ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி

This entry is part 2 of 3 in the series ஆத்தோரம் மணலெடுத்து

2. பொருளாதார வளர்ச்சியும் மணலும்

கடந்த நாற்பது ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி மேற்கத்திய நாடுகளில் கணிசமாகக் குறைந்து வளர்ந்துவரும் நாடுகளில் வேகம் எடுத்து இருக்கிறது. அதன் விளைவுகளை நகரங்களின் பூதாகாரப் பெருக்கத்திலும் புதிதாக இடப்பட்ட நெடுஞ்சாலைகளிலும் காணலாம். உலக மூலதனமும் பொருளாதார விதிகளை எழுதும் உள்நாட்டு உயர்மட்டத்தினரும் சேர்ந்து நிகழ்த்திய இம்மாற்றங்களுக்கு மணல் அவசியம் என்பதால் இந்தியாவில் அதன் தேவை பத்துமடங்கு அதிகரித்து இருக்கிறது. 

ஒரு நிலப்பரப்பில் கனிமங்கள் அடர்த்தியாகவும் மிக அதிக அளவிலும் இருந்து, அரசியல்வாதிகளின் ஆதரவும் கிடைத்தால் அவற்றை அகழ்ந்தெடுப்பது எளிதாகிறது. எங்கும் நிறைந்து எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத மணல் அதிவேகமாக வெட்டி எடுக்கப்படுகிறது. 

பெருநகரங்கள் நாட்டின் செல்வத்தை மேல்மட்டத்தில் குவிக்கின்றன. அங்கே வாழும் மக்களில் முக்கால் பங்குக்கும் அதிகமான பேர் நிச்சயமற்ற வருமானத்தில். பரம்பரைத் தொழிலை இழந்து கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள். எதையும் செய்யத் தயாராக இருக்கும் இவர்கள் முதுகில் கட்டப்பட்டது உலகப் பொருளாதாரம். இந்த அவலநிலையை பெங்களூரின் பன்மாடிக் கட்டடங்களிலும் அவற்றைப் பராமரிக்கும் பணியாட்களின் சேரிகளிலும் காணலாம். 

கடற்கரையோர மணலுக்கு இன்னொரு ஆபத்து இல்மனைட், ரூடைல் போன்ற கனமான கனிமங்களின் படிவுகள். பல நவீன பொருட்களில் பயன்படுத்தப்படும் டைடேனியம்  டைஆக்ஸைடுக்காக அது அதிக அளவில் கலந்த மணல் வேகமாக அகற்றப்படுகிறது.

JOGEN CHOWDHURY

பி.எஸ்ஸி. மூன்றாம் ஆண்டின் இரண்டாம் வாரம்.  

வியாழக்கிழமைகளில் கல்லூரியின் பொது அரங்கில் சிறப்பு உரை. செயற்கை மூளை, சிறுநீரின் நிறம், சுதந்திர விருப்பம் (ஃப்ரீ வில்) எனப் பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்குப் பயன்படும் தலைப்புகளில் நிபுணர்களின் உரை. நிகில் தவறாமல் போவது வழக்கம். 

அன்று தாவரவியலைச் சேர்ந்த பேராசிரியர் மணிமொழி. அத்துறையில் இருபதுக்கும் அதிகமான பேராசிரியர்கள். பலர் ப்ளான்ட் டெக்னாலஜியில். அவனுக்கு அப்பெயர் புதிதாகப் பட்டதில் ஆச்சரியம் இல்லை. 

இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த நிகில் திரும்பிப் பார்த்தான். அரங்கில் சராசரிக்கு மிகக் குறைவான கும்பல். உரையின் தலைப்பு ‘வாட் ஈஸ் சஸ்டெய்னப்ல்?’ சௌகரியத்துக்குப் பழக்கப்பட்டவர்கள் தவிர்க்க விரும்பும் அக்கேள்வி பலரை வெளியே நிறுத்திவைத்திருக்கும்.   

சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்து அவ்வளவுதான் கும்பல் என விஞ்ஞானப் பிரிவின் தலைவர் மேடைக்கு வந்தார்.  

“டாக்டர் மணிமொழி காய்தே மில்லத் பெண்கள் கல்லூரியில் படித்தபோதே நிலத்தை வளப்படுத்தும் தாவரங்களில் ஆர்வம் காட்டினார். பிறகு, ‘நேஷனல் சென்ட்டர் ஃபார் யலாஜிகல் சயன்சஸி’ல் பிஎச்.டி.க்கான ஆராய்ச்சி. ப்ளான்ட் யோகெமிஸ்ட்ரியில். கடந்த இரண்டு ஆண்டுகள் ‘டெல்லி சஸ்டெய்னப்ல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யுட்டி’ல் தரமான உயர்மட்ட ஆராய்ச்சி.”  எதிர்பார்க்க வைக்கும் இடைவெளி கொடுத்து,  

“இம்மாதத்தில் இருந்து ப்ளான்ட் யாலஜியில் உதவி பேராசிரியர்.” 

