முடிவாக ஒரு முதன்மைக் கோடு!

பிரித்தானிய மாலுமிகள் உலகம் முழுவதும் சுற்றி வர க்ரெனிச் நேரத்தை வைத்து கணக்கிடுவது பரவலாகி வந்தது எனப் பார்த்தோம். ஆனால் அவர்கள் மட்டுமே கப்பலேறிப் போயாச்சு என்று பாடவில்லையே. எத்தனையோ நாட்டவர்கள் கடற்பயணம் செய்தார்கள். அவர்கள் எல்லாரும் க்ரெனிச் நேரத்தைப் பயன்படுத்தவில்லை. ஒவ்வொருவரும் அவருக்கான முறைப்படி நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள். இங்கிலாந்தில் ஒரே ஒரு ரயில்வே நிறுவனம் பட்ட சிரமங்களைச் சமாளிப்பதே அவ்வளவு கஷ்டமாக இருந்தது. இப்பொழுது அளவோ உலகெங்கும், உள்ளூர் நேரங்கள் போதாதென ஒவ்வொரு நாடும் தத்தம்  வழிப்படி நேரத்தைக் கணக்கிடும் சூழல் என்று இது மிகப் பெரும் பிரச்சினையாக உருமாறி இருந்தது. 

சர்வதேச நேரம் என்பது தேவையா என்ற நிலை மாறி எதை அப்படிக் கொள்ள என்று விவாதப் பொருள் மாறியது. அறிவியலாளர்கள், வானவியலாளர்கள், வரைபட வல்லுனர்கள் எனப் பலரும் இது குறித்துக் கூடிப் பேசத் தொடங்கினர். 1871ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டிலுள்ள ஆண்ட்வெர்ப் (Antwerp) நகரத்தில் நடந்த சர்வதேச புவியியல் மாநாட்டில் பொதுவான முதன்மை நெடுங்கோடு பற்றி விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த கூட்டங்களிலும் இது குறித்த விவாதங்கள் நடைபெற்றன. இவர்கள் விவாதித்த முக்கியமான தலைப்பு, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் எதோவொரு நாட்டின் நெடுங்கோட்டை முதன்மையானதாகக் கொள்ள வேண்டுமா அல்லது எந்த நாட்டையும் சாராத புதிய நெடுங்கோட்டை முதன்மையாகக் கொள்ள வேண்டுமா என்பதே. 

இருக்கும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் கூடிய மட்டும் வரைபடங்கள், நாட்காட்டிகள், வானியல் கணக்குகள் போன்றவற்றில் அதிக மாற்றமில்லாமல் செய்துவிடலாம். ஆனால் அதற்கு மற்ற நாடுகளெல்லாம் ஒப்புக்கொள்ள வேண்டும். பொதுவான நெடுங்கோடு என்றால் இந்த ஒப்புதல் கிடைப்பது எளிது. ஆனால் மற்ற எல்லாவற்றையும் மாற்ற நேரமும் செலவும் ஆகும். அதனால் அதிகம் பாதிப்பில்லாமலும், குறைந்த பொருட்செலவு ஏற்படுத்துவதாகவும் இருக்கும் வழிகளைத் தேடினர். இக்காரணங்களைக் கருத்தில் கொண்டு 1883ஆம் ஆண்டு ரோம் நகரில் நடந்த மாநாட்டில் க்ரெனிச் நெடுங்கோட்டை முதன்மை நெடுங்கோடாகக் கருதலாம் என்ற தீர்மானம் முன்வைக்கப்பட்டது. 

ஆனால் விஞ்ஞானிகள் பேச்சு விமானம் ஏறுமா, இல்லை இல்லை கப்பல் ஏறுமா? அதற்கு அரசாங்கங்களின் ஒப்புதல் வேண்டுமே. அந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது? இந்த ரோம் மாநாட்டுக்கு முன்பே, 1882ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸ் பிற அரசாங்கங்களை அழைத்து இது குறித்துப் பேச அமெரிக்க அதிபருக்கு அதிகாரத்தை அளித்திருந்தது. அமெரிக்காவின் அழைப்பினைத் தொடர்ந்து இருபத்தைந்து நாடுகள் அக்டோபர் 1884ஆம் ஆண்டு தலைநகர் வாஷிங்டன்னில் நடந்த மாநாட்டிற்குத் தம் பிரதிநிதிகளை அனுப்பின. 

