தெலுங்கு மூலம் : பா ரா கோ (பமிடிபாடி ராமகோபாலம்)
தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன்
சாமர்ல கோட்டா ரயில் நிலையம்.
மதராஸ் போகிற மெயில்.
ரயிலில் ஏறி ஒரு நிமிடமிருக்கும். வெங்கடேசன் போர்ட்டரை வைத்துச் சாமான்களை எல்லாம் அடுக்கி, அவனுக்குப் பணத்தைத் தந்துவிட்டு சீட்டில் அமர்ந்தான். மனைவி, குழந்தைகளையும் பிறகு கம்பார்ட்மெண்டில் இருக்கின்ற மற்றவர்களையும் சுற்றிப் பார்த்தான்.
கார்னர் சீட்டில் இருந்த ஆசாமியும், சியாமளாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருமுறை அவனையும், சியாமளாவையும் பார்த்துவிட்டுத் திரும்பவும் அந்தப் பக்கமாகத் திரும்பினான் வெங்கடேசன்.
“எதுவரைக்கும் போறீங்க நீங்க?” கேட்டான் வெங்கடேசன்.
“மீ? ஒங்கோல்” என்று சொன்னான் இந்தப் பக்கம் திரும்பாமல்.
சியாமளா குழந்தையை எதிரில் உள்ள சீட்டிலிருந்து பக்கத்து சீட்டுக்கு மாறி இடது கையால் தட்டிக் கொடுத்துக்கொண்டே அவனை அப்படியே பார்த்த வண்ணமாகவே இருந்தாள்.
ஒரு நிமிடம்வரை யாரும் பேசவில்லை. அவர்கள் இருவரும் அப்படிப் பார்த்துக்கொள்வது வெங்கடேசனுக்குச் சரியென்று படவில்லை.
அந்த ஆசாமி சியமாளாவுக்குச் சொந்தமோ, நண்பர்கள் குடும்பத்தில் உள்ளவனாகவோ இருந்திருக்கணும். இருவரும் ஒருவருக்கொருவர் நினைவுப் படுத்திக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிந்தது. தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாமல், தாங்கவும் முடியாமல் அப்படியே பார்த்தபடி அவனும் உட்கார்ந்திருந்தான்.
“உங்களுக்கு எந்த ஊர்?” திடீரென்று சியாமளா கேட்டாள்.
“துனி… உங்கள் ஊர்?”
“காக்கிநாடா! நீங்க காக்கிநாடாவில் படிச்சீங்களா? ஒரு வேளை எங்க அண்ணனைப் பார்க்க வீட்டுக்கு வந்து இருப்பீங்களோ? உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.”
“நான் சொல்லட்டுமா?” அவன் புன்னகையோடு வெங்கடேசன் பக்கம் பார்த்தான். “எக்ஸ்க்யூஸ் மி…”
பிரச்சினை தீர்ந்து விட்டது போல வெங்கடேசன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடி சிரித்தான். “சொல்லுங்க சொல்லுங்க. எப்பொழுதோ… எங்கேயோ பார்த்திருப்பீங்க. உண்மையில் சிறு வயது நண்பர்களைச் சில சமயம் அடையாளம் தெரியாமல் போய் விடும். எனக்குப் பலமுறை அந்த மாதிரி நேர்ந்திருக்கிறது.” இக்கட்டான சூழலைக் கூடியவரைச் சீக்கிரமா கடந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தான்.
“சாரி. எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை” என்று முறுவலித்துவிட்டு, “இஃப் யூ டோன்ட் திங்க் அதர்வைஸ்…” என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து, “அவங்களை அவங்க வீட்டில் ஒரு சமயம் பெண் பார்க்கப் போனபோது பார்த்தேன். அவங்கள கைப்பிடித்த பாக்கியவான் நீங்கள்தான் என்று நினைக்கிறேன்” என்றான் அவன்.
வெங்கடேசன் திகைத்துப் போனான். ஆனாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் எதையாவது சொல்ல வேண்டுமே என்று, “நானும் அப்படித்தான் நினைத்தேன். இல்லை என்றால் இவ்வளவு சீக்கிரமாக எப்படி மறந்து போவோம்?” என்றான். நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்று அவன் அசைவுகளிலிருந்தே தெரிந்து விட்டது.
“இப்போ என்ன செய்கிறீங்க?” சியாமளா கேட்டாள் மின்னும் கண்களுடன்.
ஆறு வருடங்களுக்கு முன்பு… அவன் தன்னைப் பார்க்க வந்தபோது தான் பதினேழு வயது நிரம்பிய கன்னிப்பெண். ஸ்கூல் பைனல் பாஸ் செய்து விட்டாள். இன்டர் முடித்து டிகிரி படிக்க வேண்டும் என்பது அவளின் எண்ணம். கல்யாணம் பண்ணி மாமியார் வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்பது பெரியவர்களின் நோக்கம். மெஜாரிட்டி முடிவு வெற்றிபெற்றது.
அப்போது அவனுக்கு இருபத்திரண்டு வயசு இருக்கும்போலும்! சம்பங்கி நறுமணம் நிறைந்த நிலவின் ஒளி போன்று மயக்கத்தை தருகின்ற அழகு அவனுடையது. வட்டமான முகத்தில் எனக்கென்ன வேலை என்று பின்னால் ஓடி ஒளிந்துகொண்ட கிராப்பு. எடுப்பாகத் தெரியும் மூக்கு. நடுவில் குழி விழுந்த மோவாய்க்கட்டை. பெயருக்கேற்றபடி மனோகரமாக இருக்கிறான் என்று தான் நினைத்தது, பார்த்தது தனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. “பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை அப்படி கண்ணிமைக்காமல் பார்த்தால் அவன் என்னவாகிப் போவான்?” என்று தாய் மாமன் கிண்டல் செய்தபோது, பத்து பேருக்கு நடுவில் சொல்ல முடியாத வெட்கம் சூழ்த்து கொண்டது.
என்னதான் படித்தவனாக இருந்தாலும் சொத்து இல்லாதவனுக்கு தர வேண்டாம் என்று அம்மா வழி பாட்டி சொன்னாள். எம்.ஏ. பாஸ் பண்ணியும், தாலுகா ஆபீசில் குமாஸ்தா வேலைக்குத் தயாராகி விடுகிறார்கள் என்று அப்பா எண்ணினார். வரதட்சணை வேண்டாம் என்று அவர்கள் சொன்னதால் மற்ற எல்லோருக்கும் இளப்பமாகத் தெரிந்தார்கள். “டிப்டி கலெக்டர் மகனாக இருந்தால் மட்டும் என்ன? இப்போ ஓய்வு பெற்று விட்டார். என்னவோ போகட்டும். இத்தனைக்கும் பொண்ணுக்கு அப்படி என்ன வயசு ஆகி விட்டது! இன்னொரு வரன் வராமலா போய் விடுவான்?” என்றார் மாமா.
கிருஷ்ணா ஜில்லா கன்னவரம்தான் மாமியார் ஊர். வெங்கடேசன் தந்தை இறந்து போனபிறகு அவன் பங்குக்குப் பத்து ஏக்கர் நிலமும், அது இது என்று சொத்து வந்து சேர்ந்தது. பி.ஏ. பாஸ் ஆனதும் சர்வீஸ் கமிஷனில் செலக்ட் ஆகி அங்கே இங்கே என்று வேலை பார்த்து விஜயவாடா சப் கலெக்டர் ஆபீசில் இப்போது குமாஸ்தாவாக வேலை பார்த்து வருகிறான். சியாமளாவைக் கல்யாணம் பண்ணிக்கொண்ட நேரமோ அல்லது தன் அதிர்ஷ்டமோ தெரியவில்லை என்பான். உடனுக்குடன் ரெவின்யூ, அகௌண்ட்ஸ் தேர்வுகள் எல்லாம் பாசாகி யு.டி.சி. ஆகிவிட்டான். கை நிறைய சம்பாத்தியம்.
