உடல்நலக் கல்வி

This entry is part 18 of 10 in the series பொது நலம்

சில வருடங்களுக்கு முன் வந்த தொற்று நோய் நினைவிருக்கிறதா? அப்போது என்ன செய்ய வேண்டும், எங்கே தடுப்பூசிகள் போடுகிறார்கள், என்ன செய்யக் கூடாது போன்ற செய்திகள் ஓயாமல் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருந்தது நினைவிருக்கிறதா? அது போல விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது ஒரு வகையில் உடல்நலக் கல்வியில் அடங்கும்.

உடல்நலக் கல்வி என்பது வெறும் தகவல்கள் மட்டுமே அடங்கிய பாடத்திட்டம் அல்ல. அது நல்ல உடல் நலத்தை பெறுவதற்கானப் பழக்கங்களைக் கற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள்; உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் பழக்கங்களில் இருந்து விடுபட்டிடும் வழிமுறைகளையும் பேராபத்துக் காலங்களைக் குறித்த எச்சரிக்கைகளைப் பரப்பும் முறைகளையும்  உள்ளடக்கியது.

அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி. தொற்றுநோய்கள் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த காலம். அப்போதுதான் மக்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் அரசாங்கங்களுக்கு உண்டானது. பத்தொன்பதாம் நூற்றாண்டில்  ஐரோப்பாவில் தொடங்கிய பொது சுகாதார இயக்கம், படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில், பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் காலரா, பிளேக் போன்ற நோய்களைத் தடுக்க அடிப்படை சுகாதார விதிகள் கற்பிக்கப்பட்டன.

விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசு 1952 ஆண்டு முன்வைத்த முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் பொதுச் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்தது. 1978இல் உலகச் சுகாதார நிறுவனம் தொடங்கிவைத்த அல்மா-அடா (alma ata declaration) பிரகடனம், “உடல் நலம் அனைவருக்கும் உரியது” (Health for All) என்ற கொள்கையை முன்வைத்தது. இது உடல்நலக் கல்வியை ஓர் அடிப்படை உரிமையாக அங்கீகரித்தது.

உலகச் சுகாதார நிறுவனத்தின் 2023 அறிக்கையின்படி, உலகளவில் ஆண்டுதோறும் இரண்டு கோடி பேர் தடுத்திருக்கக்கூடிய நோய்களால் (preventable disease) இறக்கின்றனர். அதாவது மன்ஹாட்டனில் வசிக்கும் மக்கள் தொகை போல பத்துமடங்கு. இவர்களில் பெரும்பாலாருக்குத் தக்க தருணத்தில் உடல்நலக் கல்வி கொடுத்திருந்தால், அவர்களைக் காப்பாற்றி இருக்க முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை கிராமப்புற மக்களில் மூன்றில் ஒருவருக்கு மட்டுமே அடிப்படை உடல்நலத்தைப் பற்றிய விழிப்புணர்வு உள்ளது.

நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் சரிபாதி மக்களுக்கு மட்டுமே உடல்நலக் கல்வி கிடைக்கிறது.  பெண்களில் பெரும்பாலோர்  மாதவிடாய்ச் சுகாதாரம் பற்றிய போதிய புரிதல் இல்லாமல் உள்ளனர். மாதவிலக்குக் காலத்தில் எப்படிப்பட்டச் சுகாதார முறைகளைப் பேண வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட பொதுவாகவே பெண்களிடம் இல்லை என்பது வருந்தத்தக்கது.

இந்திய நாட்டின் மொத்த சுகாதாரச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் கோடி நிதியில் பொதுநலத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி வெறும் ஒரு சதவீதம் மட்டுமே. இது மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மிகக் குறைவு.

