- சமூக உணர்ச்சிக் கற்றல்
- தன்னைத் தெரிந்து கொள்ளல்
- பொறுப்புணர்வோடு முடிவுகளை எடுத்தல்
- இன்க்ளூசிவ் – உள்ளடக்கிய நிலை
- சமூக உணர்ச்சி கற்றலை வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் வழிகள்
- சமூக உணர்ச்சி கற்றலும் நேர்மறையான பள்ளி சூழலும்
- வயதுக்கேற்ற கல்வி முறை
- வாழ்க்கை: இடரின் நீர்நிலை, முயற்சியின் படகு
- பள்ளி-சமூகம்-பெற்றோர் கூட்டுறவு: நிலையான கல்வி மேம்பாட்டிற்கான அடிப்படை
- சமூகக் கற்றலில் சமூகத்தின் பொறுப்பு
- தெரிவுகள் அதிகம், முடிவு ஒன்று
- முடிவெடுத்தல், பொறுப்பேற்றல் மற்றும் சமூக கற்றல்
அறிமுகம்
சமூக உணர்ச்சி கற்றல் ஐந்து முக்கிய பரிமாணங்களைக் கொண்டுள்ளது:
- தன்னைத்தான் அறிதல்
- தன்னுணர்வுகளை நிர்வகித்தல்
- பொறுப்புணர்வுடன் கூடிய முடிவுகளை எடுத்தல்
- சமூகப் புரிதல்
- உறவுகளைப் பேணும் திறன்கள்
இந்த ஐந்து திறன்களையும் குழந்தைப் பருவத்திலிருந்தே சரியாகவும் முறையாகவும் பழக்கப்படுத்த வேண்டும். முதலில் “தன்னைத் தான் அறிதல்” என்ற முதல் பரிமாணத்தைக் காண்போம்.
குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயதிலிருந்தே கிரகித்துக் கொள்ளும் திறமை உண்டு. எனவே, சின்ன சின்ன முடிவுகளை எடுக்க அப்போதிருந்தே கற்றுக் கொடுக்கலாம்.

தன்னை அறிதல் என்பது என்ன?
1. உணர்ச்சிகளை அறிதல்
ஒருவர் தன்னுடைய உணர்ச்சிகளை அறிந்து கொள்ளுதல், சிந்தனைகளையும் அதற்கான தேவைகளையும் அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம்.
ஒரு மூன்று வயது குழந்தை ஏன் அழுகிறது என்று கேட்டால், “எனக்கு பசிக்கிறது” அல்லது “எனக்கு தூக்கம் வருகிறது” என்று சொல்லும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கும். அப்போது, “நீ இப்போது எப்படி உணர்கிறாய்? சந்தோஷமா? கோபமா? வருத்தமா?” என்று கேட்பதன் மூலம் உணர்ச்சிகளுக்குப் பெயரிட கற்றுக்கொடுக்கலாம். இதற்கு தயக்கமே தேவையில்லை.
2. சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளுதல்
எந்த மாதிரியான சூழல்கள், நிகழ்வுகள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன என்று புரிந்து கொள்ளுதல் அவசியம்.
எடுத்துக்காட்டு: கடையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது யாரேனும் குறுக்கே புகுந்து கொள்ளும் போது சினம் ஏற்படுவது இயல்பு. சினம் ஏற்படுவது தவறல்ல. ஆனால் அதை எவ்வாறு வெளிப்படுத்துகிறோம், யாரிடம் வெளிப்படுத்துகிறோம், எந்த அளவு வெளிப்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.
பள்ளிச்சூழல் எடுத்துக்காட்டு: பள்ளியில் ஒரு குழந்தை தன் நண்பனின் விளையாட்டுப் பொருளை அனுமதியின்றி எடுத்துக் கொண்டபோது ஏற்பட்ட கோபத்தைப் பற்றி பேசுதல். அந்த சூழலில் ஏன் கோபம் வந்தது என்பதை விளக்குதல் – கேட்காமல் எடுத்ததாலா, விளையாட முடியாததாலா, அல்லது தன்னையும் சேர்த்துக்கொள்ளாததாலா என்று துணைக்கேள்விகளாகக் கேட்டு புரியவைக்க வேண்டும்.
3. காரணிகளை ஆராய்தல்
உணர்ச்சிகளின் காரணங்களை ஆராய்ந்து, அவற்றை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்ளுதல்.
