ஹர்ஷ சரித்திரம்- 2

மறு தினம்,  மூவுலகையும் ஒளி மயமாக ஆக்கிக் கொண்டு,  ஸூரிய பகவானின் சாரதி அருணனின் முதல் கிரணங்கள் பூமியைத் தொட்ட நேரத்தில், வானத்தில் அதன் பிரதி பலிப்பாக ஒளி பரவியது.  யாரோ புரியாத சொற்களுடன் ஏதோ சொன்னது போல இருந்தது.  ‘ நன் மக்களின் அறிவிற் சிறந்த பெரியவர்கள் மனதில் வசிப்பவள்.நீ. ஏன் யோசிக்கிறாய். எந்த இடம் ஏற்றது என்று தேடுகிறாயா? இதோ இந்த குளத்தில் இறங்கு. கல ஹம்ஸங்கள் வழி காட்டும்.  பங்கஜாலயம் – தாமரை மலர்கள் நிறைந்த  இடத்தை அவைகள் காட்டிக் கொடுக்கும். ‘ நீர் வாழ் பறவைக்கு வழி சொல்வது போல இருந்தது அந்த பாடல்.

இதைக் கேட்டு சரஸ்வதி புரிந்து கொண்டாள். ஓ எனக்குத் தான் வழி சொல்கிறது இந்த சொற்கள்.  இருக்கட்டும். இதன் படியே செய்கிறேன். தன் நிகழ் காலத்தை மட்டுமே எண்ணியபடி, பந்து ஜனங்கள், பரி ஜனங்கள் என்று இருந்த பழைய வாழ்வை முற்றிலும் துறந்தவளாக, மும்முறை பிரதக்ஷிணம் செய்து நான் முகனை தியானித்தபடி, சாவித்திரி மட்டுமே உடன் வர கிளம்பினாள்.  துருவன் முதல், அனுசரித்த தர்மம், கீழ் நோக்கி வேகமாக ஓடி வரும் வெண்மையான நீருடன், ஹோ என்று இரைச்சலாக பிரவகித்து பூமியில் இறங்கும் கங்கா நதி, அந்தகனை வதைத்த ஈஸ்வரனின் தலையில் இருந்த மல்லிகை, மாலதி மலர்களைத் தள்ளிக்  கொண்டு, அந்த மணத்தையும் எடுத்துக் கொண்டு செல்வது போல, அருந்ததி காட்டிய தாரகைகளின் வழியில்,  (अन्ग तुंग तरंग तरळ तर तारकाम् -கவியின் சொற்கள் ) சென்றனர். தபஸ்விகள் எள்ளுடன் அன்னத்தை தங்கள் முன்னோர்களுக்கு  அளித்து நீர் கடன்களை செய்து கொண்டிருந்தனர்.    புல்லால் வேயப்பட்ட கூரைகளுடன்  உள்ள இருப்பிடங்கள், கடும் வெய்யில் தாக்காமல் மகரிஷிகள்  அதில் வசதியாக, நிழலில் தங்கினர் போலும்.

எங்கும் பூக்கள் அக்ஷதைகள் கொண்டு அர்ச்சனைகள் செய்வோரும், ஆசமனீயம் என்பதைச் செய்து சுத்தமாக சிவாலயங்களுக்குள் செல்வோரும், நிர்மால்யம்-  அடுத்த  பூஜை நேரத்தில், முன் சார்த்தியிருந்த பூக்கள், மாலைகள் – இவற்றை அகற்றிய பின்- அவைகள் நிர்மால்யம் எனப்படும். அவைகளை மரியாதையாக ஏற்று, தலையில் சூடிக் கொள்வதோ, அல்லது மனிதர்களின் கால் படாத இடங்களில் போடுவதோ முறை.  அழகிய சிற்பங்கள்,  யானை, முதலை, விக்ரஹங்களை (கஜேந்திர மோக்ஷம் என்பதை குறிக்கும்) சிற்பங்கள்,  சுஷும்னா  நாடியில் பெருகும் அம்ருதத்தை, தலை யின் -கபாலம் வரை கொண்டு சென்று – யோக முறை – அனுசரிப்பவர்கள் நிறைந்த இடம்,  ப்ரும்மா செய்து கொண்டிருந்த யாக சாலையில் இருந்து புகை அந்த வெண் மணலை கருமையாக்கியது போல இருக்க, 

சித்தர்கள் தாங்களே மணலில் உண்டாக்கிய லிங்கங்கள், அதை தாண்டக் கூடாது என்று வித்யாதரர்கள் கவனமாக சுற்றிக் கொண்டு சென்றனர். 

சுவர்கத்தின் நாகங்கள் பெரும் கடை வீதிகள் போலத் தெரிய, நரக நகரத்தின் வாயிலில் சிலர், சுமேரு மலையும், கைலாசமும் அபவர்கம் எனும் மேலுலகம் செல்வோருக்கு வழி காட்டுவது போல, க்ருத யுக சக்கரத்தின் ஆரம் போன்ற ஏழு கடல்களையும் ஆட்சி செய்யும் ராணி போன்ற மந்தாகினீ நதியைத் தொடர்ந்து  சென்று மனிதர்களின் உலகத்தில் இறங்கினர். 

ஆகாயத்தில் நின்ற வருணனின் ஹாரம் போலவும், அம்ருதமே பொங்கி பிரவகித்து வருவது போலவும், சந்த்ராசலம் இருந்தது.  விந்த்ய மலை நிலவின் ஒளியே பெருகி வழிந்தது போல குளுமையாக இருக்க, தண்டகாரண்யத்தின் அழகே  திசைகள் எங்கும் பெருகி சூழ்ந்த  பிரதேசம் என பிரஸ்ரவன பிரதேசம்,  மேலுலக பெண்கள் அமரும் ஸ்படிக கட்டில் போன்ற பரி சுத்தமான, குளுமையான, இனிமையான நீர் நிறைந்த பகவானின் பிதாமகரின் மகன் ஹிரண்ய வாஹன் என்ற பெயருடைய மகானதம்- பெரிய நதம்- (நதியின் ஆண் பால்-நதம்) ஜனங்கள் அதை ஸோண என்று அழைத்தனர். அதன் அழகைக் கண்டு மனம் மகிழ, ரமணீயமான அதன் கரையிலேயே தங்குவதாக நிச்சயித்தனர்.

சாவித்திரியிடம் சொன்னாள்: ‘சகி! இந்த இடம் ரமணீயமாக இருக்கிறது. மயில்கள் கூட்டமும், மரங்கள் தளிர்களும் பூக்களுமாக நம்மை வரவேற்பது போல அசைவதைப் பார்.  வாசனை வீசும் இந்த மலர்களை நாடி மதுகரங்கள்-வண்டுகள் மாலை தொடுத்தாற்போல சீரான கதியில் வட்டமிட்டபடி, ரீங்காரமிட்டுச் செல்வது வீணா வாத்யம் வாசிப்பது போல கேட்கிறது.  மந்தாகினி நதியும் அதை செவி மடுத்து மெள்ளச் செல்கிறாள் போலும்.  மஹா நதத்தின்  கரைகளில் பூமிகள் செழிப்பாகத் தெரிகின்றன. இங்கேயே நமது வாசஸ்தலத்தை அமைத்துக் கொள்ள என் மனம் விழைகிறது.’

அவளும் சம்மதிக்க அதன் மேற்கு கரையின் பகுதியில் இறங்கினர்.  அருகில் ஒரு சமவெளியான பாறை தென்பட அதில் தங்கள் குடிலை அமைத்துக் கொண்டனர்.  அதன் பின் சுற்றிலும் பார்த்தபடி பூக்களைப் பறித்தபடி சென்றனர்.  அதன் பின் நதியில் ஸ்னானம் செய்தனர்.  சற்று தூரம் காலார நடந்த சமயம் மண்ணால் நதியின் கரையில் அமைக்கப் பட்டிருந்த  சிவ லிங்கத்தைக் கண்டனர்.  மிகுந்த பக்தி சிரத்தையுடன், பஞ்ச ப்ரும்மத்தை முன்னிட்டுக் கொண்டு அழகாக சுற்று ப்ராகாரங்களும் பகவான் சிவ பெருமானின் சிறப்பான துதிகளுடன், அவனி, பவன,வன, ககன, தஹன – பூமி, காற்று, நீர்,ஆகாயம், நெருப்பு, தபனன் என்ற ஸுரியன், துஹின கிரண- சந்திரன், யஜமான-யாகம் செய்பவர் , என்பவையே மூர்த்தியாக விளங்கும் எட்டும் இணைந்த ரூபத்தை தியானம் செய்தபடி அழகிய பூக்களால் அர்ச்சித்தனர்.  அருகிலேயே அதிக சிரமப் படாமல் பழ மரங்கள் தென்படவும், அவைகளையும், தெளிவான சோணா நதியின் ஜலத்தையும் எடுத்து வந்தனர்.  அபிஷேக ஆராதனைகளை செய்த பின், சற்று நடந்த பின் குளுமையாக இருந்த லதா மண்டபத்தின் உள், ஒரு பாறையில் ஓய்வு எடுத்தபடி,  மலர்களாலேயே தங்கள் படுக்கையை தயார் செய்து கொண்டு உறங்கி விட்டனர்.   அதே போல சில தினங்கள் அங்கு வசித்தனர்.  