உடல்நலம் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டால்தான் உடல்நலக் கல்வி பற்றிய விளக்கங்களை முற்றிலுமாக புரிந்து கொள்ள முடியும். “உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருப்பவர்களே முழுமையான உடல் நலம் உடையவர்கள்” என்றும் “நல்ல உடற்கூறு, நல்ல மன நலம், நல்ல ஆரோக்கியம் உள்ள சமூக நலனும் பெற்றவர்களே, நல்ல உடல் நலம் மிக்கவர்” என்றும் உலகச் சுகாதார நிறுவனம் விளக்குகின்றது.

இந்த விளக்கம் மூன்று அடிப்படைக் கூறுகளை வலியுறுத்துகிறது:

முதலாவதாக உடல்ரீதியான நலம் என்பது நோய் இல்லாத உடல் நிலை, நல்ல ஊட்டச்சத்து, உடற்பயிற்சி ஆகும்.

இரண்டாவதாக, மனரீதியான நலத்தைக் குறிக்கும். இது மன அழுத்தமின்மை, நேரான சிந்தனை, சமநிலையான உணர்வுநிலை ஆகியவற்றைக் குறிக்கும்.

மூன்றாவதாக சமூக நலத்தைக் குறிக்கிறது. இது நல்ல உறவுகள், சமூகப் பங்களிப்பு, பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றைப் பேசுகிறது.

உடல்நலக் கல்விக்குப் பல மாதிரிகள் இருந்தாலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இரண்டு மாதிரிகளை நாம் பார்க்க இருக்கிறோம். தனிமனித மற்றும் சமூக மாற்றத்திற்கான உடல்நலத்தின் மீது நம்பிக்கை கொண்ட மாதிரி (Health Belief Model) மற்றும் சமூகக் கூட்டு கற்றல் மாதிரிகள் மூலமாக (Social Learning Theory) விரிவாக ஆராய்வோம். அவசரக் காலங்களில் ரிஸ்க் கம்யூனிகேஷனின் அவசியத்தையும் விளக்க இருக்கிறோம்.

Health Belief Model (HBM) – தனிமனித மனநிலை ஆய்வு என்றால் என்ன?

HBM 1950-களில் அமெரிக்கப் பொதுச் சுகாதார சேவை அமைப்பின்  உளவியலாளர்களான இர்வின் ரோசென்ஸ்டாக், கோட்ஃபிரே ஹோக்பாம், ஸ்டீபன் கெக்லர் மற்றும் ஹோவர்ட் லெவந்தால் (Irwin M. Rosenstock, Godfrey M. Hochbaum, S. Stephen Kegels, and Howard Leventhal) ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இது ஒரு நபர் ஏன் ஓர் ஆரோக்கியமான செயலைத் தேர்வு செய்கிறார் அல்லது தவிர்க்கிறார் என்பதை ஆறு படிநிலைகளில் விளக்குகிறது.

இந்த மாதிரி முதன்முதலில்,  காசநோய்க்கான எக்ஸ்-ரே பரிசோதனைகளில் மக்கள் ஏன் பங்கேற்கத் தவறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உருவாக்கப்பட்டது. பின்னர், இது பல்வேறு உடல்நல நடத்தைகளை விளக்குவதற்கும், தடுப்புச் சிகிச்சைத் திட்டங்களை வடிவமைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.

HBM மாதிரியின் ஆறு படிநிலைகள்

இதில் முதல் படி ஒருவருக்கு பாதிப்பு இருக்குமோ என்ற உணர்வு வருவது ஆகும். இந்த எண்ணம் எப்படி எழலாம்? எடுத்துக்காட்டாக, “எனக்கு இந்த நோய் வர வாய்ப்புள்ளதா?” என்ற அச்சம் தோன்றும் போது வரலாம். வீட்டில் வேறு யாருக்காவது மார்ப்கப்புற்றுநோய் வந்திருந்தால் தனக்கும் வருமோ என அநாவசியமாகக் கவலைப்படும் போது வரலாம்.

இரண்டாவது நிலை, இன்னும் சற்று அதிகமாக தீவிரமாக உணரப்பட்டதைக்  குறிக்கும். இந்நிலையில் ஒருவர்,

“ஒரு வேளை தனக்குப் புற்றுநோய் வந்தால் விளைவு அதன் எவ்வளவு மோசமாக இருக்கும்?” என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்குவார். அதோடு அதைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும் ஆரம்பிப்பார்.