எடுத்துக்காட்டு: நீண்டவரிசையில் நாம் காத்திருக்கும் போது ஒருவர் குறுக்கே புகுந்தால் ஏன் சினம் ஏற்படுகிறது, அதற்கான காரணம் என்ன, அதை எப்படித் தவிர்க்கலாம் என்று ஆராய்தல். “நமக்கு கோபம் வந்தால் நாம் மற்றவரிடம் நிதானமாக பேசலாம் – ‘தயவுசெய்து வரிசையில் பின்னால் நிற்க முடியுமா?’ என்று சொல்லலாம் அல்லது கடைக்காரரிடம் சொல்லலாம்.” ஆனால் வீட்டிற்கு வந்து, நமது கையாலாகாத்தனத்தை பிள்ளைகளிடம் சினத்தைக் காட்டித் தீர்த்துக் கொள்வது பெரும் தவறாகும்.
4. உணர்ச்சிகளின் தாக்கத்தை அறிதல்
தன்னுடைய உணர்ச்சிகள் மற்றவர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை அறிதல் மிக முக்கியம்.
குழந்தைக்கு நடந்த ஒரு சம்பவத்தைக் கதையாகச் சொல்லி, “உன் நண்பன் உன்னிடம் ‘நீ முட்டாள்’ என்று சொன்னால் நீ எப்படி உணர்வாய்?” என்று கேட்பதன் மூலம் வார்த்தைகளின் தாக்கத்தைப் புரியவைக்கலாம்.அப்படித்தானே, நீ கடுமையான வார்த்தைகளை அடுத்தவரிடம் பயன்படுத்தும் போதும் அவர்கள் பாதிக்கபடுவார்கள் எனப் புரியவைத்தல்
5. உணர்ச்சிகளின் பாதிப்பைப் புரிந்து கொள்ளுதல்
நம் செயல்கள் மற்றவர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை உணர்ந்துகொள்ளுதல்.
ஒரு பொருளை மற்றொரு குழந்தையிடமிருந்து மாணவர் பறித்தபோது, அந்தச் செயலால் மற்ற குழந்தை எப்படி வருத்தமடைந்தது என்பதை விளக்குதல். “அவர் எப்படி உணர்ந்திருப்பார்? ஏன் அவர் அழுதார்?” போன்ற கேள்விகள் மூலம் விளக்குதல்.
ஒருவர் கடுமையான சொற்களைப் பேசும்போது அருகில் இருப்பவர்கள் எப்படி உணர்வார்கள் என்று சிந்திப்பது. உதாரணமாக, ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒருவரை நகைச்சுவை என்ற பெயரில் தொடர்ந்து கேலி செய்யும்போது, வெளியே சிரித்தாலும் உள்ளுக்குள் அவர் காயப்படுவார்.
6. பலம் மற்றும் பலவீனத்தை அறிதல்
நம்முடைய பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து கொள்வது அவசியம். எந்த வயதினராக இருந்தாலும் அவர்களின் உணர்ச்சிகளின் மீதான ஆளுமைத் திறனை வளர்க்க முயல வேண்டும்.
“நீ கணிதத்தில் மிகவும் சிறப்பாகச் செய்கிறாய். ஆனால் உனக்குப் பிறருடன் பகிர்ந்து விளையாடுவதில் சிரமம் இருக்கிறது. நாம் அதை எப்படி மேம்படுத்தலாம்?” என்று குழந்தையின் திறமைகளையும் மேம்படுத்த வேண்டிய பகுதிகளையும் பேசுதல். எதனால் பிறரோடு பகிர்ந்து விளையாட இயலவில்லை, என்ன தயக்கம், அதற்கான காரணங்கள் என்ன என்று துணைக்கேள்விகள் மூலம் அடிப்படைக் காரணத்தை அறிந்து நீக்க முயலுதல் சிறந்தது.
குழந்தைகளுக்கு உணர்ச்சி கட்டுப்பாட்டைக் கற்பித்தல்
சிறு குழந்தைகளிடம் பொது இடங்களில் அழுவது, சினம் கொண்டு குரல் உயர்த்துவது அல்லது தரையில் படுத்து காலை உதைத்து அழுவது போன்றவை ஏற்றுக்கொள்ளத்தக்க நடவடிக்கைகள் அல்ல என்று புரியவைக்க வேண்டும். இல்லையென்றால் வளர வளர இந்தக் குணம் இன்னும் தீவிரமடையும். தனக்கு வேண்டிய பொருள் கிடைக்காதபோது பிடிவாதமாக மாறும். அது பொருள் மட்டுமன்றி, உறவுகளிலும் மற்ற விஷயங்களிலும் ஆதிக்க மனோபாவத்தை வளர்க்கும்.
எடுத்துக்காட்டு: கடைக்குச் சென்றபோது ஒரு குழந்தை விலையுயர்ந்த பொம்மையைப் பார்த்து அழுது பிடிவாதம் பிடிக்கிறது. இதற்கு பதிலாக என்ன செய்ய வேண்டும்?
