11 காண்டம்
சரஸ்வதி ஒவ்வொரு வரனையும் வெகுவாக, அழகான சொற்களால் விவரித்தாள், தமயந்தி அவர்களை ஏறிட்டு பார்த்து விட்டு நகர்ந்தாள். ஒவ்வொரு முறையும் தமயந்தி கடந்து செல்லவே முனைந்து இருப்பதைப் பார்த்த அரச குமார்கள் யார் அந்த பாக்ய சாலி, இவள் மாலையை பெறப்போகிறவன் என்று தெரிந்து கொள்ள ஆவல் மேலிட எட்டி எட்டி பார்த்தனர். அலுக்காமல் அரசன் பீமனின் மகளை பார்த்து ரசித்தனர்.
சரஸ்வதி சப்த தீவுகளின் நாயகர்களை அறிமுகம் செய்தாள். (புஷ்கர, குச, ப்லக்ஷ, சக, க்ரௌன்ச, சால்மல , மற்றும் ஜம்பு) தமயந்தி அவர்களையும் கடந்து சென்றாள். அவள் முகத்தில் இருந்து எதையும் கண்டு கொள்ளவும் முடியவில்லை. சரஸ்வதியின் கவிதா மயமான வர்ணனைகளை கேட்டதாகவே தெரியவில்லை.
புஷ்கர தீவில் பெரிய ஆல மரம். அதன் சிவந்த பழங்களுடன் மயிலின் இறகு போல இருக்குமாம்.
ஜம்பு தீவில் பாயும் நதி பெயரும் ஜம்புவே. அதன் நீரில் நாவல் பழங்கள் விழுந்து அதன் வண்ணமே நாவல் நிறமாகி விட்டிருக்கும். அதன் வண்டலில் தங்கம் விளையும். குச தீவில் குச என்ற புல் அடர்ந்து வளர்ந்திருக்கும். மழை நீரில் வளருபவை. அதன் கூர்மையான முனைகள் மழை நீரை கிழிப்பது போல இருக்குமாம். சால்மல தீவில், கடலே மது நிறைந்து இருக்குமாம். சக தீவில், சூரிய உதயம் காணத் தக்கது. அவள் அந்த வேளையில் அங்கு சஞ்சரித்தால், ஒரே சமயத்தில் ஸூரியனையும் நிலவையும் பார்த்து மக்கள் திகைப்பர் என்றாள். ப்லக்ஷ தீவில் அவள் மனம் கொண்ட மட்டும் ஊஞ்சலாடலாம். பெரிய அத்தி மரங்கள், அதில் ஊஞ்சல்கள் கட்டியிருக்கும்.

அவந்தி அரசன் வந்திருக்கிறான். இதோ கௌடன். மதுரா ராஜன். காசி ராஜா இவர்களைப் பார். தமயந்தி, அவந்தி நாட்டில் சிப்ரா நதி அழகானது. நீரில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கும். அலைகளால் அந்த நதி உன்னை மூழ்கடித்து சிரிப்பது போல இருக்கும். கௌட தேசத்தில் சுமேரு மலை உள்ளது. பொன் நிறமான அதன் சிகரங்களில் மழை நீர் பொழியும் பொழுது காண அத்புதமாக இருக்கும். மதுரா அரசனை மணந்தால், வ்ருந்தாவனத்தில் மலர்கள் தரையை மறைத்து கண் கவர் காட்சியாக இருப்பதைக் காணலாம். காசி ராஜன், இருப்பது புண்ய பூமியான காசியில். அங்கு வருபவர்கள் பாபங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அங்கு இக பர சௌக்யங்களை அடைவர்.
அந்த அறிவிப்பாளர் முனைந்து ஒவ்வொருவரையும் விவரமாக வர்ணித்தும் தமயந்தி காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. ஒவ்வொருவரையும் நிராகரிக்க அவளுக்கு காரணமும் இருந்தது. (32,46) . .
12 காண்டம்:
மேலும் பல அரசர்களைப் பற்றிய விவரங்களை சரஸ்வதி சொல்கிறாள். அயோத்யா அரசன், பாண்டிய ராஜன், கலிங்கத்து அரசன், காஞ்சி, நேபாளம், மலய நாடு, மிதிலா, காமரூப, உத்கலம் , மகத நாடு இவைகளின் அரசர்கள் அல்லது அரசிளங்குமாரர்கள். சரஸ்வதி தன் வாக்கு வன்மையை முழுவதும் பயன்படுத்தி வர்ணித்து எதுவும் பலன் அளிக்கவில்லை. சில இடங்களில் கண்களால் ஜாடை காட்டினாள், சில இடங்களில் தலையசைத்து போதும் என்பது போல சைகை காட்டினாள், ஒரு முறை நளன் என்றே உச்சரித்து தன் மனதை வெளிப்படுத்தினாள்.