சிறு கைதட்டல். 

அதனால் தான் நிகில் அப்பெயரைக் கேள்விப்படவில்லை. 

“தொடர்நிலைத்த சமுதாயம் பற்றிய ஆராய்ச்சி நமக்குப் புதிது. அதில் தன்னை ஈடுபடுத்திய மணிமொழி அறிவியல் துறைக்கு மட்டுமல்ல, நம் கல்லூரிக்கே பெருமை சேர்க்கப் போகிறார். டாக்டர் மணிமொழி!”

உரை நிகழ்த்தப்போகும் பெண் முன் வரிசையில் இருந்து எழுந்து மேடையில் வந்து நின்றாள். 

“தாங்க்ஸ், பேராசிரியர் சிவராவ்! உங்கள் எதிர்பார்ப்புகளின் கனத்தைச் சிமமப்பட்டு முதுகில் சுமந்து நிற்கிறேன்” என்று வளைந்தாள். அரங்கில் புன்னகை பரவியது. 

அக்கணத்திலேயே நிகிலுக்கு அரங்கம், திரை எல்லாம் மறைந்தன. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் மணிமொழியின் தோற்றம்.  

சக மாணவிகள், அம்மாவிடம் நாட்டியப் பள்ளிக்கு வரும் பெண்கள், வீட்டு வாசல் வழியே நடப்பவர்கள் அவன் கவனத்தை இழுத்திருக்கிறார்கள். ஆனால்  அவர்களின் தோற்றம் மனத்திரையில் நிலைத்து நின்றது இல்லை. 

மணிமொழி ஏன்? 

மிகை என்று சொல்லமுடியாதபடி அளவெடுத்த உடல் அங்கங்கள், ஆடைகள் – கத்தரிப்பூ நிறத்தில் பார்டர் வைத்த ரவிக்கை. அதே பார்டருடன் புள்ளிபோட்ட பச்சைப் புடவை. செயற்கைத்தன்மை சிறிதும் இல்லாமல் வார்த்தைகளை அனுபவித்து வெளிப்படுத்திய விதம். அவள் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்ட நளினம். அதுவரை அவன் கேள்விப்பட்டு இராத ஒரு அறிவியல் கொள்கையை அவனுக்குப் புரியவைத்த அறிவு ஆளுமை. எதுவானாலும் மனம் மணிமொழியையே சுற்றிவந்தது. ஒரு தடவை அவள் பார்வை அவன் மேல் படிந்தபோது முன் அனுபவித்திராத மகிழ்ச்சி. 

சஸ்டெய்னப்ல் என்கிற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. அதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்வது அவசியம். 

எல்லா உயிரினங்களையும் போல குறிப்பிட்ட காலமாவது உயிர்வாழ்ந்து நம் இனத்தைத் தொடர வைப்பதற்கு இயற்கை வளங்கள் அவசியம் என்பதால் தீரக்கூடிய வளங்களை மிகக்குறைவாகவும், இயற்கை புதுப்பிக்கும் வளங்களை அவை புதிப்பிக்கப்படும் வேகத்தைவிட மெதுவாகவும் பயன்படுத்த வேண்டும்.  

மனிதகுலம் தொடர்வதற்கு பறக்கும் பூச்சிகளில் இருந்து பாயும் புலிகள் வரை மற்ற உயிரிகளின் இனம் தொடர்வதும் அவசியம். அதற்கு, நாம் இயற்கையின் அங்கம் என்பதை உணர்ந்து அதன் சுழற்சியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.  

வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்ட மூலதனப் பொருளாதாரம் புதுப்பிக்கப்படாத இயற்கை வளங்களை அகழ்ந்தெடுத்து அவற்றைச் சுற்றுச்சூழல் ஜீரணிக்க முடியாத கழிவுப்பொருட்களாக அதிவேகத்தில் மாற்றுவதால் அது வெகுகாலம் தொடர்ந்து நிலைக்காது என நிச்சயமாகச் சொல்லலாம்.  

உரையின் இறுதியில் கேள்விகள். 

வர்த்த நிர்வாகப் பேராசிரியர் ஹேமலதா, 

“பொருளாதாரம் இட்லி மாவு போல. பின்னது உயர வேண்டும், முன்னது வளர வேண்டும். அப்போது தான் அழகு.” 

“மாவு இரண்டு மடங்கு ஆகும் வரை அது சரி. தொடர்ந்து உயரவைத்தால் மாவு புளித்துப்போவது போல, பொருளாதார வளர்ச்சியும் ஓர் எல்லைக்கு மேல் புற்றுநோய்.” 

சிவராவுடன் மணிமொழி அரங்கைவிட்டுப் போகும் வரை நிகில் அவளைப் பார்த்து அங்கேயே நின்றான். 

