Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

மிளகு அத்தியாயம் எழுபத்தாறு

1606 மிர்ஜான் கோட்டை

யுத்தம் ஆரம்பித்து விட்டது. 

மகாராணி சென்னபைரதேவி தொடங்கி வைக்கவில்லை. நேமிநாதன் தொடங்கினானா, தொடங்கினான் என்றால் எப்போது என்று அவனுக்கே தெரியாது. 

என்றாலும் அடிதடி ஆரம்பமாகியிருக்கிறது. மிர்ஜானுக்கு வெளியே நூறு பேரைக் கையில் வாளெடுத்து அணிவகுத்து இப்படியும் அப்படியும் கோட்டைக்கு வெளியே பிரதட்சணமாக நடக்க வைத்தபோது அந்தக் கூட்டத்துக்கும் கோட்டைக்குள்ளே வழக்கமான பாதுகாப்புக்காகப் பணிபுரியும் அரசு காவல் படைக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் தட்டுப்படவில்லை. 

ஒரே ஒரு விஷயம். காவல்படை வருடக் கணக்காக அணிவகுத்து நடந்து கோட்டைக்கு உள்ளும் வெளியும் சுற்றி மிடுக்காக ஒருசேர காலடி எடுத்து வைத்து நடப்பது போல் ஒழுங்கான நடையும் கம்பீரமும் நேமிநாதன் அவசர அவசரமாகக் கூட்டிய கூட்டத்தில் இல்லை. 

ஏனோ தானோவென்று மிர்ஜான் கோட்டையை பிரதட்சிணமாகவும் இரண்டு கோஷ்டியாக பிரிந்து இடவலம், வல இடமாகவும் சுற்றிச் சுற்றி வந்தபோது உள்ளே இருந்து ஒரு குதிரை வீரன் கையில் நீலத்துணியில் ஓரமாக மூன்று வெள்ளை வட்டங்கள் மின்னும் ஜெருஸோப்பா நாட்டுக் கொடியோடு வந்து நின்று இரு கைகளையும் வட்டச் சுழற்சியில் ஈடுபடுத்தினான். 

பின்னால் போ, கலைந்து போ என்று அரசு காவல்படை உத்தரவிடும் சமிக்ஞை அது. கோட்டையில் பீரங்கி வேட்டு ஒன்பது முறை முழங்கி யுத்தம் ஆரம்பித்ததாக அடையாளம் காட்டியது.  கோட்டை முரசங்கள் அதிர்ந்து ஒலித்தன. எதிரணியின் எக்காளங்கள் அவ்வப்போது ஊதப்பட்டு யுத்த சூழலை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டது. 

நேமிநாதனின் படைகளை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். வாய் வார்த்தைத் தகராறு அடுத்துத் தொடங்கியது. அது மும்முரமாகி இரண்டு பக்கமும் வாள் பயிற்சி செய்து பழக்கமுடையவர்கள் வாளோங்கி முன்னும் பின்னும் ஓடினார்கள். 

வாள் வீசும்போது மிக அருகில் வந்து தோளிலும் நெற்றியிலும் ரத்தக் காயம் ஏற்பட்டவர்கள் உடனடியாக இரு தரப்பிலும் அகற்றப்பட்டு முதல் சுற்று மருத்துவ உதவியாக காயத்துக்கு துணிக்கட்டு போடப்பட்டது. காயத்தின் தீவிரத்தைப் பரிசீலித்து அவர்கள் ஓய்வு தரப்பட்டார்கள். அல்லது திரும்ப போர் நடத்த அனுப்பப் பட்டார்கள். 

சித்திரம் : அருண்

அரசு காவல் படை வீரர்கள் காயமடைந்தபோது அவர்கள் உடனடியாகக் கோட்டைக்குள் கொண்டு போய் சிகிச்சை அளிக்கப் பட்டார்கள். எதிரணி வீரர்கள் கோட்டைக்கு மேற்கே மரங்கள் நிறைந்த நிலப்பகுதியில் கூடாரம் அமைத்து முதல் உதவி தரப்பட்டார்கள். 

