‘சாதகப் பறவையின் காத்திருப்பு’ மற்றும் ’துப்பாக்கி போல் சொகுசாய் கிடக்கிறது பேனா’ 

ரா. கிரிதரனின் விமர்சன நூல்களை முன்வைத்து – 1

சொல்வனம் இணைய இதழை அறிந்தவர்களுக்கு, ரா. கிரிதரன் ஒரு பரிச்சயமான பெயர், கட்டுரைகள் குறிப்பாக தமிழில் பிறர் அதிகம் தொட்டிராத இசைகுறித்த திசையில் இன்றைய தேதியில் கூடுதலாகப் பயணித்து அக்கலை அனுபவத்தை, உணர்வை  எழுத்து வடிவில் மொழிபெயர்ப்பவர், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கிய விமர்சங்களென தொடர்ந்து சோர்வின்றி இயங்கிவருபவர். இங்கே உங்களோடு நான் பகிர்ந்து கொள்வது அவருடைய இரண்டு விமர்சன நூல்கள், குறித்தவை. 64 கட்டுரைகள். 

எண்ணிக்கையில் இவரளவிற்கு திறனாய்வு என்கிற விமர்சன கட்டுரைகள், நூலறிமுக கட்டுரைகள் தமிழில் எழுதியவர்களிருக்க வாய்ப்பில்லை. சகோதரர் ரா. கிரிதரன் எழுதியுள்ள கட்டுரைகளை வாசிக்கிறபோது, எடுத்துக்கொண்ட நூலை யார் எழுதினார்கள் என்பதைக்காட்டிலும் எப்படி எழுதப்பட்டுள்ளது என்கிற அடிப்படையில் வேண்டுதல் வேண்டாமைகளின்றி   எழுதியுள்ளார். நவீன தமிழிலக்கியத்தின்   அனைத்து வடிவங்களிலும் : கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்களென அனைத்திலும் மனைதைப் பறிகொடுத்தவராய், அறிவியலையும் அழகியலையும் ஒன்றிணைத்து  சகோதரர் ரா. கிரிதரனின் படைத்துள்ள இக்கட்டுரைகள் அனைத்துமே  ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. 

படைப்புலகம் என்கிற அரசவையில் வீற்றிருக்கும் படைப்பாளிகளில் திறனை அவரவர் படைப்புகள் ஊடாக அவரது விமர்சன துலாக்கோல் அளவிட முயற்சிக்கிறது. ’செட்டியார் மிடுக்கை’ப் பார்க்காது, அதாவது படைத்தவர் யார் என்பதைக் காட்டிலும்  அன்னாருடைய சரக்கின் மிடுக்கைக் கணக்கிற்கொண்டு, படைப்பினை நவீன இலக்கிய எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் அணுகியுள்ளார்.   Criticism என ஆங்கிலத்திலும், critique என   பிரெஞ்சு மொழியிலும் சொல்லப்படும் வார்த்தையின் மூலம் criticus என்கிற இலத்தீன் சொல். அதன் பொருள் மதிப்பீடுசெய்பவர், சார்பற்று கருத்துரைப்பவர். அதாவது குறைகளை சுட்டியும், நிறைகளை பாராட்டியும் கருத்துரைக்கும் அல்லது தீர்ப்பெழுதும் ஒருவர். தமிழர் பெரும்பாலான வழக்கிற்கேற்ப ரசிக மனப்பாங்குடன் படைப்பினை கொண்டாடி எழுதுவது இக்கட்டுரைகளில் அரிதாகத்தான் உள்ளது. 

தமிழில் பொதுவில் விமர்சகர்கள் இருவகை. பிறமனிதர்களைக் காயப்படுத்தவென்றே விமர்சனங்களை வைப்பவர்கள் முதல்வகை.  குறைகளைக் களைந்து இனி வரும் நாட்களில் சம்பந்தப்பட்டவர் மேன்மையுற வேண்டும் என்ற நோக்கில் விமர்சனங்களை வைப்பவர்கள் இரண்டாவது வகை. விமர்சனம் அல்லது திறனாய்வு  ஒரு கலையெனில், உண்மையான விமர்சகர்களின் நோக்கம் இரண்டாவதாகத்தான் இருக்கவேண்டும். காரணம் கலையின் முயற்சி ஆக்கலேயன்றி அழித்தல் அல்ல.  

