மனித நாகரீகத்தின் நுழைவாயிலில்

வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்ட மருத்துவமுறைகளைப் பற்றி அறிய இன்றுவரை நமக்கு அதிகமான சான்றுகள் கிடைக்கவில்லை என்பதே பெரும் சவால். மாறாக, மனித நாகரிகத்தின் தொட்டில் என கருதப்படும் பகுதிகளில் நமக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த எழுதப்பட்ட தரவுகள், மருத்துவ வளர்ச்சியை அறிந்து கொள்ள புதிய சாத்தியங்களை அளிக்கிறது.

சுமேரியாவில் கிடைத்த களிமண் பலகைகள் மூலம் இன்றிலிருந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இருந்த மருத்துவ கட்டுமானம், பொது சுகாதாரம்,  நோய்கள், மருந்துகள் பற்றி நாம் அறிய முடிகிறது. ஆவணப்படுத்தப்படும் மருத்துவம் உருவானவுடன் கூடவே மருத்துவ மோசடிகளும் உருவாகிவிட்டதை அன்றிருந்த சட்டங்கள் காட்டுகின்றன.

மெசபடோமிய மருத்துவம்

மெசபடோமிய நாகரிகம் என்பது யூபிரிடிஸ் – டைகரிஸ் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்த சுமேரியன், அக்கடியன், பாபிலோன் போன்ற நாகரிகங்களை உள்ளடக்கியது. உலகின் முதல் நாகரீகமாக கருதப்படுகிறது.

மரணமின்மைக்கான வாய்ப்பை இழத்தல்

அடப்பா (Adappa), மெசபடோமியாவின் ஞானி, Ea என்னும் கடவுள் கோவிலின் பூசாரி. பெரும் ஊழிவெள்ளத்துக்கு பிறகு மனிதகுலம் என்ன செய்வதென்று அறியாதிருந்த நிலையில், அடப்பாவிற்கு Ea கடவுள் ஞானத்தை அருளுகிறார்.

டைகரிஸ் நதியில் படகில் அடப்பா மீன் பிடித்துகொண்டு இருக்கும்போது தெற்கு கடலில் இருந்து வீசும் காற்று இடையூறாக இருக்கிறது. இதனால் அவர் அதன் சிறகுகளை வெட்டி, காற்று ஏழு நாட்கள் வீசாமல் இருக்கும்படி செய்கிறார். இதை அறிந்த ஆகாயத்தின் கடவுள் அனு கோபமடைந்து அடப்பாவை தன் அவைக்கு அழைக்கிறார்.

இதை அறியும் Ea , அடப்பாவிடம் அனு (Anu) எது கொடுத்தாலும் மறுத்துவிடச் சொல்லி அனுப்புகிறார். அடப்பா, துக்க நிகழ்விற்கு அணியும் ஆடைகளை அணிந்து அனுவை பார்க்கச் செல்கிறார். அங்கிருக்கும் வாயில் காவலர்களான மேய்ச்சல் கடவுளான Dumuzid மற்றும் உயிர்வளர்சியின் கடவுளான Gishzida விடம் தான் பூமியை விட்டு வந்ததால் துக்கம் அனுசரிப்பதாக கூறுகிறார். இதனால் இரக்கமுற்ற இருவரும் அமரத்துவம் அளிக்கும் வாழ்வின் சாரமான உணவையும், நீரையும் அளிக்க அவர் அதை மறுத்துவிடுகிறார். பின் அவருக்கு எண்ணெயும், துணிகளும் வழங்க அதையும் மறுத்துவிடுகிறார். பின் அனுவின் அவைக்கு அழைத்து செல்லப்பட்ட போது, “ஏன் அவர் மறுத்தார்” என்று கேட்கப்படுகிறது. அடப்பா, “Ea சொன்னதால் மறுத்தேன்” என்கிறார். அவரின் அறியாமையை நினைத்து சிரித்த அனு, “அடப்பா, நீ உயிர்குலத்துக்கு கொண்டு செல்வது என்ன தெரியுமா?” என்று கோபப்படுகிறார். நீ கொண்டு செல்வது நோய்களில்லாத மரணமின்மையை என்று கூறி, மருத்துவத்தின் கடவுளான Ninkarrak உடன் இருக்கட்டும் என்கிறார். நோய்களுடனும், மருத்துவத்துடன் பூமிக்கு திரும்புகிறார் அடப்பா.