பஸ்ஸில் வீடு திரும்பியபோது அவன் பாடம் படிக்கவில்லை. அவன் கண் பார்வை ஜன்னலுக்கு வெளியே. மனிதர்கள், ஊர்திகள், அவை எழுப்பிய புகைத்தூசிகள் அவன் கண்ணின் விழித்திரையைத் தாண்டவில்லை. மனக்கண்ணில் மணிமொழி குனிந்தாள், நடந்தாள், வாதங்களைக் கோர்வையாக வைத்தாள், கேள்விகளுக்கு சாமர்த்தியமாகப் பதில் சொன்னாள். வீட்டிற்கு வந்தபிறகும் தாத்தாவுடன் அதிகம் பேசாமல் தன் அறைக்குள் தஞ்சம் புகுந்தான். 

அவளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கணினியில் தேடினான். அங்கே உரையின் ஆரம்பத்தில் தெரிவித்தவை தான். புதிதாக சொந்த விவரம் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் என்ன? கற்பனையில் நிரப்பிக்கொண்டால் போகிறது.  

வகுப்புகள் அறிவியல் கட்டடத்தின் தரைத்தளத்தில். மூன்றாம் மாடியில் மணிமொழியின் சிறு ஆய்வகம். சந்தேகத்தைக் கிளப்பாதபடி காலையில் ஒரு நடை, மாலையில் ஒன்று. அவள் பகுதியைத் தாண்டும்போது நிதானமாக நடப்பான். பார்வையை ஏதேச்சையாக உள்ளே நுழைப்பான். வகுப்புகள் நடத்தும் பொறுப்பு இன்னும் தரப்படாததால் பான்ட்ஸிலும் முக்கால்கை சட்டையிலும் கணினியின் முன்னாலோ, மைக்ரோஸ்கோப்பில் கண்களைப் பதித்தோ அமர்ந்திருப்பாள். அவன் நடக்கும்போது அவள் எதிர்ப்படும் அதிருஷ்ட தினங்களில் மனம் நிறைந்த மகிழ்ச்சி. அவனைப் பார்த்து அவள் பொதுவான புன்னகை கொடுத்தாலும் அவனுக்கு அது சிறப்புப் பரிசு. பெசன்ட் நகரில் இருந்து வரும் பஸ்ஸில் மணிமொழி வந்த இறங்குவதை ஒரு நாள் கவனித்த நிகில் அவளுக்காகக் காத்திருந்து அவள் பின்னால் நடக்கத் தொடங்கினான். பேராசிரியருக்கான கௌரவ ஆடைகள் கூட அவனுக்குக் கவர்ச்சிகரமானவை. 

அந்த உறவின் அர்த்தம்? எதிர்காலம்? பின்விளைவு? போன்ற அநாவசியக் கேள்விகளுக்கு இடம் தராமல் ஒவ்வொரு நாளையும் ஆவலுடன் எதிர்பார்த்து சில மாதங்கள்.

தாத்தா கவனித்துவிட்டார். அதில் அவருக்குத் திருப்தி. பரவாயில்லை, எவளோ ஒருத்தியின் ஈர்ப்பு விசைக்குள் நிகில் சிக்கிவிட்டான். அவள் யார் என்று அவனே சொல்லட்டும். அது வரையில், அவள் யாராக இருக்கும்? 

பஸ்ஸில் தினம் பயணிப்பவள்? ஆலந்தூரில் இருந்தே வருகிறவள், இல்லை இங்கிருந்து போகும் வழியில் காத்திருப்பவள்? 

வகுப்புத் தோழி? எந்தப் பெயர் அவர்கள் பேச்சில் நிறைய அடிபட்டு இருக்கிறது? நந்தினி? நவீனா?  

முகத்தைத் தூக்கி வைத்திருக்கிறானே, இன்று அவள் கண்ணில படவில்லை, பாவம்! 

சந்தோஷமான மாலைகளில் மகளிடம், “பையனுக்கு உப்பு போடாமல் வெறும் தயிர் சாதம் கொடு! குஷியில் முனகாமல் சாப்பிடுவான்” என்று சொல்லிவிட்டு பேரன் பக்கம் ஒரு குறும்புப் பார்வை. அவனுக்கு வெட்கம் கலந்த புன்னகை.  

புத்தாண்டு பிறந்து ஆறாவது செமிஸ்டருக்குள் நிகில் நுழைய இருந்தான்.   

“மேலே என்ன பண்ணலாம்னு இருக்கே? மாமாவைப் போல மருந்து கம்பெனிக்கான எம்பிஏ, பயோடெக்ல டிப்ளமா, மன்சான்ட்டோ கம்பெனில ஃபெலோஷிப்.”   

அதற்கேற்றபடி கோடையில் இன்ட்டெர்ன்.   

“ருக்மணி க்ருஷ்ணாலேயே எம். எஸ்ஸி. பண்ணலாம்னு ஆசை.”  

