ரா. கிரிதரன் விமர்சன நூல்களை முவைத்து – பாகம் -2
முந்தைய பதிவு:
இவ்வரிசையில் ரா.கிரிதரனின் முதற்தொகுப்பை பயணிக்க இன்னும் இருமடங்கு நூல்களைப்பற்றிய கட்டுரைகளைப் பற்றி எழுதவேண்டும். இந்நூல்களூடாக அவர் வாசிப்புக்குத் தேர்வு செய்த அறிஞர்கள், படைப்பாளிகளின் திறனை மட்டுமல்ல அவற்றூடாக கிரிதரன் என்கிற கலைஞரின் ஆற்றலையும் விளங்கிக்கொள்கிறோம்.
ஆ. சாதகப் பறவையின் காத்திருப்பு
கட்டுரைகளை திறனாய்வு செய்ய, எழுதும் நூற்பொருள் சார்ந்த அறிவு விமர்சகருக்கு இன்றியமையாதது அதன்பின்னரே பிற திறன்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மாறாக புனைவுகளை மதிப்பீடு செய்ய உணர்வுகள், உயர்ந்த இரசனைகள் முதன்மை பெறுகின்றன. கலை இலக்கிய விமர்சனம் என்பது ஒரு கலைப்படைப்பைப் பற்றிய, குறிப்பாக ஒரு இலக்கியப் படைப்பின்மீதான நேர்மறையான அல்லது எதிர்மறையான ஒரு கருத்தை முன்வைக்கும் இலக்கிய வடிவம்.
இன்றைய சூழலில் தமிழ்ச் சூழலில் இலக்கிய இதழ்களில் திறனாய்வை மட்டுமே எழுத்தாகக் கொண்டு இயங்கும் பெருமக்கள் அரிதாக இருப்பதால், பல நேரங்களில் புனைவுகள் குறித்து நாம் வாசிக்க நேரும் விமர்சன உரைகள் சடங்காக இருக்கின்றன; அவ்வுரைகளும் எடுத்துக்கொண்ட புனைவுநூலின் நிறைகுறைகளுக்குள் புகாமல் எழுதிய படைப்பாளியின் மீதான விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அவசரப்பட்டுச் சொல்லப்படும் அநீதீயாக இருக்கின்றன.
பொதுவில் விமர்சன கருத்துரையை மூன்றுபகுதிகளாக பிரித்தறிய இயலும். அவை :
1. புனைவு நூல் குறித்த அறிமுகப்பகுதி, இதில் நூல் மற்றும் நூலாசிரிரயர் பற்றிய தகவல் தெரியவரும்.
2. கலை இலக்கியம் பற்றிய ஞானமும், கதைசொல்லியின் மொழி,உத்திகள்,அவருடைய சமூகப்பின்புலம் முதலான அடிப்ப்டைக்கூறுகள் பற்றிய தெளிவுடன் விமர்சகர் வைக்கும் நயவுரை, இரண்டாவது பகுதி.
3. வாசித்த நூலுடன் திறனாய்வாளர் இணங்கவோ முரண்படவோ, ஏற்கவோ நிராகரிக்கவோ, உடன்படவோ நிராகரிக்கவோ செய்தல் ஓர் விமர்சனத்தின் மூன்றாவது பகுதி.
இம்மூன்றிலும் பின்னிரண்டு பகுதிகள் மட்டுமே உண்மையான விமர்சனமாக இருக்கமுடியும். காலக்கேடாக இன்று தமிழில் விமர்சனம் என்கிற பெயரில் எழுதப்படுபவை அனைத்தும் நூலறிமுகத்தோடு தம்மை முடித்துக்கொள்கின்றன.
முதலிரண்டும் அறிமுகப்பகுதி, படைப்பைப் பற்றிய தகவல்களை வழங்குவதோடு, விமர்சனத்தின் “பொருளை” வாசகர் முழுமையாகப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இப்பகுதி வாசகருக்கு அப்படைப்பைப் பற்றிய முழுமையான குறிப்புகளை வழங்குகிறது (அதன் வெற்றியின் உறுதியான கூறுகள் மற்றும்/அல்லது முந்தைய நாவல்கள் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன). – விமர்சனத்தின் பொருள் ஒரு கதையாக இருக்கும்போது, கதைப் பகுதி அதன் கதையை ஈர்க்கும் விதத்தில் முன்வைக்கிறது (கதைச் சுருக்கம்). இது வாசகருக்கு அந்தப் படைப்பைப் பற்றிய ஒரு முதல் அபிப்ராயத்தைப் பெற உதவுகிறது.
