நள சரித்திரம்

This entry is part 1 of 8 in the series நள சரித்திரம்

முதல் காண்டம் 

நளனுடைய குணங்களை விவரிக்கிறது.  சிறந்த வீரன் எதிரி அரசர்களை வீழ்த்துவான்  என்று வீரத்தின் வர்ணனை. அடுத்து உடலழகின் வர்ணனை.  பூர்ண சந்திரன் அவனுக்கு அடிமையாக இருக்க கூட தகுதியுடையவன் இல்லை என்பது போன்ற வர்ணனைகள்.  தேவ லோக பெண்களே மயங்குவர் எனும் பொழுது மனித உலகில் கேட்பானேன்.   அதன் பின் தமயந்தியை வர்ணிக்கிறார்.  அவள் நளணை கண்ணால் காணும் முன்பே மனதால் விரும்புகிறாள். நிஷத என்ற நளனுடைய அரச அதிகாரிகளும், மற்றவர்களும் வந்துஅவனைப் பற்றி விவரித்ததைக் கேட்டே அவள் மனதில் கற்பனை வளருகிறது.  நேரில் காணாமலே  அவன் உருவம் அவள் கனவில் வருகிறது.  நம்பவும் முடியாமல்   அதை உறுதி செய்து கொள்ள வேறு வழியும் இல்லாமல் தவிக்கிறாள். தன் மனதில் தோன்றிய உருவத்தை சுவரில் வண்ண சித்திரமாக வரைகிறாள்.  தோழிகளுடன் அந்த சித்திரத்தைக் கண்டு களிக்கிறாள். அதே சமயம் நள மகா ராஜாவும்  அதே போன்ற ஒரு மன உளைச்சலை அடைகிறான். மனதில் உருவான ஒரு பெண்ணுருவம், யார் என்று தெரியாமல் தவிக்கிறான். இரவும் பகலும் இந்த எண்ணம் துரத்த தெய்வங்களை வேண்டுகிறான். ப்ரும்மாவிடமே விண்ணப்பிகிறான்.  அவன் படும் அவஸ்தையைக் கண்டு சந்திரமா- சந்திரனின் ஒளி வழி காட்டுவது  போல உடன் வர தன் ராஜ்யத்தின் ஒரு கோடியில் இருந்த உபவனத்துக்கு வருகிறான்.  வழி நடையில் அழகிய மலர்கள் நிறைந்த காடுகள், அடர்ந்த மரங்கள் நிறைந்த வனப் பிரதேசம் இதன் இடையில் அவன் குதிரை செல்கிறதாக வர்ணிக்கிறார்.  கேதக – தாழம்பூ வை சுற்றிலும் இருந்த முள்ளை கோபிப்பதாக வர்ணிக்கிறார் கவி. அதன் அழகை எட்ட முடியாமல் தடுக்கிறாய் என்று முள் நிறைந்த தாழையின் மேல் மூடியிருக்கும் மடலை கோபிக்கிறான்.   இது தான் மன்மதன் இரு உயிர்களின் உள்ளத்தில் அன்பைக் கிளப்பி விட்டு நெருங்க முடியாமல் தடுக்கும் உக்தி போலும் என்று அங்கலாய்க்கிறான்.  காற்று வீசி இளம் துளிர்களையும் மொட்டுக்களையும் அசைப்பதும், சம்பக புஷ்பங்கள் மலருவதும், பலாச, பாடல மலர்கள் பல வண்ணங்களில் தெரிவதும் அவன் கவனத்தை ஈர்க்கிறது.  நீங்கள் அனைவரும் காமனின் பணியாளர்கள், இந்த மரங்களே எனக்கு அணுக்கமானவர்கள்  என்று மரங்கள் பழம் நிறைந்து வணங்கி இருப்பதை சொல்வதாக கவியின் வர்ணனை.  அதற்காக பூமிக்கு நன்றி செலுத்துகிறான். கிளிகள் அவன் புகழை பாடுவது போல மற்ற சமயங்களில் நினைப்பதும், குகூ என்ற சிட்டுக் குருவிகள் பாடுவதாக நினத்த தும், மயில்கள் அதைக் கேட்டு ஆடுவதும் தன்னை மகிழ்விக்கவே என்று நினைத்ததும், அவன் மன நிலைக்கு ஏற்கவில்லை.  விதர்ப தேசத்து கன்யா வைத் தவிர என் மனதில் மகிழ்ச்சி வர இவை எதுவும் பயனில்லை என்பது போல இருந்தான்.  (78-106)

இதன் பின் விரிவாக அந்த கவனமாக  நிர்மாணிக்கப் பட்ட ஏரி- வெகுதூரம் பர்ந்திருந்த நீர் நிலையை வர்ணிக்கிறார்.  அரசன் கண்ணில் ஒரு பொன்னிற அன்னம் தென் பட்டது. இயற்கைக்கு மாறான  தோற்றம் என்பதால் அரசன் நளன் அதைக் கூர்ந்து கவனித்தான். அதுவரை தன் இனத்து பெண் பறவைகளோடு இருந்த அந்த பொன்னிற அன்னம் ஏனோ பிரிந்து தனியாக வந்தது.  தன்னருகில் வருவதைப் பார்த்த நளன் மெள்ள அடி மேல் அடி வைத்து அதன் அருகில் சென்று, அது அறியும் முன்  பிடித்து கைகளில் வைத்து மேலும் விவரமாக பார்க்கும் முன் அந்த பறவை கெஞ்சுவது போல ஓலமிட்டது. தன் மனைவி மக்களை நினைத்து புலம்பியதா, தன் மரணம் நிச்சயம் என்று எண்ணுகிறதா, அரசன் தன் செயலுக்கு வருந்தினான். அதை திரும்பவும் நீரில் விட்டு விட்டான். 

