- மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்
- ஹோமியோபதி – ஓர் எளிய அறிமுகம்
- மனித நாகரீகத்தின் நுழைவாயிலில்
- 3. மரணமின்மையின் முதற்துளி
- 4. புனிதத்திலிருந்து அறிவை நோக்கி
- அறிவு அளித்த விடுதலை
- 6. ஞானங்களின் விளைநிலம்
- 7. மூன்றே பொருளாய் முடிந்தது
- 8. பிரபஞ்ச ஒழுங்கை வழிநடத்தல்
- 9. ஒருங்கிணைப்பின் வழியே
- 10. மீண்டெழல்
- 11. அறிவின் ஒளி
- 12. என்றென்றும் நிலைத்திருப்பது
இந்திய மருத்துவ முறைகள் – II
சித்த மருத்துவம் என்று தனியாக ஒன்று இருந்ததா? தமிழ்நிலத்துக்கு மட்டும் சொந்தமான ஒன்றா என்பது, பல்வேறுவிதமான அரசியல் கதையாடல்களுக்குள் நம்மை கொண்டுசெல்லக்கூடிய ஒன்று.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் இரண்டும் ஒன்றா? மொழி அடிப்படையில் ஆயுர்வேதம் சமஸ்கிருதம் சார்ந்தும், சித்த மருத்துவம் தமிழ் சார்ந்த ஒன்றுமா என்ற கேள்விக்கு உண்மையில் பதில் இல்லை. இரண்டு மருத்துவங்களுக்கும் இடையிலிருக்கும் தத்துவ வேறுபாடுகள் சற்று மேலதிக புரிதலை அளிக்கக்கூடும்.
சித்த மருத்துவம் சிவனிடமிருந்து தோன்றியதால் சிவ பரம்பரை என்றும், ஆயுர்வேதம் பிரம்மனிடமிருந்து தோன்றியதால் பிரம்மா பரம்பரை என்றும் கருதப்படுவதுண்டு.
பொதுவாக சித்தர் மரபை சிவனிடமிருந்து நந்தி தேவருக்கும், அவரிடமிருந்து அகத்தியர்க்கும், பின்னர் திருமூலர், போகர், புலிப்பாணி என்று ஒரு வரிசை கூறப்படுகிறது. சித்த மருத்துவத்தின் முதல்வராக கருதப்படும் அகத்தியர் பெயரில் நூல்கள் இருந்தாலும், அவற்றின் காலம் குறித்து அறுதியாக சொல்ல முடியவில்லை. அதன் பின் திருமூலர் எழுதிய திருமந்திரம் நூலை எடுத்துக்கொண்டால் பொ யு 5 – 6 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன்பின் வரும் சித்த மருத்துவ நூல்களின் காலம் 1000 ஆண்டுகள் கழித்து 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சித்த மருத்துவம் என்று குறிப்பாகவோ, இல்லை காலத்தை தெளிவாக குறிக்கக்கூடிய அகழ்வாராய்ச்சி முடிவுகளோ, இலக்கிய குறிப்புகளோ கிடைப்பதில்லை. மாறாக, சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூர் விடுத்த காதையில், “ஆயுர்வேதரும் காலக்கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்” என்ற குறிப்பு காணப்படுகிறது. காவிரிபூம்பட்டினத்தில் காலத்தைக் கணிப்பவருக்கும், ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் தனித்தனி தெருக்கள் இருந்ததாக தெரியவருகிறது. தெளிவான சான்றுகள் இல்லாத நிலையில் சில ஊகங்களை நிகழ்த்த வேண்டி இருக்கிறது.
- பொதுப்போக்காக ஆயுர்வேத மருத்துவம் இருந்த நிலையில், விளிம்பில் மறைசமயமாக இருந்த தாந்த்ரீக முறைகளிலிருந்து கிளைத்தெழுந்த ஒன்றாக இருக்கலாம். இந்தியாவின் பிற பகுதிகளிலும் வங்காளம், பஞ்சாப், ஆந்திரம், மகாராஷ்டிரம் பகுதிகளில் சித்தர் வரிசை முறை காணப்படுகிறது1.
- பண்டைய தமிழகம் கடல் வணிகத்தில் கோலோச்சிய காலத்தில் மற்ற நிலங்களின் தத்துவங்கள் இங்கு கொண்டும், கொடுத்தும் வளர்ந்திருக்கலாம் (காண்க: ஹெர்மெடிசம், கிரேக்க அத்தியாயம்). முதல் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிப்ளஸ் ஆஃப் தி ஏரித்ரியன் சீ (Periplus of the Erythraean Sea) என்ற கடல் வழி வரைபடத்தில் தமிழக பகுதியின் துறைமுகங்கள் குறிக்கப்படுவதும், தமிழ் நிலத்தில் கிடைக்கும் ரோம நாணயங்களின் காலம் பொ யு மு 2 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்பதும், உரோம ரிஷி போன்ற சித்தர் பெயர்களும் இந்த சாத்தியத்தை சுவாரசியமாக ஆக்குகின்றன.


