வயதுக்கேற்ற கல்வி முறை

This entry is part 7 of 12 in the series சமூக உணர்ச்சி

கல்வி என்பது வெறும் பாடப் புத்தகங்களில் இருந்து கற்பது மட்டுமல்ல. மாணவர்களின் உணர்வுகளையும், சமூக திறன்களையும் வளர்ப்பதும் கல்வியின் அங்கமே. சுய விழிப்புணர்வு என்பது மாணவர்கள் தங்களைப் பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்வதற்கான அடித்தளமாகும். இந்த கட்டுரையில், வெவ்வேறு வயதுப் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு எவ்வாறு சுய விழிப்புணர்வு திறன்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை கதைகளுடன் பார்ப்போம்.

சுரேஷ் ஒரு ஆசிய இந்திய மாணவன். அவனுக்கு மீன் உணவு பிடிக்காது. ஒருநாள் லஞ்ச் நேரத்தில், அவனுடைய அமெரிக்க நண்பன் மைக் மீன் சாண்ட்விச்சை எடுத்து சுரேஷிடம் சாப்பிட கொடுத்தான். சுரேஷ் பயந்து ஓடினான். அவன் பயந்து ஓடுவதைப் பார்த்த மைக்கிற்கு உற்சாகம் பிடிக்க அவன் இன்னும் உத்சேகத்துடன் துரத்தினான். லஞ்ச் அறையில் உள்ள மற்ற மாணவர்கள் சிரித்தார்கள். சுரேஷ் அவமானத்தால் அழுதான்.

ஆசிரியர் வந்து இருவரையும் டிடென்ஷனுக்கு அனுப்பினார். பிறகு மைக்கிடம் சொன்னார்: “சுரேஷுக்கு பிடிக்காது என்றால் அந்த உணர்வை எப்படி மதித்து நடந்திருக்கலாம்? மாறுபட்ட உணர்வுகள் இருப்பது தவறில்லை. சுரேஷை அச்சுறுத்துவது போல நீ செய்தது புல்லியிங். மன்னிப்பு கேட்கவேண்டும்.” 

சுரேஷிடம் சொன்னார்: “அஞ்சி ஓடுவதற்கு பதிலாக, மைக் உன் சக மாணவன்தானே. நின்று அவன் கண்களைப் பார்த்து ‘இது என் ரசனை சார்ந்த விஷயம், நாம் இருவரும் நண்பர்கள், எனக்கு பிடிக்காதென்று சொன்னால் விட்டுவிடு’ என்று சொல்ல உனக்கு ஏன் அச்சம்?” மறுநாள் வகுப்பில் இதை இன்னும் விரிவாகப் பேசினார்.

இந்தப் பருவத்தில் குழந்தைகள் தங்கள் உணர்வுகளை இனம் காண தொடங்குகிறார்கள். அப்போது நல்ல பாதையில் அழைத்துச் செல்ல இயலும். 6-8 வயதில் குழந்தைகள் உணர்வுகளை முதன்முதலில் அடையாளம் கண்டுகொள்ளத் தொடங்குகிরார்கள். அவர்களுக்கு எளிமையான வழிகளில் உணர்வுகளைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும். சுரேஷின் கதையில் வெளிப்படுவது போல, இந்த வயதில் மாணவர்கள் தங்கள் உணர்வுகளுக்கு பெயர் சொல்ல கற்றுக்கொள்கிறார்கள் – “நான் சந்தோஷமாக இருக்கிறேன்”, “எனக்கு கோபம் வருகிறது”, “நான் பயப்படுகிறேன்” என்பது போல.

வகுப்பறையில் உணர்வு அட்டைகள், கதைச் சொல்லல், பாத்திர வேடங்கள் மூலம் இந்த திறனை வளர்க்கலாம். மாணவர்கள் “சுரேஷ் எப்படி உணர்ந்திருப்பான்?”, “மைக் எப்படி உணர்ந்திருப்பான்?” என்ற கேள்விகளை விவாதிக்கலாம்.

10 வயது ப்ரியா வீட்டில் தாத்தா நோய்வாய்ப்பட்ட செய்தி கேட்டவுடன் வயிற்றில் வலி வந்தது, கைகள் நடுக்கம் வந்தது போல உணர்ந்தாள். பள்ளியில் நண்பன் ராம் தன் பூனையின் இறப்பைப் பற்றி சொன்னபோது அவன் கண்களில் கண்ணீர் வந்தது, ஆனால் அவன் மிக சாதாரணமாக பேசினான். அதே செய்தியை கேட்ட பிரியாவுக்கு வருத்தம் வந்தது ஆனால் உடல் வலி வரவில்லை.