 சங்குகள் ஒலிக்க, முரசுகள் நிதானமாக முழங்கின.  காவல் படை கோட்டைக்குள் போக, உள்ளே இருந்து அடுத்த அலை படையினர் குதிரை வீரர்களாக கோட்டை வாசல் காவலில் ஈடுபட்டார்கள் 

எதிரணி கோட்டைக்கு அடுத்த வெற்று நிலத்தில்  தரையில் குந்தி உட்கார்ந்து, தென்னம்பாளை, வாழை மட்டைகளைக் கிழித்து மடித்து உருவாக்கிய தொன்னைகளில் சோறும் வாழைக் கறியும் உண்டார்கள். உணவு ஹொன்னாவரில் நேமிநாதன் ஏற்பாடு செய்தது.  

நகரத்தில் ரதவீதி மிட்டாய்க்கடையில் இனிப்பு தயாரிப்பது உடனடியாக நிறுத்தி வைக்கப் பட்டு எதிரணி போர்ப்படைக்கு உணவு தயாரிக்க தளவாடங்களும் அரிசியும், புளியும், வெங்காயமும், பச்சை மிளகாயும், வற்றல் மிளகாயும், பூசணியும், பரங்கியும், வாழைக்காயும் பயன்படுத்தப்பட்டன. 

அரசு அணி படையினருக்குக் கிட்டத்தட்ட இது போன்ற உணவு மிர்ஜான் கோட்டை சமையலறையிலும் அதை ஒட்டிய வெளியிலும் சமைக்கப்பட்டு கோட்டைக்குள் பரிமாறப்பட்டது.  அணி அணியாக உண்ண உள்ளே போனார்கள்.  உண்ணக் காத்திருக்கிறவர்கள் கோட்டை வாசலில் காவல் தொடர, உண்டு வந்தவர்கள் அவர்களிடமிருந்து காவலைக் கைக்கொண்டார்கள்.

அடுத்த சங்கு முழங்குதல். முரசு அதிர்தல். பீரங்கி கோட்டைக்குள் இருந்து ஒன்பது முறை ஒலித்தல். யுத்தம் தொடர்ந்தது. சாயந்திரம் ஆறு மணிக்கு முரசு ஒலித்து நிற்க இரண்டு தரப்பும் இன்றைய போராட்டம் ஓய்ந்து திரும்பின. 

முதல் நாள் யுத்தம் கோட்டை முற்றுகையாக ஆரம்பித்து நாள் முடிந்தபோது அரசு தரப்பில் ஏழு பேருக்கும் எதிரணியில் பதினேழு பேருக்கும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டதாக ஒற்றர் படை மகாராணிக்குத் தகவல் அறிவித்தது. உயிரிழப்பு இரு தரப்பிலும் இல்லை என்றும் இரு தரப்பிலும் அறிவிப்பு பதிவிட்டிருந்தது.

ராத்திரி கோட்டை அரசாங்க மாளிகை மண்டபத்தில் சென்னபைரதேவி தலைமையில் பிரதானிகளும் தளவாய், ஒற்றர் படைத் தலைவர் ஆகியோரும் கூடி அன்றைய யுத்த நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. 

படை அனுப்ப, கொஞ்சம் அதிக ஊழியக் காசுக்கு அனுப்பி வைக்க போர்த்துகல் அரசு ஒத்துக்கொண்ட சந்தோஷ சமாசாரத்தை அரச தலைமைப் பிரதிநிதி பெத்ரோ பிரபு அறிவித்துப் போன சந்தோஷ சமாசாரம் பகிரப்பட்டது. 

