- சில தெருக்கள், சில உலகங்கள்
- காலத்தின் பின்னலில் காசி
காசி பல அடுக்குகளைக் கொண்டது. கங்கைக்கரையின் மேடு மெல்ல மெல்ல வளர்ந்தது போல், பல நூற்றாண்டுகளைத் தன்னுள் அடக்கி இந்த நகரமும் வளர்ந்திருக்கிறது. அந்த மண்ணில் எங்கே தோண்டினாலும் நீரோடு வரலாறும் கசிந்து வெளிவரும். பல ஆண்டுகளுக்கு முன் காசி ரயில் நிலையத்தைச் சீரமைக்கத் தோண்டியபொழுது, ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நகரம் தொடர்ந்து வளர்ந்து வந்ததற்கான சுவடுகள் தென்பட்டன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான பானைச் செதில்கள் முதல் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்புவரை உபயோகத்தில் இருந்த பீங்கான் தட்டு வரை, மிகப் பழமையான மண் சுவர்கள் முதல் செங்கல் கட்டிடங்கள் வரை என்று எக்காலத்திலும் கைவிடப்படாத நகரமாகத்தான் காசி இருந்திருக்கிறது.
இந்த நகரம் வளர்ந்து வந்த தொல் தடங்களைச் செங்கற்களால் ஆன கட்டமைப்புகளாகப் புறநகர் ராஜ்காட் அருகே காணலாம். அல்லது, சார்நாத் அருங்காட்சியகத்திலோ பாரத் கலா பவனிலோ சிற்பங்களாகவும் சித்திரங்களாகவும் காணலாம். இந்த இடங்கள் மிகவும் சுவாரசியமானவை. தகவல்கள் நிறைந்தவை. ஆனால், இவை காசியின் கடந்த காலத்தை வெட்டியெடுத்து, அவற்றைச் சுற்றிச் சட்டகங்கள் அமைத்து, அதை காலத்தில் தனிமைப்படுத்துவது போல் எனக்குத் தோன்றியது. தகவல் பலகைகள், சீராக வெட்டப்பட்ட புல்தரைகள், குவி விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் ஒளிரும் கண்ணாடிப் பேழைகள் போன்றவை நேற்றைக்கும் இன்றைக்கும் இடையே செயற்கையான ஒரு இடைவெளியை உருவாக்குகிறதோ என்ற ஐயம் எனக்கு உண்டு.
என்னைப் பொறுத்தவரை, காசியைப் போல் இன்று வரை உயிர்ப்புடன் வாழும் பழமையான நகரங்களில் கடந்த காலமும் நிகழ் காலமும் தனித்தனியாக இல்லை. அவை பல இழைகளால் கோர்க்கப்பட்ட ஒரு பின்னலாகவே இருக்கின்றன. இந்த நகரில் சற்று அலைந்தாலே அதைக் காணலாம்.
**
சிந்தியா காட் அருகே பெயரில்லா ஒரு சந்தில் கிரீச்சிடும் மரக் கதவைத் திறந்து ஒரு முற்றத்தில் நுழைந்தேன். சிமெண்ட் கற்களால் ஆன தளத்தைச் சுற்றி ஒட்டிக்கொண்டிருந்தன வீடுகள். முற்றத்தின் ஓர் ஓரம் நீர் இறைக்கும் மோட்டார் ஒன்று பாகங்கள் திறந்து காட்டியபடியே வெயிலில் கிடந்தது. சுவரோரம் ஒரு பழைய சைக்கிள். கிழிந்த பிளாஸ்டிக் மூட்டை, வயர்கள், காரை பெயர்ந்து வரும் வெளிறிய நீல வண்ணச் சுவர்கள் என்று காசியின் மொஹல்லாக்களில் காணப்படும் பல வீடுகளைப் போல இதுவும் ஒன்று. ஆனால், வித்தியாசமானதும் கூட.