திறனாய்வில் மூன்றாவது பகுதி இன்றியமையாத கூறாகும்; இப்பகுதி நூலைப்பற்றிய மதிப்பீடு, விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்ட நூலை பொதுவாசகர்கள் விரும்பி வாசிக்கவோ அல்லது நிராகரிக்கவோ துணை செய்யும பகுதி.இதனைச் சிறப்பாகவே சாதகப்பறவையின் காத்திருப்பு நூலில் மிகச் சிறப்பாகவே விமர்சகர் கிரிதரன் செய்திருக்கிறார் என்பது நிச்சயம்.
இந்நூலில் தமிழ்ப்புனைவுகள் என்பதன்றி ஆங்கில் புனைவுகளும், நவீன தமிழ்ப் புனைவுலகில் நன்கறிப்யப்பட்ட எழுத்தாளர்களோடு, இளம் எழுத்தாளர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது சிறப்பு. இந்நூலில் 36 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒரு சில கட்டுரைகளை மட்டும் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டு நண்பர் கிரிதரன் முயற்சியை அவர்கையாண்டுள்ள சொல்லாடல், மொழி, இலக்கிய அணுகுமுறை ஊடாக பார்க்கவேண்டியுள்ளது.
ஜெயகாந்தன், க.நா.சு., ஆர்.ஷண்முகசுந்தரம், ஜெயமோகன், பாவண்ணன், காலபைரவன், சாருபாலா, அனோஜன் பாலகிருஷ்ணன், காலபைரவன், கார்த்திகை பாண்டியன், ஆர்.கே நாராயணன், சல்மான் ரஷ்டி, கல்ப்பட்டா நாராயணன், ஸ்ரீதர் நாராயணன், சிவா கிருஷ்ணமூர்த்தி, தன்ராஜ்மணி, யுவன் சந்திரசேகர், சு.வேணுகோபால், கணேஷ் வெங்கட்ராம் பெரும் எண்ணிக்கையிலான எழுத்தாளர்களின் ஆக்கங்களை நண்பர் கிரிதரன் விமர்சனம் என்கிற நுண்ணோக்கிகொண்டு ஆய்வு செய்துள்ளார்.
இனி விமர்சகர் கிரிதரன் இம்மூன்று பகுதிகளையும் ‘சாதகப் பறவையின் காத்திருப்பு’ நூலில் எப்படித் தனது மொழியில் கையாளுகிறார் என்பதை அறிய சில உதாரணங்கள்.
அ. நூலறிமுகம் :

ஜெயகாந்தன் மறைந்துவிட்ட இந்த நேரத்தில் அவர் விட்டுச் சென்ற கதாபாத்திரங்களை நம் நினைவில் மீட்டுப் பார்ப்பது அவரது வாழ்க்கையின் சாரத்தையே நம்முன் நிகழ்த்திப்பார்ப்பதற்குச் சமமானது.
1950களில் நடக்கும் ஒரு கிராமத்துக் கதையாக ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல் தொடங்குகிறது. ‘தமிழகத்தின் வடபகுதிக் கிராமம்‘ எனக் குறிப்பிடுவதோடு மட்டுமல்லாது எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியின் வட்டார வழக்கும் இந்த நாவலில் கையாளப்படுவதில்லை. ஊரைச் சுற்றி ஒரு ஆறு ஓடுகிற்து என்பதைத் தவிர கிராமத்து சூழல் மிக விரிவாக வெளிப்படுவதில்லை. கிராமிய வாழ்க்கை என்பதை மக்களின் மனோபாவங்கள் எதிர்பார்ப்புள் கொண்டே உணர்த்துகிறார் ஜெயகாந்தன்.(ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்-ஜெயகாந்தன்)
தொகுப்பில் முக்கியமான கதையான கன்னியாகுமரி, மனிதனின் ஆழ்மனதுக்கும் மேல்மனதுக்கும் இடையிலான போராட்ட்த்தை இயல்பு மீறாவண்ணம் காட்டுகிறது.(கார்த்திகைப் பாண்டியனின் ‘மரநிறப் பட்டாம்பூச்சிகள் ‘ சிறுகதைத் தொகுப்பு)
கணேஷ் வெங்கட்ராமன் பல வருடங்களாக இணையத்திலும் சிறு பத்திரிகைகளிலும் எழுதி வரும் படைப்பாளி. தில்லியில் வசித்துவருபவர். 2011 முதல் 2014 வரை எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாக ‘டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்’ வெளியாகி உள்ளது .
