- தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் ஒற்றுமை
- தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள் – பகுதி- 2
- ‘நூறேள்ள பண்ட்ட’ (ஆயிரங்காலத்துப் பயிர்)
- நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியம் எழுதிய ஆண் எழுத்தாளர்கள் – பகுதி- 1
- கே. சிவாரெட்டி
- கவிஞர் பகவான், ஆசு பாபு ராஜேந்திர பிரசாத் & என்ட்லூரி சுதாகர்
- பாபிநேனி சிவசங்கர்
- சையது சலீம்
- கொடுத்துப் பெறுவதல்ல பெண்ணியம்
நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியம் எழுதிய ஆண் எழுத்தாளர்கள்
தெலுங்கில்: டாக்டர். சி.ஹெச். சுசீலா
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்
3. కె.శివారెడ్డి (1943 – வயது 82)

டாக்டர் கே. சிவாரெட்டி எழுதும் கவிதைகளில் எல்லாம் ‘அவள்’ (பெண்) என்பவள் உள்ளும் புறமும் ஒளியோடு விளங்குபவள். ஒரு தாயாகத் தன் கடமையை நிறைவேற்றும் மதிப்பிற்குரிய பெண்மணி. மனைவியாக தன் பங்குக் கடமையை முழுமையாக நிறைவேற்றும் இல்லாள். மகளாகச் செல்லமாக வளர்பவள். சகோதரியாகப் பாசத்தைப் பொழிபவள். ஆனால் அவளுடைய முக்கியத்துவத்தை மறந்து அவளை எல்லா விதத்திலும் அடக்கியாண்டால் எத்தனை காலம்தான் பொறுத்துக் கொள்வாள்? சூழ்நிலை கைநழுவிப் போகும்போது பெண்ணியம் தலை தூக்கியது. துளிர்த்தது. வளர்ந்தது.
பெண்ணியம் தீவிரமான வடிவம் எடுப்பதற்கு முன்பாகவே கே. சிவாரெட்டி ஆணாதிக்கத்தை நிபந்தனையின்றி எதிர்த்து, பெண் சார்புடையவராக எழுதத் தொடங்கினார். “கைவிரல் குகை” (சேத்தி வேள்ள குஹ) என்று சிவாரெட்டி பயன்படுத்திய குறியீடு, திருமண அமைப்பு என்ற பெயரில் ஆண், பெண்ணை அடிமைப்படுத்தும் விதத்தைக் குறிக்கிறது.
“எப்போது நாம் தாயையும் மனைவியையும் புதல்வியையும் அவமதிக்கத் தொடங்கினோமோ அப்போதே பெண்ணை சுவரோரமாகத் தூக்கி வீசி, ஒரு கைப்பிடி சோற்றை யாசிக்கும் மாமிசப் பிண்டமாகச் செய்துவிட்டோம்”
“அவள் யாரானால் என்ன?” பக்கம். 13௦
சிவாரெட்டி. தனியாக பெண்ணியம் என்று எழுதாவிட்டாலும், தொடக்கம் முதலே பெண்களைப் பற்றி எழுதி வருகிறார். “சிவாரெட்டி எழுதிய அளவு விஸ்தாரமாக பெண்ணைக் கதைப் பொருளாகக் கொண்டு கவிதை எழுதிய தெலுங்கு கவி யாரும் இல்லை” என்கிறார் ‘பென்னா சிவராமகிருஷ்ணா’.
குழந்தையாக, சிறுமியாக, ஆணின் வஞ்சனைக்கு ஆளான தன்மானமுள்ளவளாக, உலகிற்கு மூக்கணாங்கயிறு கட்டி தன் பின்னால் இழுத்துச் செல்லும் துணிச்சல் மிக்கவளாக, தன் உயிரைப் பணயம் வைத்து பிள்ளைபேற்று இடுப்புவலியைச் சகித்துக் கொள்ளும் தாய்மை நிறைந்தவளாக, ஜீவகாருண்யத்தைப் பொழியும் தாயாக, ஆணின் அனைத்துவித அகங்காரங்களையும் பொறுத்துக் கொள்ளும் நிசப்தமான நடுத்தர வர்க்கத்து இல்லாளாக, ஸ்கூட்டி என்ற குதிரை மீது ஓட்டமெடுக்கும் இன்றைய தலைமுறை மாணவியாக, இளம் பெண்ணாக, வேலைக்குச் செல்பவளாக என்று மனித நேயத்தில் மறைந்துள்ள பெண்ணின் தத்துவத்தை உணர்ந்து, தன் கவிதைகளில் உணர்த்தினார் சிவாரெட்டி.