இந்த இரண்டு நிலைகளையும் கடந்த பின்னால், இந்தப் பரிசோதனை செய்து கொள்வதால் வரக்கூடிய நன்மைகள் என்னவாக இருக்கும், நான் செய்து கொண்டால்தான் என்ன என அறிந்து கொள்ளல் மூன்றாம் நிலையாகும். எனக்கு என்ன இலாபம், என்ன பலன் என்று பட்டியிலிடுவது இந்த நிலையாகும்

அப்படிப் பட்டியலிடுகிறபோது இன்னொரு பக்கம், எதுவெல்லாம் தடைகளாக இருக்குமோ அதெல்லாமும் நினைக்கத் தோன்றும். அதாவது, தடைகளாகத் தோன்றுபவை அனைத்தும் வரிசைகட்டி வரத் தொடங்கும். இந்த பரிசோதனை அதிகமாக வலிக்குமோ, செலவாகுமோ, செய்துக்கொள்ளத்தான் வேண்டுமா போன்ற கேள்விகள் வரும்.

பலன் ஒரு பக்கம், தடைகள் மறூபக்கம் என அலசி ஆராய்ந்த பின், செயலுக்கான தூண்டுதல் கிடைக்குமல்லவா? இதுதான் ஐந்தாம் நிலையான (Cues to Action) நிலை. என்ன என்ன கிரியா ஊக்கிகள் இந்த நிலையை அடையத் தூண்டுகின்றன என்பது ஒவ்வொருவருக்கும் தனித்துவமானவை.

ஒரு தோழியின் அனுபவத்தைக் கேட்பது அல்லது விளம்பரத்தைப் பார்ப்பது போன்றவை இந்தப் பரிசோதனைக்குச் செல்லத் தூண்டும் கிரியா ஊக்கிகளாக இருக்கும்.

கடைசியான நிலை, “என்னால் இதைச் செய்ய முடியும்” என்ற நம்பிக்கை. இது சுய திறன் அல்லது தன்னம்பிக்கை ஆகும். இந்த வலியை என்னால் தாங்கிக்கொள்ள இயலும், இதைவிட அதிக வலியைத் தாங்கி இருக்கிறேன் போன்ற சமாதான முறைகள் அடங்கியது.

மேமோகிராம் செய்யத் தயங்கும் ஒரு பெண்மணி, வலிக்கும் என்ற பயத்தில் இருக்கிறார். ஆனால், அதே சோதனையைச் செய்துகொண்ட ஒரு தோழி, “வலி குறைவுதான், ஆனால் செய்துகொண்டால் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வு அதிகம்” என்று கூறும்போது (Cue to Action), அந்தப் பெண்மணியின் தயக்கம் நீங்கி அவரைப் பரிசோதனைக்குச் சம்மதிக்க வைப்பது உடல்நலப் பணியாளர்களின் பணிகளில் ஒன்று.

முறையான HBM அடிப்படையிலான ஆலோசனைகள் வழங்கப்பட்ட இடங்களில், தடுப்புப் பரிசோதனை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 40% வரை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உடல்நலக் கல்வியில் அதிகம் பிரபலமான இன்னொரு மாதிரி சமூகக் கூட்டு மாற்றம் ஆகும்.

ஆல்பர்ட் பாண்டுரா என்பவரால்  முன்வைக்கப்பட்ட இந்த மாதிரி, மனிதர்கள் தனித்து இயங்குவதில்லை, சமூகத்தைப் பார்த்து தங்கள் பழக்கங்களை மாற்றிக்கொள்கிறார்கள் என்பதைக் கூறுகிறது.

