தெரிவுகள் அதிகம், முடிவு ஒன்று

This entry is part 11 of 12 in the series சமூக உணர்ச்சி

இது வரையில் சமூக உணர்ச்சி கற்றலில் உறவுகளை வளர்ப்பதைப் பற்றி கற்றோம். இப்போது முடிவுகளை எடுப்பது பற்றி அறியப்போகிறோம்.

வாழ்க்கையில் பல நேரம் நாம் முடிவுகள் எடுக்கிறோம். சின்ன முடிவுகள் முதல் வாழ்க்கையையே புரட்டிப்போடும் முடிவுகள் வரை. இன்று என்ன காபி குடிப்பது என்பது முதல் காலை உணவு என்ன உண்பது வரை. நாம் சிறுவர்களாக இருந்தபோது இந்தக் குழப்பம் இருந்திருக்கவில்லை. அம்மா செய்வதுதான் காலை உணவு. இப்போது அப்படி இல்லை. பல இல்லங்களில் பலவகை சீரியல்களும் பிரெட் டோஸ்டா இல்லை பழரசமா என பிள்ளைகளைக் கேட்பதில் குழப்பம் ஆரம்பிக்கிறது. பழரசத்தில் ஆயிரம் வகை இருக்கும். இது ஒரு வகை பொருளாதார மேம்பாட்டைக் காட்டினாலும் முடிவெடுக்க குழந்தைகளைத் திணறடிக்கச் செய்கின்றன. நான் சொல்வது சற்றே பொருளாதாரத்தில் மேல்தட்டு குடும்பங்களை. இந்த நிலை இப்போது ஒரு அந்தஸ்தாக பல கீழ்தட்டுக் குடும்பங்களுக்கும் பரவி இருக்கிறது.

சில முடிவுகள் தவறானால், திருத்தி அமைத்துக்கொள்ளலாம். ஆனால் சில முடிவுகளை மாற்றி அமைத்துக்கொள்ள இயலா. மற்ற வாழ்க்கைத் திறன்கள் போல முடிவுகள் எடுப்பதும் ஒரு முக்கியமான திறன்.

சிறுவராக இருக்கும் போது நமது முடிவை அடுத்தவர்கள் எடுப்பார்கள். ஆனால் அப்போதே பெற்றோர்கள் சின்ன சின்னத் தெரிவுகளில் இருந்து பிள்ளைகளுக்கு முடிவெடுக்கச் சொல்லித் தர வேண்டும். எடுத்துக்காட்டாக, முதல் நாள் இரவே மறுநாள் கால நிலைக்கேற்ப இரண்டு ஆடைகள் எடுத்து வைத்து அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க சொல்லலாம். அப்படிப் பழகும் பிள்ளைகள் பின்னாளில் முடிவெடுக்க தயங்க மாட்டார்கள். ஆனால் முழு கப்போர்டையும் திறந்து வைத்து தேர்ந்தெடுக்கச் சொல்லுதல் கூடாது. அது குழந்தைகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி நேரத்தைக் கடத்தும். 

சில சமயங்களில் வீட்டுப்பாடம் செய்ய மறுக்கும் குழந்தைகளிடம் அதன் நன்மை தீமைகளை எடுத்துச் சொல்லியும் அடம் பிடிக்கும் பிள்ளைகளை அவர்கள் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் மறுநாள் வீட்டுப்பாடம் செய்யாததால் வரும் விளைவுக்கு அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும். அதன் விளைவுகள் இப்போது சிறியதுதான். ஆனால் அது ஒரு முடிவுக்கு பின்னால் வரும் விளைவுகளுக்கு பொறுப்பெடுக்க வேண்டும் என்ற விலைமதிக்க இயலாத பாடத்தையும் சேர்த்தே கற்றுத் தருகிறது.