சில தினங்கள் இவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தனர்.  ஒரு நாள் விடிந்து ஒரு யாமம் ஆகியிருக்கும்.  வட திசையிலிருந்து ஏதோ ஆரவாரம்.   ஆரவாரமாக வந்த கூட்டம் நெருங்கி வருவது போல இருந்தது.  வனமே எதிரொலித்த அந்த சப்தம் கம்பீரமான குதிரைகளின் கணைப்பு சப்தம் என்பது புரிந்தது.  குதூலகமாக அதைக் காண அந்த கொடி வீட்டிலிருந்து வெளியே வந்து நின்றாள்.  தாழம்பூவின் மகரந்தம் சிதறியது போல மணல் துகள்கள் பரவி வேகமாக வந்து விழுந்தன.  கண்கள் அதனிடையே காண சற்று நேரம் பிடித்தது.  அருகில் வர வர தெளிவாக காணலானாள்.  நதி நீரில் மகரங்கள் நீந்திச் செல்வது போல அந்த தூசியின் ஊடே கூட்டமாக சிலர் அதில் பயணம் செய்த படி சில சிப்பந்திகள், தலையில் கட்டியிருந்த அடையாள தலைப்பாகைகள்,  குழல் கற்றைகள் அவைகளையும் மீறி நெற்றியில் புரள, வெண்ணிற மணிகள் கொண்ட குண்டலங்கள் முகத்தில் ப்ரதி பலிக்க, கவசங்கள் அணிந்த வீரர்கள், கைகளில் கடகங்களும், இடை விடாமல் உடற் பயிற்சி செய்பவர்கள் என்பதை தெரிவிக்கும் கட்டான உடலும், மான் கூட்டங்கள் ஓடும் பொழுது அவ்வப் பொழுது தலையை தூக்கி நிற்பது போல தலையை தூக்கி சுற்று முற்றும் தேடுவது போல அல்லது கண் காணிப்பவர் போல, கலகலத்த வாள் ஈட்டி இவைகளின் ஓசைகள் கட்டியம் கூற,   வா, வா என்றும், போ போ என்று நகரு  நகரு என்றும் உரக்க ஆணையிடுபவர்களாக, குதிரை வீரர்களைத் தொடர்ந்த கால் நடை படை வீரர்களும் வருவதைக் கண்டாள்.  

அவர்கள் இடையில் ஒரு வெண்ணிற குடையுடன் அவர்கள் தலைவன் போன்ற ஒருவன் வந்தான். குடையின் வர்ணனை. வெண் முத்துக்கள் அதன் ஓரங்களில் கட்டப் பட்டிருந்தன, சங்கம் போலவும், பாற் கடலின் நுரை போலவும், லக்ஷ்மி தேவி தானே கொண்டு வந்து கொடுத்தது போலவும், வானளாவி நின்ற பெரிய குடை. 

அதில், ஆபரணங்களின் ஒளி கண்களைக் கூசச் செய்ய, நடுவில் ஒரு இள வயது வீரன், மாலதி மலர்களால் ஆன மாலை இடை வரை தொங்க, உலகையே வெற்றி கொள்ளும் முக பாவனையோடு அமர்ந்த்திருந்தான்.  அணிந்திருந்த பொற் சங்கிலியில் பதிக்கப் பட்டிருந்த சிவந்த மாணிக்கம் தூசியினால் மறைக்கப் பட்ட அவன் முகத்தை தெளிவாக காட்டியது.  வன தேவதையில் கையில் பல வண்ண மலர்கள் இருப்பது போல அவன் உடலில் பத்ம ராக, வெண்ணிற மணிகள்  அலங்காரமாக பதிக்கப் பட்ட ஆடை. ஆதவனின் கிரணங்கள் போல அந்த நகைகள் பளீரென்று ஒளி வீசின.  பசுபதி தன் தலையில் அணிந்திருக்கும் மூன்றாம்  பிறை போன்ற முகுடம், தலையில் லக்ஷ்மி தேவி வாசம் செய்வது போல  மங்களமாக இருக்க,  யௌவனத்தின் முதல் படியில் அப்பொழுது தான் ஏறியவன் போன்ற வயதினன்.  புவனமே அவன் ஆளுமைக்கு உட்பட்டது போன்ற பாவனையுடன் கண்கள் அலட்சியமாக நோக்கின. தாமரைக் குளத்தில் ஒரே சமயத்தில் மலர்ந்த பல ஆயிரம் பங்கஜங்கள்  போன்று மலர்ந்து மந்த ஹாஸம் தவழும் முகத்தில் காது வரை நீண்ட கண்கள். சரத் காலம் போல  எடுப்பான நாசியும் வசீகரமான தோற்றமும், நந்தன வனத்தையே உடன் அழைத்து வந்து விட்ட மன்மதனின் சகா வசந்தன் போலவே இருந்தான்.  எனவே, பாரிஜாத, மாம்பூ, கர்பூர, கிராம்பு வாசனைகள் கலந்து வீசி சுற்றுப் புறத்தை சுத்தமாக்கின போலும். 

மந்தர மலை பாற்கடலை கடைய நின்று கொண்டிருப்பது போல கூடியிருந்த நண்பர்கள், அடியாட்கள், இடையே தனித்து தெரிந்தான்.  வீரனுக்கே உரிய உடற் கட்டு. விரிந்த மார்பும், திரண்ட புஜங்களும்  நீண்ட கைகளும் அவன் அழகன் என்பதை பறை சாற்றின. படைத்தவரின் கலா ரசனையை ப்ரகடனம் செய்வது போல சிறப்புகள் எனப்படும் அனைத்தும் ஒருமித்த அங்கங்களுடன் கண் கவர் வனப்புடன் தெரிந்தான். 

அவன் அருகில் ஒரு மெய்க் காவலன், குதிரையில் நடு வயதினனாக, திடமான சரீரமும், நிமிர்ந்த முகத்தில் அடர்ந்த மீசையும், அந்த வயதிற்குரிய, சரிந்த வயிறும், ரோமம் அடர்ந்த பெருத்த கைகளும், மார்பும், ஜரை- முதிர்ந்த வயதையும் கௌரவமாக்கிக் கொண்டவனாக, அல்லது அந்த முதிர்ந்த வயதும் அவரது அனுபவத்தை பறை சாற்றுவதாக இருப்பது போல தோற்றம்,  பார்த்தவர்களுக்கு வினயம் அளிப்பதான கம்பீரமான ஆகிருதி. அறிவும், அனுபவமும் உள்ளவர் என்பதும்,  அந்த பரந்த மனப் பான்மையை கண்டவர் தாங்களாகவே அடி பணிவர் போலவும், நியமங்களுக்கு நியமங்களை கற்றுத் தருபவர் போல ஆசாரம் என்ற நியமங்களை கடை பிடிப்பவர் போலவும், வெண் நிற ஆடைகளும், தலைப் பாகையும், இடையில்  வெண்ணிற உறையில் வாளும் அணிந்தவராக மரியாதைக்குரிய பெரியவர் என்பதை காட்டின.   

அந்த யுவனிடம் சில கால் நடை வீரர்கள்  வந்து  ஆச்சர்யமும், பரபரப்புமாக  இவர்கள் இருவரையும் சுட்டிக் காட்டி ஏதோ சொன்னார்கள்.  அவர்கள் தெரிவித்த விஷயங்களால் கவரப் பட்டு அந்த சிறுவனும், இறங்கி, அவர்கள் இருந்த லதா மண்டபத்தை நோக்கி வந்தான்.  வெகு தூரத்தில் குதிரையை விட்டு விட்டு, பரி ஜனங்களை உடன் வருவதை தவிர்த்து,  பெரியவர் மட்டும் உடன் வர  கால் நடையாக வந்தான். 

அருகில் வந்தவர்களை வரவேற்று, ஆசனம் அளித்து, வன வாசம் செய்வோர் செய்யும்  எளிமையான பழங்கள், நீர் இவைகளை கொடுத்து அதிதி சத்காரம் என்பதை முறையாக செய்தனர்.  அவர்கள்  வசதியாக அமர்ந்த பின், சாவித்திரி பேச்சுக் கொடுத்தாள்.  