முற்றத்தைச் சுற்றி இருந்த ஒரு வீட்டிலிருந்து, தலையைச் சுற்றிய சேலையுடன், ஒரு வயதான பெண் வெளியே வந்தாள். அவள் கைகளில் இருந்த சிறு வெண்கலத் தட்டில் தீபம், மலர்கள், நீர் சொரியும் கிண்டி என்று பூஜைக்கான உபகரணங்கள் அனைத்தும் இருந்தன. சுற்றும் முற்றும் பார்த்தேன். துளசி மாடம் ஏதும் என் கண்களில் படவில்லை. அதற்குப் பதிலாக, இரண்டடி உயரத்தில், நிலத்தில் இருந்து துருத்திக்கொண்டிருக்கும் போர்வெல் குழாய் போல், பச்சை வண்ணம் பூசப்பட்ட சிமெண்ட் உருளை ஒன்று முற்றத்தின் நடுவில் இருந்தது. அதன் அருகில் வந்த அந்தப் பெண் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்து, கிண்டியிலிருந்த நீரை அந்த உருளையின் உள் வார்த்தார். பின்பு சில மலர்களை அதனுள் இட்டார். தீபாராதனை செய்து நமஸ்கரித்தார்.
நான் அருகே சென்று, ஓரடி விட்டம் கொண்ட அந்த உருளைக்குள் எட்டிப் பார்த்தேன். நிலத்தின் கீழே ஆழத்தில் அறை ஒன்றிருந்தது. அதன் நடுவே இந்தப் பெண்மணி வார்த்த அபிஷேக நீரையும் மலர்களையும் தாங்கிய சிவலிங்கம் ஒன்று வீற்றிருந்தது. என் கால்களுக்கு அடியே ஒரு கோவில்.
‘பிதா மஹேஸ்வர்’ என்றார் பூஜை செய்த பெண். தலைமுறை தலைமுறையாக அவர்களின் குடும்பம் இதே இடத்தில் வாழ்ந்திருக்கிறது. பாதாளத்தில் இருக்கும் அந்தக் கோவிலுக்குச் சுரங்கம் போல் நுழைவு வாயில் உண்டு என்றும், மகா சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் மட்டும்தான் கீழே சென்று தரிசிக்க முடியும் என்றார். காசியில் இதுபோல் பல இடங்கள் உண்டு என்று சொல்லிப் புன்னகைத்தார்.
என் மனக்கண் முன்னே காசி என்ற நகரம் கங்கை என்னும் பெரும் விருட்சத்தில் தொங்கும் தேன்கூடாக விரிந்தது. அடுக்கடுக்காகத் தளங்கள், அறைகள். அவற்றைத் தேனீக்கள் போலப் பராமரிக்கும் தொன்மம், வரலாறு, நம்பிக்கை…
‘ஸ்கந்த புராண் படிச்சிருக்கீங்களா?’ என்று கேட்டார். இல்லை என்று உதட்டைப் பிதுக்கினேன்.
‘அதுல காசி காண்டத்துல இந்த லிங்கத்தைப் பத்திய குறிப்பு இருக்கு’ என்றார். புராணத்தில் குறிப்பிடப்பட்ட அந்த லிங்கம்தான் இது என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் உண்டா என்று என் மண்டைக்குள் வரலாற்று ஆராய்ச்சி என்ற தர்க்கப் பூரான் ஒன்று ஓடியது.
‘இவரோட தரிசனம் உங்களோட பல தலைமுறைகளுக்கு முக்தியைக் கொடுக்கும்’ என்றார், தட்டில் இருந்த பேடாவிலிருந்து ஒரு துண்டை எடுத்து பிரசாதமாக அளித்தபடி. அவர் வார்த்தைகளில், செயல்களில் தொனித்த நம்பிக்கை என் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த பூரானை அடித்து ஓரத்தில் தள்ளியது.