சரியான வழிகாட்டல்: “நான் புரிந்துகொள்கிறேன், அந்த பொம்மை உனக்கு வேண்டும். ஆனால் நாம் இப்போது அதை வாங்க முடியாது. உன் வருத்தத்தை நான் புரிந்துகொள்கிறேன். நீ மூச்சை ஆழமாக எடுத்து அமைதியாக இருக்க முயற்சி செய்யலாம். இல்லையென்றால் இப்போதே நாம் வீட்டிற்குச் செல்லவேண்டியிருக்கும்.”அப்படிச் சொன்னால், குழந்தை கேட்கவில்லை என்றால் வீட்டிற்கு சென்றுவிட வேண்டும். வேறுவேலை இருந்தாலும் இன்னொருநாள் பார்த்துக்கொள்ளலாம் என சென்றுவிட்டால், அந்த உறுதி பல உண்மைகளைக் கற்றுத்தரும்.
தவறான அணுகுமுறை: கவனிக்காமல் விடுதல் அல்லது பொம்மையை வாங்கித் தருதல்.
குடும்ப அறம் மற்றும் பண்புகளை வளர்த்தல்
ஒருவர் தன்னுடைய உணர்ச்சிகள், எண்ணங்கள், கொள்கைகள், தன் குடும்பத்திற்கான அறம் ஆகியவற்றை அறிதல் முக்கியம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதற்கான அடிப்படை அறம் உண்டு. சிலர் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருப்பார்கள், வேறு சிலர் நேர்மையை, மற்றும் சிலர் நம்பிக்கையை முக்கியமாகக் கருதுவர்.
ஒரு சின்ன எடுத்துக்காட்டு: ஒரு குடும்பம் உண்மை பேசுதலை மிகவும் மதிக்கிறது. அவர்கள் தங்கள் குழந்தைகளிடம், “நீங்கள் உண்மையைச் சொன்னால், நாங்கள் கோபப்படாமல் பிரச்சினையைத் தீர்க்க உதவுவோம். பொய் சொன்னால் நம்பிக்கை குறையும்” என்று கற்பிக்கின்றனர். குழந்தை ஒரு நாள் வீட்டில் ஏதோ உடைத்துவிட்டு உண்மையைச் சொல்லும்போது, பெற்றோர் “நீ உண்மையைச் சொன்னதற்கு நன்றி, அது தைரியத்தைக் காட்டுகிறது” என்று பாராட்டுகின்றனர்.
உண்மையை முக்கியமாகக் கருதுபவர்களிடம் தன்னம்பிக்கையோ நேர்மையோ இல்லை என்பதில்லை, ஆனால் அவர்களிடம் உண்மை மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமாக இருக்கும். அரிச்சந்திரன் என்றவுடன் “பொய்யே பேச மாட்டான்” என்பது நினைவுக்கு வருவதுபோல, யுதிஷ்டிரன் என்றவுடன் தர்மமும், வீமன் என்றவுடன் வீரமும் நினைவுக்கு வரும்.
நம் குழந்தைகளுக்கு நம் குடும்பத்தின் அடிப்படை அறம் என்ன? தானமா? நேர்மையா? என்று நம் முன்னோர்கள் எதை நம் அடையாளமாகச் சொல்லிச் சென்றார்கள் என்பதைக் கூறி வழிநடத்த வேண்டும். இது சாதிப் பெருமையோ கலாசாரப் பெருமையோ அல்ல.
எப்படி அறத்தைப் போதிப்பது?
பெற்றோர்கள் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினால் குழந்தைகள் பார்த்துப் பழகிக் கொள்வார்கள். நேர்மையாக வாழும் பெற்றோரைப் பார்த்து வளரும் பிள்ளைகளுக்கு இயல்பாகவே நேர்மை பழகும். அதேபோல, கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் அல்லது பெற்றோரிடமும் சிறு உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பேசும்போது, அது தவறானதல்ல என்ற தவறான செய்தியை குழந்தைகளுக்குச் சொல்கிறார்கள்.
தவறான எடுத்துக்காட்டு: குழந்தை பொய் சொல்வதைக் கண்டித்துவிட்டு, அதே பெற்றோர் ஒரு நண்பரிடம் “நாங்கள் வீட்டில் இல்லை” என்று தொலைபேசியில் கூறுவதைக் குழந்தை கேட்கிறது. இது குழந்தைக்குச் சரியான பண்புகளைக் கற்பிக்காது.
சரியான அணுகுமுறை: குழந்தைகளின் முன்னிலையில் பெற்றோர் நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். “இப்போது நான் பேச முடியாது, பின்னர் அழைக்கிறேன்” என நேர்மையான பதிலைக் கூறுதல்.
