மறைக்கப்பட்ட வாழ்க்கை

ஆங்கில மூலம் : மாதுரி விஜய் [1]

தமிழாக்கம்: அனுராதா கிருஷ்ணஸ்வாமி

நிதிக்கு பதினான்கு வயதிருக்கும் போது அவளுடைய அம்மா மறுபடியும் கர்ப்பமானாள். எதிர்பார்த்தது போலவே சுற்றி இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அதில் அவளுடைய பெற்றோரும் அடக்கம். அவர்கள் அந்த கர்ப்பத்தை பற்றியும் கர்ப்பம் ஏற்பட காரணமான செயலைப் பற்றியும் கேலியாகவும் கிண்டலாகவும்  மிகவும் நாடகீயத்தனமாகபேசிக் கொண்டார்கள். “இப்படி ஆகும் என்று முன்பே தெரிந்திருந்தால் ஏதாவது வித்தியாசமாக செய்திருப்பேன். இப்போது இந்த குழந்தை பிறந்து வளர்ந்து பாவம் ஒரு வங்கி பணியாளராகவோ அல்லது வேறு ஏதேனும் சுவாரசியமற்ற வேலை செய்பவராகவோ வாழக்கூடும்” என்றாள் அம்மா.  அவளுடைய அப்பாவோ வெள்ளந்தியாக ஆச்சரியத்துடன், “நான் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்தேன் அவ்வளவுதான். திரும்பி வரும்போது வழி தவறி இருப்பேன் போல” என்றார்.

நிதியின் முன்னிலையிலேயே அவர்கள் இப்படித்தான் நகைச்சுவையாகப் பேசுவார்கள். அவற்றைக் கேட்டு நிதி சங்கடப்படவோ வெட்கப்படவோ இல்லை. அவளுடைய பெற்றோர் எப்போதுமே இப்படித்தான் பேசுவார்கள்.  அதற்காக அவர்கள் அநாகரிகமாகப் பேசுபவர்ர்கள் என்று சொல்லிவிட முடியாது. எதையும் அவளிடமிருந்து மறைத்து, அவளைப் பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர்கள் கருதியதில்லை.

நிதிக்கு ஆறு வயதாக இருந்தபோது, கைவண்டியில் காய்கறிகளை விற்றுக்கொண்டு வந்த ஒருவன் இதற்கு ஓர் உதாரணம். அவன் விற்ற காய்கறிகள், நிதியின் பார்வைக்குத் தெரிந்தவரை, புத்தம் புதிதாகத்தான் இருந்தன. இருந்தாலும், அவளுடைய அம்மா அவனை அங்கிருந்து போகும்படி கையசைத்தாள்.

ஒருநாள் அவளுடைய அம்மா  “ கவனமாகப் பார். இப்போது அவன் தன் விதைப்பைகளைத் தொடப் போகிறான்” என்றாள்.

நிதி பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அந்த மனிதனின் கை அவனுடைய கால்சட்டைக்குள் இறங்கியது. யாரும் கவனிக்காதபடி அவன் தன் பிறப்புறுப்பைத் தடவிக்கொண்டதை அவள் பார்த்தாள். அவர்கள் வீட்டை அடைந்ததும், அதே கையால்  அவன் ஒரு தக்காளியை எடுத்தான். பளபளப்பாக, ஆசையைத் தூண்டும் ஒரு பொருளைப் போல, அதை அவர்களிடம் நீட்டினான்.

*

மற்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் “விதைப்பைகள்” என்று நிச்சயம் சொல்லமாட்டார்கள் என்பதை நிதி அறிந்திருந்தாள். அதுபோன்ற விஷயங்களுக்கு அவர்கள் தனித்துவமான, சற்றே குறும்புத்தனமும் கற்பனைநயமும் கொண்ட சொற்களைப் பயன்படுத்தினார்கள். சிறுநீரை “சூ-சூ” அல்லது “ச்சி-ச்சி” என்றார்கள். மலத்தை “கக்கா” என்றார்கள். பெண் பிறப்புறுப்பை பொதுவாக “பூக்கள்” அல்லது “மொட்டுகள்” என்று அழைத்தார்கள். (ஆண்குறிக்கு அவர்கள் என்ன பெயர் வைத்திருந்தார்கள் என்பது நிதிக்குத் தெரியவில்லை.) உடலுறவு கொள்வதை “நெருக்கமாக இருப்பது” அல்லது, குழப்பமளிக்கும் விதமாக, “நட்பு” என்று அழைத்தார்கள். நிதியின் பக்கத்து வீட்டுக்காரியான பாயலிடம் லூசி என்ற காக்கர் ஸ்பானியல் நாய் ஒன்று இருந்தது. அது அடிக்கடி வீட்டின் முன்பாதையில் இரத்தத் துளிகளை விட்டுச் செல்லும். பாயலின் குடும்பத்தினர் இதையும், மாதவிடாயையும் சேர்த்து “லூசியின் பிரச்சினை” என்று அழைத்தனர்.

ஆனால், தன் பெற்றோர் எதைப் பற்றியும் இப்படி வெளிப்படையாகப் பேசுவதைக் குறித்து நிதிக்கு எந்த மனக்கசப்பும்  அசௌகரியமும் இல்லை. அது அவளுடைய அப்பாவின் ‘சோம்பேறி கண் பார்வை’ யைப் போலவோ,  அல்லது முன்பு பரதநாட்டிய கலைஞராக இருந்த அவளுடைய அம்மா, உள்ளூர் பெண்களுக்காகத் தங்கள் வீட்டின் மொட்டைமாடியில் நடத்திவந்த ஏரோபிக்ஸ் வகுப்புகளைப் போலவோ, சாதாரணமான விஷயம் தான் என்றே தோன்றியது. தன் கர்ப்பம் முன்னேறிக்கொண்டிருந்தபோதும் அவள் அந்த வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தினாள். ஒவ்வொரு காலையிலும் நிதி காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, அந்தப் பெண்கள் காலுறைகள் அணிந்த கால்களுடன் மகிழ்ச்சியாக வீட்டுக்குள் அணிவகுத்து வருவார்கள்; தங்களது கெட்ஸ் காலணிகளை விரல்களில் தொங்கவிட்டபடி, “குட் மார்னிங், பெரிய அக்கா!” என்று கூவியவாறும் சிரித்தவாறும் படிக்கட்டுகளில் ஏறி மொட்டைமாடிக்குச் செல்வார்கள். அங்கே நிதியின் அம்மா ஏற்கெனவே அவர்களுக்கான உடற்பயிற்சிப் படிகளையும் டம்பெல்ல்களையும் தயாராக வைத்திருப்பாள்.

*

பின்னர், ஒரு செவ்வாய்க்கிழமை, கர்ப்பம் பதினாறாவது வாரத்தை எட்டியிருந்தபோது, நிதியின் அம்மா தனது மாணவிகளை தொலைபேசியில் அழைத்து, அன்று யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாள்; தான் மிகவும் சோர்வாக இருப்பதாகச் சொன்னாள். நிதியின் அப்பா அவளை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

நிதி பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது அம்மா  படுக்கையறைக்குள் தாழிட்டுக்கொண்டிருந்தாள். நிதி மீண்டும் ஒரே குழந்தையாகிவிட்டாள்.

“அவளுக்குச் சில நாட்கள் அவகாசம் கொடுக்கலாம்,” எனறார் அப்பா.

ஆனால் சில நாட்கள் கழிந்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அம்மா தொடர்ந்து  படுக்கையறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். வழக்கமாக எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசும் அவளுடைய அப்பா, இந்த முறை மட்டும்  அறைக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சொல்ல மறுத்துவிட்டார். அந்த அறையிலிருந்து இப்போது வெளிப்பட்டவை புரிந்துகொள்ள முடியாத ஒசைகள் மட்டுமே: அடித்தொண்டையிலிருந்து எழுவது போன்ற மெல்லிய இடிமுழக்கங்கள்; நாய்க்குட்டியின் கீச்சுக் கூச்சல்கள்; கல்லறையைப் போன்ற பேரமைதிகள்.

இறுதியில், நிதி சிறிது காலம் வேறு எங்காவது தங்கியிருப்பதுதான் நல்லது என்று அவளுடைய அப்பா கூறினார். ஆனால், யாருடன் தங்குவது? ஒரு தோழியின் வீட்டிலா? தனது தோழிகளின் வீடுகளில் ஓரிரவு, அதிகபட்சம் இரண்டு இரவுகளுக்கு மேல் தங்குவதைப் பற்றி நிதியால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அவர்களுடைய வாழ்க்கைக்குள் இவ்வளவு ஆழமாகப் பார்க்க வேண்டியிருப்பதும், அதேபோல் அவர்கள் அவளுடைய வாழ்க்கைக்குள் ஆழமாகப் பார்ப்பதும் அவளுக்கு ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தியது.

“இல்லை, எந்த தோழியுடனும் தங்க வேண்டாம்,” என்றார் அப்பா. “பெங்களூரில் கூடத் தங்க வேண்டாம்” அவருடைய பெரியம்மா  —நிதியின் பெரிய பாட்டி—மெட்ராஸில் வசித்து வந்தார். (சில ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த நகரம் சென்னை என்று அழைக்கப்படத் தொடங்கியிருந்தது.) அவருடைய பெயர் ஜெயா.  நிதியின் பாட்டியுடன் கூடப்பிறந்த ஐவரில் அவர்தான் மூத்தவர். அவருக்கு மிகப் பெரிய தோட்டத்துடன் கூடிய ஒரு வீடு இருந்தது; அங்கே சுற்றித் திரிந்து, புதுப்புது விஷயங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு அது மிகவும் ஏற்ற இடமாக இருந்தது. அதைவிடச் சிறந்த விஷயம் என்னவென்றால், அந்த வீடு முழுவதும் புத்தகங்களால் நிரம்பியிருந்தது.

 சொல்லப்போனால் நிதியின் அப்பாவுக்கு பதினைந்து வயதிருக்கும்போது அவருடைய சகோதரருக்குச் சின்னம்மை வந்ததால், அவர் தன் பெரியம்மாவின் அந்த வீட்டில் தான் ஒரு வாரம் தங்கியிருந்தாராம். அந்த ஒரு வாரமும்  மிகச் சிறந்த அனுபவமாகவே இருந்தது என்று அவர் நினைவு கூர்ந்தார். அதேபோலவே நிதிக்கும் அந்த இடம் கண்டிப்பாக பிடிக்கும் என்று அவர் உறுதியாக நம்பினார்.

அப்பாவின் உறுதியான நம்பிக்கையிலிருந்து அவர் ஏற்கனவே ஜெயா பாட்டியிடம் பேசிவிட்டார் என்பதும், நிதி எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தன் வீட்டில் தங்கலாம் என்று  அவர் கூறியிருந்ததும் தெரிய வந்தது.

“அங்கு எவ்வளவு நாட்கள் தங்க வேண்டி இருக்கும்?” என்று நிதி கேட்டாள்.

“கண்ணே! என்னை நம்பு! அப்பா பெருமூச்சு விட்டார். “நீ  உன் அம்மாவை இந்த நிலையில் பார்க்க கண்டிப்பாக விரும்ப மாட்டாய்! என்றார்.

*

மூன்று நாட்களுக்குப் பிறகு, நிதியும் அவரும் கேன்டோன்மென்ட் ரயில் நிலைய நடைமேடையில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காகக் காத்திருந்தனர். நிதி தனக்குப் பிடித்த டெனிம் ஷார்ட்ஸ் அணிந்திருந்தாள்; பேட்ச் பாக்கெட்டுகள் கொண்ட ஷார்ட்ஸ் அது.

ரயில் மெட்ராஸை அடைந்ததும், அடையார் பகுதியில் இருக்கும் ஜெயா பாட்டியின் வீட்டுக்கு அவள் ஆட்டோ பிடித்துச் செல்ல வேண்டியிருந்தது. (அவளை அழைத்துச் செல்ல ரயில் நிலையத்துக்கு யாராலும் வர முடியாத நிலை) அவள் தனியாகப் பயணம் செய்கிறாள் என்பதை அறிந்த அருகில் இருந்த ஒரு குடும்பத்தினர், அவளைக் கவனித்துக்கொள்ள முன்வந்தனர்.

அப்பா அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் நிதியிடம் திரும்பி, “ நீ பத்மினியைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்,” என்றார். “அவள் ஜெயா பெரியம்மாவின் மருமகள். அவளுக்கு அறிவுத்திறன் குறைபாடு இருக்கிறது.”

அவர் எப்போதும் பேசிவந்த அதே இயல்பான, சகஜமான தொனியிலேயே பேசினார். நிதி வெகு விரைவிலேயே தனது சொல்வழக்கிலிருந்து நீக்கிவிடப் போகும் அந்தச் சொல்லைக்கூட அவர் எந்தத் தயக்கமோ, சங்கடமோ இல்லாமல் இயல்பாகப் பயன்படுத்தினார்.

“இப்போது அவளுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும். ஆனால் மனதளவில் அவள் பத்து அல்லது  பதினோரு வயது பெண்ணைப் போலத்தான் இருப்பாள் என்று நினைக்கிறேன்,” என்றார்.

“அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா?”

“அவள் ஒரு விதவை. ஜெயா பெரியம்மாவின் மகன்—என்  ஒன்றுவிட்ட சகோதரன் சங்கர்—முப்பது வயதை எட்டுவதற்குள் இறந்துவிட்டான். நான் கேள்விப்பட்டதன்படி, பத்மினியின் நிலைமை பற்றி அறியாமலேயே அவன் அவளைத் திருமணம் செய்துகொண்டான். அதாவது, அவளுடைய உடல்/மன வளர்ச்சி பற்றித்தான் சொல்கிறேன். அவளுடைய குடும்பத்தினர் அதை ரகசியமாக வைத்திருந்தார்கள். திருமணத்திற்குப் பிறகுதான் எல்லோருக்கும் அது தெரியவந்தது. ஆனால், அதைப் பற்றி எதுவும் செய்வதற்கு முன்பே சங்கர் இறந்துவிட்டான். என் நினைவுக்கு எட்டியவரை, அவன் ஆப்பிரிக்காவில் எங்கோ இறந்தான். மொசாம்பிக், என்று நினைக்கிறேன். சங்கர் ஒரு மேதை என்று என் குடும்பத்தினர் எப்போதும் சொல்வார்கள். ஒருமுறை ஒரு புத்தகத்தைப் படித்தாலே அதை முழுவதுமாக மனப்பாடம் செய்துவிடக்கூடிய வகையைச் சேர்ந்தவன்”

“அவள் என்ன ஆனாள்? என்று நிதி விடாமல் கேட்டாள். “அவள் அங்கேயே தங்கிவிட்டாளா? அவளுடைய கணவன் இறந்த பிறகும்கூட?”

