நளனுடைய உபாக்யானம் என்ற பகுதி, மஹா பாரதத்திலிருந்து

This entry is part 3 of 8 in the series நள சரித்திரம்

அர்ஜுனன் இந்திரனிடம் சிறப்பான ஆயுதங்களைப் பெற இந்திர லோகம் சென்றான்.  பீமன் அவரையே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று குற்றம் சாட்டுகிறான். அதன் பின் பீமனும் தன் சக்தியை பெருக்கிக் கொள்ள வெளியேறினான்.  யுதிஷ்டிரர் கவலையுடன் இருந்தார்.  அந்த சமயம் ப்ருஹதஸ்வர் என்ற ரிஷி அவர்களைக் காண வருகிறார்.  அவருக்கான அதிதி சத்காரங்களை – வரவேற்று, ஆசனம் கொடுத்து, குடிக்கவும் உண்ணவும் பொருட்களைக் கொடுத்து பசியாறிய பின், ஓய்வாக இருந்த சமயம் யுதிஷ்டிரர் சொல்கிறார். 

எனக்கு ஏன் இந்த கஷ்டங்கள் வந்தன. அவர்கள் அழைத்தார்கள் என்று தானே ஸூதாட போனேன். எனக்கு முழு விருப்பமும் இல்லை என்பதோடு பயமாக வேறு இருந்தது.  எனக்கு ஸூதாட்டம் பற்றி விவரங்கள் அதிகமாகத் தெரியாது என்பது ஒன்று, அவர்கள் தந்திரமானவர்கள், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிந்தே ஏன் போனேன். விதி தான். பொது இடம் , கூட்டமாக அவர்கள் அடியாட்களும், நண்பர்களும். ராஜ்யத்தை இழந்தேன், நிறுத்த விடவில்லை. சகோதர்களை இழந்தேன். அப்படியும் நிறுத்த விடாமல் என்னைத் தூண்டினார்கள். என்னையே இழந்தேன், அப்படியும் விடவில்லை.  மனைவியை வைக்கச் சொல்லி யார் சொன்னார்களோ, ஏன் நான் அதை ஏற்றுக் கொண்டேன். அவளை வைத்து ஜயித்து ராஜ்யத்தைத் திரும்ப பெறுவோம் என்றான் அந்த துஷ்டன்.  உயிருக்கு உயிரான என் மனைவி, அவளையும் இழந்தேன். ராஜ்யத்துக்குள் நுழையக் கூடாது வனத்தில் அலைந்து திரி என்று விரட்டினார்கள். மரவுரி உடுத்திக் கொண்டு பரம தரித்திரன் போல இங்கு  வசிக்கிறேன். மகரிஷே! ஏன்? ஏன்? எனக்கு இந்த துன்பம் வர வேண்டும் யாருக்கு என்ன கெடுதலைச் செய்தேன் என்று இந்த தண்டனை? என்றவன் ஓவென்று அழுதான்.  

இந்த வனத்தில் இல்லாமையோ,  உடல் வருத்தங்களோ என்னை பாதிக்கவில்லை. அந்த ஸூதாட்ட நாளில் பட்ட அவமானங்கள், சுடு சொற்கள் என்னை வதைக்கின்றன.  அந்த பாரம் என்னால் தாங்க முடியவில்லை. தூக்கம் இல்லை, கண்கள் மூடினாலும் அந்த காட்சிகள் துரத்துகின்றன  ஐயனே! என்ன செய்வேன்.  காண்டீவத்தை கையில் வைத்திருக்கும் அர்ஜுனனும் தற்சமயம் அருகில் இல்லை. என் வாழ்வே பொருளற்றதாகி விட்டது.   ஏன் உயிருடன் இருக்கிறேன்? 

ரிஷி சொன்னார்:  பாண்டவனே! கேள். என்னை விட அதிக துன்பம் அடைந்தவன் வேறு எவரும் இருக்க முடியாது என்றாயே, கேள்.   இதைவிட அதிகமாக பாதிக்கப் பட்ட ஒருவனின் கதையைச் சொல்கிறேன், கேள். 

யுதிஷ்டிரன், அப்படியா? யார் அது? என்று வினவினான். ரிஷி தொடர்ந்தார். 

