தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே

எங்கள் வீட்டில் ஒரு பெரிய பிரப்பம் பாய் இருந்தது. ஓரங்களில் பட்டி தைக்கப்பட்டு அருமையாக இருக்கும். ஐந்து முதல் பத்து வயதில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் (பெரிய கூட்டுக் குடும்பம்) அதில் ஒன்றாக உருளுவோம், புரளுவோம், கடத்தி வந்த தின்பண்டத்தை  மற்றவர் அறியாமல் சுவைப்போம், தலையணையால் அடித்துக் கொள்வோம், பேய்க்கதைகள் பேசிக்கொண்டே உறங்குவோம். ஆனால், அயலாருக்கு அனுமதியில்லை.

19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மக்கள் தங்கள் படுக்கையை அன்னியருடன் பகிர்ந்து கொண்டு ஒரு குழுவாகத் தூங்கினார்கள் என்பது ஆச்சரியமான செய்தி.

1187ல், செம்பொன் முடியும், வலுவான உடலும், சிறந்த போராற்றலும், பிரபுக்களுக்கான நடத்தையும் கொண்ட இளவரசரான, ரிச்சர்ட், த லயன் ஹார்ட், (Richard, the Lionheart) 1180 முதல் 1223 வரை ஃப்ரான்சை ஆண்ட, பிலிப் 2 (Philip II) என்ற தனது முந்தைய பரம எதிரியுடன், அழகான மரக் கட்டிலில் ஒன்றாக உறங்கினார்.

முதலில் இந்த இரு அரச வம்சத்தினரும் நடைமுறைக்கேற்றவாறு செயல்படும் திட்டத்தை ஏற்றனர்- ஒன்றாக உண்டனர், ஒரே உணவை, ஒரே தாளத்தில் வைத்து பகிர்ந்துண்டனர். அந்த நட்பு மேம்பட்டு படுக்கைப் பகிர்வில் வந்து நின்றது. இரு நாடுகளுக்கிடையே அமைதி ஒப்பந்தம் இவ்வண்ணம் நிறைவேறியது. (இன்றைய ஆட்சியாளர்களும் முயற்சிக்கலாம்.) ஆனால், இரு ஆண்கள் ஒரே படுக்கையில் என்பது இன்று நேர்மறையாக எடுத்துக் கொள்ளப்படுமா என்பது கேள்வி. இருவருக்கிடையே இருந்த நம்பிக்கையை, நட்பை, இந்தச் செயல் காட்டுகிறது; சமகாலத்தில் இந்த வழக்கம் இங்கிலாந்தில் நிலவி வந்ததால், இதற்கு விபரீத அர்த்தங்களை எவரும் கற்பிக்கவில்லை; இரவு நேரத்தில் தனது அந்தரங்கம், தனது ஆண்மை என்ற எண்ணங்கள் முகிழ்க்காத காலம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக, உறவினர்களுடனும், விரிந்து பரந்த குடும்பத்துடனும், இணைந்து பணி செய்பவர்களுடனும், நண்பர்களுடனும், பயணத்தில் இருக்கும் வியாபாரிகளுடனும் மனிதர்கள் ஒன்றாக ஒரே படுக்கையில் உறங்கியிருக்கிறார்கள். பயணத்தின் போது முன்பின் அறியாதவர்கள் தன்னருகில் படுத்திருப்பதை அனுமதித்திருக்கிறார்கள். ஆனால், அதிர்ஷ்டம் காலை வாரியதென்றால், கூட படுத்திருக்கும் நபர், குறட்டை விடுபவராகவோ, உடல் வாசத்தைப் பரப்பி சங்கடத்தில் ஆழ்த்துபவராகவோ, பிறந்த மேனியில் தூங்குபவராகவோ அமையலாம்!

