பூமியில் அரசர்களின் அனுராகம்

சித்திரம் அருண்

ஆகாரம் உண்ணச் செல்லும் முன் ஹம்ச வேகனுக்கு தன் வெண்ணிற ஆடைகளையும், தான் பயன் படுத்தும் உயர் ரக சந்தனம் , தனது  இடையில் கட்டிக் கொள்ளும் கடீ சூத்ரம்- அதே போன்ற இடைக் கச்சுகள்,  பத்ம ராக மணிகள் பதித்த கர்ணாபரணம் – காதுகளில் அணியும் ஆபரணம்,  சுவையான உணவுப் பண்டங்கள் என்று கொடுத்தனுப்பினான். 

அதன் பின், இந்த அதிசயமான குடையைக் கண்டு பிரமித்த ஆதவனும் அவசரமாக வருணனிடம் இந்த செய்தியைச் சொல்ல விரைபவன் போல மகா சமுத்திரத்தில் மறைந்தான்.  மாலை நேரம் ஆதவன் மலை முகட்டில் அல்லது சமுத்திரத்தில் இறங்குவதாக வர்ணிக்கப் படும். அது கவியின் ரசனையின் வெளிப்பாடு. . ஆபோக என்ற கொற்றக் குடையின் பெருமை சொல்லப் படுகிறது.  வழக்கம் போல கமல வனங்களிடம் விடை பெறக் கூட மனமில்லாமல் வருணனின் திசையான மேற்கில் மறைந்தான்.   பூமியில் அரசர்களின் அனுராகம் போல, சந்த்யா ராகம் (அந்தியின் சிவந்த நிறம்) உலகை வியாபித்தது.  திசைகள் கௌடனின் குற்றம் போன்று கருமையை ஏற்றுக் கொண்டன.   

வித விதமான பூக்கள் சந்த்யா கால  பூஜையில் பயன் படுவது போல வானத்தில் தாரகைகள் நிறைந்தன.  மேகக் கூட்டங்கள் அந்தி சாயும் சமயம் குறைந்த ஒளியில் விரைவதைக் காண  மத ஜலம் பெருக விரையும் யானைகள் போன்று இருந்தனவாம். ரோஹிணி ரமணன் – சந்திரன், வானத்தில் தன் ஆட்சியை துவங்குவது போல வானத்தில் நிறைந்தான். 

