கூண்டு

“ஏய் எழுந்திரு, நீ ஏர்போர்ட் போகணும். இன்னிக்கு பாட்டி வரா.”

“ம், இப்போ, 5 மினிட்ஸ்,” என்றேன்.

“டயமெல்லாம் இல்ல. ஏற்கனவே நீ லேட். இன்னும் 1 ஹவர்ல லேண்டிங்.”

டக் என்று எழுந்து உட்கார்ந்தேன்.

“நான், நீ 5 மணிக்கே எழுந்து சிவிசிங்காரிச்சு கிளம்பிருவன்னு நெனச்சேன்.”

“ஏய் போடி” என்று சொல்லிட்டு குளிக்க கிளம்பினேன்.

“வரும்போது சரவணபவன்ல சாம்பார் சட்னி வாங்கிட்டு வா” என்றாள்.

“அவள வச்சுகிட்டேவா?” என்றேன்.

“இட்ஸ் ஓகே, உனக்கு ரெட் சட்னி வேணுமா?”

“ஆமா.”

“சரி, ஆர்டர் பண்ணிடறேன்,” என்றாள்.

மறுபடி கராஜுக்குள் போகும்போது, “ஹிரோயினப் பார்த்துட்டு அப்படியே உருகிறாத, சட்னு வா, பசங்கெல்லாம் சாப்பிட வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.”

“ச்சீ திவ்யா, மொக்கையைப் போடாத” என்று சொல்லிவிட்டு காரை எடுத்தேன்.

அப்போதே கண்ணை சுட்டெரிக்கும் வெளிச்சம். வானத்தில் ஒரு மேகம் கூட இல்லை. மொத்த வானமும் ஒரே வெளிர் நீல நிறத்தில் இருந்தது. ஏர்போர்ட் அட்ரஸ்-ஐ உள்ளிட்டு, டிரைவிங் மோட்-ஐ “ஹரி” என்று வைத்தேன்.

காரை எடுத்து ஒரு நிமிடத்திற்குள் மறுபடி திவ்யாவிடமிருந்து போன் வந்தது.

போனை எடுத்து, “ஏய், என்னாச்சு?” என்றேன்.

“இங்க பாரு, அவ இப்ப முன்ன மாதிரி நம்மளோட கிளாஸ்மேட் இல்ல. இப்ப அவ பெரிய ரிசர்ச்சர், சயின்டிஸ்ட். நீ பாட்டுக்குக் காலேஜ்ல பேசுற மாதிரி ஏதாவது கசாமுசான்னு உளறிக்கிட்டு இருக்காதே. வயசுக்கு ஏத்த மாதிரி பிஹேவ் பண்ணு,” என்றாள்.

“சரி,” என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

டாக்டர் ஐஸ்வர்யா, எங்களுக்குப் “பாட்டி”. நேரில் பார்த்து பல வருடங்கள் ஆகி இருந்தது. பயோ மெடிக்கல் துறையில் பெரியாளாகிக் கொண்டு இருந்தாள். கான்ஃபரன்ஸ் என்று ஊர்ஊராக சுற்றிக்கொண்டு, 2 நாட்களுக்கு இங்கே வந்திருக்கிறாள்.

மும்பையில் இருந்து எங்கள் கல்லூரியில் சேர்த்திருந்தாள். அழகி.

அவளிடம் ஒரு கம்பீரமான ஆளுமைக் கவர்ச்சி இருந்தது. முதல் நாளிலேயே நாங்கள் ஒரு நட்பு வட்டமானோம். அவளால் பழகிய அத்தனை பேரிடமும் நாம் நெருக்கமானவர்கள் என்றும், அதே சமயம் ஒரு எல்லைக்கு மேல் வராதே என்றும் ஒரே நேரத்தில் உடல்மொழியால் சொல்ல முடிந்தது.