இரண்டாம் காண்டம்

சற்று பொறுத்து அந்த பொன் வாத்து அரசனிடமே திரும்பி வந்தது.  தன்னை விடுவித்த அரசனின் பெருந்தன்மையை பாராட்டியது. அரசன், வேட்டையாடுவது தவறில்லை.  தன்னை விட எளிய பிறவிகளை கொல்வது பாபம் தான், ஒரு மீன் தன் இனத்தாரையே விழுங்கலாம், பறவைகள் தான் கூடு கட்டும் இடத்தை தேர்ந்து எடுக்கும் சமயம் அந்த மரத்தை அழிக்கும் கறையான் போன்ற பிறவிகளை அழிக்கும்.  தன் முட்டைகளின் நலன் கருதி செய்வது அதுவும் தவறில்லை.  புல்லைத் தின்னும் மான்  கள், புல் தரையை வீணாக்குவதாக யாரும் நினைப்பதில்லை. அதனால் அரசே! என்னை உயிருடன் வாழ விட்ட உங்கள் கருணை அதற்கு பிரதி உபகாரம் செய்ய விரும்புகிறேன். நான் அறிந்த ஒரு பெண் பற்றிச் சொல்கிறேன். விதர்ப தேசத்து இளவரசி தமயந்தி என்பவள். பின் விவரமாக அவளைப் பற்றி தெரிவித்தது.  முடிவில்  அவள் இன்னும் குமரியே. அவள் தந்தை சரியான வரனைத் தேடிக் கொண்டிருக்கிறார். தாங்களே அவளுக்கு மணாளனாக வேண்டும் என் விருப்பம் ‘என்றது.  ஆனால் அது எளிதல்ல.  தேவர்களும் அவளை அடைய போட்டி போடுகின்றனர்.  அவர்கள் அனைவரையும் விட  அரசே! நீங்களே அவளுக்கு ஏற்றவர்.  நீங்கள் சம்மதித்தால் நான் தூது போகிறேன். தமயந்தியிடம் உங்களைப் பற்றிச் சொல்லி அவள் மனதில் உங்களைப் பற்றி நல்லெண்ணமும், அன்பும் வர பேசுகிறேன்.  உங்கள் சித்திரம் அவள் மனதில் ஆழமாக வேறூன்றி மற்ற எவரையும், தேவர்களானால் என்ன, துச்சமாக நிராகரித்து விடும் படி சொல்கிறேன். 

நளன் திகைத்தான். பறவை பேசுவது கண்டு நம்ப முடியாமல் இருந்தது ஒரு பக்கம். தன் மனதை அறிந்தது போல தமயந்தி பற்றி விவரித்தது, அதற்கும் மேல் தானே தூது போவதாக வாக்களிக்கிறது.  சம்மதித்தான். யாரிடமும் இது வரை சொல்லாமல் மனதை தகித்துக் கொண்டிருந்த விஷயம், யார் மூலமோ அவள் மனதையும் அறிந்து கொண்டால் நல்லது தானே.  இதோ போகிறேன் என்று அந்த பொன் வாத்து  நீரில் அசைந்து செல்வதை பார்த்துக் கொண்டிருந்தான். விதர்ப தேசத்து தலை நகரம் இருக்கும் திசையில் தான் செல்கிறது என்பதைக் குறித்துக் கொண்டான்.  (40-72)

அந்த பறவை விதர்ப தேசத்தின் ராஜதானியை எட்டியது. (இதன் பின் அந்த நகர வர்ணனை)  அழகான வீடுகள், சுவர்கத்தையே தோற்கடிக்கச் செய்யும் அலங்காரங்கள்.  முழு நிலவு அதைக் கண்டு தன் வளரும், தேயும் கலைகளையே விட்டு விட்டு என்றும் முழு நிலவாக ஒளியை பொழிவது போல இருக்குமாம்.  அழகிய உப வனங்களும் நீர் நிலைகளுமாக மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைக் குறித்ததாம்.  வாணிகம் செழித்து இருந்தது.  ஆங்காங்கு கோதுமை தானியத்தை அரைக்கும் இயந்திரங்களின் ஓசை. பலவிதமான பொருட்களை தங்கள் கடைகளில் வைத்திருப்போர் விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தனர்.  ஆடம்பரமான பொருட்கள், உயர் மணிகள்,  சங்குகள், கர்பூரப் பொடிகள், கோரோசனை, கஸ்தூரி என்ற வாசனைப் பொருட்கள்.  இவைகளுடன் குங்குமப் பூ போன்ற அரிய பொருட்கள் விற்பவர்களும் அதிக எண்ணிக்கையில் இருந்தனராம்.  வெண் பட்டு வஸ்திரங்கள், பதுமைகளை சுற்றி வைத்து  விளம்பரப் படுத்தப் பட்டிருந்தன.  விலையைப் பற்றி கவலைப் படாமல் அதை வாங்க மாளிகைகளிலிருந்து பெண்கள் வந்த வண்ணமிருந்தனராம். (73-105) 

அந்த பொன் வாத்து தேடிச் சென்று தமயந்தியின் மாளிகையின் ஒரு பகுதியில் இருந்த உபவனத்தில் சகிகளுடன் இருந்தவளைக் கண்டு கொண்டு விட்டது. அவள் கண்ணில் படவே, தன் பொன்னிற இறக்கைகளை வீசிக் கொண்டு அவளெதிரில் வானத்தில் பறந்தது.  

மூன்றாம் காண்டம்

அதிசயமான அதன் பொன் வண்ணத்தால் கவரப் பட்டு தமயந்தியும் அதைத் தொடர்ந்து அந்த நீர் நிலையின் கரையோரமாகவே வந்தாள்.  ஒரு நிலையில் அதைப் பிடிக்க முயன்றாள்.  சகிகள் எச்சரித்தனர்.  அந்த பறவையும் போக்கு காட்டி அருகில் வருவதும் தள்ளிச் செல்வதுமாக அவளை அந்த சகிகளின் பார்வை படாத இடம்வரை அழைத்துச் சென்றது.  சாதகமான மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்கு வந்ததும் மனிதக் குரலில் அவளிடம் பேசலாயிற்று.  தானாகவே அவள் கைகளுக்குள் பிடிபட்டது.   தன்னை அறிமுகம் செய்து கொண்டது.’ நான் படைப்புக் கடவுளான ப்ரும்மாவின் வாகனம்,   தற்சமயம் தன்னிச்சையாக உலகைச் சுற்றிப் பார்க்க வந்துள்ளேன்.  பல இடங்களை கண்டு களித்தேன். யதேச்சையாக நளன் என்ற அரசனை சந்தித்தேன். ஆகா, அரசன் என்றால் அவர் தான்’ என்று பரவசமாக சொல்வது போல நளனை வர்ணித்து பேசியதைக் கேட்ட தமயந்தி  வியப்பின் எல்லைக்கே சென்று விட்டாள். (1-40)

