துவங்கிய பயணமும் வந்த பரிசும்

அரசனின் தாற்காலிக கூடாரங்களில் இருந்து திரைச் சீலைகளை இறக்கியும், பாத்திரம் பண்டங்களை சேகரித்து வண்டிகளில் ஏற்றுவதுமாக பணியாளர்கள் வேகமாக செயல் பட்டனர்.  காளைகள், குதிரை, யானைகளுக்கு உணவு ஆன புல் முதலியவைகளைக் கொடுத்து தயாராக கொண்டு வந்து நிறுத்தினர்.   ஒட்டகங்களும் யானைகளும் ஒன்றையொன்று பார்த்து உறுமினவாம். கூடாரத்து சாமான்கள்  அனைத்தும் சேகரிக்கப் பட்டு மூட்டைகளாக அல்லது அதற்கான பெட்டிகளில் வைத்து வண்டிகளில் வைத்தனர். மீந்தவை, அதிக கனம் இல்லாதவை சுமை தூக்குபவர்களிடம் கொடுக்கப் பட்டன.  ஒட்டகங்கள், குதிரைகள், இவையும் சுமை தூக்கிகளாக பயன் பட்டன.  உடன் வந்த அரச குடும்பத்தைச் சார்ந்த சிலரும் அவர்கள் மனைவி மாரும் நடக்கலாயினர்.  சிலர் தங்கள் கூண்டு வாகனங்கள், பல்லக்குகளில் உடன் வந்தனர். குதிரைகளையும், ஒட்டகங்களையும் யானைகளையும் வழி தவறாமல் செல்லும் படி கடிவாளமோ, கயிறோ கொண்டு கட்டி அதன் வளர்ப்பாளர்கள்  பலர் உடன் நடந்தனர். விஜய யாத்திரை என்பதால் அவைகளுக்கும் வர்ண மயமான அலங்காரங்கள் செய்திருந்தனர். பெரிய பெரிய இரும்பு பாத்திரங்களில் இந்த மிருகங்களுக்கான உணவுகள் உடன் வந்தன. துள்ளும் இளம் குதிரைகளை வரிசையை விட்டு அகலாமல் அடக்க வேண்டியிருந்தது. பெண் யானைகளில் சவாரி செய்த சேனை வீரர்களும் அதன் போக்கில் விட்டுப் பிடித்து பின் இணைந்து கொண்டனராம். 

சித்திரம் அருண்

பொழுது புலர்ந்தது. அரசனின் கூடாரத்திலிருந்து சங்குகள் முழங்கின.  அதன் தொடர்ச்சியாக திக்விஜயம் என்ற பிரயாணம் துவங்கியது. திசைகளைக் காக்கும் கஜங்கள்  -யானைகளுக்கு சமமான பெரிய யானைகளின் கழுத்து மணி ஓசையும், ஸூரிய கிரணங்களோடு போட்டியிட்ட மங்களமான  குடைகளுடன்  – அம்ருத மதனம்- பாற்கடலை கடைந்த சமயம் வெளிப்பட்ட கடல் நுரையின் வெண்மையுடன் போட்டியிடுவது போன்ற வெண்மையான ஆடையும், பாரிஜாத மலர் போன்ற தூய்மையான புகழ் உடையவனான அரசன், (உலகையே தன் வசம் ஆக்கிக் கொள்பவனாக – பாரிஜாதம் தேவ லோகத்தில் இந்திரனிடம் இருந்ததை குறிப்பதாகவும் –  இந்திரனின் முக்கியமான அடையாளமாக – பொக்கிஷமாக  மதிக்கப் பட்டமலர் )   காதணிகளும், சூடா மணியும் இளம் சூரியனின் வெளிச்சத்தில் ஒளி வீச, ராஜ சமூகத்தையும் அணிவகுப்பையும் பார்த்து தன் கண்களாலேயே அனுமோதித்தவனாக,  அரசனின் யாத்திரையின் முன்னால் தண்டங்களை ஏந்திய பள பளக்கும் சீருடைகள் அணிந்த வீரர்கள், வழி நெடுக நின்றிருந்த பொது ஜனங்களின் கூட்டத்தை விலக்கி வழி அமைப்பது போல வரிசையாக சென்றனர்.  நரபதி- அரசனின் பிரயாணம் இனிதே தொடங்கியது. 