சர்வதேச நெடுங்கோடு மாநாடு அக்டோபர் 1, 1884ஆம் ஆண்டு வாஷிங்டன் டிசியில் கூடியது. வானவியல் ஆய்வாளர்கள், கப்பல் அதிகாரிகள், வரைபட ஆய்வாளர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள் என்று பலவகைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றார்கள். அவர்கள் எடுக்கப் போகும் முடிவு அவர்கள் துறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்துவதாக மட்டுமில்லாமல் நாடுகளின் எல்லைகளைக் கடந்து நேரத்தை ஒருங்கிணைக்கப் போவதாகவும் இருக்கும் என்பதை அவர்கள் எல்லாரும் அறிந்திருந்தனர். 

அன்றைக்கு கடலில் செல்லும் கப்பல்களில் 65 சதவிகிதம் க்ரெனிச் நேரத்தைப் பயன்படுத்துவதாக ஓர் அறிக்கை வெளியானது. அக்கப்பல்கள் கப்பல்வழியாக எடுத்துச் செல்லப்படும் சரக்குகளின் எடையில் 72 சதவிகிதத்தைக் கையாள்வதாகவும் அவ்வறிக்கை சொன்னது. இதனாலும் ரோம் மாநாட்டில் போடப்பட்ட தீர்மானத்தினாலும் க்ரெனிச் இந்த முதன்மைக்கோடு போட்டியில் முன்னணியில் இருந்தது. 

வேறந்தக் கோட்டை முதன்மை நெடுங்கோடு என்று அறிவித்தால் இந்தக் கப்பல்கள் அனைத்தும் தம் வழிமுறைகளில் இருந்து மாற வேண்டும். அவற்றோடு வானவியல் ஆராய்ச்சி குறித்தத் தகவல் சேகரிப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டியதாக இருக்கும். இதனால் க்ரெனிச்சை முதன்மை நெடுங்கோடாக அறிவிப்பது நடைமுறைக்குக் கொண்டு வர எளிதாக இருக்கும் என்பது ஒரு சாரர் முன்வைத்த வாதமாக இருந்தது. 

ஆனால் இதை எல்லாரும் ஒத்துக் கொள்ளவில்லை. எல்லாருக்கும் ஒரு வழி என்றால் தம்பிக்குத் தனிவழி என்பது எப்பொழுதுமே பிரான்ஸுக்குப் பொருந்தும். இப்பொழுதும் அவர்கள்தாம் மற்றொரு வாதத்தை முன்னெடுத்தனர். புதிதாக அறிவிக்கப்படும் முதன்மை நெடுங்கோடு எந்த நாட்டையோ அல்லது தலைநகரத்தையோ அல்லது வானியல் ஆய்வகத்தையோ முதன்மைப்படுத்தாமல் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம். 

ஏற்கனவே தங்களுக்கும் ஒரு வானவியல் பாரம்பரியம் இருக்கிறது, பாரீஸ் வானவியல் ஆய்வகம் க்ரெனிச் ஆய்வகத்திற்கு முன்னரே அமைக்கப்பட்ட ஒன்று, தங்கள் நாட்டு மாலுமிகளும், ஆய்வாளர்களும் பாரீஸ் நெடுங்கோட்டை அடிப்படையாகக் கொண்டுதான் கணக்கிட்டு வருகின்றனர். எனவே பாரீஸ் நெடுங்கோட்டை முதன்மை நெடுங்கோடாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கவில்லை. புதிய நெடுங்கோடு எந்த நாட்டையும் சாராமல் பொதுவானதாக இருக்க வேண்டும் என்ற அவர்கள் கோரிக்கை நியாயமானது என்று பலரும் கருதினர். 