சமூகக் கூட்டு கற்றல் (Social learning Theory) மாதிரியின் முக்கியக் கூறுகள்

ஒரு குழுவின் பழக்கங்களைப் பார்த்து தன்னுடைய பழக்கத்தை நேர்வழிப்படுத்த ஒருவர் முயலலாம் என்கிறது இந்த மாதிரி. இது கவனித்தல், தக்கவைத்தல், திரும்பச் செய்தல் அல்லது மறு உற்பத்தி செய்தல் மற்றும் மற்றவரை ஊக்கப்படுத்துதல் என நான்கு படிநிலைகளைக் கொண்டது.

முதல் நிலையான கவனித்தல் அடுத்தவர் செய்யும் செயலைக் கூர்ந்து கவனித்தலைக் குறிக்கும்.  எடுத்துக்காட்டாக, ஒரு விளையாட்டுக் குழுவினர் காலையில் ஓடுவதை மற்றவர்கள் கூர்ந்து கவனித்தல். அது அந்த நேரத்தில் நடக்கும் நிகழ்வாகவோ எப்போதோ நடந்த ஒன்றாகவோ இருக்கலாம். ஆனால், எப்படி ஓடுகிறார்கள் என்பது முதல் எங்கே ஓடுகிறார்கள் என்பது வரை எல்லாத் தகவலையும் கவனிக்க வேண்டும்.

இரண்டாம் நிலையான தக்கவைத்தலில், அவ்வாறு கவனித்த செயலின் நன்மைகளை மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டும். அந்தச் செயலால் கிடைக்கும் பலன்களை, உற்சாகத்தை மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும், தனக்கான பலன்களைக் குறித்துக்கொள்வதும் இந்த நிலையில் அடங்கும்

இதற்குப் பிறகு அந்தச் செயலைத் தாங்களும் அதே போல செய்து பார்ப்பது. இதை மறு உற்பத்தி என்று சொல்லலாம். கவனித்த செயலைத் தங்களாலும் செய்ய முடியுமா என்று நினைப்பதும், செய்து பார்ப்பதும் இதில் அடங்கும்.

இதற்கு அடுத்த நிலை, அவ்வாறு செய்து முடிக்கும் போது கிடைக்கும் ஊக்கம் மற்றும் அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி. கூட்டாகச் செய்யும்போது கிடைக்கும் பாராட்டு அல்லது மகிழ்ச்சி இந்த நிலையைச் சேரும். ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் ஆதரவு ஆகியனவும் அதில் அடங்கும்.

ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் கருத்தடைச் சாதனங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டபோது, ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. ஆனால், அங்கிருக்கும் மாணவர் தலைவர்களும் சக நண்பர்களும் இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசி, அதைப் பயன்படுத்தத் தொடங்கியபோது (Modeling), மற்ற மாணவர்களும் தயக்கமின்றிப் பின்பற்றத் தொடங்கினர். இதேபோல், “Community Gyms” அமைப்புகள் கூட்டாக உடற்பயிற்சி செய்யும் ஆர்வத்தை 60% மக்களிடையே அதிகப்படுத்துகின்றன.

இதைப் போல பல விஷயங்களைக் கவனிக்கலாம். புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவது தொடங்கி, உடற்பயிற்சி செய்வது வரைக் கூட்டாக செய்யும் போது நன்மைகள் அதிகம்.

இவற்றைத் தவிர இந்த  மாதிரிகளைக் கொஞ்சம் மாற்றியமைத்த வேறு சில வடிவங்களும் உள்ளன.

உடல் நலக் கல்வியின் மற்றுமொரு முக்கியமான கண்ணி அவசரக் கால ரிஸ்க் கம்யூனிகேஷன்.

நெருக்கடிக் காலங்களில் தகவல்களைத் தருவது ஒரு கலை. மக்கள் பயத்தில் இருக்கும்போது அறிவுப்பூர்வமான செய்திகளை விட, உணர்வுப்பூர்வமான மற்றும் நம்பிக்கையானத் தகவலே பலன் தரும். அதே நேரத்தில் பிழையான கருத்துகளைச் சொல்லக் கூடாது.