  ‘ஆர்ய! இயல்பான கூச்சம் காரணமாக இந்த பெண்  பேசத் தயங்குகிறாள்.  அதுவும் வனத்தில் வசிப்பதால்.  புது மனிதர்களிடம் தானாக பேசுவதில்லை என்ற குல வழக்கம்.  உங்களை காண்பதே கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. பேச்சு கொடுக்க விரும்புகிறேன்.  குரல் எப்படி இருக்கும் என்பதை அறிய என் காதுகள் தவிக்கின்றன. முதல் பார்வையிலேயே மனதில் நம்பிக்கையை,  உறவினர் போன்ற அருகாமையை இது  போன்ற  நல்ல ஜனங்கள் தோற்றுவித்து விடுகிறார்கள்.  வேறு உபாயனம்- பரிசுப் பொருள் தேவையே இல்லையே.  அதிகம் பேசாமலே இவர்கள் என்னிடம் நிறைய விவரங்களைச் சொல்லி விட்டது போலவும், பதிலுக்கு உங்களுடன் வார்த்தையாட என் வாய் விரும்புகிறது. அதுவே  தங்கள்  பெருந்தன்மை.  அனாயாசமாக, பணிவுடைய சாதுக்கள் சுய பாதுகாப்புக்காக கையில் வில்லைத் தரித்து இருப்பது போல, பேசும் முன் மௌனமே என்னை கவருகிறது. உங்களிடம் எனக்கு நம்பிக்கை பல மடங்காகி விட்டது.  முதன் முதலில் பார்ப்பவர்களிடம் தங்கள் தாக்கத்தை அளிக்க கூடிய பெரும் சக்தி உள்ளவர்.  ஆச்சர்யம். சிறந்த வீரர்கள், புத்திமான்கள் அந்த ஈஸ்வரனின் அருளாலேயே அவர் சிருஷ்டியில் அமைவர்.  ஏனெனில், மூவுலகையும் தன் வசப் படுத்தும் அளவு அழகிய உருவம்  உடைய இவர்கள் , நாங்களாக முன் வந்து பேசுவது மரியாதைக் குறைவு என்று நினைக்கலாம் என்பதால், சகஜமாக உரையாட எனக்கு  தயக்கம் வருகிறது.  வேறு எந்த காரணமும் தெரியவில்லை.  அதனால் நீங்கள் சொல்லுங்கள் . 

எந்த தேசத்தவர். (எந்த தேசம் இவர்கள் விட்டு விலகியதால் ஸூன்யமாக ஆகி விட்டது கவியின் சொற்கள்) 

எந்த இடம் போக கிளம்பினீர்கள்?   தவம் செய்ய வந்தீர்களா?  கௌஸ்துப மணி, அம்ருதத்தை வர்ஷிப்பது போல இவருடைய தந்தையும்,தாயும்  இவன் பிறந்ததும் மகிழ்ந்திருப்பார்.  இவன் தாயார் யார்? காலை நேர சந்த்யா போன்ற மகத்தான தேஜஸ் உடையவளாக இருக்க வேண்டும்.  இவன் பெயரை உச்சரிக்க புண்யம் செய்த அக்ஷரங்கள் எவையோ?  (கவியின் சொற்கள்) – பெயர் என்ன? 

இவ்வாறு சாவித்திரி பேசியதும், பெரியவர் பதில் சொன்னார்.  

ஆயுஷ்மதி! இனிமையாக பேசுவது நல்லவர்களின் குல வித்யா.  முகம் மட்டுமல்ல இதயமும் தூய்மையானது. நிலவின் பிறையை அம்ருதத்தில் தோய்த்து அளித்தது போன்ற இனிய சொற்கள்.  எடுத்த எடுப்பிலேயே பல நாட்கள் பழகிய உணர்வோடு இந்த சொற்களைக் கேட்டு மகிழ்கிறேன்.  உங்களைப் போன்றவர்களுக்குத் தான் இது போன்ற சொற்களால் சில்பம் வடிக்கும் கலை கை வந்தது.  ஒருவருக்கொருவர் சந்தித்து பேசிக் கொள்ளும் சமயம் நல்ல குடி பிறந்தவர்கள் கண்களுக்கும், உள்ளத்துக்கும் விருந்தாக நிறைவான சூழ்நிலையை  ஏற்படுத்தி விடுகிறார்கள். கேளுங்கள். 

பார்கவ வம்சத்தில் வந்த பகவான் பூ;புவ:ஸ்வ: என்ற மூவுலக நாயகன் அளவில்லாத பிரபாவத்தால் ஸ்தம்பிக்கச் செய்த இந்திரனின் சபையில் , சுர அசுர்கள் முகுட மணிகள் வந்து வணங்கும் பாதங்களை உடைய,  தன் தேஜஸால் பிரசித்தி பெற்ற புலோமன் ஸ்யவனன் என்பவர். அவர்  குல விளக்காக வந்த மகன்,  ததீசி என்பவன்  இவன். இவன்   தாய் சர்யாதர் என்பவர் மகள்.  அவரைத் தெரியுமா? அரசர். பல அரசர்களை ஜயித்து, ஆயிரக் கணக்கான அரசர்கள் அடி பணியும் பேறு பெற்ற ராஜாதி ராஜனின் மகள் சுகன்யா என்பவள்.  பேறு காலத்தில் இங்கு அழைத்து வந்தனர்..   இந்த தேசத்தில்  தீர்காயுளுடன் இருப்பாய் என்று பலரும் ஆசிர்வதித்தனர்.  ராஜ கிருஹத்தில் பல காலம் வாழ்ந்தாள். தாரக ராஜன் போல பிறந்த குழந்தையை மகிழ்ந்து கொண்டாடி வளர்த்தனர்.  ராஜீவ லோசனன் என்று கொண்டாடி தாய் வழி பாட்டனார், தன்னிடமே வைத்துக் கொண்டார். பல கலைகளையும் கற்பித்தார்.  பெற்றவனும்  மகனைக் கண்டு மகிழ்வானே என்று  மகனை தந்தையிடம் அனுப்பி வைத்தார்.

நான் என் குரு சர்யாதியின் கட்டளையை தலை மேல் தாங்கும் விகுக்ஷி என்ற பெயருடைய அணுக்கத் தொண்டர்களுள் ஒருவன்.  தந்தையிடம் கொண்டு சேர்க்க வந்த பரிஜனங்களுடன் மேற்பார்வையாளனாக என்னை அனுப்பி வைத்தார் ஸ்வாமி சர்யாதி.  ராஜகுலம் என்பது குல க்ரமத்தில் வந்தது. உத்தமரான குருவிடம் பயின்றவர்களுக்கு, அவரை அடி பணிந்து வாழும் அடியார்களும்,  பெரும் நன்மைகளை அடைவர் எனும் பொழுது  என் போன்றோர் நலம் பெறுவதில் என்ன தடை.  குறைவில்லாத தாக்ஷிண்யம் உள்ளவர் எங்கள் குரு.  அதிக தூரம் இல்லை சோணா நதியைக் கடந்தாலே பகவான் ஸ்யவனரின் பெயரில் உள்ள வனம், இந்திரனுடைய சைத்ர வனத்தை தோற்கடிக்கும் வளம் உடையது. அது வரை தான் எங்கள் யாத்திரை. 

வழி போக்கர்கள் இவர்களிடம் சொல்லலாமா என்று நினைக்க வேண்டாம். முதன் முதலில் காண்கிறோம்,நம்பலாமா என்று சந்தேகிக்க வேண்டாம். வினாடி நேரம் பேசி பழகியவர், அதற்குள் விசாரிக்கிறார் என்று அலட்சியமாக எண்ண வேண்டாம்.  நம்மைப் பற்றி அறிய தகுதியுடையவர் தானா என்ற கேள்வியும் தேவையில்லை. முதல் முறை தான் என்றாலும் எங்கள் மனதில் உங்களைப் பற்றி அறிய ஆவல் மேலிடுகிறது. ஆயுஷ்மதிகள் இருவருமே எங்கள் பணிவிடைக்கு பாத்திரமானவர்களே. அதனால் சொல்லுங்கள். 

உங்கள் கோத்ரம், பெயர்கள் இவைகளையும் சொல்லுங்கள். (கோத்ரம், பெயர் இவைகளை அறிய எங்கள் மனம் வேண்டுகிறது – கவியின் சொற்கள்)  அதனால் சொல்லுங்கள் எந்த வம்சம் உங்கள் பிறப்பினால் உயர்வை அடைந்தது. இந்த இளம் பெண் யார். உங்கள் அருகில் இருப்பவள் சாமான்யமானவள் இல்லை. விரோதிகளை விரட்டும் வீசி அடிக்கும் காற்று போன்றவள்.     உங்கள் அருகில் இருப்பதாலேயே, இதோ இருள் மூடப் போகும் பூமியில் மற்றொரு ஸூரியன் போல ஒளி விசியபடி இருக்கிறாள். புண்டரீக-தாமரை மலர் போன்ற முகமும், மான் விழிகளும், உதய காலத்தில் ஸூரியனின் ப்ரபையை தன்னில் கொண்டவள் போலவும்,  குமுதம் மலர்ந்தது போல சிரிப்பும், கல ஹம்சம் போலவும், யுவதியாக பரிணமித்துக் கொண்டிருக்கும் உடல், கோமளமான மலர் கைகள்,  பெண் யானை போல நடை, சற்று முன் தான் குமார பாவத்தை விட்டவள் போன்ற வயதினள், கண்கள் குளிர உள்ள தாரகை போன்றவள்’ என்றார். 