ஏதாவது சீண்டும்படி கேள்வி கேட்டால், எதிரே யாருமே இல்லையே என்பதுபோல இருப்பாள். அடுத்த கேள்வி இயல்பானதாக இருந்தால், வழக்கமான புன்சிரிப்புடன் பதில் வரும்.

இப்போது யோசித்துப் பார்த்தால், கிட்டத்தட்ட எங்களை நாய்க்குட்டிகள் போலப் பழக்கியிருக்கிறாள் என்று புரிகிறது.

அப்பொழுது நான் ஜோசியம் கற்றுக்கொண்டிருந்த நேரம். பார்ப்பவர்களிடமெல்லாம் பிறந்த தேதியும் நேரமும் கேட்டுக்கொண்டிருப்பேன். நான் அவள் ஜாதகத்தைக்கூடப் பார்த்திருக்கிறேன். “என் ஜாதகம் ராமர் ஜாதகம் மாதிரின்னு சொல்லுவாங்க” என்று பெருமையாகச் சொல்வாள். அப்படித்தான் இருந்தது. சூரியன் உச்சம், சுக்கிரன் உச்சம், சந்திரன் உச்சம். எல்லா கிரகங்களும் அதிரிபுதிரியான பலத்தோடு இருந்தன.

நான் படிக்கும் புத்தகங்களைப் பார்த்துவிட்டு, “என்ன விஷயம்?” என்பாள். நான் கதையின் மையத்தில் இருக்கும் ஒரு கேள்வியைச் சொல்லுவேன்.

பெரும்பாலும் வயதானவர்களின் தரப்பை எடுத்துக்கொண்டு விவாதம் செய்வாள். “லவ்வெல்லாம் சுத்த நான்சென்ஸ். மெச்சூரிட்டி இல்லாதவங்க பண்ணுற விஷயம். இவ்வளவு வளர்த்த அப்பா அம்மாவுக்குத் தெரியாதா யார் கரெக்ட்னு?” என்பாள்.

ஒரு முறை சுஜாதாவின் ‘நகரம்’ கதையின் முடிவை கண்ணீர் மல்க குரல் உடைந்து படித்துக் கொண்டிருந்ததை, கதையை விட என்னைப் பிரியத்துடன் பார்த்துச் சென்றிருப்பதாகத் தோன்றியது.

வார இறுதியில் கல்லூரியிலிருந்து நகரத்திற்கு அழைத்துச் செல்வார்கள். காலையிலேயே எல்லோரையும் பீச்சில் இறக்கிவிட்டுவிட்டு, மாலை அல்லது இரவு நேரத்தில் மீண்டும் அதே இடத்தில் பிக்கப் செய்து ஹாஸ்டலுக்குக் கொண்டு வந்து விடுவார்கள்.

எங்கள் கல்லூரி மிகவும் ஸ்ட்ரிக்டான கல்லூரி என்பதால், விதவிதமான ஆடைகளை அணிவதற்கு அனுமதி கிடையாது. அவள் பஸ்ஸில் யாருக்கும் தெரியாமல் மாடர்ன் டிரெஸ்ஸைக் கடத்திக்கொண்டு வந்து, மாலுக்குச் சென்று அங்குள்ள பாத்ரூமில் டிரெஸ்ஸை மாற்றிக்கொண்டு, ஊர் சுற்றிவிட்டு, இரவு திரும்பும்போது மீண்டும் டிரெஸ்ஸை மாற்றிக்கொண்டு ஹாஸ்டலுக்குப் போய்விடுவாள்.

நாங்கள் நண்பிகளை காரில் பிக்கப் செய்து கொண்டு ஊரை சுற்றிவிட்டு திருப்பிக் கொண்டு அவர்களை இரவு இறக்கிவிடுவோம். எந்த பையனோடும் காரில் ஏறமாட்டேன் என்று எங்கு போனாலும் ஆட்டோவில் போகலாம் என்று பெண்களை இழுத்துக் கொண்டு போவாள்.