‘நான் அந்த அரசனின் மாளிகையில் உள்ளும் வெளியும் என் விருப்பம் போல சஞ்சரிப்பேன். யாரும் தடுக்க மாட்டார்கள்.  அங்குள்ளோர் நம்பிக்கைக்கு பாத்திரம் ஆனவன் ஆனதால் அவர்கள் உள் மனத்து ஆசைகளைக் கூட என்னிடம் சொல்வார்கள்.  அவர்கள் யார் யாரை விரும்புகிறார்கள் என்பது அனைத்தும் எனக்குத் தெரியும்.  இளவரசி தமயந்தி! நளனுக்கு பெண் கொடுக்க  பல பெற்றோர்கள் வருகிறார்கள். ஆனால்,  எனக்குத் தோன்றுகிறது உங்களைத் தவிர வேறு யாருமே அவருக்கு ஏற்ற துணைவி ஆக முடியாது.   தேவலோக வாசிகளுக்கு இணையான அரசனின் பெருந்தன்மைக்கும்., செல்வத்துக்கும் உரியவளாக ஆக நீங்கள் தான் ஏற்றவர்.  படைத்தவன் என்ன நினைக்கிறார் என்று ஊகிக்கவா முடியும்? நல்ல காலம் தாங்களும் இன்னமும் கன்னிகையே.  உங்கள் தந்தையும் ஸ்வயம் வரம் ஏற்பாடு செய்யப் போகிறார் என்பதை அறிவேன்.  நிலவை இரவோடு இணைத்து வைத்தவர், தேவி பார்வதியை சிவ பெருமானுடன் இணைத்து வைத்தவர்,  உங்கள் இருவரையும் விடுவாரா என்ன?  அவரருளால் நீங்கள் இருவரும் இணைய வேண்டும் என்று அவர் நினைத்தால் யார் தடுப்பார்கள்?  என்னை விடுவியுங்கள். உங்கள்  பொன்னான நேரத்தை நிறையவே எடுத்துக் கொண்டு விட்டேன். என்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமானால் சொல்லுங்கள். மகிழ்ச்சியுடன் செய்வேன். (40-52). 

தமயந்தி சொன்னாள். பறவையே, உன் இயல்பாக சென்று கொண்டிருந்தாய். நான் பிடித்து நிறுத்தி விட்டேன். இதோ விட்டேன், பறந்து செல்.  ‘ என்று சொன்னவள். தனக்குள் யோசித்தாள். நிலவை கைகளால் பிடிக்க ஆசைப் படுவது போல என் ஆசை –  அது நிறைவேறுமா?  தனக்கே தெளிவாக தெரியாத பொழுது என்ன சொல்வாள். (53-59)

அவள் மனதை படித்தது போல அந்த அன்னப் பறவை பேசியது.  தேவி! எதுவுமே உலகில் அடைய முடியாதது என்று இல்லை.   இலங்கை நகரையே விரும்புகிறாயா, அது கூட சுலபமாக உனக்கு கிடைத்து விடும் தான்.  பெரும் கடலின் நடுவில் உள்ளதே என்று யோசிக்கிறாயா, அதுவும் உனதாகும்.  தமயந்தி சிரித்தாள், பறவையே! நீர் வாழ் பறவை, உனக்கு கடல் நடுவில் இலங்கை உயர்வாகத் தெரிகிறது. எனக்கு அதன் மேல் எந்த ஈர்ப்பும் இல்லை.  வேறு எதுவுமே தேவை என்று நான் நினைக்கவும் இல்லை. 

அன்னப் பறவை விடுவதாக இல்லை.  இரு பொருள் படும் படியான சொற்களால் பேசி,  அவள் வாயிலிருந்தே நளனை விரும்புவதை சொல்ல  வைத்து விட்டது.  மேலும் குடைந்து இதமாக பேசி  வேறு யாரையாவது விரும்பினால் அதையும் சொல். நளன் உன் நினைவாகவே இருக்கிறான் என்று தான் தூது வந்த விஷயத்தைச் சொல்லாமல், அவளுக்காக நளனிடம் போவது போலவும், பயனற்ற தூது என்றால் ஏன் முயற்சி செய்ய வேண்டும் என்பதால் தான் தூண்டி தூண்டி கேட்பதாகவும் பேசியது.  அந்த அணுகு முறை பலனளித்தது.  

தன் தயக்கத்தையும், வெட்கத்தையும் கடந்து வந்து, தன் விருப்பத்தை தெரிவித்தாள். தானும் இது வரை கேள்விப் பட்டதில் இருந்து நளனை விரும்புவதைச் சொன்னாள்.  ஒத்த மனமுடைய இரு உயிர்கள் இணவது தான் இயல்பு. பறவை இனம் வேறு இனத்தை விரும்புமா?  தன் தந்தை மறுக்க மாட்டார். ஆயினும் வேறு காரணத்தால், விதியின் விளையாட்டால் வேறு விதமாக அவரே நினைத்தால் நான் உயிரை விடவும் தயங்க மாட்டேன் என்றாள்.  அன்னப்பறவையே! நளனிடம் என்னைப் பற்றி உயர்வாகச் சொல்.  அரசன் அவன், சரியான நேரம் பார்த்து பேசு.  தாமதிக்காதே, விரைவாகச் செல்’ என்றாள்.

சொன்னபின் தானே அதிசயித்தாள். யார் இது? எதற்காக சொல்லவேண்டும்? ஏன் இந்த பறவையிடம் இது வரை யாரிடமும் சொல்லாத என் அந்தரங்க உணர்வை வெளிப்படுத்தினேன்.  அந்த பொல்லாத பறவையும் தன் தூது வெற்றி பெற்றதாக இறுமாந்து சிரிப்பது போல பட்டது.  தேவி! இனி நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை. நான் போய் தெரிவிக்கிறேன். இதற்குப் பின் இளம் உள்ளங்களை சேர்த்து வைக்கும் மன்மதன் தன் வேலையை செய்ய ஆரம்பித்து விடுவான்.  வாழ்த்துக்கள்.  உங்கள் மனதுக்கு இனியவனை அடைவதில் இனி எந்த தடையும் இருக்காது.   உங்களைப்  பற்றி கேட்டதில் இருந்தே அரசன் நளனும் அதே நினைவாகவே இருக்கிறான்.  மகிழ்ச்சியுடன்  நன்மைகளை எதிர் நோக்கி இருப்பாயாக. இருவரும் இரவும் நிலவும் போல நீடுழி வாழ்வீர்கள்.  (97-117)