3. படையெடுப்புகளில் 12 ஆம் நூற்றாண்டில் நாளந்தா, தட்சசீலம் பல்கலைக்கழகங்கள் அழிக்கப்பட்டபோது அங்கிருந்து வெளியேறிய பெளத்த துறவிகள் இங்கு வந்த போது தனி முறையாக பரிணமித்து இருக்கலாம். திபெத்திய பௌத்த மரபில் காணப்படும் 84 மகா சித்தர்கள் பற்றிய கருதுகோள் இதை சிந்திக்கத் தூண்டுகிறது2. Dombipa Heruka (the “Tiger Rider” – புலிப்பாணி?), Kumbharipa (the Potter – கும்ப முனி அகத்தியர்?), Kambala (the Black-Blanket-Clad Yogin – சட்டைமுனி?), Kankana (the Siddha-King கொங்கணர்?) போன்ற பெயர் ஒற்றுமைகளும் ஆர்வத்தைத் தூண்டுபவையாக இருக்கின்றன.

4. கோரக்கரை குருவாக கொண்ட நாத் சம்பிரதாயம் (நாத சைவம் அல்லது சித்த சித்தாந்தம்) லகுலீச பாசுபத மதத்துடன் இணைத்து சொல்லப்படும் 1257 ஆம் ஆண்டை சார்ந்த ஒரு கல்வெட்டு குஜராத்தில் கிடைத்தது. கோரக்கருக்கு முன் இருந்த சைவ மறைஞான சமயங்கள் ஒன்றாக்கபட்டு தொடரும் ஒரு சம்பிரதாயம் அங்கிருந்து தொடங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. கோரக்கர் என்ற பதினெண் சித்தர்களில் காணப்படும் பெயரும், மறைஞான மதமான லகுலீச பாசுபத மத தொடர்பும், இந்த சாத்தியத்தை யோசிக்க தூண்டுகிறது3.
5. ஐரோப்பியரின் வருகையை தொடர்ந்து தமிழ் நிலத்தில் குறிப்பாக தரங்கம்பாடியில் அமைக்கப்பட்ட டேனிஷ் மிஷனின் ஒரு பகுதியாக சித்த மருத்துவத்தின் மூலச்சுவடிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன. அந்த இடைவெளியை நிரப்ப மூலப்பெயரில் மனம்போன போக்கில் பாடல்கள் எழுதி சேர்க்கப்பட்டன என்று கருதப்படுகிறது4.
சித்த மருத்துவம் என்ற வார்த்தை இல்லைதானே தவிர மருத்துவம் பற்றிய பல்வேறு குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன.
சங்க இலக்கியத்தில் மருத்துவம்
தமிழில் நமக்கு கிடைக்கும் பழமையான நூல் தொல்காப்பியம். சித்த மருத்துவத்தின் அடிப்படையான வாதம், பித்தம், சிலேத்துமம் பற்றிய குறிப்பு அங்கேயே நமக்கு கிடைக்கிறது. தொல்காப்பியத்தில் மனவருத்தம் நோய் என்றும், உடல் தொடர்பானவை பிணி என்றும் குறிக்கப்படுகின்றன.
நிலம் தீ நீர் வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’ – தொல்.மரபியல். 1589.
நற்றிணை, “மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன்” என்று மருத்துவனைக் குறிப்பிடுகிறது. உடலில் வீக்கமோ, வலியோ இருந்தால் அரக்கு, மெழுகு, தானியங்களின் மாவு இவற்றால் பத்து போட்டுக் காயவைக்கும் வழக்கம் இருந்தது. கரு முதிர்ந்த யானை, வயிற்றில் இருக்கும் பிண்டம் நழுவுமாறு கூரான மூங்கிலின் முளைகளை சென்று தின்கிறது என்று குறிப்பிடுகிறது (நற்றிணை பாடல் 116). மூங்கில் குருத்துகள், கருச்சிதைவை உருவாக்க தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன5.
போரில் புண்பட்ட அரசனுக்கு மருத்துவம் செய்வதையும், அந்த வீட்டின் வெளியே இரவ மரம் மற்றும் வேம்பு இலைகளை செருகியும், கோட்டு யாழ் போன்ற இசை கருவிகளை கொண்டு காஞ்சிப் பண் இசைத்தும், வெண்கடுகை கொண்டு நறுமண புகை இட்டும் நோயை விரட்டி அரசனை காப்பாற்றுவது பற்றி புறநானூறு பேசுகிறது (பாடல்: புறம்-281). நீருக்குள் மீனைக் கொத்தச் செல்லும் சிரல் பறவை போல் காயத்தில் ஊசி நுழைந்து தைக்கிறது (மீன்தேர் கொட்பின்) என்று பதிற்றுப்பத்தும், மரப்பொந்துபோல உடல் முழுவதும் ஏற்பட்ட புண்களுக்கு மருத்துவர், மருந்தை வாயிலிட்டு பின்னர் எலி முடியால் செய்யப்பட்ட போர்வையால் காற்றுப் புகாதவாறு போர்த்தி பாதுகாப்பார் (முதுமரப் பொந்து போல..) என்று சீவக சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன.
