- நேரங்காலம் தெரியாம…
- கோடானு கோடி கோடுகள்
- முடிவாக ஒரு முதன்மைக் கோடு!
- குழப்பம் உதிர்காலம்
முன்பு சொன்னது போல அணுக்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் நேரத்திற்கும் பூமியின் சுழற்சியைக் கொண்டு கணிக்கப்படும் நேரத்திற்கும் சிறு வித்தியாசங்கள் இருந்தன.
இதனைச் சரி செய்ய உலக நேரக் குறியீடு (Coordinated Universal Time – UTC) என்ற நேரக் கணக்கினை விஞ்ஞானிகள் முன்வைத்தனர். இதன்படி இவ்விரு நேரங்களுக்கிடையே வரும் வித்தியாசத்தைச் சரி செய்ய அவ்வப்பொழுது நேரக் கணக்கு முறையில் வேகத்தின் அளவை மாற்றினர். கூடவே தேவைப்படும் பொழுது விநாடிக்கும் குறைவான நேரத்தைச் சேர்க்கவோ குறைக்கவோ செய்தனர். ஆனால் இது நடைமுறைப்படுத்தப்பட எளிதாக இல்லை.
இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால் சர்வதேச அணு நேரம் (International Atomic Time – TAI) அணுக்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் நேரம். பூமியின் சுழற்சியைக் கொண்டு நிர்ணயிக்கப்படும் நேரம் சர்வதேசப் பொது நேரம் 1 (Universal Time 1 – UT1). இந்த இரு அளவைகளுக்கிடையே சிறிய வேறுபாடுகள் உண்டு. அதைச் சரி செய்ய அடுத்ததாக ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டது. அதுதான் மாற்றியமைக்கப்பட்ட உ.நே.கு.
1972ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி இந்த மாற்றியமைக்கப்பட்ட உலக நேரக் குறியீடு (உ.நே.கு.) அமலுக்கு வந்தது. இந்தக் கணக்கின்படி விநாடியின் அளவு அணுக்கடிகாரங்களினால் கணக்கிடப்படும் விநாடியின் அளவுக்கு இணையாக அமைக்கப்பட்டது. அதோடு தேவைப்படும் பொழுது ஒரு முழு விநாடி சேர்க்கப்படும் விதமாக இந்த நேர வித்தியாசக் கணக்குச் சமன்பாடும் மாற்றப்பட்டது. அதாவது அந்தக் குறிப்பிட்ட உ.நே.கு. நிமிடத்தில் அறுபது விநாடிகளுக்குப் பதிலாக அறுபத்தொன்று விநாடிகள் இருக்கும். தேவைப்பட்டால் இது போல ஒரு விநாடியைக் குறைக்கவும் வழி உண்டு.
ஒரு பக்கம் துல்லியத்திற்கான அணு நேரம். மறுபுறம் இயல்பு வாழ்க்கைக்கான பொது நேரம். இந்த இரட்டைக் குதிரைச் சவாரிக்கு இந்த சமரசம் நல்லதொரு தீர்வாக அமைந்தது.
மனிதர்களுக்கு நல்ல தீர்வாக இருந்தாலும், இது கணினிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்ற தொழில்நுட்பங்களுக்கு ஏற்றதாக இல்லை. அவற்றில் இந்த விநாடி மாற்றங்களைச் செய்வதெல்லாம் பாடாகத்தான் இருக்கிறது. அதற்காகத் தொடர் உ.நே.கு. என்ற மாற்றியமைக்கப்பட்ட கணக்கு ஒன்று 2027ஆம் ஆண்டு மே மாதம் அமலுக்கு வர இருக்கிறது. இதன்படி சில நூற்றாண்டுகளுக்கேனும் விநாடியை ஏற்றி இறக்குவதற்கான தேவை இல்லாமல் இருக்கும்.