உன் மற்ற சகோதரர்களும் கேட்கட்டும்.    நிஷதன் என்றொரு ராஜ்யம். அதன் அரசன் நைஷதன், பெயர் நளன்.  நற்குணங்களின் இருப்பிடமாக. நேர்மையே உருவானவனாக இருந்தான். செல்வம் அவனிடம் தானே வந்து சேர்ந்து பெருமை பெற்றது என்பது போல அனைத்து செல்வங்களையும் கொண்டவன்.  தமயந்தி என்ற மனைவி.   அவனை புஷ்கரன் என்ற சகோதரன் ஏமாற்றிவிட்டான். ராஜ்யத்தை இழந்தான். பிரியமான மனவியுடன் காட்டில் வசிக்க வந்தான்.  அவனுக்கும் வீரர்களாக,சகோதரர்கள் இருந்தனர். படை பலம் இருந்தது. விஸ்வாசிகளாக பிரஜைகள் இருந்தனர்.  அவர்கள் ஒருவரும் நெருங்க முடியாமல் விதியால் தனித்து விடப்பட்டான். உனக்காவது உடன் பிறந்தவர்கள், மனைவி  இந்த காட்டிலும் இருக்கிறார்கள்.   அதனால் வருந்தாதே. 

யுதிஷ்டிரர் வினவினார்: ஐயனே!  விவரமாக கேட்க விரும்புகிறேன்.  சிறந்த அரசன், வளமான நாட்டின் தலைவன் என்று சொன்னீர்கள் ஏன் இந்த நிலைக்கு வந்தான்.   

ரிஷி சொன்னார்:  வீர சேனன் என்பவரின் மகன் நளன் என்பவன்.  அழகன், பலசாலி, வீரன்,  திறமையாக ஆட்சி செய்தான். குதிரைகளை பராமரிக்கத் தெரிந்தவன்.   மற்றும் பல கலைகள் அறிந்தவன். தேவர்களுக்கே நெருக்கமானவனாக ஆனான்.  அவன் புகழ் ஆதவனின் ஒளி போல உலகெங்கும் பரவியது.  அரசனாக, அந்தணர்களை ஆதரித்தான்.  வேத சாஸ்திரங்களையும் குறைவறக் கற்றான். ஸுதாட்டமும் ஒரு கலையாகவே எண்ணி கற்றான்.  சிறந்த வீரர்களுடன் பெரிய சேனை அவன் வசம் இருந்ததால்,  தன்னை மீறி எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையும் வந்தது.   நாட்டு மக்கள், ஆண்களும், பெண்களும் அவனிடம் மதிப்பும் அன்பும் உடையவர்களாக இருந்தனர். பெரியவர்கள் ஆசீர்வதித்தனர்.  படை வீரர்கள், சேனைத் தலைவர்கள் அவன் வில் வித்தையில் மயங்கினர்.  அவர்களுக்கு தங்கள் அரசனிடம் பெருமிதம் வளர்ந்தது. எவரும் எந்த குறையும் அவனிடம் காணவில்லை. அவனுக்கு இணையாக பேசப்பட்டவன் தான் விதர்ப தேசத்து அரசன் பீமன், தன் பிரஜைகளை அன்புடன் பரி பாலித்தான், தானும் நல்ல வீரன், நற்குணங்கள் நிறைந்தவன், ஒரே ஒரு குறை சந்ததி இல்லை. மகன் வேண்டும் என்று அவன் வேண்டினான். 

அந்த சமயம் தமணன் என்ற ரிஷி அரசனை சந்திக்க வந்தார்.  தன் மனைவியுடன் அவரை வரவேற்று உபசரித்தான். தங்கள் மகன் இல்லாத குறையை அவரிடம் தெரிவித்தான்.  அவரும் முதலில் மணிகளில்  மாணிக்கம் போன்ற மகளும்,  புகழ் வாய்ந்தவர்களாக விளங்கப் போகும் மூன்று மகன்களையும் பெறுவாய் என்று வரம் அருளினார்.  அவர்களே, தமயந்தி, தம, தன்ட, தமன. இந்த தமன என்பவன் பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்றவனாக ஆனான். 

அரச குமாரர்கள்,  அதற்கேற்ப, வீரமும், நல்ல கல்வி பெற்றவர்களாகவும் வளர்ந்தனர். மகள் தமயந்தி அழகிய பெண்ணாக, அனைவருக்கும் பாசம் மிகுந்த சகோதரியாக, அரசனுக்கு கண்ணின் மணி போலவும் வளர்ந்தாள்.  அவள் வளர வளர, உடன் பணி செய்ய வந்த பெண்களின் எண்ணிக்கையும் கூடியது. போட்டி போட்டுக் கொண்டு அவள் அருகில் அவர்கள் சேவை செய்தனர்.  அவளுக்கான சிறப்பான ஆபரணங்களும் அணிகளும்  நிறைந்தன.  இந்திராணி போலவே இருந்தாள். சீரான உடல் அமைப்பும் அழகும்.  கார் மேகங்களுக்கு இடையில் மின்னல் போல இருந்தாள் என்று வர்ணிக்கிறார்.  திருமகளே வந்து விட்டாளோ என்று மலைக்கும் படியான விசாலமான கண்கள். மூவுலகும் வியக்கும் வண்ணம் வளர்ந்த அவளை அடைய தேவர்களும் போட்டியிட்டனர். 