அந்த சமயம், தன் அருகில் இருந்தவர்களை அனுப்பி விட்டு தனிமையில், ஹம்ஸ வேகனிடம் ‘சொல்லு, என்ன செய்தி’ என்று கேட்டான்.  அவனும் தலை வணங்கி சொல்ல ஆரம்பித்தான்.  ‘தேவ! முன் ஒரு காலத்தில் பூமிக்கு வராக அவதார பகவானின் சம்பந்தத்தால் நரகன் என்ற மகன் பிறந்தான்.  அவன் ரசாதளம் எனும் பாதாளத்தில் இருந்தான். மகா வீரனான  அவனிடம் பயந்து லோக பாலர்கள் பணிந்தனர்.  (திசைகளின் பொறுப்பை ஏற்ற தேவர்கள்)  ஆதவனே கூட அவனிடம் அடக்கமாக தன் இயல்பான வீர்யத்தை காட்டாமல் அவன் அழைப்பு இல்லாமல் பாதாள லோகத்தில் செல்லாமல் இருந்தான். (பாதாளம் இருட்டில் மூழ்கி இருக்குமாம்)  அந்த நரகனின் வம்சத்தில் வந்தவர்கள் பக தத்த, புஷ்ப தத்த, வஜ்ர தத்த  என்பவர்கள்.  அவர்கள் மகனுக்கு மகன் என்று பல தலை முறைகள் கடந்த பின் பிறந்தவன் போல மகா ராஜா பூதி வர்மன் என்பவனுடைய பேரன் சந்திர முக வர்மனுடைய மகன்,  கைலாஸ மலையில் இருக்கும் மகா தேவனின் ஆற்றலுக்கு சமமான ஆற்றலுடன்  சுஸ்திர வர்மா என்ற மகா ராஜாதி ராஜன் பிறந்தான். அவனை தேஜஸ் என்பவைகளின் ஒட்டு மொத்த உருவமான சந்திரன் போன்றவன் என்று நாட்டு மக்கள் புகழ்ந்தனர்.   அகங்காரம் என்பதன் முன் பிறந்தவன் என்பது போலவும்,  பிறப்பிலேயே அகங்காரத்துடன் பிறந்தவன் போலவும் உருவானவன்.    சிறு வயது முதலே, தன் அன்பை தெரிவிக்கும் விதமாக தானங்கள் செய்தான்.வெறுப்பை கக்குபவனாக மற்ற அரசர்களை அழித்தான்.  செல்வம் அவனிடம் நிறைந்தது. சமுத்திரத்தின் ரத்தினங்கள் பொருட்டல்ல, சங்குகளை சேகரித்தான்.  மலைகளின் கம்பீரத்தை மட்டும் எடுத்துக் கொண்டான். அவனுக்கு ஸ்யாமா தேவி என்ற மனைவி. அவர்களுக்கு மகன், பாஸ்கரத்யுதி- ஸூரியனின் ஒளி- என்ற பெயர். மற்றொரு பெயர் பாஸ்கரவர்மா.  கங்கா புத்திரன் பீஷ்மர் போல சமுத்திர ஜலத்தில் பிறந்தவன்.  அந்த இளம் வயதிலேயே, பகவான் பரம சிவனைத் தவிர யாருக்கும் தலை வணங்கேன் என்று சபதம் செய்தான். அது எப்படி சாத்தியமாகும், மூன்று வழிகள். ஒன்று, மூவுலகையும் தான் வெற்றிக் கொண்டு வந்தால் முடியும். அல்லது மரணத்தால் அன்றி மற்றொரு வழி  உங்களைப் போல பலசாலியாக, ஆற்றல் மிகுந்த மற்றொரு அரசனை மித்ரனாக பெற்றால் முடியலாம்.  அரசர்களுக்குள் நட்பு அதற்கான பலனை முன்னிட்டுக் கொண்டு ஏற்படுவது. எப்படிபட்ட  பலன்? அதற்கான ஒரு வழியாக தங்களுடன் நட்பை வேண்டுகிறான்.   தேவனுடைய புகழ் பரவி இருப்பது போலவே,  உங்களுடைய புஜ பலமும் அளவு கடந்த ஆற்றலுமே அவனை உங்கள் பால் ஈர்த்துள்ளன   மற்றொரு சகாயம் தங்களுக்குத் தேவையில்லை என்பதை உணர்ந்தவன் தான்.  உங்களின் சாகச பிரியமான குணத்தை மதிக்கிறான். நால் வகை சமுத்திரங்களையும் ஒரு எட்டில் கடக்க விரும்பும் தங்களுக்கு பூமியின் ஒரு துண்டு போன்ற இந்த அரச பதவி என்ன திருப்தியைத் தர முடியும்.  சுந்தரிகளான பெண்களை பரிசாக அனுப்ப நினைத்தான். அது வீண் என்று உணர்ந்து கொண்டான்.  ஏனெனில் உங்களுடைய முக கமலமே சாக்ஷாத் திருமகளின் முகமே.  அதனால் எந்த பொருளாலும் உங்கள் கவனத்தை தன் பால் இழுக்க முடியாது என்று உங்களிடம் தன் பிரார்தனை- வேண்டுகோளையே முன் வைக்கிறான்.  ப்ராக்ஜ்யோதிஷ  தேச அரசன், உங்கள் நட்பையே பெரிதாக மதிக்கிறான். அந்த நட்பு என்றும் முறியாததாக இருக்கும் என்று திடமாக நம்புகிறான்.  அனங்கன் என்ற மன்மதனை எரித்த பகவான் ஸ்ரீ ருத்ரனுக்கு ஏகபிங்கள- ஏகபிங்களேஸ்வரி என்று தாக்ஷாயணியின் ஒரு பெயர் – ,தசரத அரசன் இந்திரனுக்கு நண்பனானது போலவும்,  தனஞ்சயன் ஸ்ரீ க்ருஷ்ணனின் சகா வானது போலவும், துர்யோதனனுக்கு கர்ணன் போலவும், வசந்தனுக்கு (வசந்த காலத்துக்கு) மலய மாருதம் போலவும், இணை பிரியாத  தோழமையை வேண்டுகிறான்.  தேவன் மனதிலும் இந்த தோழமை நன்மை பயக்கும் என்று தோன்றினால் தேவையின்றி காலம் கடத்துவானேன்.   ஆணையிடுங்கள்.  மகா விஷ்ணுவின் மந்தர கிரி போன்ற, பிரகாசமான கோடிக் கணக்கான கேயூரங்களும், உயர் மணிகள் கட்டிய மலை சிகரங்கள் போன்ற தேவனின் அத்யந்த பிரியமான காமரூபம் (தற்கால வடகிழக்கு எல்லை பிரதேஸம்- அஸ்ஸாம் மாநிலம்) என்ற பிரதேசத்தின் அதிபதி பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள்.  ப்ராக்ஜ்யோதிஷ நகர லக்ஷ்மி மிகவும் மகிழ்வாள்.  பார்க்க பார்க்கத்  தெவிட்டாத இந்த லாவண்யம்,  விமலமான சௌபாக்யம் போன்றதும், அமுதமே தாரையாக பொழிவது போன்ற சந்திர முகமும், அந்த ராஜ்ய லக்ஷ்மியை மகிழச் செய்யட்டும்.  தேவன் சம்மதிக்காவிடில் அதையும் சொல்லுங்கள். நான் திரும்பிச் சென்று  உங்கள் பதிலாக எங்கள் அரசனிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதையும் சொல்லுங்கள்.’  என்று அவன் சொல்லி முடித்தான். 

