வீட்டில் என்னை ஒரு கேள்வி கேட்டால், கூடவே கேட்ட கேள்விக்கு நேரடியாப் பதில் சொல்லு என்ற விதியையும் சேர்த்துக் கொள்வார்கள். இல்லை என்றால் ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே… என்று சொற்பொழிவை ஆரம்பித்துவிடுவேனாம். நமக்கு அப்படி ஒரு நல்ல பெயர்.
இப்படித்தான் அன்றொருநாள் என் மகன் What’s the time? என்ற கேள்வியை தமிழில் கேட்கிறேன் பேர்வழி என நேரம்ன்னா என்ன? என்று முழிபெயர்த்துவிட்டான். அதற்கு நான் நீ கேட்டது What does time mean, not what’s the time எனச் சொல்லித் தந்தேன். ஆனால் அவன் கேட்ட ‘நேரம்ன்னா என்ன?’ என்ற கேள்வி என்னை உறுத்திக் கொண்டேதான் இருந்தது.
‘தைரியம்ன்னா என்ன?’ என்று கேட்டால் பயமில்லாத மாதிரி நடிக்கிறதுன்னு கமலஹாசரைத் துணைக்குச் சேர்த்துக்கலாம். ஆனா நேரம் என்றால் என்ன என்ற கேள்விக்குச் சென்னை வானொலி நிலையம் மாதிரி நேரம் இப்பொழுது சரியாக காலை ஒன்பது மணி, பத்து நிமிடம், முப்பத்திரெண்டு விநாடிகள் என்பதா விடை? ஒரு நிமிடம் என்பது அறுபது விநாடிகள், அறுபது நிமிடங்களைக் கொண்டது ஒரு மணி நேரம், இருபத்து நான்கு மணி நேரங்கள் ஒரு தினம்… இப்படி விரித்துக் கொண்டே போகலாம். ஆனால் அதையே பண்டைய தமிழ் நாகரிகத்தில் விநாடிகள், நாழிகை, முகூர்த்தம், பொழுது, நாள் என்று பிரித்திருந்தார்களே. இவை நேரத்திற்கான அளவைகளே அன்றி நேரம் என்றால் என்ன என்ற கேள்விக்கான பதில் இல்லைதானே.
நேரம் என்றால் என்ன? என்ற கேள்வி இன்று எழுந்தது இல்லை. அது என்றைக்கோ கேட்கப்பட்டுவிட்டது. இந்தக் கேள்வியைப் பற்றி சுமார் பதினாறு நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட குறிப்பு ஒன்று சுவாரசியமானது.
வட ஆப்பிரிக்காவில் இருந்த ஹிப்போ நகரத்தின் அகஸ்டின் என்ற இறையியல் சிந்தனையாளரிடம், கடவுள் உலகத்தைப் படைப்பதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. ஆனால் அக்கேள்வி எழுந்த உடனேயே கடவுள் அனைத்தையும் படைத்தார் என்றால் நேரத்தையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும். அதற்கு முன்னரே ‘முன்’ என்பது இருக்குமா? என்பது போன்ற கேள்விகள் ஒன்றொன்றாய் அவர் சிந்தனையில் எழுந்தன. அச்சிந்தனை ‘நேரம் என்றால் என்ன?’ என்ற புள்ளியில் அவரை நிறுத்தியது. அதற்கு அவர் சொல்லிக்கொண்ட பதில், “எனக்கு நேரம் என்றால் என்ன என்பது நன்றாகத் தெரியும். ஆனால் அதனை விளக்கச் சொன்னால் எனக்குத் தெரியாது!” என்பதே. நம்ம வடிவேலுவின் தெரியும் ஆனா தெரியாது என்ற வசனத்திற்கு அவர் பதில்தான் எள்ளு கொள்ளு முள்ளு தாத்தர்.
நல்லவேளையாக கேள்வியைக் கேட்ட அந்த ஊர்க்காரர்களுக்குச் செய்ய வேலைகள் அதிகம் இருந்தன. அதனால் அவர்கள் இந்தத் தத்துவார்த்தச் சிந்தனையை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டுத் தத்தம் வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள். நாமும் இப்போதைக்கு அதையே செய்வோம்.