ப்ருது என்ற அரசன், ப்ருதுவீ என்ற பூமியை சமமாக்கி, வளம் பெற செய்து தன் பிரஜைகளின் தேவைகளை நிறைவேறச் செய்தும்,   அவர்கள் வாழ்க்கையின் தேவைகள் அனைத்தையும் பெற்று மகிழ்த்திருக்க செய்ததையும் போன்றே தானும் செய்வேன் என்பதை காட்டுவது போலவும், 

ஆயிரக் கணக்கான ஆலோசகர்கள், அதிகாரத்தை திறம்பட பிரயோகித்து ஆட்சியை செய்யவும், சமர்த்தர்களான படை வீரர்களுக்கு பயிற்சி அளித்தும் , போர் காலத்திலும் , மற்ற நாட்களிலும் நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பை ஏற்றிருந்த தலைமை அதிகாரிகள், தேவையான சமயத்தில் கடுமையாக தண்டிக்கவும் தயங்காமல் நாட்டில் அமைதி நிலவச் செய்பவர்கள் முன்னால் செல்ல, 

பதாகைகள் காற்றின் வேகத்தோடு போட்டி போடுவது போல அசைந்தனவாம்.  நால் திசைகளிலும் அவர்களின் கையில் இருந்த வேத்ரம் என்ற தடிகள் அலங்காரமாக பொன் வண்ணம் பூசப் பெற்று ஒளிர்ந்தன. 

கிராமத்து பிரதானிகள் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு அரச பரிவாரம் நகர்ந்தது. 

அரசன் ஹர்ஷன் சாவகாசமாக தன்னுடன் பிரயாணம் செய்பவர்களை பார்வையாலேயே அளந்தான். தானே ஓரளவு வியப்புடன் நோக்கினான்.   யுக ஆரம்பத்தில் அதோக்ஷஜனின் குக்ஷி- வயிற்றிலிருந்து  வெளி வந்த   ஜீவ லோகம் அவரது பல விதமான படைப்புகள்   போன்றும், சமுத்திரம் போல, கும்ப சம்பவன்- அகஸ்திய முனி, கடல் நீரைக் குடித்து பின் தன் முகத்திலிருந்து வெளி வரச் செய்து  புவனங்களை மூழ்கடித்தது போலவும்,  கார்த்த வீர்யார்ஜுனின் ஆயிரம் கைகளால் தடுக்கப் பட்டு அவன் நீராடிய பின் வேகமாக பிரவஹித்த நர்மதா நதி ஜலம் போலவும், அந்த படையை வர்ணிக்கிறார் கவி பாணன்.  

‘தாத! ப்ரசர, வேகமாக போ. பாவ! ஏன் தயங்குகிறாய்? என்ற குரலும் குதிரை முரண்டு பிடிக்கிறது என்ற பதிலும்,  பட்ர! ஏன் கால் உடைந்தது போல நடக்கிறாய்?   பின்னால் வருபவர்கள் வந்து முட்டுகிறார்கள் பார்,  ஒட்டக ஓட்டியே, ஒட்டகத்தை விரட்டு, அது நகராமல் நிற்கிறது பார்,  கவனிக்க வில்லையா, என்ன சொல்கிறாய், இலவசமாக படுக்கை கிடைத்து விட்டிருக்கிறது தூங்கலாம் என்றா நினைக்கிறாயா?  

வத்ஸ! ராமில! கூட்டத்தில் தவறி விழுந்து விடாதே, உடன் கவனமாக வா.   மற்றவன் வேகமாக போகிறவனை அழைத்து, இத்வர! ஏன் ஓடுகிறாய்.  சௌரபேய! வரிசையுடன் வா. கலைக்காதே, நடுவில் என்ன ஓட்டம்?  தீவரி! எங்கே நுழைகிறாய். இது மாதங்க மார்கம் –  யானை செல்லும் வழி- . மாதங்கி (பெண் யானை) எங்கே செல்கிறாய்?.  அங்க, உன் மூட்டை சரிந்து பொருட்கள் சிந்துகின்றன பார்.   ஏய் சாலூ! எதற்கு கை கலப்பு அங்கே. அதோ பார், குதிரைகளின் நடுவில் ஓடுவதைப் பார், யாருடைய கன்றுக் குட்டி அது, கவனி, பிடி அதை.  