வேகமாக பறந்து வந்து அந்த அன்னப் பறவை, அரசன்  நளனை சந்தித்து தான் தூது சென்ற விவரங்களைச் சொல்லியது. (நீண்ட வர்ணனை – இருவரும் பிரிவை பொறுக்க மாட்டாமல் தவிக்கிறார்கள்) 

தமயந்தி தன் தோழியிடம் சொல்வதாக அடுத்த பகுதி.  கவியின் கற்பனை – ஒரு பாதி தமயந்தி, மறு பாதியை தோழி சொல்வதாக அமைந்த காவிய நயம் மிகுந்த பாடல்களாக அமைந்த பகுதி. (47-99)

சற்று நேரத்திற்குப் பின் தமயந்தி களைத்து விட்தையறிந்து, தோழிகள் அவளை ஓய்வெடுக்கச் செய்தனர். இதமான தாமரை இலைகள், மற்றும் சில குளுமையான பொருட்களைக் கொண்டு களைப்பை நீக்கினர். இந்த ஆரவாரத்தைக் கேட்டு தமயந்தியின் தந்தை அங்கு வந்தார். மந்திரிகளும் வைத்யர்களும் கூட வந்தனர்.  நளத என்ற ஒரு பச்சிலை. அதை முகரச் செய்தனர்.  மந்திரிகள் மெள்ள சிரித்தபடி இருக்க, வைத்யர், இது போதாது அரசன் நளனே வேண்டும் என்று பரிகாசமாக சொன்னார்.  இந்த வயது சிறுமிகளை மன்மதன் தன் மலர் கணைகளால் அடிப்பான் என்பது இயல்பானது தானே என்றார்.  விதர்ப தேச அரசனிடம் தாமதிக்காமல் அவளுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யச் சொன்னர்கள். 

நான்காம் காண்டம்

இங்கு சுயம்வரத்துக்கான – மணமகள் தன் விருப்பப் படி மணாளனை தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பு அளிப்பது-  ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன, அதே சமயம் எதேச்சையாக நாரதர் என்ற ரிஷி, தன்னுடன் பர்வதன் என்பவனையும் அழைத்துக் கொண்டு தேவ லோகம் சுற்றுலா சென்றார்.  அவரை இந்திரன் முதலானோர் வரவேற்றனர். அவர்கள்  தனக்கு இந்த அளவு, பணிவு, மரியாதை, அளவுக்கு மீறிய  உபசாரம் – இதன் பின்னால் ஏதோ உள் எண்ணம்  இருப்பதாக நினைத்தார். தேவேந்திரன் பேச்சோடு பேச்சாக, இப்பொழுதெல்லாம் பூலோக அரசர்கள் தேவ லோகம் வருவதும் இல்லை, அதனால் என் உபசாரங்களை ஏற்பதும் இல்லை.  பெரும் போரில் வென்று வீர சுவர்கம் அடைவதும் குறைந்து விட்டது என்றான்.  நாரதர் சொன்னார்: பூலோக வாசிகள் நல்ல அறிவு பெற்று விட்டனர்.  போர் செய்து ரத்தம் பெருகச் செய்வதில் உடன்பாடில்லை. அதுவும் தவிர, தமயந்தி சுயம்வரம் நடக்கப் போகிறதே,  அதற்கு தங்களை தயார் செய்து கொள்கிறார்கள் போலும் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.  அவள் கண் முன்னால் நல்ல தோற்றம் தரும் விதமாக தங்கள் நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்டிருக்கின்றனர் போலும், என்றார்.   தேவேந்திரனிடம், நீ விரும்பினால் போர் செய்.  பூலோகத்தில் போர் இன்றி பல வீரர்கள் தோள்கள் தினவெடுக்க இருக்கிறார்கள், அவர்கள் உத்சாகமாக உனக்கு உதவுவார்கள்.   

இந்திரனின் கவனம் தமயந்தி சுயம்வரத்தில் இருந்ததால், இதை கவனியாதது போல, அவசரமாக நாரதரை வழி அனுப்பினான்.  தானும் பங்கேற்க தீர்மானித்து, கிளம்பினால், சகாக்கள் பரிகாசம் செய்தனர்.  உன்னிடம் இல்லாததா? பூலோக பெண் எதற்கு? என்றனர்.  அவர்களிடம் தன் கோபத்தைக் காட்டினான். ஆனாலும் உடன் வரும் அக்னி, வருணன், யமன் என்ற மூவரும் தொடர்ந்து வர அனைவருமாக கிளம்பினர்.   போகும் வழியில் அரசன் நளனை சந்தித்தனர்.   தமயந்தியின் சுயம் வரத்தில் பங்கு கொள்ள அவள் இருந்த இடமான குண்டின புரம் செல்லத் தயாராக இருந்தவன் அவன்.   நளனை வாழ்த்தி விட்டு, இந்த நால்வரும் எங்களுக்கு ஒரு உதவி செய்வாயா என்று கேட்டனர்.  ஆகா, தேவர்களே நம்மிடம் யாசிக்கிறார்கள் என்ற பெருமிதமே மேலோங்க, நளன் தன் இயல்பான கருணையும், வள்ளல் தன்மையும், உலகெங்கும் மட்டுமல்ல, தேவ லோகத்திலும் பரவி விட்டது போலும் என்று நினைத்து உடனே சம்மதித்தான். அந்த வினாடியே, அவன் மனம் சுக்கு நூறாக உடையும் படி அவர்களின் வேண்டு கோள் இருந்தது. ‘எங்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் படி நீ தமயந்தியிடம் சொல்ல வேண்டும்’ என்றனர்.  முதலில் நளன் தைரியமாக மறுத்தான்.  செய்வதாக ஒத்துக் கொண்டது உண்மையே. ஆனால் நான் விரும்பும் ஒரு பெண்ணிடம், அவளும் என்னை விரும்புகிறாள் என்று தெரிந்த பின், உங்கள் கோரிக்கை எப்படி நியாயமாக ஆகும்.  நான் மட்டும் சம்பந்தப் பட்டிருந்தால் ஒருவேளை உங்களுக்கு தூதாக சென்றிருப்பேன்.  இந்திரன் விடுவதாக இல்லை. இதனால் உனக்கு எந்த அளவு நன்மை என்று பார். உலகளவில் உன் மதிப்பு உயரும். பலி செய்ததை நினைத்துப் பார். வாக்கை காப்பாற்ற உயிரையே கொடுத்தான். இந்த விந்திய மலையைப் பார். நாள் தோறும் வளர்ந்து கொண்டிருந்தது. ரிஷி அகஸ்தியருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இன்றளவும் வளராமல் தன்னை அடக்கிக் கொண்டிருக்கிறது. சொன்ன சொல்லை காப்பாற்றுவது தான் நல்லவர்களுக்கு அழகு, நீ ஏன் மறுக்கிறாய்?  மனித  வாழ்வே நிரந்தரமல்ல.  மாறுதல் தான் உலக இயல்பு.  உன் இயல்பான குணத்தை ஏன் மாற்றிக் கொள்ளுகிறாய்.  உன் புகழ் வளரும். தமயந்தி என்ன  அதை விட உயர்வானவளா?  நிலவின் ஒளி போன்றது புகழ். நிழல் போன்ற நிலையற்ற பெண்ணின்  காரணமாக உன் குலப் பெருமையை விடுவாயா?  