படுக்கையை விட்டு எப்பொழுது எழுவது, வேலைக்கு எப்பொழுது செல்வது, விதைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா, யாரையாவது வீட்டுக்கு அழைக்க வேண்டுமானால் எப்பொழுது வரச் சொல்வது, பக்கத்து ஊருக்குப் போக வேண்டுமானால் எவ்வளவு நேரம் ஆகும் – இது போன்ற கேள்விகளுக்கு ‘நேரம் என்றால் என்ன’ என்ற கேள்வியோ அதற்கான பதிலோ தேவை இல்லை. அதற்கு நிகழும் மாற்றத்தை அளக்க ஒரு வழி வேண்டும். அவ்வளவுதான். அந்த வழிக்கான தேடல் அகஸ்டினுக்கோ ஆரியபட்டருக்கோ காத்திருக்கவில்லை. அவர்களுக்கெல்லாம் முன்பே தொடங்கிவிட்டது.
விடிந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்றால் அதிகாலை என்று கொள்வதா? நண்பகல் என்று கொள்வதா? பௌர்ணமிக்குப் பின் என்றால் எத்தனையோ நாட்கள் இருக்கின்றனவே? மழைக்காலத்திற்கு முன்னர் கூரையை வேய வேண்டும் என்றால் எப்பொழுது வேய்வது? இதற்கெல்லாம் பகலிரவு, நிலவு, பருவம் போன்றவை போதுமான அளவுகளாக இல்லையே. இவற்றை மேலும் பிரிக்க வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்?
பண்டைய இந்திய நாகரிகமாகட்டும், எகிப்து நாகரிகமாகட்டும், மெசபடோமியாவாகட்டும், இடம் மாறினாலும், ஆட்கள் மாறினாலும், மொழிகள் மாறினாலும், கலாச்சாரங்கள் மாறினாலும், இந்தத் தேவை எல்லாருக்கும் பொதுவானதாக இருந்தது. ஒவ்வொருவரும் தமக்கான வழிமுறைகளைக் கண்டறிந்தனர். கண்ணிமைக்கும் நேரம், கைச் சொடுக்கும் நேரம், நீர்ச் சொட்டும் நேரம் எனப் பலவகையில் பொழுதைச் சிறு அளவுகளாகப் பிரித்தனர். அச்சிறு அளவுகளைச் சேர்த்துச் சேர்த்து மேலும் மேலும் பல அளவுகளை உருவாக்கிக் கொண்டனர். இப்படி உருவானவைதாம் நாம் முன்பு சொன்ன நேர அளவுகள். இதற்காக நீர்க்கடிகாரங்கள், சூரியகடிகாரங்கள் எனக் கருவிகளையும் கண்டடைந்தனர். எத்தனையோ கருவிகள் இருந்தாலும் அவை எல்லாமே செய்தது என்னவோ, பொழுதை சீரான கதியில் நடக்கும் ஒன்றைக் கொண்டு பிரிப்பதுதான்.
சரி, இப்படிப் பிரிப்பதை எதில் தொடங்குவது? அதற்கும் இயற்கை வழி செய்து தந்திருக்கிறது. அதுதான் சூரியன். அது கிழக்கில் உதித்து வானில் உயர்ந்து உச்சியை அடைந்து பின்னர் இறங்கத் தொடங்கி மாலை மறைவது அன்றாடம் நடப்பது. உச்சியை அடையும் நேரத்தை நண்பகல் என்று கொள்ளலாம். இந்தியாவில் இருந்தாலும் நண்பகல். எகிப்தில் இருந்தாலும் அப்படித்தான். மெசபடோமியாவில் இருந்தாலும் அதில் மாற்றமில்லை. இது நேரத்தை அளக்க ஆரம்பிக்க ஒரு வசதியான புள்ளிதான். என்ன, ஒரே ஒரு பிரச்னை. எல்லா இடங்களிலும் சூரியன் ஒரே நேரத்தில் உச்சியை அடைவதில்லை.