தன் பிறந்தவீட்டைப் பற்றியும் பெருமையாகத்தான் சொல்ல வேண்டும். நல்ல வரனாகப் பார்த்தார்கள். அவர்களுக்கு வேண்டிய பண்புகள் எல்லாம் வெங்கடேசனிடம் இருந்தன. மேலும் ஜாலியாக இருப்பான். நல்ல மனம் கொண்டவன். சாமர்த்தியம் மிகுந்த சில குமாஸ்தாக்கள் பார்ட்டீ போன்றவற்றுக்குப் பழக்கபட்டு, வீட்டு விஷயங்களிலும் தங்களை மிஞ்சிய பேர் இல்லை என்பது போல் நடந்து கொள்வார்கள். வெங்கடேசன் அப்படிபட்டவன் இல்லை. அவனுக்குச் சியாமளா என்றால் அளவுகடந்த அன்பு.
பார்த்தவங்களை எல்லாம் கல்யாணம் செய்துகொள்ள முடியாது இல்லையா? ஒரு மனிதன் ஒரு மனுஷியை மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும். மற்றவர்கள் எல்லாரும் அரைமணி நேர அறிமுகத்திற்குப் பிறகு அப்பொழுதே மறக்கப்பட்டு விடுவார்கள்.
எப்பொழுதோ எங்கேயோ இருக்கும்போது, “குறிப்பிட்ட அந்த வீட்டு பையன் அன்றைக்கு நம் வீட்டுப்பெண்ணைப் பார்க்க வந்தானே. அவனுக்குக் கல்யாணமாம்” என்ற செய்தி காதில் விழும். இதுபோல் ஒவ்வொரு செய்தியும் நமக்குச் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வார்த்தையாக ஒலித்துக்கொண்டு இருக்கும். அதுதான் அவனைப் பற்றி வந்த கடைசி செய்தி போலும். அவ்வளவுதானே! கல்யாணம் ஆகாத பெண்ணுக்கும், பையனுக்கும் கல்யாணம் தானே முடிவு!
சியாமளாவின் இதயம் ஆனந்தத்தில் குதித்தது, அவனைப் பார்த்ததும் யாரோ நெருங்கிய சொந்தத்தைப் பார்த்தது போல். ஆனால் அவன் தயங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை அவள் கவனிக்கவில்லை. அவன்மீது தான் காட்டுகின்ற அக்கறை, அவனைப் பார்த்ததும் தான் வெளிப்படுத்திய சந்தோஷம், மிகச் சாதாரணமான தன் கணவனுக்குப் பொறாமையை உண்டாக்கும் என்று தெரிந்திருந்தும், அவளின் உலக அறிவு தற்காலிகமாக ஊமையாகி விட்டது.
“இப்போ என்ன செய்துக்கிட்டு இருக்கீங்க?” திரும்பவும் கேட்டாள் சியாமளா.
“ஒங்கோலில் சப் கலெக்டராக இருக்கிறேன்.”
தூக்கிவாரிப்போட்டது வெங்கடேசன் மற்றும் சியாமளா இருவருக்கும். இன்ஜினுடன் ரயில் அப்பொழுதுதான் இணைந்துகொண்ட சத்தம் கேட்டது.
*****
விஜயவாடா ஸ்டேஷனில் சாமான்களை எல்லாம் இறக்கி, தூக்கத்தில் இருந்த பையனைத் தூக்கிக்கொண்டு சியாமளாவை எழுப்பினான் வெங்கடேசன். “அதற்குள் விஜயவாடா வந்து விட்டதா?” என்று சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்துகொண்டாள் சியாமளா. முந்தானையை சரிசெய்தபடி யதேச்சையா கார்னர் சீட்டை ப் பார்த்தாள்.
அவன் இருக்கவில்லை.
“அவர் எங்கே?” கேட்டாள் சியாமளா.
“சாப்பிட போயிருக்கிறார். வண்டி நின்னு பத்து நிமிஷங்கள் ஆகிறது. கிளம்பு போகலாம்.”
“அய்யோ! போய் வருகிறேன் என்று கூடச் சொல்லிக்கொள்ளவில்லை.”
“கிளம்பு கிளம்பு. இடத்துக்காக அவர்கள் அவஸ்தைப் பட்டுக்கிட்டு இருக்கிறார்கள். உன்னிடம்தான் சொல்கிறேன்.”
“அட! சித்த இருங்க வருகிறேன்” என்று சலித்துக்கொண்டே கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு எழுந்துகொண்டாள் சியாமளா.
வீட்டுக்கு ரிக்ஷாவை பேரம் பேசி இரண்டு பேரும் உட்கார்ந்து கொண்டார்கள். சியாமளாவின் மனதில் இனம் தெரியாத உறுத்தல். என்னதான் இல்லை என்று மறுத்தாலும் அவன் தனக்கு ‘வேண்டப்பட்டவன்’ என்ற எண்ணத்தை அவளால் மறுக்க முடியவில்லை. ‘சக்யம் சாப்த பதீனம்’ என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.
கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது மைல் சேர்ந்து பயணம் செய்துவிட்டு, இறங்கும்போது ‘போய் வருகிறேன்’ என்று சொல்லாமல் அவங்கவங்க வழியில் போவது… வண்டியிலும், அதற்கு முன் நடந்ததற்கும் நேர்மாறாக இருந்தது. அவனைச் சீக்கிரமாகத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லியும், மறக்காமல் தன்னைக் கூப்பிடும்படியும் மற்றொரு முறை சொல்ல நினைத்தாள். அவன் ஹோதா தனக்கு குறுக்கே வராது. ஊருக்கு அவன் சப் கலெக்டராக இருக்கலாம். ஆனால் தனக்கு நண்பன் போன்றவன். சந்திப்பதற்கு அரிதான நண்பர்களைப் பார்க்கும்போது பெறுகின்ற மகிழ்ச்சியைவிட, பிரியும்போது ஏற்படுகின்ற உத்வேகம், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் வெளிப்படுத்துகின்ற உற்சாகம்… நல்ல அனுபவங்கள்.
ரயில் நிலையத்திற்குச் சென்று வழி அனுப்புகின்ற நிலையில் ரயில் கிளம்பும்போது, “இருக்கிறேன். கடிதங்கள் எழுதிக் கொண்டிரு” என்று சொல்லும்போது மனதில் அபிமானம் பெருகிய நிலையில் ஏறத்தாழ எல்லோருக்கும் நிம்மதியாக இருக்கும். ரயில் கிளம்பிய பிறகு கால்களுக்கு வந்துச் சேரும் பளு அப்பொழுது கொஞ்சம் கூட நினைவுக்கு வராது.
பாழாய்போன தூக்கம். எப்பொழுதுதுதான் தூங்கினேனோ?
கொடுத்து வைத்தவன் அவன். அவனுடைய பாட்டி தான் இறப்பதற்குள் கல்யாணம் பண்ணிவிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாளாம். இரண்டு மூன்று சம்பந்தம் பார்த்து எதுவும் முடிவு எடுப்பதற்குள் அந்தம்மாள் இறந்து விட்டாளாம். டில்லிக்குப் போய் ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணி சப் கலெக்டராகி விட்டானாம். இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் ஜில்லா கலெக்டர் ஆகி விடுவானாம்.
தன்னுடைய வீட்டார் தனக்குப் பதினேழு முடிந்து பதினெட்டு வந்ததும் ஏதோ குடி மூழ்கிவிட்டாற்போல் வரன் பார்த்துக் கல்யாணம் பண்ணி அனுப்பி விட்டார்கள். தன் கணவன் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்தாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை.