இந்த மாநாட்டில் இவ்விரு வாதங்களும்தாம் பேசுபொருளாகின. 

ஒரு புறம் பெரிதும் பயன்பாட்டில் இருப்பதைத் தொடர்ந்தால் இடையூறு அதிகமிருக்காது, மாற்றத்திற்கான செலவும் குறைவாக இருக்கும் என்ற ஏரணம். மறுபுறம் எந்த நாட்டுக்கும் முக்கியத்துவம் இல்லாமல் பொதுவான முதன்மை கோடு வேண்டும் என்ற நியாயம். இவற்றில் எதைச் சரி எனச் சொல்வது? 

பிரேசில் பிரதிநிதி வேறு ஒரு கோணத்தை முன்வைத்தார். அவர்கள் நாட்டில் பயன்பாட்டில் இருந்தது ரியோ டி ஜெனிரோவை அடிப்படையாகக் கொண்ட நெடுங்கோட்டுக் கணக்கு. அதனால் அவர்களுக்கு க்ரெனிச்சும் பாரீஸும் ஒன்றுதான். ஆனால் முன்வைக்கப்பட்ட நெடுங்கோட்டை சக்திவாய்ந்த நாடுகள் எல்லாம் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அம்முடிவே பயனற்றுப் போய்விடும். இதனால் நாடுகள் இடையே சண்டைகளும் கூட மூளலாம். அதனால் பொதுவான நெடுங்கோடே நல்லது என்ற கருத்தை அவர் முன்வைத்தார். அன்றைக்கு சான் டொமிங்கோ (San Domingo) என்று அழைக்கப்பட்ட டொமினிக்கன் ரிபப்ளிக்கும் பொதுவான நெடுங்கோட்டுக்கு தன் ஆதரவைத் தெரிவித்தது. 

ஆனால் இதில் இருந்த நகைமுரண் ஒன்றினை நாம் கவனிக்க வேண்டும். 

கூடியிருப்பதோ உலகம் முழுவதற்கும் பொதுவான முதன்மை நெடுங்கோட்டை அறிவிக்க. அதில் ஒரு சாரர் சொல்வது அந்த நெடுங்கோடு பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இதை எல்லாம் பற்றி முடிவு செய்யப் போவது வெறும் இருபத்தைந்து நாடுகள் மட்டுமே! 

ஜப்பானையும் ஆட்டோமன் பேரரசையும் (Ottoman Empire) விட்டால் ஆசியாவில் இருந்து வேறெந்த நாட்டுக்கும் இடமில்லை. ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் அதே கதிதான். எப்படியோ லைபீரியாவுக்கு மட்டும் அழைப்பு. பெரும்பாலான நாடுகள் காலனிய ஆதிக்கத்தின் கீழ் இருந்தன என்று சொன்னாலும் இந்த முடிவு மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட சில நாடுகளின் கைகளில் இருந்ததே அன்றி பெரும்பான்மையான நாடுகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். 

போகட்டும். மாநாட்டில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். 

அக்டோபர் 1ஆம் தேதியன்று மாநாடு ஆரம்பித்தது. ஆனால் முதன்மை நெடுங்கோடு குறித்த வாக்கெடுப்பு நடந்தது அக்டோபர் 13ஆம் தேதிதான். வாக்கெடுப்பின் முடிவில் க்ரெனிச் நெடுங்கோட்டைச் சர்வதேச முதன்மை நெடுங்கோடாக அறிவிப்பது என்று முடிவானது. இந்த வாக்கெடுப்பில் க்ரெனிச்சுக்கு ஆதரவாக இருபத்திரண்டு வாக்குகள் விழுந்தன. சான் டொமிங்கோ இம்முடிவுக்கு எதிர்த்து வாக்களித்தது. பிரேசிலும் ப்ரான்ஸும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. 