சாவித்திரி சொன்னாள். ‘ஆர்ய! காலம் வரும் பொழுது சொல்கிறேன். சில காலம் இங்கு வசிப்பதாக இருக்கிறோம்.  எங்கள் வழி என்ன என்பது இன்னமும் தெளிவாகவில்லை. என்ன செய்யப் போகிறோம் என்பதும் போகப் போகத் தான் தெரியும். நீங்கள் பெரியவர். இந்த சந்திப்பை இத்துடன் விட்டு விடுவோம்’ என்று சொல்லி விட்டு பேசாமல் இருந்தாள். 

ததீசி,தன் மேக நாதம் போன்ற கம்பீரமான குரலால், வன லதா போன்ற புஜங்களை உயர்த்தி, “ஆர்ய! இவர்கள் சொல்வதும் சரியே. கிளம்புங்கள். நாம் போகலாம். தந்தையைக் காண நேரமாகிறது, ‘ என்று சொல்லியபடியே, வெளியேறினான். அவரும் வணக்கம் சொல்லி விடை பெற்று கிளம்பத் தயார் ஆனார். குதிரையில் ஏறிக் கொண்டு அவர்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி, கண்கள் இமைக்க மறந்தவளாக, பார்த்துக் கொண்டிருந்தாள். சோணா நதியை விரைவில் கடந்தவர்கள், ததீசியின் தந்தையின் ஆசிரமபதம் அடைந்தனர்.  அந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தவளாக வெகு நேரம் நின்றிருந்தாள். 

முஹூர்த்த காலம் நின்றவள், சிரமப்பட்டு பார்வையை விலக்கிக் கொண்டு, மனதினும் அந்த  யுவனையே  அசைப் போட்டுக் கொண்டு இருந்தாள். திரும்பத் திரும்ப பார்த்து மகிழ மனம் விழைந்தது. அவளறியாமலே கண்கள் அந்த திசையை நோக்கின. தடுத்தும் கேட்காமல் அவனைச் சுற்றியே நினைவுகள் படர்ந்தன. புத்தம் புது துளிர் போன்று அவள் உள்ளத்தில் அனு ராகம் என்பது எப்படியோ வந்து சேர்ந்தது. நாள் முழுவதும் அதே நினைவு வாட்ட பாதி நித்ரையில் இருப்பவள் போல இருந்தாள். 

அஸ்தமிக்கும் நேரம். மேற்கு திசையில் கமலத்தின் நாயகன், கடோரமான தன் கிரணங்களை தன் பால் இழுத்துக் கொண்டு இளம் கருமையை படர விட்டபடி  அஸ்தமன மலையில் இறங்கினான்.  மந்தாகினியின் ஹம்சங்கள் விலக நிலவின் ஓளி நீரில் ஹம்சங்களாகத் தெரிந்தது. இருவரும் சந்த்யா கால ஜபங்களைச் செய்து விட்டு தங்கள் புல் படுக்கையில் படுத்தனர். சாவித்திரி படுத்த உடனே தூங்கி விட்டாள்.  மற்றவளுக்கு தூக்கம் வரவேயில்லை. சிந்தித்தபடி இருந்தாள். இது என்ன மனித உலகம்.  புரண்டு புரண்டு படுத்ததில் புல் படுக்கை கலைந்து சிதைந்தது தான் கண்ட பலன்.  இங்கு என்னவெல்லாமோ நடக்கின்றன. பல விதமான  உயர் மணிகள் பதித்த ஆபரணங்கள். இந்த அளவு தேவ லோகத்தில் கண்டதில்லை.  அந்த இளைஞனின் முகம்- என்ன லாவண்யம்.   அவன் முகத்தில் இருந்து துளித் துளியாக நிலவின் மேல் விழுந்து தான் அது ஒளிர் விடுகிறதோ. கண்கள் மலர்ந்த தாமரைக் குளமே போலும். அனங்கனே தேர்ந்தெடுத்து தன் அங்கங்களை கொடுத்து விட்டது போல கச்சிதமான உடலமைப்பு.  தினமும் காணும் கண்கள் புண்யம் செய்தவை.  வினாடி நேரம் நான் பார்த்தே, என் மனதில் பதிந்த உருவம்.  பல பிறவிகளில் கண்டிருப்பேனோ.  இப்படி சிந்தனை அலைக்கழிக்க வெகு நேரம் சென்றபின் களைத்து உறங்கினாள். அப்பொழுதும் விடாமல் கனவில் அந்த முகம் வந்தது.  மகர கேது எனப்படும் மன்மதன் திரும்பவும் வந்து அவளை  கருணையின்றி தாக்கி விட்டான் போலும்.  அதன் பின் அவளால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை. மந்தமாக வீசிய காற்று கூட  பூக்களின் மகரந்த  தூசியை அவள் மேல் வீசி விட்டதோ, கண்கள் குளமாயின.  சோணா நதியில் ஹம்சங்கள் சிறகடித்துச் செல்லும் பொழுது விசிறியடித்த நீர்த் திவலைகள் அவளை நனைத்தன. – (आर्द्रतमगात- ஈரமாக்கியது. பல பொருள் கள் கொண்ட சொல். கருணை, நீரில் நனைவது, விளக்குத் திரியானால் எண்ணெயில் மூழ்குவது. அவள் கருணையால் மனம் இளகினாள், என்றும் பொருள் கொள்ளலாம். ) இது வரை கவனித்திராத காதம்ப பக்ஷிகள் ஜோடியாக செல்வதும், இணை பிரியாமல் இருப்பதும் கண்ணில் பட்டன.  அவைகள் தாமரை இலைகளில் அமர்ந்து ஊஞ்சலாடின.  அதைக் கண்டு பொறாமையால் பெருமூச்சு விடுவது பொல சக்ரவாக பக்ஷிகள் யாரும் தொடாமலே, உடல் சிலிர்த்துக் கொண்டன. மதுகரங்கள்- வண்டுகள் அருகிலேயே வரவில்லை, அவைகள் கொட்டி விட்டன போல பாவனை செய்தன. 

பொழுது நன்றாக விடிந்த பின் அதே கூட்டத்துடன் திரும்பிக் கொண்டிருந்த விகுக்ஷி என்ற பெரியவர், பரி ஜனங்கள் அளித்த குடையை மறுத்து விட்டு, அருகில் வந்தார்.  சரஸ்வதி சற்று தூரத்திலிருந்தே அவர் வருவதை அறிந்து தலை தூக்கிப் பார்த்தாள்.  அருகில்வரவும் எழுந்து நின்று, காட்டில் பெண் மான் தலை தூக்கி நிற்பது போல தலையசைத்து வரவேற்றாள். வழி நடையால் களைத்தவர் போல தெரிந்தார்.  அவருக்கு ஆசனம் அளித்தபின் சாவித்திரி அன்புடன் விசாரித்தாள். 

‘ஆர்ய! குமாரன் குசலமா?   அவர் பதில் சொன்னார்.’ ஆயுஷ்மதீ!  நலமாக இருக்கிறான்.  உங்கள் இருவரையும் விசாரித்தான்.  இந்த சில நாட்களிலேயே உடல் இளைத்து விட்டான்.  வெளியில்  சொல்ல முடியாத ஏதோ மன வருத்தமோ, மன கிலேசமோ எதையோ இழந்தது போல உணர்வதாகச் சொன்னான்.  உங்களைப் பற்றி அறிந்து கொள்ள மாலதி என்ற பெயருடைய பெண் வருவாள்.  அவள் குமாரனுடைய அருகில் இருந்து பணிவிடை செய்பவள், அவனை உள்ளும் புறமும் அறிந்தவள்.  (குமாரன் வெளி விடும் மூச்சுக் காற்றே போன்றவள் – கவியின் சொற்கள்) 

அதைக் கேட்டு சாவித்திரி சொன்னாள் ‘  அதி மகானுபாவன் குமாரன்.- நற் குணங்கள் நிரம்பியவன் குமாரன்)  வினாடி நேரம் கண்ட எங்களிடம் இவ்வளவு பரிவுடன் விசாரித்திருக்கிறான். யாரென்றே அறியாத எங்களிடம் ஒட்டுதலும் உண்டாகி விட்டது.  பறந்து கொண்டிருக்கும் வண்டு க்ஷண நேரம் ஒரு மலரில் அமர்ந்த்து விட்டு செல்வது போன்ற பரிச்சயம் தானே ஏற்பட்டது.  குமாரனுடைய பெருந்தன்மை, அரச குமாரன், எங்களிடம் இந்த அளவு பரிவை காட்டுகிறான் என்பது எங்களுக்கு புதிதாக இருக்கிறது. உலகில் இத்தகைய நட்புணர்ச்சியும், நெருக்கமும் மனதை நெகிழச் செய்கின்றன. இவன் மற்றவர்களிடம் இல்லாத பல நற்குணங்களால், பெருமையும் பல வெற்றிகளையும் காண்பான் என்பது நிச்சயம். 