செப்டம்பர் 11 தாக்குதலின் போது நியூயார்க் மேயர் ரூடி ஜூலியானி ஆற்றிய உரைகள் ‘Crisis Communication’-க்கு மிகச்சிறந்த உதாரணம். அவர் “பாதிப்புகள் அதிகமாக இருக்கும், ஆனால் நாம் மீண்டு வருவோம்” என்று உண்மையை நேர்மையாகவும், அனுதாபத்தோடும் பகிர்ந்தார். இது மக்களிடையே இருந்த பெரும் பீதியைக் கட்டுப்படுத்தியது.

உலகளவில் கோவிட் தடுப்பூசிகளை விரைவாகச் செலுத்த, அந்தந்த நாட்டுத் தலைவர்கள் மக்களிடம் நேரடியாக உரையாடினர். வதந்திகளை முறியடிக்க அறிவியல் தரவுகளை எளிமையாக வழங்கினர். குறிப்பாக, “தடுப்பூசி உங்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும்” என்ற மனிதாபிமான அணுகுமுறை பலன் தந்தது.

அதே நேரம் டிரம்ப் (Donald Trump) சொன்ன ‘க்ளோராக்ஸ் குடிப்பது நன்மை பயக்கும்’ என்ற தவறான தகவல் நொடிப்பொழுதில் மக்களிடம் சென்று சேர்ந்ததும் நினைவிருக்கலாம். இது போன்ற தவறான தகவல்கள் மக்களிடம் சென்று சேர்வதைத் தவிர்க்க அதிக கவனமும் துல்லியமும் முக்கியமும்.

உடல் நலத்தில் நம்பிக்கை கொண்ட மாதிரி தனிமனிதப் பயத்தைப் போக்க உதவும். குறுகியக் கால மாற்றங்களுக்குச் சிறந்தது.  வறுமை போன்ற சமூக மற்றும் பொருளாதாரத் தடைகளைக் கணக்கில் கொள்வதில்லை. புற்றுநோய் தடுப்புப் பரிசோதனைகள்) போன்றவற்றை மக்களிடையே கொண்டு சேர்க்க வல்லது.

சமூகக் கூட்டுக் கற்றல்: ஒரு சமூகத்தையே மாற்றும் வல்லமை கொண்டது. நீண்ட கால மாற்றத்தைத் தரும். ஒரு மாற்றத்தைத் தொடங்க அதிக நேரமும், பெரும் சமூக முயற்சியும் தேவைப்படும். புகைப்பிடித்தல், போதைப் பொருள் பயன்பாடு போன்ற பழக்கங்களைக் குறைக்கவும், தடுக்கவும் இந்த மாதிரி பயன்படும். இதன் பலன் உடனடியாகத் தெரியாவிடினும், நீண்ட காலப் பலன்களையும் சமூக மாற்றங்களையும் ஏற்படுத்த வல்லது.

21ஆம் நூற்றாண்டில், டிஜிட்டல் தொழில்நுட்பம் உடல்நலக் கல்வியை மக்களிடையே மிக விரைவாகவும், மிக எளிதாகவும் சேர்க்க வழி செய்திருக்கிறது.

இந்தியாவில் திறன்பேசிகளைப் பயன்படுத்துபவர்கள் மிக அதிகம். எனவே ‘டிஜிட்டல் இந்தியா’ முயற்சியில் உடல்நலக் கல்விக்கான விழிப்புணர்வுக்காக பலச் செயலிகளை இந்திய அரசே வெளியிட்டுள்ளது.

