மா பெறும் தேடல்

ஓணம் கழிஞ்சு. 

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மகனாரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எங்கு காணினும் சத்யாவடா என்பது போல பார்க்கும் இடமெல்லாம் ஓணம் சத்யா படங்கள்தான் வருகின்றனவே என்றான். சும்மாவே ஆடும் நமக்கும் இதெல்லாம் சலங்கை கட்டி விடுவது போல என்பது அவனுக்கும் தெரியாமல் இல்லை. கதை சொல்ல ஆரம்பித்தேன். 

மகாபலி என்றும் மாபலி என்றும் அழைக்கப்படும் மன்னனின் கதை, அவனை திருமால் ஆட்கொள்ள வாமன அவதாரம் எடுத்து வந்தது, மூன்றடி நிலம் கேட்டது, விஸ்வரூபம் எடுத்து மூன்றாவது அடிக்கு மாபலி தன் தலையைத் தந்தது, வாமனர் அந்தத் தலை மீது கால் வைத்து அழுத்த மாபலி பாதாள லோகம் சென்றது, வருடத்திற்கு ஒரு முறை தான் ஆண்ட தேசத்தைப் பார்க்க வருவது எனக் கதை நீண்டது. 

அப்படி மாபலி மீண்டும் இவ்வுலகிற்கு வரும் சமயம் பூக்கோலம், புதுத்துணி, யானை ஊர்வலம், கதகளி ஆட்டம், படகுப் போட்டி இவற்றோடு பலவகைப் பதார்த்தங்கள் கொண்ட சத்யா என்று அழைக்கப்படும் சாப்பாடும் சேர்ந்து ஓணம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மலையாள வருடக்கணக்கில் முதல் மாதமான சிங்க மாதத்தில் ஓணம் கொண்டாடப்படுகிறது என்பதைப் பற்றி சொன்னேன். 

அத்தோடு விடுவோமா. இன்றைக்குக் கேரளத்தில் கொண்டாடப்படும் நிகழ்வாக இருந்தாலும் பண்டைய காலத்தில் இது தமிழகத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட பண்டிகைதான். ‘கானம் விற்றாவது ஓணம் உண்’ என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. கானம் என்றால் நிலம். கையில் இருக்கும் நிலத்தை விற்றாவது ஓணத்தன்று விருந்து உண்ண வேண்டும் என்பது இப்பழமொழியின் பொருள். இதை சிலர் ‘காணம் விற்றாவது..’ என்று குறிப்பிடுகின்றனர். அதற்கு விளக்கமாக கொள்ளு போன்ற பயிறு வகைகளை விற்று ஓணம் கொண்டாட வேண்டும் என்றும் சொல்கின்றனர். ஆனால் அது அவ்வளவு பொருத்தமாக எனக்குத் தோன்றவில்லை. காணம் என்பதற்குப் பொன் என்ற பொருள் இருக்கிறது. அதை வேண்டுமானால் கொள்ளலாம். நிலத்தையோ பொன்னையோ விற்று ஓணம் கொண்டாட வேண்டும் என்பது அவ்விழாவின் சிறப்பினைக் குறிப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். 

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பான சங்கப் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டில் உள்ள மதுரைக்காஞ்சியில் ஓணம் கொண்டாடப்படுவதைப் பற்றிய குறிப்பு இருக்கின்றது. இதைப் பற்றிப் பேசிய பின் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் ஓணம் பற்றிய தேடல் ஒன்றும் நிகழ்ந்தது. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் போன்ற வைணவ இலக்கியங்கள் ஓணத்தின் சிறப்பைப் பற்றிப் பேசுகின்றன. வீட்டில் அடிக்கடி சிந்து பைரவி ராகத்தில் ஒலிக்கும் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்ற ஆண்டாள் பாசுரம் கதை சொல்லும் பொழுது புரிந்து கொள்ள உதவியது. 

