வீழ்ச்சியடைந்தவர்களால் ஒதுக்கப்பட வேண்டியவை! வீழ்ந்தவர்களால் உரக்கக் கூறப்படாதவை!!

This entry is part 5 of 6 in the series ஜகன்னாத பண்டித ராஜா

கங்காலஹரி

11. பெரிய தான தர்மங்களாலும், தவத்தாலும்,  
    பலவிதமான பலிகளைக் கொடுப்பதனாலும், பயங்கரமான 
    கடுமையான ஒழுக்கசீலங்களாலும் அடையமுடியாத 
    விஷ்ணுவின் இருப்பிடத்தை (வைகுண்டத்தை) 
    நீ அனைவருக்கும் சமமாக அளிக்கிறாய்.
    ஆகவே, இதன்மூலமாக உன்னை யாருடன் ஒப்பிடுவதென 
    நீயே உணர்த்துகிறாய் தாயே!   

12.     இவ்வுலகில் மானிடர்கள் மறுபிறவி எடுக்கக்கூடிய 
    பெரும் பயத்தை ஒரு பார்வையாலேயே அகற்றிடும் 
    உன்னுடைய திவ்ய வடிவத்தின் பெரும்புகழை 
    யாரால்  கூற இயலும்?
    உன்னிடம் கொண்ட கோபத்தால் ஒளிகுன்றிய
    பார்வதியின் வேண்டுகோளைப் புறக்கணித்து
    உன்னைத் தலையில் வைத்துக்கொண்டார் சிவன்.

13. பிரபஞ்சத்தில் நீயே அனைத்தையும்விட
    உயர்ந்து நிற்கிறாய்; ஏனெனில் எண்ணற்ற மக்களின் 
    பாவங்களை நீக்குவதில் இடையறாது ஈடுபட்டு
    நீ களைத்துப் போவதில்லை; 
    அவை எப்பேர்ப்பட்ட பாவங்கள்-
    வீழ்ச்சியடைந்தவர்களால் ஒதுக்கப்பட வேண்டியவை,
    வீழ்ந்தவர்களால் உரக்கக் கூறப்படாதவை,
    பின்னிருந்து முதுகில் குத்தும் அயோக்கியர்களாலும்
    திகைப்பில் களையத்தக்கவை ஆகியன.

14.     அன்னையே! நீ சுவர்க்கத்திலிருந்து பூமியில் உள்ள மக்களின்                     துயரங்களைக் களைவதற்காகக் கீழிறங்கினாய்;
    சிவனின் சடைபிடித்த மயிர்க்கற்றைகளில் சிக்கிக் கொண்டாய்;
    ஆசைகளை அறுத்தவர்களின்  மனதில் உண்டாகும் 
    ஆசைகள் உனது நற்குணங்களின் விளைவே!

15.     இவ்வுலகில், மந்தபுத்தியுள்ளவர்களுக்கும், பிறப்பிலேயே
    குருடு, முடம், செவிடானவர்களுமான மனிதர்களுக்கும்
    ஊமை, கிரகங்களின் நிலைகளினால் துன்பப்படுவோருக்கும்,
    நரகத்தில் வீழ்ந்து கடவுள்களாலும் கைவிடப்பட்டவர்களுக்கும்

தாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய இயலாதவர்களுக்கும்,
நீயே அவர்களைக் காக்கும் மிக உயர்வான மருந்தாவாய்.

16.     ஓ தாயே, உனது இயற்கையிலேயே குளிர்ச்சியான 
    புனித நீரின் பெருமை எல்லையற்றது; தனித்துவமானது;
    அது இவ்வுலகில் அனைத்தையும் விஞ்சி நிற்பது.

அரசன் சகரனின் வழித்தோன்றல்கள், புகழத்தக்க ஒளியினாலும்
மயிர்க்கூச்செடுத்த தேகத்தாலும் நிரம்பப்பெற்று,
இன்றும்கூட உனது நீரின் உயர்வை, பெருமையை,
மிகுதியான மகிழ்ச்சியுடன் இசைக்கின்றனர்.