முன்பெல்லாம் சூரியன் க்ரெனிச்சில் உச்சிக்கு வரும் நேரத்தைக் கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்படும் க்ரெனிச் சராசரி நேரத்தை அடிப்படையாக வைத்து சர்வதேச நேரங்கள் அதை விடக் கூடுதலாகவோ குறைவாகவோ கணக்கிடப்பட்டன. அவை “GMT+ மணி நேரங்கள் அல்லது GMT- மணி நேரங்கள்” எனக் குறிப்பிடப்பட்டன. உ.நே.கு. அமலுக்கு வந்த பின் இந்தக் குறியீடுகள் “UTC+ மணி நேரங்கள் அல்லது UTC- மணி நேரங்கள்” என UTC-ஐ அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்படலாயின. சராசரி வாழ்வில் இவை இரண்டும் ஒன்றாகத் தோன்றினாலும் தேவைப்படும் துல்லியத்தைக் கொண்டு எல்லா இடங்களிலும் இவை ஒன்றுக்கொன்று இணையாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
இன்னும் ஒரு சுவாரசியமான விஷயமும் இருக்கிறது. க்ரெனிச் சராசரி நேரத்தை ஒட்டித்தான் உ.நே.கு. இருக்கிறது என்று சொன்னாலும், அது எங்கோ க்ரெனிச்சில் இருக்கும் ஒரே ஒரு அணுக்கடிகாரத்தைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. உலகெங்கிலும் இருக்கும் நூற்றுக்கணக்கான அணுக்கடிகாரங்களின் அடிப்படையில்தான் இந்த நேரம் கணக்கிடப்படுகிறது.
பொதுவான நேரம் வேண்டும் என்று அவ்வளவு சர்ச்சைகளுக்கு நடுவே க்ரெனிச்சைத் தேர்ந்தெடுத்தது போய் இன்றைக்கு உலகெங்கிலும் இருக்கும் அணுக்கடிகாரங்களைக் கொண்டு நேரம் கணக்கிடப்படுவது ஒரு நகைமுரண்தான்.
அது இருக்கட்டும். உலகத்திற்குப் பொதுவாக உ.நே.கு. இருக்கிறது என்றால் எல்லாரும் அதைப் பயன்படுத்தாமல் அதிலிருந்து எதற்காகக் கூட்டவும் குறைக்கவும் வேண்டும்?

ஓர் உதாரணத்திற்கு இந்தப் படத்தைப் பாருங்கள். நாம் ஏதோ ஒரு விடுதிக்குத் தங்கச் சென்றோமானால் அதன் வரவேற்பறையில் இப்படிப் பல கடிகாரங்கள் இருப்பது வழக்கம்தான். ஒவ்வொரு கடிகாரமும் ஏதோ ஒரு நகரத்தின் நேரத்தைக் காட்டிக் கொண்டிருக்கும். எதற்காக இத்தனை கடிகாரங்கள், இவ்வளவு நேரங்கள்? உ.நே.கு. என்ற ஒன்றுதான் இருக்கிறதே? அதைப் பயன்படுத்த முடியாதா?
பயன்படுத்தலாம்தான். டோக்கியோவிலாகட்டும், சென்னையிலாகட்டும், லண்டனிலாகட்டும், நியூயார்க்கிலாகட்டும். எல்லா இடங்களிலுமே ஒரே நேரம் என்பது இருக்கக் கூடியதுதான். அது இயற்பியல் விதிகளுக்குட்பட்டுதான் இருக்கும். ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராது. இதை நாம் முன்பே அமெரிக்காவில் பார்த்தோம். அட்லாண்டிக் கடற்கரையில் இருக்கும் நியூயார்க்கில் காலை விடியும் பொழுது பசபிக் கடற்கரையில் இருக்கும் சான்பிரான்ஸிஸ்கோ இருளில்தான் மூழ்கிக் கிடக்கும். க்ரெனிச்சில் மதியம் பன்னிரெண்டு ஆகும் பொழுது இந்தியாவில் மாலை வந்திருக்கும். அதே நேரத்தில் கிறைஸ்ட்சர்ச்சில் உறங்கி இருப்பார்கள்.
காரணம் நம் பூமியின் உருளை வடிவம்தான். எந்த நேரத்திலும் பூமிப் பந்தின் ஒரு பகுதியில் மட்டுமே சூரியன் உச்சியில் இருக்கும். இதுவும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான். அதனாலென்ன? உலகெங்கிலும் ஒரே நேரத்தை வைத்துக் கொள்வோமே.
க்ரெனிச் நமக்குப் பழக்கம் என்பதால் அதையே எடுத்துக் கொள்வோம். க்ரெனிச் நேரம் காலை நான்கு மணிக்குத் தொடங்கி மதியம் பன்னிரெண்டு மணிக்கு முடியும்படியாக இந்தியாவில் வேலை நேரத்தை வைத்துக் கொண்டால் ஆயிற்று. அது இந்தியப் பகல் பொழுதாகத்தானே இருக்கும். அது போல கிறைஸ்ட்சர்ச்சில் க்ரெனிச் இரவு நேரம் ஒன்பதிலிருந்து காலை நேரம் ஐந்து வரை வேலை நேரம் என்று வைத்துக் கொண்டால் அந்த ஊர் பகல் பொழுதில் வேலை பார்ப்பதற்குச் சரியாகத்தானே இருக்கும்?