ஸௌவீரக! உன் கும்பத்தில் துளை – எப்படி வந்தது ?  மந்தரக! என்ன மெல்லுகிறாய்?  காளைகள் இரண்டும் முட்டிக் கொள்கின்றன பார், விலக்கு அவைகளை.  வெகு தூரம் செல்ல வேண்டும். இப்பொழுதே அலுத்து விட்டதா?  செல்ல வேண்டிய தூரம் பாதி கூட ஆகவில்லை. 

சேனை வீரர்கள் முன்னால் நிரம்பி இருக்கிறார்கள். அதற்குப் பின் தான் நாம் போய் சேர முடியும். அரே, இதோ பார் தானிய மூட்டைகளை சுமக்க முடியாமல் காளை படுத்து விட்டது.   அரே சின்ன பையா, போய் அந்த வயல் காட்டில் இருப்பவனிடம் இதோ   உளுந்து போட்டிருக்கிறான் பார், அதன் வைக்கோலை கொஞ்சம் வாங்கி வா. இதன் வயிறு நிறைந்தால்  தான் நகரும்.  தள்ளி நில், போனவன் வயலுக்கு உரியவனிடம் கேட்டுத் தானே வாங்கி வர வேண்டும். மற்றவர்கள் முன்னால் வாருங்கள். 

முட்டித் தள்ளாதீர்கள்.  வரிசை தவறி கூட்டம் கலைந்தால், பின் சரி செய்வது கடினம் –  அதே சமயம் சிலர் அருகிலிருந்த புல் வெளிகளுக்குச் சென்று, பசும் புல்லை மூட்டைகளாக  கொண்டு வரவும்,  அந்த மிருகங்கள் மகிழ்ச்சியுடன் உண்டு மகிழ்ந்தன.  

கிளம்பிய சமயம் இருந்த உத்சாகமும், உடல் வலிமையும் சற்று நேரத்தில் வடிந்து விட, பலர் வீட்டை நினைத்து வருந்தினர்.   திரும்பி போகவே தயாராகி விட்டனர். ‘இந்த தண்ட யாத்திரை மேலும் வருபவர்களுடன் போகட்டும். நான் திரும்புகிறேன், என்று ஒவ்வொருவரும் சொல்லவும் ஆரம்பித்தனர். பாதாளம் தான் போகட்டும், நல்லதே நடக்கட்டும். முடிந்தவர்கள் சேவை செய்யுங்கள். என்னால் முடியவில்லை என்று சில முதியவர்கள் நகர்ந்தனர்.  

மேலும் சற்று தூரம் சென்றதும், நாம் எதற்கு இந்த கஷ்டமான செயலை செய்ய வேண்டும்.  உழைப்பது மட்டும் தான், பலன் கிடைத்தபின் நம்மை யார் கவனிக்கப் போகிறார்கள். அரசனுக்கு அருகில் உள்ள சிலர் சுகத்தை அனுபவிப்பார்கள்  என்று பேச்சு  கிளம்பியது.  கிராமத்து மக்கள், அரசனைக் காண வந்தனர்.  அவர்கள் உபாயனமாக கொண்டு வந்த நீர் நிறைந்த கும்பங்கள், தயிர், வெல்லம் போன்ற பொருட்கள், மிக்க ஆவலுடன் போட்டி போட்டுக் கொண்டு சிறியவர்களும் பெரியவர்களும் வாங்கி உண்டனர். இதனால் வரிசை கலைந்து ஆங்காங்கு அமர்ந்து விட்ட பாத சாரிகளைக் கண்டு அரச சேவகர்கள் விரட்டினர்.   கிராமத்துள் நுழைந்து பயிர்களை சேதம் செய்தனர்.  

பயிர் வீணாவதை பொறுக்க மாட்டாத விவசாயிகள், யார் ராஜா? எங்கிருக்கிறான்? என்ன ராஜா இவன் என்று வசை பாடலாயினர்.  புதர்களில் மறைந்திருந்த முயல்கள் இந்த உரத்த குரலில் விவாதங்களைக் கேட்டு திகைத்து அங்கும் இங்குமாக ஓடலாயின.  அதை பிடிக்க முயன்ற சிலர் துரத்தவும் கூட்டத்தின் நடு நடுவே நுழைந்தும்  குதிரை, ஒட்டகங்களின் கால்களுக்கு இடையே புகுந்தும் ஓடின. சீரான வரிசை கலைந்து அனைவரும் செய்வதறியாது தோன்றியபடி செய்தனர்.  கிராமத்து விவசாயிகள் தங்கள் வளர்ப்பு நாய்களை அவிழ்த்து விட்டனர். பயிர்களை பாதுகாக்க ஆடு மாடுகளை விரட்ட பழக்கியிருந்தனர்.  இவைகளின் குரைப்பால் நிலைமை மேலும் மோசமாகியது.