சில நேரங்களில், சில இடங்களில், படுக்கை மற்றும் கலன்களின் விலையால், இம்மாதிரியான ‘சமூக உறக்கம்’ (Communal Sleep) நடைமுறைத் தீர்வாக செயல்பட்டிருக்கிறது. பிரபுக்களும் கூட, ஈடு இணையற்ற இரவு நேர உரையாடலுக்காக, சக மனிதர்கள் தரும் இணக்கமான நெருக்கத்திற்காக, பாதுகாப்பிற்காக, இந்த சமூக உறக்கத்தை விரும்பியிருக்கிறார்கள். ஆம், இதை எப்படிச் செய்தார்கள்? இந்தப் பழங்கால பழக்கம் ஏன் நின்று போனது?

தூங்காத கண் ஒன்றுமில்லை

2011ல், லின் வாட்லீ(Lyn Wadly) தலைமையில் செயல்பட்ட அகழ்வாய்வாளர்கள், தென் ஆப்பிரிக்காவின் சிபுடு (Sibudu) குகையில் 77,000 ஆண்டுகளுக்கு முன்னதான, நன்கு பாதுகாக்கப்பட்ட, தழை அடுக்குகளாலான படுக்கைப் படிமத்தை கண்டுபிடித்தனர். அந்த மக்கியத் தழைகள் அந்தப்பகுதி காடுகளில் வளரும் க்ரிப்டோகார்யா வூடி (Cryptocarya Woodie) மரங்களின் இலைகள். அவைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட மாபெரும் படுக்கை, ஒரு பெருங்குடும்பத்தினர் சேர்ந்து உறங்குவதற்காக அமைந்திருக்கலாம் என்று ஊகித்தார்கள்.

இந்தக் கூட்டு உறக்கத்திற்கான சான்றுகளை காட்டுவது சிரமம். வரலாற்று ரீதியில் பார்க்கையில், இது மிகவும் புராதனமானது என்றும், இன்றைய விருப்பமான தனிமையும், தனியே உறங்குவதும் விசித்திரமாகத் தோன்றும் என்பதும் உண்மை. திருமணமான உயர் வகுப்பு ஆண்கள் தனியே உறங்கிய சில செய்திகள் இடையே இருந்தாலும், அனேகமாக, இந்தச் சமூகஉறக்கம், இடைக்காலத்தில் அப்படியேதான் பின்பற்றப்பட்டது.

நவீன கால தொடக்கத்தில், அதாவது 1500-1800 ஆண்டுகளில் இந்தப் பழக்கம் வெகுவாக நிலவி வந்திருக்கிறது.  ‘நாளின் முடிவில்: இரவின் வரலாறு’ (At Day’s close: History of Nighttime) என்ற நூலின் ஆசிரியரும், வர்ஜீனியா டெக்கில் வரலாற்றுப் பிரிவின் பேராசிரியருமான ரோஜர் எகிர்ச் (Roger Ekirch) சொல்கிறார்: மிகப் பெரும் செல்வந்தர்கள், நிலக்கிழார்கள், பிரபுக்கள், செல்வம் மிக்க வணிகர்கள் தனியே உறங்கினாலும், இதர மனிதர்கள் கூட்டாக உறங்குவதையே விரும்பினார்கள். படுக்கைத்துணைக்கான மனிதர்களின் பழக்கம் எங்கும் காணப்பட்டது. ‘நவீன தொடக்கக் கால இங்கிலாந்தில் உறக்கம்’ (Sleep in Early Modern England) என்ற நூலை எழுதியவரும், நவீன வரலாற்றுத் துறையை மான்செஸ்டர் பல்கலையில் கற்பிப்பவருமான சாஷா ஹேன்ட்லி,(Sasha Handley) படுக்கைகள் குறைவாக இருந்ததால், இத்தகு ஏற்பாடுகள் செயல்பட்டன என்று சொல்கிறார். ‘பெரும்பாலும் பயணங்கள் செய்ய வேண்டிய நிலையிலிருந்த நடுத்தர வர்க்கத்தினர், உயர் குடியினர், பொதுவான தங்கும் விடுதிகளில், சத்திரம் சாவடிகளில், மதுக்கடைகளில், தங்கள் படுக்கையை பிறருடன் பகிர்ந்து கொள்ள அவசியம் ஏற்பட்டது’ என்று சொல்கிறார் அவர். 

