குமார சம்பவம் மஹா காவ்யம்- 9

அத்யாயம்-9  

ஒரு நாள், சர்வாந்த்ர்யாமியான பகவான், தன் அறையில் அன்னிய ஜீவன் ஏதோ ஒன்று வந்திருப்பதை உணர்வால் அறிந்தார்.  ஒரு புறா தன் சிறகுகளை விரித்துக் கொண்டு அப்பொழுது தான் வந்து இறங்கியது போல தென் பட்டது. பார்த்தவுடன் தெரிந்து கொண்டார் யார் என்று.   புறாவின் வேஷத்தில் வந்திருப்பது அக்னியே.  அதைக் கண்டதும், அகாலத்தில், எந்த முன்  அறிவிப்பும் இன்றி வந்து நின்றதால் பயங்கரமாக கோபம் கொண்டார்.   அக்னி தன் ஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டான். பயத்தால் நடுங்கியவன், அழும் குரலில் தான் வந்த தூது செய்தியைச் சொன்னான். ஸ்மராரி அவர். காமனையே தகித்தவர். தடுமாறியபடி பேசலானான். 

ப்ரபோ! உலக நாயகன் தாங்களே. தேவ லோக வாசிகளின் கஷ்டங்களையும் தீர்ப்பவர். அதனால் தான் சுரேந்திரன் முதலானோர் உங்களிடம் என்னை அனுப்பி உள்ளார்கள். தைத்யர்களால் துன்புறுத்தப் பட்டு உங்களை சரணடைகிறார்கள்.  ஆபத்பாந்தவன், ஆபத்து வந்தால் பந்துவாக காப்பவன் தாங்களே. 

மனைவியுடன் நீங்கள் இருக்கும் இடம் தெரியாமல் தேடித் தேடி கண்டு கொண்டோம். நூறு ருதுக்கள் கடந்து விட்டன. (நூறு வருஷங்கள்)  உங்கள் தரிசனம் பெறாமல் தேவர்கள் தவிக்கிறார்கள். தீனர்களாக உங்களுக்கு செய்யும் சேவைகளும் செய்யாமல் இந்திரன் முதலான அனைவரும் வருந்துகிறார்கள்.  நேரில் காண்போமா என்று எதிர் நோக்கி என்னை இந்த புறா வேடத்தில் உங்களிடம் தூது அனுப்பி இருக்கிறார்கள்.  ஹே வித்வன்! இது தான் காரணம், நான் முன் அறிவிப்பின்றி இங்கு வந்து சேர்ந்தேன். 

ப்ரபோ! பகவன்! க்ஷமஸ்வ. பொறுத்தருள வேண்டும். தேவேந்திரனின் ஆணையை ஏற்று செயல்படும் தூதனாக வந்த நானும் உங்களையே சரணடைகிறேன்.  தவறான காலத்தில், அனுமதியின்றி வந்த என்னையும் பொறுத்தருள  வேண்டும். 

பகவானே! எங்கள் வேண்டுகோளையும் கேளுங்கள். உங்கள் மகனை வேண்டுகிறோம்.  இந்திரன் படைக்கு சேனானி- தலைவனாக இருந்து தேவலோகத்தை காக்க அவனால் தான் முடியும். தேவ லோக தலைவனாக, தேவ ஐஸ்வர்யத்தை ராஜ்ய லக்ஷ்மியை அவன் பொறுப்பில் விட தேவராஜன் காத்திருக்கிறான். மூவுலக நாயகனாக, காக்கும் பொறுப்பை உங்கள் மகன் தான் ஏற்று செய்ய வேண்டும்.  உங்கள் அருளால் தான் இவையனைத்தும் சாத்யமாகும்.

ஜாதவேதன் எனப்படும் அக்னியின் வேண்டுகோளைக் கேட்டு பகவான் ஸ்ரீ சங்கரன் மகிழ்ந்தார்.  தகுதியான வேண்டுகோளை தகுதியான சொற்களுடன் சொன்னதாக பாராட்டினார்.  அழகிய சொற்களால், தங்கள் தலைவர்களை  விவரங்கள் அறிந்தவர்கள் மகிழச் செய்கின்றனர்.   காரியத்தின் சித்தி- நிறைவேறுதலும் அதைச் சார்ந்தே இருக்கும் என்பதாக. 

