- தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் ஒற்றுமை
- தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள் – பகுதி- 2
- ‘நூறேள்ள பண்ட்ட’ (ஆயிரங்காலத்துப் பயிர்)
- நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியம் எழுதிய ஆண் எழுத்தாளர்கள் – பகுதி- 1
- கே. சிவாரெட்டி
- கவிஞர் பகவான், ஆசு பாபு ராஜேந்திர பிரசாத் & என்ட்லூரி சுதாகர்
- பாபிநேனி சிவசங்கர்
- சையது சலீம்
- கொடுத்துப் பெறுவதல்ல பெண்ணியம்
தெலுங்கில்: டாக்டர். சி. ஹெச். சுசீலா
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்
4. என்ட்லூரி சுதாகர் (1959 -2022) கவிஞர்

என்ட்லூரி சுதாகரின் கவிதைகள் கோதாவரி நதி அலைகளின் குளுமையையும், சாமானிய வாசகருக்குக் கவிதையின் இனிமையையும் அளித்தபடி, தலித் கவிதைகளால் தீப்பொறிகளை பறக்கவிட்டதோடு, பெண்ணியத்தையும் உண்மையோடு வெளிப்படுத்தின. பெண்களின் பிரச்சினைகள மென்மையாக அணுகினார்.
“அப்பா அடித்தபோது ஒரு மூலையில்
சுருண்டு படுத்தால்
அம்மாவைப் போல இருக்கும்”
என்று கூறும் கவிதையில் வெளிப்படும் தினசரி பிரச்சினை அனைவர் வீடுகளிலும் ஆணாதிக்க அகங்காரத்தால் பெண்கள் தணிந்து, குமைந்து போகும் காட்சி. கவிஞர் வர்ணித்தது இனிமையான கோதாவரியின் பின்னணியில் நிகழும் ஒரு பயங்கரமான நித்தியத்திற்கான எழுத்து நிவேதனம்.
கவிஞர் தன் மனைவிக்கு ஒரு பெண்ணாக எத்தகு கௌரவம் அளித்தார் என்பது அவர் எழுதிய ‘சஹச்சரி’ என்ற கவிதையின் கருத்தைப் பார்த்தால் புரியும்.
“நீ என்னில் பாதி பாகமா என்ன
நான்தான் உன்னில் பாதி”
என்று கூறுகையில் நமக்குக் கேட்கும் சரணம், காளிதாச மகாகவியின் “வாகர்தா விவஸம் ப்ருக்தௌ” என்ற ஒன்றையொன்று பிரிக்க முடியாத அர்த்தநாரீஸ்வர தத்துவம். அதனால்தான் “அநுபூதி கவித்துவத்தோடு, சமுதாய உணர்வை இணைத்துப் பாடிய சில நல்ல கவிஞர்களுள் சுதாகரும் ஒருவர்” என்றார் “துவாதசி நாகேஸ்வர சாஸ்த்ரி” (த்வா..நா. சாஸ்த்ரி).
‘வர்த்தமானம்’ (நிகழ்காலம்) என்ற கவிதைத் தொகுப்பில் இருக்கும் “மைசம்மா மரணம்” என்ற கவிதை அவருடைய சமூக அக்கறையின் உச்சம். (மைசம்மா என்பது கிராம தேவதையாக மாறிய ஒரு பெண்).
“பிள்ளைகளுக்கு குளிப்பாட்டுவது போல அத்தனை அன்போடு அவள் சாலையைப் பெருக்கினாள்” என்று மைசம்மாவில் தன் அன்னையைப் பார்த்த கவிஞர், எல்லா வித அழுக்குகளையும் அகற்றிவிடும் கங்காமாதாவைப் போல எல்லையில்லாத லோகங்களுக்குச் சென்றுவிட்ட மைசம்மாவுக்கு வாசகர்களின் இதயத்தில் கோவில் அமைத்தார்.
கே. சிவாரெட்டி ‘அவள் யாராயிருந்தால் என்ன?” என்ற கவிதையில் ‘மாலகொண்டம்மா’ வின் உழைப்பில் அழகைப் பார்க்கையில், ‘என்ட்லூ’ சுதாகர்’, மைசம்மாவில் தன் வேலையை அர்ப்பணிப்போடு செய்யும் தன் தாயைப் பார்க்கிறார்.