“பத்மினியா?” என்று அப்பா ஆச்சரியத்துடன் கேட்டார். “ஆம், அவள் ஜெயா பெரியம்மாவின் வீட்டிலேயே தங்கிவிட்டாள். பெரியம்மா விரும்பியிருந்தால் அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் திருப்பி அனுப்பியிருக்கலாம். ஆனால், அவளைத் திருமணம் செய்து கொடுக்கவே அவர்கள் ஒரு மோசமான தந்திரத்தைச் செய்திருந்தார்கள். அவளை மீண்டும் அவர்களிடம் திருப்பி அனுப்பினால்  அவர்கள் அவளைஎன்ன செய்திருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்?”

நிதி மௌனமாக இருந்தாள். அவளும் அப்பாவும் தூசிபடிந்த பழைய ரயில் வண்டி  ரயில் நிலையத்திற்குள் வந்து நின்றதைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“நான் அங்கே தங்கியிருந்த கொஞ்ச நாட்களில்,  எனக்குஒரு தங்கையைப் பெற்றது போலவே இருந்தது,” என்ற அப்பா நிதியைப் பார்த்து சோகமாகப் புன்னகைத்தார்.  “ உனக்கும் ஒருவேளை அப்படித் தோன்றலாம்” என்றார்.

*

ஜெயா பாட்டி நிதியின் சூட்கேஸைத் தூக்கி வைக்க உதவ முன்வரவில்லை.  நிதி  போதுமான அளவு ஆப்பிள் ஜூஸ் குடிக்கல்லை என்று அவர் கருதினார். நிதியின் கால்களைப் பார்த்து மெதுவாக முணுமுணுத்த படி “ஆப்பிள் ஜூஸ் சருமத்திற்கு நல்லது. உன் அப்பா இங்கே தங்கியிருந்தபோது நிறைய ஆப்பிள் ஜூஸ் குடிப்பார்” என்றார்.

நிதி தன் கால்களைப் பார்த்துக் கொண்டாள். அவளுக்கோ அவை நன்றாக இருப்பதாகவே தோன்றின—வலிமையாகவும் நெகிழ்வாகவும், சிக்கரி நிறப் பழுப்புடன் அழகாக இருந்தன.

“அதனால்தான் உன் அப்பாவின் நிறம் அவ்வளவு வெண்மையாக இருக்கிறது,” என்று ஜெயா பாட்டி தொடர்ந்தார். “ஆப்பிள் ஜூஸ். ஆனால், உன் அம்மா அவ்வளவு வெளுப்பு இல்லை என்று நினைக்கிறேன்?”

“அவர் என் அப்பாவைவிட வெளுப்பானவர்தான்,” என்று நிதி சட்டென்று பதிலளித்தாள்.  இப்படி பதில் பேசக்கூடாது என்பதை அவள் விரைவிலேயே கற்றுக்கொள்ளப் போகிறாள்.

“அப்படியா?”  என்றார் ஜெயா பாட்டி. பாட்டி நல்ல உயரம். அவரது தோள்கள் சாய்வாகவும் ஆண்களுடைய தோள்கள் போலவும் இருந்தன. சிறிய தங்கப் பறவைகள் தைக்கப்பட்ட ஊதா நிறப் பட்டுப் புடவை,  மடிப்புகள் ஏதுமின்றி, அவரது இடுப்பையும் பின்புறத்தையும் எந்த பாகுபாடும் இன்றி தழுவியபடி நேராகக் கீழே தொங்கியது. அவரது தலையில் இருந்த கொஞ்ச முடியும் வயலின் கம்பிகள் போல இழுத்து கட்டப்பட்டிருந்தன.

அவர்கள் ஜெயா பாட்டியின் வீட்டு வரவேற்பு அறையில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள்; நிதியின் கண்கள் அங்குமிங்கும் அலைந்துகொண்டே இருந்தன. அந்த அறையில் ஏதோ சரியில்லை என்று அவளுக்குத் தோன்றியது. அதன் அளவமைப்பிலோ அல்லது பொருட்கள் வைக்கப்பட்டிருந்த விதத்திலோ ஏதோ கோளாறு இருந்தது போலத் தோன்றியது.  அறையின் மறுமுனை வெகு தொலைவில் இருப்பது போல தோன்றியது. அங்கு கட்டைபோன்ற ஒரு தொலைக்காட்சிப் பெட்டி தனியாக இருந்த வெள்ளை பிளாஸ்டிக் நாற்காலிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தது. நிதியும் அவளுடைய பாட்டியும் நின்றிருந்த முன்வாசல் அருகே  அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ரோஸ்வுட் சோபா ஒன்று  கனத்து தரையைத் தொட்டு விடுவது போல தாழ்ந்திருந்தது; அதன் அருவருப்பான ஆரஞ்சு நிற உறை, தடிமனான பிளாஸ்டிக் உறையால் முற்றிலும் மூடப்பட்டிருந்தது. அறையின் நீண்ட நடுப்பகுதி முழுவதும் வெறுமையாக இருந்தது. அதைப் பார்த்தபோது, அந்தத் தரையை நம்ப முடியாதது போலவும், அங்கே கால் வைத்தால் ஏதேனும் ஆகிவிடுமோ என்பதுபோல நிதிக்கு ஒருவித   பயம் கலந்த உணர்வு ஏற்பட்டது.

“உடல்  ஆரோக்கியமாக கட்டுக்கோப்பாக இருப்பது நல்லதுதான்,” என்று ஜெயா பாட்டி உறுதியாகக் கூறினார். “ஆனால், தினமும் செய்யும் வேலைகளால் தான் உடல் கட்டுக்கோப்பாக இருக்கிறது. உடல் கட்டுக்கோப்பாக இல்லை என்றால், அதற்குக் காரணம்  போதுமான அளவு வேலை செய்யவில்லை என்பது தான் அர்த்தம் . அதனால் தான் கால்விரல்களைத் தொடுவதும் கழுதையைப் போலக் கால்களை உதைத்துக்கொள்வதுமாக இருக்கிறார்கள். அப்போது உடலுக்குள் பெருங்குழப்பம் ஏற்பட்டு விடுகிறது”.

ஒரு கணம் நிதி குழப்பமடைந்தாள்; பின்னர்  தான் ஜெயா பாட்டி, அம்மாவின் ஏரோபிக்ஸ் வகுப்புகளைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார் என்பது அவளுக்குப் புரிந்தது. நிதியின் அம்மா அந்த ஏரோபிக்ஸ் வகுப்புகளால்தான் குழந்தையை இழந்தார் என்றும், கழுதையைப் போலக் கால்களை உதைத்ததால் உடலுக்குள் எல்லாம் இடம் மாறிக் குழம்பிவிட்டது என்றும் அவர் சொன்னார்.

நிதி, குழந்தை தனது அம்மாவின் உடலுக்குள் கருப்பையைத் தேடி அவசரமாக ஊர்ந்து கொண்டிருப்பதாகக் கற்பனை செய்தாள். கருப்பை இருக்க வேண்டிய இடத்தில் அதைக் கண்டுபிடிக்க முடியாமல், குழந்தை மெதுவாகச் சுருங்கி இறந்துவிட்டது போல அவள் மனக்கண்ணில் தோன்றியது. அது அபத்தமான கற்பனை என்று அவளுக்குத் தெரியும்; ஆனால் அந்தக் காட்சியை மனத்திலிருந்து விரட்ட அவள் முயற்சிக்கவில்லை. அறையின் வெறுமையான நடுப்பகுதி அவளுக்கு ஏற்படுத்திய அதே உணர்வையே இந்த  கற்பனையும் அவளுக்குத் ஏற்படுத்தியது—அழுக்கானதும் மறைக்கப்பட்டதுமான ஏதோ ஒன்று ஒரு கணம் பளிச்சிட்டது போல.

திடீரென்று, அவளுடைய பெற்றோரின் மகிழ்ச்சியான வெளிப்படைத்தன்மை—அவர்களுடைய நாகரீகமற்ற நகைச்சுவைகள், சொல்லக்கூடாதவற்றுக்குக்கூட பெயரிட்டு அழைக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஆர்வம்—நிதிக்கு இப்போது சற்றே சங்கடப்பட வைக்கும் விஷயமாகத் தோன்றியது.

“என்னை இங்கே தங்க அனுமதித்ததற்கு நன்றி,” என்று அவள் பாட்டியிடம் கூறினாள்‌.

“சரி,” என்று ஜெயா பாட்டி தோள்களைக் குலுக்கினார். “உன் அப்பா சொன்னதைப் பார்த்தால், ஏதோ அவசரநிலை போலத்தான் இருந்தது.” என்றார்.

*

நிதிக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை சமையலறைக்கு அருகே இருந்தது.  அந்த அறையில் பரவியிருந்த சணல் மூட்டைகளின் மெல்லிய வாசனையை வைத்துப் பார்த்தால், அது ஒரு காலத்தில் பொருட்கள் சேமித்து வைக்கும் அறையாக இருந்திருக்க வேண்டும். மிகவும் சிறியதாகவும் ஜன்னல்கள் அற்றதாகவும் இருந்த அந்த அறை, அவள் படித்திருந்த ஒரு நாவலில் விவரிக்கப்பட்ட புகழ்பெற்ற ஓர் ஓவியருக்குச் சொந்தமான அறையை அவளுக்கு நினைவூட்டியது: ஒரு ஒற்றைக் கட்டில், ஒரு நாற்காலி, ஒரு நிற்கும் மின்விசிறி. நிதிக்கு அந்த அறை உடனடியாகப் பிடித்துப்போனது.

ஜெயா ஆன்ட்டி வீட்டின் மறுபுறத்தில் இருந்த அதைவிடப் பெரிய அறையைப் பயன்படுத்தினார். அந்த அறையின் ஒரு சுவர் முழுவதும் ஜன்னல்கள் இருந்தன; எதிர்ப்புறச் சுவர் முழுவதும் அலமாரிகள் இருந்தன; மேலும் அதில் இரண்டு ஒற்றைக் கட்டில்களும் இருந்தன. அப்போதுதான், அதுவரை தான் சந்திக்காத பத்மினியை நிதி நினைவுகூர்ந்தாள்.

சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, வெண்டைக்காய்களும் பளபளப்பான சுரைக்காய்களும் நிறைந்து புடைத்திருந்த ஒரு வலைப்பையைத் தூக்கிக்கொண்டு பத்மினி உள்ளே வந்தாள்.

அவளுடைய தலைமுடி நரைத்திருந்தது—அது  நிதிக்கு ஆச்சரியமளித்தது— அவள்  முடியை கழுத்துக்குப் பின்னால் தாழ்வாகக் கொண்டையாக முடித்திருந்தாள். சதுர வடிவில் தளர்வான ஒரு பருத்தி ரவிக்கையையும், கணுக்கால் வரை நீண்ட பாவாடை போன்ற ஒரு உடையையும் அணிந்திருந்தாள்; நிதி பல ஆண்டுகளுக்கு முன்பே அணிவதை நிறுத்திவிட்ட வகை ஆடை அது.

பத்மினியின் இடுப்பு அகலமாகவும், தோள்கள் மெலிந்தும் வளைந்தும் இருந்தன. சந்தேகத்திற்கு இடமின்றி நடுத்தர வயதைக் காட்டிய அவளுடைய முகத்தில், சிந்தனையில் ஆழ்ந்திருந்ததுபோலவும் திடுக்கிட்டதுபோலவும் ஒரு தோற்றம் இருந்தது. தன் அறையில் பொருட்களைப் பிரித்து அடுக்கிக்கொண்டிருந்த நிதியை அவள் பார்த்ததும், திடீரென்று நின்றுவிட்டாள்.

“ஹாய்,” என்றாள் நிதி.

பத்மினி புன்னகைத்தாள்; ஆனால் அந்த  புன்னகை நட்புணர்வு  குறைவாகவும் அனிச்சையாக ஏற்பட்ட ஒரு எதிர்வினை போலவே தோன்றியது. ஒருவேளை நிதியின் வருகையை அவள் மறந்திருக்கலாம்; அல்லது அதைப் பற்றி ஜெயா பாட்டி அவளுக்கு  சொல்லாமல் கூட இருந்திருக்கலாம். (தன் பெரிய பாட்டியை  சந்தித்த பிறகு, அது முற்றிலும் சாத்தியமே என்று நிதிக்குத் தோன்றியது.) பத்மினி நிதியின் வாழ்த்துக்குப் பதிலளிக்காமல் சமையலறைக்குள் மறைந்துபோனாள். அப்போதுதான், ஒருவேளை அவளால் பேச முடியாதோ என்ற சந்தேகம் நிதிக்கு ஏற்பட்டது.

*

தனது புதிய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அத்துடன் ஒத்துப்போக நிதிக்கு சில நாட்கள் பிடித்தன. பத்மினி வெளியே சென்று பொருட்கள் வாங்குவதையும் சமையல் செய்வதையும் மட்டுமல்லாமல், மற்ற எல்லா வேலைகளையும்  செய்துவந்தாள் என்பதை அவள் அறிந்துகொண்டாள். வீட்டின் பின்புறம் புதர்கள் மண்டிக்கிடந்த தோட்டத்தில் துணிகளைத் துவைத்து, துணிக்கயிற்றில் உலரப் போட்டாள். நிதியின் தலை அளவுக்குப் பெரிய உரலில் மசாலாப் பொருட்களை இடித்தாள். உப்பில் தோய்த்த எலுமிச்சைத் துண்டங்களால் செம்புப் பாத்திரங்களைத் தேய்த்து மினுங்க வைத்தாள். பட்டாணி உரித்தாள், மாவு பிசைந்தாள், பருப்பிலிருந்த கற்களைப் பொறுக்கி எடுத்தாள். அவள் செய்யாத வேலைகள் என்றால்  வீட்டைக் கூட்டிப் பெருக்குவதும் தரையைத் துடைப்பதும் மட்டுமே. அம்பிகா என்ற இளம் பெண் தினமும் வந்து அந்த வேலைகளைச் செய்தாள்; ஆனால் அவள் அவற்றை முணுமுணுத்தபடி மனமில்லாமல் செய்ததால், பத்மினியே அவற்றையும் செய்துவிட்டால் நல்லது என்று நிதி குற்ற உணர்வுடனே நினைத்தாள்.