இது இப்படி இருக்க, கந்தர்ப்பனே -மன்மதனே அவதரித்து  வந்து விட்டது போல நளனும் ஆண்களுள்  கொண்டாடப் பட்டான்.   தமயந்தியிடம் அவள் சேடிகள் , திரும்பத் திரும்ப அந்த அழகனைப் பற்றி பேசினர்.   அதே போல நள மகா ராஜனிடம் தமயந்தியைப் பற்றி அவனுடைய நண்பர்களும், நலம் விரும்பிகளும்  விவரித்தனர்.   இதனால் இருவருக்குமே ஒருவரையொருவர் காணாமலேயே  ஈடுபாடு கொண்டனர்.  இருவரிடமும் இந்த ஈடுபாடு காதலாக பரிணமித்தது.   

ஒரு நாள் இதே எண்ணமாக நளன் தன் அரண்மனை தோட்டத்தில் உலவும் சமயம்  சில பொன் நிற இறக்கைகள் கொண்ட அன்ன பறவைகளைக் கண்டான்.   கண் கவர் வண்ணமும் உல்லாசமாக அவை நீரில் மிதந்து சென்றதும் அரசன் கவனத்தை ஈர்க்க, ஒரு பறவையை இரு கைகளாலும் பிடித்து தூக்கினான்.   அதுவோ அவனிடம் பேசிற்று. ‘ஓ அரசனே! என்னைக் கொன்று விடாதே. நான் உனக்கு ஒரு நல்ல விவரம் சொல்கிறேன், கேள்.   உனக்காக நான் தமயந்தியிடம் தூது போகிறேன்.  அவளிடம் உன்னைப் பற்றி நான் சொல்வதைக் கேட்டு அவள் மற்றொருவரை மனதாலும் நினைக்க மாட்டாள். அந்த அளவு உயர்வாகச் சொல்வேன்’  என்றது. அதை கேட்ட அரசன் திகைத்தான். முதலில் பறவை பேசியதன் ஆச்சர்யமே அடங்கவில்லை, மேலும் தமயந்தியைப் பற்றி சொல்கிறேன் என்றால், அதற்கு எப்படித் தெரியும் அவள் என் மனம் கவர்ந்தவள் என்பது.   எண்ணி முடிக்கும் முன், கைகள் அந்த பறவையை விடுவித்தன.  

அந்த பொன் நிற அன்னமும் விதர்ப தேசம் சென்றது.  தமயந்தியின் கண்ணில் படுவது போல அவள் இருந்த உபவனத்து நீர் நிலையில் சுற்றி வந்தது.    அவள் அருகில் வரவும், மற்ற அன்னப் பறவைகள் பறந்து விட்டன. தனித்து நின்ற இந்த பொன் நிற அன்னத்தை விட்டு விட்டு தோழிகள் மற்ற பறவைகளை பிடிக்கச் சென்றனர். தமயந்தியை போக்கு காட்டி வெகு தூரம் அழைத்துச் சென்ற பின், அன்னம் அவளிடம் பேசியது. 

‘ஓ தமயந்தி! நிஷத ராஜன் நளன் தெரியுமா? அஸ்வினி குமாரர்கள் போன்ற அழகன்.   (ஆண்களின் அழகுக்கு அஸ்வினி குமாரர்களை உதாரணமாகச் சொல்வர்)  அழகிய பெண்ணே,  உன் உடல் அழகுக்குக்கும்,, குணத்துக்கும் அவன் தான் ஏற்ற கணவன் ஆவான்.  உனக்குத் தெரியுமா, நாங்கள் மூவுலகும் சுற்றுபவர்கள். தேவர்கள், கந்தர்வர்கள் என்று பலரைப் பார்த்திருக்கிறோம்.  உன்னைப் போன்ற அரசிளங் குமரிகளில் நீ தனித்து தெரிவது போலவே அவனும் அரச குமாரர்களில் ஓங்கி உயர்ந்து தெரிபவன். ஆற்றலாலும், அறிவாலும், ஆளுமையாலும் சிறந்தவன். 