1590களின் வாக்கில், ஒரு சிறு நகரமான ஹெர்ட்ஃபோர்ட்ஷைர், (Hertfordshire) வொய்ட் ஹார்ட் (White Hart Inn) சத்திரத்திற்காக அமைத்த பெரும்படுக்கை பெரிதும் பேசப்பட்டது. ஓக் மரத்தில் செய்யப்பட்ட இந்தக் கட்டில், 2.7 மீ உயரம்,3.3 மீ அகலம், 3.4 மீ ஆழம் என்று வியத்தகு அளவில், சிங்கங்கள் மிகச் சிறப்பாகச் செதுக்கப்பட்டு, மேடை அரங்கத்தில் காணப்படும் சிவப்பு மற்றும், மஞ்சள் நிறத்தில் துணி இழுவைகள் அமைக்கப்பட்டு, காண்போரைக் கவர்ந்திழுத்தது. பயணிகள் பகிர்ந்து கொள்ளும் வசதிக்காக அவ்வளவு பிரும்மாண்டமாய் அமைக்கப்பட்டிருக்கலாம். 1689ம் ஆண்டில், ஒரு பந்தயத்தின் பேரில் 26 கசாப்புக் கடைக்காரர்களும், அவர்களது மனைவிகளும், மொத்தம் 52 பேர் அதில் உறங்கினார்கள் என்று செவிவழிச் செய்திகள் நிலவுகின்றன.

The Great Bed of Ware – reputedly big enough for four couples to share – was a popular tourist attraction for centuries, and even referenced by Shakespeare (Credit: Alamy)

இடைக்காலத்தில் மூவறிஞர்கள், ஒரே படுக்கையில் நிர்வாணமாகவோ அல்லது ஒப்புக்கு ஆடை அணிந்தோ படுத்திருக்கும் செய்தியும், ஓவியமும் பைபிளில் பார்க்கிறோம். அவர்கள், உடல் சார்ந்து இயங்கினார்கள் என்பது அபத்தக் கருத்து என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

In the medieval era, the Biblical Magi – the Three Wise Men from the Christian Bible – were often depicted sleeping in the same bed (Credit: British Library)

மண் குடிசை வாசலிலும் நிலவு ஒளி தரும்

சமூகத்தில் நிலவிய வர்க்க பேதங்கள், சமூக உறக்கத்தில் இல்லை. வீட்டில் வேலை செய்வோரும் அவர்களின் எஜமானர்களும், தொழில் கற்போரும் அவர்களின் ஆசிரியர்களும், அரச வம்சத்தினரும் அவர்களின் குடிமக்களும் ஒன்றாக படுத்து உறங்கியதை வரலாறு பேசுகிறது. 1784ல் ஒரு வருகையாளர் தன் வேலைகாரனுக்கு அருகில் படுக்க விரும்பினார் என்று ஒரு சமயகுரு தன்னுடைய குறிப்புக்களில் எழுதியிருக்கிறார். உடல்கள் எழுப்பும் வினோத சப்தங்கள், போர்வைகளுக்கான போராட்டங்கள் இவையெல்லாம் கொடுத்த சமத்துவத்தை ஏனோ படுக்கையறைக்கு வெளியே காண முடியவில்லை. 

1660 தொடங்கி ஒன்பது ஆண்டுகள் நாட்குறிப்புகளை எழுதி, அதை வருங்கால சந்ததியினருக்காக கெட்டி அட்டை புத்தகமாகத் தயாரித்தார் சாமுயெல் பெப்ஸ்(Samuel Pepys).  இன்றும் அவரது நூலகத்தில் கேம்ப்ரிட்ஜில் இதைப் படிக்கலாம். அதில் 17ம் நூற்றாண்டின் இரவுத் தூக்கங்களைப் பற்றிய நிறைய செய்திகள் கிடைக்கின்றன.

தினசரி வாழ்க்கை, பெண்களைப் பற்றிய தரமற்ற குறிப்பு, இவற்றுடன், முன்பின் அறியாதவர், நண்பர்கள், கூட வேலை செய்பவர்கள் ஆகியோருடன் படுத்து உறங்கியதையும் சொல்கிறார் அவர். சிலது இனிமையானது, சிலது அப்படியல்ல.