எல்லாருமே கணினி சார்ந்த துறைகளில் புகுந்தால் எப்படி? அவை இயங்க மின்சாரம் வேண்டும், அவற்றை இயக்குகிறவர்கள் சாப்பிட ப்ளான்ட் பயாலஜி வேண்டும் என்ற ஞானம் பேரனிடம் இருந்து படிபடியாக அவருக்கு வந்திருந்தது. நிகில் போல ஒருசிலர் குறைந்த வருமானத்தில் திருப்தி தரும் வேலைகளில் மூழ்குவது அவசியம்.  

“அப்படியே செய்!” 

அத்துடன் அந்தப் பேச்சு முடிந்ததாகத் தாத்தா நினைத்தார். அவனாகவே,  

“கடைசி செமிஸ்டர்ல மூணு எலெக்டிவ் எடுத்துக்கணும். ஒண்ணு ‘சஸ்டெய்னப்ல் பாடனி’.”  

அது எதைப்பற்றியது ஆனாலும், 

“கேட்கறதுக்கு நன்னா இருக்கு” என்றார் தாத்தா.  

“டாக்டர் மணிமொழி கொடுக்கறா.” 

இக்காலத்தில் பேராசிரியர்கள் எல்லாருக்குமே பிஎச்.டி. வால். 

“ஓ! அப்படியா?” 

அதை அவன் ஏன் சொல்ல வேண்டும்?  

தாத்தா கணினியை எடுத்துவந்து அவளைக் கண்டுபிடித்தார். கல்லூரித் தளத்தில் படத்துடன் கல்வி விவரங்கள்.  

“ம்ம்ம்… இந்த மணிமொழியைப் பார்த்து யாரும், ‘மணிமொழி! நீ என்னை மறந்துவிடு!’ன்னு சொல்ல மாட்டாங்க.” தலையைத் திருப்பாமல், “என் காலத்தில் ‘ஆனந்தவிகடனி’ல் வந்த தமிழ்வாணன் தொடர்கதையின் தலைப்பு. அதிலேர்ந்து அவளுக்கு அந்த அழகான பெயரை வச்சிருக்கலாம்.” என்றார்.  

படத்தை உற்றுப் பார்த்து,  

“என்ன அழகு! என்ன அழகு! கத்தரிப்பூ நிறத்தில பார்டர் வைத்த ரவிக்கை. அதே மாதிரி பார்டருடன் புள்ளிபோட்ட பச்சைப் புடவை. இறுக்கி வாரியிருந்தாலும் அங்கங்கே பிசிர் கூந்தல். சுமாரான வெள்ளை. நல்ல லட்சணமான முகம். அதிகமான மேக்-அப்னு சொல்றதுக்கு இல்ல. கண்களிலும் உதடுகளிலும் பரவிய புன்னகை இருபத்தைந்தைத் தொடமாட்டேன்னு அடம் பிடிக்கறது.” 

தலையைத் திரும்பிப் பார்த்தார். நிகில் முகத்தில் வெட்கம் கலந்த பரவசம். தலையைக் குனிந்துகொண்டான். அவனைக் கவர்ந்தவள்?  

“அழகு ரசிப்பதற்கே!”  

மற்ற விவரங்களைப் படித்தார் 

“பிஎச்.டி. முடிச்சு இரண்டு வருஷம் தான் ஆறது. அதுக்குள்ள எவ்வளவு ரிசர்ச் பேப்பர். கண்ணை மூடிண்டு அவள் அறிவுக்குத் தலை வணங்குகிறேன்” என்று நிஜமாகவே கண்களை மூடிக்கொண்டு, மனக்கணக்கு போட்டார். பிறகு திறந்து, “இந்தப் படம் முன்ன எப்பவோ எடுத்ததா இருக்குமோ?”  

“இல்ல. அவளை நீ நேர்ல பார்த்தா படத்தைவிட இன்னும் வயசு குறைச்சலா சொல்லத் தோணும்.” 

நேர்ல நிறைய தடவை பார்க்கிறான் போல இருக்கிறது. பார்க்கட்டும்! பார்க்கட்டும்! 

“வாரத்தில மூணு க்ளாஸ் தானா?” என்று அவனுக்காக அவர் குறைபட்டுக்கொண்டார். 

இந்த ரகசியம் தாத்தாவுக்கும் பேரனுக்கும் மட்டும். இளம் வயதில் அழகும் அறிவும் நிறைந்த ஒருத்தியின் மேல் பையன்களுக்கு மோகம் வருவது இயற்கை. காலப்போக்கில் அழகின் தாக்கம் குறைந்து அறிவின் உயர்ச்சி மட்டுமே தங்கும். அப்போது ஆசைக்கு பதில் பிரமிப்பு. நிகிலுக்கும் விரைவில் அந்த மாற்றம் நிகழும். திரும்பிப் பார்க்கும்போது, ‘சே! என்ன அசட்டுத்தனம்!’ என்று நினைக்கத் தோன்றும். வெட்கப்பட ஒன்றும் இல்லை. உடல் மற்றும் மன வளர்ச்சியில் ஒரு பாலம். 