இந்த நிலைப்பாடுகளின் காரணமாகவே நாங்கள் அவளை விவாதம் என்ற பெயரில் சீண்டிக்கொண்டே இருப்போம். அவளுக்கும் அப்படி பேச பிடித்திருந்தது. நாங்கள் அப்படி கிண்டலுடன் பேசிய நாள்கள்தான் எனக்கு இன்றும் காலேஜ் நினைவுகள்.

இப்படிப்பட்ட விவாதங்களினால் நான் அவளை “பாட்டி மாதிரி பேசாத” என்று சொல்ல ஆரம்பித்து பாட்டி என்று கூப்பிட ஆரம்பித்தேன், அவள் என்னை குழந்தை என்று கூப்பிட ஆரம்பித்தாள்.

ஏர்போர்ட் கேட்டில் தவறவே விட்டுவிட முடியாது என்றபடி நடுவில் நின்று கொண்டு செல்போனில் மூழ்கி இருந்தேன். திடீரென்று “குழந்தை” என்று குரல் கேட்க, மிக அண்மையில் வந்திருந்தவள் இயல்பாக அணைத்துக் கொண்டாள்.

“ரொம்ப தேங்க்ஸ் வந்ததற்கு,” என்றாள்.

“ரொம்ப ஓவரா பேசர” என்றேன்.

“திவி எப்படி இருக்கா?” என்றாள்.

“ஆல் குட், வெயிட்டிங் ஃபார் யூ.”

பேசிக் கொண்டே காருக்கு நடந்து சென்றோம்.

“ஹே டெஸ்லாவா? ஆட்டோ டிரைவ் இருக்கா? இன்னும் போனதில்ல,” என்றாள்.

“யெஸ், வா போவோம்.”

இயல்பாக முன் சீட்டில் அமர்ந்தாள். நான் இன்னும் ஒரு குழந்தை என்று வெளிப்பட்டுவிடக் கூடாது என்று கவனமாக இருந்தேன். “இயல்பாக இரு” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

“ஓய் ஆட்டோ டிரைவ் போடு,” என்றாள்.

“அதுதான், இப்பெல்லாம் நான் ஓட்டறதேயில்ல,” என்றேன். “இன்ட்ரஸ்டிங்கா இருக்கும், மனுஷன் ஓட்டற மாதிரியே ஓட்டும், திரும்பும் போது எட்டியெல்லாம் பார்க்கும்,” என்றேன்.

ஹோம்-ஐ அழுத்தி, டிரைவிங் மோட்-ஐ “சில்” என்று செட் செய்துவிட்டு பின்னால் சாய்ந்து அமர்ந்தேன்.

கார் மெதுவாக பின்னால் போக ஆரம்பித்தது.

அது தானே போவதை விழிவிரியப் பார்த்துவிட்டு, “பயமா இருக்காதா?” என்றாள்.

“கொஞ்ச நேரத்துல அது ஓட்றதயே நம்ம மறந்துடுவோம்” என்றேன்.

கார் மெதுவாக வெளியே வந்து, டிராஃபிக்கில் இணைந்து கொண்டது.

வானம் இன்னும் வெளுத்திருந்தது. ஆங்காங்கே ஒன்றிரண்டு ஏரோப்ளேன்கள் வானத்தில் கோடு போட்டிருந்ததைத் தவிர, மொத்த வானமும் ஒரே நிறம் என்று தோன்றியது.

ஏசியை மேக்ஸில் வைத்தேன். ஏசி பெருங்குரலெடுத்து உஸ்ஸ்ஸ் என்று அலறியது.

போனை எடுத்து, திவ்யாவை கூப்பிட்டு, “வந்துட்டே இருக்கோம், ஸ்பீக்கர்ல தான் இருக்க, பேசு,” என்றேன்.

ஒரே சமயத்தில் இரண்டு பேரும் “ஏய்” என்று கத்தினார்கள்.

“ஏய் கார்லயே எல்லாத்தையும் பேசிடாதீங்க, நானும் கேட்கணும், வீட்ல பேசிக்கலாம்” என்றாள். “சரவணா மறந்திடாத” என்றாள்.