ஓணம் வைணவ இலக்கியங்களில் மட்டுமில்லை. தேவாரத்திலும் கூடக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. திருமயிலை பற்றி சம்பந்தர் பாடுகையில் ஐப்பசி ஓணவிழா கொண்டாடப்படும் திருமயிலை எனக் குறிப்பிடுகிறார். இதைப் பற்றிச் சொன்ன பொழுது இன்றைக்கு ஆவணியில் கொண்டாடப்படும் ஓணமும் அன்று ஐப்பசியில் கொண்டாடப்பட்ட ஓணமும் ஒன்றா என்ற கேள்வி எழுந்தது. 

ஆனால் மாதம் என்ற ஒற்றைச் சொல்லால் பேச்சு தடம் புரண்டு விட்டது. 

வருடத்தின் பிரிவுகளை தமிழில் மாதம், மாசம் என்று தமிழில் சொல்கிறோம். வேதகாலச் சமஸ்கிருதத்தில் मास् (மாஸ்) என்பதற்கு நிலவு, மாதம் என்னும் பொருள்கள் உண்டு. பிற்காலச் சமஸ்கிருதத்தில் मास (மாஸ) என்ற சொல் மாதம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. நிலவின் வளர்பிறை-தேய்பிறைச் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு காலம் மாதங்களாகப் பகுக்கப்பட்டது. அதே சமயம் சூரியனைப் பூமி ஒரு முறை சுற்றி வருவதுதான் வருடம் என்பதால் அதையும் கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி கூடுதல் நாட்களையோ மாதங்களையோச் சேர்த்தனர்.

இத்தகைய நாட்காட்டி Lunisolar Calendar என வழங்கப்படுகிறது. விழாக்களும், பருவகாலங்களும் மாறாது இருக்க வேண்டி பல நாட்காட்டிகள் இத்தகைய கூடுதல் நாட்களைச் சேர்த்தே உருவாக்கப்பட்டன.  இன்றைக்குப் புழங்கப்படும் நாள்கணக்குகளில் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்கணக்கு முழுவதும் நிலவை ஒட்டி கணிக்கப்படுகிறது. அதனால்தான் வருடாவருடம் ரமலான் நோன்பு தொடங்கும் நாள் ஆங்கில நாட்காட்டிப்படி மாறிக் கொண்டே வருகிறது. 

இன்றைக்குப் புழக்கத்தில் இருக்கும் கிரகோரியன் நாட்காட்டி நிலவைக் கருத்தில் கொள்ளாமல் பூமி சூரியனைச் சுற்றி வரும் காலத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனாலும் அதிலும் மாதங்களுக்கு Month என்ற சொல்தான் சூட்டப்பட்டு இருக்கிறது. இதன் வேர் பண்டைய ஆங்கிலத்தின் Monath என்ற சொல் என்கிறார்கள். இன்னமும் பின் நோக்கிச் சென்றால் ப்ரோட்டோ இந்தோ யூரோப்பியன் வேர்ச்சொல்லி இருந்து இது வந்தது என்கிறார்கள். வடமொழி மாஸ என்பதும் இதே வேரில் இருந்துதான் வந்தது எனக் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 

மாதம் என்பது வடமொழிச் சொல் என்றால் தமிழில் அதற்கான சொல் என்ன? அது திங்கள். மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்று ஆண்டாள் பாடி இருக்கிறாளே. இதில் சுவாரசியம் என்ன எனப் பார்த்தோமானால் தமிழில் திங்கள் என்பதற்கு மற்றொரு பொருள் நிலவுதான். வாரநாட்களில் நாம் திங்கட்கிழமை எனச் சொல்வதை ஆங்கிலத்தில் Monday என்றும் வடமொழியில் சோமவாரம் என்றும் வழங்குகிறார்கள். இந்தப் பெயர்கள் அனைத்துமே நிலவைத்தான் குறிக்கின்றன. 