மெசபடோமியாவின், நோயோட்டும் பூசாரிகள் “நான் அடப்பா” என்று கூறியே சடங்குகளை ஆரம்பித்தனர்.

படம்: அடப்பா காற்றின் சிறகுகளை வெட்டல், wikipedia

வரலாற்று ஆவணங்கள்

சுமேரியர்கள், உலகின் மிகப் பழமையான முதல் எழுத்து முறையை உருவாக்கியவர்கள். ஈரமான களிமண் பலகைகளில் கூரான எழுத்தாணி கொண்டு அவர்கள் உருவாக்கிய எழுத்துமுறை கியூனிபார்ம் எனப்படுகிறது. இவ்வாறு நமக்கு கிடைத்த களிமண் பலகைகளில் இருந்து சுமேரியர்களின் மருத்துவமுறை பற்றி நாம் அறிய முடிகிறது.

அசூர்பனிபால் (Ashurbanipal), பொ யு மு  600 களில் அசிரிய பொற்காலத்தில் வாழ்ந்த பேரரசன். இவருடைய நினிவே நூலகத்தில் இருந்து சுமார் 30000 களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டன. இவை இவர் காலத்திற்கு முன்பிருந்து சேகரிக்கப்பட்டவை மற்றும் பிரதி எடுக்கப்பட்டவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதிலிருந்துதான் அடப்பா மற்றும் கில்காமேஷ் பற்றி நமக்கு தெரியவருகிறது. இவரின் நினிவே நூலகத்திலிருந்து கண்டடையப்பட்ட  உலகின் முதல் மருத்துவ கலைக்களஞ்சியமாக கருதப்படும் சுமார் 50 களிமண் பலகைகள் உடலின் பல்வேறு பாகங்கள், நோய்கள், அவற்றின் சிகிச்சை முறைகள் போன்றவற்றை விளக்குகின்றன1.

           படம்: பிற்காலத்தில் வரையப்பட்ட படம் நினிவே நூலகம்

ஹமுராபியின் சட்டங்கள்

படம் : Code of Hammurabi, wikimedia

பொ யு மு 1700 களின் மத்தியில் வாழ்ந்த ஹமுராபி பாபிலோனியாவின் புகழ்பெற்ற பேரரசன். ஹமுராபியின் சட்டங்கள் அன்றிருந்த மருத்துவ கட்டமைப்பைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கின்றன. இவையே முதல் எழுத்து வடிவ சட்டங்களாக கருதப்படுகிறது2.

வேறுபட்ட கட்டணம் செலுத்தும் முறை (Sliding Fee Scale)  இருந்திருக்கிறது. அடிமைகளின் சிகிச்சை கட்டணம், உடைமையாளரின் பொறுப்பாக இருந்திருக்கிறது.

மருந்துகளுக்கு தனிக்கட்டணம் இல்லை. 250 வகையான மருத்துவ மூலிகைகள், 120 வகையான தனிமங்கள் போன்றவை மது, தேன், கொழுப்பு போன்றவற்றுடன் கலந்து தரப்பட்டுள்ளன. மாத்திரைகள், களிம்புகள், பொடிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டுளன.

ஆயிரக்கணக்கான களிமண் பலகைகள், நோயாளிகளின் நோய்குறிகள், அதன் காரணங்கள், சிகிச்சை மற்றும் அதன் முன்னேற்றம் போன்றவை மருத்துவரின் பெயருடன் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.

வரு குறி உரைப்பவர்கள் (Baru), பேயோட்டுபவர்கள் (Ashipu), மருத்துவர் (Asu), கால்நடை மருத்துவர் மற்றும் நாவித அறுவை சிகிச்சையாளர்கள் என்ற பிரிவினை இருக்கிறது.