நிகில் கல்லூரிக்குக் கிளம்பிப்போனதும் தாத்தா இன்னொருமுறை மணிமொழியின் படத்தைத் திரையில் கொண்டுவந்தார். வயது பதினைந்தாகக் குறைந்தது. மணிமொழி மறைந்து வேறொரு பெண்ணின் படம். அகலமான ஆனால் கட்டான உடல். நெளிநெளியான கூந்தல். பதின்பருவத்தைத் தாண்டினாலும் பசுமையான முகம். அடுத்த வீட்டுக் கொல்லையில் துணி உலர்த்த அவளே புடவையை இடுப்பில் செருகி மூங்கில் கழிகள் நட்டு கொடி கட்டுகிறாள். 

அவளுடன் வயதான மாமனார் மாமியார், அவள் கணவன் இராணுவத்தின் சிறப்புப் பயிற்சிக்காக எல்லைப் பகுதிக்கு ஆறு மாதம் அனுப்பப்பட்டு இருக்கிறான் என்கிற விவரம் அவன் அம்மா வழியாக அவன் காதில் விழுவதற்கு முன்பே…  

தாற்காலிக வேலைக்கு அவள் நிமிர்ந்து நடக்கும் அழகும், வாரக்கடைசியில் அதற்கு உடுத்திய ஐந்து புடவைகளையும் அலசி கொடியில் உலர்த்தி களைப்பு காட்டாத உடல் வன்மையும் ஜன்னல் வழியே அனுபவித்த காட்சிகள்.  

ஒரு நாள் கல்லூரியில் இருந்து திரும்பிவந்தபோது மளிகை சாமான்களை இரண்டு நீண்ட பைகளில் தூக்கி நடந்துசென்ற அவள் அருகில் வேகமாகப் போய்,  

“நான் ஒரு பையைத் தூக்கிண்டு வரட்டுமா?” 

அவனை ஏற இறங்கப் பார்த்து அவனால் சுமக்க முடியும் என்று அவள் தீர்மானிக்க, 

“நான் பக்கத்து வீட்டில இருக்கேன்.”  

“பாத்திருக்கேன்.” 

அவள் அவனைக் கவனித்திருக்கிறாள். அவன் அவளைக் கவனிப்பதையும் பார்த்திருப்பாளோ? 

அதில் இருந்து அவனைப் பார்க்கும்போது எல்லாம், ‘உன்னை நன்னாவே தெரியும்’ என்கிற புன்னகை. 

ஆறு மாதம் முடிந்து அம்மாவிடம் விடைபெற்ற பிறகு வீட்டு வாசலில் நின்றிருந்தவனிடம் ரகசியக் குரலில்,  

“நீ என்னை மிஸ் பண்ணுவேன்னு எனக்குத் தெரியும்” என்று குறும்புடன் சொல்லிவிட்டு வேகமாக நடக்கிறாள். 

இன்னொரு சந்திப்பு நிச்சயமாக இல்லை என மனதின் ஆழத்தில் வருத்தம், சில வாரங்களுக்கு.  

திரையில் மறுபடி மணிமொழியின் படம். 

ம்ம்ம்… தாத்தாவைப் போல பேரன். 

டாக்டர் மணிமொழியின் ‘சஸ்டெய்னப்ல் பாடனி’ வகுப்பில் முதல் நாள். முன் வரிசையில் மூன்று பெண்கள். இரண்டாவதில் நிகில், சற்றுத்தள்ளி ஒரு எம்.எஸ்ஸி. மாணவன். கடந்த சில மாதங்களில் அவனை ஆக்கிரமித்த மணிமொழியின் பிம்பத்துக்கு பதில் நிஜ மணிமொழி எதிரில். முதலில் இரண்டிற்கும் யார் உசத்தி என்று சிறு போராட்டம். அறிமுகங்களுக்குப் பிறகு பாடம் ஆரம்பித்ததும் ஒரு சமரச உடன்படிக்கை. வகுப்பில் நிஜம், அவள் நேரில் இல்லாதபோது கற்பனை. 

ஒரு விவரம் விடாமல் அவள் பாடங்களை மூளைக்குள் செலுத்தினான். கேள்விகளுக்குக் கையை உயர்த்திவிட்டு பதில் சொன்னான். 

“ஒரு நிலப்பரப்பின் தாங்கும் சக்தி என்பது…”  

“நிலத்தின் வளம் குன்றாமல் அதில் தொடர்ந்து வாழக்கூடிய உயிரினங்களின் தொகை. ஆண்டுக்கு ஆண்டு அது மாறும் என்பதால் ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் நீண்ட கால சராசரி எண்ணிக்கையை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தலாம்.”  

“க்ரேட்!” 

சில சமயம் அவன் கேள்விகள் அவளை யோசிக்கவைத்தன. 

“தொடர்நிலைத்த பொருளாதாரத்தில் லாபம் இல்லை என்றால் அது எப்படி சாத்தியம்?”  