17.     இவ்வுலகில், தாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய
    இயலாதவர்களையும்கூட உயர்ந்த நிலைக்குச் சேர்க்கும்
    புனிதத் தலங்கள் பல, மூன்று உலகங்களிலும் உள்ளன.
    ஆனால் நினைக்கவும் கூடாத நடத்தைகொண்டு
    தவறிழைத்த மக்களையும் உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல
    உனது ஒப்பற்ற புனித நீரே அனைத்துப் 
    புனிதத் தலங்களையும்விட உயர்வானதாகிறது.

18. எங்களது துயரங்களை, 
    நற்குணங்களின் செல்வச் செழிப்பான வீடு,
    எப்போதும் புதிய ஆனந்தத்தின் பிறப்பிடம்,
    புனிதத் தலங்களில் முதன்மையானது,
    மூவுலங்களுக்கும் இடை ஆடையானது,
    மனதை ஒருமுகப்படுத்தும் கருவியாக இருப்பது,                   
    அனைத்து அறியாமைகளையும் மறைக்கும் கருவி,
    பலவிதமான நன்மைகளை நிலைநிறுத்துவது,
    என்பதான உனது உடல் (நீர்ப்பரப்பு),
    நீக்கி விடுவதாக.

19.     மந்தபுத்தியுள்ளவனான நான், மிகுதியான கவலையினால்,
    எனது பலவிதமான அதிர்ஷ்டங்களையும் அழித்துவிட்டு,
    உன்னிடமிருந்தும் பிரிவை உணர்ந்து,
    மயக்கந்தரும் மதுவருந்தியதன் விளைவாலும்
    செல்வச் செழிப்பினாலும் 
    எப்போதும்  கண்களை உருட்டியவாறு இருக்கும்
    அரசர்களின் முன்பு இடைவிடாது ஓடிக்கொண்டிருந்தேன்.
    ஆகவே, ஒரு சிறு பொழுதாவது
    உனது கருணையை எனக்குக் காட்டுவாய்.