 Baru மற்றும் Ašipu அவர்களின் சிகிச்சைத் தவறுகளுக்கு அவர்கள் பொறுப்பல்ல. அது கடவுள் மற்றும் கெட்ட ஆவி சம்பந்தப்பட்டது. மாறாக, மருத்துவர்களின் சிகிச்சை முறையால் நோயாளி இறந்தாலோ, பலத்த காயம் அடைந்தாலோ, பார்வையிழந்தாலோ மருத்துவரின் விரல்கள் வெட்டப்படும் (சட்டம் 218-219). ஆனால் இவை பெரும்பாலும் நீதிபதியின் சொந்த அறிவு, சூழ்நிலை, மக்கள் மனநிலை ஆகியவற்றையும் கருத்தில் கொள்கிறது.

தேவைக்கு குறைவான சிகிச்சை அல்லது அளவுக்கு அதிகமான சிகிச்சை அளித்தது நிரூபிக்கப்பட்டால், மருத்துவரின் கைகள் வெட்டப்படும். இது மேற்கொண்டு அந்த மருத்துவர் சிகிச்சை அளிப்பதை தடுப்பதற்காகும்.

மெசபடோமியா மருத்துவ கடவுள்கள்

நோய்களுக்கு காரணம் கடவுள்கள் என்ற கருத்து, வெவ்வேறு நோய்கள் மற்றும் சிகிச்சைகளுக்கு வெவ்வேறு கடவுள்களை உருவாக்கும்  நிலைக்கு கொண்டு சென்றது. மெசபொடோமியாவின் மருத்துவ கடவுள்கள் Gula, Ninisina, Ninkarrak, Nintinugga, Bau மற்றும் Meme இவர்கள் ஒவ்வொருவரும் மற்றொருவருடன் தொடர்பு கொண்டவர்களாகவும், வெவ்வெறு பிராந்தியங்களை சேர்ந்தவர்களாவும் குறிப்பிடப்படுகிறார்கள்.

நோய்க்கான காரணம் – நோய் அறியும் கலை

சுமேரிய நாகரிகம், நோய்களை இரண்டு விதமாக பார்த்தது.

ஒன்று மருந்துகளால் குணமாகக்கூடியவை.  இவற்றை மேற்கொள்பவர்கள் Asu என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் பல்வேறு மூலிகைகள், காயங்களை சுற்றி கட்டிடுதல் (Bandage), வெளிப்புற தைலங்களை பூசுதல் (Salves) போன்றவற்றின் மூலம் நோய்களை குணப்படுத்தினர்.

மற்றொன்று மந்திரத்தால் குணமாக கூடியவை. இவற்றை மேற்கொள்பவர்கள் Ašipu என்றழைக்கப்பட்டனர்.

இவர்கள் மந்திர உச்சாடனம் (Incanation), அருள்வாக்கு அளித்தல் (Recite Spells), கெட்ட ஆவிகளை ஓட்டுதல் (Exorcism), தீயவற்றை நீக்கும் தாயத்து உருவாக்கி அளித்தல் (Amulet), நல்லதை கொண்டு வரும் தாயத்து உருவாக்கி அளித்தல் (Talisman) போன்றவற்றை மேற்கொண்டனர்.

சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள்

முதல் மருத்துவ கையேடு

பாபிலோனியாவில் பொ யு மு 1000-ல் வாழ்ந்த Esagil-kin-apli எழுதிய Sakikkū முதல் நோய் அறியும் (Diagnostic) நூலாக கருதப்படுகிறது. 3000 க்கு மேற்பட்ட நோய்குறிகள், அவற்றின் காரணங்கள் ஊக தர்க்க  முறைப்படி (Axiom) தொகுக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும், நோய்க்கு காரணமான கடவுளை கண்டறியும் மந்திர சப்தங்களுக்காக தொகுக்கப்பட்டன. நீர் மற்றும் அறிவு கடவுளான  Ea வால் இந்த மந்திர சப்தங்கள் மனிதனுக்கு அளிக்கப்பட்டது என குறிப்பிடப்படுகிறது. Esagil-kin-apli, இந்த கையேடு வெகுகாலம் முன் தொகுக்கபட்டது என்பதால், அது மீண்டும் மேம்படுத்தி தொகுக்கப்படுகிறது என்று கூறுகிறார்3.