அறிவாளி திரைப்படத்தில் கே.ஏ. தங்கவேலுவும் டி.பி. முத்துலட்சுமியும் இணைந்து நடித்த பூரி செய்யும் நகைச்சுவைக் காட்சி நம்ம எல்லாருக்கும் தெரியும். அந்தம்மா இவர் கிட்ட பூரி செய்வது எப்படி என்று கேட்பதும் இவர் ஒவ்வொரு படிமுறையைச் சொல்லும் பொழுதும் அவர் அதுதான் எனக்குத் தெரியுமே என்பதும் இன்றைக்கும் ரசிக்கப்படும் காட்சி. இப்போ நான் சொல்லப் போவது உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சதுதான். இருந்தாலும் நான் சொல்லறேன், நீங்களும் அ.எ.தெ. அப்படின்னு பதில் சொல்லிடுங்க.
நான்: பூமி மேற்கில் இருந்து கிழக்காக தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது. அதனால்தான் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவது போல நமக்குத் தெரிகிறது. அது போல நமக்குக் கிழக்கில் இருக்கும் ஊர்களில் நம்மைக் காட்டிலும் சீக்கிரம் சூரியன் உதிப்பதற்கும் மறைவதற்கும் காரணமும் இதுதான்.
நீங்க: அ.எ.தெ.
நான்: ஒரு முறை முழுதாகச் சுற்ற பூமி ஏறக்குறைய இருபத்து நான்கு மணி நேரங்கள் எடுத்துக் கொள்கிறது. ஒரு முறை முழுதாகச் சுற்றி வரும் வட்டத்தை 360 பாகையாகப் பிரித்துக் கொள்வோம். முழுச்சுற்றுக்கு இருபத்து நான்கு மணி நேரங்கள் என்றால் ஒரு பாகை அளவு திரும்ப ஏறக்குறைய நான்கு நிமிடங்கள் ஆகும்.
நீங்க: அ.எ.தெ.
நான்: இப்படி பாகையைக் குறிக்கும் வகையில் ஒரு நிலப்படத்தில் துருவங்களை இணைப்பது போல மேலிருந்து கீழாகக் கோடுகளைக் கிழித்தால் அக்கோடுகளை நெடுங்கோடுகள் (Longitudes) என்கிறார்கள். அதே போல பூமியின் மத்தியில் ஒரு கோடு வரைந்தால் அதை பூமத்திய ரேகை (Equator) என்றும் அதற்கு மேலும் கீழும் அதற்கு இணையாக வரையப்படும் கோடுகளை அட்சக்கோடுகள் (Latitudes) என்றும் சொல்கிறார்கள். உலகின் எந்த இடத்தையும் அது இருக்கும் நெடுங்கோடு, அட்சக்கோடு கொண்டு துல்லியமாகக் குறிப்பிட்டு விடலாம்.
நீங்க: அ.எ.தெ.
நான்: இப்போ இந்தப் படத்தைப் பாருங்க.
நீங்க: அ.எ…. இருங்க பார்க்கறேன்.

பூமி மேற்கில் இருந்து கிழக்காகச் சுற்றும் பொழுது ஒரு நெடுங்கோட்டில் இருக்கும் அனைத்து இடங்களிலும் சூரியன் உச்சியில் இருக்கும் நேரம் ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருக்கும். பூமியின் வடிவம் காரணமாக அது வானத்தில் தோன்றும் உயரம் மாறுபடலாமே தவிர அந்தந்த ஊர்களைப் பொறுத்தவரை அந்த நேரத்தில்தான் சூரியன் உச்சியில் இருக்கும். அதன்படி, இந்தப் படத்தைப் பார்த்தோமானால், எங்கோ வடதிசையில் இருக்கும் நோவோசிபிர்ஸ்க் என்ற ஊரிலும் இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் கோர்பா என்ற ஊரிலும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் சூரியன் உச்சியில் இருக்கும். இந்த நெடுங்கோட்டுக்குச் சற்றே மேற்கில் இருக்கும் பழவேற்காட்டில் சூரியன் உச்சிக்கு வர ஒரு பத்து நிமிடம் அதிகமாகலாம்.