இதன் உச்சமாக, திருக்குறளில் ஒரு அதிகாரம் மருந்து பற்றி பேசுகிறது.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
என்று வாதம், பித்தம், கபம் பற்றி ஆரம்பித்து
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ள நாற்கூற்று மருத்துவம் என்று சென்று முடிக்கிறார் திருவள்ளுவர்.
தமிழ்மொழியில் பரவலான மருத்துவ கட்டுமானமும், அதற்கு துணை செய்யும் தத்துவ விரிவும் சங்ககாலத்தில் இருந்து வந்ததை நாம் புரிந்துகொள்ளலாம்.
சித்த மருத்துவமும், ஆயுர்வேதமும்
அறிவன் என்ற சொல் முதல் நூலான தொல்காப்பியத்தில் இடம்பெறுகிறது. சொல்பவற்றை அப்படியே பின்பற்றாமல், தன் அறிவால் உசாவி அறிபவன். அதன் தொடர்ச்சியாகவே சித்தர்களை நாம் காணலாம். சித்தர்கள் உருவாக்கிய, சித்தர்களின் தத்துவங்களை ஏற்றுக்கொண்ட, பெரும்பாலும் தமிழ்மொழி பேசும் நிலங்களில் பின்பற்றப்படும் ஒரு மருத்துவமுறை என்று சித்த மருத்துவத்தை கருதலாம்.
ஆயுர்வேதத்தில் திரிதோஷம் பண்புகளில்
வாதம் – அழித்தல்
பித்தம்
கபம் – ஆக்கல் என்றும்,
சித்த மருத்துவ முக்குண குற்றத்தில்,
வளி (வாதம்) – ஆக்கல்
அழல் (பித்தம்)
ஐயம் (கபம்) – அழித்தல் என்றும் வேறுபடுகின்றன.
சித்த மருத்துவம் வாதத்தையும், ஆயுர்வேதம் கபத்தையும் நோய் அறிதலில் முன்னிறுத்துகின்றன.
ஆயுர்வேதம் சாங்கிய தரிசனத்தின் 24 கொள்கைகளை ஏற்றுக்கொண்டது பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.
சித்த மருத்துவம் அவற்றின் விரிவாக சைவ சித்தாந்தத்தின் 96 தத்துவங்களை அடிப்படையாக கொள்கிறது.
பூதங்கள் – 5 (நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு)
ஞானேந்திரியங்கள் – 5 (மெய், வாய், கண், மூக்கு, செவி)
கர்மேந்திரியங்கள் – 5 (வாய், கை, கால், மலவாய், கருவாய்)
தன்மாத்திரைகள் – 5 (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்)
அந்தக்கரணங்கள் – 4 (மனம், அறிவு, நினைவு, முனைப்பு)
உடலின் வாசல்கள் – 9
தாதுக்கள் – 7
மண்டலங்கள் – 3
குணங்கள் – 3
மலங்கள் – 3
வியாதிகள் – 3
விகாரங்கள் – 8
ஆதாரங்கள் – 6
வாயுக்கள் – 10
நாடிகள் – 10
அவத்தைகள் – 5 (விழிப்பு, கனவு, ஆழ்தல், துரியம், த்ரியாதீதம்)
ஐவுடம்புகள் – 5
ஏழு உடற்கட்டுக்களை (சப்ததாதுக்கள்) பொறுத்த வரையில் ஆயுர்வேத மருத்துவத்தில் இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, மேததாது, அஸ்திதாது, மஜ்ஜைதாது, சுக்கிலதாது அல்லது சுரோணிததாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சித்த மருத்துவத்தில் சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை, வெண்ணீர் அல்லது சுரோணிதம் என்று கூறப்பட்டுள்ளது. இவற்றுள் சாரம் என்பது இரசதாதுவைக் குறிப்பதாக இருந்தாலும் சிவப்பணுக்கள் தவிர்த்த இரத்தத்தை இரசதாது என்று ஆயுர்வேதம் குறிப்பதாக கருதப்படுகிறது. ஆனால், சித்தமருத்துவம் உணவிலிருந்து உண்டாகும் சாரத்தையே முக்கியமாகக் குறிப்பிடுகிறது. எனவே உடலிலுள்ள திரவ அம்சங்கள் (Fluids) அனைத்தையும் சாரம் என்பது குறிப்பதாகக் கருதலாம்.
வடமொழி “உத்தர தந்திரம்” என்னும் நூலின் முகவுரையில் காயசிகிச்சை முறையும், பொதுவான நோய்களைக் குறித்த விஷயங்களையும் சித்தநூல்களிலிருந்து திரட்டி எழுதியதாக கூறப்பட்டிருப்பதும் ஆராயப்படத்தக்கது.
மேலும் ஆயுர்வேதத்தை ஒப்பிட நாடி பார்க்கும் முறை, உலோகங்களை பயன்படுத்தி மருந்து தயாரித்தல், மருந்து தயாரித்தலில் பயன்படும் முப்பூ, பூநீர், ஜெயநீர் போன்றவை, ரசவாத மருத்துவம், வர்மம் போன்றவற்றை சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்பாக கருதலாம்6.