**
சில வருடங்களுக்கு முன் பி. வி. காரந்த் பற்றிய ஒரு காணொளியைக் கண்டேன். அவரின் சுயசரிதையிலிருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டு, அதற்கேற்றாற்போல் காட்சிகள் அமைத்து, அவர் எழுதி இயக்கிய நாடகங்களில் இருந்து சில காட்சி துண்டுகளைச் சேர்த்து, அவரைத் தெரிந்தவர்களின் நேர்காணல்களை ஆங்காங்கே இணைத்து தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் அது. அவரின் வளர்ச்சி, நாடகத்துறைக்கு அவரின் பங்களிப்பு ஆகியவற்றைத் தாண்டி, அவர் வாழ்வின் சறுக்கல்களையும் அது விவரித்ததால் என் நினைவில் நின்றுவிட்டது.
இந்தக் காணொளி காசியில் என் நினைவிற்கு வந்ததற்குக் காரணம், விஸ்வநாதர் கோவில் அருகே இருக்கும் நந்தி சதுக்கத்தில் ஒரு கடை வாசலில் தென்பட்ட அறிவிப்புப் பலகை. அதில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் மாணவர்களால் நடத்தப்படும் ரங்ஷாலா என்ற அமைப்பின் நாடகத்தைப் பற்றிய விளம்பரம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.
பி. வி. காரந்த் ஹிந்தி இலக்கியம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காசிக்கு வந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்தார் என்ற தகவல் நான் கண்ட காணொளியில் இருந்ததைப் பலகையில் ஒட்டப்பட்ட வண்ணக் காகிதம் நினைவுபடுத்தியது. அத்தோடு, நூல் கோர்த்தால் போல் வேறு சில நினைவுகளும் வந்து சேர்ந்தன.
பி. வி. காரந்த் இயக்கத்தில் வெளிவந்த ஒரு நாடகத்தின் பெயர் அந்தேர் நகரி. நீதி இல்லாத நாடு, முட்டாள் ராஜா, புத்திசாலி குரு என்று பலவற்றை அடக்கிய இந்த நாடகத்தை எழுதியவர் பரத்தேந்து ஹரிஷ்சந்திரா. பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், இந்தி இலக்கியம், நாடகம், கட்டுரை, இதழியல் என்று பலதரப்பட்ட துறைகளில் முத்திரை பதித்த முன்னோடி. நவீன நாடகங்கள் சிருங்காரம், ஹாஸ்யம் போன்ற ரசங்களை மட்டும் முன்னிலைப்படுத்தாமல், சமுதாய சீர்திருத்தக் கருத்துகளைக்கூட மேடையேற்றி மக்களிடையே ஒரு எழுச்சியைக் கொண்டுவர முடியும் என்று தீவிரமாக நம்பியவர். அதுவும், நாடகங்கள் பிரபலமடையாத அந்தக் காலத்திலேயே இத்தகைய கருத்துகளை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் குடும்பம் பல தலைமுறைகளுக்கு முன்பே வங்காளத்திலிருந்து காசிக்குப் புலம்பெயர்ந்து விட்டது. காசி மன்னனின் நிதி நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்ததால், அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, நகரின் முக்கியஸ்தர்களின் வரிசையில் ஹரிஷ்சந்திராவின் குடும்பமும் ஒன்றானது. ஏராளமான வசதிகளும் பெருகின.
பரம்பரையாக வந்த செல்வம் இருந்ததால் பரத்தேந்து அதை மேலும் ஈட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை. நாடகம், இசை, நாட்டியம் என்று சகலத்திற்கும் கையில் இருந்ததை அள்ளி இறைத்தார்.
அவர் பிறந்து, வளர்ந்து, இறந்த அவரின் இல்லம் இன்றும் காசியில் இருக்கிறது. அதைக் காண நடந்தேன்.
சவ்கம்பா பகுதியில் தெருவை ஒட்டி இருந்த மரக் கதவுகளைத் திறந்து புராதனமான ஒரு ஹவேலிக்குள் நுழைந்தேன். என் முன்னே பெரிய முற்றம் ஒன்று விரிந்திருந்தது. அதன் நடுவே கல் வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு மண்டபம். முற்றத்தைச் சுற்றி நீண்ட தாழ்வாரங்களுடன் இரு தளங்கள். அவற்றில் இருந்த ஜன்னல்கள் மற்றும் வாயிற்கதவுகளைச் சுற்றித் தீட்டப்பட்டிருந்த சித்திரங்கள் ஹவேலியின் பழமையை உரைத்தன. பரத்தேந்து உபயோகித்த பேனா, காலி அத்தர் குப்பிகள், பல்லக்கு போன்றவை இன்றும் இருக்கின்றன என்று கேள்வி. ஆனால், கட்டிடத்தில் பராமரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்ததால் இவற்றைப் பார்க்க முடியவில்லை.