 பத்மினி தான் செய்ய வேண்டியிருந்த அத்தனை வேலைகளைப் பற்றி கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அவள் அந்த வேலைகளை விரும்பி ரசித்தாள் என்று சொல்வது மிகைப்படுத்தலாகிவிடும்; ஆனால் அவை அவள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை. பத்மினியின் மனதில் மறைந்திருக்கும்  துயரத்தின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று நிதி பல நாட்கள் அவளை கவனித்தாள்; ஆனால் அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வேலையைச் செய்யும்போது, பத்மினி சோர்வறியாதவளாகவும், ஒருவித ஒழுங்குமுறையுடனும், முழு கவனத்துடனும், திறமையுடனும் செயல்பட்டாள். ஆனால், அவள் ஊமையல்ல. நிதியின் இருப்புக்கு அவள் பழகப் பழக, நிதியின் முன்னிலையில் அவள் ஓரளவு  முன்பை விடஅதிகமாகப் பேசத் தொடங்கினாள். அவளுடைய உரையாடல்கள் பெரும்பாலும்  அறிவிப்புகளாகவோ அல்லது  அவற்றை விட உறுதியான கூற்றுகளாகவோ தான் இருந்தன; அவற்றில் சில மற்றவற்றைவிட அதிகம் புதிரானவைகளாக இருந்தன.

“அந்த பிங்-பிங் பெண்மணி இன்று வரவில்லை,” என்று  கேரட்டை லாவகமாகத் தோல் சீவிக்கொண்டே சொல்வாள்

அல்லது: “உன் அரைக்கால் பேண்ட்டைக் கொடு. நான் துவைத்துவிடுகிறேன்” என்பாள்.

அல்லது: “அழுக்கான பொருட்களை அந்தச் சூடான இடத்தில் வைக்க வேண்டும்” என்பாள்.

முதல் இரண்டு சொற்றொடர்களையும் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமாக இல்லை. பிங்-பிங் பெண்மணி என்பது கைகளில் நிறைய ஜிலுங் ஜிலுங் என்று ஒலிக்கும் வளையல்களை அணிந்திருந்த அம்பிகாதான். “அரைக்கால் பேண்ட்” என்பது நிதியின் டெனிம் ஷார்ட்ஸ். ஆனால் அழுக்கான பொருட்களைச் சூடான இடத்தில் வைப்பது மட்டும் ஒரு புதிராகவே இருந்தது.

ஆரம்பத்தில், பத்மினியைப் புரிந்துகொள்ள அவளுடைய கடினமான கூற்றுகளுக்குப் பொருள் கண்டுபிடிக்க நிதி முயன்றாள். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் பத்மினி ஜெயா பாட்டியைப் போலவே இருந்தாள்: அவளுக்குக் கேள்விகள் கேட்பது பிடிக்காது.  உடனே முகத்தைச் சுளித்துக்கொண்டு மௌனமாகிவிடுவாள்; இறுதியில் நிதியும் தன் முயற்சியை விட்டுவிட்டாள்.

இருந்தாலும், அவளுடைய அப்பா முன்பே கூறியிருந்தது போலவே பத்மினி மிகவும் அன்பானவளாக இருந்தாள். நிதியின் துணிகள் கச்சிதமாக மடித்து வைத்தாள். நிதி சர்க்கரை தூவி சாப்பிட  விரும்பிய தயிரின் மேல் படியும் ஏட்டை அவளுக்காக எடுத்து வைத்தாள். மாலை தேநீருடன் சாப்பிடுவதற்காக வேகவைத்த நிலக்கடலை கொடுத்து நிதியை  ஆச்சரியப்படுத்தினாள்.

பத்மினி வேலை செய்துகொண்டிருக்கும்போது, ஜெயா பாட்டி  வரவேற்பறையில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பார். அவர் செய்கிற ஒரே அது ஒன்றுதான் என்று தோன்றியது. அவர் அமைதியின்றி சேனல்களை மாற்றிக்கொண்டே இருப்பார். சில நிமிடங்களுக்குள்ளேயே ஒரு டஜன் தடவைகள் சேனலை மாற்றிவிடுவார். அதன் விளைவாக—“பேவாட்ச்”, ஒரு தொடர், தமிழ் செய்திகள், மீண்டும் “பேவாட்ச்”—என ஒளிபரப்பாகும் காட்சிகளின் தொடர்ச்சி அவ்வளவு குழப்பமூட்டுவதாக இருந்தது; அதனால் நிதி ஜெயா பாட்டியைத் தவிர்க்கவே முயல்வாள். அதற்குப் பதிலாக அவள் பத்மினியோடு நேரம் செலவழிப்பதையே விரும்பினாள்.

பத்மினிக்கும் தொலைக்காட்சி பார்ப்பதில் எந்த ஆர்வமும் இல்லை. துணிகளைக் கை நிறைய எடுத்துக்கொண்டு வரவேற்பறையை கடந்து செல்லும்போது, நின்று தொலைக்காட்சியைப் பார்த்ததில்லை; அதுபோலவே, சோஃபாவில் அமர்ந்து சிறிய கத்தியால் பச்சைப் பீன்ஸின் நுனிகளை வெட்டிக்கொண்டிருக்கும்போதும், அவளது பார்வை  தொலைக்காட்சி பெட்டியின் திரையை நோக்கித் திரும்பியதில்லை. ஆனால், இதற்குக் காரணம் ஒருவேளை அவள் தனது வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டிய அவசியம்தான் என்று நிதி ஒப்புக்கொண்டாள்; ஏனெனில், அவளது வேலையில் சிறிதளவு தவறு அல்லது கவனக்குறைவு ஏற்பட்டால்கூட, ஜெயா பாட்டியின் உடனடியாக கண்டனம் தெரிவிப்பார்.

அந்த வீட்டில் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட முறையில்தான் செய்யப்பட வேண்டும். ஒருமுறை தயிர் உறையாமல் போனபோது, நிதியின் அம்மா செய்ததைப் போல—தோள்களைக் குலுக்கிக்கொண்டு, கடைக்குச் சென்று இரண்டு மென்மையான தயிர்ப் பாக்கெட்டுகளை வாங்கி வந்ததைப் போல—ஜெயா பாட்டி செய்யவில்லை. அதற்குப் பதிலாக, புளிப்பாகவும் நீர்த்தும் இருந்த அந்தப் பொருளை முகர்ந்து பார்த்தார். பின்னர், எல்லோரும் கவனிக்கும்படியாக அதைத் தனது சாதத்தின் மீது ஊற்றினார். விரல்களால் சாதத்துடன் கலந்தார்; நாடு கடத்தப்பட்ட வயதான பேரரசர் ஒருவர் தன் கண்ணியத்தை இறுகப் பற்றிக்கொண்டு உண்பதைப் போல, சற்றும் நிலை குலையாத கம்பீரத்துடன் அதைச் சாப்பிட்டார்.

*

நிதி மெட்ராஸில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். ஆனாலும், விரைவிலேயே அவளுக்கு அலுப்பு ஏற்பட்டுவிட்டது. ஆரம்பத்தில் அவள் கொண்டிருந்த பெரும்பாலான எண்ணங்கள் தவறானவை என்பதை அறிந்தபோது, அவளது அலுப்பு இன்னும் அதிகரித்தது. மிகவும் ரொமான்டிக்காகத் தோன்றிய அவளது அறை, ஒவ்வொரு மாலையும் தாங்க முடியாத அளவுக்கு வெப்பமாக மாறியது. முதல் பார்வையிலேயே மிகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் கிப்ளிங்கின் கதைகளில் வருவதைப் போலவும் தோன்றிய தோட்டம், உண்மையில் மோசமாக, பராமரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. அங்கே நீண்ட, கூர்மையான விளிம்புகளைக் கொண்ட புற்கள் நிறைந்திருந்தன; அவை நிதியின் கணுக்கால்களை காயப்படுத்தின. அதோடு, ஒருமுறை ஒரு சிறிய பழுப்பு நிறப் பாம்பு மின்னல்போல் ஒரு குழிக்குள் நுழைவதையும் அவள் பார்த்ததாக உறுதியாக நம்பினாள். (ஆனால் பத்மினி எதற்கும் பயப்படாமல், ஒவ்வொரு பிற்பகலும் காலில் செருப்பு அணியாமலேயே தோட்டத்திற்குச் சென்று துணிகளை உலர்த்தித் தொங்கவிடுவாள்.)

ஆனால் நிதி செய்த மிகப் பெரிய தவறு என்னவென்றால், அவள் ஒரு புத்தகம்கூட எடுத்துக்கொண்டு வராததுதான். அவளுடைய அப்பா கூறியிருந்ததை வைத்து ஜெயா பாட்டியின் வீட்டில் ஒரு பெரிய நூலகமே இருக்கும் என்று அவள் எதிர்பார்த்திருந்தாள். ஆனால் ஒரு வாரம் கடந்தும், அஞ்சலில் வந்த ராணி இதழ்களைத் தவிர, இரண்டு அட்டைகளுக்கு இடையில் கட்டப்பட்ட வேறு எதையும் அவள் பார்க்கவில்லை.  தமிழில் இருந்ததால் அந்த இதழ்களையும் அவளால் படிக்க முடியவில்லை;  ஒருவேளை அப்பா ஞாபகமின்றி தவறாகச் சொல்லிவிட்டாரோ  அந்தப் புத்தகங்கள் உண்மையிலேயே ஒருகாலத்தில் இருந்தனவா? அவை ஜெயா பாட்டிக்குச் சொந்தமானவை அல்ல; அவருடைய மேதமை வாய்ந்த மகனுக்குச் சொந்தமானவையாக இருந்திருக்கலாம் என்றும், அவர் இறந்த பிறகு அவை யாருக்கோ கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் நிதி நினைத்தாள். ஒரு நாள் பத்மினியிடம் அவற்றைப் பற்றிக் கேட்டபோது, அவளது இந்தச் சந்தேகம் மேலும் வலுவுற்றது.

“புத்தகங்களா?” என்று பத்மினி எதிரொலித்தாள்.

 பின்னர் அவள் வானத்தை நோக்கி ஒரு விரலைச் சுட்டினாள்.

*

மதராஸ் கடற்கரையோர நகரமாக இருந்தும், நிதி இன்னும் கடற்கரையை நேரில் பார்த்திருக்கவில்லை. எங்காவது வெளியே செல்லலாம் என்ற சாத்தியத்தைப் பற்றி அவள் குறிப்பிட்டபோது, ஜெயா பாட்டி, “ஆஹா, கடற்கரையா? கடந்த மாதம் மெரினா கடற்கரையில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவள்…  உடல் முழுவதும் நிர்வாணமாக வெளிப்பட்ட நிலையில் இருந்தாள்,” என்று முணுமுணுத்தார். ‘வெளிப்பட்ட’ என்ற சொல்லை உச்சரிக்கும்போது நிதியின் ஷார்ட்ஸைப் பார்த்து வருத்தம் கலந்த ஒரு பார்வையை வீசினார்.

இதன் விளைவாக, நிதி வீட்டுக்குள்ளேயே சலிப்புடன் சுற்றித் திரிந்து, வியர்வையில் நனைந்து, புரியாத ராணி இதழின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டும், பத்மினியின் இனிமையான, சலசலக்கும் பேச்சைக் கேட்டுக்கொண்டும் இருந்தாள். தன்னை மீண்டும் பெங்களூருக்குத் திரும்ப அனுமதிக்குமாறு  அப்பாவிடம் கெஞ்சிப் பார்க்கலாம் என்று அவள் நினைத்தாள். ஆனால் அவர் தவிர்க்க முடியாமல் ஏன் என்று கேட்பார்; அலுப்பாக இருக்கிறது என்ற ஒரே ஒரு காரணத்தை மட்டும் கூறிப் பொய் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை. அப்பா ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீட்டிற்குத் தொலைபேசியில் அழைப்பார். நிதி தான் நலமாக இருப்பதாக அவருக்கு உறுதியளித்தபோது, அவரடைந்த நிம்மதியை தெளிவாக உணர முடிந்தது. நிதி  அம்மாவைப் பற்றி விசாரித்தபோது, அவர் வெறுமனே, “பார்ப்போம்,” என்று மட்டுமே  பட்டும் படாமல் சொன்னார்.

*

அவள் அங்கு வந்து ஒரு வாரம் ஆனபோது, ஒரு சம்பவம் நடந்தது. நிதி பிளாஸ்டிக் உறை போர்த்தப்பட்ட சோஃபாவில் அமர்ந்து, அம்பிகா அதன் கீழே பெருக்குவதற்காகத் தன் கால்களை மேலே இழுத்துக்கொண்டிருந்தாள். பத்மினி சமையலறையில் இருந்தாள். அப்போதுதான் ஜெயா பாட்டி தனது வெள்ளை நாற்காலியில் அமர்ந்தபடியே வாயுவை வெளியேற்றினாள். நீண்ட, பயங்கரமான, குடுகுடுப்பான ஓசையுடன் வாயு வெளியேறியது. பாட்டி தலையைத் திருப்பவும் இல்லை;  தனது நடத்தைக்காக மன்னிப்பும் கேட்கவில்லை. தொலைக்காட்சித் திரையில், வெள்ளை நிற ஷார்ட்ஸ் அணிந்த இரு ஆண்கள் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தனர். நிதியும் அம்பிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்; பின்னர் பார்வையைத் திருப்பிக்கொண்டனர்.