எழுதப்பட்ட பிரிஸ்கிரிப்ஷன்

மெசபொடோமியாவின் நிப்பூர் (ஈராக்) பகுதியில் கிடைத்த களிமண் பலகையில் எழுதப்பட்ட 15 வகையான பிரிஸ்கிரிப்ஷன்கள் கிடைத்தன. மாதிரிக்கு ஒன்று:

பிரிஸ்கிரிப்ஷன் #9: Pour strong beer over the resin of the plant; heat over a fire; put this liquid in river bitumen (oil), and let the sick person drink4.

நிப்பூர் கியூனிபார்ம் பலகை Credit courtesy: penn museum

சுமேரிய நாகரிகத்தின் இரண்டு மருத்துவ சிகிச்சைமுறைகள் மிகவும் சுவாரசியமளிப்பவை:

அகத்தின் அழகு முகத்தில் தெரிதல் (physiognomy)

நமக்கு கிடைத்த களிமண் பலகைகளில் இருந்து, ஒருவரின் முக குறிப்புகள், உடலமைப்பு, அவர் பேசும் முறை ஆகியவற்றை வைத்து நோய்களை, அவற்றின் காரணங்களை சுமெரியர் கண்டறிந்தனர் என தெரிய வருகிறது. இந்த முறை பின்னர் பல்வேறு கலாச்சாரங்களில் பயன்படுத்தப்பட்டு, 19 ஆம் நூற்றாண்டு வரை மருத்துவத்திலும் புழங்கி வந்தது. பின் இது ஒரு போலி அறிவியல் முறையாக, சென்ற நூற்றாண்டில் கருதப்பட்டது5.

கல்லீரல் சோதிடம் (haruspicy)

நேர்ச்சைக்கு விடப்பட்ட விலங்கின் (குறிப்பாக ஆடு) கல்லீரல் மற்றும் குடலை ஆராய்வதன் மூலம், அந்த மனிதனுக்கு வந்த நோயை அல்லது துயரை குறிப்புணர்ந்து சொல்வது.  இந்த முறை Haruspicy எனப்பட்டது. இவ்வாறு குறியுறைப்பவர்  Haruspex என்று அழைக்கப்பட்டார். கல்லீரலே உடலின் மையமாக பழங்காலத்தில் கருதப்பட்டது6.

படம்: ஆட்டின் கல்லீரல் வருகுறி உரைக்க பயன்படுத்தப்பட்டது,  Courtesy: wikipedia

மரணமில்லா பெருவாழ்வின் தேடல்

அடப்பா மரணமின்மையை மறுத்து நோய்களுடன் திரும்பி வந்தாலும், அதை ஏற்று அமைதியாக இருந்துவிடுமா மனித இனம்? மனிதர்களை  தீராத தேடலே முன்செலுத்துகிறது. அவ்வாறு மீண்டும் மரணமின்மையை தேடிச்செல்பவனின் கதையே கில்காமேஷ் காவியம்.

படம்: கில்காமேஷ், wikimedia

பொ யு மு 3000 ஆண்டுவாக்கில் எழுதப்பட்ட கில்காமேஷ் கதை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். நின்சன் என்ற அறிவின் தெய்வத்துக்கும், லுகல்பந்தா என்ற அரசனுக்கும் பிறந்த மகன். முக்கால் பங்கு தேவனும், கால்பங்கு மனிதனும் ஆனவன். உருக் நகரை ஆண்ட சுமேரிய பேரரசன், ஒரு சூப்பர் ஹீரோ.