கதையில் மிகத் திறமையாக கையாளப்பட்ட புனைவமைதி எனும் அழகியல் உத்தி படித்ததும் மனதில் பதிந்தது இப்படித்தான் கணேஷ் வெங்கட்ராமனின் புனைவின் தொடக்கம் அமைந்தது. (அடங்கும் அலைகள்-‘டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்’ சிறுகதைத் தொகுப்பு மதிப்புரை)
ஆ. புனைவுகளின் குறித்த விமர்சகரின் நயவுரை
இன்றும் தந்தை- மகன் பற்றிய உறவை மிக அழகாக முன்வைத்து சிறுகதையாக நான் படித்தவற்றுள் இந்த கதை இருக்கிறது. ஒவ்வொரு வரியையும் செதுக்கி அமைத்துள்ளார். ஆங்காங்கே ஒரு கவிஞனின் மனச்சித்திரம் நமக்கு கிடைத்தாலும், தாய்மையைப் போல் தந்தைமையை விவரித்து விமர்சித்து கொண்டாடும் கதை. மனதிற்குள் இருக்கும் நிலை கொள்ளாத தவிப்பு ஒரு கட்டத்தில் பீறிடும்போது வரும் வேகமும் இயல்பும் இந்தக் கதையின் இயல்பாக கூடியுள்ளது. இழப்பு என்பது பெரும் வலி. ஆனால் அதைவிட நினைவு பல சமயங்களில் உயிரோடு மனிதர்களைக் கொன்றுவிடும் வல்லமை கொண்டது -நிதானமாக நாட்கணக்கில் வருடக் கணக்கில் நம்மை உண்டு செரிக்கும் உறவுகள். அவை நமக்கு வாழ்வாதாரமும் கூட .(மூன்று ஜாமங்கள் கொண்ட இரவு -யுவன் சந்திரசேகர் நூல் குறித்த மதிப்புரை)
பாவண்ணன் சிறுகதைகளைப் பற்றி நினைக்கும் தோறும் செடிகளின் பற்றி படரும் இயல்பு ஒரு காட்சியாக என் கண் முன்னே நிற்கும். என் தோட்டத்தில் வைத்திருந்த மல்லிகைச் செடி தொட்டியில் இருந்து தழைத்து கனம் தாங்காது கிளைகள் தரையில் சாய்ந்து இருந்தது. கவனிக்காது விட்ட நாட்களில் கிளையின் அடிப்பாகம் பூமிக்குள் புதைந்திருந்தது. சில நாட்களில் தொட்டியில் இருந்து ரெண்டடி தள்ளியிருக்கும் மண்ணிலிருந்து மல்லிகைச் செடி துளிர் விட கண்டேன் மண்ணுக் கடியில் புதைந்த கிளை படர்ந்திருந்ததைப் பார்த்ததும் வியப்பாய் இருந்தது. பற்றிப் படர்வதிலும் தனதென நினைத்து அழுக்கும் சருகும் குவிந்த இடத்திலிருந்து முளைப்பதுமாய் செடிகளுக்கு இருக்கும் ஜீவத் துடிப்பு பரவசம் கொடுக்கும் அனுபவம். பாவண்ணன் உலகில் தெரியும் கதாபாத்திரங்களுக்கும் இந்தக் குணாதிசயம் உண்டு. நிராயுதபாணியாக சகல கொடுமைகளையும் அனுபவிப்பவர்கள் கூட மனித மனதின் ஈரத்தை ஒரு நொடி அனுபவித்ததுமே புத்துயிர் ஊட்டப்பட்டது போல துளிர்க்கிறார்கள். (மண்ணில்ல் படரும் மலர்கள்-பாவண்ணன் புனைவின் மீதொரு வெளிச்சக்கீற்று)
இ. புனைவுகள் குறித்த விமர்கரின் மதிப்பீடு
வட்டார வழக்கு இலக்கியம் பெண்களின் வாழ்வை காட்ட வந்த முதல் நவீன படைப்பு எனப் பல அடைப்புகளுக்குள் இந்த நாவலை வர்ணிக்கலாம். ஆனால், நாவலின் வெற்றியாக நமக்குத் தோன்றுவது அதன் முடிவுதான். ஒரு விதத்தில் ஆசிரியரின் வெற்றியும் அதில் அடங்கியுள்ளது.