இம்முடிவு என்னதான் சொன்னது? க்ரெனிச் நெடுங்கோட்டைச் சர்வதேச முதன்மை நெடுங்கோடாகக் கொள்வது. இதிலிருந்து கிழக்குப் பக்கமாக 180 பாகைகள் மேற்குப்புறமாக 180 பாகைகள் என பூமிப் பந்தைப் பிரிக்கலாம். அதே போல ஒரு நாள் இந்த முதன்மை நெடுங்கோட்டை அடிப்படையாகக் கொண்டு, 00:00 எனத் தொடங்கி 24:00 மணி நேரம் என்பதில் முடியும். இது பன்னாட்டு முன்னெடுப்புகளுக்குப் பயன்படும். இதுதான் சாராம்சம். 

இப்படி கிழக்கும் மேற்குமாகப் பிரிக்கும் பொழுது முதன்மை நெடுங்கோட்டுக்கு நேர் பின்னே 180ஆவது நெடுங்கோடு வரும். அதனை எதிர்நெடுங்கோடு (Anti Meridian) எனச் சொல்கிறார்கள். இந்த 180ஆவது நெடுங்கோடு ஞாபகத்தில் இருக்கா? நியூசிலாந்து தன் நேரத்தை அரைமணி நேரம் முன் கொண்டு சென்ற பொழுது அதுக்கு அடிப்படையாக இந்த நெடுங்கோட்டைத்தான் பயன்படுத்தியது. க்ரெனிச்சில் சரியாகப் பூமிப் பந்தின் அந்தப் பக்கம். அதனால் பன்னிரண்டு மணி நேர வித்தியாசம். திரும்ப நியூசிலாந்தா என்று யாரேனும் கேட்கும் முன் நாம் வாஷிங்டன் டிசிக்கே வரலாம். 

வாக்கெடுப்பு நடந்தது அக்டோபர் 13. ஆனால் இந்தத் தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது அக்டோபர் 22ஆம் தேதிதான். இப்படி ஒரு வழியாக சர்வதேச முதன்மை நெடுங்கோடு எது என்ற கேள்வி ஒரு முடிவுக்கு வந்தாலும் அதை எல்லா நாடுகளும் உடனே ஏற்றுக் கொள்ளவில்லை. ப்ரான்ஸ் பல ஆண்டுகளுக்குப் பாரீஸ் நெடுங்கோட்டைத்தான் அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அது க்ரெனிச் நேரத்தை அடிப்படையாக மாற்றிக் கொண்டாலும், அதைச் சொல்லும் பொழுது மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அவர் போட்டு இருக்கும் சட்டை என்னுது என்பதைப் போல பாரீஸ் நேரத்தில் இருந்து ஒன்பது நிமிடங்கள் இருபத்தோரு நொடிகள் பின்னால் என்று அழைத்தது. 

சரி க்ரெனிச் வழியாகப் போகும் நெடுங்கோட்டை சர்வதேச முதன்மை நெடுங்கோடாக ஏற்றுக் கொண்டாகிவிட்டது. ஏதோ நாள்கணக்கு வேற கூடச் சேர்ந்திருக்கு. அதற்கும் எல்லா நாடுகளிலும் கணக்கிடப்படும் நேரத்திற்கும் என்னய்யா சம்பந்தம் என்ற கேள்விதானே அடுத்து. 

அதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது  க்ரெனிச் சராசரி நேரம் (Greenwich Mean Time – GMT)! நேரம் சரி. அது என்ன சராசரி நேரம்? மீண்டும் பால பாடத்திற்குத்தான் போக வேண்டும். 

நான்: சூரியன் உச்சியில் இருக்கும் நேரம் மதியம் பன்னிரண்டு மணி. 

நீங்க: அ.எ.தெ. 

ஆனால் ஒரு நாளின் உச்சிப் பொழுதிலிருந்து அடுத்த நாள் உச்சிப் பொழுது வரையான நேரம் சீராக இருப்பதில்லை. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று பூமி சூரியனைச் சுற்றி வருவது ஒரு நீள்வட்டப் பாதையில். அதனால் அதன் சுழல் வேகம் எப்பொழுதும் ஒன்றாக இருப்பதில்லை. இரண்டாவது, நம் பூமிப் பந்து அதன் சுழல் பாதையில் நேராக இல்லை, சற்றே சாய்ந்து இருக்கிறது. இந்த இரு காரணங்களால் சூரியன் உச்சிக்கு வரும் நேரம் மாறுபடுகிறது. 