ஹர்ஷன் மனதில் முன் குமாரனைப் பற்றி அறிந்த விஷயங்கள் நினைவுக்கு வந்தன. தான் கேள்விப் பட்டிருந்தவரை நல்ல அரசன், என்று மதிப்பிட்டிருந்தான்.  ஆபோக ஆதபத்ரம்- ஆபோக என்ற உயர்ந்த குடையைக் காணும் முன்பே அந்த அரசு செல்வமும், இயற்கை வளமும் மிக்க நாடு என்பதை அறிந்திருந்தான்.  ஓரளவு லஜ்ஜையுடனே, இந்த அளவு தன்னிடம் நம்பிக்கையும், நல்லெண்ணமும் கொண்ட குமாரனா என்ற பிரமிப்புடனும், பதில் அளித்தான்.   “ஹம்ஸ வேக! எப்படிச் சொல்வேன். இந்த அளவு மகாத்மா, நல்ல குலத்தில் வந்தவன், நல் வினைகளின் பலனே செல்வமாகவும், சிறப்பாகவும் பெற்ற அரசன்,  காணும் முன்பே என்னிடம் அன்புடன் தோழமையை வேண்டுகிறான் என்பது நான் கனவிலும் காணாத உண்மை. இதற்கு உவமையாக சமஸ்த உலகையும் தகிக்கும் ஆதவன், மெல்லிய கமலங்களிடம் குளிர்ந்தவனாக  மென்மையாக இருப்பதைத் தான் சொல்ல வேண்டும்.  குமாரனின் உதாரமான குணத்துக்கு தலை வணங்குகிறேன் என்று சொன்னால் எப்படி சமமான நட்பாகும்.   திசைகள் தங்கள் சேவைக்காக அரசனிடம் ஊதியமா வேண்டுகின்றன. (திசைகளை வெல்வது- அந்த திசைகளில் உள்ள அரசை வென்று வெற்றி வாகை ஸூடுவது என்ற பொருளில் சொல்லப் படுகிறது)  மென்மையான குமுத மலர்கள், இவைகளை பொதுவாக மென்மையான குணங்கள் கொண்ட நல்லவர்களுக்கு உவமானமாக சொல்லப் படுகின்றன-  இவைகளை மலரச் செய்ய எவரேனும் சந்திரனிடம் வேண்டினார்களா என்ன?  குமாரனின் சங்கல்பம், அவன் விருப்பம் உயர்வானது. தானே வீர்யம் உடையவன் தான். நானும் அவனுடன் கையில் வில்லேந்தி நின்றால் யாரையும், சிவ பெருமானை அன்றி எவரையும் ஏன்  வணங்க வேண்டும்?  இந்த சபதத்தை நானும் ஏற்கிறேன். எனக்கும் அதே போல சிவ பெருமானையன்றி யாருக்கும் தலை வணங்கும் எண்ணம் இல்லை தான்.  தோழமைக்கு இதுவே பெரிய பலம்.   விரைவில் குமாரனை சந்திக்க என் ஆவல் அதிகரிக்கிறது.’ 