அதுவரை அம்பிகா நிதியிடம் துளியும் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால், இந்தச் சம்பவம் இருவரையும் ஒன்றிணைத்துவிட்டதாக அவளுக்குத் தோன்றியிருக்க வேண்டும். பின்னர் நிதி தனது அறையில் இருந்தபோது, அம்பிகா அவளருகே நெருங்கி வந்து கிசுகிசுத்தாள்: “அழுக்குப் பிடித்த கிழட்டுப் ஒட்டகம், இல்லையா?” என்றாள்.

“யார்?” என்று நிதி தெரியாததுபோல் கேட்டாள்.

.”இன்னொருத்தி இருக்கிறாளே அவளும் பாவம்தான்” அம்பிகா சோம்பலாக, தான் வெளிப்படுத்தும் வன்மத்தை ரசித்துக்கொண்டடே நாக்கால் ‘ச்’ கொட்டினாள். “இப்படியெல்லாம் மற்றவர்களைப் பற்றி மோசமாகப் பேசக் கூடாது என்று எனக்குத் தெரியும். கடவுள்தான் அவர்களையும் உன்னையும் என்னையும் போலவே படைத்தார். நான் சொல்வது ஒன்றுதான்—அவளுடைய கணவன் ஏன் ஓடிப்போனான் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.”

“அவர் இறந்துவிட்டார் என்றல்லவா  நினைத்தேன்,” என்றாள் நிதி.

“எல்லா ஆண்களுக்கும் அந்த உணர்வு இருக்கும், தெரியுமா.”  என்ற அம்பிகா. வேண்டுமென்றே நிலைமையை சிக்கலாக்குவதைப் போலக் கடுகடுப்பான முகத்துடன் நிதியை ப் பார்த்தாள். “அதை வீட்டில் காட்ட முடியாவிட்டால், அவர்கள் என்ன செய்வார்கள்? வேறு எங்காவது போகத்தானே வேண்டும்?”

“உங்கள் வேலையை முடித்துவிட்டீர்களா?” என்று நிதி மரியாதையாகக் கேட்டாள்.

“மாடியில் இருக்கும் அறையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் முடித்துவிட்டேன்.” அம்பிகா தற்காப்பாக ஒரு பார்வையை மேலே மாடியை நோக்கி வீசினாள். “ஆனால் அதற்கு நான் பொறுப்பல்லை. அவர் கதவைப் பூட்டிவிட்டு சாவியையும் எடுத்துக்கொண்டு போய்விடுகிறார். நான் என்ன சுவர்களை உடைத்துக் கொண்டு நடக்க முடியும் என்று நினைக்கிறாரா?”

இந்த முறை, அம்பிகா எதைப் பற்றிப் பேசுகிறாள் என்பது நிதிக்குச் சற்றும் புரியவில்லை.

“அந்தப் பேராசிரியர். ஓ, சரி, உனக்கு அவரைத் தெரியாது. அவர் பாட்டியம்மாவின் மகனின் நண்பர். தான் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவன் என்று சொல்கிறார். ஆனால் ஆப்பிரிக்காவில் இருப்பவர்கள் எல்லாரும் கறுப்பு நிறத்தவர்கள்தான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.  எனக்கு அவர் சாதாரண இந்தியரைப் போலத்தான் தோன்றுகிறார். சில மாதங்களுக்கு ஒருமுறை இங்கே வருவார்.”

“அவர் என் அறையில்தான் தங்குவாரா?”

“சாமான் அறையிலா?” அம்பிகா முகம் சுளித்தாள். “இல்லை, அவர் மேலேதான் தங்குவார்.  இந்த வீட்டில் ஏ.சி. இருக்கும் ஒரே அறை அதுதான். அவர் இங்கே தங்கும்போதெல்லாம், முடிந்தவரை நீண்ட நேரம்  அந்த அறைக்குள்ளே இருந்து பெருக்க முயற்சிப்பேன் — அந்த அறை  குளிர்ச்சியாகவும் நன்றாகவும் இருக்கும் — ஆனால் அவர் எப்போதும் என்னை உடனடியாக வெளியே அனுப்பிவிடுவார். நான் அவர் படிப்பதற்கு தடையாக இருக்கிறேன் என்பார்.”

“படிப்பதா?” நிதி திடீரென்று தலையை உயர்த்தினாள்.

 “புத்தகங்களையா சொல்கிறீர்கள்?

“வேறு எதையாம்? மேலே அவரிடம் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன. நான் அவரைப் ‘புத்தகங்களின் மகாராஜா’ என்றுதான் அழைப்பேன்”

*

மொட்டைமாடியில் இருந்த அந்தச் சிறிய அறையை நிதி இதுவரை பெரிதாகக் கவனித்ததில்லை. ஆனால் இப்போது அதை ஆராய்ந்து பார்க்க அவள் மேலே சென்றாள். பல மாதங்களாக துடைக்கப்படாத கதவுச் சட்டத்தில் தூசி அடர்த்தியாக படிந்திருந்தது. கதவின் தாழ்ப்பாள் மங்கலாக  இருந்தது; ஆனால் அதில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டு புதிதாக இருந்தது. பேராசிரியரைப் பற்றி ஜெயா பாட்டியிடம் விசாரிக்கலாமா என்று நிதி  நினைத்தாள். ஆனால்  அம்பிகா கூறியதும் நினைவு வந்தது .அவர் ஜெயா பாட்டியின் மகனின் நண்பர். நிதி வந்ததிலிருந்து ஒருமுறைகூட யாரும் பெயரைக் கூட உச்சரிக்காத இறந்துபோன அந்த மகன் — சங்கர். அவள் எதுவும் கேட்கவில்லை.

ஒன்றரை வாரம் கடந்தது. பத்மினி காய்கறிகள் வாங்க வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, சந்தையிலிருந்து வாங்கிய மலிவான, வண்ண வண்ண வளையல்களின் ஒரு கட்டை நிதியிடம் கொடுத்தாள். பல ஆண்டுகளாக அத்தகைய வளையல்களை அணிந்திராத நிதிக்கு, அவை குழந்தைத்தனமானவை என்ற எண்ணம் தோன்றியது. இருந்தபோதிலும், காரணமே தெரியாமல் அவளுடைய மனம் நெகிழ்ந்தது. அம்மாவின் உடல் நிலையில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை  என்று அப்பா தொலைபேசியில் பேசும்போது கூறினார். அம்பிகா பெருமூச்சுவிட்டபடியே தரையைப் பெருக்கினாள். ஜெயா பாட்டி “தி டெர்மினேட்டர்” படத்தை ஐந்து நிமிடங்கள் பார்த்துவிட்டு, பின்னர் படிக மாயவலை போன்ற அமைப்பில் நடைபெறும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த அலைவரிசைக்கு மாற்றினார்.

*

பின்னர் ஒரு நாள் காலையில், நிதி விழித்தெழுந்தபோது சாப்பாட்டு மேசையருகே ஒரு  புதிய மனிதர் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவருக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும் என்று அவள் கணித்தாள். வழுக்கை விழத் தொடங்கிய தலை, நீண்ட  உயரமான உடல்வாகு, மெலிந்த நீண்ட விரல்கள். வெள்ளைக் கோடுகள் போட்ட மஞ்சள் நிற பைஜாமாவையும் வெள்ளை நிற V-கழுத்து உள்ளாடையும் அணிந்திருந்தார்.

“வணக்கம்,” என்றார் அவர். “நேற்றிரவு நான் உங்களைத் தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும்.  விமானங்கள் எப்போதுமே மிகவும் தாமதமாகத்தான் வந்து சேர்கின்றன. நான் சுதீர்.”

அவரது உச்சரிப்பு, நிதி இதுவரை அறிந்திருந்த எந்த உச்சரிப்புடனும் முழுமையாக ஒத்துப்போகவில்லை. எச்சரிக்கையுடன் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்ட அவள், “நீங்கள் என்னைத் தொந்தரவு செய்யவில்லை,” என்றாள். அது உண்மை தான்.  வெப்பம் கடுமையாக இருந்தபோதிலும், அவர் வந்தது கூட தெரியாமல் அவளால் நன்றாகத் தூங்க முடிந்திருந்தது.

பத்மினி, பல அடுக்குகளைக் கொண்ட இட்லித் தட்டில் ஆவிபறக்கும் இட்லிகளையும், தேங்காய்ச் சட்னி நிரம்பிய ஸ்டீல் கிண்ணத்தையும் கொண்டு வந்தாள். பேராசிரியர்—அவர் தான் என்பதில் சந்தேகமில்லை—முன்னோக்கி சாய்ந்து, அவற்றின் மணத்தை ரசித்து முகர்ந்தார்.

அப்போது ஜெயா பாட்டி, பிரகாசமான ஆரஞ்சு நிறப் பட்டுப் புடவையில்  காற்றில் மிதந்து வருவதைப் போல உள்ளே வந்தார். “சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள்!” என்று அவர் அழைத்தார். “மணத்தை முகர்ந்துகொண்டே இருந்தால் வயிறு நிரம்பிவிடுமா என்ன!” என்று தன்னுடைய நகைச்சுவையை தானே ரசித்து கிளுகிளுவென சிரித்தார்.

நிதி அவரையே உற்றுப் பார்த்தாள். எதற்காக இந்த சிரிப்பு? அதுவும் இவ்வளவு கொஞ்சலாகவும் கவர்ந்திழுக்கும் விதமாகவும் ஒலிக்கும் இந்தத் தொனியின் பொருள் என்ன? பேராசிரியரும் அப்படித்தான் நினைத்ததுபோலத் தோன்றியது; அவர் தலையைத் திருப்பி, நிதியை நேராகப் பார்த்தார். அவரது பார்வையில், ஜெயா பாட்டியின் இந்த நடிப்பில் இருந்த அபத்தத்தைப் பற்றிய ஒரு சோகமான ஒப்புதல் இருந்ததை நிதி உணர்ந்தாள். 

ஆனால், அதற்கும் மேலாக, அவள் ஒரு வேண்டுகோளை அவருடைய முகத்தில் கண்டாள்—அல்லது கண்டதாக நம்பினாள். தான் நடந்துகொள்வதுபோலவே நிதியையும் நடிக்கும்படி ஒரு மறைமுகமான வேண்டுகோள் அவருடைய முகத்தில் தெரிந்தது. 

“ என்னைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா

?” என்று பேராசிரியர் கேட்டார்; நிதியின் கொள்ளுப்பாட்டியை நோக்கித் தீவிரமான முகபாவத்துடன் திரும்பி. “நீங்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறீர்கள், என் அன்பு ஜெயா. கடந்த முறை, காலை உணவு முடியும் வரையேனும் காத்திருப்பதற்கான கண்ணியம் உங்களிடம் இருந்தது!”

“என்ன ஒரு நகைச்சுவை!” என்று ஜெயா பாட்டி மீண்டும் சின்னப் பெண் போல கிளுகிளுவெனச் சிரித்தார்.

 “நீ கொஞ்சம் கூட மாறவே இல்லை.”

*

 அவர் உண்மையில் பேராசிரியர் அல்ல; ஒரு வியாபாரி என்றும் அவருடைய பெயர் சுதீர் தேசாய் என்றும் நிதி பின்னர் தெரிந்து கொண்டாள். அவர் கென்யாவைச் சேர்ந்தவர். அதாவது, அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் நூறு ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்திலிருந்து கென்யாவுக்குச் சென்று, அங்குள்ள கடற்கரைப் பகுதியில் குடியேறியிருந்தார். சுதீர் தேசாய் மொம்பாசா என்ற நகரத்தில் பிறந்தவர். ஆகவே, நிதியைப் போல அவர் இந்தியர் அல்ல. இதெல்லாம் அவளுக்குப் புரிய வாய்ப்பில்லை என்பதுபோல்  அவளை வாஞ்சையுடன் பார்த்தபடியே, இதையெல்லாம் அவளிடம் தெளிவாக விளக்கினார்.

“காந்தியைப் போலத்தானே? தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்தியர்களைப் போல,” என்றாள் நிதி.

தனது கடைசி இட்லித் துண்டைச் சாப்பிடவிருந்த அவர், அப்படியே ஒரு கணம் அவளைப் பார்த்தார். “மோசமில்லை,” என்றார். “ஓரளவுக்கு அப்படித்தான். ஆம்.”

“சுதீர், நீங்கள் வியாபார விஷயமாகத்தான் இங்கே வந்திருக்கிறீர்களா?” என்று நிதி  அவரிடம் கேட்டாள்.

அவள் ஏற்கெனவே அவரை ‘அங்கிள்’ என்று அழைக்க முயன்றிருந்தாள். ஆனால், தன்னை சுதீர் என்றே அழைக்க வேண்டும் என்று அவர் சொல்லிவிட்டார். அவள் நினைத்ததைவிடவும் அவர் வயதில் மூத்தவர் என்பதை அப்போதுதான் அவள் உணர்ந்துகொண்டாள்.

“வியாபாரமா?” என்று அவர் சிரித்தார். “இல்லை. நான் இங்கே வந்திருப்பது, ஒரு பொழுதுபோக்குக்காக என்று சொல்லலாம்.”

பத்மினி உணவருந்தும் அறைக்குள் வந்து இட்லி அடுக்கை எடுத்துச் சென்றாள். சுதிர்  அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்; ஆனால் அவள் அவரைப் பொருட்படுத்தவில்லை. நிதி இங்கு வந்த முதல் சில நாட்களில் இருந்ததைப் போலவே, இப்போதும் அவள் ஒதுங்கியவளாகவும் முகச்சுளிப்புடனும் காணப்பட்டாள். “நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்,” என்று சொல்வதைப் போல ஒரு பெருமூச்சுடன் சுதிர் நிதியை நோக்கித் திரும்பினார். நிதி, “என்ன மாதிரியான பொழுதுபோக்கு?” என்று கேட்டாள்.

*

அவரது அறையும் அவளுடைய அறையைப் போலவே இருந்தது: ஒரு படுக்கை, ஒரு நாற்காலி. ஆனால் மொட்டைமாடியில் அமைந்திருந்ததால், அது அவளுடைய அறையைப் போலக் குகை மாதிரி இல்லை. அதில் இரண்டு பெரிய ஜன்னல்கள் இருந்தன. அவை மொட்டைமாடிப் பக்கத்தில் அல்லாமல், வெளிப்புறச் சுவரில் அமைந்திருந்தன; அவற்றில் ஒன்றில் சிறிய ஏர் கண்டிஷனர் பொருத்தப்பட்டிருந்தது. ஏர் கண்டிஷனர் கரகரவென்ற சத்தத்துடன் இயங்கிக்கொண்டிருந்தது; அதன் செயற்கையான குளிர் நிதியின் சருமத்தை உறுத்தியது.

