ஊசியின் முனையில் உயிர்

 கல்யாண ராமன்  வேகமாக வந்து கொண்டிருந்த  பைக்கை வளைத்து தோட்டத்திற்குள் நுழைந்து புளியமரத்தடியில் நிறுத்தினான். அனல் திரவமாய் எங்கும் கொட்டிக் கொண்டிருந்தது  வெயில். வழக்கமாக தன் பசுமைக் கரங்களை வீசி அவனை வரவேற்கும் தென்னை மரங்கள்  இன்று பாவமாகப் பார்த்தபடி அசையாமல் நின்றன. வியர்வை உடலெங்கும் பிசுபிசுத்தது. கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்தான். மெதுவாக நடந்தான்.

தோட்டத்திலேயே இவ்வளவு வெக்கை இருந்தால் கொதிக்கும் அடுப்பு போல் இருக்கும் வீட்டுக்குள் மனதிலும் உடலிலும் அக்னி எரிய எப்படி இருப்பது என்று நினைத்துக் கொண்டான்.  மரங்களுக்கிடையில் நடக்க நடக்க மனதில் வெப்பம் குறைந்தது.  சுற்றிலும் சூழ்ந்திருக்கிற அமைதி மனதில் இறங்கியதில் லேசாக உணர்ந்தான். நேராக மோட்டார் அறைக்குச் சென்று  மோட்டாரை இயக்கினான். சொட்டுநீர்க் குழாய்கள் வழியாக தண்ணீர் மரங்களுக்கு பாயத் தொடங்கியது.  அப்பாவின் சொற்கள் ஞாபகம் வந்தன. போரில் தண்ணீர் குறைந்து விட்டது. பார்த்து நிறுத்தாவிட்டால் மோட்டார் புகைந்து விடும்.  ஒரு மணி நேரம் ஓடினால் சரியாக இருக்கும். மொபைலை எடுத்து அலாரத்தை அமைத்துக்கொண்டான். எல்லா மரங்களுக்கும் சரியாக நீர் செல்கிறதா என்று கண்காணித்தபடி நடந்தான்.

அருகில் இருந்த வேப்பமரத்திலிருந்து இரு பறவைகள் ஜோடியாகப் பறந்தன. வித்தியாசமாக இருந்தன. லவ்பேர்ட்ஸாக இருக்குமோ என்று நினைத்தான். அவை பறப்பதை ரசித்தபடியே கொஞ்ச நேரம் நின்றான். நிர்மலமான வான் பின்புலமாக நிற்க சிறகடித்துச் சென்றன இரண்டும்.

வானத்தில் மேகங்களே இல்லையே. எப்படி மழை வரும் என்று நினைத்துக் கொண்டான். மரங்களிலும் காய்ப்பு குறைவாகவே இருந்தது. இந்த வருடம் இழப்பு கூடுதலாகத்தான் இருக்கும்.  ஏற்கனவே  வீட்டில் இருப்பு தாங்கமுடியாமல் ஆகிக் கொண்டிருக்கிறது. அம்மாவின் புலம்பல்கள் நாளுக்கு நாள் விரிந்து கொண்டேயிருக்கின்றன. ஏன் எந்நேரமும் அறையில் அடைந்துகொண்டேயிருக்கிறாய். மொபைலை இவ்வளவு நேரம் ஏன் நோண்டிக்கொண்டே இருக்கிறாய். கழிவறையில் இவ்வளவு நேரம் என்ன செய்கிறாய் எனப் பல புகார்கள். அப்பா ஏதும் சொல்வதில்லை. ஆனால் நீண்ட மௌனங்களே எடை மிகுந்ததாக இருக்கின்றன.

இரண்டு நாய்கள் ஒரு தென்னை மரத்தடியில் கலவியில் ஈடுபட்டு இருந்தன. ஒரு நாய் பக்கத்து தோட்டத்து வேலுச்சாமி மாமாவுடையது. மற்ற நாய் எதுவென்று தெரியவில்லை. கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்றான்.  சட்டென்று சுற்றிலும் பார்த்தான். ஒரு கல் எடுத்து எறிந்தான். நாய்கள் சிதறி ஓடின. சனியன்கள் என்று முணுமுணுத்துக்கொண்டே  வேகமாக நடந்தான்.