“லாபம் இல்லை என்பதால் தான் அது பலகாலம் தொடரும்.” 

“இன்னும் விளக்கம் சொல்ல முடியுமா?”  

“எந்த பொருளாதாரத்திலும் தேய்மானம் உண்டு. அதை ஈடுசெய்ய…” 

வகுப்பின் இறுதி நாள். அது முடிவுக்கு வரபோகிறதே என்கிற வருத்தம். அவளுடைய தொடர்பை எப்படித் தொடர வைப்பது? 

பாடம் முடிந்ததும் மணிமொழி,

“இது நான் கற்றுத்தந்த முதல் வகுப்பு. அதில்…”  

“வெற்றி! வெற்றி!”  

“தாங்க்ஸ்!” என்று புன்னகைத்தாள். “நீங்களும் அவ்வப்போது நான் கொடுத்த எல்லா தேர்வுகளிலும் நன்றாகச் செய்ததில் எனக்குத் திருப்தியும் சந்தோஷமும். அதனால், இன்னொரு முறை கேள்விகள் கொடுத்து உங்கள் நேரத்தை வீணாக்கப்போவது இல்லை. அதற்கு பதிலாக… வர்த்தகம், பொருளாதாரம், நிர்வாகம் துறைகளில் இருப்பவர்களுக்குப் புரிகிறமாதிரி தொடர்நிலைத்த சமுதாயம் பற்றி ஒரு கட்டுரை. ஒரு பக்க அளவில். அவர்கள் மனதை அது மாற்றமுடியுமா பார்க்கலாம்.”   

இரண்டு நாள் யோசித்து நிகில் எழுதிய கட்டுரை. படித்துப் பார்த்த தாத்தா, “எனக்கே புரியறது” என்று சொன்னதும் மணிமொழிக்கு அனுப்பினான். 

“தாத்தா! எஸ்ஸே மணிமொழிக்கும் பிடிச்சிருக்கு. அதைப் பத்தி பேச என்னைக் கூப்பிட்டிருக்கா.” 

“உனக்காக நான் சந்தோஷப்படறேன்.”  

எலிகளும் மனிதர்களும் – Of Mice and Men  

புற்கள் செடிகள் கொடிகள் மரங்கள் நிறைந்த ஒரு மிதவெப்பக் காடு. ஆண்டின் ஒவ்வொரு பருவத்திலும் பூக்கள் மலர்ந்து காய்களாக மாறி வெடித்து விதைகள் சிதற உயிர்வகைகளின் இனம் தொடர்கிறது. பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு பூச்சிகள். விதைகளை நெடுந்தூரம் பரப்ப பறவைகள், சுண்டெலிகள். விலங்குகளின் கழிவுகள், சூரியவொளி, காற்றின் கார்பன் டைஆக்ஸைட், மண்ணின் கனிமங்கள் மற்றும் மழைநீர் – இவற்றை வைத்து தாவரங்கள் க்ளுகோஸ் தயாரித்து அதில் இருந்து எண்ணற்ற – அவற்றின் பயன் முடிந்ததும் சிதைந்துபோகும் – உயிர்-வேதியியல் பொருட்களை உருவாக்குகின்றன. 

அந்தக் காட்டின் வளமான காலத்தில் தின்னத்தின்னத் தீராத விதைகள். சுண்டெலிகளின் எண்ணிக்கை பெருகியபோது அதைக் கட்டுக்குள் வைக்க கழுகுகள், ஆந்தைகள், பாம்புகள். வறட்சியில் விதைகள் மட்டுமல்ல எலிகளை வேட்டையாடும் உயிரினங்களும் குறைவதால் எலிகளில் பல உயிர் பிழைக்கின்றன. மறுபடி மழைபெய்து விதைகள் சிதற, எலிகள் வயிறு நிரம்பத் தின்று, ஆந்தைகள் பாம்புகள் விருந்து சாப்பிட… இப்படியே எலித்தொகை காட்டின் தாங்கும் எல்லைகளுக்குள் மாறிமாறி ஊசலாட… கணக்கில்லாத பருவங்கள், ஆண்டுகள். 

ஒரு நாள், இரை தேடப்போன சுண்டெலி மிக்கி திசைதப்பி எப்படியோ கழுகுகளின் பார்வையில் படாமல் அலைந்து காட்டின் எல்லைக்கு வந்துவிட்டது. அங்கே அதுவரை அது பார்த்திராத ஒரு பருமனான மரம். ஆனால் அதற்கு இலைகள் கிளைகள் இல்லை. அதைக் சுற்றி வந்தபோது எறும்பு நுழையும் அளவுக்கு ஒரு சின்ன துளை. அதிசய மரத்தின் உள்ளே என்ன இருக்கும்? பற்களால் கீறி அதைப் பெரிதுபடுத்தியது. என்ன ஆச்சரியம்! பத்துப் பன்னிரெண்டு நெல் மணிகள் ஓட்டை வழியே வெளியே வந்து விழுந்தன. மிக்கியின் பசி தீர்ந்தபிறகும் பாதிக்கு மேல் மிச்சம். அலைந்த களைப்பில் உறக்கம். எந்தப் பிரயத்தனமும் இல்லாமல் யாருக்கும் அஞ்சி சாகாமல் நெல்லைக் கொறித்துத் தின்றுகொண்டே இருப்பதாகக் கனவு. விழித்ததும் புது பலத்துடன் களஞ்சியத்தைச் சுற்றிப்பார்த்தது. காட்டில் காணாத இன்னும் சில அதிசயங்கள். 