 அவன் உள்ளம் நிறைந்த காதலுக்கு இது சவாலே.  எதிராளிகள் பலம் தெரிந்தும் மறுத்தால், நாட்டிற்கும், தனக்கும், தமயந்திக்குமே கெடுதல் சம்பவிக்கும் என்பதை நினைத்து மனம் ஒப்பாமலே, நளன் இந்த சதிக்கு சம்மதித்தான்.  இந்திரன் மகிழ்ந்து ஒரு வரம் கொடுத்தான். தேவையான சமயத்தில் நீ மற்றவர் கண்களுக்குப் புலனாகாமல் உன் செயலை நிறைவேற்றிக் கொள்ளும் சக்தியை அளிக்கிறேன் என்றான்.

ஐந்தாம் காண்டம்

குண்டினபுரம். வெகு ஆவலாக தான் காண விரும்பிய தமயந்தி வாழும் ஊர்.  நளன் அந்த ஊரே வெறிச்சென்று இருப்பதாக உணர்ந்தான்.  தான் எப்படி சம்மதித்தோம் என்று மனம் புழுங்கினான். தேவர்களானால் என்ன, சொன்ன சொல் ஒன்றுதானே.  அதை மீறுவதும் தவறே. சரி, ஏற்றுக் கொண்ட தூது செய்து தான் ஆக வேண்டும். கண்ணுக்கு புலனாகாமல் இருக்கும் சக்தி உதவியது. ஊருக்குள் யாருமறியாமல் செல்ல முடிந்தது.  அதனால் அரண்மனைக்குள், அந்த:புரம் உள்ள இடம் பெண்களின் இருப்பிடம் வரை சென்றான். கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும் ஒரு சிலர் அவன் இருப்பை உணர்ந்து கொண்டது போல இருந்தது.   பூ பந்து விளையாடும் சமயம் தங்கள் மேல் பந்து விழுந்தால் உணருவது போல.  சுலபமாக தமயந்தியை அடையாளம் கண்டு கொண்டான்.  அவர்கள் இடையில் தன் இயல்பான அழகால், இளவரசி என்ற கம்பீரத்தால் தனித்து தெரிந்தாள்.    அங்கு ஒரு கிளிக்கு அவன் பெயரைச் ஸூட்டி மற்ற பெண்கள் அவளை பரிகசித்துக் கொண்டிருந்தனர்.  சுவர்களில் தன் உருவம் வரைந்து இருப்பதைக் கண்டான்.  எங்கும் தோழிகள் தமயந்தியை அன்புடன், அரவணத்துச் செல்பவர்களாக, அவள் நளனை அடைய வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் சுற்றி வந்தனர்.   

இதற்குள், தேவ லோகத்து நால்வரும் தங்கள் தங்கள் கோரிக்கைகளை தமயந்தியிடம் சொல்ல பெண்களையும் தூது அனுப்பி இருந்தனர்.  அந்த பெண்கள் வந்து தங்கள் தலைவர்களின் பெருமையை எடுத்துச் சொல்லி தமயந்தியிடம் வேண்டினர். நளனும் இந்திரனைத் தவிர மற்ற மூவரையும் அவள் மறுத்த விதத்தையும், அவர்கள் முகம் வாடியதையும் கண்டு ரசித்தான். ஆனால் இந்திரனின் தூது வந்த பொழுது அருகில் இருந்த பெண்கள் சற்று சலனம் அடைந்தனர் போல இருந்தது. இந்திராணி பதவி – மூவுலகிற்கும் தலைவியாக இருப்பதை விட உயர்ந்தது வேறு உண்டா என்று அந்த தூது வந்த பெண் அவர்களை குழப்பினாள்.  இந்திரனே மோகிக்கும் பேறு பெற்றவள் நீ, என்று தமயந்தியை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தினாள்.  தேவலோகத்து பெருமைகளை வர்ணித்தாள். நந்தன வனத்தில் உலாவலாம் என்றாள். 

தமயந்தி மெள்ளச் சிரித்தாள். இந்திரனின் பெருமையை அறிவேன்.  சொல்லில் அடங்குமா அவன் பெருமை?  நான் கண்டிப்பாக இந்திரனுக்கு சேவை செய்வேன்.  ஆனால் அவன் பூலோகத்திலேயே இந்திரனுக்கு மேலாக நற்குணங்கள் நிறைந்தவன்.  இந்திரனே மனித அரசனாக பிறந்திருக்கிறான் என்று சொல்வது கூட பொருத்தமில்லை.  ஏனெனில் என் மனம் அவனை விரும்புகிறது.  இந்திரனிடம் தேவ லோக பெருமைகள் இருக்கலாம். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், இந்த பாரத தேசம் புண்ய பூமி.  உலகிலேயே சிறந்த நாடு இது. இங்கு மகிழ்ச்சி உண்டு. கடமைகள் உண்டு. . இங்கு உயர்ந்த நெறிகளுடன் நடமாடும் தெய்வமாக பலர் உண்டு. மொத்தத்தில் இங்கு உயிரோட்டம் உண்டு, அது தான் எனக்கு பிடித்தது.  மனித இனத்தில் பிறந்தவள் நான் எனக்கு சம மான மனிதனைத் தான் மணாளனாக ஏற்பேன்.  மனிதனை விதி ஆட்டிப் படைக்கும் – அதனால் என்ன – அவரவர் விருப்பம், தனி மனிதன்  பெறுவது வினைப் பயன் என்றாலும், யாரையும் வெறுக்கவும், விரும்பவும் இங்குள்ள சுதந்திரம் வேறு எங்கும் கிடையாது.  இந்திரனுடைய அளவில்லா செல்வங்கள் அவனுடனேயே இருக்கட்டும்.  இங்கு வந்து மாற்றான் மனைவி ஆகப் போகிறவளை கலைக்க நினைக்கிறாயே, அதற்காக உன்னை ஒருவன்  அனுப்பினானே, அவன் கயவனே.   எனக்கு வேண்டாம்.
 