“வர்த்தமானம்” என்ற கவிதைத் தொகுப்பை கவிஞர் சி.நாராயண ரெட்டிக்குக் காணிக்கையாக்கினார் சுதாகர். “அம்மாவைப் போன்ற சி. நா. ரெ. அவர்களுக்கு” என்று தாய்மையில் இருக்கும் அபரிமிதமான சக்தியையும் பக்தியையும் எழுந்தருளச் செய்து இவ்வாறு காணிக்கையாக்கியது, சுதாகருக்குத் தன் தாயின் மீதிருக்கும் அபரிமிதமான பாசத்திற்குச் சின்னம். இது அவர் தன் குருவுக்கு அளித்த உயர்ந்த கௌரவம். பெண்ணியத்தையும் அதன் தேவையையும் பிரத்யேகமாகவும் அதே நேரத்தில் மறைமுகமாகவும் அழுந்தக் கூறிய எழுத்தாளர் ‘என்ட்லூரி சுதாகர்’.
5. கவிஞர் பகவான்
இவருடைய எழுத்தில் வெளிவந்த கவிதைகளில் ‘அநாதை, பனிமனிஷி (வேலைக்காரி)’ என்ற கவிதைகள் முக்கியமானவை. ஏழைகளுக்கு அரசாங்கம் மாதாமாதம் பொழியும் கருணை மழை என்ற பென்ஷன் எவ்வாறு கைக்குக் கிடைக்கிறது என்ற பரிதாபமான காட்சியை ‘அநாதை’ என்ற கவிதையில் சித்திரிக்கிறார் ‘பகவான்’. அந்தச் சிறிய அளவு பென்ஷனைக் கொடுப்பதற்கே லஞ்சத்திற்குப் பேராசைப்படும் குமாஸ்தாக்கள் செய்யும் வன்முறையை கவிதையில் வெளிப்படுத்துகிறார்.
‘பனிமனிஷி’ என்ற கவிதையில் பெயருக்குத் தான் வேலைக்காரியே தவிர பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் வீட்டோடு இணைந்து அன்போடு ஆட்சி செலுத்தும் வேலைக்காரியைப் பற்றிக் கூறுகிறார்.
“பம்பரமாகச் சுழன்றபடி
மிக நெருங்கிய உறவாக இருக்கிறாள்
எங்கள் வீட்டின் முன்னால் தெளிக்கும் நீராகிறாள்
எங்கள் வீட்டின் உள்ளே பளபளக்கும்
பாத்திரங்களாகிறாள்
என் உடலில் அணியும்
துவைத்த துணியாகிறாள்
கான்வென்ட் செல்லும் எங்கள் பேபிக்கு
பாடி கார்ட் ஆகிறாள்”
என்று மிக எளிமையான கவிதை வடிவில் வாசகர்களின் இதயத்தின் உள்ளே நேராக நுழைகிறார் கவிஞர். கிடைத்த அழகான வடிவங்களை சிறப்பாக அலங்கரித்து கண் முன் காட்டுகிறார். அவள் செய்யும் பணிகள் அனைத்தையும் ஒன்று திரட்டிய கவிதை நடை நம்மை வியப்பிலாழ்த்துகிறது. பம்பரமாகச் சுழலும் வேலைக்காரி ஏதாவது காரணத்தால் வரவில்லை என்றால்,
“எங்கள் கண்களில் திகில்
பாத்திரங்கள் காலைத் தடுக்கின்றன
பொருட்கள் கை நழுவுகின்றன
சலிப்பு சூழ்கிறது
எரிச்சல் வெளிப்படுகிறது”
என்று உள்ளத்தில் ஒட்டும் வண்ணம் இயல்பான நிலையைத் தோண்டி எடுக்கிறார். இங்கும் செயல்களோடு கூடிய நடையமைப்பை இனிமையாகத் தொடர்கிறார். மெளனமாக வீட்டு மனிதர்களின் சோம்பேறித்தனத்தைச் சுட்டிக் காட்டுகிறார். மீண்டும் காலையில் அவள் வருகிறாள்.
“அவளுடைய புன்னகை
மின்னல் போர்வையைப் போல
நேற்றைய இன்னல்களை
அழகாக மூடுகின்றன” என்று அழகான கவிச் சொற்களில் செதுக்குகிறார். அவளோடு அந்த குடும்பத்திற்கு இருக்கும் பாசத்தையும் உறவையும் அழகாகக் காட்சிப்படுத்துகிறார் கவிஞர்.