இன்னொரு வித்தியாசம் என்னவென்றால், அவரது அறை முழுவதும் புத்தகங்களால் நிரம்பியிருந்தது. சுவர்களை ஒட்டி மரப் பலகைகளால் செய்யப்பட்ட அலமாரிகள் அமைக்கப்பட்டிருந்தன; அவற்றின் தட்டுகள் நடுப்பகுதியில் வளைந்து தொங்கின. புத்தகங்களும் நல்ல நிலையில் இல்லை. அவற்றில் பலவற்றின் முதுகுப்பகுதி பிய்ந்து போயிருந்தது; பக்கங்களை ஒன்றாகப் பிடித்து வைத்திருந்த நூலும் பசையும் தெரிந்தன.

இருந்தாலும், அவை புத்தகங்கள்தானே. நிதியின் முகபாவனையைப் பார்த்த சுதிர் தேசாய் சிரித்தார்.

“இத்தனை சந்தோஷம் வேண்டாம். இவை நாவல்கள் அல்ல.” என்று கூறிவிட்டு, போலியான  குறி சொல்லும் பாவனையுடன்  அவர் தன் நெற்றிப்பொட்டுகளைத் தொட்டுக்கொண்டார் “நீ நாவல்களைப் படிக்கும் பித்துப்பிடித்தவள் என்று  எனக்கு ஏதோ சொல்கிறது.” என்றார்.

அப்படித்தான் அவள் இருந்தாள். ஆனால், அவர் அதைச் சொன்னதும் அப்படி இல்லாமல் இருந்திருக்கலாமோ என்று அவளுக்குத் தோன்றியது. 

“நான் முதலில் இங்கு வந்தபோது இவை எப்படி இருந்தன என்று நீ பார்த்திருக்க வேண்டும்,” என்று அவர் கூறி, கிழிந்து பழுதடைந்த ஒரு புத்தகத்தை மெதுவாகத் தடவினார். “ஜயா இவற்றைக் கீழே வைத்திருந்தார். வரவேற்பறையின் நடுவிலேயே. பல ஆண்டுகளாக யாரும் அவற்றைத் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை. அவை சிதைந்து கொண்டிருந்தன. தரையில் சிதறிக் கிடந்த பக்கங்கள், புத்தகப் பூச்சிகள், பூஞ்சை—சொல்லிக்கொண்டே போகலாம். இந்த அலமாரிகளை நான் மேலே கொண்டு வந்தேன்; ஏ.சி.யையும் பொருத்தினேன். இது பெரிய ஏற்பாடு ஒன்றுமில்லை—ஈரப்பதத்தை அகற்றும் கருவி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்—ஆனால், குறைந்தபட்சம் இப்போது அவை கீழே இருந்தது போல அழுகிக்கொண்டிருக்கவில்லை.”

 வரவேற்பறையில் இருந்த அந்த வெற்றிடத்திற்குக் காரணம் இதுதானோ என்று நிதி நினைத்தாள். மீண்டும் ஒருமுறை சுற்றிலும் பார்த்தாள்.

“பழைய புத்தகங்களைச் சேகரிப்பது தான் உங்கள் பொழுதுபோக்கா?” என்று கேட்டாள்.

“அப்படி சொல்லிவிட முடியாது,” என்று அவர் புன்னகைத்தார். “நான் இங்கு முதன்முதலில் வந்தது அனுதாபம் தெரிவிக்கத்தான். ஜெயாவின் மகன் சங்கரைப் பற்றி உனக்குத் தெரியுமல்லவா? அவன் மொம்பாசாவில் இறந்துவிட்டான். நான் அவனை அங்கே சில முறை சந்தித்திருக்கிறேன். அவனுடைய உடலைச் சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளிலும் உதவியிருக்கிறேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஏதோ வியாபார விஷயமாக நான் இந்தியா வந்திருந்தபோது, துயரத்தில் இருக்கும் அவனுடைய தாயாரைச் சந்தித்து  மரியாதை செலுத்தலாமே என்று தோன்றியது. அதனால் தான் வந்தேன்” என்றார்.

நிதி தனக்குத் தெரியும் என்பதுபோல் தலையசைத்தாள்.

“பிறகு நான் அங்கிருந்த புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினேன். அப்போது தியோசபி பற்றிய ஒரு சிறிய, ஆனால் குறிப்பிடத்தக்க புத்தகத் தொகுப்பு இருப்பதைக் கண்டேன். அதற்கு முன்பு அதைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை.  சுருக்கமாகச் சொன்னால், அதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. தியோசபியைப் பற்றி உனக்குத் தெரியுமா, நிதி? ஹெலினா பிளவாட்ஸ்கி? அன்னி பெசன்ட்?”

“அன்னி பெசன்ட்,” என்று நிதி, யோசிப்பதுபோல் பாவனை செய்து, அவர் சொன்னதைத் திரும்பச் சொன்னாள். “அவர் ஹோம் ரூல் இயக்கத்துடன் தொடர்புடையவர், இல்லையா?” என்றாள்.

“நிதி,” என்று அவர் மெதுவாகச் சொன்னார். “நீ என்னைக் கவர்ந்துவிட்டாய்.”

சிரிப்பு வந்துவிடாமல் இருக்க அவள் உதடுகளை இறுக அழுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. அன்னி பெசன்டைப் பற்றியது வெறும் குருட்டு அதிர்ஷ்டம்தான்; கடந்த ஆண்டு பள்ளியில் நிதி ஹோம் ரூல் லீக்கைப் பற்றிப் படித்திருந்தாள். அவளுக்குள் மகிழ்ச்சியின் ஒரு சிறிய இயந்திரம் மெதுவாக ரீங்காரமிடத் தொடங்கியது. அதே நேரத்தில், ஒரு கண நேர இகழ்ச்சியும் அவள் மனதில் மின்னியது. அவரது பாராட்டைப் பெறுவது எவ்வளவு எளிதாக இருந்தது!

“சரி,” என்று சுதிர் தேசாய் சொன்னார். “உனக்கு அது தெரிந்திருந்தால், தியோசபிக்கல் சொசைட்டியின் தலைமையகம் அடையாறில், கிட்டத்தட்ட பக்கத்து வீட்டிலேயே இருப்பதும் தெரிந்திருக்க வேண்டும். பல ஆண்டுகளாக, இது என்னுடைய ஒரு வழக்கமாகிவிட்டது. சில மாதங்களுக்கு ஒருமுறை இங்கே பறந்து வந்து, ஜெயாவுடன் தங்கி, புத்தகங்கள் படித்து, சில சொற்பொழிவுகளுக்குச் செல்வேன். அது என் மனதை சமநிலை குலையாமல்  வைத்திருக்கிறது.”

“நான் ஒன்றை எடுத்துக்கொள்ளலாமா?” என்று நிதி கேட்டாள். “அந்தப் புத்தகங்களில் ஒன்றை?”

“தாராளமாக. அவை உன் பாட்டியின் புத்தகங்கள் தான் ;என்னுடையவை அல்ல.”

“அப்படியானால் நீங்கள் ஏன் கதவைப் பூட்டுகிறீர்கள்?” உண்மையில் தன்னுடைய கேள்வியில் முரட்டுத்தனம் தொனிக்க வேண்டும் என்று அவள் விரும்பவில்லை.

சுதிர் தேசாய் திடுக்கிட்டுப் போனவர்போலப் பார்த்தார். பிறகு சிரித்தார். “ஆ,” என்றார். “உனக்குத் தெரியுமே — அது பழக்க தோஷம்.

*

அன்னி பெசன்ட் எழுதிய ‘தியோசஃபியும் தியோசஃபிக்கல் சொசைட்டியும்’ என்ற நூலை நிதி தேர்ந்தெடுத்தாள். அது அவளைக் கவர்ந்ததால் அல்ல; இப்போது எதேச்சையாகவே பெசன்டுடன் தனக்கு ஏதோ ஒரு பிணைப்பு ஏற்பட்டுவிட்டதாக அவள் உணர்ந்ததால்தான். அது ஒரு நாவல் இல்லையென்றாலும், அதன் பழங்கால நடையையும், பெசன்ட் தனது கருத்துகளின் மகத்துவத்தில் மெய்மறக்கும் போதெல்லாம் இடையிடையே தோன்றும் ‘ஆஹா!’ ‘ஓஹோ!’ போன்ற வியப்பொலிகளையும் நிதி ரசிக்கத் தொடங்கினாள். சில சமயங்களில், அந்தப் புத்தகத்தின் அறிவுரைகளை நோக்கி ஒரு விதமான கனிவான மேட்டிமை உணர்வைக்கூட நிதி உணர்ந்தாள். அவை, மிகுந்த குழந்தைத்தனமான ஆர்வத்துடன் சொல்லப்பட்டவற்றிலிருந்து — ‘சூரிய ஒளியின் இன்பத்தில் அதன் சிற்றுயிர் முழுமையாக பொங்கி எழும்போது, அந்தப் பறவையின் குரலைக் கேளுங்கள்!’ — அதோடு கூடவே விசித்திரமாக ஒலிக்கும் — ‘ஆறு ரத்தினங்கள் உங்கள் நெற்றியில் கட்டப்பட்டிருக்கும் போது, தீட்சையின் வாயில்களுக்குள் நீங்கள்  நுழையத் தயாராக இருப்பவராகக் காட்சியளிப்பீர்கள்’ — இத்தகைய குறிப்புகள் உரைநடை முழுவதும் விரவி இருந்தன.

அவள் பெரும்பாலும் பிளாஸ்டிக் உறை போர்த்தப்பட்ட சோபாவில் அமர்ந்தோ, அல்லது மேல்தளத்தில் இருந்த சுதிர் தேசாயின் குளிர்ச்சியான அறையிலோ வாசித்தாள்.

எப்போதாவது வாசிப்பது சலித்துப் போகும்போது, தான் வாசித்தவற்றைப் பற்றி அவரிடம் பேசுவாள். அவரும் பெரும்பாலும் ஏதாவது வாசித்துக்கொண்டிருப்பார்; ஆனால், தனது புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டு, கேலியாக, “சரி, தற்போதைய வசைமாரி என்னவென்று கேட்போம்,” என்பார். அந்த உரையாடல்களில், நம்பிக்கை கொண்டவரின் பாத்திரத்தை ஏற்க அவர் விரும்பினார்; மனித ஆன்மாவின் பரிபூரணத்தையும், எல்லா உயிர்களும் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்திருப்பதையும் எதிர்த்து அவள் நடத்தும் தாக்குதல்களிலிருந்து அவற்றை அவர் பொறுமையாகத் பாதுகாப்பார்.

இதன் விளைவாக, உண்மையில் தான் உணர்ந்ததைவிடவும் அதிகமாக நிந்திக்கும் மனப்பான்மையும் சண்டைக்குணமும் கொண்டவளாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் பழக்கம் தனக்கு திடீரென ஏற்பட்டிருப்பதை நிதி கவனித்தாள். எப்போதாவது ஒரு உத்தம உலகம் உண்மையில் உருவானாலும், மனிதர்கள் ஒரு மாதத்துக்குள்ளேயே அதை அழித்துவிட வழி கண்டுபிடித்துவிடுவார்கள் என்று அவள் வாதிட்டாள். பொருள்சாரா வாழ்வு என்பதெல்லாம் உண்மையில் பசியால் வாடும் அபாயம் இல்லாதவர்களால் போதிக்கப்படும் ஆசைக்கனவு போன்ற அபத்தம். அதிலும் இந்த ‘தீட்சையின் நுழைவாயில்’ என்பது என்ன?

சுதிர் தேசாயின் மகிழ்ச்சிக்காகவே தான் தன் பேச்சையும் அணுகுமுறையையும் மாற்றிக்கொள்கிறாள் என்பதை அவள் அறிந்திருந்தாள்—இவ்வளவு இளம் வயதுடைய ஒருவரிடமிருந்து இப்படிப்பட்ட கடுமையான பேச்சைக் கேட்பது அவருக்கு வெளிப்படையாகவே வேடிக்கையாக இருந்தது—மேலும், அவள் மட்டுமே அப்படிச் செய்வதில்லை என்பதையும் அவள் அறிந்திருந்தாள்.

அவர் வந்ததிலிருந்து ஜெயா பாட்டி  தொலைக்காட்சி பார்ப்பதை வெகுவாகக் குறைத்திருந்தார்; அவரையே பார்த்துக்கொண்டிருப்பது அதைவிடப் பல மடங்கு பொழுதுபோக்காக இருப்பதாக அவருக்குத் தோன்றியது. அவர் என்ன செய்தாலும் அது அவரைச் சிரித்துச் சிரித்து குதிக்க வைத்தது. ஒரு நாள் அவரது சட்டையிலிருந்து ஒரு பொத்தான் கழன்றுவிட்டது; அதற்காக அவர் ஊசியும் நூலும் கேட்டார். “ஊசி! நூல்!” என்று   கெக்கலித்துச் சிரித்தார். “நீங்கள் பிரம்மச்சாரிகள்தானே! எல்லாவற்றையும் நீங்களே சமாளித்துக்கொள்வீர்களோ? சீச்சீ! பத்மினி இதை ஒரு நிமிடத்தில் சரிசெய்துவிடுவாள்.”