கொஞ்சம் குழப்பமாக இருக்கோ? ஒரு படம் போட்டு விளக்கலாமா?

Earth’s orbit and axial tilt. Illustration by Gothika, via Wikimedia Commons. CC BY-SA 3.0.

நாம சூரியனை ஒரு நீள்வட்டப் பாதையில் சுத்தறோம். அப்போ ஒரு சமயத்தில் சூரியனுக்குக் கிட்ட இருப்போம். அதிலிருந்து ஆறு மாசம் போனா கொஞ்சம் தள்ளி இருப்போம். சூரியன் கிட்ட இருக்கும் பொழுது நாம அதோட ஈர்ப்பு சக்தியால் உந்தப்பட்டு வேகமாச் சுத்துவோம். அதுவே தள்ளி இருக்கும் பொழுது அந்த வேகம் கொஞ்சம் குறைஞ்சுடும். சொல்லப் போனா இந்த வேகம் அதிகமா இருக்கும் நாளில் இருந்து மிகக் குறைவாக இருக்கும் நாள் வரை எடுத்துக்கிட்டோமானால் வித்தியாசம் என்னவோ விநாடிக்கு ஒரு கிலோமீட்டர்தான். ஆனால் துல்லியமான கணக்குகள் போடும் பொழுது இந்த வித்தியாசம் கவனிக்கத்தக்க வகையில் இருக்கும். இது முதல் காரணம். 

அடுத்ததா நம்ம பூமிப் பந்தைப் பார்த்தா கொஞ்சம் சாஞ்ச மாதிரி இருக்குல்ல. இதனால நாம பார்க்கிறபடிக்கு சூரியன் வானத்தில் வருஷம் பூராவும் போகும் பாதை பூமத்திய ரேகைக்கு இணையாக இல்லாமல் கொஞ்சம் சாய்வாக இருக்கு. அதனால சூரியன் கிழக்கு நோக்கி நகரும் வேகம், நம்ம நேரக்கணக்குக்குத் தேவையான திசையில் பார்க்கும் பொழுது, வருஷம் முழுவதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இதனாலவும் ஒரு நாள் உச்சியில் இருக்கும் நேரத்திலிருந்து மறுநாள் உச்சிக்கு வரும் வரையான நேரம் சீராக இருப்பதில்லை. எந்த இடமா இருந்தாலும் இப்படித்தான்.

உதாரணத்திற்கு இந்தப் படத்தைப் பாருங்க. 

Analemma A14 2016. Giuseppe Donatiello, via Wikimedia Commons. CC0 1.0 (Public Domain Dedication).

இந்தப் படம் ஒரே இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பல நாட்கள் சூரியனை எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு. கடிகாரத்தில் ஒரே நேரம் என்றாலும் சூரியன் வானத்தில் ஒரே இடத்தில் இருக்கவில்லை. கிழக்கும் மேற்குமாக அலைகிறது. கொஞ்சம் மேலும் கீழுமாகவும் அலைகிறது. நாம் மேலே சொன்ன இரண்டு காரணங்கள்தாம் இந்த அலைச்சலுக்குக் காரணம். ஆக சீரான இடைவெளியில் சூரியன் உச்சிக்கு வருவதில்லை. எனவே அதை அடிப்படையாகக் கொண்டால் சீரான வேகத்தில் ஓடும் கடிகாரம் நேரம் பார்க்க உதவாது. பிறகு என்ன செய்ய? 