நமக்குக் காலை நேரத்தில் நாள் ஆரம்பிக்க வேண்டும், இரவு நேரத்தில் முடிய வேண்டும். இதை மாற்றினால் குழப்பம்தான் மிஞ்சும். காலை ஏழு மணிக்கு காலையுணவு, மதியம் பன்னிரெண்டுக்கு மதிய உணவு, மாலை நான்கு மணிக்குத் தேநீரும் சிற்றுண்டியும் இரவு எட்டு மணிக்கு இரவுணவு என்பது போல இருந்தால்தான் நமக்குச் சரி வரும்.
இதற்காக என்ன செய்தார்கள் என்றால் முன்னர் க்ரெனிச் நேரத்தையும், தற்பொழுது உ.நே.கு. நேரத்தையும் அடிப்படையாகக் கொண்டு அதிலிருந்து குறிப்பிட்ட அளவு நேரத்தைக் கூட்டியோ குறைத்தோ தம் நாட்டுக்கான நேரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இதைச் சொல்லும் பொழுது “UTC+ மணி நேரங்கள் அல்லது UTC- மணி நேரங்கள்” என்றும் குறிப்பிட்டனர்.
இந்தக் குறிப்பிட்ட அளவு என்பதை ஏனோதானோ என்று வைத்துக் கொண்டால் சரி வருமா? முதலில் எளிமையாக ஒரு சூத்திரத்தைப் பார்ப்போம். ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம். பூமிப் பந்தை இருபத்து நான்கு பகுதிகளாகப் பிரித்தால், மொத்தம் இருக்கும் 360 பாகைகள் பகுதிக்குப் பதினைந்து பாகைகளாகப் பிரியும். எனவே ஒரு பகுதிக்கு ஒரு மணி நேரம் அதாவது பதினைந்து பாகைகளுக்கு 60 நிமிடங்கள், பாகைக்கு நான்கு நிமிடங்கள். இந்தக் கணக்கும் நாம் முன்னர் பார்த்ததுதான்.
ஒரு நாடு இந்த இருபத்து நான்கு பகுதிகளில் எந்தப் பகுதியில் இருக்கிறதோ அதை வைத்து உ.நே.கு.விலிருந்து அத்தனை மணி நேரம் கூடுதல் அல்லது குறைவு என்று சொல்லி விடலாம். ஒவ்வொரு பகுதியிலும் கடிகாரம் காட்டும் நேரம் அந்தப் பகுதியின் பகல், இரவைச் சரியாகக் காட்டும். ஒவ்வொரு பகுதியில் நேரம் மாறினாலும் அடிப்படை உ.நே.கு.தான் என்பதால் அந்த ஏரணமும் மாறாதிருக்கும். படிக்கும் பொழுது இது எளிமையான, சுலபமான தீர்வாகத்தான் இருக்கிறது.
ஆனா அப்படி எல்லாம் எளிமையாக எதையாவது விட்டுடுவோமா…
ஒரு நாட்டின் எல்லை நாம் சொன்ன இருபத்து நான்கு பகுதிகளில் ஒன்றினுள் அடங்கி விட்டால் குழப்பமில்லை. நம் செல்லப்பிள்ளை நியூசிலாந்தை எடுத்துக் கொள்வோம். வடக்குத் தெற்குத் தீவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் கிழக்குக் கடற்கரையிலிருந்து மேற்குக் கடற்கரைக்கான நேர வித்தியாசம் ஒரு மணி நேரத்திற்கும் குறைவுதான் என்று பார்த்தோம். அதனால் அது அழகாக ஒரு பகுதிக்குள் அடங்கி விடும். நாடு முழுவதும் ஒரே நேரம் என்று கொள்வதில் பிரச்சினை இல்லை.