இதற்குள்,தமயந்தி பிரபலமான பல அரசர்களை நிராகரித்து விட்டிருந்தாள். அதனால் நளன் வேடத்தில் ஐவர் இருந்த இடம் வந்தனர். சரஸ்வதிக்கு இக்கட்டான நிலை. அவள் அறிந்தாள். ஒருவனைத் தவிர மற்ற நால்வரும் தேவலோக வாசிகள். எப்படி அறிமுகப்படுத்துவது? அவர்களோ தங்களை மறைத்துக் கொண்டிருக்கின்றனர். நளன் போன்ற உருவம் எடுத்து நிற்கின்றனர். அதே சமயம் தமயந்தியையும் நன்றாக அறிந்தவள். அவள் மனதில் உள்ளதை புரிந்து கொண்டு விட்டவள். எதிரில் நால்வரும் தன்னை தமயந்தி தவறாக நளன் என்று நினைத்து மாலையிட வேண்டும் என்றே ஆவல் மேலிட காத்திருந்தனர். அவளுக்கே அந்த தேவலோகவாசிகளிடம் வெறுப்பு வந்தது. ஒரு வினாடி நேரம் தான். தன் சாதுர்யமான பேச்சால் அந்த இக்கட்டை கடக்க முடிவு எடுத்தாள். இரு பொருள் உடைய சொற்களால் பாட்டாக பாடி அவர்களை அறிமுகப் படுத்தினாள். அவள் எண்ணம் பலித்தது. தமயந்தி புரிந்து கொண்டாள். (1-26) அதன் பின் உண்மையான நளனிடம் வந்த சமயம் அவளுடைய குரலும் சொல்லும் நளனை காட்டுவதாகவே அமைந்தது. இடை இடையே பயமும் – தன் நோக்கத்தை இந்த மாறுவேடத்தினர் புரிந்து கொண்டு விடக் கூடாதே- அதனால் ஐந்து விதமாக பொருள் படும்படி தன் பாடலை பாடினாள். ஒவ்வொன்றும் மற்ற நால்வரையும் குறிக்கும் கடைசி வரி உண்மையான நளனைக் குறிக்கும். இது சரஸ்வதிக்கு மற்றொரு கவலையை அளித்தது. இந்த பெண் புரிந்து கொள்ள வேண்டுமே, தமயந்தியின் முகத்திலும் கவலையின் கோடுகளே தென்பட்டன. தயக்கம், பயம், செய்வதறியாத திகைப்பு, குழப்பம் இவைகளுடன் பாவம் அந்த பெண் என்று இரக்கமும் வந்தது. போலியையும், உண்மையையும் எப்படி பிரித்தறிவாள்? நேரடியாக அந்த போலி நளன் களையே அடையாளம் காட்டி இருக்கலாமோ, அல்லது அவர்களையே வேண்டி விட்டுக் கொடுக்க செய்திருக்கலாமோ என்று தானே பல வித குழப்பங்களுடன் இருந்தாள். உண்மை நளன் என்ன நினைப்பான், இந்த பெண் இதன் பின் என்னை நம்ப வேண்டுமே, நளனே ஏதேனும் சைகையாக சொல்லக் கூடாதா? அவனோ வாக்குக்கு கட்டுப்பட்டவன். கூட்டம் முழுவதும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கையில் அவன் தான் எப்படி எந்த விதத்தில் தன்னை வெளிக் காட்டுவான்? சிறு கண் அசைவு கூட போதுமே, கடவுள்களே என்னைக் காப்பாற்றுங்கள் என்று மனதில் வேண்டிக் கொண்டாள்.
14 காண்டம்:
தமயந்தி பலமாக வாய் விட்டே இஷ்ட தெய்வங்களை வேண்ட ஆரம்பித்தாள். பாடலாக அவள் பாடியது கேட்பவர் மனதை நெகிழச் செய்தது. கை நிறைய மலர்களை எடுத்துக் கொண்டு அர்ச்சனை செய்தாள். வேடதாரிகளான நால்வரும் வெட்கி தலை குனிந்தனர். தங்களுடைய சிறப்பு அம்சத்தை ஒவ்வொருவரும் வெளிப்படுத்தினர். அதுவே போதுமானதாக இருந்த து உண்மையான நளனை அவர்களிடமிருந்து வேறு படுத்தி காட்டி விட்டது.