பொதுவாக வெகு நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்து விட்டு விகுக்ஷி கிளம்பினார்.  

மறு நாள், கடுமையான தன் கிரணங்களால், தாரகைகளை விரட்டியடித்தபடி ஆதவன்  தன் கிரணங்கள் உலகில் வெப்பத்தையும், ஒளியையும் அளிப்பதை நேரில் கண் காணிப்பவன் போல வேகமாக பரவி வந்தான். சோணா நதியின் வேகத்துக்கு ஈடு கொடுப்பது போல, தான் அணிந்திருந்த மலர் மாலைகளின் அழகைப் போலவே தானும் அலங்கரித்துக் கொண்டவளாக, கௌரி தேவி தன் வாகனமான சிங்கத்தின் மேல் வீற்றிருப்பவள் போல, குதிரையில் பிடரி மயிர்கள் குத்திட்டு நிற்கும் வேகத்தில், அதன் சேணத்தில் லாகவமாக அமர்ந்தவளாக, அதன் காதுகள் வெளிப்புறமாக எதிரெதிர் திசைகளில் விரிந்து பரந்து அவள் நூபுர ஒலியைக் கேட்பது போல இருக்க,  அதன் அடர்த்தியான ரோமங்கள்  அவள் கால்களில் பூசியிருந்த அலக்த எனும் குழம்பினால் நனைந்து செந்நிறமாக முதுகின் மேல் பரவி இருக்க, அசோக மரங்கள் வரிசையாக அவள் காலால் அடி பட காத்திருப்பது போல இருக்க (அசோக மரங்கள், பெண்களின் அலக்த எனும் சிவப்பு நிற (கால்களில் பூசும் குழம்பு) வண்ணம் பூசப் பட்ட கால்களால் உதைத்தால் பூக்கும் என்பர்)  குளத்தில் தாமரைத் தண்டுகள் தெரிந்தும் தெரியாமலும் இருப்பது போல அவள் அவயவங்கள் வேகத்தினால் சற்று விலகியும், பின் சீர் செய்து கொள்வதால் தெளிவாக காணப்பட்டும், கலசம் போன்ற ஸ்தனங்களில் நவரத்ன மாலைகளும், அது தவிர நீண்ட மாலை ஒன்று அருண வர்ண மணிகளால் ஆனது,  இதயத்துள் ப்ரவேசிக்க விரும்பும் வன மாலையைப் போல் நெருக்கமாக கட்டி இருந்தது.  ஒவ்வொரு கடகமும், பச்சை நிற கற்கள் கொண்ட (புஜங்களில் அணியும் ஆபரணம்)   மரகத பச்சை நிறத்தை திசைகளில் எல்லாம் பரவ செய்தது.  கமலம் போன்ற அவள் வதனத்தில்,  லக்ஷ்மி தேவியை நினைவுறுத்தும், தாம்பூலத்தால் சிவந்து கருத்த அதரங்கள், பல பணியாளர்கள் அதே போல குதிரைகளில் பின் தொடர, மாலதி தென்பட்டாள். 

நிலவு எழுந்தவுடன் சந்த்யா மறைவதைப் போல அவள் முகமான நிலவின் முன் சந்த்யா போன்று, தாமசம், சிவந்திருந்த (சந்த்யா) நிலவு (அவள் முகம்) விழுங்கி விட்டிருந்தது

குவலய புஷ்பங்கள் நிலவில் மலரும். அவை அவளுடைய குவலயம் போன்ற கண்களில் கண்டு மயங்கி சுற்றி வரும் வண்டுகள் மொய்க்கலாயின.

தலையில் அணிந்திருந்த வலை போன்ற முகத்திரையே முகத்தில் பாதியை மறைத்தன.

மயில்களின் சிகை போன்ற நீள, நீலமான-கறுமையான சிகை, இரு பக்க காதுகளின் வழியே கீழே இறங்கி வர, பல்லின் ஒளி வழி காட்டியது போல இருந்தனவாம். நெற்றியில் திலகமும், வகிட்டில் வந்து நடனமாடுவது போல, சிவந்த வஸ்திரம், தலையை மூடிய அம்சுகம் என்ற ஆடை, சூடாமணியை மறைக்க, மகர கேது -மகரம்- ஆமை அடையாளமிட்ட கொடி பறக்க, சந்திரனின் குளுமையான ஒளிக்கு குல தேவதை போலவும், மலர் அம்புகளை உடைய மன்மதன் உயிர் பெற்று எழுந்து வர சஞ்சீவினீ ஔஷதம் போலவும்,  ராகம்-அன்பு, பாசம் இவைகளே சமுத்திரமானால் அதன் கரைகள் போலவும், வழி காட்டும் நிலவொளி போல இளமை வர வழி காட்டுவதாகவும், ரதி எனும் நதி பாய்ந்து சென்று அடையும் சாகரம் போலவும், தேவ லோக மரங்களிலிருந்து விழுந்த பூக்கள் சிதறியது போலவும்,  ஆற்றல் என்பதை கற்பிக்க ஆரம்பித்த முதல் பாடம் போலவும், காந்தி என்பவைகளை கௌமுதி போலவும், தைரியத்தின் த்ருதி-திட நம்பிக்கை யாகவும்,  கௌரவத்தின் குருகுலம் போலவும், வினயம் என்பது பிறக்கும் இடமாகவும், நற்குணங்கள் கூட்டமாக அமைந்தது போலவும், மஹானு பாவம் என்பதன் உட் பொருளாகவும், தருண- இளமையின் திருப்தி போலவும், (இப்படியே  இன்னும் பல வர்ணனைகள்)) வந்து சேர்ந்தாள்.

வெகு தூரத்திலிருந்தே அவளைக் கண்டதுமே சரஸ்வதியின் மனதில் ததீசனின் தூதாகத்தான் வருகிறாள் என்பது ஐயமின்றி புரிந்து விட்டிருந்தது. குதூகலம் ஆட்கொள்ள, இதயமே ஆனந்தத்தில் மூழ்கியது போல இருக்க, முகம் அதை மென் முறுவலாக காட்டியது. தன் உணர்வை கண்களால் மறைத்துக் கொண்டவளாக, சாவித்திரியுடன் அவளை எதிர் கொண்டழைத்து வரவேற்றாள். தள்ளி நின்றே தலை வணங்கியபடி, வந்தவளை இருவரும் அணைத்து அழைத்து வந்து அமர ஆசனம் கொடுத்தனர்.  மனப் பூர்வமாக, அவர்களுக்கு நன்றி சொல்லியபடி, புண்யம் செய்தவர்கள் நீங்கள், உங்களால் வரவேற்கப் படுவதே எனது பாக்யம் என்று உபசாரமாகச் சொன்னாள்.  அதன் பின் ததீசீயின் சந்தேசம்- செய்தியை தெரிவித்தாள்.  

பகல் பொழுது. உணவு உண்டான பின் ஓய்வாக அமர்ந்த பின், சாவித்திரியிடம் மாலதி சொன்னாள். ‘தேவி! ரகசியமாக சொல்ல வேண்டிய ஒரு விஷயம் விண்ணப்பித்துக் கொள்கிறேன். கவனமாக கேட்க வேண்டும்’. என்றாள்.

சரஸ்வதியும் என்ன சொல்லப் போகிறாள் என்ற ஆவலுடன், அதை வெளிக் காட்டாமல் ததீசியிடமிருந்து செய்தியாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் எதுவும் சொல்லாமல் இருந்தாள்.  உத்தரீயத்தால் குளிருக்கு போர்த்திக் கொள்வது போல  கேட்கும் தூரத்தில்  அமர்ந்திருந்தாள்.  மனதில் வேண்டிக் கொண்டபடி,  இருந்தாள். அதற்குள் பலவிதமான சிந்தனைகள் அலைக்கழித்தன.  யாரென்று நம்மை அறிமுகப் படுத்திக் கொள்வோம், மலர் படுக்கையை சரி செய்யும் வியாஜத்தில், வண்டு மற்றும் சிறு பூச்சிகளை விரட்டியபடி, இருந்தாலும், கன்னங்கள் சிவந்து அவள் மன நிலையை ஓரளவு வெளிப் படுத்தியவையாகவே ஆயின. 