தமயந்தி கேட்டாள்- நீ அந்த நளனிடமும் பேசுவாயா? 

அன்னப் பறவை திரும்பிச் சென்றது. நளனைச் சந்தித்து  தன் செயல்களை விவரித்து சொல்லியது.

ப்ருஹதஸ்வ என்ற அந்த ரிஷி தொடர்ந்தார்:  பாரதனே! தமயந்தி அன்னப் பறவை தூது வந்ததை நம்பவும் முடியாமல், விடவும் முடியாமல் திணறினாள்.  ஓயாத இந்த எண்ணங்கள் அவள் உத்சாகமாக பணிப் பெண்களிடமும் மற்றவர்களிடமும் பேசுவதை குறைத்து விட்டது.  அவர்களும் என்ன நடந்தது என்று குழம்பினர்.  உணவு இறங்கவில்லை, உறக்கம் கொள்ளவில்லை என்றெல்லாம் வர்ணிக்கிறார்.  உடலும் இளைத்து விட்டதே என்று அவர்கள் அரசன் பீமனிடம் செய்தி சொன்னார்கள்.  ராஜா பீமனும் என்ன காரணமாக இருக்கும் என்று அறிய மகளிடம் வந்தார்.  அவளிடம் பேசிய பின், உலகியல் அறிந்தவர், மனைவியும் அவருமாக பேசி,  இந்த வயது தான் காரணம் என்று சுயம்வரம் ஏற்பாடு செய்தனர். 

தனக்குத் தெரிந்த அனைத்து  தகுதியான ராஜ குமாரர்களுக்கும் செய்தி அனுப்பினார்.  அவர்களும் தங்களுடைய மிகச் சிறந்த ஆடை அலங்காரங்களுடன் வந்து கலந்து கொண்டனர்.  அவர்களுக்கு அரசன் ஏற்பாடு செய்திருந்த விடுதிகளில் தங்கினர்.  

இதற்கிடையில்,, ரிஷிகளுள் சிறந்த நாரதர் தன் சகாவான பர்வதன் என்பவனுடன் உலகைச் சுற்றி வந்தவர்கள், இந்திரனுடைய மாளிகையை அடைந்தனர்.   இந்திரனும் வரவேற்று உபசரித்தான்.  இருவரும் உலக நிலவரங்களைப் பற்றி பேசிக் கொண்டனர்.  இந்திரன் அரசர்களைப் பற்றி விசாரித்தான்.  போர்கள் குறைந்து விட்டதாக அறிகிறேன்.  அனைவரும் நலம் தானே?  

நாரதர் சொன்னார். தற்சமயம் விதர்ப ராஜா பீமனின் மகள் சுயம் வரம் பற்றித் தான் பேச்சு.  அனைத்து ராஜ குமாரர்களும் விதர்ப தேசத்தில் கூடியிருக்கிறார்கள். அரசகுமாரி தமயந்தியின் அழகு பிரசித்தி பெற்றது.  பூவுலகில் அவள் அழகுக்கு ஈடாக மற்றொருவர் இல்லை. அரச குமாரர்கள் அனைவரும் அவளைக் காணவே சுயம்வரத்துக்கு வருகின்றனர்.   அந்த சமயம் இந்திரனைக் காண வந்த லோக பாலர்கள், நாங்களும் அது பற்றி கேள்விப்பட்டோம்.  போவோமா? நாமும் சுயம் வரத்தில் கலந்து கொள்வோம் என்றனர். 

குந்தியின் மகனே! கேள். நளனுக்கும் அழைப்பு வந்தது. அதனால் அவனும் தயாரானான்.  சந்தோஷமாக மனம் நிறைய தமயந்தியிடம் கொண்ட அன்புடன், தன் பரிவாரத்தோடு கிளம்பினான்.  இதை லோக பாலர்கள் கண்டனர். ஓரளவு ஊகித்து விட்டிருந்தனர். அதனால் இந்திரனிடம் நளன்- தமயந்தி பற்றிச் சொன்னார்கள்.  ஒருவருக்கொருவர் சமமான அழகும் அந்தஸ்தும் உள்ளவர்கள்.  அவளும் இவனை விரும்புகிறாள்.  தகுதியான வரன், தகுதியான மணமகளை அடைவான் என்றனர்.  ஆயினும் சுயம்வரத்தைப் பார்க்க விரும்பி இந்திரன் தன் சகாக்கள் அக்னி, வருணன்.,யமன் என்ற மூவருடன் நால்வருமாக பூவுலகம் வந்தனர். முதலில் நிஷத ராஜனை சந்தித்தனர். ‘ஓ நள மகாராஜனே! நீ சத்ய வாதி, சொன்ன சொல்லைக் காப்பவன் என்று அறிவோம். எங்களுக்கு ஒரு உதவி செய்வாயா? என்றனர். 