“அவனைப் போல் எல்லோரும் ஐ.ஏ.எஸ்.க்கு ஏன் எழுதுவதில்லை?”
வெங்கடேசன் திடுக்கிட்டான். அவள் இவ்வளவு நேரமும் ‘அவனைப்’ பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தாள் என்று அவனுக்குத் தெரியவந்தது. வேற்று மனிதர்களைப் பற்றிச் சியாமளா இவ்வளவு தூரம் யோசிப்பது முதல் முறையாக அவனுக்கு வியப்பாக இருந்தது. ஆனால் அவன் ஒரு நாளும் அவளுக்கு ஏமாற்றம் அளித்தது இல்லை. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் ஏமாற்றம் தரும் விதமாக விஷயத்தைத் துண்டித்துவிட்டால், அவர்களுக்குள் அன்யோன்யம் பாதிக்கப் படும் என்பது அவனது நம்பிக்கை.
“எழுதலாம். அறிவு மட்டும் இருந்தால் போறாது. உயரம், பருமன், கைகால்கள் நீளம், உடல் எடை… இன்னும் என்னென்னவோ அளவுகள் பார்க்க வேண்டும். கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை வம்ச பாரம்பரியத்தையும் தீவிமாகக் கவனித்து வந்தார்களாம், ஆட்சி புரிவதற்காக.” அமைதியான குரலில் சொன்னான் வெங்கடேசன்.
“எம்.ஏ. பாசாகணுமா?”
“இல்லை. பி.ஏ. போதும்.”
அப்பொழுதே அவன் எம்.ஏ. படித்திருந்தான். அவன் அப்பா டிப்யூடி கலெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். உயரத்திற்கு ஏற்றப் பருமன், ஆளைப் பார்த்ததுமே பெரிய வேலைக்காகவே பிறந்தவன் போல் இருப்பான். பிரிட்டிஷ்காரர்கள் மெச்சிக்கொள்ளும் விதமாக நல்ல தோற்றம். அன்றும் இன்றும் ஒரே விதமாக வெள்ளை நிறத்தில் வண்ணான் உடுப்புகள். கிடைக்கின்ற அனைத்து வாய்ப்புகளையும் நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொண்டு இளம் வயதிலேயே கலெக்டர் ஹோதாவைப் பெற்றுவிட்டான். அவன் அந்தச் சமயத்தில் வரதட்சிணை வேண்டுமென்று கேட்கவில்லை. இன்று கேட்டிருந்தால் முப்பது அல்லது நாபதாயிரம் வரையில் தருவார்கள். தங்கப் பதுமை போன்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்வான். அந்தப் பாக்கியசாலி யாரோ?
அந்தப் பாக்கியசாலி தானாக இருந்திருக்கணும், தன் வீட்டார் அறிவு பூர்வமாக யோசித்து இருந்தால். வீட்டைச் சுற்றி ஜவான்கள். எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரில் பங்களா, செல்வாக்கு, நல்ல சம்பளம், நல்ல கார், அரசாங்க ஜீப்… இவையெல்லாம் தன்னுடையதாக இருக்க வேண்டியது. சொத்து சுகம் என்று சொல்வார்கள். ஆனால் அதிகாரம் இருப்பவர்களைச் செல்வந்தகளும் மதிப்பார்கள் இல்லையா? இப்பொழுது தான்? அந்த கலெக்டர் ஆபீசில் ஒரு குமாஸ்தாவின் மனைவி!
“ஒங்கோலிலேயே வைத்திருப்பார்களா? இல்லை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிகிட்டே இருப்பார்களா?”
“ஏன் பண்ண மாட்டார்கள்? இரண்டு மூன்று ஆண்டுகளில் திரும்பவும் எங்கேயாவது!”
“விஜயவாடாவுக்கு மாற்றுவார்களா?”
“ஆ… விஜயவாடா என்ன? ஆந்திராவுக்கு ஆலாட் ஆகியிருப்பதால் ஆந்திராவில் எங்கே வேண்டுமானாலும் மாற்றலாம்.”
அவன் விஜயவாடாவுக்கு சப் கலெக்டர் ஆகிவிட்டால் தனக்கு இதைவிட அதிகமாக வருத்தம் ஏற்படும் போலும்! அந்தச் சூழல் வராமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
‘மேரேஜஸ் ஆர் மேட் இன் ஹெவன்’ என்பார்கள். தன் கல்யாணம் பூமியில்தான் நடந்திருக்கும்.
“எங்க அம்மாவழி பாட்டி சொன்ன மாதிரி கொடுப்பினை இருக்கணும்!” என்று அவள் சொன்னபோது, “யாருடைய பாட்டியைக் கேட்டாலும் இதைவிட என்ன சொல்லப் போகிறாள்?” என்றான் வெங்கடேசன், நிலவுபோல் பளீரெனச் சிரித்துவிட்டு. மென்மையான வெண்மையான அழகு அவனுடையது. நிலவுதான் அவன். அவன்தான் நிலவு.
‘ச்சீ… ஏன் எனக்கு இந்தப் பாழாய்போன யோசனைகள்’ என்று நினைத்தாள் சியாமளா. திருமணமான இந்த ஐந்தாறு ஆண்டுகளில் தன் வீட்டார் தன் திருமண விஷயத்தில் ஏதோ தவறு செய்து விட்டார்கள் என்று சியாமளா நினைப்பது இதுவே முதல் முறை. இப்படி நினைத்தற்கு வருந்தினாலும் இதில் உண்மை இருப்பது போலவே தோன்றியது.
ரிக்ஷா நின்றதுமே யதார்த்த உலகிற்கு வந்தாள் சியாமளா. “நான் போய்க் கேரியர்ல சாப்பாடு வாங்கி வருகிறேன். நீ வீட்டுக்குப் போய்க் குளிக்க வெந்நீர் போட்டு வை! இந்தா வீட்டுச்சாவி” என்று வெங்கடேசன் ஹோட்டல் அருகில் இறங்கிக் கொண்டான்.
“சீக்கிரமாக வந்து விடுங்கள்.”
*****
வீட்டுக்குப் போய்க் குழந்தைகள் இருவரையும் கட்டில் மீது படுக்க வைத்துவிட்டு, பாயிலரைப் பற்ற வைத்தாள். இரண்டு அறைகளையும் பெருக்கினாள். பத்து நிமிடங்களில் தண்ணீர் சூடாகி விட்டது. இரண்டு வாளியில் வெந்நீரை ஊற்றி உடம்பில் ஊற்றிக்கொண்டாள். புடவையை மாற்றிக்கொண்டு தலையைச் சரி செய்தபடி ஹாலுக்கு வந்தாள். அதற்குள் கதவு தட்டும் சத்தம் கேட்டது. “வருகிறேன்” என்று கதவைத் திறந்தாள்.
“சப் கலெக்டருடைய ஜவானுங்க.”
“அப்படியா! என்ன விஷயம்?”
“அய்யாவை காலையிலேயே ஹெட் குமாஸ்தாவோட சேர்ந்து வரச் சொன்னாங்க.”
“என்ன, நேரம் காலம் இல்லையா? நாங்க வந்துவிட்டோம் என்று அதற்குள் எப்படி தெரிந்துக்கிட்டார் உங்கள் அய்யா? ஏதாவது மை போட்டுப் பார்த்தார்களா? அவர் இன்னும் வீட்டுக்கே வரவில்லை. என்ன இந்த எழவு? போ போ” என்று விரட்டினாள் சியாமளா.