அடுத்து வரும் நாட்களில் கைகொள்ள வேண்டிய ராஜதந்திரமாக போர்த்துகல் படைகள் தாமதமானாலும் ஜெருஸுப்பா ஊர்க்காவல், ஹொன்னாவர், பட்கல் ஊர்க்காவல் படையினர் ஊருக்கு நூறு பேர் ஆயத்த நிலையில் வைக்கப் பட்டனர். 

வெற்றி முகமாக அரசுப் படை விளங்குவதை சென்னா அறிவித்தபோது நீண்ட கரகோஷம் நிலைத்தது. 

போர்த்துகல் படைகள் வருவதை துரிதப்படுத்த அவர்களின் ஒரு பகுதியை கோவாவில் இருக்கும் போர்த்துகல் காவல்படையில் இருந்தும். டையூவில் இருந்தும், டாமனில் இருந்தும் உடனடியாக ஷராவதி நதியில் பயணம் செய்வித்து அனுப்பவும், அவர்களுக்கு இரண்டு மடங்கு ஊதியம் தரப்படும் என்றும்   வேண்டும் கடிதத்தை உடனே பெத்ரோ பிரபு மூலம் அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. பெத்ரோ இதற்கான உத்தரவை கோவா பிரதிநிதி ப்ரகான்ஸாவுக்கு அனுப்பி உடன்பட வைத்ததாகப் பகிரப்பட்டது. 

பெத்ரோ பிரபுவும் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் பங்கு பெற்றால் அது போர்த்துகல் என்ற  நேச அரசின் நடவடிக்கை என வரவேற்கத் தக்கதாகும் என்று கூட்டம் அபிப்பிராயம் தெரிவித்தது. 

அப்பக்கா மகாராணி படை உதவி அனுப்ப இயலாததற்கு வருத்தம் தெரிவித்து லிகிதம் எழுதியது படிக்கப்பட்டது. இன்னொரு முறை தனிப்பட்ட அன்பும் தோழமையும் அடிப்படையாகக் கொண்டு கடிதம் எழுதுவதாக சென்னா வாக்களித்தபோது அப்பக்கா கேலடி, பில்கி அரசர்களுக்கு பயந்து படை அனுப்பவில்லை என்று புரிந்தது.   

நேமிநாதனும், வகுளாபரணனும் நடத்திய ஆய்வுக் கூட்டம் பாதுகாப்பு கருதி ஹொன்னாவருக்கு வெளியே மாநில எல்லைக்கு அப்பால் அவசரமாக ஏற்படுத்தப்பட்ட கூடாரங்களால் அமைந்த போர் அலுவலகத்தில் ராத்திரி நேரத்தில் தீவட்டிகளின் மட்டுப்படுத்தப்பட்ட ஒளியில் நடைபெற்றது. 

படையினருக்கு பயிற்சியும் அனுபவமும் இல்லாவிட்டாலும், உத்வேகமும் உற்சாகமும் இருப்பதால் வெற்றி முகம் தட்டுப்படுகிறது என்று நேமிநாதன் அறிவிக்க நீண்டு ஒலித்த கரகோஷத்தைத் தொடர்ந்து மிளகு அரசர் நேமிநாதர் வாழ்க, ஜெயவிஜயீபவ கோஷங்களை ரோகிணி ஓங்கிச் சொல்லி கூடியிருந்தவர்களை ஒருசேர முழங்க வைத்தாள். 

படையினருக்கு உணவு, முதல் நிலை மருத்துவ உதவி இவற்றை அவள் தான் ஒருங்கிணைத்து வருகிறாள். நிதியை வகுளாபரணனோடு சேர்ந்து நிர்வகித்து தளவாடங்கள் வாங்க, பழுதுபார்த்து உடனே திரும்பப் பெற என்று பல சிறுசிறு பணிகளை செய்வதில் நேமிநாதனுக்கு உதவியாக அவள் இருப்பாள் என்று அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் நாளும் கோட்டை முற்றுகை தொடர்ந்தது. 