க்ரெனிச் நேரத்தை அடிப்படையாகக் கொள்ளலாம் அப்படின்னு தீர்மானம் போட்டாலும் இந்தப் பிரச்னை அதை நேரடியானத் தீர்வாக எடுத்துக் கொள்ள முடியாமல் முட்டுக்கட்டை போட்டது. அங்கேயும் ஒவ்வொரு முறை சூரியன் உச்சிக்கு வரும் நேரம் மாறுமே. அதை வெச்சு எப்படி கடிகாரங்களில் நேரத்தை நிர்ணயம் செய்ய முடியும்? அதற்காகத்தான் சராசரி நேரம் அப்படின்னு ஒண்ணை கணக்கில் எடுத்துக்கிட்டாங்க. க்ரெனிச்சில் கணக்கிடப்படுவதால் அது க்ரெனிச் சராசரி நேரம். சில நாட்களில் இந்த சராசரி நேரம் மதியம் பன்னிரண்டு மணிக்கும் சூரியன் உச்சிக்கு வரும் நேரத்திற்கும் பதினைந்து நிமிடங்கள் கூட வித்தியாசம் இருக்கலாம். ஆனால் ஆண்டு மொத்தத்தையும் கணக்கில் எடுத்தோமானால் இந்த சராசரி நேரம் அந்த வித்தியாசத்தை ஓரளவு சமன்படுத்திடும்.

சொல்லப் போனால், இந்த மாதிரி சராசரி நேரத்தைக் கணிப்பது இதற்கு முன்பே இருந்ததுதான். க்ரெனிச் சராசரி நேரமும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த ஒன்றுதான். 1884ஆம் ஆண்டு மாநாட்டில் க்ரெனிச் நெடுங்கோட்டை உலகின் முதன்மை நெடுங்கோடாக ஏற்றுக் கொண்டதோடு, இந்த க்ரெனிச் சராசரி நேரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகப் பொது நாளைக் கணக்கிடவும் பரிந்துரைத்தார்கள். 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் க்ரெனிச் சராசரி நேரத்தின் பயன்பாடு பெருமளவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. கப்பல், ரயில்வே பயணங்கள், சர்வதேசத் தொலைதொடர்பு என்று இதன் பயன்பாடு பெருகிக் கொண்டே வந்தது. சராசரி மனிதர்களின் சராசரி வாழ்வுக்கு இந்த சராசரி நேரம் போதுமானதாக இருந்தது. 

ஆனால் விஞ்ஞான ஆய்வுகளுக்கான கணக்குகளுக்கு இது தேவையான அளவு துல்லியமாக இல்லை. அப்படி என்னதான் பிரச்சினை? 

வருடம் முழுவதும் ஏற்படும் மாற்றங்களை சராசரி நேரம் ஓரளவு சமாளித்தாலும், ஒரு நாள் என்பது பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்வதற்கான அளவும்தானே. அப்படி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் வேகமும் சீராக இல்லை என்றால் அந்தப் பிரச்சினையை சமாளிக்க வேண்டாமா? அதற்குத்தான் விஞ்ஞானிகள் நேரத்தை மேலும் துல்லியமாக அளவிடும் முறைகளைத் தேடிக் கொண்டே இருந்தார்கள். 

கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம். 

நான்: பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்ள இருபத்து நான்கு மணி நேரம் ஆகும். 

நீங்க: அ.எ.தெ. 

நான்: இருபத்து நான்கு மணி நேரம் என்று சொல்கிறோமே தவிர, அது உண்மையில் தோராயமாகச் சொல்வதுதான். 

நீங்க: ஙே… 

எப்படிச் சூரியனைச் சுற்றி வரும் வேகம் மாறுபடுகிறதோ அது போலவே பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் வேகமும் சீராக இருப்பதில்லை. நிலவின் ஈர்ப்பினால் காலப் போக்கில் அந்த வேகம் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட்டுக் கொண்டே வருகிறது. ஆனால் இடைக்காலத்தில் இந்த வேகம் கூடுவதும் குறைவதுமாகவும் இருக்கிறது. ஆகவே பூமியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் கணக்கிட்டால் அது முற்றிலும் சீரானதாக இருப்பதில்லை. சராசரி வாழ்க்கையில் இது பெரிய பிரச்சினையாக இல்லை என்றாலும் வானவியல், பௌதிகம், வழிநடத்துதல், தொலைதொடர்பு என்று வரும் பொழுது நேரத்தை மேலும் மேலும் துல்லியமாக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