“என்னத்துக்கும்மா அப்படி கத்தறீங்க? ஹெட் குமாஸ்தா எதிர்வீட்லதானே இருக்காரு. அவங்க கிட்டே சும்மா பேசிகிட்டிருக்கும்போது போயிட்டு வான்னு சொன்னாரு. தூங்கிடுவீங்களோன்னுதான் சொல்ல வந்தேன். அவர்கிட்ட சொல்லிடுங்கம்மா” என்று படியிறங்கி விடுவிடென்று சென்று விட்டான் ஜவான்.
சியாமளா அதிர்ச்சி அடைந்தவளாகக் கதவு அருகிலேயே நின்று விட்டாள். தான் எதற்காக அப்படி பேசினாள்? அவன் தனக்கு என்ன பதில் சொன்னான்? எல்லாமே ஏதோ மாயை போல் இருந்தது.
“என்ன? யாரது? வழி விடு” என்றபடி வெங்கடேசன் வந்தான். அவனுக்கு வழி விடுவதற்காகச் சியாமளா உள்ளே போனாள்.
“என்ன இருக்கு? ஆபீஸ் ஜவானாம்! விடிஞ்சதும் வரச் சொன்னாங்களாம். இதுதானே உத்தியோகம்!”
வெங்கடேசன் பின்னாலேயே வந்த ஹோட்டல் பையன் கேரியரை அங்கேயே வைக்கப் போனான். “இந்தப் பக்கம் வா!” என்று அவனை உள்ளே கூட்டிக்கொண்டு போனாள் சியாமளா.
வெங்கடேசன் யோசித்துக்கொண்டே உடுப்புகளைக் கழட்டினான். கேரியரை உள்ளே வைத்துவிட்ட பையன் திரும்பி வந்து ஹாலில் நின்றான். சியாமளா வேட்டி, டவலை கொண்டு வந்தாள்.
“வேலைக்காரி வருவாளோ இல்லையோ தெரியாது. கேரியரை எடுக்கக் காலையில் வா தம்பி” என்றான் வெங்கடேசன்.
“சரிங்கய்யா” என்று அவன் போய் விட்டான். கைக்கடியாரத்தை எடுத்துக் கொடுத்துக் கொண்டே, “ஒன்பது இருபது ஆகிவிட்டதே? வெந்நீர் தயாரா?” என்றான் வெங்கடேசன்.
சியாமளா கையிலிருந்து வேட்டி, டவலை எடுத்துக்கொண்டு பாய்லர் அருகில் சென்றான்.
கணவர் தன்னைப் பார்க்கவில்லை. தான் சொன்ன வார்த்தைகளுக்கு அவர் ஏதாவது நினைத்துக் கொண்டாரோ என்று சியாமளா வருந்தினாள்.
உடனே போய், “நான் விளாவி தருகிறேன், இருங்க” என்றாள்.
“தேவையில்லை. நீ குளிக்க வேண்டாமா?”
“குளித்து விட்டேன். நகருங்கள். நான் விளாவித் தருகிறேன்.”
“மாடிக்குப் போய்ப் படுக்கையைப் போடு” என்று வெங்கடேசன் இரண்டு வாளிகளை பாய்லர் அருகில் கொண்டு வந்தான்.
கணவரின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட சியாமளா போனாள்.
நள்ளிரவில் வரச் சொல்வதும், ஞாயிற்றுக்கிழமைகளில், விடுமுறை நாட்களில் வேலை செய்ய வேண்டி வருவதும், மறுநாள் காலையில் பிரத்யேகமாக வர வேண்டும் என்று இருந்தால் முதல் நாள் இரவு பதினோரு மணியாக இருந்தாலும் செய்தி சொல்லி அனுப்புவதும்… இவையெல்லாம் வெங்கடேசனுக்குப் புதிது இல்லை. எவ்வளவு எரிந்து விழுவாள் சியாமளா! “அவர்களுக்குப் பொண்டாட்டி, பிள்ளைகள் யாரும் இல்லையா?” என்று கேட்பாள்.
ஒருமுறை தாலுகா ஆபீசில் வேலை செய்து கொண்டிருந்தபோது டபேதாரிடம் சொன்ன இந்த வார்த்தை தாசில்தார் வரையிலும் போய் விட்டது. மனைவி சொன்ன வார்த்தைக்கு அவன் பொறுப்பு இல்லை. ஆனால் அந்தப் பேச்சு தாசில்தார் ஜோக்காக மாற்றும் வரையில் வெங்கடேசன் சங்கடத்தில் ஆழ்ந்திருந்தான்.
ஜமாபந்தி நடக்கும்போது இரவு வராமல் போவது கூட நடக்கும். இதுபோல் சியாமளா ஒரு நாளும் கடுப்பானதில்லை. “இதுதானே உத்தியோகம்!” என்று வேலைமீது சலிப்பு அடைந்தது இல்லை. ட்யூட்டியில் ஏற்றத் தாழ்வுகளுக்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது. அதிகாரியாக வருகின்ற நபர்களின் நல்லது கெட்டது அந்தந்த வேலைகளுக்குச் சேராது.
“இதுதானே உத்தியோகம்!” என்ற எண்ணம் மற்றொரு நபரின் உத்தியோகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது தோன்றும். இந்த வார்த்தையைச் சியாமளா பயணக் களைப்பு, எரிச்சல் ஒன்றாகச் சேர்ந்துவிட்டதில், அவசரப்பட்டு இப்படிச் சொல்லி இருப்பாளே தவிர, தன்னைக் குத்திக் காட்ட வேண்டும் என்று சொன்னவை அல்ல என்பது வெங்கடேசனின் எண்ணம். ரயிலில் சந்தித்த நபரின் உத்தியோகம் பெரியது என்ற விஷயத்தை நினைவில் வைத்துக்கொண்டு சியாமளா இப்படிச் சொல்லி இருப்பாளோ என்று நினைப்பதற்கு வெங்கடேசனுக்கு மனம் ஒப்பவில்லை. அது போன்ற ஒரு எண்ண அலை தலைதூக்கியபோது, அதனைப் பலமாகத் தள்ளிவிட்டான்.
எது என்னவாக இருந்தாலும் அவன் மேற்கொண்டு இந்த விஷயமாகப் பேசப் போவதில்லை. தனக்குள் ஏதாவது திருப்தியின்மை ஏற்பட்டால், மறைக்காமல் சியாமளாவே அதனை வெளிப்படுத்தி விடுவாள் என்று அவனுக்குத் தெரியும்.
ஆனால் அதுபோல் அவளைச் சோதனைக்கு உள்ளாக்குவதும் அவன் லட்சியம் இல்லை. அவளைச் சோதனைக்கு உள்ளாக்கி விஷயத்தைத் தெரிந்துகொள்வது, தனக்கும் அவளுக்கும் இடையே உள்ள பந்தத்தை களங்கப் படுத்திவிடும் என்பது அவன் எண்ணம்.
*****
குளியல், சாப்பாடு முடித்துக்கொண்டு மாடிக்குப் போவதற்குள் மணி பத்தாகி விட்டது. வளர்பிறை சதுர்த்தி நிலவின் வெளிச்சம் உலகத்திற்கு வெள்ளைநிற போர்வையைப் போர்த்தியது போல் இருந்தது. வெண்மையான படுக்கை விரிப்பின் மீது, வெண்ணிறப் புடவை உடுத்திக் கொண்டிருத்த சியாமளாவின் மீது நிலா வெளிச்சம் பட்டுக் கொண்டிருந்தது. உள்ளுக்குள் அடங்கிப் போய்விடுமோ என்று பயந்திருந்த விருப்பங்கள் வெங்கடேசனிடம் தூண்டிவிடப் பட்டன. அமைதியான இயற்கைச் சூழலை உணர்த்துவது போல் சியாமளா மௌனமாக இருந்தாள்.
“ஏன் இப்படி இருக்கிறாய்?”
“எப்படி இருக்கிறேன்?”