சாவித்திரி சொன்னாள்’ சகே மாலதி!  எதற்கு இந்த பீடிகையெல்லாம், நான் யார் ? அனுமதி அளிக்கவோ, மறுக்கவோ ? சரீரத்தாலோ, மானசீகமாகவோ எதுவானாலும் தாராளமாக கேள்.  கேட்காமலே கூட தேவையானதை எங்களிடம் பெறலாம், இந்த உபசார வார்த்தைகள் தேவையே இல்லை. மிகவும் சாதுவான ஜனங்கள் நாங்கள்.   எந்த வித தயக்கமும் இல்லாமல் என்னிடம் சகோதரியாக, நெருக்கமான தோழியாக எண்ணி எதுவானாலும் கேள்.  எங்களிடம் ஒளிவு மறைவு எதுவுமில்லை. இனிய சகோதரியே!  எனக்கும் உன்னைக் கண்டதுமே, ஒட்டுதல் உண்டாகி விட்டது. அதனால் சொல்’ என்றாள். 

அவள் சொன்னாள்:’ உங்களுக்கே தெரிந்திருக்கும். விஷய சுகங்களின் ஈர்ப்பும், புலன்கள்  போகும் வழியில் விருப்பமும், உலகியல் சுகங்களும், அதுவும் இளம் வயதினர், இந்த வயதுக்குரிய ஆசைகள் கொள்வதில் தவறும் இல்லை. அதுவும் மன்மதனின் தாக்கம் தடுக்கவே முடியாதது. எனவே, எனக்கு சாதகமான பதிலையே சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன்.  அதிகமாக பேசுவதாக நினைக்க வேண்டாம்.  முதிர்ச்சியில்லாத, சபலம் மட்டுமே காரணம் என்பதும் இல்லை.   சரஸ்வதியைப் பார்த்து, அதனால் தேவி! உங்களைப் பார்த்ததிலிருந்து, எங்கள் தேவன், உங்கள் நினைவாகவே இருக்கிறான். காமன் ஆட்டுவிக்கிறான்.  நிலவொளி கூட தாபத்தை அளிக்கிறது. மலய மாருதம் பெருமூச்சை கிளப்புகிறது. எதிலும் நாட்டமில்லாமல் தனித்து நிற்கிறான்.  இந்த  தேவி தான்  தனக்கு அனுரூபமானவள் என்று தீர்மானித்துக் கொண்டு விட்டான் போலும். சீலவான் என்று  நான் சொன்னால்  போதாது. உலகமே சொல்லும்.  தீரன் என்பது நிரூபிக்கப் பட்ட விஷயம். சுபக – பழக இனிமையானவன் என்பதும் அருகில் இருப்பவர்கள் அறிவார்கள்.  வணங்க வேண்டிய இடத்தில் வணங்கி பணிவாகவும், தன் அதிகாரத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் அந்த இடத்திற்கு ஏற்ற வகையிலும் இருப்பான்.  சரஸ்வதியைப் பார்த்து, தேவி, அவனை நீ கணவனாக பெற்றால் புண்யம் செய்தவளாவாய்.  என் யஜமான விஸ்வாசம் என்று நினைத்தாலும் சரி.  நான் சொல்வது முற்றிலும் உண்மையே. நீயே அவன் உயிராக இருப்பாய். கனவில் உன்னையே காண்பதாக நான் சொன்னால் அபத்தம் என்பாய்.  அவன் உயிரே உன் கையில் தான் இருக்கிறது என்றால், பசப்பு வார்த்தைகள் என்பாய்.  கண் காணாமல் இருக்கிறாயே என்று  தவிப்பதை சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. இது தான் நான் சொல்ல வந்தது.  இனி தேவியின் விருப்பம்’ என்று நிறுத்தினாள். 

சரஸ்வதி கண்கள் விரிய, அன்புடன் அவளைப் பார்த்து ‘அயி! எனக்கு அதிகம் பேசத் தெரியாது. உன் சிரித்த முகமே சொல்லி விட்டது. அதைவிட மதுரமான வார்த்தைகள். என் வாழ்வையே உன்னிடம்  ஒப்படைத்து விட்டேன்’  மாலதி மகிழ்ந்தாள்.  ஆணையிடுங்கள் தேவி! என்றவள் பரவசமாக, வணங்கி விடை பெற்றாள். வேகமாக பறப்பது போல சென்ற குதிரையில் அவள் சோணா நதியைத் தாண்டிச் செல்லும் வரை இருவரும் பார்த்தபடி நின்றனர்.  அவளும் ஸ்யவனருடைய ஆசிரமம் சென்றவள், ததீசியை தேடிச் சென்றாள். 

அனைத்து விவரங்களையும் சாவித்திரியும் அவளுமாக திரும்பச் சொல்லி பகிர்ந்து கொண்டனர்.  கபஸ்தினேமி- गभस्तिनेमि – ஒளியையே கிரணங்களாக உடையவன்- பகலவன் எனப்படும் ஸூரியன், மெதுவாக அஸ்தமிப்பது போல இருக்க, இருள் கவிய அவசரப் படுவது போல வேகமாக வந்து ஸூழ்ந்தது. சிரித்துக் கொண்டே  பளீரென்ற நிலவொளி, இந்திரனின் திசையை பிரகாசமாக்கிக் கொண்டு வந்து, குகையிலிருந்து முழங்கி புறப்படும்  சிங்கம் போல அதன் வரவு  கண் இமைக்கும் முன் வந்த வேகம், என்று மனதில் நினைத்த படி,  சரஸ்வதி,  சீனப் பட்டு போன்ற மெண்மயான பட்டு விரிப்பு போல இருந்த  சோணா நதியின் வெண் மணலில் மலர்ந்த முகத்துடன் வந்து அமர்ந்தாள்.   எதையோ நினைத்து முகம் பூரித்து மெல்ல நகைத்தாள். கனவில் கண்ட ததீசி – குனிந்த தலை நிமிராமல் இருந்ததில் கண்களில் பட்ட பாதங்களும் நகமுமே கனவில் வந்தன..  தன் நெற்றியில் அவைகளே வந்து குடி கொண்டு விட்டனவோ, என்று தன் பிரதி பிம்பத்தை நீரில் பார்த்து வியந்தாள். மெள்ள காதருகில் வந்து,’சாரு ஹாசினி! இனிமையாக சிரிப்பவளே, என்று அழைத்தது போல இருந்தது..என்னைத் தெரிகிறதா? உன் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டவன் தான்’  திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்தாள்.  மதனனின் தூதன் தானே இந்த இந்து- நிலவு.. எதிரில் சக்ரவாள பக்ஷிகள் அவளைக் கண்டு நகைத்த படி செல்வன போல நதி நீரில் ஜோடி ஜோடியாக குலவியபடி நகர்ந்தன.  மெள்ள வீசிய மென் காற்று அவள் நெற்றியில் பூத்திருந்த வியர்வை துளிகளை.  கொத்தாக நிலவின் கிரணங்களை முகத்தில் வீசி அகற்றின போலும்.  அந்த நிலையில் தன்னை மற்ற எவரும் பார்த்து விடக் கூடாது என்று நாணமும் வந்தது. தனக்குள் சொல்லிக் கொண்டாள்.’நானும் தான். சரஸ்வதி என்பவள், இதோ, இப்பொழுது கற்பனையில் உங்களை நினைத்து மறுகிக் கொண்டு இருப்பவள், தெரிகிறதா? என்று பதில் சொல்வது போல அதே ப்ரதி பிம்பத்திடம் பேசினாள். 

வசந்த காலம் போல்  மனதை மயக்கும் மலர்களின் மணத்தை ஏந்தி வந்த கந்தவஹன் -காற்று,  (வீசும் காற்றில் மணம் பரவுகிறது என்பதால் மணத்தை சுமந்து செல்பவன் என்ற பொருளில்)  தாமரைத் தண்டுகளை சேகரித்து மார்போடு அணைத்தபடி கரையேறியவள், அவைகளின் குளிர்ந்த தன்மையால் ஆறுதலாக இருப்பது போல உணர்ந்தாள்.   பார்வையில் பட்ட அனைத்துமே, அவளை வாழ்த்துவது போல, மயில்கள் முகத்தை தூக்கி அவளைப் பார்த்தன, கொடி மரம் அவளை அருகில் அழைப்பது போல கைகளான துளிர்களை ஆட்டின. வானத்து கிரஹங்கள், நிலவின் ஆணையால் போலும், தென் திசையிலிருந்து மந்தமான மலய மருதம் என்ற சுகமான மென் காற்றை அனுப்பின போலும்.  திடுமென, ததீசியே மாலதியுடன் வருவதைக் கண்டாள். 