அதே இந்தியாவில் கிழக்கிலும் மேற்கிலுமாக இருக்கும் கொல்கத்தாவையும் மும்பையையும் எடுத்துக் கொண்டோமானால் அவற்றுக்கிடையே கிட்டத்தட்ட பதினாறு பாகை அளவு வித்தியாசம் இருப்பதால் கொல்கத்தாவில் சூரியன் உச்சிக்கு வந்து கிட்டத்தட்ட அறுபத்தி இரண்டு நிமிடங்கள், அதாவது ஒரு மணி நேரத்திற்குப் பின்புதான் மும்பையில் சூரியன் உச்சிக்கு வரும். சற்றே மாற்றிச் சொன்னோமானால் கொல்கத்தாவில் நண்பகல் ஆகி ஒரு மணி நேரம் கழித்துத்தான் மும்பையில் நண்பகல் ஆக வேண்டும்.
ஆனால் நம் கடிகாரத்தைப் பார்த்தால் அப்படியா சொல்கிறது? கொல்கத்தாவில் காலை ஏழு மணி என்றால் மும்பையிலும் காலை ஏழு மணி. அங்கு நண்பகல் பன்னிரெண்டு மணி என்றால் இங்கும் அப்படித்தான். சூரியன் உச்சிக்கு வரும் பொழுதுதானே நண்பகல் என்று நினைத்தோம். இது என்ன புதுக்கதை என்று கேட்டால், இது புதுக்கதைதான்.
அந்தக் கதைக்குள் போகும் முன் இன்னும் ஒரு சுவாரசியத்தையும் சொல்கிறேன். நோவோசிபிர்ஸ்க்கிலும் கோர்பாவிலும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சூரியன் உச்சியில் இருக்கும் என்று பார்த்தோமல்லவா? ஆனால் கோர்பாவில் மதியம் பன்னிரெண்டு மணி ஆகும் பொழுது நோவோசிபிர்ஸ்க்கில் மதியம் ஒன்றரை மணி ஆகி இருக்கும். தொண்ணூறு நிமிடங்கள் வித்தியாசம். அதற்கும் நாம் சொல்லப் போகும் அதே புதுக்கதைதான் காரணம்.
அது என்ன கதை? நேரம் கணிக்கப்பட ஆரம்பித்த பொழுது ஓர் ஊருக்கான நேரம் சூரியன் உச்சிக்கு வருவதைக் கணக்கில் கொண்டுதான் பெரும்பாலும் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் நம் வசதிக்காக அதை மாற்றிவிட்டோம். உதாரணத்திற்கு இந்தியத் திட்ட நேரம் (Indian Standard Time – IST) என்ற ஒன்றினை நிர்ணயம் செய்து இந்தியா மொத்தத்திற்கும் அதுதான் நேரம் என்று முடிவு செய்துவிட்டோம். 82°30′ என்ற நெடுங்கோடு கிட்டத்தட்ட இந்தியாவின் மத்தியில் வருவதால் அதை அடிப்படையாகக் கொண்டு இந்தியத் திட்ட நேரத்தை கணிக்கிறோம். அந்த நேரம் இந்தியா முழுவதற்குமான நேரமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனால்தான் கொல்கத்தாவில் சூரியன் உச்சிக்கு வரும் நேரத்திற்கும் மும்பையில் உச்சிக்கு வரும் நேரத்திற்கும் ஒரு மணி நேர வித்தியாசம் இருந்தாலும் இரண்டு இடங்களிலும் நண்பகல் பன்னிரெண்டு மணி என்பது ஒரே நேரத்தில்தான். அப்பொழுது அவ்விரண்டு இடங்களிலுமே சூரியன் உச்சியில் இல்லை என்பது நகைமுரண்.