அதற்காக பூமியின் சுழற்சி வேகம் மாறினாலும் கூட சீரான கதியில் இருக்கும் ஓர் அளவு தேவைப்பட்டது. அது வரை நேரத்தைக் கணிக்கப் பயன்பட்ட பெண்டுலம் கடிகாரம், குவார்ட்ஸ் கடிகாரம் போன்ற கருவிகள் இதற்குப் போதுமானதாக இல்லை. இவற்றை எல்லாம் விடச் சீரான இயக்கம் கொண்ட ஒன்றினைத் தேடினர் விஞ்ஞானிகள். அத்தேடலில் அவர்கள் அடைந்தது அணுவை. 

ஒரு கடிகாரம் இயங்க வேண்டுமென்றால் சீரான இடைவெளியில் திரும்பத் திரும்ப நிகழும் ஓர் இயக்கம் தேவை. பெண்டுலம் கடிகாரத்தில் ஊசல் (Pendulum) ஆடுகிறது. குவார்ட்ஸ் கடிகாரத்தில் படிகம் (Quartz) அதிர்கிறது. அதே போல அணுக்களுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. குறிப்பிட்ட அதிர்வெண்ணில் மின்காந்த அலைகளைச் செலுத்தும் பொழுது அவை ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுகின்றன. இந்த அதிர்வெண் ஒரே வகையான அணுக்களுக்கு அவை உலகில் எங்கிருந்தாலும் ஒன்றாகவே இருக்கும். இதை அடிப்படையாகக் கொண்டு மிகத் துல்லியமான கடிகாரங்களை உருவாக்க முடிந்தது.

இப்போதைக்கு நாம் ஒன்றே ஒன்றை மட்டும் புரிந்து கொள்வோம். துல்லியமாக நேரத்தை அளவிட அணுக்களையும் மின்காந்தக் கதிர்வீச்சையும் அடிப்படையாகக் கொண்ட அணுக்கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைக் கொண்டு விநாடி என்னும் அளவை நிர்ணயிக்கவும் முடிகிறது. அதைத்தான் விஞ்ஞானிகளும் செய்தார்கள். நேரத்தை அளக்கும் கருவிகள் பற்றிப் பார்க்கும் பொழுது இதை இன்னும் விளக்கமாகப் பார்க்கலாம். 

இந்த முறைப்படி நேரத்தை அளக்க விஞ்ஞானிகள் எடுத்துக் கொண்டது சீசியம்-133 என்ற அணுவை. அந்த அணுவைக் கொண்டு விநாடி நேரத்தைக் குறிப்பது என்பது 1967ஆம் ஆண்டு சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றானது. இந்த விநாடியின் அளவு கிட்டத்தட்ட அதற்கு முன்னர் இருந்த அளவை ஒட்டியே இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார்கள். அதனால் பொதுமக்களுக்கான நேரத்தில் பெரிய மாற்றங்கள் தவிர்க்கப்பட்டன. 

இருந்தாலும் பூமியின் சுழற்சிக்கும் அணுவைக் கொண்டு அளப்பதற்கும் சிறு வித்தியாசங்கள் இருந்தன. இந்த வித்தியாசத்தைக் கவனிக்காமல் விட்டோமானால், அணுக்கடிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் நேரத்திற்கும் பூமியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் நேரத்திற்கும் இடையேயான வேறுபாடு காலப்போக்கில் அதிகரித்துக் கொண்டே போகும். இவை இரண்டையும் அதிகம் விலகாமல் சமாளிப்பது எப்படி? 

அதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் உலக நேரக் குறியீடு (Coordinated Universal Time – UTC)! 

கடிகாரங்களின் கைக்கலப்பு: அ.எ.தெ. – நேரத்தின் கதை

கோடானு கோடி கோடுகள்

Discover more from சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.