இன்றைய படைப்பிலக்கியம் நேற்றைய நெறிகளுக்கு உட்பட்டவை அல்ல, குறிப்பாக இலக்கணமெகிற கைவிலங்கு கால்விலங்குகள் இவற்றுக்கில்லை. சொல் புதிது, சுவைபுதிது, பொருள்புதிதென பாரதி வழியில் வாழும் காலத்தை கருத்திற்கொண்டு கலையும் இலக்கியமும் படைக்கப்படும் காலம்.  மரபுகளை சீர்தூக்கி பார்த்து, ஒவ்வாததை ஒதுக்கும் காலம்,

தவிர, பிறந்த மண்ணைத் துறந்து வாழ்பவர்கள் அனேகம்.  அவ்வாறு துறக்கிறபோது புலம்பெயர்ந்த மண்ணின் பண்பாடும், அரசியலும் அவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. புலம் பெயர்ந்தவர்கள் வாழ்க்கை ஒருவகையெனில், சொந்தமண்ணில் வாழ்கிறவர்களின் நிலையென்ன ? அமெரிக்கர்களாக, ஐரோப்பியர்களாக வாழ்கிற தமிழர்கள் சென்னையிலும், கோவையிலும் இருக்கத்தானே செய்கிறார்கள். ஏன் இந்தியாவிலேயே பெங்களூரு, மும்பையென தமிழர்கள் வாழ்வதில்லையா ?  

சிலப்பதிகாரம், மனோன்மணீயம் வாசித்த தமிழர்கள்  இன்று டால்ஸ்டாய், அல்பெர் கமுய் என வாசிக்கிறபோது, நடைமுறை வாழ்க்கை, உலக மயமாக்கலோடு ஒத்திசைந்து போகிறபோது, இன்றைய படைப்புகள்  அதை எதிரொலிக்கத்தானே செய்யும். இந்நிலையில் திறனாய்வாளர்களும் காலத்திற்கேற்ப படைப்புகளை அணுகவேண்டிய நெருக்கடி. பண்டங்களின் தராதரத்தை அதன் உற்பத்தியாளர்கள் செய்கிற விளம்பரங்கள் எங்ஙனம் தீர்மானிக்க முடியாதோ, அதுபோன்றே  விளம்பர உத்தியோடு  அல்லது அத்தகைய  நுட்பத்தோடு படைப்பிலக்கியத்திற்கு வைக்கப்படும் விமர்சனங்களை  நம்பியும் ஒரு படைப்பின் தராதரத்தை தீர்மானித்துவிடமுடியாது. 

இன்று படைப்பு வெளிவந்த கணத்திலேயே பதிப்பகமோ, எழுத்தாளர்களோ காட்டும் அக்கறையினால்  புத்தகங்கள் திறனாய்வாளர்களின்  கைக்கு வந்து சேர்ந்துவிடுகின்றன. இவர்களும் புத்தகம் கிடைத்த குறுகிய காலத்திலேயே எதையாவது எழுதித் தரவேண்டிய   நெருக்கடி. படித்து முடித்த படைப்பு உண்மையில் ஏற்படுத்தும் தாக்கமென்ன ? 

அனுபவமென்ன என்பதையெல்லாம் சிந்தித்து  எழுத  நேரம் கிடைப்பதில்லை. வாசித்த கணத்தில் எதை உணர்கிறார்களோ அதை உடனே எழுதிவிடுகிறோம். கலைப் படைப்பு என்பது கணத்திற்குரியது அல்ல, கணத்தைக் கடந்தது. காலத்தோடு எதிர்  நீச்சல் போடுவது. வாசித்து முடித்தபின், தொடரும் கணங்களில்,  நாட்களில் நமக்குள் அப்படைப்பு என்ன  நிகழ்த்துகிறது என்பது முக்கியம்.