நீர்ப்பரப்புக்கு மத்தியிலும் கருமையேறிய மேகத்துக்காகக் காத்திருக்கும் சாதகப் பறவை போல சகல ஆடம்பரங்களுக்கு மத்தியிலும் கலை, வாழ்வை மட்டுமே தேடுகிறது. கொடுத்து வைத்த சிலரால் அது கண்டடையப் படுவதும் உண்டு. வாழ்வின் புலப்படாத பாதைகளை காட்டுவதோடு மட்டுமல்லாது அதன் விசித்திரமும் பிரம்மாண்டமும் ஆசிரியர் உருவாக்கும் எந்த பாத்திரத்தை விடவும் பெரியது எனக் காட்ட தெரிந்த கலையே நாவல். அந்த விதத்தில் நாகம்மாள், கெட்டியப்பன் பாத்திரங்கள் வழியாக வாழ்க்கையின் சிடுக்குகள் மிகத் துல்லியமாக வெளிப்படுகின்றன. மிக சுருக்கமான கருவோடு, ஒற்றைத் தீற்றலில் படைக்கப்பட்ட பாத்திரங்களைக் கொண்டு இதை ஆர். ஷண்முகசுந்தரம் நிறுவியுள்ளார். (சாதகப் பறவையின் காத்திருப்பு, நாகம்மாள்-ஆர். ஷண்முகசுந்தரம்)
ஒரு ஹோட்டலின் கண்ணுக்கு தெரியாத இயக்கங்கள் சௌரிங்கியில் பெரிதாக எதுவும் சொல்லப்படவில்லை. அதேபோல, இந்திய காலணி வரலாற்றில் மிக முக்கியமான நகரமாக அமைந்திருந்த கல்கத்தாவின் கதையையும் இது விரிவாக முன்வைக்கவில்லை. பெரும் நாவலாக எழுதப்பட்டிருந்தாலும், ஒரு நாவலுக்குத் தேவையான தத்துவ பார்வை தகவல்களோ வரலாற்றுப் பின்புலமோ இல்லை. செவ்விலக்கிய நாவல் மரபின் உச்சாணிக்கொம்பாகத் திகழும் இந்திய இலக்கிய வரிசையில் (அக்னி நதி, பாவா) இந்த நாவல் அமையாமல் போவதற்கு இவை முக்கியமான காரணங்கள். (பின் காலனிய கல்லத்தாவின் கதை-சௌரிங்கி)
மொத்தம் ஒன்பது கதைகள். செயற்கையாக வரிந்து அமைத்த நிகழ்வுகளோ நிலம் அதிரும் புரட்சி அறைகூவல் விடும் கதைகளோ அல்ல. சிறு அசைவில் அங்குலப் பாகை மாறும் திசை கருவியைப் போல உள்ளுணர்வின் ஓயாத முணுமுணுப்பை கதையாக்கி உள்ளார் கால பைரவன். மொத்தத்தையும் வாசித்து முடித்தபின் அப்படி என்ன சொல்லிவிட்டார் எனத் தோன்றினாலும் பசி நேரத்தில் புசிக்க எண்ணி தாயின் மார்பகத்தைத் தேடும் குழந்தை போல செறிவான சிறுகதைகள் என்பதால் முடித்த பின்னும் மீண்டும் படிக்க வைக்கின்றன. (ஆழச்சொல்பவை-புலிப்பாணி ஜோதிடர்-காலபைரவன் )
இதுவரை தமிழ் இலக்கியத்தில் அதிகம் சொல்லப்படாத அழகியலையும், கருப்பொருளையும், வடிவத்தையும் கொண்ட நாவல் இது. தேவையற்ற உறவுகள் என சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்கள் மீதான எதிர்பார்ப்பற்ற அன்பும் அக்கறையும் கிட்டதட்ட அழிந்து போன காலத்தில் வந்திருக்கும் நாவல் இது. கல்பட்ட நாராயணன் வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்வது போல, மரணத்தை முன்வைத்துப் பேசியது ‘மரணம் பல விஷயங்களை நமக்கு அழுத்திச் சொல்வதற்காக இருக்கலாம். உணர்ச்சி பூர்வமான இந்த நாவல் ஒற்றை சரடில் அமைந்ததல்ல. மனித உறவுகளின் ஆகச்சிறந்த கனவுகளையும் நுண்மைகளையும் பேசும் ஒரு படைப்பு. (அந்தம் இல் மனம்- கல்பட்ட நாராயணனின் சுமித்ரா நாவல் குறித்த மதிப்புரையில்)