திங்கள் என்று சொல்லி விட்டாலும் மா என்னும் சொல்லிற்குத் தமிழில் நிலவு என்ற பொருள் இருக்குமோ என்ற ஓர் ஐயம் கிளம்ப அகராதியை நாடினேன். அப்படி ஒரு பொருள் இல்லை. எனவே மாதம் என்பது வடமொழியில் இருந்து வந்ததுதான் என்பது ஓரளவு தெளிவானது. ஆனால் மா என்ற சொல்லுக்குத்தான் எத்தனை எத்தனை பொருள்கள் இருக்கின்றன. 

பிள்ளையாருக்கும் முருகருக்கும் யாருக்கு மாம்பழம் என்று முடிவு செய்ய மாபெரும் போட்டி.

இந்த வரியில் இருப்பது போல மா என்ற மர வகையைக் குறிப்பதற்கும் பெரிய என்பதற்கு இணையாகவும் மட்டும்தான் நாம் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். அதை விட்டால் மாவிளக்கு என்னும் பொழுது மாவு என்ற பொருளிலும் நம்மையும் அறியாமல் இந்தச் சொல்லைச் சேர்த்துக் கொள்கிறோம். இப்பயன்பாடுகளைத் தாண்டி எத்தனை விதமாக இந்தச் சொல்லை பயன்படுத்த முடியும், பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் பொழுது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 

மாமரம், மாங்காய், மாம்பழம், மாவடு, மாவிலை, மாந்தோப்பு என்று மாமரத்தைச் சார்ந்த எல்லாவற்றுக்கும் மா என்கிறோம். இதில் குழப்பமில்லை. ஆனால் இந்த மணமக்கள் தேவை விளம்பரங்களில் மட்டும் மாநிறம் எப்படி வந்தது என்பது எனக்கு இன்னும் புரிந்ததே இல்லை. போகட்டும். 

பெரிது என்ற பொருளுக்கு மா என்ற சொல்லைப் பயன்படுத்துவது காலம் காலமாகவே இருந்து வரும் ஒன்றுதான். 

“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று சிலப்பதிகாரத்தின் வாழ்த்துப்பாடலிலேயே மாமழை எனச் சொல்கிறார் இளங்கோவடிகள். மாஞாலம் என்று நம் உலகைக் குறிப்பதையும் பல பாடல்களில் பார்க்கமுடியும். இன்றைக்கும் போராட்டம், பெரும் போராட்டம், மாபெரும் போராட்டம் என்று நாம் சொல்லிக் கொண்டுதானே இருக்கிறோம். 

மா என்ற சொல்லுக்குக் கருமை என்ற பொருளும் உண்டு. இன்றைக்கு இந்த வகையில் யாரும் பயன்படுத்துவதில்லை என்றே சொல்லலாம். அகநானூறு, குறுந்தொகை, திருமுருகாற்றுப்படை என பல நூல்களில் மா முக முசுக்கலை என்று கரிய முகத்தை உடைய ஆண்குரங்கை குறிப்பிட்டு இருக்கிறார்கள். சங்க இலக்கியங்களில் யானையைக் குறிக்கக் களிறு, வேழம், பிடி, கைமா, குஞ்சரம் போன்ற சொற்களோடு மா என்ற சொல்லையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். 

குதிரைக்கு குர்ரம்னா, யானைக்கு அர்ரம்னு சொல்லலாமா என்பார்கள். அதே மாதிரி யானைக்கு மா என்றால் குதிரைக்கும் மா என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதனால் பல இடங்களில் யானையைச் சொல்கிறார்களா குதிரையைச் சொல்கிறார்களா எனக் குழப்பமே வரும். அதுவும் போர்க்களக் காட்சி என்றால் அரசர் யானை மீது அமர்ந்து போரிடுவார், குதிரை மீது அமர்ந்தும் போரிடுவார். அதனால் கவனமாகப் படித்தால்தான் சரியான பொருள் புரிய வரும். 