தமயந்தி அவனையும், திரும்பி சரஸ்வதியையும் பார்த்தாள். அவள் முகத்தில் இதுவரை இல்லாத மகிழ்ச்சி பெருக்கு முகத்தில் உணர்ச்சிகளாக தெரிந்தன. என்ன யோசிக்கிறாய், இவர்களில் ஒருவரை தேர்ந்தெடு என்று சொல்லியபடியே உண்மை நளன் அருகில் சென்று நின்றாள். தமயந்தியும் ஒவ்வொருவராக அந்த நால்வரையும் கடந்து சரஸ்வதியின் அருகில் வந்தாள். தாங்களாகவே இதற்குள் மனமுவந்து ஆசீர்வதிப்பது போல அவர்கள் தலையும் ஒப்புதல் அளிப்பது போல அசைந்து வழி விட்டது. தாமதிக்காமல் தமயந்தி அவசரமாக நளனின் கழுத்தில் தன் கையில் இருந்த மதுகா மலர்களும், தூர்வா என்ற புல்லும் சேர்த்து தொடுத்த மணமாலையை அணிவித்தாள்.
தேவலோக வாசிகள் நால்வரும் தங்கள் ரூபத்தை எடுத்துக் கொண்டனர். சரஸ்வதியும் தான் வந்த காரியம் நல்ல படியாக முடிந்ததில் மகிழ்ந்தாள். நால்வரும் நளனுக்கு பல வரங்கள் அளித்தனர். சரஸ்வதி தன் பங்குக்கு நளன் அறிவும் ஆற்றலும் பெருக நல்லாட்சி செய்ய ஆசீர்வதித்தாள். (88-92)
தமயந்தியையும் அவர்கள் ஆசீர்வதித்து, நீண்ட ஆயுளுடன், சௌபாக்யவதியாக இருப்பாய். எந்த குறையும் இன்றி மனம் போல கணவனை அடைந்தவள் வாழ்வில் மேலும் பல நன்மைகளை பெறுவாய் என்று அருளினர்.
தமயந்தியின் தந்தை பீமா – பெரும் பாரம் இறங்கியது போல மகிழ்ந்தார். வந்தவர்கள் ஏமாறாமல் இருக்க தமயந்தியின் நெருங்கிய தோழிகள் , இளவரசிகள் என்று பல பெண்ளை அவர்கள் விரும்பிய படி விதிப்படி ஆடை ஆபரணகளுடன் கன்யா தானம் செய்து அனுப்பி வைத்தார். இந்த காண்டம் இவ்வாறு நலமாக நிறைவுற்றது.
15 காண்டம்: நள தமயந்தி விவாகம், அதன் விரிவான ஏற்பாடுகளுடன் விவரிக்கப் படுகிறது. (16-18)
16 காண்டம்: திருமண உத்சவங்கள், ஊர் வலங்கள் வர்ணனை. ஐந்து ஆறு நாட்கள் மணமகள் வீட்டில் வசித்த தம்பதிகள் நளனுடைய இருப்பித்திற்கு கிளம்பினர்.