மதனனை வென்றவர் எனப் புகழப் படும் பகவான் ஈசன், மனம் நிறைந்து வாழ்த்தினார். தாரகாசுரனை வெற்றி கொள்ள வேண்டும் என்பது தானே அவர்கள் எதிர்பார்ப்பு.  சக்ரன்-இந்திரனின் சேனாபதியாக, வெற்றி வீரனாக, அகில லோக நாயகனாக விளங்கப் போகும் தன் மகனை மனதிலேயே திட்டமிட்டுக் கொண்டார். 

யுகாந்தாகால அக்னி போன்ற தன் வீர்யத்தை அக்னியிடம் அளித்தார்.  (மனைவியுடன் கூடலுக்குக் பின் வெளி வந்த ரேதஸ்) மற்ற எவராலும்  தாங்க முடியாத அமோகமான அவருடைய வீர்யம். (ஊர்த்வ காமினி – மேல் நோக்கிச் செல்வது அவருடைய வீர்யம், கீழே விழாது எனப்படுகிறது- அக்னியின் கதி மேல் நோக்கியே செல்லும் என்பதாலும்) 

அதை அக்னி மிகுந்த பயத்துடனும், கவனத்துடனும் ஏற்றுக் கொண்டான். தன்னுடைய மூச்சுக் காற்று பட்டே மலினமான கண்ணாடியை, தூக்கிச் செல்பவன் போல, தன்னையே மலினமாக்கிய சங்கரரின் தேஜஸை கவனமாக பாதுகாத்து வைத்துக் கொண்டான். 

சர்வபக்ஷன்- கிடைத்ததை உடனடியாக முழுவதுமாக உண்பவன் என்று அக்னிக்கு பெயர். பகவான் சொன்னார், சர்வபக்ஷ! மிகப் பெரும் செயலை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.   என்றார். தேவி மலைமகளோ சபித்தாள்.  எனக்குரியது என் மகனைப் பெறுவது என்ற செயல், அதைப் பறித்த உன்னை குஷ்டம் வந்து ஸூழட்டும் (புகை அக்னியுடன் இணைந்தே இருப்பது)  

தேவியின் சாபத்தை ஏற்றுக் கொண்ட அக்னி, தன் இயல்பான ரூபம் இல்லாமல், பனி ஸூழ்ந்து மனினமாக சரோஜ மலரின் கோசம் மகரந்தங்களுடன் இருப்பது போல, அக்னி ரூபமே போல உக்ரமான சங்கர வீர்யத்தை மறைத்து எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றான்.  தக்ஷணின் சாபத்தினால் க்ஷயம்- குறையும் தன்மையை- பெற்ற சந்திரன் போல ஒளி இழந்து வெளியேறியது போல என்று உதாஹரணம். 

கிரிஜா- மலை மகள் பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளானவளாக இருந்தாள். தனிமையில் இருந்த தங்கள் இருவருக்கும் இடையில் வருவதாவது என்று அக்னியிடம் வெட்கம், அதனால் கோபம்,  அவளைச் சமாதானப் படுத்த கிரீசன் முயன்றார். 

அவள் கண்ணீரை தன் மேலாடையால் துடைத்து, சந்திரனுடன் ஒப்புவமையாகச் சொல்லப் படும் அவள் முகத்தை தன் கையில் ஏந்தி, கண்ணீரால் கலைந்து வழிந்த அஞ்சனம் -கண் மை- துடைத்து பலவாறாக சமாதானம் செய்தார். 

சமாதானமாக சொல்லாலும், செயலாலும் அவள் மனக் குறையைத் தீர்த்தார்.  காற்று வீசி தாபம் குறைவது போல. (காளிதாசனை’ உபமா காளிதாஸஸ்ய’ என்பர். உவமைகள் அவருடைய சிறப்பு) 

கேசமும், அதில் ஸுடியிருந்த மலர் மாலைகளும் அவிழ்ந்து தொங்கின.  அதை சரி செய்தபடியே பேச்சுக் கொடுத்தார்.  சந்திரனை தன் தலையில் ஸுடிய பெருமான், பாரிஜாத மலர்கள் தரையில் சிதறிக் கிடப்பது போல அவள் கேசத்தின் மலர்கள் உடல் முழுவதும் இரைந்து பாதங்களில் வணங்கி கிடக்கும் பக்தர்கள் போல பாதங்களில் விழுந்து கிடந்ததாக கவியின் வர்ணனை. 