பக்கத்துச் சாளைத்  திண்ணையில் வேலுச்சாமி மாமா அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவின் நெருங்கிய நண்பர் அவர். அப்பாவின் அந்தரங்க ஆலோசகர். விவசாய விஷயங்களில் அவரது குரு. அவனோடும்  வயது வித்தியாசமின்றி நெருங்கிப் பழகுவார். மற்ற கிராமத்து ஜனங்களைப் போல சங்கடப்படுத்தும் கேள்விகளைக் கேட்கமாட்டார்.

“என்ன மாமா, அக்கடானு உட்கார்ந்திட்டீங்க?” என்றபடியே அருகில் சென்றான் கல்யாண ராமன்.

“யாரு கல்யாணமா? வா வா ”  என்று வரவேற்றார் வேலுச்சாமி.

“அந்தப் பேரை நீங்களும் விட மாட்டீங்களா மாமா?  பசங்க வேற கல்யாணத்திற்கு எப்ப கல்யாணமுனு கிண்டல் பன்றாங்க. என்னை இனிமேல் ராம்னு கூப்பிடுங்க”

“எங்கப்பா? பழக்கத்தை மாத்த முடியல. கல்யாணம்ங்கிற பேருதா எவ்வளவு பாந்தமா இருக்கு. பசங்க கிண்டல் பண்ணா பண்ணிட்டுப் போறாங்க. உன் கல்யாணம் முடிஞ்சா கிண்டல் நின்னுறப் போறது.”

கொஞ்ச நேரம் அமைதி நிலவியது.  “அப்பா எங்கே?”  கேட்டார் வேலுச்சாமி.

“ஆபீஸ் போயிருக்காரு”

“அவருதா ரிட்டயர் ஆயிட்டாரே. அப்புறம் என்ன ஆபீஸ்?”

“ஏதோ பழைய வேலயில் ஒரு சந்தேகமுனு வரச் சொல்லியிருக்காங்க. போயிருக்காரு”

“அவரு சும்மாவே இருக்கமாட்டாரு. அவங்க சொல்லலினாலும் இவராப் போயிடுவாரு. நீ வேலைக்குப் போகலயா?”

“ வொர்க் ஃப்ரம் ஹோம் மாமா. வீட்டிலிருந்தே வேலை செய்ஞ்சுக்கலாம் ” என்றான் கல்யாண ராமன். கொரோனா வந்ததிலிருந்து இது ஒரு வசதி. வொர்க் ஃப்ரம் ஹோம்னு கௌரவமா சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டான் அவன்.

“அத்த எங்க மாமா?”  கேட்டான் கல்யாண ராமன்.

“வடக்கி பாளயம் போயிருக்கா”  என்றார் வேலுச்சாமி. வடக்கிபாளயம் அவர் மனைவியின் தாய் வீடு.

“தனியாத்தான் இருக்கீங்களாக்கும்” 

“ நான் எங்க தனியா இருக்கேன்? நாலு மாடு, நாய் கூட இருக்கே”

“ உங்க குறும்பு உங்கள விட்டுப் போகாது. சங்கரு எப்ப வரான்” சங்கர் வேலுச்சாமியின் மகன். சென்னையில் படிக்கிறான்.

“ போன வாரம்தான போனான். அடுத்து தீபாவளிக்குதா வருவான்”

“சாப்பாடு?”

“எல்லாம் ஆக்கி வச்சுட்டுப் போயிருக்கா. சாயந்திரம் வந்துருவா” என்றார் வேலுச்சாமி.

“நீங்களும் போயிருக்க வேண்டியதுதானே. எதுக்குத்தா இந்தக் காட்டைக் கட்டிட்டுக் கிடக்குறீங்களோ?”