17 காண்டம்:
தேவலோகம் செல்லத் திரும்பிய நால்வரும் வழியில் ஒருவனை சந்தித்தனர். கறுத்த தடிமனான உருவம் கொண்ட ஒரு உருவம்- பேராசை, காழ்ப்புணர்ச்சி, பொறாமை, தவறான எண்ணங்கள் இவைகளே உருவெடுத்து வந்தது போல, கூட்டமாக வந்தனர். அந்த கூட்டத்துக்கு தலைவனாக இருந்தவன் பேசியது இது வரை அவர்கள் இருந்த அரச மாளிகையின் உள்ளும் புறமும் காணாத புறம்போக்கு கொள்கைகளும், எதையும் நிந்திக்கும் குணமும் கொண்டதாக இருந்தது. மதம், அரசியல் அனைத்தையும் மனம் போன போக்கில் விமரிசித்தனர். அவர்கள் வாழ்வின் நடை முறை பிற்போக்கானது என்றும், அவர்கள் நம்பும் சாஸ்திரங்களை பொருளற்றது என்றும் நிந்தித்தனர். (36-83)
அதை மறுத்து, அவர்கள் நால்வரும் பரம்பரையான வேத சாஸ்திரங்களை ஆதரித்து பேசினர். அதன் நன்மைகளை அழகிய சொற்களால் விளக்கினர். அவர்கள் அதைக் காதில் வாங்காமலேயே, தங்கள் கொள்கைகளையே மேலும் பிடிவாதமாக வலியுறுத்தினர். தாங்கள் கலியின் அனுதாபிகள் என்று சொல்லிக் கொண்டனர். துவாபரன் என்பவனின் ரதத்தில் வந்தவன். ஏமாற்று என்பதன் மொத்த உரு. தந்திரங்களே அவர்கள் செயல்படுத்தும் முறை. திடுமென கலி புருஷன் எதிரில் வந்தான். இதுவரை உலகில் நிலவிய அனைத்து நன்மைகள் என்று நீங்கள் கருதியதை உடைத்து எறிவோம் என்று ஸூளுரைத்தான். தமயந்தியின் சுயம்வரத்துக்கு தான் போய் கொண்டிருக்கிறோம். . நான் தான் அவளுக்கு ஏற்ற கணவன் என்று மார் தட்டினான். இந்திரன் முதலானோர், அவள் எங்களையே ஏற்கவில்லை, மனிதன் தான் வேண்டும் என்று நளனுக்கு மாலையிட்டு திரும்னமும் நடந்தேறியது என்பதைச் சொன்னார்கள். அவன் தேவலோக வாசிகளை ஏளனம் செய்தான். ஐயே, விட்டுக் கொடுத்தீர்களா, என்று சிரித்தான். அவ்வளவு கோழைகளா, நீங்கள். , நான் உங்கள் சார்பில் நளனை துன்புறுத்தி அவளுக்கு பாடம் கற்பிக்கிறேன் என்றான். இந்திரன் முதலான நால்வரும் திகைத்தனர். வேண்டாம், அனைத்தும் நல்ல படியாக முடிந்து விட்டது. அந்த சிறு பெண்ணின் வாழ்வை குலைக்காகதே என்று கலியிடம் மன்றாடினர். இந்த காண்டம் அவர்கள் இருவரிடையே நடந்த வாக்கு வாதங்கள், கொள்கைகளை விளக்குவதுடன் முடிகிறது.(153-157)
துவாபர என்பவனுடன் கலி நிஷத ராஜனின் தலை நகரம் வந்து சேருகிறான். அந்த நகரம் பக்தியும், ஒழுக்கம் முதலான நற்குணங்களுக்கும் இருப்பிடமாக இருக்கவே, கலியின் கால்கள் தடுமாறின. தர்ம விரோதிகள், அதர்ம மான செயல்கள் செய்பவர்கள் இருக்கும் இடங்கள் அவ்வாறு ஆனதே கலியின் தாக்கத்தினால் தான் என்பது பொதுவான கருத்து. அங்கு நடந்து கொண்டிருந்த யாகங்கள், அதை மிக கவனமாக நியமம் தவறாமல் செய்து கொண்டிருந்த பிரஜைகள், ஒவ்வொருவரும் பண்டிதர்களாக, அறிவுள்ளவர்களாக, விதி முறைகளை அறிந்து நம்பிக்கையுடன் செய்பவர்களாக இருப்பதைக் கண்டான். (163-204) அதர்ம விரும்பிகளும், அந்த நாட்டினுள் நுழையவே இடம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தனராம். கலக விரும்பிகள் வீதிகளின் எங்கு எந்த இடைவெளி கிடைக்கும் என்று தேடிக் கொண்டிருந்தனராம். எப்படியோ அலைந்து திரிந்து கலி நளனுடைய உபவனத்தில் ஒரு பிபீதிகா – கடுக்காய் மரம் – அதில் குடி கொண்டான்.
நளன் தமயந்தியின் இல்லறம் துவங்க மன்மதனும் தன் உதவியைச் செய்யலானான்.