அதையே அகல விரிந்து பரந்த நாடான அமெரிக்காவைப் பார்த்தோமானால் (ஹவாய், அலாஸ்கா சேர்க்காமல்) கிழக்கிற்கும் மேற்குக்குமான கிட்டத்தட்ட அறுபது பாகைகள். அதாவது நம் கணக்கின்படி நான்கு பகுதிகள். இவ்வளவு வித்தியாசம் இருக்கும் பொழுது நாடு முழுவதற்கும் ஒரே நேரம் என்பது சாத்தியமா? இது போல ரஷ்யா, கனடா என அகலமாக விரிந்திருக்கும் நாடுகள் எல்லாவற்றுக்கும் இந்தப் பிரச்சினை இருக்கும். இந்தியாவையே எடுத்துக் கொள்ளுங்களேன். இந்தியாவின் கிழக்கு எல்லைக்கும் மேற்கு எல்லைக்குமான இடைவெளி கிட்டத்தட்ட 30 பாகைகள் அதாவது இரண்டு பகுதிகள். நமக்கும் இந்தப் பிரச்சினை இருக்கும்தானே. இதை ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையில் கையாண்டிருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் நாடு முழுவதற்கும் ஒரே நேரம் என்ற முடிவை எடுத்தது. அது நம் நாட்டின் மத்தியில் செல்லும் நெடுங்கோட்டைக் கணக்கில் எடுத்துக் கொண்டு உ.நே.கு. நேரத்திலிருந்து அந்தப் பாகைக்கான நேர வித்தியாசத்தைக் கணக்கில் கொண்டு நாடு முழுவதற்குமான நேரத்தை நிர்ணயம் செய்தது. அந்த நெடுங்கோடு 82 பாகை 30 கோணத்துளிகள் கிழக்கு என்ற மதிப்பினைக் கொண்டது. பாகைக்கு நான்கு நிமிடங்கள் என்ற கணக்கை எடுத்துக் கொண்டோமானால், இந்த நேர வித்தியாசம் 330 நிமிடங்கள். அதாவது ஐந்து மணி நேரம் முப்பது நிமிடங்கள். இதனால்தான் இந்திய நேரம் உ.நே.கு.+5:30 என்றானது. கொல்கத்தாவில் எப்பொழுது சூரியன் உச்சிக்கு வருகிறது என்பது கணக்கில்லை, மும்பையில் சூரியன் எப்பொழுது உச்சிக்கு வருகிறது என்பதையும் கண்டுகொள்ளவில்லை. நம் நாட்டில் இருக்கும் எல்லா ஊர்களுக்கும் பொதுவாக ஒரு நேரம்தான். அது உ.நே.கு.+5:30 அவ்வளவுதான்.
அமெரிக்கா இதைக் கொஞ்சம் வித்தியாசமாகக் கையாண்டது. கிழக்குக் கடற்கரையில் தொடங்கி ஒவ்வொரு பதினைந்து பாகைகளுக்கும் ஒரு சமநேர மண்டலம் என்ற ஒன்றை உருவாக்கியது. முன்னர் சொன்னபடி மொத்தம் அறுபது பாகைகள் என்பதால் அங்கு நான்கு சமநேர மண்டலங்கள் உருவாயின. ஒவ்வொரு மண்டலமும் அதற்கு முன்னிருக்கும் மண்டலத்தை விட ஒரு மணி நேரம் பின் தங்கி இருக்கும். அந்த மண்டலத்தில் இருக்கும் ஊர்கள் அனைத்தும் அந்த மண்டலத்திற்கான நேரத்தைப் பின்பற்றும். இவை திட்ட நேரப்படி முறையே உ.நே.கு.-5:00 என்பதில் தொடங்கி உ.நே.கு.-6:00, உ.நே.கு.-7:00, உ.நே.கு.-8:00 என நிர்ணயம் செய்யப்பட்டன. இதனால் நியூயார்க்கில் மாலை ஆறு மணி ஆகும் பொழுது சிகாகோவில் மாலை ஐந்து மணி, சான்பிரான்ஸிஸ்கோவில் மாலை மூன்று மணி என்றிருக்கும்.