இதையறியாமல் அரசனின் அருகில் இருந்தவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர் ; மகான் மாந்தாத்தா, திக்விஜயம் செய்ய புறப்பட்டார்  ரகு என்ற அரசன் அவன் ரதம் எங்குமே நிற்காமல் ஓடக் கூடியது. மிக சுலபமாக சீக்கிரமே வெற்றி வீரனாக திரும்பி வந்தான். வானளாவ அவன் புகழ்  பரவியது.  வில்லை எடுத்துக் கொண்டு, தன் குல வழக்கப் படி  பாண்டுவும் திக் விஜயம் செய்தான்.  பல அரசர்களை தன் அரசுக்கு கப்பம் கட்ட வைத்தான்.  பாண்டு புத்திரன் அர்ஜுனன்  ராஜ ஸூய யாகம் நடந்த சமயம், சீன தேசத்தைக் கூட கடந்து சென்று,ஹேமகூடம் என்ற மலைக் காடுகளில் தன் வில்லின்  நாணை மீட்டி ஒலி எழும்பச் செய்து தன்னை எதிர்த்த கந்தர்வர்களுடன் மோதி வெற்றி பெற்றான்.  போர்  வீரர்களும் அரசனுக்கு உதவியாக சங்கல்பம் செய்து கொண்டு போரில் உதவி செய்ய வேண்டும்.  அவர்கள் ஒரே மனதுடன் போரில் ஈடு படாவிட்டால் அனர்த்தம் தான் சம்பவிக்கும்.  கின்னர ராஜா த்ரும என்பவன், கௌரவ அரசன் துரியோதனனுக்கு அடி பணிந்தான்.  சுய பலம் உள்ளவன் தான். உடல் பலமும் இருந்தும் சரியான படை வீரர்கள் இல்லாமையால் தோற்றான்.  யுதிஷ்டிரன் இருப்பதில் திருப்தியுடன் இருந்தான்.  உடன் இருந்த வீரன் தனஞ்சயன், -அர்ஜுனன்  தான் பல இடங்களுக்குச் சென்று அரசர்களை வென்றும், அவர்களிடம் கப்பம் பெற்றும் கொண்டு வந்து செல்வத்தைச் சேர்த்தான்.  அந்த சமயம் கர்ணன், கௌரவ அரசர்கள், சால்வன், ஜராசந்தன், சிந்து ராஜா ஜயத்ரதன், இவர்களும் தான் அரசர்களாக இருந்தனர்.  சண்ட கோசன் என்பவன் ஆரம்பத்தில் வீரனாக உலகைச் சுற்றி வந்தான் அதன் பின் அலுப்போ, செயல் பட விருப்பம் இன்றி சோம்பலோ,  அதோடு நிறுத்தி விட்டான்.   உத்சாகம் இருப்பவர்களுக்கு இமாலயமோ, கந்த மாதனமோ ஒரு பொருட்டா என்ன?  துருஷ்க- துருக்க ராஜ்யத்தினர் -கிஷ்கு என்ற அரசன். பாரசீக தேசத்தினர் ப்ராதேச எனப்படுவர்.சகர்களின் சகஸ்தானம். இவைகளையும் நாம் ஜயிக்க முடியும். வெகு தொலைவும் இல்லை.  பாரசீகத்தின் செல்வம் அளவில் அடங்காதது.  சகஸ்தானம் – தேசமே அளவில் சிறியது.   இந்த இடங்களில் எதிர்ப்பே இருக்காது. தென் திசையில், உங்களைப் போல சௌர்யம்- வீரமும் செல்வாக்கும் சேர்ந்தவன்- உள்ளவர்கள் மிக எளிதில் வெல்ல முடியும்.  தர்துர எனும் பர்வதம், அதில் குகைகளில் பல கோவில்கள் உள்ளன. .  அலை வீசும் தென் கோடியின் சமுத்திரத்திலிருந்து வரும் காற்று அங்குள்ள சந்தன மரங்களை அசைத்து காற்றில் அதன் மணம் பரவி சுகமாக இருக்கும்.  அதன் அருகில் தான் மலயாசலம். இந்த மலயாசல வரிசையில் இருப்பது தான் மஹேந்த்ர பர்வதம்.   ‘ இவ்வாறு அடி வருடும் சில அரச குமாரர்களின் பேச்சைக் கேட்டபடியே அரசன் ஹர்ஷன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தான்.