18 காண்டம்:
நளனுடைய மாளிகையின் விஸ்தாரமான வர்ணனை. நள தமயந்தியின் விவாகம் முடிந்த முதல் நாள் அனுபவங்களும் வர்ணிக்கப் படுகின்றன. இந்த இடத்தில் கவி தன் பெருந்தன்மையை. மற்றவரின் சொந்த அனுபவங்களை வெளியில் தான் சொல்வதை மரியாதைக் குறைவு அல்லது தன் இயல்பான குணத்துக்கு ஒவ்வாத ஒன்று என்பது போல அதிகமாக விவரிக்காமல் விட்டு விட்டார். தினந்தோறும் அவர்களிடையே பாசமும், ஈடுபாடும் அதிகரித்து வந்த விவரங்கள் கவித்வ அழகுடன் எழுதியிருக்கிறார்.
19 காண்டம்: அரசனை எழுப்ப துதி பாடும் வந்திகள் விடியலில் வந்து பாடுவாதாக இந்த காண்டம் துவங்குகிறது. இருவரையும் சேர்த்து புகழுவதாக அமைந்த பாடல்கள். அவர்கள் முடிக்கும் முன் கங்கையில் நீராடி விட்டு திரும்புகிறான் அரசன் நளன், தன்னுடைய சிறப்பான ரதம், மற்றவர்கள் கண்ணுக்கு புலனாகாமல் செல்லக் கூடியது – அதில் கங்கைக் கரைக்கு சென்றானாம். அதற்குள் அரச அதிகாரிகள், மந்திரிகள் வந்து விட்டனர். அரசராக அவர்களுடன் அன்றைய செயல்களை செய்யத் துவங்கி விட்டானாம்.
20 காண்டம்:
சற்றுப் பொறுத்து உள்ளே வந்து தமயந்தியை சீண்டியும், அவளுடன் பேசி சிரித்தும் மகிழ்ந்து இருந்தான். உல்லாசமான வர்ணனைகள், இருவருக்கு மட்டுமே தெரிந்த சயன அறை அனுபவங்கள் இவைகளை பேசி மகிழ்வதாக சொல்கிறார். மதியம் நேரத்தை அறிவிக்க ஒரு தாதி வந்து சொல்கிறாள். 158-60
21 காண்டம்:
பல தேசத்து ராஜ குமார்கள் வந்து வணங்குகின்றனர். படை வீரர்கள் வந்து தேவையானவைகளைச் சொல்லி, செய்ய வேண்டிய செயல்களை விவரித்து அனுமதி பெற்று செல்கின்றனர்.
அதன் பின் மகா விஷ்ணுவின் பூஜையை விரிவாக செய்வதை வர்ணிக்கிறார். மலையாக குவிந்து கிடக்கும் மலர்கள், தானே பூஜைகளை அதன் பதினாறு உபசாரங்களுடன் நளன் செய்வதாக மிக விரிவாக விவரங்கள் தருகிறார். மகா விஷ்ணுவின் அவதாரங்களைச் சொல்லி துதிகளாக பாடுகிறான். மதியம் தமயந்தியும் வந்து சேர்ந்து கொள்கிறாள். ஒரு கிளியை அதன் கூண்டோடு ஒரு தாதி எடுத்துக் கொண்டு உடன் வருகிறாள். அவர்கள் இருவரையும் புகழ்ந்து பாடியும் ஆடியும் மகிழ்விக்க அந்த தாதிகள் கூட்டம் உத்சாகமாக வருகின்றனர். அந்த கிளியும் அவர்களுடன் அவர்கள் சொல்வதை திருப்பிச் சொல்வதாக வர்ணனை. மாலை நெருங்கவும் தாதிகள் விலகிச் செல்கின்றனர். இருவரும் மட்டுமே அதன் பின் பேசிக் கொண்டு சந்தோஷமாக இருந்தனர். மாலை நேர தினசரியை, நியமங்களைச் செய்ய நளன் கிளம்புகிறான்.
22 காண்டம்:
திரும்பி வந்த பின் புது மண தம்பதிகள் தங்கள் தனிமையை அனுபவித்தவர்களாக நிலவொளியில் நடந்து செல்கின்றனர். இருளூம், நிலவொளியும் வெகுவாக வர்ணிக்கப் படுகிறது. இத்துடன் இந்த காண்டத்தை நிறைவு செய்து விடுகிறார். அடுத்து வரும் நளனின் வீழ்ச்சியைச் சொல்லி அந்த இரவின் மகிழ்ச்சியைக் கெடுப்பனேன் என்று நினைத்தவர் போல.