மிக்கியின் தலையில் சாதாரண எலிக்கு இல்லாத மூளை. நெல் மணிகள் குவித்த களஞ்சியம், அங்கொன்றும் இங்கொன்றுமாக செடிகள், மண்ணினால் செய்த கட்டுமானங்கள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தபோது… வளையில் உடலைக் குறுக்காமல் மண் தரையில் தாராளமாகப் புரளலாம். கொன்றுதின்ன பிராணிகள் வராது. வந்தாலும் தூரத்தில் இருந்தே பார்த்து குடிசைக்குள் ஒளிந்துகொள்ளலாம். பசி வருவதற்கு முன்பே நெல்மணிகள். 

ஒரு அழகான அற்புதமான திட்டம். 

காடு போல இல்லாமல் களஞ்சியமும் குடிசையும் அவற்றைக் கண்டுபிடித்த மிக்கிக்கு மட்டுமே சொந்தம். அதற்குப் பிறகு அதன் பரம்பரைக்கு முழு உரிமை. அவற்றைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் காட்டில் இருந்து இன்னும் சில சுண்டெலிகளை, ‘இங்கே ஆந்தைகள் பாம்புகள் கிடையாது, தேடித் திரியாமலே கொழுத்த நெல்மணிகள்’ என்று ஆசைகாட்டி மிக்கி அழைத்துவந்தது. வேட்டையாடும் உயிரினங்கள் இல்லாததால் எலிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு தலைமுறையிலும் வளர்ந்து முன்பு காட்டில் இல்லாத அளவில் பல்கிப்பெருகியது. 

எல்லாம் மிக்கியின் அதி புத்திசாலித்தனம். மிக்கி எலியின் பிறந்தநாளும் அது களஞ்சியத்தைக் கண்டுபிடித்த நாளும் கொண்டாட்ட தினங்கள். இது காலமெல்லாம் தொடரும் என எலிகள் நினைத்தன. உணவுச் சங்கிலியில் தாவரங்களுக்கும் ஊன் உண்ணும் சிறு விலங்குகளுக்கும் நடுவில் தாங்கள் ஒரு வளையம் என்பதை அவை மறந்தன.

மிக்கியின் பரம்பரை வாழ்வதற்கு ஒரு குடிசை, அடுத்த குடிசை. அவற்றுக்கு சேவை செய்ய ஆயிரக்கணக்கான வேலைக்கார எலிகள். ஒவ்வொன்றுக்கும் களஞ்சியத்தில் இருந்து நெல்மணிகள். வசிப்பதற்கு குடிசையின் பொந்துகள். 

ஒளிந்துகொள்ள வளை பறித்து, தரையில் எதிரிகள் கண்ணில்பட்டு இரை ஆவதற்கு முன் மறைந்து மறைந்து விதைகளைத் தேடும் பழக்கம் நாகரிகம் அடைந்த அந்த எலிகளுக்கு மறந்துபோனது. காட்டிற்குத் திரும்பிப்போய் வசிப்பதை நினைத்தும் பார்க்க முடியாது. 

களஞ்சியத்தின் ஒரு துளையில் இருந்து நெல்மணி உதிர்வது நின்றதும் இன்னொரு இடத்தில் ஓட்டை. ஒவ்வொன்றாக எடுத்தாலும், களஞ்சியம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் ஒரு காலத்தில் அது காலியாகும் என்பது ஒருசில எலிகளின் புத்திக்கு உறைத்தது. மற்ற எலிகளுக்கு அதை எடுத்துச் சொல்லி எதுவும் கேட்கவில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியத்தில் அவையும் நிகழ்காலத்தை அனுபவித்தன. 

ஒருநாள் இரவு ஈரப்பசை இழந்த களஞ்சியம் மின்னலின் தாக்குதலில் தீப்பிடிக்க…  

மணிமொழியைச் சந்திக்க அவளைப்போல எளிய கச்சிதமான சட்டை பான்ட்ஸ். கோடை காலம் என்பதால் அடங்கிய வாசனை. 

ஆய்வகத்தின் வாசலில் அவனை மணிமொழி வரவேற்றாள். கூடத்தின் நடுவில் நீண்ட மேஜை. அதன் மேல் தனிமங்களின் அட்டவணை அலங்கரித்த விரிப்பு. இருவரும் அமர்ந்ததும், 

“உனக்கு ஆங்கிலத்தில் நல்ல எழுத்துத்திறமை.” 