துப்பாக்கி போல் சொகுசாய்கிடக்கிறது பேனா என்ற நூல், நூலாசிரியர் மொழிபேதமின்றி வாசித்த கவிதைகள்,  கட்டுரைநூல்கள் பற்றிய எண்ணங்களை, ஏற்படுத்திய தாக்கங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது. ஆயினும் இத்தொகுப்பில பாரதியாரின் குயிற்பாட்டு குறித்த இரணடு கட்டுரைகள் கவனத்திற்குரியன. பாரதியின் குயிற்பாட்டு நவீன தமிழில் ஐரோப்பிய மொழிகளுக்கு இணையாக சொல்லாலும், பொருளாளும், அதன் உட்பொருள் உணர்த்தும் தத்துவ மறையாலும் உயர்ந்து நிற்கும் கவிதைச்செல்வம்.

கட்டுரையாளர் வெறுமனே நுனிப்புல் மேய்ந்தவற்றை வாசித்தவற்றைக் கட்டுத்தறி விலங்காக அசைபோடுவரில்லை.  ‘ஓர் எழுத்தாளனின் படைப்புகள் அத்தனையையும் ஒரு சேர படிக்கும்போது நமக்கு ஏதேனும் ஓர் ஒற்றுமை ஆங்காங்கே தென்படும். வாக்கிய பிரயோகங்கள், வார்த்தைகள், கருத்துக்கள் எனப் பலதரப்பட்டவகையில் நம்மால் எழுத்தாளரின் மொழி உலகுக்குள் பயணம் செய்யமுடியும்’ என பாரதியின் குயிற்பாட்டின் தொடக்கத்தில் கூறுவதற்கிணங்க, இத்தொகுப்பிலுள்ள நூல்களைப்பற்றிய கட்டுரைகளிலன்றி, சாதகப்பறவையின் காத்திருப்பு என்கிற புனைவுகளைப் பற்றிய விமர்சன கட்டுரை நூலிலும், நவீன தமிழிலக்கிய இளையதலைமுறையினருள் ஓர் அபூர்வ சுவைஞரைச் சந்திக்கிறோம். 

தொகுப்பில் 32 கட்டுரைகள் ; கவிதைகள், கலை, பண்பாடு, சுற்றுச்சூழலென சகோதரர் கிரிதரனின் பாடபேதமின்றி பலவும் அவரது வாசிப்பு நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. பாரதி,  ஆ.இரா வேங்கடாசலபதி, யா. மணிகண்டன்,பம்மல் சம்பந்த முதலியார், டாக்டர் தி.செ.சௌ.ராஜன், ஏ.கே.இராமானுஜன், சா.பாலுசாமி என தமிழறிஞர்  பெருமக்களின் பட்டியல் நீள்கிறது. 

 இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை எழுத்தாளர் சகோதரர் நமக்கு விமர்சனக் கட்டுரைகளென கூறுவதில்லை, அடக்கமாக அறிமுகக் கட்டுரைகள் என்கிறார். ஆயினும் அவை ஆர்வத்தோடு நண்பரால் தேர்வு செய்து விலைகொடுத்து வாங்கிய நூற்கள். இந்நூல்களைப் படைத்த பெருமக்களும் சடங்காக தங்கள் உழைப்பை தமிழுக்கு அளித்தவர்கள் அல்லர். தமிழின் பெருமையையும் பண்பாட்டையும் உயர்த்திப்பிடிக்க உழைத்துள்ள அறிஞர்கள். விளைவாக நூலில் பெருமைக்குறிய உழைப்பையெல்லாம் கோடிட்டுக் காட்டும் வகையில் சொற்கள் இயல்பாக வந்து விழுகின்றன. 

  ‘கவிஞரின் சோகம் சொற்களையெல்லாம் உடைக்கவல்லது, மதியிழக்கச் செய்யும் வஞ்சகம் பெண்மையின் ரூபமாகவே ஆடவரை சூழ்ந்துகொள்ளும் காரணமென்ன ? ஆழந்தெரியா கிணற்றின் இருட்டிலிருந்து மேலெழும்பும் வித்தையை பன்நெடுங்காலமாய் நடத்திக்கொண்டு வந்தாலும், கவிஞனுக்கு என ஒரு வழியுள்ளதல்லவா ?’ (பாரதியின் குயில்பாட்டு-1)

மாலையழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென
கண்டுகொண்டேன் கற்பனையே யானாலும்
வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ ?