தூது வந்தவள் வாயடைத்து நின்றாள். ஆனால் நளன் மனதில் புதிய கவலை ஸூழ்ந்தது. உள் மனம் மகிழ்ச்சியில் துள்ளினாலும் தான் ஏற்றுக் கொண்டு விட்ட பணியை எப்படி செய்வோம் என்று மறுபக்கம் கவலை.

ஆறாம் காண்டம்

இந்த காண்டத்தில்  தோழிகளின் மத்தியில் உல்லாசமாக இருந்த தமயந்தியின் அழகை வர்ணித்து கவி மிக அழகிய காவ்ய ரசனையை கொடுத்திருக்கிறார்.  நளன் அவர்கள் அறியாமல் அங்கு இருந்து தனக்குள் வர்ணிப்பதாக அமைந்த பகுதி. தலையிலிருந்து கால் வரையான அங்க வர்ணனை.  அதற்கு மேலும் பொறுக்க மாட்டாதவனாக தமயந்தி தோழிகளுடன் இருந்த இடத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.

ஏழாம் காண்டம்

அந்த தோழிகள் திடுமென அந்த:புரத்தில் புதிய ஆண்மகனைக் கண்டு திகைத்தனர்.  தமயந்திக்கும் புதியவனே ஆனதால், அவள் தன் நிலை தடுமாறாமல் வந்தவரை உபசரித்தாள். அதிதி என்று வந்தால் உபசரிப்பது போலவே, வரவேற்றாள்.  அழகான பொருள் பொதிந்த சொற்களால் பெயர் என்ன? எந்த ஊர்? யார் நீங்கள் என்பது போன்ற பொதுவான கேள்விகளைக் கேட்டு அமர ஆசனம் கொடுத்தாள்.  பதில் சொல்லும் முன் அவளும் அவன் உடலழகை பாராட்டினாள்.   கவிதைகள் அல்லது பாடல் போன்ற வரிகள்.(32-44)  இன்று நிலவு பூமியில் இறங்கி வந்து விட்டதா?  இன்று  கலைகளும் இன்றி மாதம் ஒருநாள் மறைந்து இருக்கும் தினமோ? அதனால் வானத்தில் இடமில்லை என்று இறங்கி வந்து இவருடைய முகத்தில் தங்கி விட்டதோ.  அல்லது மன்மதனே தானோ, சிவ பெருமான் எரித்து விட்டாரே அதனால் இப்படி மாறு வேடம் பூண்டு அலைகிறானோ?   எதோ ஒரு தேவலோக வாசி,  தன்னிடம் உள்ள செல்வம் இந்த குண்டின புர அரசின் செல்வத்துக்கு ஈடாகுமா என்று சோதிக்க வந்துள்ளானோ? 

நளன் இதற்குள், தோழிகள் அளித்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அமைதியாக தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டான்.  தான் அந்த தேவலோக வாசிகளின் தூதுவனாக வந்து இருப்பதையும், அவர்கள் நால்வரும் தமயந்தியிடம் கொண்ட ஈடுபாட்டையும் வர்ணித்தான். ஒவ்வொருவரும் அவளை தானே அடைய விரும்புவதால் தமயந்தியே அவர்களில் ஒருவரை ஏற்றுக் கொள்ளும் படி பரிந்துரைக்க என்னை அனுப்பினர். இந்திரன் படும் பாட்டை சொன்னான்.  அக்னி தானே இதுவரை மற்றவர்களை தகித்துக் கொண்டிருந்தவன், தற்சமயம் அந்த வேதனையை மன்மதனின் தாக்குதலால் அனுபவிக்கிறான்.  யமனும், வருணனும் படும் பாட்டை விவரிக்க இயலாது.  தமயந்தியின் சுயம்வரம் ஏற்பாடு ஆனதில் இருந்து அவர்கள் நால்வரும் பூமியில் இறங்கி யாரை தூது அனுப்புவது என்று தேடி இந்த தூதுவனை அனுப்பி உள்ளனர். தமயந்தியைப் போலவே கவிதை நயம் மிகுந்த சொற்களால் விவரித்தான்.  தமயந்தி தேவலோகத்தின் அரசியாக வந்து இருக்க விரும்பாவிடில் இந்த பூமியையே தேவலோகம் ஆக்கி விடவும் தயாராக இருப்பதாகச் சொன்னார்கள்.  அதனால், தேவி! இவர்களில் ஒருவரை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்திரனோ, அக்னியோ, யமனோ, வருணனோ, உங்கள் விருப்பம். 

எட்டாம் காண்டம்

தமயந்தி ஏதோ கதை கேட்பது போல கேட்டபடி இருந்தாள். எந்த விதமான எதிர் வினையும் காட்டாமல் அமைதியாக இருந்தாள். அது சரி, தூத வந்தவனின் பெயர் என்ன? யார் என்று கேள் என்று தோழியிடம் சொன்னாள். அவசியம் இல்லை தான். ஆனாலும் வந்தவர் யார் என்று தெரிந்து கொள்ள ஆவல். அந்த கேள்வியைத் தவிர்த்தவனாக நளன் சொன்னான் சாதாரணமாக நற்குலத்தவர், தங்களைத்தானே பெயர் சொல்லி அறிமுகப் படுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள் .  (1-13)

தமயந்தி வெடித்தாள். அப்படியானால் நான் மட்டும் ஏன் பதில் சொல்ல வேண்டும்? யாரோ வழிப்போக்கர் வந்து ஏதோ கேட்டால் எனக்கு என்ன அவசியம் பதில் சொல்ல.  அதே கௌரவம் மிக்க குலத்தில் பிறந்தவள் தான் நானும். என் பெயரையும், ஊரையும் அறிமுகம் இல்லாத அன்னியனிடம்  நானும் சொல்ல மாட்டேன். நளன் அதைக் கேட்டும் புன் முறுவலோடு, தேவி! அந்த தேவலோக வாசிகளுக்கு பதில் சொல்லுங்கள் என்றான்.  தமயந்தியோ அதே ஆத்திரத்துடன் பதில் அளித்தாள், தேவலோக வாசிகளாம், மனித குலத்தில் பிறந்தவள் நான்,  பெண் மான், யானைகளின் தலைவனை விரும்பியதாக கேட்டதுண்டா? 