“களைத்துப் போனாற்போல்.”
“நான் ஒன்றும் களைத்துப் போகவில்லை. ரயிலில் நன்றாகத் தூங்கிவிட்டேன்.”
ஆனால் அவள் மனம் இன்னும் தன்வசம் வரவில்லை. வெண்ணிலவைப் பார்த்ததும் ‘அவன்’ ஞாபகம்தான் வந்தது.
வெள்ளைப் படுக்கையின் மீது கண்ணுக்குத் தெரியாத ஒளிக் கதிர்களைப் பரப்புகின்ற நிலவைப் பார்த்தால், கற்பனையில் அவன்தான் வருகிறான். அவன் நிலவுபோல் இருக்கிறான் என்றது மனம். இது இப்போதைய நினைப்பு அல்ல, அன்றையது. விதி தன்னை அவனிடமிருந்து பிரித்து, இன்று நிலா வெளிச்சத்தில் இந்த வெண்ணிற அனுபவத்தைக் காட்டி பரிகாசம் செய்கிறது. களைத்துப் போய், பழசாகி, சுகத்தையும், விளைவையும் திகட்டச் செய்த இந்த அனுபவம்… இன்று புதிதாக இருந்தது. இந்த நேரத்தில் விவேகம், அறிவு, தர்ம அதர்ம சிந்தனை… இவையெல்லாம் அவளிடமிருந்து விலகிப் போனதில், ‘தீமையான எண்ணம்’ தலை விரித்து ஆடியது. கணவனே அன்னியனாகி, கணவனின் முன்னிலையில் அவள் ஏகாந்தமாக இருக்கிறாள்.
கற்பனைக்கு எட்டிய பாதையில் பயணித்தபடி மயக்கத்தில் ஆழ்த்தித் தன்னை எங்கேயோ அழைத்துச் செல்கிறது. லட்சியமும், பாதையும் இல்லாத அந்தக் கற்பனையின் பிடியில் சிக்கிக்கொண்டு சோர்வாக, அமைதியாகப் போய்க்கொண்டிருந்தாள். இருப்பதை இல்லை என்று நினைத்து, இல்லாததை ஊகித்துக்கொண்டு, கேட்கும் திறன் இழந்தவளாக, கட்டுண்டு கிடந்தாள். அந்தக் கற்பனையிலிருந்து மீண்டு யதார்த்தத்திற்கு வந்தபோது புனிதமான உச்சநிலை கடந்து விட்டிருந்தது.
அளவுக் கடந்த ரகசிய பச்சைத் துரோகம் அது. அதனைத் தாங்கிக்கொள்ள எவ்வளவு அனுபவம் இருந்தாலும் போறாது.
*****
“எனக்கு இங்கே எனோ பாந்தமாக இல்லை” என்றபடி சியாமளா எழுந்து கொண்டாள். புடவையைச் சரி செய்துகொண்டு பாப்பாவைத் தூக்கிக் கொண்டாள்.
“குளிராக இருக்கிறதா?”
“என்னமோ தெரிவியவில்லை. கீழே போகலமா?”
“நானும் வரட்டுமா?”
“உங்கள் விருப்பம்.”
“இங்கே நன்றாகத்தான் இருக்கிறது. பனி கூட இல்லை.”
“பையனைக் கூட்டிக்கொண்டு போகட்டுமா?”
“வேண்டாம். இருக்கட்டும்.”
சீக்கிரமாகப் படியிறங்கி வந்தாள். பாப்பாவை ஊஞ்சலில் படுக்க வைத்து டேபிள் பேனை கால்மாட்டில் இருந்த ஸ்டூல் மீது வைத்தாள். பக்கத்திலேயே கட்டிலைப் போட்டுக்கொண்டு தலையணையை மட்டும் வைத்துக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு படுத்தாள்.
எவ்வளவு முயற்சி செய்தபோதிலும் தூக்கம் வரவில்லை. விழிப்பு நிலையில் இருக்கும் வரையில் எண்ணங்கள் நிற்காது. பிடிக்குள்ளும், சீசாவிலும் சூனியத்தை அடக்கி வைப்பதும், மூளையை காலியாக வைப்பதும் ஒன்றைவிட ஒன்று கடினமானது. முதலில் சொன்னதற்கு அறிவியல் துணை புரியும். இரண்டாவதற்கு இந்த உதவி கிட்டாது. ஆன்மீகச் சிந்தனை, தியானம் செய்தால் சாத்தியமாகக்கூடும். அவற்றைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்குக் கொஞ்சமாவது தூய்மையும், நிறைவும் பெற்ற மனநிலை அவசியம். அவை ஆரம்பமாகும் இடத்திற்கு சியாமளா இன்னும் வந்து சேரவில்லை.
இன்று எவ்வளவு அநியாயம் நேர்ந்துவிட்டது! அவனைக் காண்பித்து விதி தன்னை சோதித்துப் பரிகாசம் செய்து விட்டது. இந்தச் சோதனையில் வெற்றிப் பெறாமல், செய்யக் கூடாத பாவத்தைச் செய்து விட்டாள். தனக்குள் ஓடும் இரத்தத்திற்கும், ஆன்மாவுக்கும் எந்த உறவும் இல்லை. வெளியில் தெரியாத இந்த வேதனையைத் தான் எப்படி தாங்கிக் கொள்வது? கணவன் மட்டுமல்ல, ஆன்மாவிடம் கூட இந்த வேதனையைப் பகிர்ந்துகொள்ள முடியாது. தனக்குத் தானே செய்துகொண்ட இந்தத் துரோகத்திற்குப் பிராயச்சித்தமாகத் தன்னிடமிருந்தே தான் விலகிப் போய் விட வேண்டும்.
எங்கே போவது? எங்கே போனாலும் இந்த வேதனை தன்னைத் துரத்திக் கொண்டேதான் இருக்கும். யாரோ எரிகின்ற கொள்ளிக்கட்டையால் தன்னை எரிக்கிறார்கள். உடல் பாவச் சிந்தனை என்ற அக்னியில் தகிக்கப் பட்டு ரணமாகிறது.
இருட்டில், மின்விசிறி சத்தத்தில் ஆயிரம் குரல்கள் ஒன்று சேர்ந்து தன் பக்கம் திரும்பி எப்படியெல்லாமோ கூச்சல் போடுவது போல் இருக்கிறது. கண்களை மூடிக் கொண்டாலும் தெரிகின்ற அந்தப் பயங்கர துஷ்ட உருவம் தன்னுடைய பிம்பம்தான் என்று எண்ணி, சொல்ல முடியாத வேதனையை அனுபவித்தாள் சியாமளா. மனிதனுக்குத் தனிமையைக் காட்டிலும் பகைவனும், தண்டனையும் வேறு என்ன இருக்க முடியும்?
ஆறாண்டு காலமாகக் கணவனுடன் குடும்பம் நடத்திக்கொண்டு, அவனே தானாகவும், தானே அவனாகவும், வழி தவறாத வண்டிபோல் எளிமையாக, சந்தோஷமாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தத் தன்னை, இன்றைக்கு அவன் கண்ணில் பட்டுத் தலைகீழாகத் தன்னை நிற்க வைத்து விட்டான்.
சாமார்லகோடாவில் ரயில் ஏறும் வரையில் மகிழ்ச்சியாக இருந்த தன்னை, கனவிலும் ஊகிக்க முடியாத இந்தப் புதைகுழியில் இறக்கி விட்டு அழ வைத்துக்கொண்டு இருக்கிறான். கொடூரமானவன்!