அங்கு இரு பக்கமும் வரிசையாக நின்றுகொண்டிருந்த பல சிற்றரசர்கள், அவர்கள் மரியாதையாக வரவேற்பதை அறிந்து,  எதுவும் பேசாமல் கண்களாலேயே ஏற்றுக் கொண்டவனாக மாளிகையின் உள்ளே நுழைந்தான்.  வெளியிலேயே ஆஸ்தான மண்டபம் இருந்தது. அதில் அமர்ந்தான். ஒரு நிமிஷம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.

அந்த சமயம் வாயில் காப்பவன் வந்தான்.  ‘தேவ! ஒரு செய்தி. ப்ராக்ஜ்யோதிஷ – பாரத தேசத்தின் வட கிழக்கு எல்லையில் உள்ள பிரதேசம். இன்றைய அஸ்ஸாம் மற்றும் சுற்றியுள்ள இடங்கள் –  என்ற நகரில் இருந்து குமார தேவன் என்ற அரசனிடம் தாங்கள் அனுப்பி இருந்த  ஹம்ஸ வேகன் என்ற பெயருடைய தூதன் உள்ளே வரும் வழியில் காத்திருக்கிறான்’ என்றான்.  அரசனும் ‘அவனை சீக்கிரம் அனுப்பு’ எனவும் அந்த காவல் காப்பவன் வேகமாக வெளியேறினான்.  ஹம்ச வேகன்  என்றவன் , உள்ளே வந்தவன், வினயத்துடன் , சர்வாங்கமும் மகிழ்ச்சியையும், மரியாதையையும்   காட்டுவது போல பணிந்து வணங்கினான்.  ஒரு  சில செல்வந்தர்களான தங்கள் தேசத்து முக்யமான மனிதர்களின் சமூகத்தை உடன் அழைத்து வந்திருந்தான்.  அவர்கள் கையில் பலவிதமான பரிசுப் பொருள் கள் இருந்தன. தானும் தன் ஐந்து அங்கங்களும் நிலத்தில் பட விழுந்து வணங்கினான்.  

அரசனும் மகிழ்ச்சியுடன் ‘ வா, வா’ என்றார். ஓடி வந்து அரசனின் பாதங்களில் தலை வைத்து திரும்பவும் வணங்கினான்.  அரசனும் நட்புடன் அவனுக்கு ஆசனம் அளித்து அமரச் செய்தான். தயங்கியவனைப் பார்த்து ஏதோ புரிந்தது போல, சாமரம் வீசிக் கொண்டிருந்த பணிப்பெண்ணை உள்ளே செல்ல பணித்தான்.  அதன் பின் ‘ஹம்சவேக! ஸ்ரீமான் குமாரன் நலம் தானே – என்று விசாரித்தான். அவனும் பதில் சொன்னான். ‘நீங்கள் இந்த அளவு அன்புடன் விசாரிக்கும் பேறு பெற்றவன், குமாரன் – அவனை மதித்து அன்புடன் விசாரிக்கப் படுகிறானே, அவன் நலமே.  

சில வினாடிகள் பொறுத்து தானே சொல்லலானான்.  ‘நால்வகை கடல் சூழ்ந்த இந்த பரந்த தேசத்தை ஆளும் சக்ரவர்த்தி தாங்கள்,  இது போன்ற நல்ல இதயம் உள்ள ஒருவர் இருக்கையில், வேறு என்ன வேண்டும்?  உலகில் பெற வேண்டியது அனைத்தும் உங்கள் அருளால் பெற்றோம். இருந்தாலும் எங்கள் அரசன், அவருடைய முன்னோர்கள் மதிப்புடன் பாதுகாத்து வைத்திருந்த ஆபோகம் என்ற வாருண ஆதபத்ரம்- கொற்றக்குடை, அதை தன்னுடைய ஒரு செய்தியுடன் தங்களுக்கு சமர்ப்பிக்க விரும்பி அனுப்பி இருக்கிறான்.  (வாருண- வருணனின் அருளால் கிடைக்கப் பெற்றது, அல்லது அதன் பெயரே வாருண)  இந்த உயர்ந்த பொருள் அதன் தகுதிக்கேற்ற இடத்தை அடைவது தான் பொருத்தம், என நினைக்கிறான்.  இந்த குடையின் பல நல்ல குணங்களைக் கண்டு நாங்கள் அதிசயித்திருக்கிறோம்.  