படைப்புகளில் விஷேச புனைவு யுத்திகளை ஆர்.கே நாராயணன் கையாள்வதில்லை. கதையைச் சொல்வது மட்டுமே தனது வேலை என்பது போல மிக எளிமையான மொழியில் கதையைச் சொல்லிச் செல்கிறார். புறசித்தருப்பு மூலம் பெரிய உலகை நம் முன் காட்டி விடுகிறார். உண்மைக்கு பல முகங்கள் உண்டு என்பதை நம்ப மறுக்கும் பிடிவாதக்கார எழுத்துக்குச் சொந்தக்காரர்…..
….அவரது மொழியில் வெளிப்படும் உணர்வுகள், குறும்புகள், சின்ன சின்ன அசைவுகள் மூலம் காட்டும் நிகழ்வுகள் மிகவும் ரசனையானவை. மேலோட்டமாக படிக்காமல் நுணுக்கமாகப் படிக்க தவறவிட கூடாத இடங்கள் பல உள்ளன. (வழிநடத்துபவனின் தடம், ஆர்.கே.நாராயணனின் புனைவுலகம்-மகாத்மாவுக்காக காத்திருந்தல் )
விமர்சகர் கிரிதரன் இப்படி சடங்காக அன்றி விமர்சனத்துக்குறிய இலக்கணங்களோடு நூல்கள் எதுவாயினும், எழுதியவர் எவராயினும் மொழிபேதமின்றி வாசித்து மகிழ்ந்ததை உணர்வுக்கொப்ப தீர்ப்பளித்துள்ளது ஒரு பக்கமெனில், ஒவ்வொரு நூலைக்குறித்தும் திறனாய்வு செய்கிறபோது முனைகிறபோது அந்நூல் அவர் எப்போதோ எங்கோ வாசித்த நூல்களை, நூலாசிரியர்களை நினைவுகூர அப்பகுதி நண்பர் கிரிதரனின் பரந்த வாசிப்புக்கு மட்டுமல்ல அவர் விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்டுள்ள நூல்களுக்கும் பெருமை சேர்க்கின்றன.
கிரிதரன் நூல்களிரண்டும் அரசு நூலகங்களில் பொது வாசகர்களின் பார்வைக்கு, வாசிப்புக்கு கொண்டு செல்லபடவேண்டிய நூல்கள். தமிழ் நவீன இலக்கிய அபிமானிகளுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்து, சங்கடமின்றி வாசிப்பில் திசையை தேர்வு செய்ய உதவும்.
உலகெங்கும் வாசிப்பு என்பது அரிதாகிவரும் சூழலில், நல்ல நூல்களை ஆழாமான வாசிப்பும், கலை இலக்கியத்தில் தேர்ச்சியும் பெற்ற கிரிதரன் போன்ற படைப்பிலக்கியவாதிகள் கவனத்தில் கொள்கிறபோது கூடுதல் வெளிச்சம் கிடைக்கிறது. பல படைப்புகளுக்கு தனது இலக்கியத் திறனாய்வை விவரித்துச் சொல்ல பல மணி நேரங்களை செலவிட்டு உழைத்திருக்கிறார். இன்று தமிழில் மட்டுமின்றி உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் விருதுகளால் அல்ல நண்பர் கிரிதரன் போன்ற கலை இலக்கியத்தில் தோய்ந்த பெருமக்களால் அடையாளம் பெற்றவர்கள். ஓர் சராசரி எழுத்தாளனாக நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள்.
Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