गन्धेन गाव: पश्यन्ति ब्राह्मणा: वेद सक्षुषा | चारै: पश्यन्ति राजान: चक्षुर्भ्याम् इतरे जना: ||
நளனுடைய உபாக்யானம் என்ற பகுதி, மஹா பாரதத்திலிருந்து.
அர்ஜுனன் இந்திரனிடம் சிறப்பான ஆயுதங்களைப் பெற இந்திர லோகம் சென்றான். பீமன் அவரையே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று குற்றம் சாட்டுகிறான். அதன் பின் பீமனும் தன் சக்தியை பெருக்கிக் கொள்ள வெளியேறினான். யுதிஷ்டிர் கவலையுடமன் இருந்தார். அந்த சமயம் ப்ருஹதஸ்வர் என்ற ரிஷி அவர்களைக் காண வருகிறார். அவருக்கான அதிதி சத் காரங்களை, வரவேற்று, ஆசனம் கொடுத்து, குடிக்கவும் உண்ணவும் பொருட்களைக் கொடுத்து பசியாறிய பின், ஓய்வாக இருந்த சமயம் யுதிஷ்டிர் சொல்கிறார்.
எனக்கு ஏன் இந்த கஷ்டங்கள் வந்தன. அவர்கள் அழைத்தர்கள் என்று தானே ஸூதாட போனேன். எனக்கு முழு விருப்பமும் இல்லை என்பதோடு பயமாக வேறு இருந்தது. எனக்கு ஸூதாட்டம் பற்றி விவரங்கள் தெரியாது என்பது ஒன்று, அவர்கள் தந்திரமானவர்கள், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிந்தே ஏன் போனேன். விதி தான். பொது இடம் , கூட்டமாக அவர்கள் அடியாட்களும், நண்பர்களும். ராஜ்யத்தை இழந்தேன், நிறுத்த விடவில்லை. சகோதர்களை இழந்தேன். அப்படியும் நிறுத்த விடாமல் என்னைத் தூண்டினார்கள். மனைவியை வைக்கச் சொல்லி யார் சொன்னர்களோ, ஏன் நான் அதை ஏற்றுக் கொண்டேன். அவளை வைத்து ஜயித்து ராஜ்யத்தை திரும்பப் பெறுவாய் என்றான் அந்த துஷ்டன். உயிருக்கு உயிரான என் மனைவி, அவளையும் இழந்தேன். ராஜ்யத்துக்குள் நுழையக் கூடாது வனத்தில் அலைந்து திரி என்று விரட்டினார்கள். மரவுரி உடுத்திக் கொண்டு பரம தரித்திரன் போல இங்கு வசிக்கிறேன். மகரிஷே! ஏன்? ஏன்? எனக்கு இந்த துன்பம் வர வேண்டும் யாருக்கு என்ன கெடுதலைச் செய்தேனென்று இந்த தண்டனை? என்றவன் ஓவென்று அழுதான்.
இந்த வனத்தில் இல்லாமையோ, உடல் வருத்தங்களோ என்னை பாதிக்கவில்லை. அந்த ஸூதாட்ட நாளில் பட்ட அவமானங்கள், சுடு சொற்கள் என்னை வதைக்கின்றன. அந்த பாரம் என்னால் தாங்க முடியவில்லை. தூக்கம் இல்லை, கண்கள் மூடினாலும் அந்த காட்சிகள் துரத்துகின்றன ஐயனே! என்ன செய்வேன். காண்டீவத்தை கையில் வைத்திருந்த அர்ஜு னனும் தற்சமயம் அருகில் இல்லை. என் வாழ்வே பொருளற்றதாகி விட்டது. ஏன் உயிருடன் இருக்கிறேன்?
ரிஷி சொன்னார்: பாண்டவனே! கேள். என்னை விட அதிக துன்பம் அடைந்தவன் வேறு எவரும் இருக்க முடியாது என்றாயே, கேள். இதைவிட அதிகமாக பாதிக்கப் பட்ட ஒருவனின் கதையைச் சொல்கிறேன், கேள்.
யுதிஷ்டிரன், அப்படியா? யார் அது? என்று வினவினான். ரிஷி தொடர்ந்தார்.