சித்த மருத்துவத்தின் அடிப்படை அகத்தியரிலிருந்து தொடங்கினாலும், திருமூலர் எழுதிய திருமந்திரம் சித்த மருத்துவத்துக்கு ஒரு அடிப்படை நூலாகும். சைவ சித்தாந்த தத்துவமும் அங்கிருந்தே தொடங்குகிறது. தொன்மாக திருமூலர் 3000 ஆண்டுகள், ஆண்டுக்கொரு பாடலாக திருமந்திரத்தின் 3000 பாடல்களை எழுதினார் என்று கருதப்பட்டாலும், அவரின் காலம் பொது யுகம் 5 – 6 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருமூலர் காவியம், வைத்திய சுருக்கம், சிற்ப நூல், சோதிடம், கருக்கிடை போன்ற பல்வேறு நூல்கள் திருமூலரின் பெயரில் கிடைக்கின்றன.
முக்குணங்கள்
“மூன்றே பொருளாய் முடிந்தது அண்டம்
மூன்றே பொருளாய் முடிந்தது பிண்டம்
மூன்றே பொருளாய் முடிந்தது மருந்து
மூன்றே பொருளாய் முடிந்தது வாதமே”
என்பது ஒரு சித்த மருத்துவ பாடல்.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் முறையே ஆக்கல், காத்தல், அழித்தல் செயலை செய்கின்றன. ஆரோக்கியமான உடலில் இவை 1:½:¼ அளவில் உள்ளன. மனித ஆயுள் காலத்தில் முதல்பகுதி வாதமாகவும், நடுவயது பித்தமாகவும், இறுதிகாலம் கபமாகவும் கருதப்படுகிறது.
வாதம்
காற்றும், ஆகாயமும் சேர்ந்து உருவாகுவது.
உடலுக்கு இயக்கம் தருதல், மூச்சு விடுதல், சிந்தனை, அனிச்சை செயல், மலம், சிறுநீர், விந்து வெளியேற, கண்களுக்கு ஒளி தர, கண், காது, நாக்கு, மூக்கு, தோல் ஆகிய ஐம்புலன்களுக்கு வலிமை தருதல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைகிறது. வாதம் சமநிலை தவறினால் மூட்டுவலி, தசை வலி, தோல் வறட்சி, மலச்சிக்கல், உடல்சோர்வு, தூக்கமின்மை, உடல் உறுப்புகள் செயலிழத்தல் போன்றவை உண்டாகும்.
பித்தம்
தீ தனித்து உருவாகுவது.
உணவை செரித்தல், உடலுக்கு வெப்பம் தருதல், அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், வயிறு சம்பந்தமான நோய்கள், அதிகமாக வியர்ப்பது, அதிகப்படியான தாகம், புண்கள், கட்டிகள், தோல் மஞ்சள் நிறம் அடைதல் போன்றவை உண்டாகும்.
கபம்
மண்ணும் நீரும் சேர்ந்து உருவாகுவது.
கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, அனைத்து பணிகளையும் தடையின்றி நடைபெற உதவுகிறது.
கபம் சமநிலை தவறினால் சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு போன்றவை உண்டாகும்.
அறுசுவைகள்
மேற்கண்ட வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் உண்ணும் உணவின் சுவைகளும் சேர்ந்து ஆரோக்கிய நிலையை தீர்மானிக்கின்றன.
இனிப்பு: மனதிற்கு மகிழ்ச்சி, ஐம்புலன்களுக்குப் புத்துணர்ச்சி, உடலுக்கு இலகுத்தன்மை, ஏழு உடற்தாதுக்களுக்கும் ஊட்டம் கொடுத்தல், ஈரத்தன்மை மற்றும் குளிர்ச்சியைத் தருதல்.
புளிப்பு: உமிழ்நீரைச் சுரத்தல், கண், புருவத்தைச் சுருக்கல், வாய் சுத்தப்படுதல், ஜீரணத்தை அதிகப்படுத்துதல், உடலை வலுப்படுத்துதல், உடலுக்கு வெப்பத்தையும் ஈரப் பதத்தையும் தருதல்.
உப்பு: ஜீரணத்தை அதிகரித்தல், உமிழ்நீரைச் சுரத்தல், உடலுக்கு ஈரத்தன்மை தருதல், மிதமான வெப்பம் தருதல், தொண்டை கரகரப்பு
ஆகிய செயல்களைச் செய்தல்.
கார்ப்பு: பசி அதிகரித்தல், வறட்சியை உண்டாக்குதல், உடலுக்கு வெப்பம் தருதல், எரிச்சலை உண்டாக்குதல்.
கசப்பு: வாயில் அழுக்கை நீக்குதல், சுவைகளை உணரச் செய்தல், பசியையும் ஜீரணத்தையும் அதிகரித்தல், வறட்சியை உண்டாக்குதல், குளிர்ச்சி உண்டாக்குதல், கட்டிகளை நீக்குதல் ஆகிய செயல்களைச் செய்தல்.