பின் வரும் வர்ணனைகள் அதிசயோக்தி எனப்படும். ஒன்றை நூறாக சொல்வது என்பது போல- உயர் நவிற்சி அணி- காவியங்களைச் செய்வோருக்கு உள்ள ஒரு தனித் தன்மையாக அனுமதிக்கப் பட்ட வர்ணனைகள்.

இதன் கீழ் அமர்ந்து இருப்பவர்  எப்பொழுதும் குளுமையாக உணருவார்கள், ஏனெனில் தினமும் அன்றைய சந்திரனின் கலை இதனுள் வந்து விடும்.  சந்திரனுடன் சிறிய மணிகளால் ஆன சலாகை- சலங்கை இனிமையான ஒலியை எழுப்பும். அது மட்டுமா, மெல்லிய தாரைகளாக பனித்துளி விழுந்து பற்களை கிட்ட வைக்கும்.  வருணன் நீரின், நீர் நிலைகளின் அதிபதி அல்லவா?  அதே போல, நால் வகை சமுத்திரங்களின் அதிபதியாக இருக்கும் ஒருவனின் மேல் தான் இதன் நிழல் படும், மற்றவர்கள் அறிய மாட்டார்கள்.  இந்த குடையை அக்னி எரிக்காது. தண்ணீர் நனைக்காது. புழுதி படர்ந்து இதன் தூய்மையை மங்கச் செய்யாது.  நாட் பட நாட்பட பொருட்கள் வீணாவது போல காலம் இதன் தனித் தன்மையை குறைக்காது.  தேவா, தங்கள் கண்கள் இதைக் காண  வேண்டும்.  தங்கள் பார்வையால் இதை அனுக்ரகிக்க வேண்டும்.  அதன் பின் தனிமையில் ஒரு செய்தியும் கேளுங்கள்’  இவ்வாறு சொல்லி சற்று பின் தள்ளி நின்ற சேவகனை அழைத்து, போய் அந்த குடையைக் கொண்டு வா என்றான்.  

அதைக் கேட்டு அவனும் உடனே எழுந்து சென்று,  அந்த குடையை உயர்த்தி அதன் மேல் மறைவாக போட்டிருந்த தூய வெண்ணிற   போர்வையை விலக்கி, மெள்ள கொண்டு வந்தான்.  வெளிப்பட்ட அந்த குடை தன் ஜொலிக்கும் தன்மையால் அந்த இடத்தையே பிரகாசமாக்கியது.   

பரம சிவனின் பலமான அட்டஹாஸத்தை வெண்மையாக வர்ணிப்பார்கள் அந்த அளவு தூய்மையான வெண்மை.   அல்லது பாதாளத்தில் இருந்து தன் படங்களை விரித்துக் கொண்டு சேஷ நாகமே வந்து விட்டாதோ, சக்ராகாரமான பாற்கடல் வானத்தில் நிலை கொண்டு விட்டதோ,  அல்லது சரத் கால வெண் மேகங்கள் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் கூடி நின்றனவோ, அல்லது ப்ரும்மாவின் விமானமே  ஹம்ஸமாக ஆகாயத்தில் தன் இறகுகளை விரித்துக் கொண்டு பறக்கிறதோ, 

அந்த சமயம் உலகத்தினர் அத்ரி மகரிஷியின் கண்களில் இருந்து தோன்றிய பிரகாசமான ஒளி மண்டலத்திலிருந்து சந்திரமா பிறந்ததைக் கண்ணார கண்டு விட்டனர். மகா விஷ்ணுவின் நாபி கமலம் தோன்றியதை நேரில் கண்டு விட்டனர் போலும்.  பிரதோஷ கால கௌமுதீ உத்சவத்தை  காணும் சமயம் தோன்றும் பரி பூர்ணமான ஆனந்தம் அந்த சமயம்  கண்டவர்கள் அனுபவித்தனர்.   மந்தாகினீ நதியின் பெயரை மட்டும் அறிந்திருந்தவர்கள், வானத்தில் அதன் கரையின் வெண் மணல் பரப்பைக்  கண்டு கொண்டனர் போல மகிழ்ந்தனர்.  