தன்னைத் தான் அறிதல் என்பது இவ்வாறாக அகத்தை அறிதலையும் உள்ளடக்கும். தன் உணர்ச்சிகள், அவற்றின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். உணர்ச்சிகளைக் கொண்டு அவற்றை ஆயுதமாக்கி காரியங்களைச் சாதிக்க முயலக்கூடாது.
தவறான எடுத்துக்காட்டு: ஒரு பெற்றோர் தன் குழந்தையிடம், “நீ படிக்காவிட்டால் எங்கள் மானமே போய்விடும், தலைக்குனிவு ஏற்படும்” என்று கூறுவது உணர்ச்சி பிளாக்மெயில் ஆகும்.
சரியான அணுகுமுறை: “படிப்பு உன் எதிர்காலத்திற்கு உதவும், அதனால் உன் கடமைகளைச் செய்வது முக்கியம்” என்று விளக்குதல் சிறந்தது.
முடிவெடுக்கும் திறனைக் கற்பித்தல்
ஒரு வேலையைச் செய்ய வேண்டுமானால், “இதைச் செய், அதைச் செய்யாவிடில் என்ன விளைவுகள் ஏற்படும் அல்லது செய்யாவிடில் என்ன பாதகங்கள் உண்டாகும்” என்பதை விளக்கி முடிவெடுக்கச் சொல்லித் தர வேண்டும். குழந்தைகளின் விளையாட்டு நேரத்தில் சிறிதளவு குறைப்பது போன்ற சிறு தண்டனைகள் அந்த விளைவுகளில் அடங்கலாம்.
சரியான எடுத்துக்காட்டு: “உன் வீட்டுப்பாடத்தை முடித்தால், 30 நிமிடம் விளையாடலாம். முடிக்காவிட்டால், விளையாட நேரம் இருக்காது. நீயே முடிவு செய்.”
தவறான அணுகுமுறை: உறவுமுறை உணர்ச்சிகளுக்குத் தொடர்பான “நான் உன்னோடு பேச மாட்டேன்”, “உன்னோடு விளையாட மாட்டேன்” போன்ற மனதைப் பாதிக்கும் உணர்ச்சி பிளாக்மெயில் செய்வது கூடாது.
மற்றொரு தவறான எடுத்துக்காட்டு: “நீ உன் அறையை சுத்தம் செய்யாவிட்டால், நான் உன்னை நேசிக்க மாட்டேன்” என்று கூறுவது தவறான அணுகுமுறை.
சரியான அணுகுமுறை: “அறையை சுத்தம் செய்வதன் மூலம் நீ பொறுப்புள்ள குழந்தையாக இருக்கிறாய். சுத்தமான அறையில் உன் பொம்மைகள் எளிதில் கிடைக்கும், தூசியால் ஒவ்வாமை வராது” என்று விளைவுகளை விளக்குதல் சிறந்தது.
வகுப்பறையில் SEL செயல்பாடுகள்
உதாரணம் 1: உணர்ச்சி பதிவு செயல்பாடு
மாணவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உணர்ச்சிகளைப் பதிவு செய்ய வேண்டும். “இன்று நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன், ஏனென்றால் எனக்கு விளையாட்டு வகுப்பு உள்ளது” அல்லது “நான் கவலையாக இருக்கிறேன், ஏனென்றால் என் நண்பருடன் சண்டை போட்டேன்” என்று எழுதலாம்.
உதாரணம் 2: கதை வாசிப்பு மற்றும் விவாதம்
உணர்ச்சிகளைப் பற்றிய கதைகளை வாசித்து, “கதாபாத்திரம் எப்படி உணர்ந்திருப்பார்?”, “உன் இடத்தில் நீ என்ன செய்திருப்பாய்?” போன்ற கேள்விகள் கேட்டு விவாதம் செய்தல்.
உதாரணம் 3: நடித்தல் மற்றும் பாத்திரமேற்று நடித்தல்
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து, பல்வேறு சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்வது என்பதை நடித்துக் காட்ட வேண்டும். உதாரணமாக, ஒரு குழந்தை மற்றொரு குழந்தையின் பொருளை எடுத்துக்கொள்ளும்போது எப்படி சரியாகப் பேசி தீர்வு காண்பது என்பதை நடித்துக் காட்டலாம்.
முடிவுரை
உணர்ச்சிகளை அறிதல் சமூக உணர்ச்சி கற்றலின் முதல்படிதான். இதில் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்த திறன்களை முறையாக வளர்ப்பதன் மூலம், குழந்தைகள் உணர்ச்சி நுண்ணறிவு மிக்கவர்களாக வளர்வார்கள்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
