இலக்கணப் பிழை

ஒரு காற்புள்ளி
கோபத்தைச் சற்று நேரம்
நிறுத்தி வைக்கிறது
ஒரு முற்றுப்புள்ளி
ஒரு நட்புக்கு
முடிவெழுதுகிறது
ஒரு கேள்விக்குறி
பல காலமாக
உறங்கவிடவில்லை
ஒரு ஆச்சரியக்குறி
நிலைக்காத ஒன்றை
கொண்டாடுகிறது
மேற்கோள் குறிகள்
வேறொருவருக்கு சொந்தமான
வாக்குறுதிகளை
சுமந்து நிற்கின்றன
அடைப்புக்குறிகள்
உண்மையான வாழ்க்கையை
மறைத்து வைக்கின்றன
சரியான நிறுத்தற்குறியைத் தேடி
எங்கெங்கோ
அலைந்து திரிகிறது வாழ்க்கை
காற்புள்ளிகளைத் திருத்துவதிலும்
முற்றுப்புள்ளிகளை மாற்றுவதிலும்
ஆச்சரியக்குறிகளைத் துரத்துவதிலும்
கேள்விக்குறிகளுக்கு அஞ்சுவதிலும்
கழிகின்றன வருடங்கள்
கடைசிப் பக்கத்தை
திருப்பும் போதே புரிய வருகிறது
எழுதிக் கொண்டிருப்பதாக
நினைத்த கதையின்
ஆசிரியராக நாம்
ஒருபோதும் இருந்ததில்லை
வானத்தின் அகலம்
நூறாண்டு கடந்த
பழைய அரசமரத்திலிருந்து
ஒவ்வொரு காலையிலும்
புறப்படுகின்றன பறவைகள்
வானத்தின் அகலத்தை
அளந்து பாராமல்
இன்றைய பறப்புக்கு
இந்த நீலம் போதுமா
இன்னொரு நாள் பறக்க
தேவையான நீலம்
மீதம் இருக்குமா என
ஒருபோதும் அவை
கேட்டுக் கொள்வதில்லை
அடிவானம் விலகிச் செல்கிறதா
அல்லது
மெல்ல நெருங்கி வருகிறதா என
யோசித்ததில்லை
சிறகுகளுக்குக் கீழே
ஒவ்வொரு கணமும்
விரிந்து கொண்டிருக்கும்
வழியைத் தவிர
வேறு எந்த வரைபடத்தையும்
பின்பற்றுவதில்லை
சென்ற இடங்களுக்கு
சாட்சியாக
வீட்டுக்குக் கொண்டு செல்ல
வானத்தின் துண்டுகளை
சேகரிப்பதில்லை
எழுகின்றன
சிதறுகின்றன
காற்றிடம் தம்மை
ஒப்படைக்கின்றன
வயல்களுக்கிடையே
கூரைகளுக்கிடையே
தொலைவில் ஒலிக்கும்
அழைப்புகளுக்கிடையே
பகலைக் கழிக்கின்றன
மாலை சாய்கையில்
திரும்புகின்றன
புறப்பட்ட அதே சிறகுகளுடன்
புறப்பட்ட அதே கிளைக்கு—
வானம் முழுவதுமே
இரு கிளைகளுக்கு
இடையேயான தூரமே தவிர
வேறொன்றுமில்லை
என்பதைப் போல.
Discover more from சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026
Subscribe to get the latest posts sent to your email.