பாவம்! அவன் மட்டும் என்ன செய்து விட்டான்? மரியாதைக் குறைவாகவோ, தரக் குறைவாகவோ நடந்துகொள்ளவில்லை. தான்தான் அவனை விடாமல் ‘உங்களுடையது எந்த ஊர்? இப்போ என்ன செய்துகிட்டு இருக்கீங்க?’ என்று கேட்டாள். அவன் கூச்சத்துடன், எப்படிச் சொல்வது என்று தயங்கியபடி, , தனக்குப் புரியாது என்று நினைத்து ஆங்கிலத்தில் சொன்னான். அவனைக் கூர்ந்துக் கவனித்து விட்டு, இன்னார் என்று அறிந்துகொண்டு சும்மா இருக்காமல், திரும்பத் திரும்பப் பேச்சுக் கொடுத்ததில், தனக்குத் தெரியாமலேயே தன்மீது சவாரி செய்கின்ற ஓர் அதிகார தோரணை இருந்தது.
பெண் பார்க்க வந்தபிறகும் அவர்களுக்குச் சொத்து சுகம் இல்லை என்று மறுத்துவிட்டு அன்று தன் வீட்டார் அவனை அவமானப் படுத்தினார்கள். இன்று ‘நீ யார் என்றும், நான் யார் என்றும் தெரிந்து விட்டது. எனக்குத் திருமணம் ஆகி விட்டது. இதோ பார் என் கணவர், குழந்தைகள்’ என்று சொல்ல முற்பட்டது, காட்சிப் படுத்தியது… அவனை அவமானப் படுத்துவது போல்தானே.
அன்றும் இன்றும் ஒரு நொடி ஆதிக்கத்தை ஆதாரமாக்கிக்கொண்டு, உண்மையான மதிப்பை அவமானப் படுத்திய குற்றம் தன்னுடையதுதான். தான்தான் குற்றவாளி.
இருந்தாலும் இவ்வளவு பெரிய தண்டனை கூடாது. நீண்ட காலமாகக் காத்து வந்த பதிவிரதை தர்மம், உணர்ச்சி வசப்பட்ட ஒரு தவறின் காரணமாக அழிந்துபோய் பிரத்யக்ஷ தெய்வத்தின் முன்னிலையில், ஆன்மாவின் முன்னிலையில் விசாரணைக்கு உள்பட வேண்டி வருவது அநியாயம்.
தான் செய்தது சாரணமான தவறு இல்லை. ஆன்மாவின் சாட்சியாக, கணவரின் முன்னிலையில் ‘அவனைப் பற்றி’ யோசித்து கணவனை அல்பக் காரணத்திற்காகக் கடிந்துகொண்டாள். கணவனின் உருவில் அவனை ஊகித்துக்கொண்டு மானசீக விபச்சாரம்… ச்சீ!
“கடவுளே!” என்று ஓலமிட்டாள் சியாமளா. ஆனால் அந்தச் சத்தம் அவளுக்கே கேட்கவில்லை. குரல் கம்மி விட்டதில் தொண்டைக் குழி அடைபட்டுவிட்டது.
“எழுந்திருங்கம்மா” என்று வேலைக்காரி எழுப்புகிற வரையிலும் விழிப்பு வரவில்லை. ரேடியோ மீதுள்ள அலாரம் டைம்பீஸை பார்த்தாள். அதற்குச் சாவி தந்தால்தானே வேலை செய்வதற்கு என்று நினைத்துக்கொண்டாள். அது எட்டே காலைக் காட்டியது. ரேடியோவை ஆன் செய்து, மணியைச் சரி செய்வோம் என்று நினைத்து, சாவித் தரப் போனாள். கடிகாரம் இயங்கிக்கொண்டுதான் இருந்தது. கணவர் சாவி தந்திருப்பார் போலும் என்று நினைத்துக் கொண்டாள்.
“எப்படி அசந்து தூங்கியிருக்கீங்கம்மா?” வேலைக்காரி கைகளை ஆட்டியபடி பெருமூச்சு விட்டாள்.
“அட! என்ன உன்னோட தொல்லை?”
“தொல்லை என்ன இருக்கும்மா? அய்யா ஆபீசுக்கு போயிட்டார் இல்லையா. சந்து முனையிலே பார்த்து கும்பிடு போட்டேன். அய்யா, வீட்டுக்குப் போன்னு சொன்னாரு. நீங்க எந்திருச்சி இருப்பீங்கன்னு நெனச்சேன்.” பாடம் படித்தாள் வேலைக்காரி.
சியாமளா நன்றாக விழித்துக் கொண்டாள். அதாவது மணி எட்டே கால் ஆகிவிட்டது போலும்! வெங்கடேசன் விஷயம் அவளுக்குப் புதிது ஒன்றுமில்லை. இடி விழுந்தாலும் ட்யூட்டிக்கு போகாமல் இருக்கமாட்டான். இரவுச் செய்தி வந்ததோ இல்லையோ, காலையிலேயே எழுந்து போய் விட்டான் போலும்.
“சரி பாயிலரில் தண்ணி எடுத்து ஊத்து” என்று அறைக்குள் சென்று டூத் பிரஷ் எடுத்து வந்தாள் சியாமளா.
“பாயிலரில் தண்ணி கொதிச்சுகிட்டு இருக்கமா.”
“சரி. குமுட்டியைப் பற்றவை. மாடியில் சின்னத் தம்பி இன்னும் தூங்கிக்கிட்டு இருப்பானோ என்னவோ. எழுப்பி அழைத்துக்கிட்டு வா.”
“அப்படி எதுவும் இல்லை. சின்னய்யா எழுந்திரிச்சு அவங்க அப்பாவோட சேர்ந்து காபி குடிச்சிட்டு கொல்லைப்புரத்தில் விளையாடிக்கிட்டு இருக்கிறான்.”
குமுட்டிக்குப் பக்கத்தில் காபி தம்ளர்கள், குமுட்டியில் நிதானமாகக் கொதித்துக் கொண்டிந்த பால்! சந்தேகப்பட்டு ஆணியில் மாட்டி இருந்த பிளாஸ்கை பார்த்தாள். கனமாக இருந்தது.
சியாமளா வெட்கத்தில் கூனிக் குறுகிப் போனாள். இரவு அந்தப் பாழாய்ப்போன சுயபரிசீலனைக்குத் தப்பிக்க முடியாமல் போய்விட்டது. அதற்குப் பிறகு எப்பொழுது தூங்கினாளோ. பாவம் கணவர், காலையில் சீக்கிரமாகவே எழுந்து இருப்பார் போலும். பால் கறக்கிற அம்மாள் எருமை மாட்டை ஓட்டிக்கொண்டு ஐந்து மணிக்குள்ளாகவே வந்து விடுவாள். அப்பொழுதே எழுந்து வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, எட்டு மணி அளவில் ஆபீசுக்குக் கிளம்பிவிட்டார் போலும். இதையெல்லாம் பார்த்து வேலைக்காரி வேறு சிரிக்கிறாள். பாழாய்ப் போன தூக்கமும் தானும். இப்படி ஆகி விட்டதே என்று நினைத்தாள்.
குழந்தைகளைக் குளிப்பாட்டி, தானும் குளித்துச் சமையல் முடிப்பதற்குள் பத்தரை மணியைத் தாண்டிவிட்டது. சுடச்சுட சாப்பாட்டை குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள். வாசற்கதவு சத்தம் கேட்டது.
ஆபீஸ் ஜவான்.
“ஐயா அவசர வேலையா ‘பந்தர்’ போயிருக்காங்கம்மா. ராகவய்யா சாரிடமிருந்து இருவது ரூபாய் வாங்கி இருக்காங்களாம். உங்ககிட்ட கேட்டு அவங்களுக்கு கொடுக்கச் சொன்னாங்க. இந்தாங்க சீட்டு.”
சியாமளாவுக்குச் சரியா மூளைக்கு எட்டவில்லை.
“பந்தர் போயிருக்காங்களா?”