இந்த வயதில் மாணவர்கள் உணர்வுகளுக்கும் உடல் மாற்றங்களுக்கும் இடையேயான தொடர்பை புரிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள். ப்ரியாவின் அனுபவம் போல, அவர்கள் இதயத் துடிப்பு, வியர்வை, தலைவலி போன்ற உடல் குறிப்புகளை அடையாளம் காணுகிறார்கள். மேலும், ஒரே நிகழ்வுக்கு வெவ்வேறு மக்கள் வெவ்வேறு விதமாக உணர்ச்சி வெளிப்படுத்துவதையும் புரிந்துகொள்கிறார்கள்.

வகுப்பில் உணர்வு தெர்மோமீட்டர், உடல் உணர்வு வரைபடம் பயன்படுத்தி “உங்கள் உணர்வுகள் உங்கள் உடலில் எந்த மாற்றங்களை ஏற்படுத்துகின்றன?” என்ற கேள்விகளை விவாதிக்கலாம். தாத்தாவின் நோய் அவளுக்கு கொடுத்த மாற்றத்திற்கும் உற்ற நண்பனின் துக்கம் கொடுக்கும் உணர்வுக்குமான வேறுபாட்டை விளக்கிச் சொல்ல வேண்டும்.

13 வயது அர்ஜுன் கடந்த மாதம் மிகவும் சந்தோஷமாக இருந்தான் – பள்ளி கால்பந்து அணியில் சேர்ந்தான். ஆனால் இந்த மாதம் வீட்டிற்கு வரும்போது எரிச்சலாக இருக்கிறான். அவன் தன் டைரியில் எழுதினான்: “காலையில் கேப்டனிடம் சண்டை, மதியம் அம்மாவிடம் கோபம், மாலையில் தம்பியிடம் எரிச்சல்.” – தேர்வு நேரம் நெருங்கும்போது தான் இப்படி எரிச்சலாக இருப்பதை அவனே உணர்ந்தான். அது அதீத அழுத்தம் காரணமாக இருக்கலாம் எனத் தெரிந்து கொண்டான்.

இந்த பருவம் உணர்ச்சி ரீதியாக மிகவும் சவாலான காலம். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக உணர்வுகள் அடிக்கடி மாறும். அர்ஜுனின் அனுபவம் போல, மாணவர்கள் காலப்போக்கில் மாறும் உணர்வுகளைக் கண்காணிப்பதும், தங்கள் உணர்வுகளையும் எதிர்வினைகளையும் பாதிக்கும் காரணிகளை அடையாளம் காணுவதும் கற்றுக்கொள்கிறார்கள்.

உணர்வு டிராக்கிங் சார்ட், தியானம், டைரி எழுதுதல் போன்ற பயிற்சிகள் மூலம் “மன அழுத்தம் நமது உணர்வுகளை எப்படி பாதிக்கிறது?” என்பதை விவாதிக்கலாம்.

16 வயது மீரா கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு தயாரானாள். பெற்றோர் அவள் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என விரும்பினர், ஆனால் அவளுக்கு கலை படிக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு நாள் மிகவும் மன அழுத்தத்துடன் இருந்தபோது, அவள் சிந்தித்தாள்: “என் பலம் என்ன? நான் எப்போது மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன்? எனக்கு எது மன அமைதி தருகிறது?”

 ஓவியம் வரையும்போதும், கவிதை எழுதும்போதும் மன அமைதி பெறுவதை தெரிந்து கொண்டாள். அவளிடம் பொறுமை இருக்கிறது, கற்பனை திறன் இருக்கிறது. இந்த உணர்வை வைத்து அவள் பெற்றோரிடம் தான் ஆர்ட் சார்ந்த துறையை எடுத்துக்கொள்ளப் போவதைப் பற்றிப் பேசினாள்.