சரி இது கொல்கத்தாவுக்கும் மும்பைக்கும் சரி. ஒரே நெடுங்கோட்டில் இருக்கும் நோவோசிபிர்ஸ்க்கும் கோர்பாவுக்கும் ஏன் நேர வித்தியாசம்? கோர்பாவில் இந்தியத் திட்ட நேரம். அங்கு நோவோசிபிர்ஸ்க் நேரம். இவற்றிடையே இருக்கும் வித்தியாசம்தான் அதற்குக் காரணம். இந்தியா முழுவதும் இந்தியத் திட்ட நேரம் என்றால் ரஷ்யா முழுவதும் ரஷ்யத் திட்ட நேரம் இல்லையா? அது என்ன நோவோசிபிர்ஸ்க் நேரம்? எதனால் இந்த வித்தியாசம் என்பதற்குப் பின்னர் வருவோம்.
பல நூற்றாண்டுகளாக உள்ளூர் நேரம் என்ற ஒன்றைக் கணித்து நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது என்றால் அதை ஏன் இந்தத் திட்ட நேரம் மட்ட நேரம் என்று எதையோ கொண்டு வந்து குழப்ப வேண்டும்? மாற்றம், முன்னேற்றம் என்பது சமீபக் கால அரசியல் கோஷம் ஒன்று. அது போலவே இந்த மாற்றத்திற்கும் முன்னேற்றம்தான் காரணம்.
அந்த முன்னேற்றம் இருப்புப் பாதைகளில் செல்லும் தொடர்வண்டி. அதாவது ரயில். இம்முன்னேற்றம் நிகழ்ந்தது இங்கிலாந்தில் என்பதால், நாமும் இங்கிலாந்துக்குச் செல்வோம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவியில் இயங்கும் தொடர்வண்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு புகழடைந்து வந்த நேரம். இங்கிலாந்தின் பல நகரங்களுக்கு இடையே இத்தொடர்வண்டிகள் ஓடத் தொடங்கின. முன்பெல்லாம் சில நாட்கள் எடுத்த பயணங்களைச் சில மணி நேரங்களில் செய்துவிடுவது சாத்தியமானது. ஆனால் தொடர்வண்டிகளை இயக்குவதில் இந்த நேரக்கணக்கு பெரும் தலைவலியானது.

உதாரணத்திற்கு லண்டன், பிரிஸ்டல் என்ற இரு நகரங்களை எடுத்துக் கொள்வோம். பிரிஸ்டல் லண்டனுக்கு மேற்கே இருக்கும் நகரம். அன்றைய தொடர்வண்டித் தடத்தைக் கணக்கில் கொண்டால் இந்நகரங்கள் கிட்டத்தட்ட இருநூறு கிலோமீட்டர்கள் தூரத்தில் இருந்தன. மும்பைக்கும் கொல்கத்தாவுக்கும் எப்படி உச்சி நேரங்கள் ஒரு மணி நேர வித்தியாசத்தில் இருக்கின்றனவோ அது போல லண்டன் பிரிஸ்டல் நகரங்களின் உள்ளூர் நேரங்களிடையே பதினோரு நிமிடங்கள் வித்தியாசம். லண்டனில் நண்பகல் என்றால் பிரிஸ்டலில் காலை 11:49. வித்தியாசம் என்னமோ பதினோரு நிமிடங்கள்தான். ஆனால் அதனால் ஏற்பட்டக் குழப்பங்களுக்குக் குறைவே இல்லை.
தொடர்வண்டி இந்நகரங்களுக்கு இடையே இருக்கும் ஊர்களுக்கு வந்து செல்ல வேண்டிய அட்டவணையைத் தயாரிக்க வேண்டும். இருந்த ஒரு பாதையில் இரண்டு வண்டிகள் ஒரே நேரத்தில் வந்து முட்டிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு எந்த நேரத்தில் லண்டனில் இருந்து ஒரு வண்டி புறப்பட வேண்டும், பிரிஸ்டலில் இருந்து எப்பொழுது புறப்படலாம் என்பதை எல்லாம் கணிக்க அந்நிறுவன ஊழியர்கள் முடியைப் பிய்த்துக் கொண்டனர். வித்தியாசம் என்னவோ பதினோரு நிமிடங்கள்தான். ஆனால் அதனால் ஏற்பட்ட பிரச்னை பூதாகரமானது. இது ஒரே ஒரு வழித்தடத்திற்கு. இது போல எத்தனையோ வழித்தடங்கள். தலைவலி அத்துணை மடங்கு அதிகரித்தது.