உன் மற்ற சகோதரர்களும் கேட்கட்டும். நிஷதன் என்றொரு ராஜ்யம். அதன் அரசன் நைஷதன், பெயர் நளன். நற்குணங்களின் இருப்பிடம். நேர்மையே உருவானவன். செல்வம் அவனிடம் வந்து சேர்ந்து பெருமை பெற்றது என்பது போல அனைத்து செல்வங்களையும் கொண்டவன். தமயந்தி என்ற மனைவி. புஷ்கர என்பவன் ஏமாற்றிவிட்டான். ராஜ்யத்தை இழந்தான். பிரியமான மனவியுடன் காட்டில் வசிக்க வந்தான். அவனுக்கும் வீரர்களாக,சகோதர்கள் இருந்தனர். படை பலம் இருந்த து. விஸ்வாசிகளாக பிரஜைகள் இருந்தனர். அவர்கள் ஒருவரும் நெருங்க முடியாமல் விதியால் தனித்து விடப்பட்டான். உனக்காவது உடன் பிறந்தவர்கள், மனைவி இந்த காட்டிலும் இருக்கிறார்கள். அதனால் வருந்தாதே.
யுதிஷ்டிரர் வினவினார்: ஐயனே! விவரமாக கேட்க விரும்புகிறேன். சிறந்த அரசன், வளமான நாட்டின் தலைவன் என்று சொன்னீர்கள் ஏன் இந்த நிலைக்கு வந்தான்.
ரிஷி சொன்னார்: வீர சேனன் என்பவரின் மகன் நளன் என்பவன். அழகன், பலசாலி, வீரன், திறமையாக ஆட்சி செய்தான். குதிரைகளை பராமரிக்கத் தெரிந்தவன். மற்றும் பல கலைகள் அறிந்தவன். தேவர்களுக்கே நெருக்கமானவனாக ஆனான். அவன் புகழ் ஆதவனின் ஒளி போல உலகெங்கும் பரவியது. அரசனாக, அந்தணர்களை ஆதரித்தான். வேத சாஸ்திரங்களையும் குறைவறக் கற்றான். ஸுதாட்டமும் ஒரு கலையாகவே எண்ணி கற்றான். சிறந்த வீர்களுடன் பெரிய சேனை அவன் வசம் இருந்ததால், தன்னை மீறி எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையும் வந்தது. நாட்டு மக்கள், ஆண்களும், பெண்களும் அவனிடம் மதிப்பும் அன்பும் உடையவர்களாக இருந்தனர். பெரியவர்கள் ஆசீர்வதித்தனர். படை வீரர்கள், சேனைத் தலைவர்கள் அவன் வில் வித்தையில் மயங்கினர். அவர்களுக்கு தங்கள் அரசனிடம் பெருமிதம் வளர்ந்தது. எவரும் எந்த குறையும் அவனிடம் காணவில்லை. அவனுக்கு இணையாக பேசப்பட்டவன் தான் விதர்ப தேசத்து அரசன் பீமன், தன் பிரஜைகளை அன்புடன் பரி பாலித்தான், தானும் நல்ல வீரன், நற்குணங்கள் நிறைந்தவன், ஒரே ஒரு குறை சந்ததி இல்லை. மகன் வேண்டும் என்று அவன் வேண்டினான்.
அந்த சமயம் தமணன் என்ற ரிஷி அரசனை சந்திக்க வந்தார். தன் மனைவியுடன் அவரை வரவேற்று உபசரித்தான். தங்கள் மகன் இல்லாத குறையை அவரிடம் தெரிவித்தான். அவரும் முதலில் மணிகளில் மாணிக்கம் போன்ற மகளும், புகழ் வாய்ந்தவர்களாக விளங்கப் போகும் மூன்று மகன்கள், பெறுவாய் என்று வரம் அருளினார். அவர்களே, தமயந்தி, தம, தன்ட, தமன. இந்த தமன என்பவன் பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்றவனாக ஆனான்.
அரச குமாரர்கள், அதற்கேற்ப, வீரமும், நல்ல கல்வி பெற்றவர்களாகவும் வளர்ந்தனர். மகள் தமயந்தி அழகிய பெண்ணாக, அனைவருக்கும் பாசம் மிகுந்த சகோதரியாக, அரசனுக்கு கண்ணின் மணி போலவும் வளர்ந்தாள். அவள் வளர வளர, உடன் பணி செய்ய வந்த பெண்களின் எண்ணிக்கையும் கூடியது. போட்டி போட்டுக் கொண்டு அவள் அருகில் அவர்கள் சேவை செய்தனர். அவளுக்கான சிறப்பான ஆபரணங்களும் அணிகளும் நிறைந்தன. இந்திராணி போலவே இருந்தாள். சீரான உடல் அமைப்பும் அழகும். கார் மேகங்களுக்கு இடையில் மின்னல் போல இருந்தாள் என்று வர்ணிக்கிறார். திருமகளே வந்து விட்டாளோ என்று மலைக்கும் படியான விசாலமான கண்கள். மூவுலகும் வியக்கும் வண்ணம் வளர்ந்த அவளை அடைய தேவர்களும் போட்டியிட்டனர்.