இதைக் கேட்டு ஹம்ஸ வேகன் பணிவாக கேட்டான். ‘தேவ! இது ஒன்று தானா , இன்னமும் ஏதும் தேவையானாலும் எங்கள் அரசனிடம் தெரிவிக்கிறேன், சொல்லுங்கள்’ என்றான்.  எங்கள் அரசன் அகங்காரம் மிகுந்த வைஷ்ணவன்.  இவர்களின் தன்னம்பிக்கை பிரசித்தி பெற்றது.  அது கிடக்கட்டும். எங்கள் தலைவனான அரசனின் வம்ச பெருமையை மேலும் விவரிப்பானேன். இதைக் கேளுங்கள்.  

 ஒரு வயதுக்கு மேல், தாயார் விதி வசம் அடைந்து விட்டால், பணிப்பெண் பொறுப்பை ஏற்பது போல   முதுமை என்ற பணிபெண் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விடுகிறாள். அவளிடம் வேறு வழியின்றி  அடைக்கலம் ஆகிறார்கள்.  தன் தேவைகளுக்கு கூட  தானாக செய்து கொள்ள இயலாமல் மற்றவர்களை எதிர்பார்க்கும் சங்கடமான  நிலை வந்து சேருகிறது.   திருப்தியடையாத மனதில் த்ருஷ்ணா என்ற ஆசை இன்னமும்  மனைவி போல தொடருகிறது.  இளம் வயதின் மமதையில் செய்த சங்கல்பங்கள், தீர்மானங்கள், அடங்காத புத்திரர்கள் போல மேலும் வாட்டுகின்றன.  உரிய வயதை தாண்டிய பின்னும் மணமாகாத பெண்கள் இன்னமும் செல்வந்தனான, ஆரோக்யமான பதியையே தேடுவது போல என் நிலை ஆகி விட்டது. உறவினர்கள் என்ற பெயரில் என் வீட்டில் வந்து கூடுகிறவர்கள் மனதில் உறவா இருக்கிறது, அவர்களால் உதவியும் இல்லை, மன நிம்மதியும் இல்லை.  அருகில் இருந்த பழகிய ஊழியர்கள், அவர்களும் முதியவர்கள் அல்லது பழைய விஸ்வாசம் குறைந்து போவதால் விடவும் முடியாமல், அவர்களால் முன் போல உதவியும் பெற முடியாமல் தவிக்க நேரிடுகிறது.  தன் வசம் இல்லாத தனது புலன்களே உதவாத நிலையில், சக்தியிழந்தவனாக,   இது வரை அனுபவித்த விஷய வாசனைகளையே தேடும் தேகம் அவைகளையே நினைத்து ஏங்கி அடையும்  மன வருத்தம் உமியில் மூட்டப்படும் அக்னியின் தாக்கதுக்கு சற்றும் குறைந்தது அல்ல.  