‘ஆரோக்கியா சேது’ என்ற செயலி கோவிட் தொற்று நோய்க் காலத்தில் பல எச்சரிக்கைகளை அறிவிக்க பயன்பட்டது. மருத்துவமனைகள் குறித்த  விவரங்கள் கொடுக்கப்பட்டன. 40 கோடிக்கும் மேலாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி இது.

mHealth (Mobile Health) திட்டங்கள், கில்கரி (Kilkari) என்ற திட்டத்தின் மூலம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களுக்கு கருவுறுதல் முதல் குழந்தையின் முதல் வருடம் வரை ஆரோக்கியம் குறித்த செய்திகளைத் தொலைபேசி மூலம் இலவசமாக பரப்பியது. இதனால் 13 கோடிப் பெண்கள் பயனடைந்தனர். நான்கில் மூன்று பேர் என்ற கணக்கில்  இளம் தாய்மார்கள், அதிக சிக்கல்கள் இல்லாமல் தாய்ப்பால் ஊட்டும் வழிகளைக் கண்டு தெளிந்தார்கள். சின்ன சின்ன பிரச்சினைகளுக்கும் எளிதாக செவிலிகளை அணுகும் வழிகளையும் தெரிந்து கொண்டார்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை எவ்வாறு நிறுத்துவது என்பதற்கான ஆலோசனைகளும் வழிமுறைகளும் அதற்கான பரப்புரைகளும் அனுப்பப்பட்டன. 

செய்யறிவு (AI) துணை கொண்டு நோய் கண்டறிதல், மருந்து நினைவூட்டல், மன நலம் ஆகியவை குறித்த விழிப்புணர்வுச் செய்திகள் அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் Wysa என்கிற மன நலம் சார்ந்த AI chatbotக்கு 50 லட்சம் பயனர்கள் உள்ளனர்.

அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் கூட டிஜிட்டல் பிளவு மிகப் பெரிய சிக்கலாக இருக்கிறது. இந்தியாவில் இன்னும் மோசமாக உணரப்படுகிறது. கிராமப்புற இந்தியாவில் வெறும் மூன்றில் ஒருவருக்கு  மட்டுமே இணையத் தொடர்பு அல்லது அணுகக்கூடிய வசதி இருக்கிறது. அநேகமாக மூன்றில் இரண்டு  பெண்கள் திறன்பேசியைப் பயன்படுத்துவதில்லை. முதியோர்களுக்கு திறன்பேசியையோ, தொழில்நுட்பங்களையோ பயன்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன.

குரல்-அடிப்படை இடைமுகங்கள் (voice-based interfaces), எளிமையான பயனர் அனுபவங்கள் போன்றவையே இதற்குத் தீர்வுகளாக இருக்க முடியும்.

இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி. வேறொரு பிரச்சினையும் உள்ளது. அது கலாசார பிரச்சினை. பல்வேறு கலாசார பின்னணிக் கொண்டவர்களுக்கு உடல்நலக் கல்வியை எப்படி வழங்குவது என்ற கேள்வி எழுகிறது?

பல்வேறு கலாச்சாரப் பின்னணிகள் கொண்ட நாடுகளில் ஒரே அணுகுமுறை எல்லோருக்கும் பொருந்தாது. கலாசார உணர்திறன் முக்கியம். மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் நம்பிக்கையை பெறுவது முக்கியம். இந்திய, இஸ்லாமிய மத பெண்கள் பெண் மருத்துவர்களை விரும்புவார்கள். இந்தியக் குடும்பங்களில் உடல்நல முடிவுகள் கூட்டு முடிவுகளாக எடுக்கப்படும். கணவனோ அல்லது மனைவியோ மற்றவரின் உடல்நலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள முற்படுவார்கள்.

சில மதங்களில் இரத்தம் ஏற்ற அனுமதி மறுக்கப்படும்.

தாய்மொழியில் எளிய வார்த்தைகளில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் விழிப்புணர்வுக் கல்வி இருத்தல் அவசியம்.

இந்தியா, அமெரிக்கா போலப் பலமொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடுகளில் விழிப்புணர்வுத் தகவல்கள் பல மொழிகளில் இருத்தல் அவசியமாகிறது. இதற்காகவே அமெரிக்காவில் குறிப்பிட்டச் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு அந்தச் சமூகத்தில் நல்ல தொடர்புடையவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடையே பணியாற்ற பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதற்காக அமெரிக்காவில் சில வருடங்கள் முன்பு சமூக உடல் நலப் பணியாளர்கள் தொழில் கல்வி தோற்றுவிக்கப்பட்டது.