நடுத்தர வயதுடைய பிள்ளைகள் கேம்க்யூப், அல்லது பிளே ஸ்டேஷன் போன்ற விளையாட்டுப் பொருட்கள் கேட்டால், அவர்களையே ஒரு சின்ன திட்டம் வரைய சொல்லலாம். எங்கெ கிடைக்கிறது, எங்கே வாங்கினால் விலை குறைவு, இரண்டிற்குமான வேறுபாடு என்ன, எது அதிக மகிழ்ச்சியைத் தரும் ஏன், எந்த கடையில் வாங்குவது சிறப்பு, இணையதளமா, அதற்கு விளயாடும் நேரம் எங்கிருந்து எடுப்பார்கள் ஏனெனில் ஒரு நாளைக்கு அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரமே குறைந்த அளவுதான். அதில் தொலைக்காட்சி, விளையாட்டு நேரம் வேறு ஒரு பகுதியை எடுத்துக்கொள்ளும். இப்படி திட்டம் வரைவதால், அது நல்ல பயிற்சியையும் கொடுக்கும், அந்த திட்டப்படி நடக்கவும் உறுதுணையாக இருக்கும்.

வயது முதிர்ச்சியடைந்தபின்னும் சிலர் முடிவெடுக்கத் தயங்குகிறார்கள். முடிவினால் வரும் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வரும் தயக்கமே முடிவெடுக்க வரும் தயக்கம், பெரும்பாலும் பெண்கள்/ ஆண்கள் திருமண முடிவுகளைப் பெற்றோர்களிடம் விடுவது இதற்காகத்தான்.

அவசரமாக எடுக்கும் முடிவுகள் சரியான விளைவுகளைத் தந்தால் நான் அப்போதே நினைத்தேன் நடந்துவிட்டது எனச் சொல்வோரும் நடக்காவிட்டால் எனக்குத் தெரியும் எனப் பழிப்போரும் உண்டு.

எந்த முடிவெடுத்தாலும் வரும் நல்லது அல்லது கெட்டது இரண்டையும் சமன் செய்து சீர்தூக்கி ஆராய்ந்து அதற்கான தரவுகளைச் சேகரித்து இதற்கு முன் என்ன அனுபவம் கிட்டியிருக்கிறது எனப் பார்த்து முடிவெடுப்பதே அறிவார் செயல்.

இதையே நாலடியார்,

அறிவது அறிந்தடங்கி, அஞ்சுவது அஞ்சி,
உருவது உலகுவப்பச் செய்து,-பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.

அறிய வேண்டிய நன்மை தீமைகளைப் பற்றிய நுட்பங்களை எல்லாம் அறிந்து அடக்கம் உடையவராகி, அஞ்சி ஒதுங்குவதற்குரிய பழிச்செயல்களுக்கு அஞ்சி ஒதுங்கித், தமக்கு நேர்ந்த காரியத்தை உலகம் உவக்குமாறு முறையே செய்து இன்பமுற்று வாழுகின்ற இயல்பினை உடையவர்கள், எப்போதும் துன்பமுற்று வாழ்தல் என்பதே அரிதாகும். ‘நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து, பொறுமையுடன் தம் வாழ்வினை மேற்கொண்டு நடப்பவர்களுக்கு என்றும் துன்பம் நேர்வதில்லை’ என்று கூறுகிறது. இங்கே உலகம் உவக்குமாறு முறையே செய்து என்பதை நல்ல விளைவுகளைத் தரக்கூடிய முடிவுகளை எடுத்து என்று பொருள் கொள்ளலாம்.

நாம் எதைப் பற்றி எல்லாம் முடிவெடுக்கிறோம்? நாம் தினமும் பல முடிவுகளை எடுக்க உந்தப்படுகிறோம். காலையில் எத்தனை மணிக்கு எழுவது என்பது முதல். அதுவும் முதல் நாளே முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு உந்தப்படுகிறோம். சில முடிவுகள் அவசரமாகவும் சில முடிவுகளை நிதானமாகவும். ஆனால் எல்லாவற்றையும் தீர ஆலோசித்தே எடுக்கிறோம்.