குறிப்பு: லண்டன் – பிரிஸ்டல் இருப்புப்பாதை முழுவதுமாக முடிக்கப்பட்டது 1841ஆம் ஆண்டுதான். இந்த வரைபடம் 1850ஆம் ஆண்டு இந்த இருப்புப்பாதையின் அமைப்பைக் காட்டுவது.
இந்த வண்டிகளை இயக்கி வந்த க்ரேட் வெஸ்டர்ன் ரெயில்வே நிறுவனம் (The Great Western Railway) இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்றால் உள்ளூர் நேரங்களை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு தங்களுக்கென ஒரு ரயில்வே நேரத்தை உருவாக்கி, அதை தங்களின் செயல்பாடுகளுக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. அந்தக்கால ரயில்வே அட்டவணைகளில் லண்டன் நேரமும் உள்ளூர் நேரமும் குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
இன்னும் சொல்லப்போனால் ஒரே சமயத்தில் உள்ளூர் நேரத்தையும் லண்டன் நேரத்தையும் காண்பிக்கும் படி பிரிஸ்டல் சோளச் சந்தைக் கட்டடத்தில் இரண்டு நிமிடக் கைகள் கொண்ட கடிகாரத்தைப் படத்தில் பார்க்கலாம்.

ஆனால் ஒரு நிறுவனம் தனக்கான நேரமாக ஒன்றினைத் தேர்ந்தெடுத்துவிட்டால் இந்த நேரக்குழப்பங்கள் எல்லாம் தீர்ந்துவிடுமா? எத்தனையோ நிறுவனங்கள் தொடர்வண்டிகளை இயக்கின. அவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து ஒரே நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா? அதற்கு நாளானது. ஒரு வழியாக இங்கிலாந்தில் இருக்கும் தொடர்வண்டி நிறுவனங்கள் அனைத்தும் பொதுவான ரயில்வே நேரம் என்ற ஒன்றினைப் பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை 1847ஆம் ஆண்டு முன் வைக்கப்பட்டது. படிப்படியாக அதனை தொடர்வண்டி நிறுவனங்கள் அமலுக்குக் கொண்டு வந்தன. இந்த நேரம் லண்டனில் இருக்கும் க்ரெனிச் (Greenwich) என்ற இடத்தில் இருக்கும் வானியல் ஆய்வகம் வெளியிடும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டது.
அது என்ன க்ரெனிச்? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் வேறு ஒரு கதை இருக்கிறது. அதற்குப் பின்னர் வருவோம். இப்போதைக்கு க்ரெனிச் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ரயில்வே நேரம் அமைந்தது. எல்லா தொடர்வண்டி நிறுவனங்களும் இந்த நேரத்தைப் பயன்படுத்தத் தொடங்கின. இவ்வளவு போதும். ஆனால் இதனாலும் நேரக்குழப்பங்கள் தீரவில்லை.
அது ஏன் என்று ஓர் உதாரணத்தைப் பார்க்க நாம் அனுமனாக மாறி அட்லாண்டிக் சமுத்திரத்தை ஒரே தாவலில் கடந்து அமெரிக்காவிற்குச் செல்வோம்.
இதே பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் அமெரிக்காவிலும் தொடர்வண்டிகளின் காலம் மலரத் தொடங்கியது. 1830ஆம் ஆண்டு வெறும் பதிமூன்று மைல்கள் ஓடிய தொடர்வண்டியில் தொடங்கிய பயணம் பத்தே ஆண்டுகளில், 1840ஆம் ஆண்டு இரண்டாயிரத்து எண்ணூறு மைல்களுக்கு மேல் விரிவடைந்தது. இங்கிலாந்தைப் போலவே இங்கும் பல நிறுவனங்கள் தொடர்வண்டிகளை இயக்கத் தொடங்கி இருந்தன. 1880ஆம் ஆண்டு கிட்டத்தட்ட எண்பத்தெட்டாயிரம் மைல்கள் தொலைவிற்கு இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.