என பாரதி சட்டென முடித்துவிடுகிறார். கவிதை இத்தோடு முடிந்தாலும் கவிஞரின் சில கேள்விகள் கவிதையின் சாரத்தை அசைபோட்டு பார்க்க வைக்கின்றன.  ‘குயிலின் அழகை எப்படித் தமிழில் இசைத்திடுவேன் ? கண்ணிரண்டும் ஆளை விழுங்கும் அதிசயத்தை எப்படி எழுதுவேன்.’(பாரதியின் குயில் பாட்டு-2)

பாடல் புனைவது, பத்திரிகையில் கட்டுரைகளெழுதுவதுபோன்ற செயல்பாடுகளுக்கிடையே கடிதங்கள் வழியாக ஞான விவாதங்களை பாரதி பலருடன் தொடர்ந்திருக்கிறார் எனும் செய்தியும் வெளிப்படுகிறது. பேராசிரியர் சுந்தரராம ஐயர் என்பவருடன் அத்வைதம் மற்றும் கீதைபற்றி கிட்த்தட்ட நான்கு மாதங்கள் விவாதம் நடத்தியுள்ளார்.

இதைப்போல இந்த நூல் முழுவதும் பாரதியை புதுவெளிச்சத்தில் காட்டுகிறது. பாரதியைப் பற்றி அறியாதவர்கூட அவரது ஒன்றிரண்டு கவிதைகளை மேடையிலும் சினிமா பாடல்களிலும் கேட்டிருக்க முடியும்.  ‘ஆனால் இக்கடிதங்களில் வெளிப்படும் பாரதி ‘இந்தியா’ நாளிதழில் கட்டுரைகள் எழுதிய பாரதியல்ல, காக்கைக்-குருவி எங்கள் ஜாதி எனும் மானுடப் பொதுமையைப் பேசிய பாரதியும் அல்ல. வளர்ச்சி எனவும், காலமாற்றம் எனவும் சமூகத்தின் இயக்கங்களை முடமாக்கிப்போடும் பல தீயசக்திகளோடு நித்தம் சண்டையிடும் ஒரு சாமுராய்போல இக்கடிதங்கள் பாரதியைக் காட்டுகின்றன.’(பாரதி கருவூலம்)

’பாரதியின் கடைசிக்கால கட்டத்திற்கு மிக முக்கியமான ஆவணமாகத் திகழும் இந்தப்படைப்பு இதுவரை பாரதி ஆய்வாளர்களுக்குக் கிடைக்காதது ஆச்சரியமே. மதம்பிடித்த யானையிடம் சிக்கிக்கொண்ட விதம் குறித்தும், அதில் அவருக்கு ஏற்பட்டத் துன்பம் பற்றியும் பலரது குறிப்புகளில் நாம் படித்திருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று முரணாகவே இதுவரை இருந்துவந்துள்ளன……

….யானை சம்பவம்தவிர பாரதியின் இறுதிக்காலம் எப்படிப் பட்டதாக இருந்த து ? அவரது கலைவெளிப்பாடு குன்றாத ஊக்கத்தோடு இருந்த து என்பதுதான் மணிகண்டன் ஆய்வில் தெரிகிறது. ’ (பாரதியின் இறுதிக்காலம்)

 ‘ தமிழ் நாடக இயல்பற்றி மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக இந்நூல் அமைந்துள்ளது. பம்மல் சம்பந்த முதலியார் பல நவீன நாடகங்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாது பண்டைய நாடகக் கலை பற்றி பல செறிவான நூல்களையும் எழுதியுள்ளார். இன்றைக்கு நமக்கு தமிழ் நாடகவியல் பற்றி அறிவு கொஞ்சமாவது கிடைப்பதற்கு உ.வே சாமிநாத ஐயர், பம்மல் சம்பந்த முதலியார் போன்ற பெரியவர்களே காரணம்.’ (நாடகத் தமிழ்)

’’ விஞ்ஞான காலகட்டம், தொழில்நுட்பங்கள் நம் விரல் நுனியில் எனப் பெருமைப்பட்டுக் கொண்டாலும், ஒரு சமுதாய மனிதனாக நாம் எவ்வளவு முன்னேறிவிட்டோம் எனும் கேள்வியைக் கேட்க வைக்கும் புத்தகம்…..