சில முடிவுகள் நம்மீது திணிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, போக்குவரத்து இடையூறு, நாம் எழவேண்டிய நேரத்தை சற்றே துரிதப்படுத்தும் நிலைக்கு தள்ளக்கூடும். அதன் பொருட்டு நாம் குழந்தைகள் எழும் நேரத்தை துரிதப்படுத்தலாம்.

இரவில் வெகு நேரம் கண்விழித்துப் படிக்க வேண்டும் என ஒருவர் விரும்பி முடிவெடுத்திருக்க இன்னொருவர் சப்தமாக டிவி பார்க்க வேண்டும் என யாரைப் பற்றியும் கவலைப்படாமல் முடிவெடுத்தால் அது விவாதத்தைத் தரும்.

உறவுகளில் மட்டும் அல்ல, நம் அன்றாட வாழ்வில் அக்கம் பக்கத்தில் உள்ளவர், அலுவலக நண்பர்கள் சக தொழிலாளார்கள் என நம் முடிவு அனைவரையும் பாதிக்கும். எனவே நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் பல சிந்தனைகளை உள்ளடக்கியதாகவே இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் ஏற்றுக்கொள்ளாததை நமக்குப் பிடித்ததை நாம் செய்யக்கூடாதா என்றால், செய்யலாம். ஆனால் விளையும் விளைவுகளுக்கு பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். இதைத் தான் மேலே சொன்ன நாலடியார் பாடலும் சுட்டுகிறது.

தன்னை அறிதல், பிறர் நிலை உணர்தல், உறவாடும் திறன், உரையாடும் திறன் இவை அனைத்தையும் சீர் செய்து பார்த்து திறன்பட பேசி முடிவெடுத்து இன்ப துன்பம் அனைத்தையும் அறிந்து முடிவெடுக்க வேண்டும்.

சில சமயங்களில் நண்பர்கள் பேச்சை கேட்டு தவறான பாதையில் செல்லும் இளஞர்கள் உண்டு. இவர்களும் செய்த முடிவுகளுக்காக வருந்துவது உண்டு. இந்த முடிவுகள் திருத்திக்கொள்ளத்தக்கதாக இருக்குமாயின், திருத்தி வாழ்க்கையை செப்பனிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வேற்றுமை இன்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா வொழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்.
ஆற்றுந் துணையும் பொறுக்க; பொறானாயின்
தூற்றாதே, தூர விடல்!

இரண்டுபேர் தம்முள் வேற்றுமை இல்லாமல் கலந்து நட்புக்கொண்ட காலத்திலே, அவர்களுள் நம்பத்தகாத தீய ஒழுக்கம் ஒருவனிடத்தில் உண்டாகுமானால், மற்றவன் தன்னால் பொறுக்கக்கூடிய அளவுவரைக்கும் பொறுக்கக் கடவன்; அப்படிப் பொறுக்க மாட்டானாயின் அந்த நண்பனைத் தூற்றாமல் அவனுடைய நட்பை மட்டும் தூரமாக ஒதுக்கிவிடக் கடவன். ‘நண்பனிடத்துத் தீய நடத்தை உள்ளதென்று பின்னர் அறிந்தால் பொறுக்கும் அளவுக்குப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும். அந்த அளவினைக் கடந்த போதும், அவன் நட்பை விட்டு விடலாமே அல்லாமல், பொறுமையிழந்து அவனைப் பலரும் அறியத் தூற்றுதல் கூடாது என்பது கருத்து.

பெண்களில் பலர் பிறரை திருப்திப்படுத்த ஒரு முடிவை எடுத்துவிட்டு அதைத் தொடர்ந்து நிறைவேற்ற முடியாமல் போகும் போது சலிப்படைவது உண்டு.

முடிவெடுத்தலில் பலவகை உண்டு. முன்பே சொன்னபடி மாற்ற முடியாதவகை ஒன்று உண்டு. இவை திருமணம், குடியுரிமை போன்றவை.