அந்த பகல் பொழுது பௌர்ணமி இரவு போல ஆயிற்று.  அருகில் இருந்த கமல வனங்களில் இருந்த சக்ரவாக பறவைகள் திகைத்தன.  குமுத மலர்களின் மொட்டுகள் பட படவென்று வெடித்து மலர்ந்தன. 

அருகில் இருந்த சிற்றரசர்கள் சித்திரத்தில் எழுதியவர்கள் போல வியப்பினால் வாயடைத்து கண்டு கொண்டிருந்தனர்.  அரசன் தன் தண்டத்தை- ஆயுதமான வில்லின் அம்பை குறி பார்ப்பது போல ஒரே கவனமாக அதைக் கண்டான்.   மூவுலகுக்கும் திலகம் போலவும், ஸ்வேத த்வீபம்- ஒரு தீவின் பெயர்- அதன் இளம் வயது தோற்றம் போலவும்,  (திருமகளின் இருப்பிடம் இந்த தீவு என்பர்)   சரத் கால சந்திரனின் ஒரு பகுதி போலவும், தர்மத்தின் இதயம் போலவும், சந்திர மண்டலத்தின் நுழை வாயில் போலவும், சக்ரவர்த்தியாக இருப்பவனின் புகழ் மண்டலம் போலவும், தேவலோகத்தின் முத்துக்களால் ஆன எல்லைக் கோடு வட்டமாக இருப்பது போலவும்,  இந்திரனின் ஐராவத்தின் உடல்  போல வெண்ணிற ஒளி பரவி இருப்பது போலவும், அதன் அசையும் தன்மை மட்டும் இல்லாமல் வெண்மையை மட்டும் கொண்டதாக, சங்கத்தை பரிகசிப்பது போன்றும்,  த்ரிவிக்ரமனின் (வாமனாவதார விஷ்ணுவின்) பாதங்களில் வெளிப்பட்ட ஸ்வேத கங்கா போலும், ( மூவுலகிலும்  அதைக் கண்டவர்கள் ப்ரும்மா முதல் அனைவரும் அந்த கங்கை நீரை கைகளில் ஏந்தி தலையில் தெளித்துக் கொண்டதாக புராணம்)   ப்ரசேதஸ் என்பவரின் சூடா மணி பிரசித்தமானது. சமுத்திரமே அவருக்கு பரிசாக கொடுத்ததாகச் சொல்வர்.  

அதன் கிரணங்களின் ஒளியை மிஞ்சியதாகவும்,  சாதகர்கள் சாதனையின் பலனாக கண்டு கொண்ட பிஸ தந்து, (बिस तन्तु ) ப்ரும்ம ஸ்வரூபம் போலவும், சக்ரவர்த்தியின் நூபுர ஒலியினால் ஆகர்ஷிக்கப் பட்டு நிமிர்ந்து நோக்கிய ஹம்சம் போன்ற அதன் மேல் பகுதி, மந்தாகினீ நதியின் வெண் மணலில் படுத்துக் கிடந்த வாசுகி போல அதன் தண்டம் – நடுவில் உள்ள கம்பம், தாரகைகளின் ஒட்டு மொத்த கவர்ச்சியையும் தன்னுள்  கொண்டதாக இருந்த,  சர்வ மங்களுக்கும் மேலான மங்களகரமான லக்ஷ்மீ தேவியின் மண்டபம் போலவும்,  ப்ரும்ம ஸ்தம்பம் போலும்,  சந்திர ஒளி பிறக்கும் இடம் போலும், கீர்த்தி வாய் விட்டு சிரிப்பது போலவும், கடல் நுரை போலவும், வீர்களின் புகழே மண்டலமாக இருப்பது போலவும், மூவுலகிலும் இல்லாத அத்புதமான பெரிய குடை. 