இதில் ஒன்றைக் கவனியுங்கள். இந்தச் சமநேர மண்டலங்களின் எல்லைகள் நெடுங்கோடுகளைப் போல நேராக இல்லை. மாநில, ஊர் எல்லைகள், போக்குவரத்து, வணிகத்தேவைகள் போன்றவற்றை உத்தேசித்து வளைந்தும் நெளிந்துமே இருக்கின்றன. அதே போல உ.நே.கு.விலிருந்து கணக்கிடப்படும் நேரம் எப்பொழுதும் மணிக்கணக்கில் இருக்கும் என்பதில்லை. அமெரிக்காவிற்கு அழகாக -5, -6 என்று முழு மணி நேரக் கணக்கு வாய்த்தது. ஆனால் இந்தியாவிற்கான வித்தியாசம் +5:30. இதையே நேப்பாள நாட்டை எடுத்துக் கொண்டோமானால் இந்த வித்தியாசம் +5:45. இப்படி நிமிடக்கணக்கும் கூட வரலாம்.
நாம் மீண்டும் முதல் பகுதிக்குப் போவோம். கிட்டத்தட்ட ஒரே நெடுங்கோட்டில் இருக்கும் நோவோசிபிர்ஸ்க்கிலும் கோர்பாவிலும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் சூரியன் உச்சியில் இருக்கும் என்று பார்த்தோமல்லவா? ஆனால் கோர்பாவில் மதியம் பன்னிரெண்டு மணி ஆகும் பொழுது நோவோசிபிர்ஸ்க்கில் மதியம் ஒன்றரை மணி ஆகி இருக்கும் என்றும் பார்த்தோம். இந்த வித்தியாசத்திற்குக் காரணம் இந்தச் சமநேர மண்டலங்கள்தாம்.
கோர்பா இந்திய திட்ட நேரத்தைப் பின்பற்றுகிறது. எனவே அதன் நேரம் உ.நே.கு.விலிருந்து +5:30 மணித்துளிகள். ஆனால் ரஷ்யாவிலோ பதினோரு சமநேரமண்டலங்கள். அதில் நோவோசிபிர்ஸ்க் இருக்கும் மண்டலம் +7:00. அதனால்தான் இவ்விரு ஊர்களுக்கும் இடையே ஒன்றரை மணி நேர வித்தியாசம். இது இன்றைய நிலை. 2016ஆம் ஆண்டு இந்தச் சமநேர மண்டலத்திற்கான நேர வித்தியாசம் +6:00 இருந்து +7:00 என மாற்றப்பட்டது. அதற்கு முன்னால் இவ்விரு ஊர்களுக்குமான நேர வித்தியாசம் அரை மணி நேரமாகத்தான் இருந்திருக்கும்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கொல்கத்தாவிலும் மும்பையிலும் சூரியன் உச்சிக்கு வருவது வேறு வேறு நேரங்களில். ஆனால் இந்த ஊர்களில் இருக்கும் கடிகாரங்கள் ஒரே நேரத்தைத்தான் காண்பிக்கும். ஆனால் கோர்பாவிலும் நோவோசிபிர்ஸ்க்கிலும் சூரியன் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் உச்சிக்கு வரும். ஆனால் அவ்வூர்களில் கடிகாரங்கள் காண்பிக்கும் நேரமோ வேறாக இருக்கும். இவை அனைத்தும் உ.நே.கு. நேரத்தை அடிப்படையாகக் கொண்டாலும் அதையும் காண்பிக்கா. நடைமுறையில் எளிதாகப் பயன்படுத்த அரசாங்கமும் மக்களும் ஏற்றுக் கொண்ட நேரம் இது. இதுவும் ஒரு வகை சமரசம்தான்.
இந்த சமரசத்தாலும் பிரச்சினைகள் இல்லாமலில்லை.
பல சமநேர மண்டலங்கள் கொண்ட நாட்டில் ஒரு மண்டலத்திலிருந்து மற்றொன்றுக்குச் செல்லும் பொழுது கடிகாரங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தச் சமநேர மண்டலத்தின் எல்லைக்கு இரு புறத்தில் இருக்கும் அடுத்தடுத்த ஊர்களில் நேரம் வேறாக இருக்கும். பேருந்து, தொடர்வண்டி, விமானம் போன்றவற்றின் நேர அட்டவணைகள் அந்தந்த ஊர்களின் உள்ளூர் நேரப்படி இருக்கும். அவற்றைக் குழம்பாமல் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றுக்கெல்லாம் பழகிக் கொள்ள வேண்டும். பல சமநேர மண்டலங்கள் இருக்கும் நாட்டில் பிரச்சினை இப்படி என்றால் இந்தியா போல ஒரே மண்டலம் கொண்ட நாடுகளில் அவை வேறு மாதிரி வடிவெடுக்கும்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பொழுது மற்ற மாநிலங்களுக்கு முன்பே விடிந்து விடும். ஆனால் கடிகாரப்படி இன்னமும் அதிகாலையாக இருக்கும். இந்திய நிலப்பகுதி முப்பது பாகைகள் நீண்டிருப்பதால் இங்கு இரண்டு சமநேர மண்டலங்களாவது வேண்டும் என்பது பல வருடங்களாகவே பேசு பொருளாக இருந்து வருகிறது. அல்லது மற்ற இடங்களில் ஒன்பது மணிக்குத் தொடங்கும் அலுவலகங்கள் இங்கு எட்டு மணிக்கே திறந்தால்தான் சரியாக இருக்கும். அதற்கான மாற்றங்கள் வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. அரசாங்கம் இது குறித்த முடிவு எதையும் எடுக்கவில்லை. இந்தியா முழுவதும் இன்னமும் ஒரே சமநேர மண்டலமாகத்தான் இருக்கிறது.