மாற்றக்கூடிய முடிவுகள்

இரண்டாம் வகை மாற்றக்கூடியவை. சில முடிவுகள் செயல்படுத்தும் முன் மாற்றக்கூடியவை. ஒரு விஷயத்துக்கான தீர்வு சரிவர இருக்காதோ என்று தோன்றுமானால், முடிவை மாற்றிக்கொள்ள இயலும்.

செய்து பார்த்து திருத்திக்கொள்ளுதல்

பரிசோதனை செய்து பார்த்து விளைவுகள் தவறான பாதிப்புகளை ஏற்படுத்துமானால், முடிவுகளை மாற்றிக்கொள்ளுதல்.

திட்டத்தை நிறைவேற்றும்போது எப்படியும் மாற்றம் தேவைப்படும் என உணர்ந்து தேவையான மாற்றங்களை செய்து மாற்றிக்கொள்ளுதல்.

படிப்படியாக முடிவெடுத்தல்

சில திட்டங்கள் படிப்படியாக முடிவுகளை மேற்கொள்ள அனுமதிக்கும். இவ்வகையில் முடிவுகளை பார்த்து ஒவ்வொரு படிக்கும் மேற்கொண்டு முடிவுகளை எடுக்க இயலும். இதனால் தொடர்ந்த கண்காணிப்பு சாத்தியமாகிறது. இது மாணவப் பருவத்தில் மிக முக்கியமானது.

இந்தியச் சூழலில் மருத்துவ சிகிச்சை முடிவுகள், கல்வி போன்றவை குடும்ப முடிவுகளாக அனைவரின் கூட்டு முடிவுகளாகவே இருக்கின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் குடும்பத்தோடு நல்லது கெட்டது விவாதித்தாலும் முடிவுகளை எடுப்பது அவரவரது பொறுப்பு.

பரிசோதனை முறையில் முடிவெடுத்தல்

மாற்றக்கூடியவை, மாற்ற முடியாதவை தவிர, பரிசோதனை என்ற வகை முடிவுகளும் உண்டு. ஒரு காரியத்திற்கு இதுதான் முடிவு என்று தீர்மானித்துச் செயல்படுத்தும் முன் அல்லது செயல்படுத்தும் போதோ முடிவைத் திருத்தி அமைப்பது. சில நடவடிக்கைகளில் முதல் கட்ட தீர்ப்பு முடிவுகளின் விளைவுகளில் திருப்தி இல்லாமல் இரண்டாம் கட்ட முடிவுகளை மாற்றி அமைப்பது உண்டு.

 முதல் கட்ட நிவாரணத்தை அனைவருக்கும் வீடுகளில் அல்லாமல் ஒரு கட்டிடத்தில் நிவாரணப்பொருட்கள் வழங்க முடிவெடுத்திருக்கலாம் ஆனால் அதில் மிக குழப்பம் வந்திருக்கலாம், அல்லது காலதாமதம் வந்திருக்கலாம், எனவே இரண்டாம் கட்ட நிவாரணப்பொருட்களை நேரடியாக வீட்டிற்கேத் தந்துவிடலாம் என மாற்றி முடிவெடுக்கலாம்.

படிப்படியாக முடிவெடுத்தல்

நிதி வழங்கும் போது அல்லது பிள்ளைகளுக்குச் செலவுக்கு நிதி அனுப்பும் போது ஒட்டுமொத்தமாக அனுப்பிவிடாமல் தேவைக்கேற்ப அப்போதைக்கப்போது அனுப்பி வைப்பது போன்ற சில முடிவுகள். செயல்பாடுகளின் பல கட்டங்களை நிறைவேற்றும் போது ஒவ்வொரு கட்டத்தின் போதும் அதன் விளைவுகளைக் கண்டு முடிவுகளை மாற்றிக்கொள்ளலாம்.