ஏற்கனவே யாரோ தாக்கி வருந்தும்  மான் குட்டி, கோட்டை வாயில் நுழைய முயன்ற சமயம் வாயில் காப்பவன்  தடுத்து நிறுத்தியது போதாது போல அடுத்தடுத்து மற்றவர்களும் அடித்து துன்புறுத்துவது போல, இவன் ஏதோ செல்வம் தரும் மரத்தை வைத்திருப்பது போல, அந்த செல்வத்தை அபகரிக்கும் நோக்கத்துடனேயே பொய்யான வணக்கம், யாசகனாவது யாசிப்பான், இவர்கள் யாசிக்காமலே அபகரிக்கும் எண்ணத்துடனே வளைய வருபவர்கள், சமயம் கிடைத்த பொழுது  உள்ளே வந்து விடுகிறார்கள். தன் மானம் இல்லாத பாமரர்கள். 

மகர கேது- மன்மதன் அகாலத்தில் வந்து தன் தவத்தைக் கெடுத்தான் என்று ஈஸ்வரன் தன் கண்ணால் பொசுக்கினார்.  ப்ரளயமே வந்து கொண்டிருக்கிறது, ஆனாலும் முகம் மட்டும் சிவந்து காணப் படும் குரங்குகள் போல ஆசை விடுவதில்லை (  ராகம்- சிவந்த நிறம், ஆசை  இரு பொருள்.)  குரங்கின் முகம் சிவப்பு, மனிதனுக்கு ஆசை விடுவதேயில்லை.  கோபம் முகத்தை சிவக்கச் செய்வது – கோபத்தின் மனிதன்  முகமும் குரங்கின் முகம் போல ஆகி விடுகிறது.  

தேவையில்லாமல் த்ரிசங்கு போல எதையோ யாசித்து  இரண்டு உலகமும் இல்லை- பூலோகத்தில் அரசனாக கௌரவமாக இருந்தவன், அனாவசிய ஆசை. உடலுடன் தேவ லோகம் போக வேண்டும் என்று.   குரு மறுத்தார். மற்றவர்கள் ஏளனம் செய்தனர்  இருந்தும் பேராசை விடவில்லை. விஸ்வாமித்திரரை சரண் அடைந்தான். அவரோ, வாக்கு கொடுத்த காரணம் ஒன்றே – அவனை தன் தவம் வீணாக, யாக முடிவில் தேவ லோகம் அனுப்பினார்.  தேவ லோகத்தில் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. விழுந்தான்.  அதன் பிறகும் விஸ்வாமித்திர் கோபத்துடன் அங்கேயே நில் என்று சொல்லி  அவனுக்காக ஒரு உலகமே உண்டாக்கி கொடுத்தார் என்று சொல்வர்.   முடிவு, அந்தரத்தில் நிற்கும் படி ஆயிற்று.   இரண்டு நன்மைகளும் கை விட்டுப் போன நிலையை திரிசங்கு சுவர்கம் என்று சொல்வது வழக்கமாகி விட்டது- இரவோ, பகலோ தலை கீழாக நிற்கிறான்.  