“ஒரு காலைப் பொழுதில்
என்னைச் சுற்றியிருக்கும் உயிர்ப்பின் சூழலாக மாறினாள்
என்னுள் இருக்கும் சைதன்ய வாரிசு கூட அவளே”.
பெண்ணின் சௌந்தர்யத்தில் இருக்கும் நளினத்தை, அழகையும் மென்மையையும் காற்றோடு இணைத்து கானம் பாடுகிறார் சிவாரெட்டி.
“காற்று அவளை விடாமல் அவளோடு எப்போதும் சேர்ந்து கொண்டு அலைகிறது. அவளுடைய சிரமமும், வியர்வையில் நனைந்த அவளுடைய வாசனையும் காற்றுக்கு மிகவும் பிரியம்” என்று மறைமுகமாகக் கூறுவது சிவாரெட்டியின் தனித்துவம்.
“சற்றைக்கொருதரம் வயிற்றைத் தடவிக் கொள்ளும் அந்தச் சிறுமியின் வயிற்றில் ஒரு போர் உள்ளது. ஒரு சொர்க்கமுள்ளது. ஒரு தேசமுள்ளது”.
வயிற்றைத் தடவிக் கொள்ளும் அந்தச் சிறுமியின் கண்களில் எத்தனையோ கனவுகள். எத்தனையோ எதிர்பார்ப்புகள். அந்த ஏழைச் சிறுமியின் வயிற்றில் இருக்கும் சிறு சொப்பனத்தை சிவாரெட்டியால் பார்க்க முடிந்தது. இது போன்ற கவிதைகளைப் படிக்கும் போது அவருடைய சிந்தனையில் ‘அவள்’ (பெண்) எத்தனை உயர்ந்தவளாக, உன்னதமானவளாக இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
“அவள் யாராயிருந்தால் என்ன?” என்ற கவிதைத் தொகுதியை ‘பெண்கள் அனைவருக்கும்’ என்று காணிக்கையாக்குவதில் அவருடைய விசாலமான கண்ணோட்டமும், பெண்கள் மீது அவருக்கு இருக்கும் மதிப்பும் வெளிப்படுகிறது.
“அன்பு செலுத்துவது என்பது பெண்களிடம் இயல்பாக உள்ள சிறந்த குணம். அந்த இயல்பை நான் பெண்களிடமிருந்து கற்றுக் கொள்கிறேன்” என்கிறார் சிவாரெட்டி (ஆந்திரஜோதி செய்தித்தாள், 8 ஆகஸ்ட், 2003)
“என் முதல் வணக்கம் என் அப்பாவின் அம்மாவான என் பாட்டிக்கே. அவள் என் கவிதையின் முதல் குரு” என்று ‘அவளை’ உயர்வாக ஏற்றி, ஆகாய சிம்மாசனசனத்தில் அமர வைக்கிறார் சிவாரெட்டி. அவள் சொல்லிக் கொடுத்த அபூர்வமான கருத்துக்களைக் குறிப்பிட்டுக் கூறுகிறார். “மனிதர்களின் உள்ளதைப் படிப்பது என்ற அபூர்வமான திறமையை அவளிடமிருந்து பிரத்தியேகமாகக் கற்றுக் கொண்டேன்” என்கிறார். தன் கிராமிய விவசாய வாழ்க்கையைக் கவிதையாக அழகூட்ட முடிந்ததற்குக் காரணமாக மூன்று அற்புதமான பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். முதலாவது நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விவசாய வேலைகளைச் செய்வதில் தேர்ந்த கரங்களாக அவருடைய மனம் என்னும் வீதியில் முத்திரைப் பதித்தவர் அவருடைய பாட்டி. அடுத்த பெண்மணி சகுந்தலம்மா. ஆண்களுக்குச் சரிசமமாக எதிர்த்து நிற்கக் கூடிய துணிச்சல் மிகுந்தவர். அடுத்து அவருக்குத் துணையாக நின்ற அவருடைய மனைவி. “என் வாழ்க்கைப் பயணத்தில் அவ்வப்போது தடை ஏற்படும்போது பெண்களை நினைத்துக் கொண்டால் அடுத்த கணம் மீண்டும் வாழத் தொடங்கி விடுவேன்” என்று அவர் கூறுவது வழக்கம்.
“பெண்ணுக்கு அனைத்து உறவுகளும் இருப்பார்கள். தாய் தந்தை, சகோதர்கள், கணவன், பிள்ளைகள் என்று எத்தனை பேர் இருந்தாலும் அவள் தனித்து விடப்படுகிறாள். இந்த தேசம் ஒரு பெண்மணி. அவள் பல யுகங்களாக புனிதமான ஒரு தாசியாக கருதப்படுபவள். அனைவரின் பிறப்புக்கும் வளர்ச்சிக்கும் காரணமான ‘அவள்’, அவளாகவே தனித்திருக்கிறாள்” என்று பெண்ணைப் பற்றி ஆணுக்கு இருக்கும் குறைவான மதிப்பீட்டை ஏளனம் செய்கிறார் சிவாரெட்டி.