20.     காற்றின் விளையாட்டால் உண்டாக்கப்பட்ட நடுக்குறும்  
    அலைகளால் அசைத்து உதிர்க்கப்பட்ட எண்ணற்ற 
    தாமரை மலர்களின்  மகரந்தப் பொடிகள் விழுவதனால்
    சிவந்த குங்குமப்பொடியின் ஒளியைப்பரப்புவதும்,
    தெய்வங்களின் மனைவியரின் மார்பினின்று உதிரும்
    அகரக் குழம்பால் எது சிறிது அடர்த்தியாகவும் காண்கிறதோ
    அந்த உனது நீரானது எனது அடுத்தடுத்த பிறவிகளின்
    தொடர்ச்சியை அழிக்கட்டும்.
  1. ஓ தாயே,
    நீ லக்ஷ்மிதேவியின் கணவரின் தாமரைமலர் போன்ற
    காலின் தூய நகத்தினின்றும் உற்பவிக்கின்றனை;
    உனது இருப்பிடம் காமனை அழித்த சிவனுடைய
    சிக்குப்பிடித்த சடையிலுள்ள வீட்டில்தான்;
    உனது செய்கைகள் தங்கள் எதிரிகளால் அழிக்கப்பட்டு வீழ்ந்தோரை
    மீண்டும் உயர்ந்த நிலைக்குக் கொண்டுவருவது.
    ஆகவே, இந்தக் காரணத்தினாலேயே, உனது உயர்வு
    இந்த உலகத்தினுடையதைவிட ஓங்கிவிடாது.
    1. ஓ தெய்வ நதியே!
      நதிகளில் எது மலைகளினின்றும் கீழிறங்கி
      மூவுலகங்களையும் அழித்த சிவபிரானுடைய
      சடைபிடித்த முடியில் உள்ளது? மேலும்
      எந்த நதியின் நீர் தாமரைமலர் போன்ற
      விஷ்ணுவின் திருவடிகளைக் கழுவியது?
      ஆகவே, சொல் தாயே,
      எந்த நதியை ஒரு கவிஞன் ஒரு சிறிதேனும்
      உன்னுடன் ஒப்பிட இயலும் அம்மா?
    2. அந்தோ! இந்த உலகின் தாயானவள் நீ, உலகில்
      எல்லா வரங்களையும் கொடுப்பவளான உன்னை
      ஆராதித்தால், பிராயச்சித்தங்கள் தேவையே இல்லை;
      தவத்தாலும், தர்மத்தாலும், தியாகத்தாலும்
      அடைய வேண்டியவை ஒன்றுமேயில்லை;
      அப்போது படைப்புக்கடவுள் (பிரம்மா) முடிவற்ற
      சமாதிநிலையை அடையட்டும்,
      விஷ்ணு ஆனந்தமாக சேஷனின்மீது உறங்கட்டும்;
      சிவபெருமான் இடையறாது நடனம் ஆடட்டும்.
    3. காப்பதற்கு ஒருவருமற்ற குழந்தைபோன்ற நான்
      அன்பால் தளும்பி நிற்கும் உன்னிடம்
      அடைக்கலம் புகுந்தேன், தாயே.
      எங்கும் செல்லமுடியாத குழந்தைபோன்ற நான்
      தகுதிவாய்ந்த இருப்பிடத்தை அளிக்கும் உன்னை அடைந்தேன்;
      கீழே விழுந்த குழந்தையான நான்
      பிரபஞ்சத்தையே உயர்த்திக் காக்கும் உன்னிடம் சரணடைந்தேன்;
      ஆசைகளால் அழிக்கப்பட்ட நான்
      பொய்க்காத மருந்தான உன்னிடம் சரணடைந்தேன்.
      இதயம் தாகத்தால் வருந்தும் குழந்தையான நான்
      அமுதக் கடலான உன்னிடம் சரண் புகுந்தேன்.
      ஆகவே, உனது பாதுகாப்பைத் தேடும் உனது இந்தக்
      குழந்தையைப் புறக்கணிக்காதே!
    4. உனது அழகான கதை உலகத்தில் பரவிய தருணத்திலிருந்து
      எமனின் நகரத்திலிருந்து (நரகம்) கேட்கும் அழுகைப் புலம்பல்கள்
      வெகுவாக மறைந்துவிட்டன; யம தூதர்களும்
      தொலைதூரங்களுக்குச் சென்று பிரிந்த ஆத்மாக்களைத் தேடுகின்றனர்.
      ஆனால் தேவலோகத்தை (சுவர்க்கத்தை) நோக்கிச் செல்லும்
      வாகனங்களின் ஊர்வலம் கடவுள்களின்
      சுவர்க்கத்துச் சாலைகளைப் பாழ்படுத்திக் கொண்டுள்ளன.
    5. அதிக சக்தியுடன் பொருந்திய கோபத்தாலும் தாபத்தாலும்
      உண்டாகிய எந்த உடல்கள் ஜுரவேகத்தில் பின்னப்பட்ட
      ஜ்வாலைகளால் எரிக்கப்படுகிறதோ அவை
      காற்றின் தொடுதலினால் உண்டாக்கப்பட்ட அலைகளால்
      சுவர்க்கத்திலிருந்து பெருகி வரும் உன்னுடைய நீரோட்டத்தால்,
      எங்களது அளப்பரிய துயரங்களைக் கழுவி விடட்டும்.
    6. ஓ தாயே! பதினான்கு லோகங்களும் அச்சடைக்குள் உள்ள
      பிரம்மாண்டத்தில் இருக்க, சிவபிரானின் சடைக்குள்
      நீண்டகாலம் அடைபட்ட உனது நீரானது
      அலைகளால் உந்தப்பட்டு எல்லாத் திசைகளிலும்
      பரந்தோடி எங்கள் துயரங்களை நீக்கட்டும்.
    7. ஓ அன்னையே! உன்முன் நிற்கும் என்னைப் புனிதனாக்குவது
      அன்பு பொங்கிப் பிரவகிக்கும் உள்ளத்தையுடைய உன்னால்
      செய்யக்கூடிய செயலாகும். பாவங்களை அழிக்கும் செயலில்
      மற்ற கடவுள்களின் பெருமையையும் அவர்களின் புனிதத் தலங்களையும்
      நீ சுக்கல்சுக்கலாகக் கிழித்தெறிந்து விடுகிறாய். அதனால்
      எனது வேண்டுதல்களைக் கேளாமல்
      சிவபிரானும் மற்ற கடவுள்களும் தங்கள் காதுகளை
      மூடிக்கொண்டு விடுகின்றனர். புனிதத்தலங்களும் அவற்றின்
      புனிதப்படுத்தும் செயலில் விரைவில் நாணமடைகின்றன.
    8. ஓ தாயே!
      எவ்வாறு நான், மிகவும் இழிந்தவன் கூடச் செய்தற்கரிய
      பலவிதமான பாவங்களாலும் கட்டுண்டு
      அவற்றின் ஒரே இருப்பிடமானவன்,
      எனது பலவிதமான சந்தேகங்களாலும்
      அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளாமல் இருப்பவன்,
      என்னைக் காக்க முயலும் உன்னைப் போற்றி வழிபடுவேன்?
    9. ஓ, தாயே!
      பெரும் பாவம் செய்தவர்களைக் காப்பாற்றும் விருப்பம்
      உனது உள்ளத்தில் நீண்ட நாட்களாக உள்ளது.
      ஆனால், நீண்ட நாட்கள் கடந்தபின்னும்
      தவறிலிருந்து காக்கப்பட்ட ஒருவன்கூட மனிதர்களுக்கு
      ஆச்சரியம் விளைவிப்பவனாய்க் காணவில்லை.
      ஆகவே, நானே உனது விருப்பத்தை நீ நிறைவேற்றிக்கொள்ள
      உன்னிடம் வந்துள்ளேன்.
      நீயே எனது பாவங்களைத் துடைத்து
      என்னை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்வாய்.
    10. நாய் போன்ற இழிவான நடத்தையும்,
      எப்போதும் உண்மையல்லாதவற்றைக் கூறியும்,
      எனது முடிவுகளில் எல்லாம் பொய்யான அனுமானங்களைக் கொண்டும்,
      மற்றவர்களை ஏமாற்றுவதனைப் பற்றியே எப்போதும் எண்ணுவதுமான
      எனது பலவிதமான கெட்ட செய்கைகளைப்பற்றித்
      திரும்பத் திரும்பக் கேள்விப்பட்டும்
      உன் பார்வையை என் முகத்தை நோக்கி ஒரு கணமாவது
      உன்னைத்தவிர யார், அளிப்பார்?
    11. தாயே! உனது ஒப்பற்ற இனிய கருணைபொழியும் வடிவை
      விரிந்த கண்களால் கண்டிராது இவ்வுலகில் எதனைச்
      சாதிக்க இயலும்? அன்னையே! உனது அலைகள்
      செய்யும் ஓசையைக் கேளாத மானிடச் செவிகள்
      உனக்குச் செய்யும் அவமரியாதை அதுவாகும்.