குதிரை ஒரு கவளம் புல்லைக் கொடுத்து தன் வசப் படுத்திக் கொண்ட எஜமானனுக்கு அனவரதமும் உழைக்கிறதே, என்ன நினைக்கும். மனதினுள் தன் கையாலாக தன்மையை, அடிமையாக உழைப்பதை வெறுத்துக் கொண்டிருக்கும்.  உணவை நிறுத்தி தற்கொலை செய்து கொள்ள துணிந்தவன் போல மனதினுள் வாட்டம் இல்லாமலா இருக்கும்.  சரீரம் பலமிழக்க மனைவி முகத்தை திருப்பிக் கொண்டு போனாலும் நாய் போல பின் தொடருவான்.   மறைந்த மூதாதையருக்காக பிண்டம் (ஓரு கவளம் அன்னம்) தருவதை ஏற்கும் காகம் தன்னையே நொந்து கொள்ளாதா? இது என்ன வாழ்க்கை, மயானத்தில் இடும் சோறு, மறுத்து சொல்லவா முடியும். பலி புஜ என்று பெயர் வேறு. நாக்கின் சபலம் ஆட்டுவிக்கிறது. அனாவசியமாக அதன் ஆயுளை படைத்தவன் நீட்டி கொடுத்து விட்டான். (காகம் நீண்ட நாள் வாழும் என்று சொல்வர்)  

இந்த ஜீவனுக்கும் இருப்பவனிடம் இல்லாதவன்,  செல்வத்தை யாசித்தோ, பிடுங்கிக் கொண்டோ செல்ல நினைக்கும் மனிதனுக்கும் என்ன வேறு பாடு.   அரசனை மகிழ்விக்க அவன் மனம் மகிழ புகழ்ந்து பேசுபவன்,  பேச்சு இனிமையாக, உள்ளத்தில் அன்பு இல்லாமல் இருப்பவர்களை பன்றிக் குட்டிகள் போல, ( முகம் மட்டும் சிவந்து காணப் படும் பன்றிகளின் குட்டிகள்) 

மதாரி, குரங்காட்டிக்கு வசப்படுத்தும் வித்தை தெரிந்திருக்கும்.   அவன் அழைக்க ஓடி வரும் வேதாளம் அது போல அரசனிடம் பயம் என்ற ஒரே காரணத்தால்  அருகிலேயே இருப்பவர்கள். 

சித்திரத்தில் காணும் வில்லும் அம்பும் எந்த அளவு பயனோ அதே தான், வாய் ஓயாமல் தன் புகழ் பேசும், போலியான அடக்கமும், அன்பும் உள்ளவர்களின் பசப்பு வார்த்தைகள். 

துடைப்பம் கூட  குப்பையை பெருக்கித்  தள்ளும்  – அந்த குப்பை அம்பாரமாக குவிந்து கிடக்கும்.   அது போல வேண்டாத விஷயங்களை ஏதோ பெரிய தத்துவ விசாரம் போல ஒரு சிலர் தானும் நம்பி, மற்றவர்களுக்கும் உபதேசித்து சற்றும் பயனில்லாத தத்துவங்கள்- ஒரு வித நன்மையும் தராத உடலை வாட்டும் செயல்கள்,  பிரார்த்தனை என்று உன்மத்தன் போல பிதற்றும் சிலர், (பௌத்தர்களை பொருளின்றி பேசுபவர்கள் என்று கவியின் சொல்)

 உடலில் கபம் சேர்ந்தால் தினமும் கசப்பான மருந்துகளை உட் கொள்வது போலவும், வாசலில் நின்று காவல் காப்பவனின் வைராக்யம்- பசியும் தாகமும் வாட்ட செய்த காவல் வேலை அதற்கான ஊதியமும் கிடைக்கவில்லை என்று வருந்துபவன்- அவன் தான் காஷாயம் தரித்து புத்தரைப் போல அரண்மனையை விட்டு வெளியேறத் துடிப்பான்.  நால் திசைகளிலும் இறந்த தாயாருக்கு வைக்கப் பட்ட பிண்டம், அதை எந்த அளவு சுத்தமாக நினைப்போமோ, அதே போல புல் படுக்கையில் படுத்து, அதன் உறுத்தலை தாங்க மாட்டாதவன் போல அவன் நிலை ஆகும்