காவல் படையில் கூடுதல் சேதம் ஏற்பட, எதிரணியில் பில்கி மாநில அரசர் திம்மராஜு அனுப்பி வைத்த முதல் நூறு பேர் சேர்ந்து போரணியைப் பலப்படுத்தினார்கள்.  அனுபவம் வாய்ந்த அந்த வீரர்கள் நேமிநாதனை மகிழ்ச்சியடைய வைத்தார்கள். 

பிற்பகல்   போரில் முதல் தடவையாக குதிரை ஏறிவந்த ஓர் அரசு காவல்படை வீரரை நோக்கி குறுவாளை வீசி எறிந்தான் எதிரணி வீரன் ஒருவன். அது காவல் படை வீரர் நெஞ்சில் ஆழப்பதிய குதிரையில் இருந்து சரிந்து விழுந்து அவர் உடனடியாக மரணமடைந்தார். 

அந்த முதல் உயிரிழப்பு யுத்தபூமியில் தொடர்ந்த மவுனத்தை விதைத்திருந்தது. தற்காலிகமாக போர் நடவடிக்கைகளை தன்னிச்சையாக இருதரப்பும் நிறுத்தி வைத்து மௌனமாக நிற்க, இறந்த காவலரின் உடல் சாரட் வண்டியில் கோட்டைக்கு உள்ளே எடுத்துப் போகப்பட பீரங்கி மூன்று முறை முழங்க, விட்டுவிட்டு முரசு அதிர்ந்தது. 

இரு தரப்பு முரசுகளும் அப்படி துக்கம் கொண்டாட, அதற்கு அப்புறம் ஒரு மணி நேரம் பேருக்காக யுத்தம் தொடர்ந்தது. 

நாள் முடிவில் இருதரப்பிலும் தலா முப்பது பேருக்குக் காயம் ஏற்பட்டது. அரசு அணியின் இரவு ஆய்வுக் கூட்டத்தில் சிறு படையணியாக  டய்யூவில் இருந்து போர்த்துகீஸ் ராணுவம் அனுப்பப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

 நாளை மறுநாள் ஷெராவதி நதியில் படகுகள் செலுத்தி அவர்கள் வரும்போது வெற்றி சென்னபைரதேவிக்கு என்று முன்கூட்டியே ஊகிக்கப்பட்டது.  

இது தவிர தயார்நிலை இரண்டாம் கட்ட படையில் நூறு பேர் போரிடத் தயாராக வந்திருப்பதாகவும், நாளை அவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் நஞ்சுண்டய்யா பிரதானி மறுபடியும் பலத்த கரகோஷத்துக்கு இடையே அறிவித்தார்.

போர் தொடங்கி மிர்ஜான் கோட்டைப் பகுதியில் யுத்தம் நடப்பதால், ஹொன்னாவர் நகருக்கு வெளியில் இருந்து தினம் வரும் காய்கறி, இறைச்சி, மீன், பழங்கள், பால் இவை வந்து சேர முடியாமல் நகரில் தட்டுப்பாடு நிலவுவதாக ஒற்றர் படை அறிக்கை  கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. 

ஹொன்னாவர் நகர மக்கள், முக்கியமாக முதியவர்கள் இது குறித்து கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக அந்த அறிக்கை சொல்லியது. போர் எதுக்கு என்று நகரமே கேட்பதாக இவர்கள் மிகைப்படுத்திச் சொன்னாலும், தட்டுப்பாடு உண்மைதான் என்றும் அறிக்கை சொல்லியது. 

ஜெருஸூப்பாவில் கதக் நாட்டிய நிகழ்ச்சி நிறைவுற்று அடுத்து ஹென்னோவரில் அடுத்த கச்சேரிக்காக அங்கே வந்துகொண்டிருந்த மகத்தான கதக் நாட்டியக்காரி அமீராஜான், நகருக்குள் நுழைய முடியாமல் முற்றுகையால் திரும்பிப் போனதற்கு நகரில் பெரும்பான்மையான ஆண்கள் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர் என்று அறிக்கை மேலும் கூறியது. யாருடைய யுத்தம் இது என்று அவர்கள் உரக்கக் கேட்பதாகவும் அறிக்கை சொல்லியது.