வேகமாக வளர்ந்து வந்த இந்தத் துறையில் விபத்துகளும் அதிகரித்துக் கொண்டுதான் வந்தன. இங்கிலாந்தில் செய்தது போலவே இங்கும் ஒரு ரயில்வே நேரத்தை கொண்டு வர வேண்டும் எனத் திட்டமிட்டார்கள். ஆனால் இங்கிலாந்தைப் போலல்லாமல் அமெரிக்கா பரந்து விரிந்த பெரிய நாடாயிற்றே. நாட்டின் கிழக்கு கடற்கரையில் இருக்கும் நியூயார்க்கில் காலை ஏழு மணி ஆகும் பொழுது மேற்குக் கடற்கரையில் இருக்கும் சான் பிரான்ஸிஸ்கோ இருளில் மூழ்கி இருக்கும். இரு நகரங்களும் இருக்கும் நெடுங்கோடுகளைக் கணக்கில் கொண்டால் அவற்றுக்கிடையேயான நேர வித்தியாசம் ஏறக்குறைய மூன்று மணி நேரங்கள். இப்படி இருக்கும் பொழுது ஒரே ரயில்வே நேரம் எப்படிச் சாத்தியமாகும்?
டாக்டர் சார்ல்ஸ் டௌட் (Dr. Charles Dowd) என்பவர் இதற்கு ஒரு தீர்வை முன்வைத்தார். நாட்டை நான்கு பகுதிகளாகப் பிரிப்போம். கிழக்கில் இருக்கும் முதல் பகுதியில் காலை ஏழு மணி ஆகும் பொழுது இரண்டாம் பகுதியில் ஆறு மணி, மூன்றாம் பகுதியில் ஐந்து மணி, நான்காம் பகுதியில் நான்கு மணி என்று வைத்துக் கொண்டால் உள்ளூர் நேரத்தில் இருந்து ரயில்வே நேரம் அதிகம் விலகி இருக்காது என்பதுதான் அவர் முன்வைத்தது. இதை அவர் முதலில் சொன்னது 1863ஆம் வருடம். ஆனால் மீண்டும் மீண்டும் கூடிக் கூடிப் பேசி எல்லாரும் இதை ஒத்துக் கொள்வதற்கு பல வருடங்கள் ஆயின. ஒரு வழியாக இவர் முன்வைத்த திட்டம் மேலும் பலர் செய்த மாற்றங்களோடு 1883ஆம் ஆண்டுதான் பயன்பாட்டுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்படியாக சமநேர மண்டலம் (Time Zone) என்பதும் பயன்பாட்டுக்கு வந்தது.
இங்கிலாந்து ஆகட்டும். அமெரிக்கா ஆகட்டும். ரயில்வே நேரம் என்ற ஒன்று இருந்தால் போதுமா? அதைச் சரியாகப் பார்க்கத்தக்க கடிகாரங்கள் வேண்டாமா? நின்று போன கடிகாரங்கள், தவறுதலாக நேரம் காட்டிய கடிகாரங்கள் என பல காரணங்களால் விபத்துகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தன. கெட்ட நேரம் என்றுதான் சொல்லியாக வேண்டும். இதைத் தவிர்க்க துல்லியமான கடிகாரங்கள் தயாரிக்கப்படத் தொடங்கின. நேரத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் குறித்து தனியாகப் பார்க்க வேண்டும். அதற்குப் பின்னர் வருவோம்.
இப்போதைக்கு அனுமன் மீண்டும் ஐரோப்பாவிற்கு வரட்டும்.