இதன் பின் மகா பாரதம் பாரத நாட்டின் பல பாகங்களையும் வர்ணிக்கிறது. ஒவ்வொரு பிராந்தியமும், அதன் சிறப்புகளும் சொல்லப் படுகின்றன. 

 நளன் கேட்டான்? யார் நீங்கள்/ என்னிடம் என்ன எதிர் பார்த்து இப்படி கேட்கிறீர்கள்? என்னால் முடிந்த எதுவானாலும் செய்கிறேன் என்றான். 

இந்திரன் தங்கள் நால்வரையும் அறிமுகப் படுத்திக் கொண்டு, நளனிடம் நாங்கள் தமயந்தியை அடைய விரும்புகிறோம். எங்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும்படி அவளிடம் நீ தூது செல்ல வேண்டும் என்றனர். 

நளன் திகைத்தாலும், நானும் அதே காரியமாகத் தான் விதர்ப தேசம் செல்கிறேன்.  நான் தமயந்தியை விரும்புவது போலவே, அவளும் என்னை விரும்புகிறாள். இந்த நிலையில் நான் தூது போவது இயலாத காரியம். வேறு எவரையாவது அனுப்புங்கள் என்று பணிவாகச் சொன்னான். 

அரசனே! நீ செய்வதாக வாக்கு கொடுத்தாயே, அதை மறுத்து பேசுகிறாயே, என்று சற்று கோபத்துடன் சொன்னார்கள். 

அப்படியும் நளன் மறுத்தான். அங்கு என்னை அனைவரும் அறிவர், மாளிகை பலமான காவல்களுடன் பாதுக்கப் பட்டு இருக்கும். அரசன் பீமனும் நல்ல  ஆற்றல் உடையவனே. மகளிடம் உயிராக இருப்பவன். நான் உள் நுழைவதே கூட சாத்யமில்லை என்றான். 

இந்திரன் சொன்னான். அதற்கு நான் வழி செய்கிறேன் என்றான்.  அதன் பின் நளன் மாளிகையின் உள்ளே சென்றான்.  விதர்ப ராஜ குமாரியை தன் சகிகளுடன் இருக்கக் கண்டான்.   அவளைக் கண்டதும் அவன் உள்ளம் பொங்கியது. மனதில் இருந்த காதல் மேலும் அதிகமாகியது.  செதுக்கியது போன்ற  அவள் வடிவழகை, மெல்லிய விரல்களை, சிறுத்த இடையை, மயக்கும் விழிகளை, வானத்து நிலவே இறங்கி வந்தது போன்ற முக பொலிவை திரும்பத் திரும்ப பார்த்து மகிழ்ந்தான்.  

அவனைக் கண்ட அந்த:புரத்து பெண்கள் வியப்பின் எல்லைக்கே சென்று விட்டனர். தங்கள் ஆசனத்தை விட்டு இறங்கி அருகில் வந்து கூர்ந்து நோக்கினர்.   மகிழ்ச்சி  பொங்க, ஆரவாரத்துடன் சுற்றி நின்று வாழ்த்தினர். தங்கள் தலைவியின் மனம் கவர்ந்தவன் என்பதால் மிக உள்ளன்போடு உபசரித்தனர்.  மனதினுள் வியந்தனர், இவன் என்ன கந்தர்வனா, யக்ஷனா, என்று.  ஒருவரும் வாய் விட்டு பேசத் துணியவில்லை. தமயந்தியே வந்தாள். 

‘யார் நீங்கள்? உங்களைப் பார்த்தால் நல்ல பண்புள்ளவராகத் தெரிகிறது.  இந்த உள்ளறை வரை வரத் துணிந்த நீங்கள் யார் என்பதை அறிய விரும்புகிறோம்.   இந்த பகுதி பலமான கட்டுக் காவலுடன் கூடியது எப்படி உள் நுழைந்தீர்கள்? அரசனின் கட்டளையை யாரும் மீறவும் துணிய மாட்டார்களே.   