கன்னங்களின் வாசனை திரவியங்கள் பூசியிருந்தது, அதன் மேல் வழிந்த கண்ணீரால் கலைந்து கிடந்ததை கை விரல்களால் அளைந்தது மந்த்ராக்ஷரங்களை எழுதுவது போல இருந்ததாம். இதுவும் காவ்யாலங்காரம். இவரால் சபிக்கப் பட்டு மறைந்திருந்த காமன், இது தான் சமயம் என்று அவள் முகமாகிய சக்கரத்தில்  வந்து இறங்கியது போல் இருந்ததாம். 

காங்கேயன் எனப்படும் ஹரன், மேரு மலையின் மகள் அவள் என்பதையும், குரல் வளைவில் ஸ்வர ப்ரஸ்தாரங்கள் இருப்பதையும் சுட்டிக் கேட்டு, திடமான ஸ்தனங்களையும் புகழ்ந்து பேசி சமாதானம் செய்தார். கங்கா ப்ரவாஹம் போல அழகின் பெருக்கு லக்ஷ்மீ கரமாக இருப்பதாகச் சொன்னார்.  மனோ பவன் எனும் மன்மதனின் பாசத்தால் கட்டப் பட்டவர் போல ஒவ்வொரு அங்கமாக வர்ணித்தார். 

தன் மூன்றாவது கண் அக்னியே என்பதைச் சொல்லி, புத்தம் புது நீலோத்பல புஷ்பம் போன்ற அவள் கண்களில் இயல்பான சோபையை வரவழைத்தார்.  தன் உயிருக்குயிரான வாழ்க்கைத் துணைவி, அவள் முகம் வாட பொறுக்காத சாதாரண ஆண் மகன் போல அவளை சமாதானப் படுத்தினார்.  சௌபாக்யவதி சதி, மெள்ள மெள்ள இயல்பானவள் ஆனாள்.  சதி பதிகள் அன்யோன்யமாக இருப்பவர்களில்  அம்பாவான சதிக்கு இணை யாரும் இல்லை என்பது பொதுவான கருத்து.  அதைத் தான் கவி சௌபாக்யவதீஷு துர்யாம் என்று வர்ணிக்கிறார். 

அவள் சகிகள் விஜயா, ஜயா என்பவர்கள் வந்தனர்.  வழக்கமாக செய்யும் பணிவிடைகளைச் செய்தனர். நீராடவும், அலங்கரித்துக் கொள்ளவும் உதவினர்.  ராஜ சபைக்கு செல்லத் தயாராக ஆனவளை வந்திகள் பாடியும், வாத்யங்கள் வாசித்தும் வரவேற்றனர்.  தாள வாத்யங்களுடன் கந்தர்வர்கள் வந்தார்கள். சங்க த்வனியும், பினாக  பாணியை துதிக்கும் சுப்ரபாதங்களும் சுஸ்வரமாக  கேட்டன.   

தேவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். வாசலில் காவல் இருந்த நந்தி அவர்களை கிரமமாக உபசரித்து அழைத்து வந்தார்.  அவர்கள் தங்கள் வணக்கத்தை தெரிவிக்க வந்திருப்பதை பகவான் ஹரனிடம் வந்து தானும்  கை கூப்பி வணங்கியபடி தெரிவித்தார். 

மஹேஸ்வரன், தன் மானஸ ராஜ ஹம்ஸீ என ஹிமாத்ரி மகளை கைப்பற்றி அழைத்துக் கொண்டு வந்திருந்த தேவர்களை சந்திக்க சபைக்கு வந்தார்.  மஹேந்திரன் முதலான தேவர்கள் தலையில் கூப்பிய கைகளை வைத்த படி வந்து வணங்கி மூவுலகத்துக்கும் தாயான பார்வதி தேவியையும் வணங்கி நின்றனர். 

அவர்களிடம் குசலம் விசாரித்து விட்டு அவர்கள் அகன்றதும்,  தன் வ்ருஷப வாகனத்தில் நந்தியின் உதவியுடன் சைல புத்ரியும் ஏறிக் கொண்ட பின் புறப்பட்டார்.  மனோ வேகத்தில் இருவருமாக வானத்தில் செல்லும் சமயம் எதிர் பட்ட மற்ற தேவர்களும், கந்தர்வர்களும் தங்கள் விமானங்களில் சஞ்சரித்தவர்கள் வணங்கியதை ஏற்றுக் கொண்ட படி சென்றார். 