ஒரு பக்கச் சுவரில் பரத்தேந்துவின் ஓவியம் ஒன்று தீட்டப்பட்டிருந்தது. தோள்களைத் தாண்டி இறங்கும் அலையெனக் கூந்தல், அடர்ந்த மீசை, சற்றே தடித்த உதடுகளில் உறங்கும் மென் புன்னகை. கனவுகள் காண்பதற்கென்றே உருவாக்கப்பட்ட முகம்.
முற்றத்தின் நடுவே இருந்த மண்டபத்தில் உட்கார்ந்துகொண்டேன். சுவர்களுக்கு வெளியே உழன்றுகொண்டிருக்கும் ஒரு பெரும் நகரத்தின் ஓசை ஏதும் இங்கே எட்டவேயில்லை. குருவிகளின் கீச்சும், புறாக்களின் முணுமுணுப்பும், மண்டபத்தைச் சுற்றியிருந்த செடிகளுக்கு நீர் பாயும் ஓசை மட்டும்தான் கேட்டது. ஏறக்குறைய நூற்றியெழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கலைக்காகவும், மொழியின் மேன்மைக்காகவும் உழைத்த ஒரு ஆன்மா இந்தச் சூழலில் அமர்ந்துதான் தன் கனவுகளுக்கு ஒரு வடிவம் கொடுத்திருக்கும். பரத்தேந்து ஹரிஷ்சந்திராவின் இந்த இல்லம் காசி என்ற தேன்கூட்டின் மற்றொரு மதுரமான அறை.
**
காசியில் உள்ள பல கோவில்கள் சிறியவை. ஒரு காலத்தில் அவை பெரிதாக இருந்தன. பதினேழாம் நூற்றாண்டில் இங்கு வந்த பிரெஞ்சு வியாபாரி டவேர்நியர் (Jean-Baptiste Tavernier), பிந்து மாதவர் கோவிலின் உயரமான கோபுரத்தையும், ஆளுயர மூல விஷ்ணு மூர்த்தியையும் கண்டு அதிசயித்திருக்கிறார். இன்று மொசைக் இடப்பட்ட ஒரு சிறு அறைதான் பிந்து மாதவர் கோவில். ஆனால், ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்ற சொலவடைக்கேற்ப, காசியில் உள்ள இதைப் போன்ற பல சிறிய இடங்களில் வரலாறு, கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவை இன்றும்கூட தேங்கி, தளும்புகின்றன.
பஞ்சகங்கா படித்துறைக்கு அருகே இருக்கும் பாலாஜி கோவிலில் உள்ள மூல விக்கிரகம் கங்கை நதியில் கிடைத்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் மராட்டிய பேஷ்வா வம்சத்தினர்தான் இந்தக் கோவிலை நிர்மாணித்தனர். பின்னர் இது சிந்தியா வம்சத்தினருக்குக் கைமாறியது. இந்தக் கோவிலும், இதைச் சுற்றியுள்ள இடங்களும் வாரணாசி கராணா எனப்படும் ஒரு பிரத்யேக இசைப் பாணி உருவான இடம்.

தும்ரி, காஜ்ரி போன்ற இசை வடிவங்களை இந்துஸ்தானி வாய்ப்பாட்டிலும், ஐந்து விரல்களையும் உபயோகித்து கனமான அதிர்வுகளைத் தபேலாவிலும், உணர்வுகளைத் தட்டி எழுப்பும் சிதார் ஒலிகளாகவும் வாரணாசி இசைப் பாணி வளர்த்தது.