உதாரணத்திற்கு திருக்குறளில், “அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார் / தமரின் தனிமை தலை.” என்ற குறளில் கல்லாமா என்ற சொல் குறித்து மரத்தடி காலத்தில் பெரிய சர்ச்சையே நடந்தது. அப்பொழுது ஆசான் ஹரி அண்ணா அவர்கள் கல்லாமா என்பது பயிற்சியற்ற குதிரை என்ற விளக்கம் தந்து எழுதிய இந்த பதிவைப் பற்றிச் சொல்லாமல் இருக்கவே முடியாது. படித்திருப்பவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். படிக்காதவர்கள் படித்துவிடுங்கள் –

ராமர் காடு புகும் காட்சியை எழுதும் கம்பன்

ஆவு மழுதவதன் கன்றழுத வன்றலர்ந்த
பூவு மழுதபுனற் புள்ளழுத கள்ளொழுகம்
காவு மழுத களிறழுத கால்வயப்போர்
மாவு மழுதன வம்மன்னவனை மானவே

என்று விவரிக்கிறார்.

காட்டுக்குப் போகும் ராமனைப் பார்த்து பசுக்கள் அழுதனவாம். அதன் கன்றுகள் அழுதனவாம். அன்று மலர்ந்த பூக்கள் அழுதனவாம். நீர்நிலையில் இருக்கும் பறவைகள் அழுதனவாம். கள் ஒழுகும் மரங்கள் அழுதனவாம். யானைகள் அழுதனவாம்.  போரில் பயன்படுத்தப்படும் தேர்களின் தேர்க்காலில் கட்டப்படும் குதிரைகள் அழுதனவாம். 

நல்ல வேளை யானைக்குக் களிறு என்றும் தேர்க்காலில் கட்டப்படும் போர்மா என்று குதிரைகளையும் தெளிவாகச் சொல்லிட்டார். அதனால் குழப்பமில்லை. இல்லைன்னா இந்த மா எந்த மா என்று தலையைச் சொறிய வேண்டியதாக இருக்கும். 

இந்த ராமர் காட்டுக்குப் போவதைப் பத்திப் பேசினா நாம திரும்ப இளங்கோவடிகள் கிட்ட வந்தாகணும். சிலப்பதிகாரம். ஆய்ச்சியர் குரவை. இதில் வரும் பாட்டு 

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்

தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து

இங்க இளங்கோவடிகள் என்ன சொல்லறார்ன்னா. “அடேய் ராமா, தம்பியோட நீ காட்டுக்குப் போகப் போறயா? உன் காலில் கல்லும் மண்ணும் குத்திச் சிவந்து போகப் போகுதா? நல்லா வேணும்! அன்னிக்கு மாபலி கிட்ட போய் எனக்கு மூணு அடி நிலம் வேணும்ன்னு கேட்ட, அந்த நல்லவனும் நீயே அளந்துக்கோன்னு சொன்னான். ஆனா நியாயமா மூணு அடி அளந்துக்காம முறை கெட்டு மூவுலகையும் ரெண்டே அடியில் அளந்துக்கிட்டு மூணாவது அடியை அந்த மாபலி தலையிலேயே வைத்து அழுத்தினாய்தானே. அதான் இன்னிக்கு அந்த காலில் கல்லும் முள்ளும் குத்தி சிவந்து போகப் போகுது உனக்கு நல்லா வேணும்!” இப்படி ஆய்ச்சியர்கள் கேலியாய்ப் பாடுவதாய் எழுதி இருக்கிறார் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தில் இப்படி வாமன அவதாரத்திற்கும் ராமாவதாரத்திற்கும் இணைப்பு இருக்கு. 

எப்படியோ அங்கே இங்கே சுற்றி கடைசியாகத் திரும்ப ஓணத்தில் கொண்டு வந்து முடித்தாகிவிட்டது. இதற்காகவே நமக்கு மாம்பழம் ஏதாவது பரிசாகக் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்!  


Discover more from சொல்வனம் | இதழ் 375 | 27 செப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “மா பெறும் தேடல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.