தோழிகள் மூலமாகவே பேசினாள். எல்லாம் அறிந்த தேவர்கள் என்றால் இதையும் அறிந்து கொண்டிருக்க வேண்டுமே.  தமயந்தி என்ற இந்த பெண் அரசன் நளனை விரும்புகிறாள். அவனைத் தவிர யாரையும் மனதால் கூட நினைக்க மாட்டாள் என்று சொல்லு.  நளன் மறுத்தால் தன் உயிரையே விடுவாள், இந்த தேகமே அவளுக்குத் தேவையில்லை என்று சொல்லு. தேவர்களுக்கு எதற்கு மானிடப் பெண்.

நளன் அவள் தன்னிடம் நேரடியாக பேசுவதை தவிர்த்து விட்டதில் வருத்தம் அடைந்தான்.  திரும்பவும் தன் பக்கத்து நியாயத்தை சொல்லவே முனைந்தான்.  ஒட்டகம் ருசியான இலைகளை விட்டு கசப்பான, முள் நிரம்பிய வன்னி மரத்து இலைகளை விரும்பி உண்கிறது.  அதற்கு கரும்பு கூட பிடிப்பதில்லை   அது போல அவரவர்  உணர்வுகள், விருப்பங்கள்.  உன் தோழியிடம் சொல், தேகத்தை விட்டாலும் தேவலோகத்தில் இந்திரன் இருப்பான்.  நெருப்பில் விழுந்தால் அக்னி தேவன் மகிழ்வான். நீரில் குதித்தால் வருணன் காத்திருப்பான்.  தன் குரலை குழைவாக வைத்துக் கொண்டு தமயந்தியிடம், தேவி! அந்த தேவ லோக வாசிகள் உங்களை வெகுவாக நேசிக்கிறார்கள் என்று சொல்ல ஆரம்பித்தான். (38-59)

தமயந்தி பெருமூச்சு விட்டாள். நல்ல தூதன் நீங்கள். யமனுக்கு தூதாக வந்திருக்கிறீர்கள்.  அதற்குள் ஒரு தோழி இடை மறித்து, ஐயா! என்ன அவசரம் பொறுங்கள்.  நாளைக் காலையில் சுயம்வரம். என் தோழியை கலவரப் படுத்த வேண்டாம். இதோ பாருங்கள், என் தோழி விரும்பும் ஆண் மகன் என்று அவர்கள் வரைந்து வைத்திருந்த நளனின் சித்திரங்களைக் காட்டினாள். உங்களுக்கும் இவருடைய சாயல் இருக்கிறது.  நேரில் பார்த்ததில்லை. ஒரு அன்னம் வந்து சொல்லியது. அதிலிருந்து இவளுக்கு அதே நினைவு தான். தயவு செய்து உங்கள் தூது வாக்கியங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். அதைக் கேட்க இவளுக்கு விருப்பமும் இல்லை நேரமும் இல்லை. அவள் கண்ணீர் விடும்படி என்ன பேச்சு இது? 

நளனுக்கு சுளீரென்று ஒரு கணம் தானே அவளுக்கு ம்ருத்யு- யமனாகி விடுவேனோ என்ற பயம் வந்தது.  இருந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட பொறுப்பு – அந்த தோழியிடம் சொன்னான். அவர்கள் பலசாலிகள். இந்த எளியவனை மட்டும் நம்பி இருக்க மாட்டார்கள்.  விவாக சமயத்தில் அக்னி சாட்சியாக என்று தானே சொல்லுவோம். அவர்கள் எந்த விதத்திலும் இடையூறு செய்யலாம். 

இதைக் கேட்டு தமயந்தி தவித்தாள். அழுகையின் ஊடே தன் உள்ளம் நளனிடம் ஈடுபட்டு விட்டதைச் சொன்னாள்.   தூது வந்தவரே, நீங்களே போய் நளனிடம் தமயந்தி இறந்து விட்ட செய்தியையும் சொல்லுங்கள். தென்றலே, என் அஸ்தியை நளனுடைய ராஜ தானியில் வீசுங்கள். விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள். 

அவள் அழுகை நளனை நிலை குலையச் செய்து விட்டது.  தன் நிலை மறந்தான். வந்த காரியத்தையும் மறந்தான். இது வரை காத்த அமைதியும்,  தன்னடக்கமும் காற்றில் பறக்க எழுந்து நின்றான்.  தோழியிடம், யாருக்காக அழுகிறாள். நளன் தான் எதிரில் இருக்கிறானே, அவள் அறியவில்லையா?   அதற்கு மேல் சொல்லாமல் தன்னை அடக்கிக் கொண்டான். அனைத்தும் கெடும்.  தேவர்களுக்கு மட்டுமல்ல, அந்த:புரத்தில் இருப்பதும் வெளியில் தெரிந்தால் அவமானம்,  உள்ளதை உள்லபடி அவர்களிடம் சொல்லி முதலில் என்னை விடுவித்துக் கொள்கிறேன்  (101-126) 

திடுமென அந்த பொன் வாத்து அங்கு வந்து தோன்றியது.  தேவலோக வாசிகளை எதிர்த்து நிற்க ஏன் பயப்படுகிறாய்.  என்ன ஆனாலும் தமயந்தியை கை விடாதே.  பின் தமயந்தியை நேராக பார்த்து நளன் சொன்னான், தேவி!  கவனமாக பார்த்து உங்கள் மனம் கவர்ந்தவனையே தேர்ந்தெடுங்கள்.  வருவது வரட்டும். இந்த தேவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கினால், ஆயுள் முழுவதும் வருந்தும் படி நேரிடும்.   இந்த அளவு உங்கள் நளனும் உங்களை விரும்பினால் அவனையும் தன் உயிர் தியாகம் செய்யாமல் தடுக்கும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது என்பதை மறக்காதீர்கள். (127-135)

தமயந்தியிடம் பெரும் மாற்றம் தெரிந்தது.   இது வரை தன்னம்பிக்கை உள்ளவளாக பேசிக் கொண்டிருந்தவள்,  தூது வந்தவன் என்பதால் அவனிடம் எடுத்து எறிந்து பேசியவள், பேச வாய் எழாமல் நின்றாள். அவள் தோழி வந்தாள். அவளிடம் சொல்வது போல தமயந்தி சொன்னாள், நளனின் சித்திரத்தை பார்த்தபடி அந்த தேவலோக வாசிகளோடு நளனும் வரட்டும்  என்றாள். 