ஆனால், எல்லோரையும்விட அதிகமாக மாறியிருந்தது பத்மினிதான். நிதி கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக அறிந்திருந்த அந்த வாயாடிப் பெண் இப்போது காணாமற்போயிருந்தாள். அதன் பிறகு அந்த இனிமையான, அதேசமயம் நடைமுறைக்குப் பொருந்தாத பரிசுகள் எதுவும்  அவளிடமிருந்து வரவில்லை. எதிர்பாராத விதமாக கிடைக்கும் நிலக்கடலையும் கிடைக்கவில்லை. பத்மினி, அம்பிகாவைப் போலவே எரிச்சலும் அதிருப்தியும் நிறைந்தவளாக மாறியிருந்தாள்; தன் வேலைகளை விரைவாக செய்து முடித்துவிட்டு யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்தாள். தனது உள்ளுணர்வு அளித்த எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு நிதி, பத்மினியை வழிமறித்து நிறுத்தி, அதற்கான காரணத்தை அறிய முயன்றாள். அவர்கள் சமையலறையில் நின்றுகொண்டிருந்தபோது, பத்மினி சட்டென்று திரும்பி நிதியை பார்த்தாள். அவளுடைய முகம் கோபத்தில் சிதைந்திருந்தது. காய்கறி நறுக்கும் பலகையிலிருந்து ஒரு தக்காளியை எடுத்தாள்; அதை நிதியின் மூக்கருகே பிடித்து அழுத்தினாள். அதன் சாறும் விதைகளும் அவளது விரல்களுக்கிடையிலிருந்து 

பீச்சிட்டுச் சிதறின. அவள் இன்னொரு தக்காளியை எடுப்பதற்குள், நிதி பின்னோக்கி நகர்ந்து அறையை விட்டு வேகமாக வெளியேறினாள்.

*

பத்மினியின் நடத்தைக்கான  காரணம் வெகு விரைவிலேயே வெளிப்பட்டது. அது ஒரு வெள்ளிக்கிழமை. மதிய உணவுக்குப் பிறகு நடந்தது. ஜெயா பாட்டி தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக்கொண்டிருந்தார்; நிதி பெசன்ட்டின் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தாள்; தோட்டத்தில் துணிகளை உலர்த்துவதற்காகச் சென்றிருந்த பத்மினி உள்ளே வந்தாள். அவளுடைய குதிகால்களில் புல்துணுக்குகள் ஒட்டியிருந்தன; அவளது ரவிக்கையின் விளிம்பில் ஒரு துணிக்கிளிப் தொங்கிக்கொண்டிருந்தது. சுதிர் தேசாய் ஒரு சொற்பொழிவில் கலந்துகொள்வதற்காக தியோசஃபிக்கல் சொசைட்டிக்குச் சென்றிருந்தார். அவர் அத்தகைய சொற்பொழிவில் கலந்துகொள்வது இது இரண்டாவது முறை; தன்னை அழைக்காதது நிதிக்கு ஏனோ சிறிது ஏமாற்றத்தை உண்டாக்கியிருந்தது.

தொலைக்காட்சி  ஒரு வழியாக “டைட்டானிக்” திரைப்படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த அலை வரிசையில் நின்றது. அது அந்தக் காதல் காட்சி என்பதை நிதி சங்கடத்துடன் கவனித்தாள்—ஜாக்கும் ரோஸும் காரின் கண்ணாடிக்குப்பின்னால் காதல் செய்யும் காட்சி. (சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி தனது பெற்றோருடன் திரையரங்கில் “டைட்டானிக்” படத்தைப் பார்த்திருந்தாள்; இந்தக் காட்சி வந்தபோது அவர்களை ஒரு கணம் பார்த்தாள். இருவரும் புன்னகைத்துக் கொண்டிருந்தனர்.) பத்மினி தலையைத் திருப்பி தொலைக்காட்சியைப் பார்த்தாள். அவளது பார்வை சில விநாடிகள் மட்டுமே நீடித்தது; வெளிப்படையாக அவள் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. ஆனால், நிதியின் மனதில் மங்கலான ஒரு எண்ணம் உருவாக அதுவே போதுமானதாக இருந்தது.

சுதிர் தேசாய், பத்மினியின் இறந்துபோன கணவரை அவளுக்கு நினைவூட்டியிருக்க வேண்டும். ஏனெனில், ஒரு காலத்தில் அவர் அவளது கணவரின் நண்பராக இருந்தவர் அல்லவா. அவள் மிகக் குறுகிய காலமே வாழ்ந்த அந்த வாழ்க்கையையும் அவர் அவளுக்கு நினைவூட்டியிருக்க வேண்டும்—ஒரு வயது வந்த பெண்ணாக, திருமணமான பெண்ணாக அவள் வாழ்ந்த வாழ்க்கையை. கொடூரமாகப் பறிக்கப்பட்ட அந்த வாழ்க்கைக்குப் பதிலாக, ஜெயா பாட்டியுடன் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் இந்த அந்திம ஒளி சூழ்ந்த குழந்தைப் பருவ வாழ்க்கை அவள்மீது திணிக்கப்பட்டிருந்தது.

ஜாக் மற்றும் ரோஸ் அந்தக் காரில் காதல் செய்ததைப் போன்ற  ஒன்றை பத்மினியும் அவளுடைய கணவரும் எப்போதாவது செய்திருப்பார்களா என்று கற்பனை செய்யக்கூட நிதிக்கு துணிவில்லை. ஆனால், சுதிர் தேசாய் கோடுகள் போட்ட பைஜாமா அணிந்தபடி வீட்டில் சாவகாசமாகச் சுற்றித் திரிந்தபோதெல்லாம் பத்மினி ஏன் முகத்தைச் சுளித்தாள் என்பதற்கு இதுவே காரணம் என்று அவள் நம்பினாள். அவர் அவளால் வெறுக்கப்பட்ட ஒரு பிம்பம் போன்றவர்; அவரது இருப்பு வேறொரு மனிதனின் நினைவுகளை அவளுக்குள் தூண்டியது. 

*

அது ஒரு வெப்பமான இரவு—ஒவ்வொரு இரவும் வெப்பமாகத்தான் இருந்தது; ஆனால் இந்த இரவு வெப்பத்தில் முக்கி எடுக்கப்பட்டது போல இருந்தது—நிதி படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள். இரவு உணவின்போதே அவளது கீழ் முதுகு வலித்தது; எதிர்பார்த்ததுபோலவே, அவளது உள்ளாடையில் மாதவிடாயின் மங்கலான துருப்பிடித்த நிறக் கறை படிந்திருந்தது. அன்று மாலை முழுவதும் அவள் சோர்வாக இருந்தாள்; அதனால் சீக்கிரமே தூங்கிவிட்டாள். ஆனால் இரவில் ஏற்பட்ட வயிற்றுப் பிடிப்பால் அவள் விழித்துக்கொண்டாள். அவள் மெதுவாகக் குளியலறைக்குச் சென்று புதிய சானிட்டரி நேப்கினை அணிந்துகொண்டாள். பயன்படுத்தியதை, அதற்காகவே அவள் திருட்டுத்தனமாக எடுத்துவைத்திருந்த பழைய ‘ராணி’ இதழின் ஒரு கிழிந்த பக்கத்தில் சுற்றி, குப்பைத்தொட்டியில் வீசினாள். மீண்டும் தனது அறைக்குச் செல்லும் வழியில், முகத்தில் கொஞ்சம் காற்று பட வேண்டுமென்ற ஏக்கத்தில் அவள் தயங்கி நின்றாள். மொட்டைமாடிக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தாள். சிமெண்ட் தரை கால் வைத்தாலே கொப்பளிக்கிற அளவுக்கு சூடாக இருந்தது.

மூலையில் வளர்ந்திருந்த கூர்மையான முட்கள் கொண்ட போகன்வில்லா செடியின் நிழல் தரையில் விழுந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காற்று புகையைப் போலக் கனமாக இருந்தது. சிறிதளவு கூட ஆசுவாசம் கிடைக்கவில்லை. அவள் மீண்டும் உள்ளே செல்லத் திரும்பினாள்; பின்னர் சுதிர் தேசாயின் மூடியிருந்த கதவின் முன் நின்றாள்.

அவர் தூங்கிக்கொண்டிருப்பதை அவள் மனக்கண்ணில் கற்பனை செய்தாள்; அவருடைய நீண்ட கால்களில் ஒன்று படுக்கையின் ஓரத்திலிருந்து வெளியே தொங்கிக்கொண்டிருக்கும். திருமணம் ஆகாத ஆண்கள் சட்டையின்றி தூங்குவார்களா? ஒருவேளை உடையின்றிக்கூட? நிதி தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள்; அந்த மென்மையான சிரிப்பில் ஒரு கேள்வியும், தலைசுற்ற வைக்கும் அளவுக்கு உற்சாகமான,  ஆனால் சற்றே தீவிரமான  துணிச்சலான சவாலும் இருந்தது. அவளால் அதை செய்ய முடியுமா? மெதுவாக எட்டிப் பார்த்து விடலாமா? ஒரே ஒரு முறை மட்டும்? அவர் விழித்துக்கொண்டால், அதை எளிதாக ஒரு நகைச்சுவை எனக் கூறி விடலாம் அல்லவா? அவள் உள்ளங்கையை கதவின் மீது வைத்து  தள்ளினாள்.

கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. அவளுடைய முதல் எதிர்வினை நிம்மதியாக இருந்தது. இரண்டாவது, சொல்ல முடியாத அளவுக்கு பயங்கரமான அதிர்ச்சி. அவள் இப்படிச் செய்வாள் என்று அவர் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தாரா? அதற்காகத்தான்  அவர் முன்னெச்சரிக்கையாக கதவை உள்ளிருந்து தாழிட்டிருந்தாரா? ‘நீ இந்த மாதிரியான பெண் என்று ஏதோ எனக்குத் தோன்றுகிறது…’

பிறகு, கதவைப் பூட்டுவது பற்றி அவர் முன்பு சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது — அது அவனுடைய பழக்கம் மட்டுமே — அந்த எண்ணம் தோன்றியதுமே அவள்  நிம்மதியடைந்தாள். தன்  பதற்றத்தை நினைத்து அவளால் இன்னொரு முறை சிரிக்கவும் முடிந்தது. இருந்தபோதிலும், காற்றோட்டமில்லாத தன் படுக்கையறையை நோக்கி அவள் படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றபோது, மிகவும் ஆபத்தான விபத்திலிருந்து தப்பியவள் போல, அவளுடைய கால்கள் லேசாக நடுங்கின.

*

அந்த மாதம் அவளுக்கு வழக்கத்தைவிட அதிகமாக இரத்தப்போக்கு ஏற்பட்டது; சில மணி நேரங்களுக்கு ஒருமுறை  நாப்கின்களை மாற்ற வேண்டியிருந்தது. ஒரே ஒரு முறை மட்டுமே, தன் அம்மாவுக்கு நேர்ந்த அந்தக் கொடூரமான அனுபவத்தை—செவிலியர்கள் அங்குமிங்கும் ஓடியதை, கூச்சல்களை, இரத்தம் பீறிடும் அந்தக் கொடூரமான பிரசவச் செயல்முறையை—அவள் நினைத்துப் பார்த்தாள்; பின்னர் அதை மனதிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றினாள். அவள் பயன்படுத்தி சுற்றி வைத்த நாப்கின்கள் குப்பைத்தொட்டியில் குவிந்துகொண்டே போயின. அவற்றை அவள் அசௌகரியத்துடன் உற்றுப் பார்த்தாள். இந்தக் குப்பைத்தொட்டி எப்போது காலி செய்யப்படும்? இந்த நாப்கின்களை எங்கே கொண்டு போட்டு அகற்ற வேண்டும் என்று மட்டும் அவளுக்குத் தெரிந்திருந்தால், அவளே அவற்றை எடுத்துச் சென்று அப்புறப்படுத்தியிருப்பாள்.

ஒரு பிற்பகலில் அவள் வரவேற்பறையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது பத்மினி அங்கே வந்தாள். ஜெயா பாட்டி தொலைக்காட்சியின் முன் அமர்ந்தவாறே தூங்கிப் போயிருந்தார். சுதிர் தேசாய் எங்கே இருந்தார் என்று நிதிக்குத் தெரியவில்லை.

“பத்மினி.” கவனத்தைத் திசைதிருப்ப ஏதாவது கிடைத்ததில் மகிழ்ந்து நிதி புன்னகைத்தாள். பின்னர் திடீரென்று உடல் இறுக,  அவளைப் பார்த்து“நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று  அலறுகிற குரலில் கேட்டாள்.

பத்மினி, நிதி பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்திருந்த எல்லா சானிட்டரி நாப்கின்களையும் தன் கைகளில் ஏந்தியிருந்தாள். அவை குறைந்தது ஒரு டஜன் இருக்கும். அவற்றில் ஒன்றிரண்டு நிதி கவனக்குறைவாகப் போதுமான காகிதத்தில் சுற்றாமல் விட்டிருந்ததால், அவிழ்ந்துகொண்டிருந்தன; அவற்றின் சுருக்கப்பட்ட ஓரங்கள் விரிந்தபடி, உள்ளே இருந்த கருமையான கறைகளை வெளியே தெரிந்தன.

“பத்மினி!” நிதி கூவினாள். “அவற்றைத் தொடாதே!” ஜெயா பாட்டி விழித்துவிட்டாரா என்று அவள் சுற்றிலும் பார்த்தாள். ஆனால் அவர் அசாதாரணமான ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், அசையவே இல்லை.

“அவை அழுக்கானவை. அவர் அவற்றை பார்த்துவிடக் கூடாது,” என்று பத்மினி அமைதியாகச் சொன்னாள். அவள் குறிப்பிட்ட “அவர்” சுதிர் தேசாய்தான்.

நிதியின் இரத்தக் கறை படிந்த நாப்கின்களை இரு கைகளிலும்  ஏந்திக்கொண்டு, பத்மினி தோட்டத்திற்குள் நடந்தாள். அவற்றைக் கீழே போடும்படி நிதி தொடர்ந்து கெஞ்சிக்கொண்டே அவளைப் பின்னால் ஓடினாள். நீண்ட புற்கள் அவளுடைய கணுக்கால்களை ஊசி போல் குத்தின. அவர்கள் துணிக்கொடியைக் கடந்து, சிக்கலாகப் படர்ந்த கொடிகளையும் கீழே தொங்கிய சிவப்பு குரங்குவால் கள்ளிச்செடிகளையும் கடந்து, தோட்டத்தின் தொலைவிலிருந்த மிகப்பெரிய, காட்டுத்தனமாக வளர்ந்த லண்டானா புதருக்குச் சென்றனர். பத்மினி அதனைச் சுற்றி நடந்து, பார்வையிலிருந்து மறைந்தாள். நிதியும் அவளைப் பின்தொடர்ந்தாள்.