நளன் சொன்னான். ‘ஓ அழகிய பெண்ணே! என் பெயர் நளன். நான் இங்கு வந்திருப்பது இந்திரன் முதலான நால்வர் அவர்களின் தூதுவனாக.   இந்திரன், அக்னி, வருணன் ,யமன் என்ற நால்வர். அவர்களுள் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவர்களின் வேண்டு கோள்.  அவர்கள் தங்கள் சக்தியால் என்னை யாருமறியாமல் இந்த உள்ளறை வரை வர உதவினர்.   அது தான் காரணம் உங்கள் அரசனின் காவலர்கள் என்னைத் தடுக்காமல் இருந்தனர்.  மெல்லிய  இடையுடைய பெண்ணே! இனிமையாக பேசுகிறாய். அந்த தேவர்களும் அதனால் தான் உன்னை வேண்டுகின்றனர்.  பெண்ணே, அரச குமாரி, அனைத்து செல்வங்களும், அறிவும் குறைவறப் பெற்றவள். மனம் போல செய்வாயாக. 

தமயந்தி சொன்னாள்.  ‘அரசனே! உங்களுக்குத் தெரியும் என் மனதின் நிலை. மனமார உங்களைக் காதலிக்கும் என் காதலுக்கு மதிப்பு கொடுங்கள். எனக்கு ஆணையிடுங்கள்.  வேறு எதை வேண்டுவேன். செல்வமா, பதவியா, சுவர்க லோகமா எதுவும் தேவையில்லையே. உங்கள் அன்பைத் தான் யாசிக்கிறேன்.  அன்னப் பறவை சொல்லி உங்களை அறிந்தேன். அந்த உருவமே என் மனதில் பதிந்து விட்டது.  என்ன காரணம் கொண்டும் மாற மாட்டேன்.  என் தந்தையும் உங்களை மட்டுமே நினைத்து தான் சுயம்வரம் என்று ஏற்பாடு செய்திருக்கிறார்.  நீங்கள் கை விட்டால், எனக்கு ஒரு முழம் கயிறோ , நீரோ, நெருப்போ தான் புகல். 

நளன் திடுக்கிட்டான்.  அவளிடம் சொன்னான்- வந்திருப்பவர்கள் லோக பாலர்கள். அவர்கள் எனக்கு வேறு விதமாக இடையூறு செய்யக் கூடும். என் நாடு, என் பிரஜைகள் வருந்துவர்.  தேவலோக வாசிகள், அங்கு நீ சுகமாக இருப்பாய். மஹேந்திரனோ, வருணனோ, எந்த பெண் தான் மறுப்பாள்?  

கண்கள் குளமாக, தமயந்தி சொன்னாள்:  மனிதப் பிறவி நான். எனக்கு மனிதருள் மாணிக்கமாக  உங்களை மதிக்கிறேன்.  மற்றொருவரை நினைக்கக் கூட மாட்டேன். தேவர்களானால் எனக்கு என்ன?  உடல் நடுங்க, கை கூப்பியபடி பேசும் தமயந்தியைக் கண்டு நளன் வெகுவாக பாதிக்கப் பட்டான். 

‘அரசகுமாரி, உன் விருப்பம் போல செய்.   என் உண்மை நிலையைச் சொல்லக் கூட முடியாதபடி அந்த லோக பாலர்களுக்கு கொடுத்த வாக்கு தடுக்கிறது.  உன் உள் மனதுக்கு பட்டபடி செய், தெய்வங்கள் துணையிருக்கட்டும். 

அவளோ, அரசே நான் என்ன தவறு செய்தேன் என்று என்னை இந்த இக்கட்டில் மாட்டி விடுகிறீர்கள்.  ஆனால் நளனே வியக்கும் படி அவள் தெளிவு பெற்று திடமாக பேசினாள்.  ‘அரசே, ஒரு விண்ணப்பம், அந்த நால்வருடன் நீங்களும் சுயம்வர மண்டபத்துக்கு வர வேண்டும். மனிதருள் சிங்கம் போன்ற தனிதன்மையால்  நான் அடையாளம் கண்டு கொள்வேன். என்  மனோ பலம் என் பக்கம் இருந்து நான் வென்றால், உங்களை எந்த பழியும் வந்து தாக்காது. 

தமயந்தியின் மனதின் தெளிவையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், தன் மேல் அவளுக்கிருந்த அன்பையும் நினைத்து நினைத்து பெருமிதம் அடைந்தவனாக நளன் வெளியேறினான். 