வந்தவன், ஏதோ சொன்னது போல இருந்தது. மென்மையான ஹம்ஸம் தழ தழத்த குரலில்,உள்ளத்தைத் தொடும் அன்பான சொற்கள், யாரிடம் கற்றிருப்பான்? மன்மதனே சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். யௌவனம் வந்தால் தானகவே இந்த குணங்கள் வந்து சேர்ந்து விடும் போலும். மனதில் அன்பு இருந்தால் வார்த்தைகள் நயமாக வரும் போலும். நற் குடி பிறப்பும், பெருந்தன்மையும் சில விவரங்களை பிறப்பிலேயே அறிவித்து விடும் போலும்.  கண்களுக்கு அபிராமாம்- பிரியமானவனாக, ராமா- பெண்ணான சரஸ்வதி அரமயத்- அந்த வினாடியே ஏற்றுக் கொண்டு விட்டாள். 

எந்த வித தடையும் இன்றி தன்னைப் பற்றிய விவரங்களை அவள் அவனிடம் தெரிவித்தாள். ஒரு நாள் போல இருவருமாக ஒரு ஆண்டுக்கும் மேல்  இணைந்து வாழ்ந்தனர். அச்சமயம் தெய்வச் செயல், சரஸ்வதி கரு உற்றாள். அனைத்து லக்ஷணங்களும் பொருந்திய அழகிய மகனைப் பெற்றாள்.  ‘மகனே, சரஸ்வதியின் சகல கலைகளும், வேத சாஸ்திரங்களும், என் அருளால்  இந்த நிமிஷமே உன்னை வந்தடையட்டும்’ என்று வரம் அளித்தாள். கணவனிடம் மார்போடனைத்து குழந்தையை ஒப்படைத்து விட்டு, சாவித்திரியும் அவளும், பிதாமகரான பிரும்மாவின் வாக்குப் படி ப்ரும்ம லோகம் திரும்பினர். 

அவள் சென்ற பின் ததீசி, தன் இதயத்தில் இடி விழுந்து விட்டது போல பிரிவால் பரி தவித்தான்.  தன் மகன், பார்கவ வம்சத்தை ஒளி பெற பிறந்தவன், ஸ்யவனரின் ஆசிரமத்தில் இருந்த சகோதரனின் மனைவி அக்ஷமாலா என்ற மற்றொரு  முனிவரின் பெண், அவளும் அதே சமயம் ஒரு மகனை பெற்று இருந்தாள். அதனால் அவளிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லி விட்டு தான் தவம் செய்ய சென்று விட்டான். அந்த பெண், பட்ச பாதம் இன்றி, இருவரையும் தான் பெற்றது போலவே பரிவுடன் பாலூட்டி வளர்த்தாள்.  ஒருவன் பெயர் சாரஸ்வதன், மற்றவன் வத்ஸன்.  இருவரும் ஒருவருக்கொருவர்  சகோதர பாசம் மேலிட வளர்ந்தனர். 

சாரஸ்வதன், தாயின் மகிமையால், சிறு வயதிலேயே கல்வி கேள்விகளில் தேர்ந்தவனாக ஆனான்.  ஒத்த வயதுடைய சகோதரன், பிரிய நண்பனாகவும் இருந்தான். அவனுக்கும் அனைத்தையும் கற்பித்தான்.  உரிய காலத்தில் வத்ஸன் ப்ரீதிகூடம் என்ற இடத்தில் மனைவியுடன் இல்வாழ்க்கையில் ஈடுபட்டான்.   சாரஸ்வதன், தான் ஆஷாடி-பலாச மரத் தடியை கையில் வைத்துக் கொண்டு, கருப்பு மான் தோல் ஆடையணிந்து, வல்கலமும், அக்ஷ மாலை- ஜப மாலையும், மேகலா என்ற இடையில் அணியும் வஸ்திரமும், ஜடையும் தரித்து தந்தை போலவே வனம் ஏகினான். 

அதன் பின் வத்ஸன் மூலமாக அந்த வம்சம் வளர்ந்தது.  ஆதி புருஷன் பாதங்களில் ஜனித்து, பெரும் கோஷத்துடன் அவர் சரணங்களின் பெருமையை உரக்கச் சொல்பவள் போல கோஷமிட்டுக் கொண்டு இறங்கி வந்து, பரமேஸ்வரன் சிரசில் தாங்க, அனைத்து கலைகள், ஆகமங்கள் -இவைகளின் கம்பீரத்திற்கு இணையான மகா முனிவர்களால் கொண்டாடப் பட்டு,  பிரவகிக்கும் கங்கைக்கு சமமான, எதிரிகளின் தாக்குதல்களைச் சமாளித்து, பூமியில் நீண்ட காலம் வாழ்ந்து, சற்றும் குறையாத பெருமையுடன் அந்த பாகீரதியின் பிரவாகம் போலவே பாவனமாக, தன் சந்ததிகளை வளர்த்தான்.  அதிலிருந்து வாத்ஸ்யாயனர்  என்ற வம்சம் வளர்ந்தது.அந்த வம்சத்தில் பல முனிவர்கள்,  வேத விற்பன்னர்கள், வந்தனர்.  கர்ம மார்கங்களை சாஸ்திரம் சொன்னபடி அனுசரித்தாலும் கண் மூடித்தனமாக நடந்து கொள்பவர்களாக இல்லை, மற்றவர்கள் சமைத்த உணவை உண்பது இல்லை. பூனை போல இல்லாமல் கம்பீரமான குக்குடம்-சேவல் போல இருந்தனர் – (உணவுக்காக ஏங்குவது இல்லை. அதை சேவல் விரதம் என்று குறிப்பிடுவார்கள் என்பதாகத் தெரிகிறது.) தங்களைச் சுற்றி கூட்டம்  போடுவதை விரும்பாதவர்கள்.  தன் ஆளுமையை  வெளிப்படையாக தெரியும்படி  வைத்துக் கொள்பவர்கள்.  ஒளிவு மறைவின்றி இருப்பார்கள். அல்ப பலன்களுக்காக கூனி,குறுகி, இரங்கும் மக்களைப் பார்த்து பரிதாபப் படுபவர்.  எப்பொழுதும் ப்ரசன்னமாக இருந்து மற்றவர் தேவைகளையும் கேட்டு அதற்கான பரிகாரங்களை செய்யும் தன்மையும், தன் கொள்கையில் உறுதியாக நிற்பவர்களாக, தீரர்களாக, புத்தி கூர்மையுள்ளவர்களாக,   அனாவசிய தேவைகளை வளர்த்துக் கொள்ளாமல், அண்டியவர்களை காப்பவர்களாக, கற்ற கல்வியை தாரணை என்ற முறையில் பயின்று சந்தேகமற புரிந்து கொண்டவர்களாக இருந்தனர்.  கிரந்தங்களில் உள்ளவற்றை மற்றவர்களுடன் விவாதித்து பொருளை உணர்ந்து,  தங்கள் அறிவை-புரிதலை  பகிர்ந்து கொள்வர்.  கவிகளாக, அழகாக பேசத் தெரிந்தவர்களானார்கள். போட்டி பொறாமைக்கு இடம் கொடுக்காமல், தங்கள் சுக துக்கங்களைப் போலவே  மற்றவர்களும் அனுபவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, பரிகாசமாக பேசும் பொழுதும் புண்படாமல் பேசுபவர்களாக, ஒரு முறை பரிச்சயம் ஆனவர்களை மறக்காமல் இருப்பவர்களாக, நாட்டியம், கீதம், வாத்யங்கள் இவைகளையும் கற்றுத் தேர்ந்தவர்களாக, அல்லது மதித்து ரசிக்கத் தெரிந்தவர்களாக, இயல்பாகவே அவையடக்கம் உடையவர்களாக, பரிவு, சத்யம், சுத்தம், ஒழுக்கம் என்ற நற்குணங்கள் அமையப் பெற்றவர்களாக, சாதுக்களுடன் இணங்கி இருப்பவர்களாக,  ஆத்மார்த்தமான நட்புடன் பழகி வந்தனர்.  அசாதாரணமான த்விஜர்கள் எனும் அந்தணர்களாக அந்த வம்சம் வளர்ந்தது. 