போர்ட்ஸ்மவுத்தில் (Portsmouth) ஒரு சந்தர்ப்பத்தில், லண்டன் ராயல் சொசைடியில், இவருடன் பணிபுரிந்த ஒரு மருத்துவருடன் படுக்கையைப் பகிர்கிறார். இரவு வெகு நேரம் மகிழ்ச்சியுடன் உரையாடுகின்றனர் இருவரும்; இவர் சொல்கிறார் “மருத்துவ நண்பரை உண்ணிகளும், சிறு பூச்சிகளும் மிகவும் விரும்பின. எனவே நான் பிழைத்தேன்” (இவரது குருதியை அவை விரும்பவில்லை என்றும் அதனால் அவர் ப்ளேக்கிலிருந்து தப்பித்தார் என்றும் ஊகம் உண்டு)

இரவிற்கும், உறக்கத்திற்கும் இங்கென்ன வேலை?

Ekirch சொல்கிறார்: இரவுத் தொப்பிகள் அணிந்து கொண்டு, பல அடுக்குகளாலான போர்வையின் கதகதப்பில், பொருந்திப் போகும் சக படுக்கையாளருடன் கதைத்துக் கொண்டே விடிகாலை வரை பேசியவர்கள், இடைவெளி  விட்டு இரு முறை இரவில் தூங்கியவர்கள் நடுவில் விழித்துக் கொண்டு தங்கள் கனவுகளைச் சொல்லி அதை அலசியவர்கள் என்ற பலரை வரலாறு காட்டுகிறது. இடைக்காலத்தின் பழக்கங்களில் ஒன்று- முன் ஜாமத்தில் தூங்கி, பின்னர் விழித்துக் கொண்டு, உரையாடி மகிழ்ந்து பின்னர் மீண்டும் துயிலுதல். இரகசியங்களை பரிமாறிக் கொள்வதும், இரவின் கருமையில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டு இருப்பதும் நல்ல சமூகப் பிணைப்பை உண்டாக்கின. சாராஹிர்ஸ்ட் (Sarah Hirst) என்ற இளம்பெண், ஒரு தையல்காரரின் மகள், தனக்கு விருப்பமான சகபடுக்கையாளர்களைப் பற்றியும், அவர்கள் பால் தன் நேசம் வளர்ந்ததையும் சொல்வதை ஹேன்ட்லி சுட்டிக்காட்டுகிறார். வாடிக்கையான ஒரு சக படுக்கையாளர் இறந்தபோது அவர் தனது துயரத்தை கவிதையாக எழுதினார்.(இரவல் தந்தவன் கேட்கின்றான், அதை இல்லை என்றால் அவன் விடுவானா?)

தனிப்படுக்கையை விரும்பாத அரசி

தனது 44 கால ஆட்சியில், எலிசபெத்1. என்றும் தனித்து உறங்கியதில்லை. அவரிடம் இல்லாத படுக்கைகளா? தான் நம்பும் உதவியாளருடன், தனக்குப் பாதுகாப்பு தரும் நபருடன், அன்றைய அரசவை நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளவும், தன் மனச்சுமைகளை எளிதாக்கிக் கொள்வதற்கும் அவர் படுக்கையை பகிர்ந்து கொண்டார். அரசியின் படுக்கை: அரசவையின் நெருக்கமான வரலாறு (The Queen’s Bed: An intimate History of Elizabed’s Court)என்ற தன் நூலில், எனாவொய்ட்லாக், (Anna Whitelock) ஆண்களின் அத்துமீறல்களைச் சொல்கிறார்- ராணியின் இளம் வயதில், அவரது மாற்றாந்தாயை மணந்தவர், இளவரசியின் அறைக்குள் வேகமாக வந்து அவரது பின்புறத்தைத் தட்டிவிட்டுச் செல்வாராம். இந்த மாதிரியான செயல்பாடுகள், சேதம் கொண்டு வருபவை- மேலும் இளவரசி தன் கன்னித்தன்மையையும் காக்க வேண்டும்.