பத்மினி கருமையான கற்களால் வளையமிட்டு ஒரு தீக்குழியை அமைத்திருந்தாள். அந்தக் கற்களின் மீது சாம்பல் நிறத் துகள்கள் படிந்திருந்தன; ஈரமான கரியின் மூச்சுத்திணற வைக்கும் நாற்றம் வீசியது. அவள் நிதியின் நாப்கின்களை அந்தக் குழியின் நடுவில் போட்டுவிட்டு பின்னால் நகர்ந்தாள்.

நிதி அருகில் சென்று அந்தக் குழிக்குள் எட்டிப் பார்த்தாள். வீட்டுக் குப்பைகளை பத்மினி இங்கே எரிப்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் எதுவும் முழுமையாக எரிந்து சாம்பலாகவில்லை;  காற்று மிகவும் ஈரப்பதம் கொண்டதாக இருந்தது. நிதியின் கண்களுக்கு, ‘ராணி’யின் பாதி எரிந்த சில பக்கங்கள், கருகிய சில உருளைக்கிழங்கு தோல்கள், பரிச்சயமாகத் தோன்றிய மஞ்சள்-வெள்ளைத் துணியின் சில சிதறல்கள் தென்பட்டன.

அது என்ன துணி என்பதை அடையாளம் காண நிதி கண்களைச் சுருக்கிப் பார்த்தாள். அது என்னவென்று புரிந்தவுடன், அவள் திடுக்கிட்டு பத்மினியை நிமிர்ந்து பார்த்தாள். பத்மினி, சுற்றி மடக்கப்பட்டிருந்த நாப்கின்களில் ஒன்றில் தீக்குச்சியைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தாள். அது மந்தமாகச் சுடர்விட்டதே தவிர, தீப்பிடிக்கவில்லை.

எதற்கும் கலங்காத பத்மினி இன்னொரு தீக்குச்சியை ஏற்றினாள். பத்து நிமிடங்களுக்குள், அவள் ஒரு முழுப் பெட்டி தீக்குச்சிகளையும் செலவழித்துவிட்டாள். இறுதியில், நிதியின் நாப்கின்ககளைச் சுருங்கிப்போன கருப்பு முட்டைகளைப் போல மாற்றுவதில் அவள் வெற்றி பெற்றாள். காற்று எரிந்த பிளாஸ்டிக்கின் துர்நாற்றத்தால் நிறைந்திருந்தது.

*

அன்று நாள் முழுவதும், சுதிர் தேசாயிடம் அவரது பைஜாமாக்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைச் சொல்லலாமா வேண்டாமா என்று நிதி மனதில் போராடிக்கொண்டிருந்தாள்.

இறுதியில், அவள் சொல்லவில்லை. ஏன் என்று அவளுக்கே சொல்லத் தெரியவில்லை. ஒருவேளை, அவை காணாமல் போய்விட்டதை அவர் கவனித்திருக்காமல் இருக்கலாம். எப்படியிருந்தாலும், அவர் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லையே. மேலும், அவள் அந்த விஷயத்தைப் பற்றிப் பேச்சைத் தொடங்கினால், அவர் அந்த நெருப்புக் குழியைத் தானே சென்று பார்க்க விரும்புவார் என்றும் அவள் பயந்தாள். அப்படி நடந்தால்  சங்கடமானமுழுக் கதையும் வெளியில் வந்துவிடும்: பத்மினியின் கைகளில் இருந்த தனது சானிட்டரி நாப்கின்கள், நீராவி படர்ந்த காருக்குள் இருந்த ஜாக் மற்றும் ரோஸ், பத்மினி, பேய்கள், காதல் ஆகியவற்றைப் பற்றிய தனது முட்டாள்தனமான யூகங்கள்—எல்லாமே ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்பட்டுவிடும்.

இறுதியில், சுதிர் தேசாய் நிதியை தியோசாபிக்கல் சொசைட்டியின் ஒரு சொற்பொழிவுக்கு அழைத்தார். ஜெயா பாட்டி, அது பிடிக்காதது தெளிவாகத் தெரிந்தாலும், அவரை விமர்சிக்க முடியாமல், “ச்ச். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு ஒரு குழந்தை என்ன செய்யப் போகிறது?” என்றாள்.

அவர் அவளது தலையில் லேசாகத் தட்டினார். “உங்களுக்கு  பெரிய மூளை இருக்கிறது என் அன்பு ஜெயா, அதனால் உங்களுக்கு இதெல்லாம் தேவையில்லை. ஆனால் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள் எங்கள் மனதை இன்னும் விரிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம்.”

அதைக் கேட்ட பாட்டி தனது திருப்தியான கிக்கிக்கிச் சிரிப்பில் அடங்கிவிட்டாள்; நிதி அவருடன் செல்வதற்கு அதற்குப் பிறகு எந்த எதிர்ப்பும் எழவில்லை.

அந்தச் சொசைட்டி அடையாறு நதிக்கரையில் பரந்து விரிந்த ஒரு வளாகமாக இருந்தது. அமைதியான நடைபாதைகளின் ஓரங்களில் பழமையான கட்டிடங்களும், இயல்பாகவே சற்றே பராமரிப்பின்றி வளர்ந்திருந்த மரங்களும் ஆங்காங்கே தென்ப்பட்டன. பிரதானக் கட்டிடத்திற்கு அமைதியூட்டும் மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்தது; சிவப்பு அலங்காரமுடைய ஒரு சுவரில் இருந்து எட்டு வெள்ளைச் சுண்ணாம்பு யானைத் தலைகள் வெளியே உற்றுநோக்கிக் கொண்டிருந்த பகுதி நீங்கலாக.

தெளிவுணர்வு பற்றிய அந்தச் சொற்பொழிவை தங்க விளிம்புடைய கண்ணாடி அணிந்திருந்த உயரமான ஒருவர் வழங்கினார்; அது ஒரு கவிதையுடன் தொடங்கியது. நிதி அந்தக் கவிதையை மனப்பாடம் செய்ய முயன்றாள். ஆனால் முதல் வரி மட்டுமே அவள் நினைவில் நின்றது. அந்த மனிதர் பேசிக் கொண்டிருக்கும்போது, அவள் அதைத் தனக்குத்தானே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஓ, மறைந்திருக்கும் உயிரே, ஒவ்வொரு அணுவிலும் துடிப்புடன் நிறைந்திருப்பவளே. ஓ, மறைந்திருக்கும் உயிரே, ஒவ்வொரு அணுவிலும் துடிப்புடன் நிறைந்திருப்பவளே. ஓ, மறைந்திருக்கும் உயிரே…”

அதன்பிறகு, சுதிர் தேசாய் அவளை வளாகம் முழுவதும் அழைத்துச் சுற்றிக்காட்டி, அதன் முக்கியமான இடங்களைச் சுட்டி விளக்கினார்: உலகிலுள்ள ஒவ்வொரு மதத்திற்காகவும் கட்டப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்கள், பழமையான ஆலமரம், அறிஞர்களுக்காகவும் தன்னார்வத் தொண்டர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்குமிடங்கள்.

அவர்கள்  வீட்டிற்குத் திரும்பத் தொடங்கியபோது மாலை இருள் கவிந்திருந்தது. நிதி அமைதியாக இருந்தாள். அவளுடைய இரத்தப்போக்கு குறைந்திருந்தாலும்,  மிகவும் களைப்பாக உணர்ந்தாள். சுதிர் தேசாயும் மனம் தளர்ந்தவரைப் போலத் தோன்றினார். அவர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த ஃபவுண்டன் பேனாவைத் தொடர்ந்து தட்டிக்கொண்டிருந்தார். டப், டப், டப்.

“நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்,” என்றார்.

பிறகு, நிதியைப் பார்க்காமலேயே, அவர் ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினார். அது போரின் போது அவர் சந்தித்த ஒரு அழகான ஜெர்மன் செவிலியரைப் பற்றியது. அது எந்தப் போர் என்று அவர் குறிப்பிடவில்லை; நிதியும் கேட்கவில்லை. அவருக்கும் அந்தச் செவிலியருக்கும் தீவிரமான காதல் உறவு இருந்தது; அவள் கர்ப்பமானாள். தன்னுடனும் குழந்தையுடனும் சேர்ந்து ஜெர்மனிக்குத் திரும்பி வருமாறு அவள் சுதிர் தேசாயிடம் கெஞ்சினாள். ஆனால் அவரால் முடியவில்லை. அவர் விரும்பாததால் அல்ல; அவரும் இன்னொரு மனிதரும் ஏற்கெனவே ஒரு விமானத்தை  காட்டுக்குள்  ஓட்டிச்செல்லத் திட்டமிட்டுக் கொண்டிருந்ததால்.

இந்த அசாதாரணமான ஒப்புதல் வாக்கு மூலத்தைஎப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியாமல் நிதி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவர் தொடர்ந்து பேசப் பேச, அந்தக் கதை மேலும் மேலும் குழப்பமாக மாறியது. அதில் ஒரு இனப்படுகொலை, ஆயுதம் ஏந்திய கெரில்லாப் போராளிகள், விலைமதிப்பற்ற ரத்தினங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு களஞ்சியம், ஸ்பார்க்கி என்ற பெயருடைய ஒருவர் ஆகியோரின் குறிப்புகள் வந்தன. இறுதியில், அவை எல்லாம் முடிவுக்கு வந்தபோது (இனப்படுகொலையா? விமானப் பயணமா?), எல்லாவற்றிற்கும் காலம் கடந்துவிட்டிருந்தது.

அந்த ஜெர்மன் செவிலியையோ, தனது  குழந்தையையோ தொடர்புகொள்ள அவருக்கு மனம் ஒப்பல்லை. ஏன்? அதிகமான காலம் கடந்துவிட்டது என்பதால்தான். மேலும்—ஏன் பொய் சொல்ல வேண்டும்?—அவர் பயந்திருந்தார் என்பதாலும். 

அதற்குள்

அவர்கள் ஜெயா பாட்டியின் வீட்டு வாயிற் கதவை வந்தடைந்திருந்தனர்.

ஜன்னல்களில் விளக்குகள் எரிவதை நிதியால் பார்க்க முடிந்தது.

சுதிர் தேசாய் மெதுவாகச் சொன்னார்: “இதற்கு முன்பு நான் இதை யாரிடமும் சொல்லியதில்லை. ஏன் உன்னிடம் சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை. அது என்னவோ வெறுமனே… உன்னுள் ஒரு நம்பமுடியாத ஞானம் இருப்பதை நான் உணர்கிறேன், நிதி. நீ ஒரு பழமையான ஆன்மா. என்னைப் புரிந்துகொள்ள யாரால் முடியும் என்றால், அது நீயாகத்தான் இருப்பாய் என்று எனக்குத் தெரிந்தது.”

நிதி பதிலளிக்கவில்லை. தன் துணிச்சலான செயலை நினைத்து அளவுகடந்த உற்சாகமடைந்து, தன் தைரியத்தைப் பெருமையாக எண்ணிக்கொண்டு, அவரது மூடிய கதவுக்கு முன்னால் இருளில் ஒரு முட்டாளைப் போலவும், ஒரு குழந்தையைப் போலவும் நின்றுகொண்டிருந்த தன்னையே அவள் மனக்கண்ணில் பார்த்தாள். திடீரென்று அவளுக்கு அழ வேண்டும் போலிருந்தது.

“நிதி?” என்று அவர் கிசுகிசுத்தார்.

“அப்போதுதான் நீங்கள் சங்கரைச் சந்தித்தீர்களா?” என்று அவள் உரக்கக் கேட்டாள். “இவையெல்லாம் நடந்துகொண்டிருந்த அந்த நேரத்திலா?”

“சங்கரா?” என்று அவர் குழப்பத்துடன் நெற்றியைச் சுருக்கினார். “ஓ, அந்த சங்கரா. இல்லை, அது வெகு காலத்திற்குப் பிறகு, மொம்பாசாவில் நடந்தது.  நண்பர்கள் சிலர் எங்களை  அறிமுகப்படுத்தி வைத்தனர். அவர் ஒரு தொழில் தொடங்க விரும்பினார்; அதற்கு நான் உதவ முடியும் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும். ஆனால் பெரிதாக எதுவும் நடக்காது என்று எனக்கு உடனேயே தெரிந்துவிட்டது.”

“ஏன்?”

“அது அரைகுறையாக யோசிக்கப்பட்ட ஒரு திட்டம்.” சுதிர் தேசாய் தோள்களைக் குலுக்கினார். “அவர் அவ்வளவு புத்திசாலியானவர் அல்ல.”

“அவர் ஒரு மேதை என்று நான் கேள்விப்பட்டிருந்தேன்”

நிதி வேண்டுமென்றே நகைச்சுவையாகப் பேசி அவரை உற்சாகப்படுத்த முயல்வதாக அவர் நினைத்ததுபோல், நன்றியுணர்வு கலந்த ஒரு சிறிய புன்னகை புரிந்தார்.

“சங்கரா? ஒரு மேதையா? சரி, அப்படியே இருக்கட்டும்! அவர் ஒரு மேதை என்றே  வைத்துக்கொள்வோம்.முழுமையான, இறகுகள் பொருத்தப்பட்ட மேதை!”

பின்னர், தான் அப்படிச் சொன்னது இயல்பான விஷயம்தான் என்று அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். எல்லாவற்றிற்கும் மேலாக, அது அவருடன் இருக்கும்போது அவள் ஏற்று நடித்த ஒரு பாத்திரமாகிவிட்டது; அவரே ஊக்குவித்த பாத்திரம். நிதி, நாவல்கள் வாசிப்பவள். வாதம் செய்பவள், தன் கருத்தில் உறுதியானவள், வயதுக்கு மீறிய புத்திசாலித்தனமும் அறிவும் கொண்டவள்.  வேறு எப்படி அவள் பதிலளித்திருக்க முடியும்?

“முழுமையாக வளர்ந்த,” என்றாள் அவள்.

“என்ன?” அவரது குரலில் திடீரென ஒரு எச்சரிக்கை உணர்வு உண்டானது. எச்சரிக்கையா.. ஒருவேளை பதற்றமா

“‘முழுமையாக வளர்ந்த’,” என்று அவள் மீண்டும் சொன்னாள். “‘முழுமையாக இறகுகள் பொருத்தப்பட்ட’ என்பது இல்லை.”