லோக பாலர்களை சந்தித்தான். என்ன சொன்னாள் என்ன சொன்னாள் என்று அவர்கள் பர பரத்து கேட்டனர்.  அரசனே! சத்யவாதி நீ, சொல்லியிருப்பாய் என்பதில் சந்தேகமில்லை. நளனும் நடந்த படியே சொன்னான். உள் அறை வரைச் என்றேன். அவள் பணிப்பெண்கள் என்னைக் கண்டு வியந்தனர், போட்டி போட்டுக் கொண்டு உபசரித்தனர். தமயந்தியும் வந்து வரவேற்றாள்.  அவள் மனம் என்னில் லயித்து விட்டதைச் சொன்னாள். ஆனால் அவள் திட சித்தம் உள்ள ராஜ குமாரி. என்னையும் உங்களுடன் மண்டபத்துக்கு வரச் சொன்னாள். அவள் விருப்பம் போல செய்வதாகச் சொன்னாள்.   அவள் தோழிகளும் உடன் இருந்தனர். அவர்களுடன் தான் மண்டபத்துக்கு வருவாள். 

அந்த நாளும் வந்தது.  நல்ல நாள் நேரம், இவைகளை கணித்துக் கொண்டு அரசன் பீமன் வந்திருந்த அரசர்களை சுயம்வர மண்டபத்துக்கு வரவேற்று பேசினான்.  தந்தையாக தன் மகளைப் பற்றி உயர்வாக சொன்னதைக் கேட்டு வந்திருந்த அரச குமாரர்களின் ஆவலும் அதிகரித்தது.   மண்டபத்தின் அழகை வர்ணிக்கிறார். பொன் நிற கம்பங்களும், அழகான வளைவுகள், மனித முயற்சியில் தேவ லோகத்தையே கொண்டு வந்து விட்டதைப் போன்ற அலங்காரங்கள், பார்த்தவர் பிரமித்தனர்.   வந்திருந்த ராஜ குமாரர்கள் தாங்களும் அதற்கு இணையான அலங்காரங்கள், ஆபரணங்கள், கிரீட குண்டலங்கள் என்று அணிந்து வந்தனர். 

போகவதி என்ற இடம் மாணிக்கம் ஒளிர் விட நாகங்கள் நிரம்பி இருக்குமாம்.  குகைகள் சிங்கங்களின் கர்ஜனையால் நிரம்பி இருக்குமாம்.  புலிகளின் பளபளக்கும் கண்கள் மலைச் சாரல்களில் நிறைந்திருக்குமாம். அதற்கு இணையான வீர புருஷர்கள், அந்த சபையில் நிறைந்திருந்தனர் என்று வர்ணனை.  

அவர்கள் கைகளில் உயர்ந்த ஆயுதங்களும் இருந்தன. க3தைகள், ஸூலங்கள், வில், அம்புறாத் தூணிகள், இவைகளுடன் ஒவ்வொருவரும் ஒரு விதமான அழகும், ஆற்றலும் வெளிப்பட வந்து அமர்ந்தனர்.  சரியான நேரத்தில் தமயந்தி நுழைந்தாள்.  சபையில் இருந்த அனைவரின் கவனமும் அவள் பால் சென்றது.  தன்னருகில் அவள் வருவதை எதிர் நோக்கியே இருந்தது போல அவள் சென்ற இடங்களிலேயே அவர்கள் பார்வையும் நிலைத்து இருந்தது. 

அரசர்களின் பெயர், தகுதிகள், அரசு என்பது பற்றிய விவரங்களைச் சொல்லி அறிமுகப்படுத்தினர்.  தமயந்தி அவர்களை ஏறிட்டு பார்ப்பதும் கடந்து செல்வதுமாக இருந்தாள்.  ஒரு இடத்தில், ஒரே விதமான ஆடை ஆபரணங்களுடன்  நளன் போலவே ஐவர் இருப்பதைப் பார்த்தாள்.  அவர்களை நெருங்கி  கவனமாக பார்த்தாள். ஐவரில் எவரையும் யார் எவர் என்று பிரித்தறிய முடியவில்லை. குழம்பினாள். 

வினாடி நேரமே இந்த குழப்பம் நீடித்தது. இந்திரன் முதலான நால்வருக்கும் தேவ லோக பிரதிநிதிகள் என்ற தனிப்பட்ட அடையாளம் உண்டு என்று அறிந்திருந்தாள்.  மனதில் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டாள்.  அவர்கள் எதிரில் நின்று வணங்கினாள். 