அதை அரசன் முதலில் கண்ட பின்,  மற்ற உபகரணங்களையும் உடன் வந்த பணியாளர்கள் கொண்டு வந்து காட்டினர்.  பலவிதமான ஆபரணங்கள், பகதத்தன் என்ற அரச குலத்தினர்  வழி வழியாக வந்தவர்கள் பயன் படுத்தியவை,  சிவந்த ரத்னங்கள் பதிக்கப்பட்டு, சூடாமணிகள், ஹாரங்கள், பட்டு வஸ்திரங்கள், அனேக விதமான பானங்கள், மது வகைகள்,  மது குடிக்கும் பாத்திரங்கள், கண்ணாடி, சங்கம், கல்வர்க் என்ற ஒரு பொருளால் செய்யப் பட்டவை, அதிலும் சில நேர்த்தியான வேலைப் பாடுகள் காணப்பட்டன. மேலும் பலவகைப்பட்ட துணிகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள் என்று பல பொருட்களைக்கொண்டு வந்து நிரப்பினர். சுருட்டி உருளையாக கட்டிய தரை விரிப்புகள்,  போஜ பத்ரம் ( ஒரு வகை மரம். இதன் மிருதுவான இலைகள் பட்டைகள் வெண்மையாக இருக்கும். காகிதம் வரும் முன்  எழுத பயன்பட்டவை.)   போன்ற கைக்கு மிருதுவான பொருட்கள், தாம்பூலம் என்ற வெற்றிலையுடன் பயன்படுத்தப் படும் பொருட்கள், மேலும் பலவகை தினமும் பயன் படுத்தும் பொருட்கள் கொண்டு வந்து நிரப்பினர்.  

கின்னரர்கள் போன்ற வன மானுஷ, ஜல மானுஷ என்பவைகளின் ஜோடிகள், வாசனை பொருளான கஸ்தூரியை அளிக்கும் கஸ்தூரி மான்கள்,  சமரீ எனும் நீண்ட தோகையுள்ள மிருகங்கள்,  இனிய குரலில் பாடும் குயில்கள், கிளிகள் சாரிகா எனும் பறவைகள், ப்ரத்யேகமான கூண்டுகளில் நீரில் மிதக்கும் சகோரங்கள், நீர் யானைகளின் முகத்தில் தோன்றும் முத்துக்கள், அதே அளவு வெண்மையான  தந்தங்களால் செய்யப் பட்ட குண்டலங்கள்.  

அரசன் இந்த குடையின் வரவினால் தன் பிரயாணத்தின் ஆரம்பமே சோபனம்- நிறைவான பயன் தருவதாக அமைந்து விட்டது என்று மனம் மகிழ்ந்தான்.    ஹம்சவேகனிடம் பிரியமாக பேசினான். ‘ பத்ர! பரமேஸ்வரனுக்கு அர்ப்பணிக்க வேண்டிய எல்லா ரத்தினங்களையும், இந்த பெருமை மிக்க குடையையும், குமாரன் அனுப்பியதில் வியப்பில்லை. அவனே பாற்கடலில் நிலவு தோன்றியது போல உயர்ந்த ராஜ குலத்தில் பிறந்தவன்.  அந்த குலத்தில் வந்தவர்களின் அன்பளிப்பு அவர்களுக்கு கை வந்த கலை.  

இந்த பொருட்களை அரச சேவகர்கள் அப்புறப் படுத்திய பின், ‘ஹம்ஸ வேக! ஓய்வு எடுத்துக் கொள்’ என்று சொல்லி ப்ரதீஹார பவனம்- விருந்தினர் மாளிகைக்கு அனுப்பி விட்டு தானும் நீராடி, தனசரி செய்யும் செயல்களை முடித்துக் கொண்டு மங்களகரமாக ஆபோகம் என்ற பெயருடைய அந்த குடையின் கீழ் அமர்ந்தான். அதில் பதிக்கப் பட்டிருந்த சந்திர காந்த கற்கள் சிறு தூறலாக பனி மழையை பொழியலாயிற்று. முகத்திலும், உடலிலும் விழுந்த குளிர்ந்த நீர் திவலைகள்  மனதில் உல்லாசமான  உணர்வை அளித்தன. அதனால் வியப்பின் எல்லைக்கே சென்று விட்டிருந்த அரசன் ஹர்ஷன்,  இது எப்படி சாத்தியம்? 

எப்படி நான் பிரதி உபகாரம் செய்வேன்.   இத்தகைய அதிசயமான பரிசுப் பொருளுக்கு சமமாக சொல்லக் கூடிய பொருளாக என்ன  தருவேன்?  என்னிடம் என்ன இருக்கிறது.  வாழ் நாள் முழுவதும் இணை பிரியாமல்   நட்புடன் இருப்பேன்  என்பதைத் தவிர இந்த உபகாரத்திற்கு பதிலாக எதைச் சொல்ல முடியும் ? என்று யோசிக்கலானான். 

பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்

அணிவகுத்த படைகள் பூமியில் அரசர்களின் அனுராகம்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.