துவர்ப்பு: உடலில் உள்ள தாதுக்களை நெறிப்படுத்துதல், நாக்கின் சுவை அரும்புகளைச் சுருங்கச் செய்தல், மற்ற சுவையை உணர்தலைத் தடுத்தல்.
| சுவை | அதிகரித்தால் | குறைந்தால் |
| இனிப்பு | உடல் எடை எடைகூடுதல், மேலும்… | அதிக தூக்கம், பசியின்மை, சோம்பல், உடல் வலி, உடல் அசதி, உடல் இளைத்தல், மேலும்… |
| புளிப்பு | தாகம், பித்தம் அதிகரித்தல், மேலும்… | உடல் வீக்கம், உடல் வெப்பம் குறைதல், பசியின்மை, வாயில் நீர் சுரத்தல், மூட்டுவலி, மேலும்… |
| கசப்பு | உடல் பருமன், மலட்டுத் தன்மை, இரைப்பைப் புண், மேலும்… | உடல் வலிமை குறைதல், நாவறட்சி, மூட்டு வலி, உடல் எரிச்சல், செரிமானமின்மை, மேலும்… |
| கார்ப்பு | தலை சுற்றல், மயக்கம், நடுக்கம், தாகம், வாய்ப்புண், மேலும்… | பசியின்மை, சுவையின்மை, செரிமானமின்மை, மேலும்… |
| உப்பு | உடல் சூடு, மயக்கம், தாகம், மேலும்… | தசை மெலிவு, புண்கள், கொப்புளங்கள் உண்டாகுதல், வாந்தி, சுவையின்மை, செரிமானமின்மை, மேலும்… |
| துவர்ப்பு | உப்புசம், வாய் குழறல், வாயில் நீர் ஊறுதல், மேலும்… | ஜீரண பாதிப்பு, மேலும்… |
பித்தத்தை அதிகப்படுத்தும் சுவைகள்: உப்பு, புளிப்பு, கார்ப்பு. இம்மூன்று சுவைகளிலும் தீயின் கூறு உள்ளதால் பித்தத்தை அதிகப்படுத்தும்.
கபத்தை அதிகப்படுத்தும் சுவைகள்: இனிப்பு, புளிப்பு, உப்பு. இவற்றில் மண் கூறும், நீர்கூறும் சேர்வதால் கபம் மிகுதியாகிறது.
வாத, பித்த, கபத்தைச் சமப்படுத்த தேவையான சுவைகள்: அதிகரித்த வாதத்தைச் சமப்படுத்த, கபத்தை மிகுதிப்படுத்தும் சுவைகளான இனிப்பு, புளிப்பு, உப்பு சுவைகளையும், அதிகரித்த கபத்தைச் சமப்படுத்த, வாதத்தை மிகுதிப்படுத்தும் சுவைகளான கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு சுவைகளையும், அதிகரித்த பித்தத்தைச் சமப்படுத்த இனிப்புச் சுவையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
நோயறிதல் முறைகள்
1. காண்டல் (பிரத்தியட்சம்)
2. கருதல் (அனுமானம்)
3. உரை (சப்தம்)
4. இன்மை (அபாவம்)
5. பொருளொப்பு (அருத்தாபத்தி)
6. ஒப்புமை (உவமானம்)
7. பகுத்தறிதல் (பாரிசேடம்)
8. ஐயக்காட்சி (சம்சயம்)
9. வழக்கு (ஐதிகம்)
10. இயல்பு (சாம்பவலிங்கம்)
சித்த மருத்துவத்தில் மேற்கண்ட பத்து வழிமுறைகளைப் பயன்படுத்தி நாடி, ஸ்பரிசம், நாக்கு, நிறம், மொழி, விழி, மலம், மூத்திரம் ஆகியவற்றை நோக்கி எட்டு வகைகளில் நோய்கள் கண்டறியப்படுகின்றன. இவை எட்டும் மருத்துவனின் கருவிகளாகக் கூறப்படுகின்றன. இவற்றில் ஒலித்தேர்வு, வண்ணத் தேர்வு, சுவைத் தேர்வு, நாற்றத் தேர்வு என்பவை சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்பாக கூறப்படுகின்றது.
நாடி சோதனை
உண்ணும் உணவு ரச தாதுவாக மாறி இரத்தத்தில் சுற்றி வருவதை நாடிகள் வழியே கணிப்பதன் மூலம் வாதம், பித்தம், கபம் சமநிலையை அறிய முடியும் என்கிறது சித்த மருத்துவம்.

வாத நாடி இலேசாகவும், சிறிய அதிர்வுடனும் இருக்கும்.
பித்த நாடி இலேசாகவும், நீர் தன்மையுடம் இருக்கும்.
கப நாடி கடினமாகவும், நிலைத்தன்மையுடனும் இருக்கும்.
பொதுவாக,
ஆண்களுக்கு
வாத நாடி – அன்னம், மயில் நடையாகாவும்
பித்த நாடி – ஆமை, அட்டை நடையாகாவும்
கப நாடி – தவளை, பாம்பு நடையாகவும்
பெண்களுக்கு
வாத நாடி – பாம்பு நடையாகவும்
பித்த நாடி – தவளை நடையாகவும்
கப நாடி – அன்னம் நடையாகவும் இருக்கும்.