 சென்னபைரதேவி விஷம் கலந்த உணவை உண்டு சாகக் கிடப்பதாக ஊரில் பரவிய வதந்தி கூறுவதை பலரும் நம்பியிருப்பதாகத் தெரிகிறது. சென்னா மகாராணி தன் ஆயுளை முடித்துக்கொள்ள தானே அதை உண்டதாகவும், நேமிநாதன் மனைவியான ரஞ்சனா தேவியால் மறைவாக உணவளிக்கப்பட்டதாகவும் இரண்டு மாதிரி வதந்தைகள் பரவியதை அறிக்கை அறிவிக்கிறது. 

யுத்த காலத்தில் தினம் காலையில் நாட்டு மக்களை சந்தித்து வதந்திகள் பரவாமல் அரசு தரப்பு செய்தியை தானே தர சென்னா மகாராணி முன்வந்ததை அவை உடனடியாக பாதுகாப்பு காரணம் காட்டி தள்ளுபடி செய்தது. நஞ்சுண்டய்யா அந்தக் கடமையை நிறைவேற்றுவார்.

ஜெர்ஸூப்பா நகரில் வசிப்பிடங்களில் இருந்து தென் கன்னட, ஆந்திர, தமிழ், மலையாள பிரதேசங்களுக்கு மக்கள் குடி பெயர்வது தொடங்கி விட்டதாக அறிக்கை கூறுகிறது. 

எனினும் மிர்ஜான் கோட்டைக்கு மிக அருகே அமைந்த ஹொன்னாவரில் அப்படியான நடவடிக்கை ஏதும் தட்டுப்படவில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. 

கோகர்ணம், பட்கல் பகுதிகளில் பதட்டமான வாழ்க்கை தொடர்கிறதாகவும் தெரிவிக்கிறது.  ஆட்ட பாட்டங்களும் கோவில் விழாக்களும் ரத்து செய்யப்பட்டிருக்க, அரசு நடவடிக்கை பற்றி செய்தி பகிர்வது மிக அதிகமாகியுள்ளதாகத் தெரியப்படுத்துகிற அறிக்கை நாளை தொடர்வதாக குறித்து முடிவடைகிறது. 

எதிரணி போர் நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் பில்கி அரச்ர் திம்மராஜுவும் கலந்து கொண்டதை நேமிநாதனும் வகுளாபரணனும் சிலாகித்தார்கள். அந்தக் கூட்டத்தில் ஒரு முக்கியமான பிரச்சனையும் விவாதிக்கப்பட்டது. 

வேறுவேறு இடங்கள், சூழலில் இருந்து வரும் எதிரணிப் படையில் ஒற்றுமை அருகி வருவதை தினசரி அறிக்கை சுட்டிக்காட்டியது. முக்கியமாக கேலடி படை வீரர்கள் அணியின் தளவாய் ராஜசேகரனின் அதிகாரத்தை மதிக்காமல் தாந்தோன்றியாகச் செயல்படுவது பலவீனமாகச் சுட்டிக் காட்டப்பட்டது. 

கூட்டத்துக்கு நாளை வெங்கடப்ப நாயக்கரும் வருகை புரிவார் என்ற செய்தியில் முக்கியத்துவம் அழுத்தமாக வைத்து வகுளாபரனணன் பேசினான். 

காவலர் அணி ஓய்வு வயதை நெருங்கும் வயதான வீரர்களால் அமைந்தது என்றும் எதிரணி முப்பது வயது அதிக பட்சமாகவும், பதினெட்டு குறைந்த பட்சமாகவும் அமைந்த இளைஞர் படை என்றும் இது குறித்தே வெற்றி நிச்சயம் என்றும் வகுளாபரணனால் நம்பிக்கையோடு சொல்லப்பட்டது.