தன் சுய கௌரவம் இன்றி தண்ணீருக்காக உடலை வளைத்து கை நீட்டுவான்.    இதற்கு உதாகரணம் துலா யந்திரம்  – எடை பார்க்கும் கருவி. கௌரவம்-கனம், சுய மதிப்பு இரு பொருள்.  துலா யந்திரம் கனத்தை கீழே தள்ளூம்.  யாசிப்பவன் என் கௌரவத்தை இழப்பான்.  கஞ்சன்- தர மாட்டான் என்று தெரிந்தும் அவன் காலைப் பிடித்து வேண்டுபவன் போல, அவன் திட்டினாலும் பொருட் படுத்தாமல் தன் தேவைக்காக நெருங்குபவன் மனதில் எந்த அளவு வேதனை இருக்கும்.  தீனன்- தன்னுடைய இயலாமை- அதை நினைத்து வெட்கி, ஆஹோ புருஷிகா- தன் பிறப்பை – தன் மானம் – இழந்தவன் – வருந்தாமலா இருப்பான்.  வெறுக்கத் தக்க இப்படி ஒரு செயலை செய்து வாழ் நாளை கடக்க நினைப்பவன், அதை ஏற்றுக் கொண்டதற்காகவே நிந்திக்கப் படுவான்  என்பது பொருள்.    

செல்வத்தை அடைவது ஒன்றே குறிக் கோளாக, எந்த விதமான உடல், மன கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ளும் மக்களை தன் புத்தி, தன் வளர்ச்சி இவைகளை துச்சமாக நினைக்கிறான் என்பதால் அவமதிக்கிறான் – மூடன் அவன் என்கிறார்.  வனத்தில் கிடைக்கும் பலவிதமான  மணம் வீசும் மலர்கள் இருக்க, தூரத்தில் கானல் நீரைக் கண்டு அதைத் தேடிச் செல்வது போல, குலத்தில் பிறந்தவனே ஏதோ தவறு செய்து விட்ட பயத்துடன் தள்ளி நிற்பவன், கண்ணாடியில் காணும் மலர்கள் போன்ற பயனற்ற ஜன்மங்கள், அவன் கற்றுத் தேர்ந்து இருந்தாலும், வாயில் அபசப்தமே- தவறான சொற்களே இருந்தாலோ, திறமை இருந்தும் வியாதியஸ்தன் போல கை கால்களை குறுக்கிக் கொண்டு  அமர்ந்திருந்தால், அக்னி இல்லாமலேயே வெந்து போவது போல மெள்ள மெள்ள பிராணன் வெளியேறும் நிலையில் இருப்பவன் தவிக்கிறான்.  வாழ்வில் அனைத்தும் இருந்து, அனுபவித்தவன் தான். இருந்தும் ஏதோ துக்கம் வாட்டுகிறது. 

நலம் விரும்பிகளான  பந்துக்களே அலுத்து போனவர்களாக இருக்க, தன் கர்வம், எதிர்பார்ப்புகள், கௌரவம் இவைகளே நினைவாக இருப்பான்.  

மரணத்தை எதிர் கொள்ளும் நிலையை அடைந்த விட்டவன் எதுவும் தன்னை பாதிக்காத மன நிலையை அடைய வேண்டும். ,  கேசம் உதிர்ந்து, பல் விழுந்து, உடல் வற்றி மூங்கில் குச்சி போல ஆன நிலையில், ஒரு காலத்தில் போகியாக- நன்றாக அனுபவிப்பவனாக இருந்தவன், எப்படி இருப்பான்? ராஜ சேவகர்கள் கோபத்தை வெளிக் காட்டாமல் சேவை செய்கிறார்கள்.  ( மேலும் பல வர்ணனைகள்)

அதிக நாள் ஜீவித்து இருக்க மாட்டார் . அதனால் தேவ! சீக்கிரமே ப்ராக்ஜ்யோதிஷ புரம் சென்று அவரை ஆஸ்வாசப் படுத்தி ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்றான்.  வணங்கி விடை பெற்றான். 

(தொடரும்)

பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்

துவங்கிய பயணமும் வந்த பரிசும் சகோதரியை தேடி

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.