இவ்வாறு பலர் தோன்றி மறைந்து சம்சாரம் என்ற உலகியல் வாழ்வை வளர்த்து, யுகங்களாக காலம் சென்றது. கலி காலமும் வந்தது. வருடங்கள் ஓடி மறந்தன, தினங்கள் மாதங்களாக வளர்ந்து, மாதங்கள் வருடங்களாக காலம் சென்று கொண்டேயிருக்க,  வாத்ஸ்யாயன குல பரம்பரையில் குபேரன் என்ற பெயரில். வைனதேயன் என்ற கருடனை குருவாக கொண்டவனாக, அந்தணன் பிறந்தான். அவனுக்கு நால்வர்,  அஸ்யுத,ஈசான, ஹரன், பாசுபதன் என்ற பிள்ளைகள் பிறந்தனர்.  ப்ரும்ம தேஜசுடையவர்களாகவும், அதே சமயம் ஸ்ரீமன்   நாரயணனின் புஜ தண்டங்கள் போலவோ, நான்கு யுகங்கள் போலவோ நால்வரும் உலகில் பிரசித்தி பெற்றனர். இவர்களில் பாசுபதனுக்கு மட்டுமே ஒரு மகன் பிறந்தான்.  அர்த்தபதி என்ற பெயருடன் வளர்ந்தான்.  அவன் மலை போன்ற உடல் பலமும், சமுத்திரம் போன்ற கம்பீரமும் முன் பிறந்தோர்களின் மத்தியில் சூடா மணி போல  இருந்தான்.  ஏகாதச ருத்ரர்கள் போல பதினோறு பிள்ளைகளைப் பெற்றான். ப்ருகு, ஹம்ஸன்,சுசி, கவி,மஹிதத்தன், தர்மன், ஜாத வேதஸ், சித்ர பானு, த்ரி சக்ஷு,மஹிதத்தன், விஸ்வரூபன் – அனைவரும் நிலவின் குளுமையையும், அம்ருத ரஸம் உண்டவர்கள் போன்ற அழகும் உடையவர்கள்.   அவர்களில் சித்ர பானு என்பவன், ராஜ்ய தேவி என்ற பெயருடைய அந்தண பெண்ணிடம் பாணன் என்ற மகனைப் பெற்றாள்.  விதி வசத்தால்,  பாணன் குழந்தை பருவத்திலேயே தாயை இழந்தான்.  தந்தையே, தாயாகவும் இருந்து  மிக்க அன்புடன் வளர்த்தார்.  

உபனயனம் போன்ற சம்ஸ்காரங்கள் அதனதன் காலத்தில் நடந்தன.  குருகுல வாசமும் கல்வி கற்றலும் தொடர்ந்தது. பதினான்கு ஆண்டுகள் பூர்த்தியான சமயம் தன் கடமை முடிந்தது என்று நினைத்தோ, தந்தையும் அகால மரணம் எய்தினார்.  பாணனால் அவர் பிரிவை தாங்கவே முடியவில்லை.   சில காலம் அதே வீட்டில் வசித்தவன், மெள்ள மெள்ள சோகத்திலிருந்து விடுபட்டு, யோசிக்கலானான். தற்சயம் முழுக்க முழுக்க தன் விருப்பம் போல செய்ய ஒரு வித குதூகலம் உண்டாயிற்று.  இன்னும் அறியா சிறுவனே, நல்லது பொல்லாது அறியாமல் தைரியம் மட்டுமே துணையாக சபலங்கள் நிறைந்த உலகில் நண்பர்களை நம்பினான்.  ஒத்த வயதுடைய இருவர், சந்த்ர சேன , மாத்ருஷேன  என்ற இருவர் கீழ் ஜாதியினர்.  ஒரு ஈசான என்ற பெயருடைய ப்ராக்ருத கவி நெருங்கிய நண்பன் ஆக ஆனான்.  ருத்ர, நாரயண என்ற இருவர், வித்வான்களான வாரபாணன், வாஸவாணன், வர்ண கவி வேணி பாரதன்,  வாயு விகாரன், வந்தி எனும் பாடகர்கள் அங்க பாண, சூசி பாணன், காத்யாயனிகா சக்ரவாகிகா, ஜாங்கலன் மயூரகன், தாம்பூலம் தரும் சண்டகன்,  பாம்பாட்டி மயூரகன்,  நூல்களை படித்து காட்டுபவன் சுத்ருஷ்டி என்பவன்,  பொற் கொல்லன்  சாமீகரன்,  சிந்து சேனா என்ற அரச உத்யோகஸ்தன், (மேற்பார்வையிடுபவன்) , சித்திரம் வரையும் வீரவர்மன், சில்பம் செயும் குமார தத்தன், தாள வாத்யம் இசைக்கும் ஜீமூதன், பாடும் இருவர் சோமில மற்றும் கர்ஹாடித்யன், குரங்கிகா என்ற பெண் சேடி, (ஸைரந்த்ரீ) புல்லாங்குழல் வாசிக்கும் மதுகரன் மற்றும் பரவதன், சங்கீத ஆசிரியர் தர்துரகன், சம்வாஹிகா கேரலிகா, ஒரு இளம் யுவன்,  நாட்டிய கலைஞர், தாண்டவிகா என்ற பெயருடையவன். 

சூதாட்டம் அறிந்தவன் ஆகண்டலன், ஏமாற்றும் பீமகன், நடிகனாக சிகந்தகன், நடனம் ஆடும் பெண் ஹரிணிகா,  பிக்ஷு சுமதி, ஜைன மதத்தைச் சேர்ந்த வீர தேவன், கதை சொல்லும் ஜயசேனன்,  வீர சைவன் வக்ர கோணன்,  மந்திரவாதி கராளன், புதையல் தேடுபவன்  லோஹிதாக்ஷன்,  ரசவாதி (உலோகங்கள் அறிந்தவன்) விஹங்கமா, குயவன்  தாமோதரன்,  (CONJURER- மந்திர வாதி அல்லது மாயா ஜாலம் காட்டி ஏமாற்றுபவன் -இந்திரஜாலக்காரன்) சகோராக்ஷன்,  தாம்ர சூடன் என்ற நாட்டு வைத்யன். இவர்களுடன் மற்றும் பலர்.  உலகமே தெரியாத வயது.  இவர்களின் நட்பை உயர்வாக எண்ணி, தேசாந்திரம் போகவும், புது இடங்களைக் காணவும் விழைந்தான்.  வீட்டை விட்டு வெளியேற முயன்றவனை,  தகப்பனாரின் தந்தை தடுத்தார்.  அதையும் மீறி, வழி வழியாக வந்த குல வழக்கங்கள். அந்தணர் குல செல்வங்கள் இருக்க, கல்வி கற்றவன் தான், இருந்தும் வீட்டை விட்டு வெளியேறினான்.  ஊர் ஜனங்கள், சிலர் பரிதாப பட்டனர், சிலர் பரிகாசமாக சிரித்தனர். 

மெள்ள மெள்ள, அரச குலத்தினர் பெருந்தன்மையுடன் இருப்பதையும், ராஜ குலத்தை நோக்கி வரும் அறிவுடையவர்களின் கூட்டம், கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள், அவர்கள் முயன்று கற்ற கல்விகள் அவர்களுக்கு பெருமை சேர்ப்பதையும் கண்டான். குருகுலங்களுக்கும் போனான்.  அவர்களுக்குள் நடந்த விரிவுரைகள், வாதங்கள், எதிர் தரப்பின் சொல்லையும் மதித்து ஏற்கும் நல்ல குணம்  இவை அவனுக்கு புலனாயிற்று.  அவனுடைய இளம் வயது கல்வியும், குடி பிறப்பும் காத்தன என்று தான் சொல்ல வேண்டும்.
இயல்பாகவே கம்பீரமான அல்லது கூர்மையான புத்தியுள்ளவன் ஆனதால் அறிவிற் சிறந்த பலரும் கூடிப் பேசுவதை எல்லாம் கவனமாக கேட்டான்.  அவன் குலத்தின் வழி வந்த உள் மனதின் ஈர்ப்பு அத்தகைய வித்வான்களிடமே அழைத்துச் சென்றது.  பல காலம் ஆகி விட்டிருந்தாலும் அதே வாத்ஸ்யாயன வம்சத்தில் பிறப்பும், தந்தையும், பாட்டனாருமாக தொடர்ந்த வளர்ப்பும், நம்பிக்கைகளும், பழைய வாழ்க்கை முறையையே விரும்பி மனம் திருந்தினான். 

வீடு திரும்பியவனை  உறவினர்களும், பழைய நண்பர்களும் ஸூழ்ந்து கொண்டு நலம் விசாரிக்கவும், அவர்கள் இடையில் தான் மோக்ஷ சுகமே அடைந்து விட்டது போல மகிழ்ந்தான்.

(இத்துடன் வரை ஸ்ரீ பாண பட்டர் எழுதிய ஹர்ஷ சரித்திரம் என்பதில் வாத்ஸ்யாயன வம்ச வர்ணம் என்ற முதல் பகுதி நிறைவுறுகிறது  தமிழாக்கம்- திருமதி ஜானகி க்ருஷ்ணன்)

(அடுத்த இதழில் இரண்டாம் பாகம் துவங்கும்)

பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்

பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1 ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.