்டிருந்த தேவி, கங்கா, க்ருத்திகா பெண்களும் இந்த குமாரனை நாமும் சிறிது நேரம் கையிலேந்தி தாயாக உணர்ந்தோமே என்பதிலேயே பெருமை கொண்டனர்.  தேவியோ, ஒவ்வொரு முகமாக ஆறு முகங்களையும் கவனமாக பார்த்து ஒவ்வொன்றையும் முத்தமிட்டாள்.  ஒரே தண்டில் மலர்ந்த ஐந்து தாமரை மலர்கள் லக்ஷ்மீகரமாக தெரிவது போல ஆறு முகனை,   அவளுடன்  தந்தையான சங்கரன்  தானும் ரசித்து பார்த்தார்.  மகிழ்ச்சியில் அவள் பொற் கொடி போலவும், மன நிறைவில் சந்திரனின் குளுமையை கொண்டவள் போலவும்,  கங்கையின் நீர் பிரவாகமாக ஓடி வரும் உல்லாசமும் ஒரு சேர கொண்டவளாக இருந்தாள்.  

சசி சேகரன் கை லாகு கொடுக்க, அதைப் பற்றிக் கொண்டு குழந்தையுடன் சேர்ந்து எழுந்து விமானத்தில் ஏறிக் கொண்டாள்.  மகேஸ்வரனும், அவள் வசதியாக அமரும் வரை மகனை தன் கையில் அன்புடன் வைத்திருந்தார்.  விமானம் வேகமாக சென்று அவர்களை கைலாசத்தில் சேர்த்தது.

ஸ்படிக பாறைகளால் ஆன அந்த கைலாஸ மலை வாசஸ்தலத்தில் முக்யமான  சிவனடியார்கள் கூடியிருந்தனர்.  சம்புவிடம் அன்புடைய பலரும் வந்து மகோத்ஸவமாக கொண்டாடினர்.  பூ தேவி வந்தாள். அனைத்து  தேவ கணங்களும், பரமேசன் -பார்வதி தம்பதியை வாழ்த்தியும், மகனை ஆசீர்வதித்தும் மகிழ்ச்சியோடு வலம் வந்தனர். 

அவர்களுடைய  தொண்டர்களும் பக்தர்களும், உடன் இருக்கும் கூட்டத்தினரும் சேர்ந்து அவருடைய மகனின் பிறந்த நாளை உத்ஸவமாக கொண்டாட ஏற்பாடுகளை முனைப்புடன் செய்தனர்.  பட்டாலும்  பொன்னாலும், கற்பக மரங்களின்  இலைகளாலும்,  தோரணங்கள் கட்டினர்.  கந்தர்வ, வித்யாதர சுந்தரிகள் வந்தனர். மங்கள கீதங்களைப் பாடினர். கிரி ராஜ புத்ரி அவர்களுக்கு தகுதியான சன்மானங்கள் அளித்தாள்.  அவர்களும் தாங்கள் பெற்ற மகனைக் கொண்டாடுவது போலவே அட்சதைகள்,தூர்வா எனும் புல் இவைகளை தலையில் போட்டு ஆசீர்வதித்தனர்.  தூக்கி மடியில் போட்டுக் கொண்டு மகிழ்ந்தனர். மா பெரும் கோஷங்கள், வாத்தியங்களுடன் அப்சர பெண்கள்  பாட பலர் நடனமாடினர்.  வாயு சுகமாக வீசியது. திசைகள் பிரகாசமாக இருந்தன. அக்னியும் புகையின்றி மங்களமாக இருந்தான். தண்ணீர் சுத்தமாக, தெளிவாக இருந்தது.  வான மண்டலமும் உத்ஸவத்தில் கலந்து கொண்டது போல நிர்மலமாக இருந்தது. 

சங்கத்தின் ஒலி கம்பீரமாக கேட்டது.  துந்துபிகள் அத்துடன் இணைந்து இசைக்கப் பட, தேவ லோக வாசிகள், தங்கள் விமானங்களில் வந்து பூமாரி பொழிந்தனர்.  மகேச-மலைமகளின் மகன், அவனுடைய பிறப்பை கொண்டாடும் தினம் சராசரமும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.  தாரகாசுரனின் ராஜ்ய லக்ஷ்மி தான் கவலை கொண்டாள். 

பாலகன் வளர்ந்தான். ஒவ்வொரு நாளும் புதுப் புது விளையாட்டுகள், லீலைகளால் பெற்றோரை. மன மகிழச் செய்தான். அது இயல்பானதே. மகேஸ்வரனும், சைல சுதா என்ற பார்வதியும் ஒரே சமயத்தில், பற்கள் இன்னமும் பல் முளைக்காத பாலகனின் முகத்தில் முத்தமிட்டு மகிழ்ந்தனர்.  மழலையான பேச்சினாலும், தடுமாறி இளம் நடை பயிலுவதிலும் அவர்களை சதா ஆச்சர்யமும், ஆனந்தமும் அடைய செய்தபடி வளர்ந்தான்.  காரணமின்றி சிரிப்பான். வீட்டின் பல இடங்களிலும் ஓடியும், புழுதியில் புரண்டும் குழந்தைகளுக்கே உரிதான சேட்டைகள்.  மடியில் அமர்ந்தபடி ஏதாவது சம்பந்தமின்றி சொன்னால் கூட பெற்றோர் பெரிதும் மகிழ்வர்.    

மகேசனின் கண்டத்தில் உள்ள பாம்பின் பற்களை எண்ணி சிரிப்பான். பத்து ஐந்து என எண்ணத் தெரிந்து கொண்டான். அவர் கழுத்தில் கிடக்கும் கபால மாலையின் கண்களில் விரலை விட்டு வேடிக்கை பார்ப்பான். எதைச் செய்தாலும் கொண்டாடியே மகிழ்ந்த பெற்றோர், மறுக்காமல் அதையே பெரிதாகச் சொல்லி மகிழ்வர். சடைகளின் இடையில், சந்திர கலையை எட்டிப் பிடித்து மகிழ்ந்தால், தந்தையும் உடன் ரசித்து மகிழ்வார். அதற்காக அவர் சடையை பிடித்து இழுப்பான். 

இவ்வாறு இளம் குமாரனின் விளையாட்டுகளுடன் நாட்கள் வேகமாக நகர்ந்ததைக் கூட பெற்றோர் அறியவில்லை.  லலித லலிதம்- அழகிய ரசிக்கத் தகுந்தவை, சாந்த்ரானந்தம்- அத்யந்த மனோகரமான பால விளையாட்டுக்கள் இவைகளே கவனமாக இருந்தவர்கள் அடுத்த ஆறு நாட்களில் மகன் வளர்ந்து நவ 

யௌவன தாருண்யம் என்ற – யுவனாக நின்றதைக் கண்டு திகைத்தனர்.  அனைத்து சஸ்திரங்கள் பற்றியும் அறிந்து கொண்டு விட்டான்.  சாஸ்திரங்களையும் அதே போல அறிந்து கொண்டு விட்டான். மகேஸ்வரனின் மகனுக்கு எது தான் எட்டாதது.  (பூ உலகில் ஒரு ஆண்டு தேவ லோகத்தில் ஒரு நாள் என்பது ஒரு செய்தி).

( குமாரோத்பத்தி என்ற பதினொன்றாவது அத்யாயம் நிறைவுற்றது )

குமார சம்பவம் - மஹா காவ்யம்

குமார சம்பவம் மஹா காவ்யம்- 10 குமார சம்பவம் மஹா காவ்யம்- 9

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.