நியதிகள்

படுக்கைப்பகிர்வு தவிர்க்க முடியாததாகவும், தினசரி நடப்பதாலும், அனைவரும் அமைதியாக உறங்கும் வகையில் நியதிகள் இருந்தன. அதிகமாகப் பேசுவது, படபடப்பாக இருப்பது, அடுத்தவரின் அந்தரங்கத்தைத் துருவாமல் இருப்பது போன்றவை, இரவு நேர சண்டைகள் ஏற்படாமல் தடுத்தன.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

09/09/1776 அன்று நள்ளிரவிற்கு மேலே ந்யூ ப்ரூன்ஸ்விக் (New Brunswick) விடுதியில் ஒரே அறையில், ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொண்ட, அமெரிக்க நாட்டின் கட்டமைப்பாளர்களான பெஞ்சமின் ஃப்ரேங்ளின், ஜான் ஆடம்ஸ் இருவருக்கும் இடையே ஒரு சிறு பேதம் ஏற்பட்டது. ஆடம்ஸ் பலகணியை சாத்தப் போனார். ஃப்ரேங்ளின் அதைத் தடுத்தார். ஆடம்சிற்கு குளிர் காற்றைப் பற்றிய பயம். ஆனால், ஃப்ரேங்ளினோ, நமக்கு சளி பிடிப்பது குளிர் காற்றாலல்ல, மாறாக காற்று சரிவரச் சுழன்று வராத மூடிய அறையில் நமக்கு திணறல் ஏற்படும் என்று சரியான விஷயத்தைச் சொன்னார். இதோடு ஃப்ரேங்ளின் நிறுத்தவில்லை; ஜலதோஷம் எப்படிப் பிடிக்கிறது என்று உரையாற்றத் தொடங்கவே ஆடம்ஸ் உறங்கிப் போய்விட்டார்.

படுக்கைத்துணைதான், ஆனால், அளவு மீறினால்…? 

இங்கிலாந்துப் பயணிகள் தங்களுடன் உறங்குபவரைக் கடிய வேண்டும் என்றால், அதற்கு உதவியாக ஒரு ஃப்ரெஞ்ச் சிற்றொடர்கள் அடங்கிய ஒரு ஏட்டையும் Ekirch சொல்கிறார்: “உதைப்பதைத் தவிர உனக்கென்ன தெரியும்?/ படுக்கை விரிப்பை மொத்தமாகச் சுருட்டுகிறாய்/ நீ மோசமான சகபடுக்கையாளன்.”

படுக்கையைப் பகிர்ந்து கொண்டாலும், தன்னுடன் தூங்கியவரைப் பற்றி பல வேடிக்கைக் குறிப்புகளும் உள்ளன. மனித இயல்புப்படி, உடன் உறங்குபவரை எடை போட்டிருக்கிறார்கள்- அவர் நல்ல கதை சொல்லி/ குறட்டை விடமாட்டார். கோப அதிர்ச்சியுற்ற ஒரு பள்ளி அசிரியர், தன்னுடன் உறங்கிய கல்லூரித் தலைவரை ‘பன்றி’ என்று திட்டுகிறார்; குடித்துவிட்டு படுக்கைக்கு வந்த அவர் பயங்கரமான சத்தம் எழுப்பியிருக்கிறார்! (இதுவே கணவன், மனைவியாக இருந்தால், விவாகரத்தில் போய் முடிந்திருக்கும்)

பெப்ஸ் சில விளையாட்டு விபரீதங்களையும் செய்திருக்கிறார். ஒருவரையொருவர் உதைத்துத் தள்ளி, கடைசியில் ‘தனியாகத்’ துயின்றிருக்கிறார்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான்