இதில் நான் என் கருத்துக்களை இடையிடையே கூறப் புகவில்லை. வாசிப்பவர்களின் மோனத்திற்கு அவை ஒரு தடை என நான் எண்ணியதால்.

அனைத்து ஸ்லோகங்களிலும் ஜகன்னாதர் தன்னைக் குறைத்து மதிப்பிட்டுக்கொண்டு, தான் தெரிந்தே தவறுகள் இழைத்தவன், அரசர்களை அண்டிப் பிழைத்தவன், தவறுகளுக்கு வருந்தாதவன், அவற்றிற்குப் பிராயச்சித்தம் செய்யாதவன், நாயினும் இழிவானவன் எனவெல்லாம் கூறிக் கொள்கிறார். அத்தகைய தன்னிடம் கருணைகாட்ட அன்னையான கங்கைக்கே உள்ளம் உண்டு எனவும், அவள் பாரபட்சமின்றி, அவளை அண்டி நிற்கும் குழந்தைகளிடம் பரிவு காண்பிப்பவள், வரமளிப்பவள், பாபஹாரிணி எனவெல்லாம் கூறுகிறார்.

அவர் வேண்டும் அருளானது அவரை கங்காமாதா அங்கீகரிக்க வேண்டும் என்பதா? மற்றவர்கள் முன்பு அவர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும் என்பதா?

ஸ்லோகங்களைத் தொடர்ந்து காண்போம். அவர் உள்ளத்தை விரித்த ஏடாக அனைவர் முன்பும் இருத்தும் இவை. கழிவிரக்கமும் பச்சாதாபமும் பெருகி ஓடுபவை.

(வளரும்)

Series Navigation<< ஜகன்னாத பண்டித ராஜா – 4புனர்ஜென்மத்தின் நெருப்பில் எரியும் வாழ்வு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.