எச்சரிக்கையாக இருத்தல்

பின்வரும் விளைவுகளை எதிர்நோக்கி எச்சரிக்கையாக இருந்து முடிவுகளை எடுத்தல். குறிப்பாக பங்குச் சந்தையில் நிதியை முதலீடு செய்பவர்கள் இந்த முறையை பின்பற்றுபவர்கள் அதிகம்.

நிபந்தனைக்குட்பட்ட முடிவு

சில சமயம் நாம் ஒரு முடிவு எடுப்போம் ஆனால் அது இன்னொரு விளைவுடன் இணைந்ததாக இருக்கும். நல்ல மதிப்பெண் பெற்றால் சினிமாவுக்கு அழைத்துப் போகிறேன், நல்ல நேரத்தில் வேலைகள் முடிந்துவிட்டால் வெளியே செல்லலாம் எனச் சொல்வது கூட நிபந்தனையோடு கூடிய முடிவு.

தாமதப்படுத்தப்பட்ட முடிவுகள்

சில சமயம் தாமதமாகும் முடிவுகள், தகவல்கள் திரட்ட பயன்படும். தகவல்களைச் சேகரித்துக்கொண்டு எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும்.

தாமதிக்கும் தருணத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தகவல்கள் அடிப்படையில் மாற்றுமுடிவுகள் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு மாற்றப்படலாம்.

சில சமயத்தில் தாமதத்தால் நல்ல வாய்ப்புகளை நழுவ விட்டுவிடக்கூடிய அபாயமும் உண்டு.

முடிவெடுக்கும் ஃபார்முலாக்கள்

முடிவு எடுக்க இரண்டு ஃபார்முலாக்கள் இருக்கின்றன. ஒன்று POWER formula.

P – Problem – பிரச்சினை என்ன என்று அடையாளம் கண்டுபிடிப்பது

O – Options – அதைத் தீர்க்க என்ன என்ன வழிமுறைகள் உள்ளன என ஆராய்வது, ஆலோசனைகள் கேட்பது

W – Weigh in – ஆலோசனைகளை வழிகளை அலசி ஆராய்வது, அதன் பக்க விளைவுகளை பின் விளைவுகளை பலன்களை ஆராய்வது

E – Enact – அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது

R – Review – நடைமுறைப்படுத்தியபின் ஆராய்வது, என்ன நடந்தது, என்ன நடக்கும் என எதிர்ப்பார்த்தோம் சரியாக நடந்ததா எங்கே தவறு நடந்தது எப்படி சரியாகச் செய்திருக்கலாம், இன்னும் எப்படி மேன்மையுறச் செய்திருக்கலாம்

இன்னொரு ஃபார்முலா: CCC

C – Challenge – பிரச்சினை என்ன என்று கண்டறிதல்

C – Choice – பிரச்சினையைத் தீர்க்க என்ன என்ன தெரிவுகள் உள்ளன என்று அலசி, நல்ல வழியைத் தேர்ந்தெடுத்து முடிவு செய்தல்

C – Consequence – முடிவு செய்து அதை செயலாக்கியபின் வரும் எல்லா பின்விளைவுகளுக்கும் பொறுப்பேற்றுக்கொள்ளுதல். அது நல்ல பலன்களாக இருந்தாலும் தீய விளைவுகளாக இருந்தாலும் முழுப்பொறுப்பேற்றுக்கொள்ளுதல்.

முடிவெடுத்தலும் திட்டமிடுதலை பாதிக்கும் என்பதால்தான் இத்தனை விவரமாகப் பேசுகிறோம்.

முடிவெடுப்பதோடு அதன் விளைவுகளுக்கும் முழுப்பொறுப்பேர்க சொல்லித் தரவேண்டும். அதுவே தலைமைப் பண்பையும் தோற்றுவிக்கும். 

சமூக உணர்ச்சி

சமூகக் கற்றலில் சமூகத்தின் பொறுப்பு முடிவெடுத்தல், பொறுப்பேற்றல் மற்றும் சமூக கற்றல்

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.