இவற்றையும் தாண்டி வேறு ஒரு குழப்பமும் இருக்கிறது. முதலில் இந்த உலக வரைபடத்தைப் பாருங்கள்.

இந்தியாவின் கிழக்குப் பகுதி நேபாளத்திற்குக் கிழக்கேதான் இருக்கிறது. ஆனால் இந்தியா மொத்தமும் +5:30 என்ற சமநேர மண்டலத்தில்தான் இருக்கிறது. நேபாளமோ +5:45 என்னும் மண்டலத்தில் இருக்கிறது. நேபாளத்தில் 12 மணி என்றால் இந்தியாவில் 11.45. அதாவது கொல்கத்தா காத்மண்டுவிற்குக் கிழக்கே இருந்தாலும் அதை விட கால் மணி நேரம் பிந்திதான் இருக்கிறது. இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவையும் சிங்கப்பூரையும் கவனித்தோமானால் அங்கும் இதே பிரச்சினைதான்.
சிங்கப்பூர் இருப்பது ஜகார்த்தாவைக் காட்டிலும் மேற்கே இருக்கிறது. ஆனால் அந்நாட்டு அரசாங்கம் தேர்ந்தெடுத்த சமநேர மண்டலம் காரணமாக அது ஜகார்த்தாவைக் காட்டிலும் ஒரு மணி நேரம் முந்தி இருக்கிறது. இந்தத் தேர்ந்தெடுப்புக்குக் காரணங்கள் உண்டு என்றாலும் வரைபடத்தைப் பார்க்கும் பொழுது இது போல விசித்திரங்கள் இருப்பது தெளிவு.
இந்தக் குழப்பங்கள் எல்லாம் போதாது என்று சில நாட்டு அரசாங்கங்கள் வேறு ஒன்றையும் செய்கின்றன. அது என்னவென்றால் கோடை காலத்தில் ஒரு நேரமும் குளிர் காலத்தில் வேறு ஒரு நேரமும் என ஒரே சமநேர மண்டலத்திற்கு இரண்டு வித நேரக்கணக்கினைக் கொள்வது.
இதற்குப் பெயர் பகலொளிச் சேமிப்பு நேரம் (Daylight Saving Time – DST). நாம் இதைச் சுருக்கமாக கோடை நேரம் என வைத்துக் கொள்வோம். கோடை காலங்களில் பொழுது சீக்கிரமே புலர்ந்துவிடும். உதாரணமாக குளிர்காலத்தில் ஆறு மணிக்கு விடிகிறது என்றால் கோடை காலத்தில் ஐந்து மணிக்கே விடிந்துவிடும் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நாம் வழக்கம் போல ஆறு மணிக்குத்தான் எழுந்திருக்கிறோம் என்றால் ஒரு மணி நேர வெளிச்சம் வீணாகத்தான் போகிறது.
இதையே கொஞ்சம் மாற்றி கோடை காலத்தில் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னால் நகர்த்தினோமானால் விடியும் பொழுது கடிகாரம் ஆறு மணி என்று காட்டும். நாமும் பொழுதுடனே எழுந்துவிடுவோம். அலுவலகம் செல்வது, திரும்ப வருவது என்று எல்லாமே குளிர்காலத்தைக் காட்டிலும் ஒரு மணி நேரம் முன்னால் நடந்துவிடும். சீக்கிரமே வீடு திரும்பி விடுவதால் மாலைப் பொழுது ஒரு மணி நேரம் அதிகம் நமக்குக் கிடைக்கும். இதைத்தான் பகலொளிச் சேமிப்பு நேரம் என்று அழைக்கிறார்கள்.