“ஆண்களின் உலகத்தை நீ உள்ளங்கையில் எடுத்துக் கொண்டு கன்னத்தில் பளாரென்று அறை, தாயே” என்று வெட்கங்கெட்ட ஆணாதிக்கத்தைக் கோபத்தோடு எதிர்க்கிறார். “இத்தனை காலமாகக் கொடுமையான ஆணின் அகங்காரத்தைப் பொறுமையோடு சகித்துக் கொண்டிருப்பதற்காக உன்னை வணங்குகிறேன்” என்றார்.
“என் முழு உடலையும் இரண்டு கைகளாக மாற்றி உன்னை வணங்குகிறேன், தாயே” என்கிறார் ஒரு கவிதையில்.
“எத்தனை பாசம், எத்தனை அன்பு. எத்தனை கௌரவம்.
அவள் ஆதியானவள் அல்லவா
எல்லாவற்றையும் விடச் சிறந்தவள் தாயே அல்லவா
நமக்குக் கிடைத்த முதல் ஸ்பரிசம் அவள் தானே
நம் வாயில் முதலில் அமிழ்தத் துளியைப் பொழிந்தவள் அவளே அல்லவா” என்று பாடுகிறார்.
“எல்லா பொய்களின் இடையிலும்
கிடைக்கும் ஒரே உண்மை அவள்” என்றும்,
“பிரவகிக்கும் நினைவு நதிகளில்
நிரந்தரம் பாயும் உயிருக்குயிரான நீர் அவள்” என்றும்
மறக்க முடியாத நினைவுகளை அசை போடுகிறார் சிவாரெட்டி.
“என்னைப் பெற்று என் அம்மா சென்று விட்டாள்” என்று அந்த வெறுமையை மறைக்க முடியாமல், “என்னோடு கூட ஒரு சொல்லையும் பெற்றெடுத்தாள் போலும், முதல் தாய்ப் பாலின் துளியை என்னை விட அந்தச் சொல்லே குடித்திருக்கும்” என்று தன் கவிதைகளின் சிறப்பிற்கும், திறமைக்கும் தன்னுடைய அன்னை தன்னோடு சேர்த்து இரட்டை குழந்தையாக ஒரு சொல்லையும் பெற்றாள் என்று கூறுவது அவருக்குள் இருக்கும் பெண்ணிய கருத்துக்கு வெற்றிக் கொடியாக விளங்குவது யதேச்சையாக நிகழ்ந்தது அல்ல என்றே கூற வேண்டும்.
“கலம் கையில் பிடிக்கும் போதாவது
அம்மா உடனில்லாவிட்டால் அட்சரங்கள் எப்படிப் பிழைக்கும்
எப்படி வளரும்
எப்படிப் பறக்கும்” என்று தாயின் நினைவில் ஏங்குகிறார்.

“அம்மாவுக்கு ஒரு காணிக்கை” என்ற கவிதையில் அன்னையின் கடனைக் காணிக்கையால் தீர்க்க முடியாது என்றும் அவளுடைய உயர்ந்த உள்ளத்தின் முன்னால் எந்த வெகுமதியானாலும் அற்பமானதே என்றும் தாயை எட்டாத உயரத்தில் வைக்கிறார் கவிஞர். அவர் முதலில் கற்பனை செய்த வெகுமதி, ஒன்பது மாதங்கள் கருப்பை என்னும் ஊஞ்சலில் ஆட்டியதற்கு நன்றியாக, உல்லன் மெத்தை விரித்த ஊஞ்சலை அளிக்க நினைத்தது. அவளைத் தலையணையாக்கி அவள் மேல் காலைப் போட்டு அவள் அருகில் படுத்துறங்கியதற்கு நன்றியாக ‘காற்றுத் தலையணை’ கொடுக்க நினைத்தது. விரும்பிய ஐம்பது வித பலகாரங்களைச் செய்து அளித்ததற்கு நன்றியாக அவளுக்கு ஐந்து நட்சத்திர விடுதியில் பிரமாதமான விருந்து அளிக்க வேண்டும் என்று கற்பனை செய்தது. அவளுக்கு மருந்து வாங்கிக் கொள்ளாமல் தனக்கு புத்தகங்கள் வாங்கித் தந்த அந்த நாட்களுக்கு அடையாளமாக தான் எழுத்தாளர் என்பதால் ஒரு ஆயிரம் பக்க நாவல் எழுதித் தாய்க்கு அர்ப்பணிக்க நினைத்தது. அவள் விதவையானாலும் தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்து மணம் செய்வித்த தாய்க்கு மனைவியோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பரிசாகக் கொடுக்க நினைத்தது. இத்தனை பரிசுகளில் அவளுக்கு