அவர் மீண்டும் சிரித்தார். “நல்ல முயற்சி, ஆனால் நீ தவறு செய்கிறாய். அது ஒரு அம்பைக் குறிக்கிறது. அம்பின் பின்பகுதியில் இருக்கும் இறகுகள் ‘fletching’ என்று அழைக்கப்படுகின்றன.”

“‘Fletching’ என்றால் என்னவென்று எனக்குத் தெரியும்,” என்று அவள் அமைதியாகச் சொன்னாள். “ஆனால் அந்தச் சொல் அங்கிருந்துதான் வந்தது என்பதை அல்ல.”

அவர் அவளைப் பார்த்தார்; ஆனால் எதுவும் பேசவில்லை. அவர்கள் வீட்டுக்குள் சென்றார்கள். இரவு உணவுக்குப் பிறகு, சுதிர் தேசாய் ‘குட் நைட்’ சொல்லிவிட்டு மேல்மாடிக்குச் சென்றார். அதற்குச் சிறிது நேரத்திலேயே ஜெயா பாட்டியும் பத்மினியும் படுக்கைக்குச் சென்றார்கள். நிதி பல் துலக்கிவிட்டு, விசிறியின் முன் உடலைக் குளிர வைத்துக்க்கொள்வதற்காகப் படுக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்தபோது, அவளது கதவில் தட்டும் சத்தம் கேட்டது.

“நான் என்ன யோசித்தேன் என்றால்,” என்று அவர் மென்மையாகச் சொன்னார், “நீ என் அறையில் தூங்க விரும்புகிறாயா?”

அவசரமான ஒரு விஷயத்திற்காக உடனடியாக புறப்படச் சொல்லி அழைப்பு வந்ததாக அவர் விளக்கினார். அவர் உடனே விமான நிலையத்திற்குச் செல்லப் போவதாகவும், அதிகாலையில் பம்பாய்க்குப் புறப்படும் விமானம் கிளம்பும் வரை அங்கேயே இருக்கப் போவதாகவும் சொன்னார். அங்கிருந்து நைரோபிக்குப் பறந்து, பின்னர் மொம்பாசாவுக்குச் செல்வார். அவள் இங்கே கீழே வெப்பத்தில் தவித்துக்கொண்டிருக்கும்போது, தான் மட்டும் குளிர்சாதன வசதியுள்ள அறையில் உறங்குவது குற்ற உணர்வைத் தருவதாகச் சொன்னார். இன்றிரவு முதல்—இல்லை, உண்மையில் இப்போதிலிருந்தே—அவள் அவருடைய அறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார். அவர் எல்லாப் பொருட்களையும் அடுக்கி வைத்துக்கொண்டு புறப்படத் தயாராக இருந்தார்.

உண்மையிலேயே அப்படித்தான் தெரிந்தது. நிலவொளி பரவியிருந்த இடத்தில், கதவருகே அவருடைய சூட்கேஸ் நின்றுகொண்டிருந்தது.

“ஜெயா பாட்டிக்கு என்ன சொல்வது?” என்று நிதி கிசுகிசுத்தாள். “உங்களுக்கு என்ன ஆனது என்று அவருக்குத் தெரியாதே.”

“ஓ, ஜெயா இப்போது என்னிடம் நன்றாக பழகி விட்டார். நான் திரும்பி வருவேன் என்று அவருக்குத் தெரியும்.” என்றார்.

*

படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருக்கவில்லை. அவற்றில் அவருடைய—வியர்வையின் மணமும், நிதிக்கு அறிமுகமில்லாத ஏதோ ஒரு சோப்பின் மணமும் – வீசியது. ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படுமளவுக்கு அவளுக்கு சக்தி இல்லை. ஏ.சி. சத்தமாக இயங்கியது; ஆனால் நன்றாகக் குளிர்வித்தது. தனது அறைக்குச் சென்று, அங்கிருந்த படுக்கை விரிப்பை எடுத்து வந்து, அவருடைய விரிப்புடன் சேர்த்துப் பயன்படுத்த வேண்டியிருந்தது. புத்தக அலமாரிகள் அவளை நோக்கி உயர்ந்து நின்றன; அந்தக் குளிர் அவளை நெருக்கியது; கீழே இருந்த தெருவிளக்குகளின் ஒளி அறைக்குள் கசிந்து வந்தது. ஒரு கணம், தன்னால் ஒருபோதும் அந்த அறையில் தூங்க முடியாது என்று அவள் நினைத்தாள். ஆனால் அவள் நினைத்தது தவறு.

கதவு திறந்தபோது, அவள் முழுமையாக விழித்துக்கொள்ளவில்லை. எல்லாமே அவளை மிகவும் தொலைவிலிருந்து வந்தடைந்தன; அவளது உணர்வுகள் பேய்த்தனமாக, மங்கலாக இருந்தன. அப்போது அவளுக்குள்  ஒரு எண்ணம் தோன்றியது. அவர்  வந்துவிட்டார்.

ஆச்சரியப்படத்தக்க வகையில் அது அவளுக்குள்  எந்தவிதமான பீதியையும் ஏற்படுத்தவில்லை. அந்த அரைத் தூக்க நிலையில், எதுவுமே ஆபத்தானதாகத் தோன்றவில்லை; எதுவுமே அவளை அச்சுறுத்தவில்லை. தன்னைச் சுற்றியிருந்த சூழலின் மீது விவரிக்கமுடியாத ஒரு அமைதியான அதிகாரம் தனக்கிருப்பதாக அவள் உணர்ந்தாள். அவள்தான் கனவு காண்பவள்; அவள்தான் பொம்மலாட்டத்தின் சூத்திரதாரி. ஆகவே இவை அனைத்தும்—மெத்தை கீழே அழுந்தியது; அந்தச் சிறிய பெருமூச்சு; அவள்மேல் அழுத்திய மென்மையான மனித உடலின் பாரம்; முன்னும் பின்னுமாக அசைந்த அந்த ஆட்டம், முதலில் ஒழுங்கற்றதாகவும் தயக்கத்துடனும் இருந்து, பின்னர் வேகம் பெற்றது; அவளது வெற்றுக் கையை வருடிய நீண்ட தலைமுடி இழைகள்—இவை அனைத்தும் அவளது மனதின் ஏதோ தொலைதூரப் பகுதியில் அவள் அப்படி நிகழ வேண்டும் என்று விரும்பியதால்தான் நிகழ்ந்துகொண்டிருந்தன. என்ன நடக்கிறது என்று அவளுக்கு எப்போது புரிந்தது என்பதை அவளால் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் புரிந்த பிறகும் அவள் அசையவில்லை. பத்மினியைத் தள்ளிவிடவில்லை. கத்தவும் இல்லை. அதற்குக் காரணம், பத்மினியின் முகபாவத்தை அவள் கவனித்திருந்தது தான்.

பத்மினியின் கண்கள் மூடியிருந்தன. நீண்ட காலத்திற்கு முன்பே தனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட ஏதோ ஒன்று நிகழக் காத்திருப்பவளைப் போல, அவள் முகத்தில் ஒரு விசித்திரமான அவசரமும் பொறுமையற்ற ஏக்கமும் கலந்த தோற்றம் இருந்தது.

எந்தக் கணத்திலும் பத்மினி தன்னை அடையாளம் கண்டுகொள்வாள் என்று நிதி நினைத்தாள். ஆனால் பத்மினி ஒரு சிறிய, விரக்தி கலந்த அழுகுரலை மட்டும் எழுப்பினாள். பின்னர் தன் தலையை நிதியின் தோளில் புதைத்துக்கொண்டு, இருவருக்கும் இடையிலிருந்த இரண்டு விரிப்புகளின் ஊடாகத் தன் இடுப்பை நிதியின் இடுப்பில் பலமாக மோதியபடி தனது முயற்சியை மேலும் தீவிரப்படுத்தினாள்—தீவிரமான உணர்ச்சியுடனும் உறுதியுடனும், ஆனால் முற்றிலும் பயனற்ற விதத்திலும்.

அது எவ்வளவு நேரம் நீடித்தது என்று நிதியால் சொல்ல முடியவில்லை. ஆனால் திடீரென்று பத்மினி விலகி உருண்டாள். அவள் எழுந்து நின்றிருந்தாள். முதுகு நிதியை நோக்கியிருந்தது.   தோள்களுக்குக் கீழே தளர்ந்து தொங்கிய தலைமுடி வெள்ளி நிறத்தில் மிக அழகாக இருந்தது.

பின்னர் அவள் சென்றுவிட்டாள். நிதி சில நிமிடங்கள் அசையாமல் கிடந்தாள். இறுதியில் படுக்கையிலிருந்து எழுந்து, அறையைக் கடந்து சென்று, கதவை மூடி, நடுங்கும் விரல்களால் அதன் தாழ்ப்பாளை போட்டாள்.

*

இப்போது, நிச்சயமாக, அவருக்கு உண்மையிலேயே ஏதோ அவசரநிலை ஏற்பட்டிருக்கலாம் என்று அவள் நம்பவில்லை. அப்படி நினைத்ததற்கே தான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று அவள் எண்ணினாள். அவர் தனது சூட்கேஸை எடுத்துக்கொண்டு தியோசபிக்கல் சொசைட்டிக்குச் சென்று, அன்றிரவு தங்குவதற்கு இடம் கேட்டிருக்கலாம் என்று அவள் கற்பனை செய்தாள். அல்லது, குறட்டைவிடும் காவலர்களையும் விழிப்புடன் சுற்றித்திரியும் தெருநாய்களையும் கடந்து, அடையாறின் இருண்ட தெருக்களில் அவர் நடந்துகொண்டிருக்கலாம். அவளுக்குப் பயனுள்ள ஒரு பாடத்தை கற்பித்துவிட்டோம் என்ற அமைதியான திருப்தியுடனும், தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளும் மனநிலையுடனும்,  தந்தையைப் போன்ற பாவனையுடனும் அவர் இருந்திருக்கலாம். அவள் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்று அவர் நினைத்தது இதுதான்:

‘நீ உன்னை மிகவும் புத்திசாலி என்று நினைத்துக்கொண்டிருகிறாய். உனக்கு உலகைத் தெரியும் என்று நினைக்கிறாய். ஆனால், சின்னப் பெண்ணே, உனக்கு ஒன்றுமே தெரியாது.’

*

எட்டு நாட்களுக்குப் பிறகு, அவள் மீண்டும் பெங்களூருக்குத் திரும்பினாள். குற்ற உணர்வால் வாடிய அவளது தந்தை,  அதை ஈடு செய்ய பல வாரங்கள் அவளுக்கு அளவுக்கு மீறி செல்லம் கொடுத்தார். ஆரம்பத்தில் அவளுடைய அம்மா மனதிற்குள் ஒடுங்கிப்போனவளாகவும், சற்றே சங்கடத்துடனும் தயக்கத்துடனும் இருந்தாள். ஆனால் மெல்ல மெல்ல நகைச்சுவைகள் மீண்டும் தோன்றத் தொடங்கின. அதுபோலவே “கரு”, “கருப்பை வாயின் செயலிழப்பு”, “கருப்பையைச் சுத்தம் செய்தல்” போன்ற வார்த்தைகளும் மீண்டும் பேசப்படத் தொடங்கின. இருந்தபோதிலும், எதுவும் முன்புபோல இல்லை; நிதியை ஒரு பக்கத்திலும், அவளது பெற்றோரை மறுபக்கத்திலும் நிறுத்திவிட்டதுபோல், அவர்களுக்கிடையே தெளிவான ஒரு தடுப்பு எழுந்திருந்தது; நிலப்பரப்பே மாறிப்போனதுபோல ஒரு இடமாற்றம் நிகழ்ந்திருந்தது.

இது தனக்குள் எந்தவிதமான மனக்கசப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை நிதி உணர்ந்தாள்.

வீடு திரும்புவதற்கான ரயில் பயணத்தின்போது அவளுக்கு ஒரு புது எண்ணம் தோன்றியிருந்ததால், அது அவளைப் பெரிதாக பாதிக்கவில்லை. அவள் கண்களை மூடியிருந்தாள்; பெட்டியின் சீரான ஆட்டம், பத்மினியின் உடல் ஆட்டத்தையும், அதன் முடிவில் அவள் எழுப்பிய அந்த வேதனை கலந்த சிறிய அழுகையையும் மீண்டும் நினைவு படுத்தியது. அந்தப் படுக்கை விரிப்புகளுக்குக் கீழே இருந்தது நிதியின் உடலல்ல.

அது அவளுடைய உடலல்ல; அவளது தந்தையின் உடல். பதினைந்து வயதான அவளுடைய சொந்தத் தந்தை—ஒல்லியான, அனுபவமற்ற சிறுவனாக, இந்த எதிர்பாராத நிகழ்வால் பதற்றமடைந்து, என்ன செய்வது, எப்படி எதிர்வினையாற்றுவது என்று தீர்மானிக்க முயன்றுகொண்டிருந்தார்.

தனக்கு நடந்தது அவருக்கும் நடந்திருக்கலாம் என்று நிதி நினைக்கவில்லை—அப்படி நடந்திருந்தால், அவர் அவளை ஒருபோதும் அங்கே அனுப்பியிருக்க மாட்டார். ஆனால்,  அந்த குறைந்த நேர ரயில்  பயணத்தில் அந்தக் கற்பனைக்கு அவள்  ஒப்புதலளித்து அதை மனதில் நிகழ அனுமதித்தாள்.

அவளைப் போலவே அவரும் அசையாமல் இருந்து, எல்லாம் முடியும் வரை காத்திருந்திருப்பாரா? அல்லது, போராடி அலறியிருப்பாரா?

அல்லது, முற்றிலும் வேறொன்றைச் செய்திருப்பாரா?


[1] மூலக் கதை பற்றிய விவரங்கள்:
“Hidden Life,” by Madhuri Vijay |
The New Yorker
Fiction
Hidden Life
By Madhuri Vijay
August 16, 2026

https://www.newyorker.com/magazine/2026/08/24/hidden-life-fiction-madhuri-vijay


Discover more from சொல்வனம் | இதழ் 377 | 25 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.