“என் தாத்தா கொடுத்த ஊக்கத்தினால்”  என்று பாராட்டை ஏற்றுக்கொண்டான். 

“கொள்கைகளை விளக்கும் வெற்றுக் கட்டுரையாக இல்லாமல் உருவகக்கதையாக எழுதி இருப்பது நல்ல உத்தி, நிகில்! உயிரியல் தத்துவம் தெரியாதவர்கள் கூட அதை வாசித்தால் மனிதனின் இக்கட்டான நிலையைப் புரிந்துகொள்வார்கள். பொருத்தமான தலைப்பு.”  

“இதை எழுதியதில் என் தாத்தாவின் அம்மாவுக்கு ஒரு பங்கு. சிறுவயதில் எனக்கு இம்மாதிரி ஒரு கதை சொல்வாள். விவரம் ஞாபகம் இல்லை. கதையின் நீதி: பெட்டியில் இருந்து எடுத்து எடுத்து செலவழித்தால் எவ்வளவு பணம் இருந்தாலும் ஒரு நாள் தீர்ந்து போகும். அதனால், காசு விஷயத்தில் சிக்கனமாக இருக்க வேண்டும்.”  

“கல்லூரி வலைத்தளத்தில் எனக்கு ஒரு பக்கம். அதில்  நான்  இதைப் போடலாமா? உன் பெயரில்.”  

“எனக்கு அது பெருமை.” 

உரையாடலை வளர்த்த, 

“இந்தக் கோடை விடுமுறையில் உன் கீழ் ஆராய்ச்சி செய்ய ஆசை, டாக்டர் மணிமொழி!” என்று சம்பிரதாயக் குரலில் சொன்னான்.     

“எனக்கு அதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால், ஒரு திருத்தம். என் கீழே அல்ல, என்னுடன். வெறும் மணிமொழி போதும். இப்போது ஆய்வகத்தைக் காட்டுகிறேன்.” 

எழுந்தார்கள். அருகில் நின்று அவனைப் பார்த்த அவள் நெற்றியைச் சுருக்கி,  

“சில மாதங்களுக்கு முன் இந்தப்பக்கம் நீ அடிக்கடி நடந்ததை கவனித்திருக்கிறேன்.” 

‘நீ கவனித்தது என் பெற்றோர் செய்த புண்ணியம். நான் தினம் நடந்தது உன் தரிசனத்திற்காக.’ 

“என்னிடம் நடையை எண்ணும் கைக்கடிகாரம். அதில் தப்படிகளின் எண்ணிக்கையைக் கூட்ட கட்டடத்தில் சுற்றிவருவது வழக்கம்.”   

அவனை ஏற இறங்கப் பார்த்து, 

“யு ஆர் இன் ஷேப். ஆராய்ச்சியின் போது களப்பணி செய்ய உதவியாக இருக்கும்.”  

சில தப்படிகள் நடந்து செல்களை எண்ணும் உபகரணத்தின் முன் நின்றாள். 

“ருக்மணி கிருஷ்ணா எனக்குத் தந்த பரிசு. நம் ஆராய்ச்சிக்கு அவசியம்.” 

அதன் உபயோகத்தை அவனுக்கு விளக்குவதற்கு முன், 

“கோடைக்குப் பிறகு?” என்று அவன் பக்கம் திரும்பினாள். 

“இங்கேயே எம்.எஸ்ஸி. செய்வதாக இருக்கிறேன்.” தொடர்ந்து, “சென்ற ஜுலையில் நீ கொடுத்த உரையைக் கேட்டதில் இருந்து உன் வழிகாட்டலில், இல்லை இல்லை, உன் வழியில் நடப்பது என் எதிர்காலத் திட்டம்.”    

“உன் பெற்றோர்கள் உன்னைச் சரியாக வளர்க்கவில்லை என நினைக்கிறேன்” என்று புன்னகைத்தாள். 

இந்த அழகைத் தினம் பார்ப்பதற்காகவே…  

“ஏன்?” 

“சம்பளம், நேரம், உழைப்புக்கு சரியான சன்மானம் கிடைக்கும் என்கிற நிச்சயம் இல்லாத இத்துறையில் உனக்கு ஆசை வந்ததற்கு அவர்கள் தானே காரணம்.”  

“என்னை வளர்த்தவர் என் தாத்தா. ஆரம்பத்தில் வர்த்தகம் படிக்க அறிவுரை கொடுத்தார். பிறகு என் வழிக்கு விட்டுவிட்டார்.” 

“அவருக்கு நன்றி! அதனால் தான் எனக்கு ஒரு நல்ல மாணவன்.” 

“தாத்தா! இப்போ நான் மணிமொழி லாபில். அப்புறம் அப்படியே எம்.எஸ்ஸி.” 

மோகம் பிரமிப்பாக மாறத்தொடங்கிவிட்டதா? 

(கட்டுவோம்)

Series Navigation<< ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி… ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.