மூன்றாம் நாள் காலை தாறுமாறாக எந்த ஒழுங்கும் இல்லாமல் யுத்தம் தொடங்கியது. அரசுக்கு எதிரணிப் படையில் கேலடி வெங்கடப்ப நாயக்கர் அடுத்த ஈடாக அனுப்பிய, ஐம்பது அனுபவம் வாய்ந்த வீரர்களும் சேர, எதிரணி பலமும் போர்த் திறமையும் உடனடியாக அதிகரித்தது. 

கேலடி படைவீரர்கள் யாருக்கும் அடங்காது, கீழ்ப்படியாது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கையில் அரிவாளைச் சுழற்றிக்கொண்டு முன்னேறி ஓடியதைக் கண்டே அரசுக் காவல் படையில் ஒரு பகுதி கலவரமாகி   ஓடியதை எதிரணி ஆச்சரியத்தோடு கவனித்தது. என்றாலும் சிறிது நேரத்தில் அவர்கள் திரும்பக் குழுமி போரைத் தொடர்ந்து கேலடி வீரர்களைப் பின்வாங்க வைத்தார்கள்.

அரசு காவல்படைக்கு நல்ல வேளையாக இருநூற்றைம்பது தயார்நிலை இரண்டாம் கட்டப் படையினர் சேர்ந்தது வலிமையை ஏகமாக அதிகரித்திருப்பது பிரத்யட்சமாகத் தெரிந்தது. 

கேலடி படையணியும் பில்கி அணியும் முற்றுகையை இன்னும் சக்தியோடு முன்னெடுத்துச் செல்வதை உடனடியாக தடுத்து நிறுத்த தயார்நிலைப் படை மிகுந்த உழைப்பை ஈந்து போர்த் தந்திரப் பிரயோகத்தையும் நடத்தியது. 

என்றாலும் பதினோரு பேர் அரசு காவல் படையிலும், முப்பத்தேழு பேர் எதிரணியிலும் போர் நடவடிக்கைகளின்போது இறந்து போனார்கள். அறுபத்தேழு எதிரணியினரும், இருபத்தெட்டு அரசு காவல் படைவீரர்களும் அரிவாள், கத்தி, குறுவாள் காயங்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள். 

இரவு நடந்த அரசணியின் போர் நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் நாளை போர்த்துகீஸ் வீரர்கள் இருபத்தாறு பேருக்கு முன்கூட்டியே வார ஊதியம் மிளகாகத் தரவேண்டும், அடுத்த வாரம் மற்ற படையினருக்கு ஊதியம் வராகன் நாணயங்களாகத் தரவேண்டும் என்பதும் அதற்கான தொகை கருவூலத்தில் இருந்து எடுக்கப்பட்டால் முக்கிய கட்டிட, சாலை மராமத்து நடவடிக்கைகள் நின்றுபோகும் என்றும் பொருளாதார அறிக்கை சென்னபைரதேவி  மகாராணி  அரசவைக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. 

ஊதியத்தை மிளகாக வழங்க மகாராணி ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று நஞ்சுண்டய்யா உட்பட எல்லா பிரதானிகளும் கருத்து சொன்னார்கள். 

அவசரமான தேவையான ஒரே ஒரு முறைச் செலவு என்பதால் என் முடிவை மன்னித்து விடுங்கள், செலவுகளை சுருக்குவோம். போரில் வெல்வோம் என்றாள் மிளகுராணி. ஏனோ யாரும் ஏற்று வாங்கி அந்த கோஷத்தை எதிரொலிக்கவில்லை. 

இன்னும் இரண்டு செய்திகள்.   

பைத்யநாத் வைத்தியர் சென்னபைரதேவியின் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார். 

எதிரணியின் ஆய்வுக் கூட்டத்தில் ரோகிணி கலந்து கொள்ளவில்லை.

***

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து மிளகு அத்தியாயம் எழுபத்தேழு
Exit mobile version