கோடை ஆரம்பிக்கும் பொழுது கடிகார நேரத்தை ஒரு மணி நேரம் முன்னகர்த்துவது, கோடை முடிந்தால் மீண்டும் பழையபடி முதலில் இருந்தபடிக்குத் திரும்புவது என்பது ஆண்டுதோறும் நடக்கும் சம்பவங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே இது குறித்துப் பேசப்பட்டாலும் முதலாம் உலகப்போர் சமயத்தில் இப்படி நேரத்தை முன்னால் எடுப்பதால் எரிபொருள் சேமிப்பு இருக்கும் என்பதால் பல நாடுகளில் இந்தக் கோடை நேர மாற்றம் அமலுக்கு வந்தது. இன்றைக்கு இதனால் எவ்வளவு நன்மைகள் என்ற கேள்வி இருந்தாலும் இந்த நிகழ்வு ஆண்டுதோறும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதனால் ஆண்டு இருமுறை நேரத்தை மாற்ற வேண்டிய கட்டாயம், அதனால் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள், இன்றைக்கு இம்மாற்றத்தால் கிடைக்கும் நன்மைகள் பெரிதாக இல்லை போன்ற காரணங்களைக் காட்டி இம்முறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நிலை பல நாடுகளில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. ஆனால் இந்தப் பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதுதான் இன்றைய நிலை.
இதனால் ஏற்படும் குழப்பம் போதாதென்று அமெரிக்காவில் வேறு ஒன்றும் நடக்கிறது. முழு நாடும் கோடை நேரத்திற்கு மாறும் பொழுது ஹவாய் மாநிலமும் அரிசோனா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளும் நாங்கள் இந்த ஆட்டத்திற்கு வரவில்லை என்று நேரத்தை மாற்றாமல் இருப்பார்கள். அதனால் அந்தப் பகுதிகளுக்கும் மற்ற பகுதிகளுக்குமான நேர வித்தியாசம் கோடையிலும் குளிர்காலத்திலும் மாறுபட்டிருக்கும். என்றைக்கு எந்தப் பகுதியில் என்ன நேரம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவே தனித்திறமைதான் வேண்டும். இந்தியா உட்பட பல நாடுகள் தற்போது கோடை நேர மாற்றத்தைப் பின்பற்றுவதில்லை. ஆண்டு முழுவதும் ஒரே நேரம்தான்.
ஆக மொத்தம் நடந்தது என்ன? பொதுவான நேரம் வேண்டும் என்று தொடங்கி இன்றைக்கு யாருக்கு என்ன நேரம் என்று தெரியாமல் முழிக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். ஒரு ஊரில் நேரம் என்ன எனத் தெரிந்து கொள்ள கடிகாரம் மட்டுமிருந்தால் போதாது, நாட்காட்டியும் வேண்டும் என்பதுதான் இன்றைய நிலை. இத்தனைக்கும் நேரத்தைத் துல்லியமாக அளக்கும் அணுக்கடிகாரங்கள் இருக்கின்றன, அனைவரும் ஏற்றுக் கொண்ட உ.நே.கு. இருக்கின்றது, சமநேர மண்டலங்களை வைத்திருக்கிறோம். இருந்தாலும் நேரம் என்பது குழப்பமான ஒன்றாகத்தான் இருக்கிறது.
அப்படியே நேரம் என்ன என்று தெரிந்தால் மட்டும் போதுமா? ஓரிடத்தில் ஆறு மணிக்கு இருக்க வேண்டும் என்றால் நான் ஆறு மணிக்கு இருப்பேன். ஆனால் நண்பர்கள் சிலர் கொஞ்சம் முன்னப்பின்னதான் (பெரும்பாலும் பின்ன) வருவார்கள். இவர்களுக்கு நேரம் என்பது ஒரு வித பரிந்துரை மட்டுமே!
இன்றைக்குச் செல்பேசித் திரையின் ஓரத்தில் ஒளிரும் நேரத்தை அளக்கத்தான் எத்தனை கருவிகள், எவ்வளவு கண்டுபிடிப்புகள். இந்தக் கருவிகளின் வரலாற்றைத்தான் அடுத்துப் பார்க்கப் போகிறோம்.
Discover more from சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026
Subscribe to get the latest posts sent to your email.