இந்த வயதில் மாணவர்கள் சிக்கலான உணர்ச்சிகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள். மீராவின் கதையில் வெளிப்படுவது போல, அவர்கள் சவாலான சூழ்நிலைகளில் உதவக்கூடிய தனிப்பட்ட பலங்களையும் வளங்களையும் அடையாளம் காணுகிறார்கள். மன அழுத்தத்தை நிர்வகிக்கும் திறன்களையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

வாழ்க்கைத் திறன் பயிற்சி, பலங்கள் கண்டறிதல் பயிற்சி மூலம் “கடினமான முடிவுகளை எடுக்கும்போது உங்கள் பலங்களை எப்படி பயன்படுத்துவீர்கள்?” என்ற விவாதங்களை வகுப்பறைகளில் நடத்தலாம்.

22 வயது ராஜ் ஒரு இன்ஜினியர். COVID-19 தடுப்பூசி கட்டாயமாக்கும் நிறுவன கொள்கையைப் பற்றி கலந்துரையாடலில் பங்கேற்றான். – “இது எங்கள் சுதந்திரத்தை பறிக்கிறது.”என்று அவனுக்கும் அவன் நண்பகர்கள் சிலருக்கும் ஆரம்பத்தில் கோபமாக வந்தது. ஆனால் பிறகு “நாம் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறோம்?”என அவர்களே சிந்தித்தார்கள்

“என் குழந்தைப் பருவத்தில், எங்கள் குடும்பத்தில் எப்போதும் மருத்துவர்களை நம்ப முடியாது என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அதனால்தான் நான் எதையும் கட்டாயப்படுத்தும்போது எதிர்க்கிறேன்.” பல வாக்சீன் எதிர்பாளர்களின் கருத்துக்கள் வேறு குழப்பிவிடுகிறது. இந்த உணர்வை வைத்து அவர்கள் குழம்பிப்போயிருந்தார்கள். பிறகு மற்றவர்களின் கருத்துகளையும் கேட்டு, தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்தான்.

வளர்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களையும் தனிப்பட்ட அடையாளத்தையும் தங்கள் உணர்ச்சி வெளிப்பாடுகளுடன் எவ்வாறு இணைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். ராஜின் அனுபவம் போல, அவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்கள் தற்போதைய நிகழ்வுகளுக்கான உணர்ச்சி வெளிப்பாடுகளையும் பார்வைகளையும் எப்படி வடிவமைத்துள்ளன என்பதை ஆராய்கிறார்கள்.

குழு விவாதங்கள், கருத்து பரிமாற்ற பயிற்சிகள் மூலம் “உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் உங்கள் கருத்துகளை எப்படி வடிவமைத்துள்ளன?” என்ற ஆழமான விவாதங்களை நடத்தலாம்.

சுரேஷின் பயத்தில் இருந்து ராஜின் சுய பிரதிபலிப்பு வரை, சுய விழிப்புணர்வு என்பது ஒரே நாளில் வளரும் திறன் அல்ல. இது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு பயணம். ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல் தேவை.

ஆரம்ப காலத்தில் உணர்வுகளை அடையாளம் காணுவதில் இருந்து, வளர்ந்த பிறகு அந்த உணர்வுகளின் ஆழமான காரணங்களை புரிந்துகொள்வது வரை – இந்த பயணத்தில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது.

சுய விழிப்புணர்வு வளர்ச்சியானது மாணவர்களை வெறும் புத்தக அறிவு மட்டுமல்லாமல், வாழ்க்கையில் வெற்றிபெற தேவையான உணர்ச்சிப்பூர்வ திறன்களுடனும் தயார்படுத்துகிறது. பெற்றோர்-மாணவர் மோதலில் இருந்து பணிச்சூழல் சவால்கள் வரை – எல்லா நிலைகளிலும் தங்களை புரிந்துகொள்ளும் திறன் அவர்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

 ஒவ்வொரு மாணவனும் தனித்துவமானவர். எனவே, இந்த வழிகாட்டுதல்களை அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துப் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஒரு சிறந்த மனிதராகவும், ஆரோக்கியமான சமூகத்தின் உறுப்பினராகவும் வளர முடியும். அதனால்தான் கல்வித் திட்டம், கல்விமுறை கலாசாரம் மற்றும் வளர்ச்சிநிலைகளுக்கு ஏற்ப அமைய வேண்டும்.

சமூக உணர்ச்சி

சமூக உணர்ச்சி கற்றலும் நேர்மறையான பள்ளி சூழலும் வாழ்க்கை: இடரின் நீர்நிலை, முயற்சியின் படகு

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.