ஷெனாய் வாத்தியத்தின் உஸ்தாதாக அறியப்பட்ட பிஸ்மில்லா கான் இந்த இசைப் பாணியில் ஊறியவர். பிஹாரில் பிறந்திருந்தாலும் சிறு வயதிலேயே காசிக்கு வந்துவிட்டார். அவரின் மாமாவிடம் ஷெனாய் பயின்ற அவர், தினமும் பல மணி நேரம் பாலாஜி கோவிலில் அமர்ந்து சாதகம் செய்வார். அங்கே அவருக்கு ஏற்பட்ட பல அனுபவங்களைப் பற்றி பல நேர்காணல்களில் அவர் கூறியிருக்கிறார்.
தன்னை மறந்து இசையில் மூழ்கியிருக்கும்பொழுது, மனம் மயக்கும் அசாத்திய மணமும் ஒளியும், அர்ச்சகர் கூட வந்திராத நேரத்தில் அவர் அருகே உட்கார்ந்துகொண்டு அவர் வாசிப்பை யாரோ கேட்டுக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வும் அவருக்கு பல முறை ஏற்பட்டிருக்கிறது. அவர் செய்த ரியாஸ் (சாதகம்) மட்டும் அல்லாது, அதைச் செய்த இடத்தின் விசேஷமும் சேர்ந்துதான் அவரை வாழ்வில் பெருமளவு உயர்த்தியதாக அவர் நம்பினார்.
பிஸ்மில்லா கான் உலகெங்கும் சுற்றினாலும் கங்கையும் காசியும் தான் அவரின் நங்கூரம். கங்கை கரையில் இருக்கும் இந்த பாலாஜி கோவிலுக்கு எப்பொழுது வந்தாலும், சில நிமிடங்கள் நின்று அதன் வெளிச் சுவற்றை என் கரத்தால் வருடுவேன் என்று உணர்ச்சியுடன் ஒரு காணொளியில் குறிப்பிட்டிருக்கிறார்.
1930-களில் பிஸ்மில்லா கான் அமர்ந்து சாதகம் செய்த பாலாஜி கோவில் மரத்தால் நிர்மாணிக்கப்பட்டது. 1990-களில் அது சேதம் அடைந்தது. பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு, கோவில் மட்டுமன்றி, பாலாஜி காட் என்றழைக்கப்படும் படித்துறையையே மறுநிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
இப்பொழுது உள்ள கோவில் அளவில் சிறிதாக இருந்தாலும் சுத்தமாக இருக்கிறது. மராத்திய பாணி சலவை கல் தூண்கள், கங்கையைப் பார்க்கும் அகண்ட ஜன்னல்கள், கண்ணாடிக் குடுவைகளுக்குள் மின்சார விளக்குகள் என்று வசீகரிக்கிறது.
கோவிலில் யாரும் இல்லை. அலங்காரங்களுடன், விரிந்த தாமரை விழிகளோடு கற்பலகையில் புடைப்புச் சிற்பமாகப் பெருமாள் மட்டுமே இருந்தார். ஜன்னல்கள் வழியே மென் வெயிலோடு கங்கையின் காற்று வந்து வருடியது. சதுரங்கப் பலகை போல் இருந்த குளிர்ந்த தரையில் அமர்ந்தேன். குருவி ஒன்று கீழிறங்கி, தத்தி, வழுக்கி, சமாளித்து, தரையில் சிந்திய ஏதோ தானியத்தைக் கொத்தி, திறந்திருந்த வாயில் வழியாகப் பறந்து வெளியே சென்றது.
இயர்போன்களைக் காதுகளில் சொருகிக்கொண்டேன். அலைபேசி வழியாக உஸ்தாத் பிஸ்மில்லா கான் எப்பொழுதும் அனுபவித்து வாசிக்கும் மால்கௌன்ஸ் ராகம் என் மனத்தை நனைத்தது.
தொடரும்…
Discover more from சொல்வனம் | இதழ் 377 | 25 அக் 2026
Subscribe to get the latest posts sent to your email.