…..சொந்த அனுபவங்கள் மூலம் இதுதான் சரியான வழி எனக் கண்டடையும் முனைப்பு இந்நூலில் தெரிகிறது. அவ்விதத்தில் காந்தியின் சுயசோதனைகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.’.(நினைவு அலைகள்)

 ‘ராஜன் சுயசோதனையும் தேடலும் நிரம்பியவராக புத்தகம் முழுவதும் காணக்கிடைக்கிறார். அவரது வாழ்க்கையைப்பற்றிப் படிக்கும்போது, ஒரு மனிதன் தனது பிறப்பு அடையாளங்களை துறப்பதில் இருக்கும் கஷ்டங்கள் , அவற்றை மீட்பதிலும் இருக்கின்றன எனும் உண்மை தெரியவருகிறது.’(நினைவு அலைகள்)

 ‘பண்டைய இந்திய குகைகளில் வரையப்பட்டுள்ள குகை ஓவியங்கள் கலை மதிப்புக்காகவோ, ஆட்சியாளரின் பெருமைகளை பறைசாற்றும் விதமாகவோ, ஓவியர்களின் திறமைக்குச் சான்றாக அமைந்ததற்காகவோ வரையப்பட்டனவோ அல்ல. கலைமதிப்பில்லாத குகை ஓவியங்கள், அக்கால மக்களின் நம்பிக்கை சார்ந்து வாழ்வோடு ஒன்றியிருக்கும் அம்சங்களாக அமைந்துள்ளதால் அவர்களது அடையாளமாகக்கூட அச்சிற்பங்கள் கருதப்படுகின்றன.’

 ‘ மாமல்லபுரம் அருகே இருக்கும் சாளுவன் குப்பத்து புலிக்குகை என்பது கோவிலே அல்ல என வெளியான பிற அறிஞர்களின் ஆய்வை மறுபரிசீலனை செய்கிறார் ஆசிரியர்.’

’குடைவரை  கோவில், ஒற்றைக் கற்றளி , காட்டுமான்கோயில், திறந்தவெளி புடைப்புச்சிற்பங்கள் என சிற்பங்கள் அமைப்பதில் பல பாணிகளை ஆசிரியர் விளக்கியுள்ளது சிற்பக்கலைபற்றி தெரியாத எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.’

’பெரும்பாணாற்றுப்படை, அகநானூறு, புறநானூறு பாடல்களில் ஆயர்களின் வாழ்வியல் நிகழ்வுகளைக் கொண்டு சிற்பத்தின் முக்கியமான பகுதிகளை விவரித்திருக்கும் பகுதி மிகவும் ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது’ (மாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்- சா. பாலுசாமி)

’ இழப்பும், தனிமையும் இவரது கவிதைகளில் நிரந்தரப் பேசுபொருளாக இருக்கிறது. வீடுகளுக்குள்ளே வாழும் அனாதைகள் என ஒரு வரியில் தனிமைக்கு மற்றொரு அர்த்த த்தைத் தரமுடிந்திருக்கிறது. வீடு என்றாலே விடுபடல், சமூகத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருக்கும் இடம் என்பதுதான். வீட்டிலும் ஒருவன் துணைக்கு ஏங்கி அனாதையாக இருப்பானென்றால் அந்த வீடு தரும் பாதுகாப்புணர்வு என்ன பொருள் தரும் ?’(கணங்களில் தவிக்கின்ற ஜீவிதம் – சுப்பிரமணியன் ரமேஷ் கவிதைகள்)

(தொடரும்…)


Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.