இது இப்படி இருக்க, கந்தர்ப்பனே, மன்மதனே அவதரித்து வந்து விட்டது போல நளனும் ஆண்களுள் கொண்டாடப் பட்டான். தமயந்தியிடம் அவள் சேடிகள் , திரும்பத் திரும்ப அந்த அழகனைப் பற்றி பேசினர். அதே போல நள மகா ராஜனிடம் தமயந்தியைப் பற்றி அவனுடைய நண்பர்களும், நலம் விரும்பிகளும் விவரித்தனர். இதனால் இருவருக்குமே ஒருவரையொருவர் காணாமலேயே ஈடுபாடு கொண்டனர். இருவரிடமும் இந்த ஈடுபாடு காதலாக பரிணமித்தது.
ஒரு நாள் இதே எண்ணமாக நளன் தன் அரண்மனை தோட்டத்தில் உலவும் சமயம் சில பொன் நிற இறக்கைகள் கொண்ட அன்ன பறவைகளைக் கண்டான். கண் கவர் வண்ணமும் உல்லாசமாக அவை நீரில் மிதந்து சென்றதும் அரசன் கவனத்தை ஈர்க்க, ஒரு பறவையை இரு கைகளாலும் பிடித்து தூக்கினான். அதுவோ அவனிடம் பேசிற்று. ‘ஓ அரசனே! என்னைக் கொன்று விடாதே. நான் உனக்கு ஒரு நல்ல விவரம் சொல்கிறேன், கேள். உனக்காக நான் தமயந்தியிடம் தூது போகிறேன். அவளிடம் உன்னைப் பற்றி நான் சொல்வதைக் கேட்டு அவள் மற்றொருவரை மனதாலும் நினைக்க மாட்டாள். அந்த அளவு உயர்வாகச் சொல்வேன்’ என்றது. அதை கேட்ட அரசன் திகைத்தான். முதலில் பறவை பேசியதன் ஆச்சர்யமே அடங்கவில்லை, மேலும் தமயந்தியைப் பற்றி சொல்கிறேன் என்றால், அதற்கு எப்படித் தெரியும் அவள் என் மனம் கவர்ந்தவள் என்பது. எண்ணி முடிக்கும் முன், கைகள் அந்த பறவையை விடுவித்தன.
அந்த பொன் நிற அன்னமும் விதர்ப தேசம் சென்றது. தமயந்தியின் கண்ணில் படுவது போல அவள் இருந்த உபவனத்து நீர் நிலையில் சுற்றி வந்தது. அவள் அருகில் வரவும், மற்ற அன்னப் பறவைகள் பறந்து விட்டன. தனித்து நின்ற இந்த பொன் நிற அன்னத்தை விட்டு விட்டு தோழிகள் மற்ற பறவைகளை பிடிக்கச் சென்றனர். தமயந்தியை போக்கு காட்டி வெகு தூரம் அழைத்துச் சென்ற பின், அன்னம் அவளிடம் பேசியது.
‘ஓ தமயந்தி! நிஷத ராஜன் நளன் தெரியுமா? அஸ்வினி குமாரர்கள் போன்ற அழகன். (ஆண்களின் அழகுக்கு அஸ்வினி குமாரர்களை உதாரணமாகச் சொல்வர்) அழகிய பெண்ணே, உன் உடல் அழகுக்குக்கும்,, குணத்துக்கும் அவன் தான் ஏற்ற கணவன் ஆவான். உனக்குத் தெரியுமா, நாங்கள் மூவுலகும் சுற்றுபவர்கள். தேவர்கள், கந்தர்வர்கள் என்று பலரைப் பார்த்திருக்கிறோம். உன்னைப் போன்ற அரசிளங் குமரிகளில் நீ தனித்து தெரிவது போலவே அவனும் அரச குமார்களில் ஓங்கி உயர்ந்த்து தெரிபவன். ஆற்றலாலும், அறிவாலும், ஆளுமையாலும் சிறந்தவன்.
(வளரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