“காலேஜ்க்குப்பறம் எந்த ரிலேஷன்ஷிப் கூடயும் அவ்வளவு குளோஸ் ஆக முடியாது இல்ல?” என்றாள்.

“ட்ரூ,” என்றேன்.

“பெரிய பொண்ணு மீரா காலேஜ் முடிச்சிட்டாள்ல? நீ நிஜமாகவே பாட்டி ஆகப் போற!” என்றேன்.

“அதான், டைம் எங்க போச்சுன்னே தெரியல. பறந்துடுச்சு” என்றாள்.

“அவளுக்கு என்ன பிளான்? இங்க எம்.எஸ்ஸுக்கு வராளா?” என்றேன்.

“இன்னும் அவள் என்ன பிளான் பண்ணியிருக்கான்னு தெரியல” என்றாள்.

குனிந்து காலுக்குக் கீழே இருந்த கைப்பபையில் எதையோ தேடினாள். கைப்பையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அழுத்திப் பிடித்துக் கொண்டள்.

“என்ன சொல்ற? பொண்ணுக்கு பாய்ஃபிரண்ட் இருக்கா? அதான் இவ்வளவு டென்ஷனா இருக்கியா?” என்று கொஞ்சம் கிண்டலுக்கு மாற்ற முயன்றேன்.

“யாருக்குத் தெரியும்? இந்த ஜெனரேஷனே வேற. இவங்களை எது மோட்டிவேட் பண்ணுதுன்னே தெரியல. எதிலேயுமே தலையிட முடியாது. சும்மா பக்கத்திலிருந்து பார்த்துட்டே இருக்க வேண்டியதுதான்” என்றாள்.

“அவங்களுக்கு அவங்க பிரச்சனை. நம்ம டைம் மாதிரி இல்ல. இன்னும் ஆயிரம் மடங்கு பிரஷர் அவங்களுக்கு. இன்ஸ்டால சிங்கிள்னா, அவங்க உலகத்துல உயிரோடயே இல்லைன்னு அர்த்தம். இதெல்லாம் கண்டுக்காத. ஃப்ரீயா விடு” என்றேன்.

“கண்டுக்காதயா? நம்ம சொல்றதுக்கெல்லாம் வேல்யூவே கிடையாது. நான் என் பொண்ணுங்ககிட்ட சொல்லிட்டேன் பா. எல்லாம் உங்க இஷ்டம்தான்னு. பையனோ, பொண்ணோ, எதா இருந்தாலும் சரிதான்.”

பின் கைப்பையைத் திறந்து எதையோ தேடினாள். காரில் ஏசியின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. பின்னால் எங்கோ ஆழத்தில் ஏ.ஆர். ரஹ்மான் பாட்டு கேட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது. சத்தத்தை அதிகப்படுத்தலாமா என்று ஒரு கணம் நினைத்துக் கைவிட்டேன்.

திடீரென்று ஒரு கரகரப்பான குரலில், “பொண்ணு கமிங் அவுட் ஆஃப் தி கிளாசெட்ங்கிறா.”

நெற்றி சுருங்க, “என்ன?” என்றேன்.

நேராக ரோட்டைப் பார்த்துக்கொண்டு, “இன்னொரு பொண்ணோட இருக்காளாம்.”

“ஓ, என்னையா இது” என்றேன்.

அதற்கு மேல் பேச்சு வரவில்லை. திடீரென்று காது அடைப்பது போல உணர்ந்தேன். நாங்கள் ஆழத்தில் எங்கோ இருப்பது போலவும், காரின் ஏசி சத்தமும் ஏ.ஆர். ரஹ்மான் பாட்டும் எங்கள் தலைக்கு மேல் எங்கோ இருப்பது போலவும் உணர்ந்தேன். ஏசி சத்தம் எங்கள் தலைக்கு மேல் ஒரு பெரிய நதி போல ஓடிக்கொண்டிருந்தது.