“உண்மையில் அவளைச் சுற்றி படர்ந்த கொடிகள் நாங்கள்
அவள் கைகளின் கருணையால் நாங்கள்
மூச்சு விட்டு உயிரோடு இருக்கிறோம்”
இது ஒரு விதத்தில் விட்டுப் பிரிய முடியாத, உயிருக்கும் உயிருக்கும் இடையில் இருக்கும் நுட்பமான உறவுக்கு உயர்ந்த இடத்தைக் கொடுக்கும் கவிதை. ஒரு பெண் தன் வாழ்க்கைப் பயணத்தில் இவ்வாறு தன் வீட்டை விட்டு இன்னொருவர் வீட்டுக்குச் சென்று, அவர்களில் ஒருவராக மாறுவது என்பது உயிர் வாழ்வதற்காக மட்டுமே. அந்த வீட்டு மனிதர்களின் இயலாமை அவளுக்கு பற்றுக்கோடானது. பிறர் கையை எதிர்பார்க்கும் அந்த வீட்டு மனிதர்களின் கையாலாகாத தனத்தை துவைத்து உலர்த்துகிறார் கவிஞர். இது பெண்ணியத்தின் இன்னொரு பக்கம்.
கவிஞர் பகவான் எழுதிய ‘மந்திரதண்டம்’ என்ற கவிதையில் உயிர் பெற்றெழுந்த ‘எண்களின் படகில்’ சர்க்கஸ் கூடாரம் தெரிகிறது. அதில் உயரமாக இருந்த ஒற்றைக் கம்பியின் மேல் நடந்து கொண்டிருந்த இளம்பெண்ணை கண் முன்னால் கொணர்கிறார் கவிஞர். எங்கே கால் வழுக்கி விடுமோ, எங்கே மன ஒருமைப்பாடு குன்றிவிடுமோ எந்தக் கணம் என்ன நடக்குமோ என்ற பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காக கத்தியின் மேல் நடப்பது போன்ற வாழ்க்கைப் பயணத்தில் சர்க்கஸ் தொழிலாளர்களின் கதையில் அந்த இளம் பெண்ணின் மேல் ஏற்படும் இரக்கம் உச்சத்தை எட்டுகிறது.
இந்த ஒரு சில உதாரணங்கள் மூலம் பகவானின் கவிதை, பெண்களைப் பற்றி, பெண்களின் வாழ்க்கையைப் பற்றி, பெண்களின் பிழைப்பு பற்றி, அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி, அவர்களின் நலன் பற்றி எத்தகைய உள்ளார்ந்த உணர்வை எழுத்துக்களின் நகாசு வேலைகள் மூலம் வாசகர்களின் இதயத்தில் நேராகக் கடத்துகிறது என்பதை அறியமுடிகிறது. அதனால்தான் அவருடைய கவிதைகள் பெண்களின் நலம் விரும்பியாக, அவர்களோடு அந்தரங்கமாகப் பேசுபவையாக அறியப்படுகின்றன.
6. ஆசு பாபு ராஜேந்திர பிரசாத் (1955 (70 வயது))
‘குண்டெ சப்புள்ளு’ (இதயத் துடிப்பு) என்ற புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பில் ‘கவிஞர் ராஜேந்திரா’ தூக்கி எறிந்து பேசுவது போலவும், அரசாங்கத்தை நோக்கி விமரிசனங்களை வீசுவது போலவும் கவிதைகளைப் படைத்துள்ளார்.
அவருடைய பெண்ணிய கருத்துக்கள் கொண்ட கவிதைகளில் ‘லைஃப் லாங்’ என்ற கவிதை முக்கியமானது.
“மனைவியை வெறும்
பெட் லைட்டாகப் பயன்படுத்தும் கணவனுக்கு
அவன் மனைவி ரெட் லைட்டாக மாறினால்
அவனுடைய வாழ்க்கை
மிட் நைட்டாக மாறிவிடும்”
மனைவியை அலட்சியமாகப் பார்த்து அவளுக்குக் கொடுக்க வேண்டிய அன்பையும் ஆதரவையும் அளிக்காவிட்டால் வரும் கடினமான பரிணாமத்தைக் கூறுகிறார். ஆங்கிலப் பதங்களில் கூறினாலும் அது வழக்கத்தில் இருக்கும் சொற்களாக இருப்பதால் சுருக்கென்று குத்துகிறது. சிறந்த செய்தியை உணர்வோடு கலந்து கூறி பெண்ணியக் கவிதையை படைத்துள்ளார் கவிஞர் ஆசு ராஜேந்திரா.
அடுத்த பகுதியில் பெண்ணிய கருத்துக்களை வெளிப்படுத்தும் மேலும் சில ஆண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பார்ப்போம்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