நாடியை கணிக்கும்போது, நோயாளியின் தன்மை, நோயாளியின் உடல் வெப்பம், சுற்றுப்புறச் சூழ்நிலையின் வெப்பம், நோயாளியின் மனநிலை, நோயின் தன்மை இவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவை முறையே, 1: 2: 4 என்ற விகிதத்தில் இயங்கினால் நோயற்ற நிலையாகும். நாடியை கணிக்கும்போது, நடுவிரலில் உணரும் பித்த நாடியை நடுநாயகமாகக் கொண்டு மற்ற இரு நாடிகளின் தன்மையை உணர வேண்டும்.
சித்தர்கள் கண்டறிந்த நோய்களாக 44487 குறிப்பிடப்படுகின்றன. அவை பல்வேறு வகைகளின் கீழ்
வாதம் 84, மூக்கு 10, பித்தம் 48, விரணம் காயம் 700, வாயு 300, கடிவிஷம் (பூச்சி) 500, சுரம் 85, கொப்புளம் கட்டி 60, கண்நோய்கள் 96, குழந்தை நோய் 100, தோல்நோய்கள் 90, இருமல் 10, சன்னி 13, வாந்தி நா பல் 96, மேகரோகம் 5 20 விடக்கடி (விலங்கு) 96, க்ஷயம் 7, கிராணி 25, மூலம் 9, அதிசாரம் 25, வலி நரம்பு 6, பிளவை 12, அவசரம் 7, குடற்புழு 6, குட்டம் 15, காதுநோய் 10, மலடு 6 என்று பிரித்து தொகுக்கப்பட்டுள்ளன.
சித்த மருத்துவன்
குணவாகடம் நூல் மூன்று கண்கள், நான்கு தலைகள், ஐந்து முகங்கள்,
ஆறு கைகள், எட்டு உடல்கள், பத்து கால்கள் என்று 36 சித்த மருத்துவத்தின் உறுப்புகளை குறிப்பிடுகிறது.
மருந்து, மருந்தின் சுத்தி, மருந்தின் குணம் ஆகியவை மூன்று கண்களாகவும்
வாதம், பித்தம், ஐயம், தொந்தம் ஆகியவை நான்கு தலைகளாகவும் வாந்தி, பேதி, குடல் சுத்தி, நசியம், இரத்தத்தை வெளியாக்கல் ஆகியவை ஐந்து முகங்களாகவும்
இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கரிப்பு, கார்ப்பு, துவர்ப்பு ஆகியவை ஆறு கைகளாகவும்
எண்வகைத் தேர்வு முறைகள் எட்டு உடல்களாகவும்
தசநாடிகள் பத்து கால்களாகவும்
இந்த முப்பத்தாறு உறுப்புகளையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்களையே, மருத்துவர்களாக குணவாகடம் குறிப்பிடுகிறது.
மருந்துகள்
சித்த மருத்துவ மருந்துகள் 11 வகை உலோகங்கள், 25 வகை லவண உப்புகள், 64 வகை பாஷாணங்கள், 64 வகை கடைச் சரக்குகள், 120 வகை உப ரசங்கள், 1008 வகை மூலிகைகள் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்படுகின்றன.
இவற்றில் உலோகங்கள் என்பது உலோகங்கள் மற்றும் வெண்கலம், பித்தளை, தார போன்ற உலோக கலப்புகளை குறிக்கின்றன. லவண உப்புகளில் 10 இயற்கையாக கிடைப்பவை ஆகவும், மீதம் செயற்கையாக தயாரிக்கப்படுவை ஆகும்.
பாஷாணங்கள் அப்படியே பயன்படுத்தும் போது விஷத்தன்மை உடையவை. இவைகள் 32 வகை பிறவி, 32 வகை வைப்பு பாஷாணங்கள் என்று பிரிக்கப்படுகின்றன.
நவபாஷாணம்
“பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு கௌரி, கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு” – போகர்.
ஒன்பது வகையான பாஷாணங்களாகிய:
1. கௌரிப் பாஷாணம் (Arsenic Penta sulphite)
2. கெந்தகப் பாஷாணம் (Sulphur)
3. சீலைப் பாஷாணம் (Arsenic Di sulphite)
4. வீரப் பாஷாணம் (Mercuric Chloride)
5. கச்சாலப் பாஷாணம் (Chlorine)
6. வெள்ளைப் பாஷாணம் (Arcenic Tri Oxide)
7. தொட்டிப் பாஷாணம்
8. சூதப் பாஷாணம் (Mercury)
9. சங்குப் பாஷாணம்
கடை சரக்கு என்பவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் சுக்கு, மிளகு, திப்பிலி, போன்ற பலவித பொருட்கள்.
ரசம் என்பது பாதரசம்.
சுத்தி செய்தல், சாறு எடுத்தல், சலித்தல், அரைத்தல், புடம் போடுதல், எரித்தல், வறுத்தல், வஜ்ர மூசை செய்தல், உலையிடுதல், உருக்குதல் போன்ற மேலும் பல்வேறு முறைகளில் அவற்றின் நச்சுத்தன்மை நீக்கப்பட்டு, குணமாக்கும் தன்மை கொண்டுவரப்படுகிறது.