“என்னப்பா விவரம் புரியாம பேசுர. மாடு வச்சிருக்கவங்க அப்படி எங்காவது போயிட முடியுமா?  மாட்டுக்கு சாணி அள்ளனும். வேளை வேளைக்கு தீனி வைக்கனும். பால் கறக்கணும். நேரத்திற்கு பால் கறக்கலைனா பால் கட்டிக்கும். விட்டுட்டு எங்கயும் போக முடியாது.”

நிஜம்தான். இந்த மாதிரி கறவை மாடு வைத்திருப்பவர்கள் வாழ்வு மாடுகளுடனே பிணைந்திருக்கும் . எங்கே போனாலும் பால் கறக்கும் நேரம், தீனி வைக்கும் நேரம் எல்லாம்  கணக்கிட்டு வந்துவிடுவார்கள். வெளியே ஏதேனும் வைபவங்களுக்கு வந்தாலும் மனம் முழுவதும் மாடுகளையே நினைத்துக் கொண்டிருக்கும். வேலுச்சாமி தன் அண்ணன் மகன் கல்யாணத்திற்குக் கூட காலையில் சென்றுவிட்டு மதியம் வந்து விட்டார்.

“ஒரு ஆள வச்சுக்க கூடாதா மாமா?” 

“அதெல்லாம் சரிப்படாதப்பா. நிறைய மாடு வச்சிருக்கவங்களுக்கு செரி. நம்மள மாதிரி நாலஞ்சு மாடு வச்சிருக்கவங்களுக்கு கட்டாது”

“உங்களுக்கு காசு மிச்சம் பண்ணணும்.”

“நீ ஒருத்தன். எவ்வளவு செலவு ஆகுமின்னு தெரியுமா? தவிடு, வைக்கோலு, பவுடரு, மருந்துனு எவ்வளவு இருக்குது? மிச்சம் ஒரு ஆள் கூலிதா. அதையும் கொடுத்துட்டு சாப்பாட்டுக்கு என்ன பன்னறது” சலித்துக்கொண்டார் வேலுச்சாமி.

நியாயமான கேள்விதான் என்று எண்ணினான் கல்யாண ராமன்.

இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தனர்.

“போன வாரம் பொண்ணு பார்க்கப் போயிருந்தீங்கல்ல. என்ன ஆச்சு?”  கேட்டார் வேலுச்சாமி

“அவங்களுக்கு முப்பது வயசுக்குள்ள மாப்பிள்ள வேணுமாம். என் சம்பளமும் பத்தாதாம்.”

“உனக்கு என்ன வயசாச்சு?”

“முப்பது முடிஞ்சு ஆறு மாசமாச்சு” என்றான் கல்யாண ராமன் சன்னமான குரலில்.

“ஆம்பளைக்கு இது எல்லாம் ஒரு வயசா? சரி விடு. அவங்களுக்கு உன்ன மாதிரி நல்ல மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வைக்கல. உனக்குனு ஒரு பொண்ணு பிறந்திருப்பா. அமைய வேண்டிய நேரத்தில அமையும்” மென்மையாகச் சொன்னார் வேலுச்சாமி.

இருவரும் கொஞ்ச நேரம் ஆடிக்கொண்டிருந்த மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

மாடு ஒன்று மா மா என்று கத்தியது.

“ஏன் மாமா அந்த சிவலை மாடு கத்திட்டே இருக்கு?” என்று கேட்டான் கல்யாண ராமன்.

“அது சினைக்கு ரெடியாயிடுச்சு.  டாக்டரை வரச் சொல்லி ஊசி போடனும்”

“ஓ. இப்ப ஊசிதானா? நான் சின்னப் பையனா இருக்கும்போது காளை சேர்த்து விடுவாங்களே. இப்ப அப்படி இல்லையா?”