“ஆமாங்க.”
“எதற்கு?”
“என்னவோ அர்ஜன்ட் வேலையாம். தொரை பங்களாவுக்கு வரச் சொல்லி ஜீப்பில் ஏத்திக்கிட்டுப் போனாங்க.”
“சாப்பாடு?”
“இன்னும் சாப்பாடு என்ன சாப்பாடு? யாருமே சாப்பிடலை. அதுக்கப்புறம் அய்யா பணம் கொண்டு வரலைன்னு தயங்கிக்கிட்டு இருந்தார். ராகவய்யா வீடு கிட்டதானே இருக்குன்னு நான் போய்க் கொண்டு வந்து தந்தேன்.”
சீட்டைப் பார்த்தாள் சியாமளா. வீட்டுக்குள் போய்ப் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
“இரவு வந்து விடுவார் தானே?”
“எப்படி தெரியும்? போறது நம் விருப்பம் இல்லை. வருவது மட்டும் நம் விருப்பமா?” என்று அவன் போய்விட்டான்.
கவலையுடன் அமர்ந்தாள் சியாமளா.
அவசர வேலைகள் வந்துகொண்டே தான் இருக்கும். வீட்டுக்கு வந்து சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் இல்லையா. கையில் காசு இல்லை என்றாலும், வீட்டுக்கு வரணும் என்ற யோசனை இல்லாமல் போய் விட்டது. ராகவய்யாவுக்கு செய்தி சொல்லி அன்ன ஆகாரம் இல்லாமல், உடுத்திய உடுப்புடன் கடன் வாங்கிக்கொண்டுப் போகணுமா? இது எப்பொழுதும் இருக்கிற வேலை மாதிரி இல்லை. இதில் என்னவோ இருக்கிறது. தன்னுடைய பேச்சு மற்றும் செயல்களை உணர்ந்து, தன்னை தண்டிக்கிறாரா?
செய்தியைக் கொண்டு வந்த ஜவான்… அவன் பேச்சாவது சரியா இருக்கக் கூடாதா? அவனுக்கு எல்லாம் தெரியும் போலிருக்கு.
சிந்தனைகளோடும், சமாதானங்களோடும் சியாமளா அப்படியே நேரத்தைக் கழித்துவிட்டாள். நடுநடுவில் குழந்தைகளின் விளையாட்டு, தூக்கம், சன்னல் கதவுச் சத்தங்கள், தபால்காரர் குரல்… இது போன்ற கொஞ்ச இடையூறுகள் இருந்தாலும், சிந்தனையிலிருந்து வெளி வர முடியவில்லை.
மாலை ஹெட் குமாஸ்தா சங்கரம் வீட்டுக்கு வருவார் இல்லையா? அவரைக் கேட்டால் விவரம் தெரியும் என்றும், இன்னும் சொல்லப் போனால் அவரோடு சேர்ந்து கணவர் வந்து விடுவார் என்றும் சின்ன எதிர்பார்ப்பு இருந்தாது. அவருக்காகக் காத்திருந்து காத்திருந்து கடைசியில் எட்டரை மணிக்கு வந்தார். ரிக்ஷா அவர் வீட்டருகில் நிற்கவும் வேகமாகப் போனாள் சியாமளா.
“என்னம்மா இப்படி வந்திருக்கிறாய்? வா உட்கார்” என்று உள்ளே போனார் அவர். ஹெட் குமாஸ்தாவின் மனைவி, “சியாமளா நீயா! வாம்மா வா. என்ன விசேஷம்? தங்கச்சி கல்யாண விஷயத்தை முதலில் சொல்லு” என்று குசலம் விசாரித்தாள்.
சியாமளாவின் நிலைமை இக்கட்டாக இருந்தது. கோட்டையும், தலைப்பாகையையும் கழட்டிவிட்டு சங்கரம் வெளியே வந்தார்.
“என்னம்மா? பொழுது சாய்ந்த பிறகு வந்திருக்கிறாய்? உன் புருஷன் பந்தர் லிருந்து இன்னும் வந்தமாதிரி தெரியவில்லையே?”
“அது வந்து… மாலையில் வருகிறேன் என்று செய்தி எதுவும் சொல்லவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுமோ என்று…”
“தெரிவதற்கு என்ன இருக்கிறது? போனவர்கள் எல்லோரும் வந்து விட்டார்களே!”
“எல்லோரும் வந்து விட்டார்களா?”
“ஆமாம். எல்லோரும் வந்து விட்டார்கள். நாளைச் சனிக்கிழமைக்குள் பிசினஸ் ரிடர்ன்ஸ் அனுப்ப வேண்டும். எல்லோருக்கும் வேலை ஜாஸ்தி. இன்றைக்கு கலெக்டர் கான்ஃபரன்ஸ். கேம்ப் கிளார்க்குக்கு காய்ச்சலாக இருந்ததால், உன் வீட்டுக்காரருக்கு ஷார்ட் ஹேன்ட் தெரியும் என்று கலெக்டர் கூடவே அழைத்துக்கிட்டு போய்விட்டார். அவர்கள் எல்லோரும் மாலையிலேயே வந்து விட்டார்கள். இவன் நண்பர்களோடு இருந்து விட்டு ஒருக்கால் பஸ்ஸில் வருவானோ என்னவோ.”
*****
அதற்கு அடுத்தநாள் சாயங்காலம் ஹெட் குமாஸ்தா சங்கரம், “அம்மா பெண்ணே!” என்று குரல் கொடுத்தபடி வந்தார்.
சியாமளா அறையிலிருந்து ஹாலுக்கு வந்தாள். பையனும் முந்தானையைப் பிடித்துக்கொண்டே வந்தான். சங்கரம் பெப்பர்மென்ட் பாக்கெட்டை அவன் கையில் கொடுத்தார்.
“அதெல்லாம் எதுக்குங்க?” மறுக்கப் போனாள் சியாமளா.
“அட! ஒண்ணுமில்லையம்மா! சின்னக் குழந்தை, பார்த்து ரொம்ப நாளாகி விட்டது.”
சியாமளாவின் முகம் வீங்கிக் கண்கள் பாரமா இருந்தன. “என்னம்மா இப்படி இருக்கிறாய்? வெங்கடேசன் இன்னும் வரவில்லையா? என்ன ஆனான்? எங்கே போனான்?”
“பந்தரில் அவருடைய வேலை இன்னும் முடியவில்லை போலிருக்கு.” துக்கத்தை விழுங்கிக்கொண்டே சொன்னாள் சியாமளா.
“போதுமே… அவன் வேலையும், என் வேலையும் அங்கே என்ன இருக்கப் போகிறது? இதெல்லாம் அரசாங்க வேலை, சப் கலெக்டர் வேலை.” ஒரு நிமிடம் கழித்து மேலும் சொன்னார்.
“இருந்தாலும் எனக்குத் தெரியாமல் பந்தரில் அவனுக்கு அப்படி என்ன வேலையிருக்கு? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. ஆனாலும்… ஒன்று கேட்கிறேன். ஒன்றும் நினைத்துக்கொள்ளாமல் பதில் சொல்கிறாயா?”
சியாமளாவின் நிலைமை குழப்பமாக இருந்தது.