புடமிடுதல்
மருந்துப் பொருட்களை வெப்பத்தில் வைத்தெடுப்பதே புடம் போடுதல் எனப்படுகிறது. மண்ணில் குழிஇட்டு புடம் போடுவது சிறந்த முறை எனப்படுகிறது. உபயோகிக்கும் வரட்டிகளின் எண்ணிக்கை அடிப்படையில் காடை, கௌதாரி, குக்குடம், கோழி, வராகம், கஜ புடம் என்று வகைப்படுத்தப்படுகின்றன.
தீயினால் உண்டாகும் வெப்பம் மட்டும் அன்றி, இயற்கையாக கிடைக்கும் பல்வேறு சூட்டினை பயன்படுத்தி உள்ளனர். சூரிய வெப்பத்தில் புடமிடுவது ஞாயிறு புடம், நெல் களஞ்சியத்தில் வைத்து எடுப்பது தானிய புடம், பனியில் வைத்து எடுப்பது பணி புடம் என்று நீள்கிறது.
மருந்து வகைகள்
குடிநீர், சூரணம், மாத்திரை/குளிகை, இலேகியம், மெழுகு, குழம்பு, மணப்பாகு (Syrup), தைலம், செந்தூரம், பற்பம், புற மருந்துகள் போன்ற வகைகளில் வழங்குகின்றன.
அனுபானம்
மருந்துகள் கொடுக்கும்போது அவற்றின் செயல் திறனை அதிகரிக்க, அல்லது தடைகளை அகற்ற, கூட சேர்ந்து எடுத்துகொள்ள வேண்டியவை பால், நெய், மோர், தேன், நீர் போன்றவை அனுபானம் எனப்படுகின்றன. சுருக்கமாக மருந்தை கொண்டு செல்லும் ஊர்தி என்று புரிந்து கொள்ளலாம்.
காயகற்பம்
மரணத்திலிருந்து விடுவித்து என்றென்றும் வாழ செய்யும் காயகற்பம் என்ற முறை பற்றி சித்தர் பாடல்களில் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறது. பசி, நரை, திரை, மூப்பு வராமல் இளமையோடு, உடல் உறுதியோடு மரணத்தை வென்று வாழ மருந்து, மூச்சு பயிற்சிகள் போன்று சில முறைகள் கூறப்படுகின்றன. திருமூலர் திருமந்திரத்தில் மரணமில்லாமல் வாழ மூச்சு பயிற்சியை முன்வைக்கிறார்.
மேலையண் ணாவில் விரைந்திரு காலிடிற்
காலனும் இல்லை கதவுந் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவான் பராநந்தி ஆணையே (784)
சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்
சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
மூத்துடன் கோடி யுகமது வாமே (738)
திருவள்ளுவரும் சாவா மருந்தை குறிப்பிடுகிறார்.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பா றன்று
போகர் அந்த அருமருந்தை செய்யும் விதத்தை கூறுகிறார்.
‘கேளென்ற கருநெல்லி, கருத்த நொச்சி
கேடியான கருவீழி, கருத்த வாழை
காளென்ற கரிய கரிசாலையோடு
கருப்பான நீலியொடு கரியவேலி
கோளென்ற கரூமத்தைத் தீபச்சோதி
கொடுதிரணச் சோதி சாயா விருட்சம்
ஏளென்ற எருமைகனைச்சான் ரோம விருட்சம்
ஏற்றமாம் சுணங்க விருட்சம் செந்திரா…’
போக முனிவர் நாற்பத்தைந்து (45)
தாயுமானவர் காயகற்பம் தேடுபவர்களை இடித்துரைத்து, மனதற்ற பரிபூரண நிலையை முன்வைக்கிறார்.
நேசித்து ரசவாத வித்தை கலைந்திடுவர்
தாயுமானவர்
நெடுநாள் இருந்த பேரும்
நிலையாகவே வேயினும் காயகற்பம் தேடி
நெஞ்சு புண்ணாவர் எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
உறங்குவதுமாக முடியும்
உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே
ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப்
பாசக்கடற்குள் விழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்
பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரண ஆனந்தமே.
பாரதியும், தன்னை சித்தர்களில் இணைத்து சாகாமல் இருக்கும் சூத்திரம் சொல்கிறார். கோபம் தவிர்த்தல், கவலை தவிர்த்தல், காதல் செய்தல் என்பதோடு மூச்சு பயிற்சியை முன்வைக்கிறார்.
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா!
பாரதி அறுபத்தாறு
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
…
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ?
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்
வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே,வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்.
வர்ம மருத்துவம்
சித்த மருத்துவம் அவசர காலங்களை, விபத்துகளை எப்படி எதிர்கொண்டிருக்க முடியும்? வாத, பித்த, கப அடிப்படை, அந்த சமயத்தில் எப்படி வேலை செய்யும்?
ஒரு முழுமையான மருத்துவமுறையாக சித்த மருத்துவம் இதற்கு வர்ம முறையை பதிலாக கூறுகிறது.
வர்மம் என்பது உடல் தசைகள் (பேசிகள்), நரம்புகள், எலும்புகள், துவாரங்கள் (தசிரம்), மூட்டுகள் (பொருத்து), நரம்பு முடிச்சுகள் (விசிகள்) போன்றவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து இருக்கும் இடங்களை குறிக்கிறது.