முன்னரே பார்த்த மாதிரி, படுக்கைப் பகிர்வுகளில் சில சட்டதிட்டங்கள் இருந்திருக்கின்றன. திருமணமாகாத ஆணும், பெண்ணும் சேர்ந்து உறங்குவது, குறிப்பாகப் பெண்கள் அயலாருடன் உறங்குவது போன்றவை தவிர்க்கப்பட்டிருக்கின்றன. அல்லது அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரிஷ் குடும்பங்களில் கண்டிப்பான நடைமுறை (பன்றிக்கு என ஏனோ அழைத்திருக்கிறார்கள்) இருந்திருக்கிறது. அதன்படி வீட்டு வாசலிலிருந்து வெகு தொலைவில் சுவரை ஒட்டி மூத்த பெண் படுக்க வேண்டும்; வயதின் இறங்கு முக வரிசையில் மற்ற பெண்கள், பின்னர் தாய், தகப்பன், சகோதரர்கள், பணியாட்கள், பயணம் செய்யும் வியாபாரிகள், பிச்சைக்காரர்கள்.

படுக்கைகள் இல்லாத நிலையில் வீட்டுப் பணியாட்கள், ஆணும், பெண்ணும் இணைந்தே உறங்கியிருக்கிறார்கள். சில வேளைகளில் இயற்கை தன் கடமையைச் செய்திருக்கிறது!

அறியாதவர்கள் அல்லது புதிதாக அவ்விடத்திற்கு வருபவர்களால் பாலியல் அத்து மீறல்களோ, கொலைகளோ கூட நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 1851ல் வெளியான மோபி டிக் நாவலின் முதல் அத்தியாயத்தில், திமிங்கிலங்களை வேட்டையாடுவதற்காகப் பயன்படும் கயிற்றோடு கட்டப்பட்டுள்ள ஈட்டியில் சொருகிய சுருங்கியத் தலைகளோடு அவைகளை விற்பதற்காகத் தங்கியிருக்கிற அந்த மர்ம மனிதனுடன், (அவன் ஆபத்தானவனாகக் கூட இருக்கலாம்) கதா நாயகன், அந்த விடுதியில் மீதமிருக்கும் ஒரே படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேள்வியுற்றபோது அதிர்ச்சி அடைவான்.

கூடியிருந்து குளிர்வது என்னவோ சரிதான். அது இரவின் கருமையில், நட்பை முகிழச் செய்திருக்கிறது, பல இனிய தருணங்களைத் தந்திருக்கிறது. ஆயினும், பலரும் பகிர்ந்த படுக்கைகள், பேனுக்கும், உண்ணிக்கும், இன்னும் சிறு அந்துப் பூச்சிகளுக்கும் சிறப்பான பதுங்குமிடமாக இருந்திருக்கின்றன. மூட்டைப் பூச்சி என்றொரு இனம்- பல்கிப் பெருகும் உங்கள் இரத்தத்தினால். குளிக்காத சக படுக்கையாளர், பல்லாண்டுகளாகப் பயன் படுத்தப்படும் படுக்கை, அனைவரும் பயன்படுத்திய கலன்கள், இதெல்லாம் சமூக உறக்கத்திற்கு ஒத்து வராதவை. தங்கள் தலைமாட்டிலேயே கழிவறை இருப்பதை அறியாத இரு பெண்கள் ஒருவரையொருவர் ‘நாறுகிறாய்’ என்று தூற்றியதாக Ekirch எழுதுகிறார்.

பழையன கழிதலும், புதியன புகுதலும்

19ம் நூற்றாண்டின் நடுவிலிருந்தே படுக்கைப் பகிர்வு, தம்பதிகளுக்குள்ளும், குறைய ஆரம்பித்திருக்கிறது.

அமெரிக்க மருத்துவர் வில்லியம் வொய்டி ஹால் (William Whitty Hall) ‘இயற்கைக்கு மாறானது, சீரழிவு’ என்று சமூக உறக்கத்தைப் பற்றிச் சொன்னதை மக்கள் ஏற்றார்கள். 1861ல் வெளியான தன்னுடைய ‘உறக்கம்’ (Sleep) என்ற நூலில், ஓரு அறையில் ஒருவருக்கு மேல் இருந்தால், காற்று மாசுபடும், இதனால் சுகக்கேடு வரும், சுகாதாரம் இல்லாமல் போகும், ஒழுக்கம் கெடும், மேலும், சமூக வாழ்க்கையில் இருக்க வேண்டிய பரஸ்பர மரியாதை குறையும் என்றெல்லாம் எழுதுகிறார். விலங்குராஜ்யத்தில் இருக்கும் இழிவான விலங்குகளோடு சமூக உறக்கத்தை ஒப்பீடு செய்கிறார். ஒரே படுக்கையைப் பகிர்ந்து பல்லாண்டுகள் வாழ்ந்த மூத்த தம்பதிகள், அதிர்ஷ்டத்தினால் தான் வாழ முடிந்திருக்கிறது என்று சொல்கிறார்.