 “இப்பல்லாம் யாரு காளை வளர்த்தறா? வண்டியும் இல்ல. உழவும் இல்ல. காளைக்கு என்ன வேலை? இருநூறு ரூபாய் கொடுத்தால் டாக்டர் வீட்டிற்கே வந்து ஊசி போட்டுட்டுப் போறாரு”

“பசு காளைக் கண்ணு போட்டா என்ன பண்ணுவீங்க?”

“வித்துடுவோம். வேற என்ன பன்றது?” என்றார் வேலுச்சாமி.

“அதை அவங்க வாங்கிட்டுப் போய் என்ன பண்ணுவாங்க?” ஆச்சரியத்துடன் கேட்டான் கல்யாண ராமன்.

“ஹோட்டல்காரங்கதான் பெரும்பாலும் வாங்கிப் போவாங்க. கண்ணுக் குட்டியோட கறி ரொம்ப ருசியா இருக்கும். ஆட்டுக்கறியோடக் கலந்து கறி வச்சுடுவாங்க.”

“போங்க மாமா. அப்படியெல்லாமா பண்ணுவாங்க?”

“நீ வேற, போன வாரம் மட்டன் பிரியாணி சூப்பர்னு சொன்னியே. அந்த ஹோட்டலில் கூட இதுதான் நடக்குது.” 

ஒன்றும் பேசத் தோன்றவில்லை கல்யாண ராமனுக்கு. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான்.

“காளைகளே இல்லையா மாடுகளோட? ஒரு காளையாவது எல்லா விவசாயிகளும் வச்சுக்கக்கூடாதா” ஏக்கத்துடன் கேட்டான் கல்யாண ராமன்.

வேலுச்சாமி அவனை கனிவாகப் பார்த்தார். பின் மெதுவாக சொன்னார்.

“ஒரு காளைக்கு என்ன செலவு ஆகும் தெரியுமா? இப்பவே பசு மாடுகளுக்கு தீனி வச்சு, மருந்து வச்சு எவ்வளவு செலவு தெரியுமா? ஆள் இல்லாம குடும்பமே பாடு படறதினாலத்தான் வண்டி ஓடுது. காள வளத்தா கட்டுப்படியாகாது. நிச்சயமா சிறு விவசாயி தாங்கமாட்டான்.”

கல்யாண ராமன் வாயடைத்து நின்றான். கொஞ்ச நேரம் ஏதும் பேசவில்லை

“மாட்டோட ஆச….?” முனகலாக வெளிப்பட்டது கல்யாண ராமனின் குரல்.

“மாடென்ன? மனுஷனா. அதுக்கு ஆசயெல்லாம் வர்ரதுக்கு?” சிரித்தார் வேலுச்சாமி.

கல்யாண ராமன் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகளைப் பார்த்துக் கொண்டே நின்றான். எல்லா மாடுகளும் வைக்கோலைச் சாவதானமாக அசை போட்டுக் கொண்டிருந்தன. வேலுச்சாமியின் நாயும் எங்கிருந்தோ ஓடி வந்து மாடுகளைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தது. அந்த சிவலை மாடு மட்டும் தீனி சாப்பிடவில்லை. அது காலை மாற்றி மாற்றி வைத்தது. இடையிடையே “மா மா” என்று கத்தியது. அதன் ஆசன வாயிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது.  அடைக்கப்பட்ட கழிவறைகளில் கொட்டுகிற வெள்ளங்களுக்கு மத்தியிலாவது மனிதர்களுக்கு  வடிகால்கள் கிடைத்து விடுகின்றன. இவை என்ன செய்யும் என்று நினைத்தான் கல்யாண ராமன். அந்த மாட்டினருகில் சென்றான். மெதுவாக அதன் முதுகை வருடிக் கொடுத்தான். மாடு  சிலிர்த்துக் கொண்டு அமைதியாக குனிந்து கொடுத்தது. அவனது கரம் மிருதுவாகத் தொடர்ந்து வருடிக் கொண்டேயிருந்தது.


Discover more from சொல்வனம் | இதழ் 377 | 25 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.