சித்த மருத்துவம் ஸ்தூல தத்துவம் 30, சூட்சும தத்துவம் 30, இவை இரண்டையும் இயக்கும் காரண தத்துவம் 36 என்று 96 தத்துவங்களை அடிப்படையாகக் கொள்கிறது. வர்ம முறை முதுகு தண்டை அச்சு, ஆணி என்று இரண்டாகவும், நாடிகளில் பசலி, விசிலோதரன் என்று இரண்டை சேர்த்தும், மேலும் தச நாடிகளை 18 ஆக விரித்துக்கொண்டும் 108 தத்துவங்களை முன்வைக்கிறது.
வாசி எனும் பிராணன் இந்த நாடிகள் வழியே உடல் எங்கும் செல்வதை சரம் அல்லது கோர்வை என்று விளக்குகிறது வர்ம மருத்துவம். அவ்வாறு வாசி செல்லும்போது அதன் வழிகளில் வர்ம புள்ளிகளில் தங்கி செல்கிறது என்றும், அதன் ஓட்டத்தில் ஏற்படும் தடை, நோயை உருவாக்குகிறது என்றும் கருதுகிறது.
வர்மம் பொதுவாக படுவர்மம் 12, தொடுவர்மம் 96 என்று மொத்தம் 108 ஆக குறிப்பிடப்படுகிறது. அகத்தியர் எழுதிய கும்பமுனி நரம்பறை நூல் 251 வர்மபுள்ளிகளை குறிப்பிடுகிறது.
வர்ம முறைகள்
- படுவர்மம் – பலமான அடிகளால் ஏற்படுவது
- தொடுவர்மம் – பலமான தொடுகையால்
- தட்டு வர்மம் – பலமான தட்டுவதால்
- தடவு வர்மம் – பலமான தடவுவதால்
- நக்குவர்மம் – நக்குவதால்
- நோக்கு வர்மம் – பார்வையால்
என்று வகை பிரிக்கப்படுகின்றன.
உடல் சக்தியை வர்ம புள்ளிகளில் இயக்கும் முறை கைபாகம், செய்பாகம் என்படுகிறது. இது
| அணுக்கல் | அசைத்தல் | அமர்தல் |
| தட்டுதல் | தடவல் | ஏந்தல் |
| ஊன்றல் | பிடித்தல் | நழுக்கல் |
| பதுக்கல் | கறக்கள் | பின்னல் |
போன்ற 12 முறைகளில் செய்யபடுகிறது.
எலும்பு முறிவுகள், உள்ளுறுப்புகளில் இரத்தம் உறைதல், உடல் உறுப்புகள் துளைகள் வழியே நழுவுதல் ( Hernia/ஹெர்னியா), உடல்பாகம் செயலிழத்தல் (பக்கவாதம்), வலிகள் போன்றவற்றில் பயனளிக்கக்கூடும். மேலும் இவை தற்காப்பு முறைகளில் களரி, சிலம்பம் போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
இந்திய மருத்துவமுறைகளின் வழியே
இந்திய மருத்துவ முறைகளை அறிய நாம் இந்திய தத்துவத்தை, இந்து, பௌத்த, சமண, தாந்த்ரீக தத்துவங்களை கற்றறிய வேண்டும்.
மேலும் தமிழ் நிலத்துடன் வாணிப தொடர்பு கொண்டுள்ள ரோமம், சீனம் போன்றவற்றையும், கிழக்காசிய நாடுகளின் வரலாறையும் கற்றறிய வேண்டியுள்ளது. மிஷனரிகள், ஜெசூட், ஃப்ரெஞ்ச், டச்சு, போர்த்துகீசியர், டேனிஷ், ஆங்கிலேயர் குறிப்புகள் போன்றவற்றையும் ஒப்பிட்டு அறிய வேண்டியுள்ளது.
இன்றைய நவீன சித்த மருத்துவத்துக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த மூவரான அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர் மற்றும் ஆனந்தம் பண்டிதர் பற்றியும் ஆராய வேண்டியுள்ளது. மாறாக, மத, மொழி அடிப்படையில் அவற்றை அணுகுவது, தனிமனித மருத்துவ சிகிச்சை என்ற அளவிலும், இந்திய மருத்துவங்களின் வளர்ச்சியிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
சான்றாதாரங்கள்
- David, Gordon White, The Alchemical Body- Siddha in Medieval India, University of Chicago Press, USA, 1984, p.93
- https://en.wikipedia.org/wiki/Mahasiddha
- David, Gordon White, The Alchemical Body- Siddha in Medieval India, University of Chicago Press, USA, 1984, p.97.
- The Transmission of Scientific Knowledge from Tamilnadu to Europe (15th to 20th centuries) – K. V. Ramakrishna Rao
- https://pubmed.ncbi.nlm.nih.gov/19698826/
- சித்த மருத்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் – Dr. பொன். இராமநாதன்
- DR. T.G. ராமமூர்த்தி அய்யர், The Hand Book of IndianMedicine.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