 A Cultural History of Twin Beds என்ற தனது புத்தகத்தில் ஹிலாரி ஹின்ட்ஸ் (Hilary Hinds) ‘மனிதர்கள் தனித்து உறங்க ஆரம்பித்தார்கள்; தம்பதியினர் கூட இரு தனித்தனி கட்டில்களில் ஒரே அறையில்  தூங்கினார்கள்.’ 1950களில் பிரிந்திருந்த கட்டில்கள் திருமண உறவு சரியாக இல்லையோ என்ற எண்ணத்தை உண்டாக்கியது. கட்டில்கள் இணைந்தன. ஆனால், சமூக உறக்கம் வழக்கொழிந்து போயிற்று. இதனால் நாம் எதையாவது இழக்கிறோமா? படுக்கைப் பகிர்வுகள் நமக்கே நமக்கான பேச்சுக்களால் நிறைந்திருந்திருக்கலாம்; ஆனால், அந்த மனப்பதிவைக் கடந்து விட்டோம் என்றால், தனியே உறங்குவதால் கிடைக்கும் நன்மை அதிகம்.

இந்தியா

இந்திய வீடுகள் பெரும்பாலும் திண்ணைகள் வைத்து கட்டப்பட்டன. வழிப் போக்கர்களும், சிறு குறு வணிகர்களும், பயணிகளும் தங்குவதற்கு பயன்பட்டன. திண்ணைகளில் தண்ணீர் தெளித்து  சுத்தமாக வைத்திருப்பதால் நோய்த்தொற்று அபாயங்கள் குறைக்கப்பட்டன. பசுஞ்சாணமும், மஞ்சளும் கொண்டு தரைகள் மெழுகப்பட்டன. சித்தர் குகைப் படுக்கைகளுக்கு தனியே தலையணையோ, விரிப்புக்களோ வேண்டாம். பயணக் குழுக்களில் இருந்த பெண்கள் இடைநாழியைப் பயன்படுத்தினர். நீராடவும், தண்ணீர் அருந்தவும், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் இருந்தன. திசை அறிந்து கொள்ள கோயிலின் தக்ஷிணாமூர்த்தி சன்னதி உதவிற்று. பெரும் கோயில்களில் தங்கும் மண்டபங்களும், நீர்த்துறைகளும் இருந்தன. ‘அதிதி யாரேனும் இருக்கிறீர்களா?’ என்று குரல் கொடுத்து, அந்த விருந்தாளிகளுக்கும் உணவிடும் நல்ல வழக்கம் இருந்தது. இதைத்தவிர சத்திரங்களிலும் தங்குமிடமும், உணவும் கொடுக்கப்பட்டது. கணவன் மனைவி எந்நாளும் சேர்ந்துதான் உறங்க வேண்டும் என்ற விதிமுறை கிடையாது. சமூக இணக்கமும், தேவையான இடைவெளியும் வாழ்வியல் முறையாக இருந்து வந்திருக்கின்றன.

நாம் கடைப்பிடித்தோம், விட்டொழித்தோம், பதிவு மட்டும் செய்வதேயில்லை.

‘தூங்குக தூங்கிற் செயற்பால தூங்கற்க 

தூங்காது செய்யும் வினை.’

பானுமதி ந

உசாவி: https://www.bbc.com/future/article/20240111-sleep-the-lost-ancient-practise-of-sharing-a-bed BY Zaria Gorvett dt Jan 11,2024

2 Replies to “தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.