“என் சந்தேகம் என்னவென்றால், ஏதாவது சண்டை கிண்டை போட்டுவிட்டுப் போனானோ என்று. கல்யாணத்திற்குத்தானே போனீங்க? அங்கே நடக்க வேண்டிய மரியாதைகள், இல்லை இன்னொரு நாலுநாள் அங்கே இருக்கும் விஷயமாக ஏதாவது பிரச்சனை வந்துவிட்டுதா? பாரும்மா, இது எப்படிப்பட்ட நேரம் என்றால் பிசினெஸ் ரிடர்ன்ஸ் டைம். எல்லோரும் கஷ்டப்பட்டு வேலை செய்யணும். இரண்டு நாள் ஆப்சென்ட் ஆனால் அவனுக்கு எவ்வளவு நஷ்டம்? ஏற்கனவே பத்து நாள் லீவு எடுத்தாச்சு. அவன் எப்பொழுதும் வேலையில் சுணங்க மாட்டானே? உன்னைப் பார்த்தால் இப்படி இருக்கிறாய்! அவன் என்னவோ அவசரப்படுகிற மனுஷன் இல்லை. எதற்காக இப்படி செய்தானோ? ஏதாவது இருந்தால் என்கிட்டே சொல்லும்மா. நான் உனக்கு அப்பா மாதிரி.”
சியாமளா பதில் பேசவில்லை. கற்சிலை போல் நின்றிருந்தாள். துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது.
“சரி, நான் போய் வருகிறேன். இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவான் என்று நினைப்போம். வந்ததும் கொஞ்சம் என்னை வந்து பார்க்கச் சொல்.”
அவர் போய் விட்டார்.
இந்த முறை சியாமளாவுக்குத் துக்கம் தாங்கவில்லை! அழுது அழுது சோர்ந்து போய்விட்டாள். எதுவும் இயல்பாக நடக்கவில்லை. மூன்று நாட்கள் மூன்று யுகங்களாகக் கழிந்தன. இது இன்னும் எந்தப் திசையில் திரும்பப் போகிறதோ.
சண்டை போட்டுக்கிட்டு இருக்கிறோம் என்று நினைத்துக்கிட்டு இருக்கிறார்கள் போலும். அது அப்படியே ஹெட் குமாஸ்தா வீட்டிலிருந்து வந்த புல்லெடின். சந்தேகமே இல்லை. இருந்தால் மட்டும் என்ன? இது ஆபீசில் பரவ ரொம்ப நேரமாகாது. சங்கரம் ஆபீசில் ஏதாவது சொல்ல நினைத்தால், எல்லா குமாஸ்தாக்களும் சுற்றிலும் சேர்ந்து விடுவார்களாம்.
எல்லா குமாஸ்தாக்களின் நடுவிலும் இந்த விஷயத்தைச் சொல்வதும், அவர்கள் சிரித்துக்கொண்டு அக்கம் பக்கத்து வீடுகளில், தெருவில் சொல்வதும், தங்களுக்குள் நடக்காத வீட்டுச் சண்டையைக் கட்டுக்கதையாகக் கற்பனை செய்து கொண்டாள் சியாமளா. அவள் இதயம் அல்லோல கல்லோலமாகிவிட்டது. கற்பனை பயங்கரமான பாதைகளுக்குப் வழி வகுத்தது.
விதி தன்னை ஏன் இப்படி பரிகாசம் செய்கிறது?
ஒன்பதாகிவிட்டது. சாப்பிடணும் என்று தோன்றவில்லை. சமையலறையில் எல்லாவற்றையும் ஏறக்கட்டலாம் என்று எழுந்தாள். கதவுச் சத்தம் கேட்டது. திடுக்கிட்டாள் சியாமளா.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான் வெங்கடேசன். கூடையில் மாம்பழங்கள் போலும், எடுத்துகொண்டு ரிக்ஷாகார பையன் பின்னால் வந்தான்.
“சாரி சியாமளா! சொல்லாமலேயே போய் விட்டேன்” என்றவாறு வெங்கடேசன் அறைக்குள் சென்றான்.
சியாமளா நின்ற இடத்தில் அப்படியே நின்றுவிட்டாள்.
வெங்கடேசன் இரண்டு நிமிடங்களில் உடைகளை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தான்.
“கைகால் கழுவிக்கொண்டு வாங்க.”
“என்ன? சாப்பாடா? ஊஹும்… இவ்வளவு ராத்திரியில் நீ எதுக்குக் கஷ்டப்படணும் என்று வழியிலே இறங்கி ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்தேன்.”
சியாமளா திரும்பவும் திடுக்கிட்டாள். “என்னை எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுத்தறீங்க?” என்று கேட்டாள். அடக்க முடியாத எண்ணங்களைத் தெரியப்படுத்த ஆரம்பித்த இந்த வாக்கியம் துண்டு துண்டாக வெளி வந்தது. அவளால் அழுகையை அடக்க முடியவில்லை.
“ச்ச… ச்ச… எதற்காக அழுகிறாய்?” என்றான் வெங்கடேசன் அருகில் வந்து.
“எனக்குத் தெரியும். எனக்கொன்றும் சொல்ல வேண்டாம். நான் தவறு செய்தால் எனக்குத் தண்டனை கொடுங்கள். ஆனால் இப்படி…” என்று கண்ணீரோடும், கனத்த குரலோடும் சொன்னாள்.
வெங்கடேசன் கரைந்து போனான். துக்கப்படுவதற்கு சியாமளாவுக்கு எப்படி அனுபவம் இல்லையோ, ஆறுதல் சொல்வதற்கு அதைவிட அனுபவம் இல்லை அவனுக்கு.
“இல்லை சியாமளா! நீ என்ன தவறு செய்தாய்? ச்சீ ச்சீ… எதற்காக அந்தப் பேச்சு? நான் சொல்லாமல் போய் விட்டேன் என்றுதானே. பாவம் மூன்று நாளும் வேளா வேளைக்குச் சமைத்து வெச்சு காத்திருந்திருப்பாய். சாரி சியாமளா. நாம் காக்கிநாடா போகும்போது அம்மா கிணற்றடியில் விழுந்து விட்டதாகக் கடிதம் வந்ததில்லையா? பார்த்துவிட்டு வரலாம் என்று எங்க ஊருக்குப் போனேன். காக்கிநாடாவிலிருந்து வரும்போது இறங்கி விடலாம் என்றால் மனசு ஒப்பவில்லை. சரியாகப் பத்தொன்பதாம் தேதி அன்று ட்யூட்டியில் இருக்கணும் என்று சப் கலெக்டர் முன்னாடியே சொல்லி விட்டார். பந்தரில் கான்ஃபரென்ஸ் முடிந்ததும் இந்த இரண்டு நாட்களும் பப்ளிக் ஹாலிடேஸ் தான் என்று கேட்டதால் போயிட்டு வா என்று சொன்னார். என்ன இப்படி ஆகிவிட்டாய்? கண்கள் எப்படி சிவந்திருக்குப் பார். எவ்வளவு நேரமாக அழுதுகிட்டு இருக்கிறாய்?”
சியாமளாவின் உடலே ஆன்மாவாகி விட்டது. கணவனை ஒருமுறை பார்த்துக் காலுக்கடியில் சரிந்து உட்கார்ந்து விட்டாள். இரண்டு கால்களையும் கட்டிப் பிடித்துக்கொண்டு, “என்னை மன்னித்து விடுங்கள். உங்க மனதை கஷ்டப்படுத்திட்டேன். பாவி நான்! தவறு செய்து விட்டேன்” என்றாள், அவன் முழங்கால்களின் மீது தலையைச் சாய்த்து.
அங்கே வெளியேறிய பெருமூச்சில் பூமியின் பாரம் அடங்கியிருந்தது. பாவத் தீயில் சுடப்பட்ட இதயம் பச்சாதப நதியில் கரைந்தாற்போல் சியாமளாவின் மனம் இலேசாகி விட்டது.
“எந்தத் தவறும் இல்லை. எழுந்திரு, சாப்பிட வா” என்றான் வெங்கடேசன் அவளை எழுப்பிக்கொண்டே.
*****
(ஆந்திர பத்திரிக்கை வார இதழில் 1960 தீபாவளி கதை போட்டியில் இரண்டாவது பரிசு. Vennela Needa)
Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