“யாருக்குமே தெரியாது. யார்கிட்டயும் பேச முடியாது. என்ன பண்ணுறதுன்னே தெரியல” என்றாள். “புரிஞ்சுக்கவே முடியல. விட்டா போதும்னு சான்ஸ் கடைச்சவுடன ஓடி வந்துட்டேன்” என்றாள்.

“என்ன ஒரு பிரஷர் யா?” என்றேன்.

“உங்ககிட்ட சொன்னதே ஒரு பெரிய ரிலீஃபா இருக்கு,” தொடர்ந்தாள்.

“ஐநூறு ஃபேமிலீஸ் இருக்கிற லக்சுரி காம்ப்ளக்ஸ். எங்களது பசங்க பயங்கர ஜாலியா, கூட்டமா வளர்ந்தாங்க. எங்களுக்கும் ஈஸியா இருந்தது. நானும் ஃப்ரீயா விட்டுட்டேன். என்ன, மிஞ்சிப் போனா லவ்வுன்னு வந்து சொல்லுவா. ஒண்ணும் பிரச்சனையில்ல, பார்த்துக்கலாம்னு நினைச்சேன். ஆனா இப்படியெல்லாம் ஆகும்னு யோசிக்கல.

மீரா ஜாலியாத்தான் இருக்கா. ‘உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை நீ பண்ணும்மா. எனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை நான் பண்ணுறேன்’ங்கிறா. ஒண்ணுமே பேச முடியல. அவள் பண்றது தப்புன்னுகூட அவளுக்கு புரிய வைக்கவே முடியல.

அவளுக்கு நேரம் எப்படி இருக்கு? நீ பார்த்துச் சொல்றியா, ப்ளீஸ்?”

“ஷ்யூர், கண்டிப்பா பார்க்கலாம், ஆனா இதுக்கெல்லாம் பார்த்து ஒண்ணும் யூஸ் இல்லயா, ஜாதகத்துல நடந்த எல்லாத்துக்கும் எப்படியாவது விளக்கம் சொல்லிடலாம். ஆனா என்ன நடக்கப்போகுதுன்னு கண்டுபிடிக்க முடியாது.”

பெருமூச்சு விட்டாள்.

“எனக்குத்தான் ரொம்ப ஏமாற்றமா இருக்கு. நாங்க ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் மாதிரி இருந்தோம். எப்போ, எப்படின்னு எனக்கே தெரியல. வேற ஆளாயிட்டா. அவள் எனக்குத் துரோகம் பண்ணிட்ட மாதிரி இருக்கு. இவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கக் கூடாதோ அப்படின்னு தோணுது” என்றாள்.

கார் நிசப்தமாக ஓடிக்கொண்டிருந்தது. அவள் எங்கோ தொடுவானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“திடீரென்று, இத்தனை வருஷம் கழிச்சு நேர்ல பார்க்குறோம். புலம்பியே உன் மூடையும் ஸ்பாயில் பண்ணிட்டு இருக்கேன் பாரு. சாரி.”

“ச்… அதெல்லாம் ஒண்ணும் இல்ல. உனக்குத்தான் எவ்வளோ டென்ஷன்,” என்றேன்.

மூடை மாற்ற விரும்பினேன். “ரிசர்ச்செல்லாம் எப்படி போகுது?”

கையில் இருந்த கைப்பையைக் கீழே வைத்துவிட்டு, “சூப்பரா! அதுவும் ஏஐ வந்ததுக்குப் பிறகு அசுர வேகத்தில்,” என்றாள்.

“இன்னும் எலியை எப்படியெல்லாம் கொல்லலாம்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்களா?” என்றேன் புன்னகையுடன்.

“இல்ல குழந்தை, எலியை எப்படி ஆயிரம் வருஷத்துக்கு வாழ வைக்க முடியும்னு பார்த்துட்டு இருக்கோம்” என்றாள்.

“அதே கூண்டுக்குள்ளேயேவா?” என்றேன்.