உடல் ஆயாசங்களை நீக்கும் சக்தி வாய்ந்த ஆகாய கங்கை ஜலத்தில் மூழ்கி எழுந்து, பாரிஜாதம் முதலான மலர்களின் மணத்தையும் ஏந்தியபடி வந்த காற்றை அனுபவித்தபடி கிரிஜா,கிரீச என்ற இருவரும் சென்றனர். கைலாச மலை, ஸ்படிகம் போல தெரிந்தது. மலையரசன் என்படும் கைலாச மலை.  வானத்தை தொட்டு விடும் போன்ற உயர்ந்த மலை.  சந்திரனை சிரஸில் தரித்த பகவான் ஹரனைப் போலவே, அதன் முடியிலும் சந்திர பிம்பம் தெரிந்தது.  இவர் போகி- பாம்புகளை தரித்திருப்பது போல அந்த மலையின்  சாரலில் உல்லாசமாக பொழுதைக் கழிக்க வந்த போகிகள் நிரம்பியிருந்தனர்.  பஸ்மத்தை -விபூதியை தரித்த பகவான் ஹரன் போலவே வெண்மையான பனி மூடிய சிகரத்தோடு மலையும் காணப்பட்டது. ஸ்படிக மலையில் தங்கள் பிம்பத்தைப் பார்த்து அந்த உல்லாச பயணிகள் ஒருவரையொருவர் சீண்டி மகிழ்ந்தனர்.  அதில் சந்திரனின் தோற்றம் மேலும் ப்ரகாசமாகத் தெரிவதைக் கண்டு மகிழ்ந்தனர்.  அதன் களங்கமும் கஸ்தூரியின் கருமையுடன் மணமும் உள்ளதா என்று சோதித்து பார்ப்பது போல பார்த்தனர்.  அவர்கள் ஏறி வந்த யானைகளும் தங்கள் பிரதி பிம்பத்தைக் கண்டு ப்ரமித்தன.  சித்தர்களும், அவர்களைச் சார்ந்த பெண்களும் அந்த ஸ்படிக மலையில் சாரலில் இருந்தவர்கள், இரவில்  தாரகைகளைப் பார்த்து தங்களுடைய முத்து மாலைகளோ என சந்தேகம் தோன்ற தங்களுடைய உடலில் அவை இருக்கின்றனவா என பார்த்துக் கொண்டனர். அத்புதமான அந்த காட்சியை கண்டும் மன நிறைவை அடையாதவர்கள், இரவில் தலையில் சூடாமணி போல மலையுச்சியில் சந்திரன் உதித்ததைப் பார்த்து பரவசமானார்கள்.  தம்பதிகள் அந்த இரவின் அழகில் சுற்றி வந்தபடி இருந்தனர்.  தேவர்கள் பிரிய மனைவிகளுடன் ப்ரதி பிம்பங்களைப் பார்த்தபடி ஒன்றே பலவாக தெரிகிறது, அதுவே இந்த ஸ்படிக மலையின் விசேஷம் என பேசிக் கொண்டனர்.  அவர்களுடன் தேவ தேவனும், கௌரியுடன் அவர்களின் சேஷ்டைகளை ரசித்தபடி சென்றனர்.  நந்தி முன்னால் வழி காட்டுவது போல செல்ல, மெதுவாக பின் தொடர்ந்தனர்.  முன் நெற்றியில் குழல்கள் அலைய சுகமான அந்த ஸூழ்நிலையை இருவரும் அனுபவித்தனர்.  காலிகா வாக கபால மாலை தரித்து ஆடும் தேவி, நடனமாடினாள்.  அவளை அணைத்தபடி ஈசனும் உடன் ஆடி, காமனை வென்றவரே, காம வசம் ஆனது போல ஆனார்.  

அந்த மலைச் சாரலில் அத்புதமான இயற்கை எழில் கொஞ்சும் இடம், அந்த சமயம்  நந்தி முதலான மற்றவர்களும் அனுசரணையாக  பாடியும், தாளங்கள் இசைத்தும், வாத்யங்களை வாசித்தும் ஆடலுக்கு துணை போவது போலவும்  மனோஹரமாக விளங்கியது. 

(இது வரை ஸ்ரீ காளிதாஸரின் குமார சம்பவ காவ்யத்தின் கைலாஸ கமனம் என்ற ஒன்பதாவது அத்யாயம். )

(தொடரும்)

குமார சம்பவம் - மஹா காவ்யம்

குமார சம்பவம் மஹா காவ்யம்- 8 குமார சம்பவம் மஹா காவ்யம்- 10

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.