தொடர்வண்டி நிறுவனங்கள் இப்படி வேகமாக வளர்ந்து கொண்டிருந்த அதே பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வேறு ஒரு கண்டுபிடிப்பும் ஊர்களுக்கிடையே இருந்த தொலைவைக் குறைக்கத் தொடங்கியது. அதுவும் அதன் பங்குக்கு நேரக் குழப்பத்தை அதிகரித்தது. அது மின்சாரம் மூலம் செலுத்தப்படும் தந்தி (Electric Telegraph).
தொடர்வண்டிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்ல கொஞ்ச நேரமாவது எடுத்துக் கொண்டன. லண்டனில் இருந்து பிரிஸ்டல் செல்ல நான்கரை மணி நேரம் ஆனது என்று அன்றைய அட்டவணைகள் சொல்கின்றன. ஆனால் அதே இரு நகரங்களுக்கிடையே ஒரு தந்தி அனுப்பப்பட்டால் அது சென்றடைய சில நொடிகள்தான் தேவைப்பட்டது. அனுப்பிய இடத்தில் ஒரு நேரம், பெறப்பட்ட இடத்தில் ஒரு நேரம் என்று இருக்கையில் நேரக் குழப்பங்கள் தீவிரமடைந்தன. இதனால் தந்தி, தபால் அலுவலகங்களுக்கும் ஒரு பொதுவான நேரம் தேவைப்பட்டது.
ஆனால் இதே தந்தி, அந்தக் குழப்பத்தைத் தீர்க்கவும் ஒரு வழியைத் தந்தது. லண்டனில் மணி ஏழு ஆகும் பொழுது எல்லா நகரங்களுக்கும் ஒரு தந்தி அனுப்பினால் அவர்கள் ரயில்வே நேரக் கடிகாரங்களைச் சரி செய்து கொள்ள முடிந்தது. இதனால் கடிகாரங்களுக்கிடையே ஆன வித்தியாசங்கள் குறைந்தன. அந்த வகையில் தந்தி நேரக் குழப்பங்களில் ஒன்றையேனும் தீர்க்க உதவியது.
இந்த மாற்றங்கள் எல்லாம் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் மட்டும் நடக்கவில்லை. பல நாடுகளில் இந்த நடைமுறை மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருந்தன. உதாரணமாக ஸ்விட்சர்லாந்தில் தபால் துறைக்குப் பொதுவான நேரம் 1853ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது பின்னர் அந்த ஊர் ரயில்வே நேரமாகவும் மாறியது. இத்தாலியில் ரயில்வே தபால் துறைக்கான பொது நேரம் 1866ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இப்படியே இன்னும் பல நாடுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஊருக்கு ஒரு வழி என்றால் ஒன்றரைக் கண்ணனுக்கு ஒரு வழி என்று எங்கள் பக்கம் ஒரு சொலவாடை உண்டு. அதைப் போல இந்த ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் என்றைக்குமே என் வழி தனீஈஈஈ வழி என்றுதான் இருக்கும். பாரீஸில் இருக்கும் வானியல் ஆய்வகத்தைக் கொண்டு பாரீஸ் நேரம் என்று உருவாக்கிக் கொண்டது மட்டுமில்லாமல் பயணிகள் வண்டியைப் பிடிக்க வசதியாக பாரீஸ் நேரத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் தாமதமாக ரயில்வே நேரத்தை அறிவித்தது. இதனால் மற்ற ஊர்களில் உள்ளூர் நேரம், பாரீஸ் நேரம், ரயில்வே நேரம் என்று மூன்று நேரங்களைக் கவனிக்க வேண்டிய கட்டாயம் உண்டானது.
இப்படி எல்லாம் குழப்பங்கள் இருந்த நிலையில், ரயில்வே நேரம், தபால் தந்தி நேரம் என்றெல்லாம் இல்லாமல் பொதுவாக எல்லாவற்றுக்குமே ஒரு நேரத்தைக் கொண்டு வந்தால் என்ன என்று பேசத் தொடங்கினார்கள். ஆனால் பேச்சோடு நிற்காமல் அதைச் செயல்படுத்தியது உலகின் மறுகோடியில் இருக்கும் நியூசிலாந்து!
(தொடரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 376 | 11 அக் 2026
Subscribe to get the latest posts sent to your email.