எதிரியும் பின் நண்பனும் ஆன என்கிடுவின் மரணத்துக்கு பின் மரணமில்லா பெருவாழ்வை தேடி, பெரும் ஊழி வெள்ளத்தில் இருந்து மக்களை காத்த உத்னாபிஸ்திம் என்பவரை தேடிப் போகிறான். பெரும் சோதனைகளை கடந்து அவரை அடைகிறான். அவர்  மரணமில்லா வாழ்வு மனிதர்களுக்கு அளிக்கப்படவில்லை என்கிறார். கில்காமேஷ் தொடர்ந்து கேட்க, அவன் 7 நாட்கள் தூங்காமல் இருந்தால் அந்த ரகசியத்தை சொல்வதாக  கூறுகிறார். ஆனால் அடுத்த நொடியே அவன் தூங்கி விடுகிறான். பின் எழுந்து ஏமாற்றம் அடையும்போது, உத்னாபிஸ்திம் அவர்களின் மனைவி இவ்வளவு தூரம் வந்த கில்காமேஷை வெறும்கையோடு அனுப்பக்கூடாது என்று கூறுகிறார். உத்னாபிஸ்திம், இளமையை மீட்டு அளிக்கும் ஒரு மூலிகையை அவனுக்கு தருகிறார். திரும்பும் வழியில், அவன் குளிக்கும்போது ஒரு நாகம் அதை தின்று தன் இளமையை மீட்டு கொள்கிறது. கில்காமேஷ் வெறும்கையோடு திரும்புகிறான். உருக்  நகரின் கோட்டைச்சுவரை தொட்டு அவன் மனித நாகரிகத்தின் உச்சபட்ச சாதனைகளை எண்ணி பெருமிதம் கொள்வதாக முடிகிறது காவியம்.

மரணமின்மை மற்றும் அழியாத இளமையை தேடிச்சென்ற கில்காமேஷ் மருத்துவத்திற்கு எத்தனை அணுக்கமானவன், ஆச்சர்யமளிக்கும் விதமாக அவன் தாய் நின்சன், பிற்காலங்களில் சுமேரிய மருத்துவ கடவுள் குலா (Gula) ஆக குறிக்கப்படுகிறார்.

மீண்டும் மீண்டும் மரணமின்மை மனித குலத்துக்கு மறுக்கப்படுகிறது. நோய்களிலிருந்து விடுபட கடவுள்கள் தேவையாக இருக்கிறது. ஆனால் மனிதன், கடவுளரை ஒரு ஓரமாக வைத்துக்கொண்டே நோய்கள் பற்றிய அறிவை தொகுத்து கொள்வதையும், அதிலிருந்து தீர்வுகளை நோக்கி பயணிப்பதையும் பண்டைய எகிப்திய நிலத்தில் அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

சான்றாதாரங்கள்

  1. https://www.britishmuseum.org/blog/ancient-healthcare-fit-king
  2. https://www.academia.dk/MedHist/Biblioteket/Print/hamurabi-managed-healthcare.html
  3. https://en.wikipedia.org/wiki/Esagil-kin-apli#cite_note-1
  4. https://cdli.mpiwg-berlin.mpg.de/cdli-tablet/553
  5. https://www.degruyter.com/document/doi/10.1515/9783110642698-003/html?srsltid=AfmBOorZS_fEMBg8tDYVPVk2SVMbcy3TSFuedvQiNs130MQfPnEFiMFQ
  6. https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC9944526/


மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்

ஹோமியோபதி – ஓர் எளிய அறிமுகம் 3. மரணமின்மையின் முதற்துளி

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “மனித நாகரீகத்தின் நுழைவாயிலில்”

  1. மருத்துவத்தின் வரலாற்றை பற்றி நல்ல தகவல்களை எளிய தமிழில் வாசகர்கள் புரிந்துக் கொள்ளும் படி உப தலைப்புகளுடம் தொகுத்து நல்ல சித்திரம் ஒன்றை கட்டுரை ஆசிரியர் வழங்குகின்றார்.

    கில்காமேஷ் போன்ற இலக்கிய வடிவங்களோடும், ஹமுராபியின் சட்டங்களும், நினிவே நூலகமும் மருத்துவம் என்பதை பற்றிய ஆர்வத்தினை அதிகரிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.