எது பிடிக்குமோ, எதை மெச்சிச் கொள்வாளோ என்று தெரிந்து கொள்ள நினைத்த கவிஞருக்கு “கண்ணுக்கு மேலேயும் கன்னத்தின் அருகிலும் வெள்ளை முடி என்னடா? கொஞ்சம் கருப்பு நிறம் வாங்கிப் பூசிக் கொள்ளடா, என் மகனே” என்று அறிவுரை கூறி தன் புதல்வனின் நலனைப் பற்றி கவலைப் படும் உயர்ந்த தாயுள்ளத்தின் முன்னால் எத்தனை வெகுமதிகள் ஆனாலும் வெறும் ஆடம்பரமே என்று நினைக்கிறார். அத்தனை சீரியசாகச் சென்று கொண்டிருந்த கவிதை ஒரேயடியாக இறுதி வாக்கியத்தில் நகைச்சுவையாக மாறினாலும். அவளுடைய் இதய கம்பீரத்தின் முன்னால் வெகுமதிகள் அனைத்தும் தூள் தூளாகிப் போவதை உணர முடிகிறது. பெண்ணிடம் இருக்கும் தாய்மைப் பண்புக்கு எழுத்தஞ்சலி அளிக்கிறார் கவிஞர்.
அடுத்த பகுதியில் பெண்ணியக் கருத்துக்களை வெளியிட்ட மேலும் சில ஆண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பார்ப்போம்.
மேலும்:
அவளுக்குத் தெரியாது

உன்னால் என்ன செய்ய முடியும்? அவளைத் தூக்க முடியுமா, அவளை உன் கைகளில் தடவ முடியுமா? உன் இரண்டு கண்களையும் எடுத்து அவள் உள்ளங்கையில் வைக்க முடியுமா? பல பிறவிகளாக நடந்து கொண்டிருக்கும் அவளது காலடியில் இவ்வளவு தூசியாக மாற முடியுமா? உன்னால் என்ன செய்ய முடியும்? உன் நாக்கின் நுனியால் அவள் கண்ணில் உள்ள துண்டை அகற்ற முடியுமா? உன் கூர்மையான பற்களால் அவள் இதயத்தில் உள்ள உடைந்த முள்ளை பிடுங்க முடியுமா? பூமியின் மேலோட்டத்தில் ஒரு கனிமமாக இருக்கும் அவளை உன்னால் தோண்டி எடுத்து தலையை உயர்த்த முடியுமா? ஒரு குழந்தையைப் போல அவளை உன் தோள்களால் பிரபஞ்சத்தில் சுமக்க முடியுமா? உன்னால் என்ன செய்ய முடியும்? நீ சிதைந்த முகம் கொண்டவன், பிளவுபட்ட நாக்கு கொண்டவன், தெரியாத உடற்பகுதியுடன் நடப்பவன், ரகசிய அடையாளங்களின் மையமாக இருப்பவன்? அவளைப் படிக்க முடியுமா, பூக்களையும் பூக்களையும் அணிந்தவள், யார் சுற்றி நடக்கிறாள், யார் அவளைக் கேட்க முடியும்

அவளை யார் கண்களால் பார்க்க முடியும்
அவள் என்ன செய்ய முடியும்
‘காட்டின் இரவு’ போல அவளை யார் வரவேற்க முடியும்
அவளை யார் மொழிபெயர்க்க முடியும்
அவளை யார் தொட முடியும்
அவளை யார் தொட்டுத் தொட முடியும்
அவளை யார் பிரமிப்பில் அசைக்க முடியும்
அவள் முன் கம்பீரமாக நடனமாட முடியும்
அவள் தலையை இதயத்தில் வைத்துக்கொண்டு யார் துக்கப்பட முடியும்
அழவும் அழவும் மென்மையாகவும் அழவும் முடியும்
உன் இருப்பை யார் மறக்க முடியும்
அவள் இருப்பை யார் அடையாளம் காண முடியும்
உன்னால் என்ன செய்ய முடியும்
செய்ய முடியாத பைத்தியக்காரனே, உன்னால் என்ன செய்ய முடியும்?
உனக்கு எப்படித் தேடுவது என்று தெரியுமா
மக்களிடையே மக்களைத் தேடுவது என்று தெரியுமா
உனக்குள் மூழ்கியிருக்கும் உன்னை அவளால் காப்பாற்ற முடியும்
அவள் அங்கே இருக்கிறாள், நீ அங்கே இல்லை.
(கவிதைத் தொகுப்பிலிருந்து, அவள் யாராக இருந்தாலும்)
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