நடைமுறையில் நோயைக் குணப்படுத்துவதைவிட நோயைத்தடுப்பதே சிறந்தது.

தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவு, சிகிச்சைக்கு ஆகும் செலவை விட பத்து மடங்கு குறைவாகும். உலகளவில் நோயின் சுமையை குறைக்கும். நோயின் சுமை குறைந்தால் அது அந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்.

சிறுவயதிலேயே நல்ல பழக்கங்களைக் கற்றுத்தருதல் வேண்டும்.

’ஓடி விளையாடு பாப்பா-நீ

ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்று சொன்னால் மட்டும் போதாது. உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும்.

நல்ல மனநலனுக்கும் வழிவகை செய்ய வேண்டும். நல்ல சத்துள்ள உணவும், ஊட்டச்சத்தும் வழங்க வழிவகை செய்தல் வேண்டும்.

பெண்குழந்தைகளுக்கு உரிய வயதில் மாதவிலக்குப் பற்றியச் சுகாதார விழிப்புணர்வைக் கற்றுத் தருதலும் அவசியம். சானிடரி நாப்கின், சுத்தமான கழிப்பறை வசதிகள் போன்றவற்றைத் தர ஏற்பாடு செய்தல் அவசியம். உடல் தூய்மை பற்றிய விழிப்புணர்வும் உடல்நலக் கல்வியில் சொல்லித் தரவேண்டும்.

அமெரிக்காவில் பின் தங்கிய பகுதிகளுக்கும் கிராமப்புறப் பகுதிகளுக்கும் நடமாடும் மருத்துவமனைகள் சென்று பரிசோதிப்பது உண்டு. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டப் பகுதிக்கு செல்லும் என ஓர் அட்டவணை உண்டு. தமிழ்நாட்டிலும் மருத்துவர் மோகன் தலைமையில், நடமாடும் கிளினிக்குகள் வழியாக கிராமங்களுக்குச் சென்று  நீரிழிவு நோய்க்கான பரிசோதனையையும் சிகிச்சையையும்  மேற்கொள்கிறார்கள். அது போல மற்ற நோய்களுக்கும் நடமாடும் கிளினிக்குகள் மூலமாக பரிசோதனைகள் செய்யப்பட்டால் அல்லது நோய்க்கான விழிப்புணர்வு தரப்பட்டால் நலமாக இருக்கும்.

உடல்நலக் கல்வி என்பது குறுகியச் சுவர்களைத் தாண்டி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். உடல்நல நம்பிக்கை மாதிரி மூலம் தனிமனிதத் தயக்கத்தை நீக்குவதும், சமூகக் கூட்டு கற்றல்  மூலம் சமூகத்தை ஒருங்கமைப்பதும், பேரிடர் காலங்களில் தக்க தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் பேரிடர்களைச் சமாளிப்பதும் ஒரு ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கும்.

டிஜிட்டல் தொழில்நுட்பம், பன்முகக் கலாச்சார அணுகுமுறைகள், சமூக நீதி, குழந்தைப் பருவத்தில் தொடங்கும் கல்வி – இவை அனைத்தும் இணைந்து செயல்படும்போது, “அனைவருக்கும் உடல்நலம்” என்ற இலக்கை அடைய முடியும்.

அறிவு சுதந்திரமாகப் பகிரப்படும்போதுதான் அச்சமற்றச் சமூகம் உருவாகும். உடல்நலக் கல்வி என்பது வெறும் நோய் தடுப்பு மட்டுமன்று. அது ஒரு முழுமையான, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்கும் அடித்தளம்.

https://www.ncbi.nlm.nih.gov/books/NBK606120

Health Education healthy Behavior – Karen Glanz; Barbara Rimer; France Marcus Lewis 

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC3139552

https://hbr.org/2002/12/crisis-communication-lessons-from-911

பொது நலம்

பொதுநலக் கொள்கைகள்- 101 கூட்டு முயற்சியும் பொது நலமும்

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.