ஒன்பதாம் காண்டம்

சுயம்வர ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.  இந்த காண்டம் அந்த ஏற்பாடுகளை விவரிக்கிறது.  பல அரச குமாரர்கள் வந்து சேர்ந்தனர்.   ஒவ்வொருவரும் தங்களுக்கும் எந்த வகையினாலும் அவளைத் தானே பெற கனவு கண்டபடி இருந்தனர்.  அவளாக சம்மதித்தால் சரி, இல்லையேன்றால் பலவந்தமாக தூக்கிச் செல்வேன் என்று கூட எண்ணியவர்கள் இருந்தனர்.  மற்றும் பலர்  நடப்பதை கண்டு ரசிக்கவே வந்தவர்கள் போல அமர்ந்திருந்தனர்.   குண்டின புரத்தை சுற்றிப் பார்த்தனர் சிலர்.  வேடிக்கையாக தங்களுக்குள் பேசிக் கொள்வதாக கவி வர்ணிக்கிறார். ஏன் தேவர்கள் வரவில்லை?  ப்ரும்மா வயதானவர். குபேரனுக்கு அழகில்லை.  என்றவாறு பேசி சிரித்தனர்.  நால்வரும், இந்திரன், அக்னி, வருணன், யமன் வந்து சேர்ந்தனர். நால்வரும் தாங்களும் நளன் போன்ற உருவையே கொண்டிருந்தனர்.  சிரம சாத்தியமான காரியம் தான்.  அவர்கள் இயல்பான தோற்றத்தை மறைக்க  கடும் பிரயாசை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். கண்ணடியில் பார்த்து ஏமாந்து, கண்ணடியை வீசி எறிந்தனராம். 

வந்தவர்கள் அனைஅவரும் நன்கு வரவேற்கப் பட்டனர். உபசரிக்கப் பட்டனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்தவர்கள், பல மொழிகள் பேசுபவர்கள், தங்களுக்குள் பேசிக்கொள்ள சிரமப் பட்டனர். அனைவருக்கும் பொதுவான மொழியாக வட மொழியான சமஸ்கிருதமே இருந்தது.  அவரவர் தங்கள் தகுதிக்கு ஏற்ப அமைந்த ஆசனங்களில் அமர்ந்தனர்.   நளனும் வந்தான்.

ஐந்து நளன்கள் – ஒன்று தான் உண்மையான அரசன் நளன், மீதி நால்வரும் நளனைப் போன்றே வேடமிட்டுக் கொண்டு வந்த தேவலோக வாசிகள், இந்திரன் முதலானோர்.   நளனின் தோற்றத்திலும், உலகத்தாரிடம் அவனுக்கு இருந்த நன் மதிப்பையும் கண்டும் கேட்டும்  பொறாமை கொண்ட சில அரசர்கள் சற்று மன ஆறுதல் அடைந்தனர். பலர் இருந்தால் அவன் மதிப்பு குறையும் தானே.  அவர்களிடமே சிலர் விசாரித்தனர். யார் நீங்கள், வசந்தனா? அஸ்வினி குமாரர்களா, புரூரவஸ் என்று அரசனைப் பற்றி கேட்டிருக்கிறோம், அவரா என்றனர்.  இந்திரனா என்ற கேள்வியே இல்லை, அதுவே மனத்தாங்கல் அளிக்க, இவர்களில் யாருமில்லை என்று மட்டும் பதில் சொன்னார்கள். (40-45)

பிரகாசமான பகல் பொழுது. சுயம்வரம் ஆரம்பித்தது.  வால்மீகியோ, சுக்ராசாரியரோ இருந்திருந்தால் அதை போற்றி பாடியிருப்பார்கள். இங்கு தமயந்தியின் தகப்பனார், பீமன் கவலை கொண்டார். இவ்வளவு பேர் அரசிளங்குமாரர்கள்.  மகளிடம் எப்படி சொல்வது?  பகவானையே வேண்டினார்.   அவர் அனுப்பி கலை வாணி தானே வந்து சேர்ந்தது போல  அவர்களை அறிமுகப் படுத்த ஒருவள் வந்தாள்.    அனைவரும் ஒவ்வொரு தேசத்து அரச பதவியில் இருப்பவர்கள். மரியாதைம் குறையாமல் ஒவ்வொருவரையும் அறிமுகப் படுத்தினாள். இதன் பின் விரிவான செய்திகள், அரசர்கள், அவர்கள் பெருமைகள், கல்வி முதலான செய்திகள். (73-87)

தமயந்தி சபைக்கு வந்தாள். விரிவான வர்ணனை, அவள் அழகு, அலங்காரம் முதலியன. (91-107)

அவளைப் பார்த்த அரச குமார்கள் இடையே ஒரு கலகலப்பு எழுந்தது.  தோன்றியபடி தங்கள் வியப்பை வெளிக் காட்டினர்.   படைத்தவன் தன் திறமைகள் அனைத்தையும் இவளை படைக்கவே செலவழித்து விட்டான் போலும் – முதியவரான ப்ரும்மாவுக்கு இந்த அளவு திறமை உள்ளதா என்ன?  நிலவோ, வசந்தமோ வந்து இறங்கி விட்டனவா? நளன் அருகில் அமர்ந்திருந்த இந்திரன் ஏதோ புகழ்ச்சியாக சொல்ல நினைத்தான். அவன் வாயில் தேவலோகத்து அப்சரஸ்கள், மற்ற பெண்கள் பெயர்களே வந்தன.  ஆனால் உடன் வந்த அறிவிப்பாளரான பெண்மணி நிலைமையை சமாளித்து நகர்ந்து விட்டாள்.  இந்த காண்டம் முழுவதும் அரசர்களின் விவரங்கள். அவர்களுடைய உணர்ச்சி வெளிப்பாடுகளே.   அனைவருமே மிகிழ்ச்சியுடன் அவளை வாழ்த்தினர். ஊர்வசி தான் இறங்கி வந்து விட்டாள் என்றனர்.  

(வளரும்)

நள சரித்திரம்

தமயந்தியின் ஸ்வயம்வரம்

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.