‘அன்னப் பறவை சொன்ன நாளிலிருந்து நிஷத தேசத்து அரசன் நளன்  என் மனதில் நிலைத்து குடி கொண்டு விட்டான்.  தெய்வங்களே! என் மனோரதம் நிறைவேற அருள் புரியுங்கள்.  நிஷத ராஜனே தான் என் கணவனாவான் என்று ஆசீர்வதியுங்கள்.  சத்யத்தின் மேல் ஆணை. எனக்கு அவனை பிரித்துக் காட்டுங்கள்.’

என் உறுதி, நிஷத ராஜனான மனிதனைத் தான் மணப்பேன் என்பது, அதனால் லோக பாலர்களே , நீங்களே வழி காட்டுங்கள்.  உலக நன்மைக்காகவே இந்த பதவிகளில் இருப்பவர்கள் நீங்கள். எளிய இளம் பெண் நான், என்று எண்ணி உங்களை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்.  ‘

லோக பாலர்கள் நால்வரும் திகைத்தனர். சிறு பெண், இந்த மன உறுதி,  சத்யத்தில்  திடமான நம்பிக்கை, நளனிடம் கொண்ட அசையாத உள்ளன்பு,  அவர்களை அசைத்து விட்டது. தங்களுடைய சிறப்பு அம்சங்களை அவள் அறியும்படி காட்டினர்.    உடலை நனைக்காத வியர்வைத் துளிகள்,    இமையில்லாத கண்கள், வாடாத மாலைகள், பூமியில் படாத கால்கள், இவைகளைக் கொண்டு நால்வரையும் அறிந்து கொண்டு கடந்து சென்றாள்.  உண்மையான நளனின் கழுத்தில் வர மாலையை போட்டாள். 

நளனின் நிழல் பூமியில் தெரிந்தது, மாலைகள் கசங்கி இருந்தன, உடலில் புழுதியும் வியர்வையும், பாதங்கள் தரையில் பதிந்திருக்க, சிமிட்டும் கண்கள் – இவைகளே அவளுக்கு அடையாளம் காட்டின. 

சபையினர் ஆரவாரித்தனர். ரிஷிகள் ஆசிகள் அளித்தனர்.  அத்புதம் அத்புதம் என்று பொது ஜனங்கள் மகிழ்ந்தனர்.   வீர சேனனின் மகன், மகிழ்ச்சியில் திளைத்தான்.  தமயந்தியை சமாதானம் செய்தான். ‘தமயந்தி தேவ லோக வாசிகளுக்கும் மேலாக என்னை தேர்ந்தெடுத்திருக்கிறாய். நான் சாதாரண மனித பிறவி தானே.  உனக்கு ஏற்ற கணவனாக என்றென்றும் உன் தாசனாக இருப்பேன்.  உன் மென்மையான புன் முறுவல் – அதுவே போதும்.  என் உயிருக்கு உயிர் நீ.  எந்த நிலையிலும் உன்னை நான் கை விட மாட்டேன் என்று உணர்ச்சி பொங்க சொன்னான்.  

தமயந்தியும் தன் மனோரதம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் வந்திருந்த அனைவருக்கும், இந்திரன், மற்றும் உடன் வந்த லோக பாலர்களுக்கும் நன்றி சொல்லி  கை கூப்பி வணங்கினாள்.  அதன் பின் விதி முறைகளின் படி விவாகம் அக்னி சாட்சியாக நடந்தது.   லோக பாலர்கள் நளனுக்கு எட்டு வரங்கள் கொடுத்தனர்.    நினைத்த பொழுது வந்து தங்கள் சக்தியால் அவனுக்கு உதவுவதாக வரமளித்தனர். 

இந்திரன் யாகங்களில் அவனுக்கு  தேவர்களுக்கு சமமான அந்தஸ்தை  அளிப்பதாகச் சொன்னான்.  யமன் தன் பங்குக்கு அவன் உணவில் சிறப்பான ருசி வரும் படி அனுக்ரகித்தான்.  நள பாகம் என்பதாகவே அவன் சமையல் பிரபலமாயிற்று.  வருணன் எந்த நிலையிலும் தன்னை நினைத்தால் வந்து உதவுவதாக சொல்லி, சிறப்பான மணம் கொண்ட வாடாத மாலையை பரிசளித்தான்.  அக்னி அவனுக்கு தேவையான சமயத்தில் உதவுவதாக வாக்களித்தான்.   தமயந்தியையும் வாழ்த்தினர். மனம் போல மணாளனைப் பெற்றவளே,  மனம் நிறைந்த வாழ்வைப் பெறுவாய் என்றனர்.  வந்த வழியே திரும்பினர்.  

நள சரித்திரம்

தமயந்தியின் ஸ்வயம்வரம் பிரிந்து சென்ற நளன்

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.