“அப்புறம் வெளியே விட்டுட்டு டெய்லி அதைத் துரத்திட்டு இருக்கட்டுமா?” என்றாள்.

ஒரு கணம் நாங்கள் இருவரும் இருபது வருடம் பின்னோக்கி, காலேஜில் பேசிக்கொண்டிருப்பது போன்றிருந்தது. கை இயல்பாகப் பாட்டின் சத்தத்தைக் கொஞ்சம் அதிகப்படுத்தியது.

“ஆயிரம் வருஷமா? அது நம்மளுக்கு வந்து சேர எத்தனை வருஷம் ஆகும்?” என்றேன்.

“ரொம்ப சீக்கிரம்னு தோணுது. அன்பிலீவபிள் ஸ்பீட்ல போயிட்டு இருக்கோம்.”

மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் சுழல அர்த்தமில்லாமல் ரோட்டைப் பார்த்துக்கொண்டிருந்தேன். கார் தானே இயங்கி வேகமாப் போய்க்கொண்டிருக்க, சூழல் பின்னால் மிக விரைவாக நழுவி, சத்தமில்லாமல் மறைந்துகொண்டிருந்தது.

என் கண்கள் ரோட்டில் இல்லை என்பதைக் கவனித்த கார், ஸ்டீரிங் வீலைக் கொஞ்சம் அழுத்தச் சொன்னது. சட்டென்று சிந்தனையிலிருந்து விடுபட்டுச் சுதாரித்தேன்.

“அப்ப நம்மெல்லாம் ஆயிரம் வருஷத்துக்கு இருப்போம்?” என்றேன்.

“கண்டிப்பா!” என்றாள்.

“அந்த ஆயிரம் வருஷமும் நீ சுந்தரோடதான் இருப்பியா?” என்றேன்.

ஒரு நொடியும் தாமதிக்காமல், “ஆஃப் கோர்ஸ்!” என்றாள்.

“சுந்தரோட சரி, ஆயிரம் வருஷமும் அதே இன்லாஸோடவா இருக்கப் போற?” என்றேன்.

சட்டென்று அவள் உடல் ஃப்ரீஸ் ஆனது. என்னால் அவள் நெற்றி சுருங்குவதை உணர முடிந்தது.

“அப்படி ஒண்ணு இருக்கில்ல, ம்… அது ரொம்ப கஷ்டம்!” என்றாள்.

“ஆஆஆயிரம் வருஷம் நினைச்சாலே பயமா இருக்கு. அதுவும் இதே உருவத்தோட, உடம்போட, மூளையோட, இதே ஆளுகளோட, ம்ஹும், எல்லாரும் பைத்தியமாத் திரியப் போகிறோம்.

ஆயிரம் வருஷம்லாம் ரொம்ப ஜாஸ்தி. ஒரு நூறு வருஷம் ஆணா, அப்புறம் நூறு வருஷம் பெண்ணா, அப்புறம் ஒரு அனிமலா, ஒரு பறவையா எதாவது ஒரு எக்ஸ்பீரியன்ஸ் சேன்ச் இல்ல தொலஞ்சோம்.”

“யோசிச்சுப் பார்த்தா, நம்மளெல்லாம் விட இந்த ஜெனரேஷன் ரொம்ப அட்வான்ஸ்டா, க்ளெவரா இருக்காங்கன்னு தோணுது,” என்றேன்.

“ஆஃப் கோர்ஸ்,” என்றாள்.

பின்னால் சாய்ந்து அமர்ந்தாள். வெளியில் பார்த்தபடி, “உங்க ஊர் ரொம்ப பிரைட்டா இருக்கு, கண்ணு கூசுது” என்றாள்.

பிறகு நீண்ட மௌனம்.

அவள் விரல்கள் இயல்பாக நீண்டு ஏசியைக் குறைத்தன.

கார் கிட்டத்தட்ட நிசப்தமாக, விரைந்து முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தது.


Discover more from சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.