மர பொம்மைகள்

மலையாள மூலம் : காரூர் நீலகண்ட பிள்ளை

ஆங்கிலம் : ஏ.ஜே.தாமஸ்

தமிழ் மொழியாக்கம் : தி.இரா.மீனா

தென்னங் கீற்றுகளால் சுவர்களும், மேற்கூரையும் வேயப்பட்டிருந்த அந்தக் குடிசையின் முற்றத்தில் கணக்கெடுப்பாளர் நின்று கொண்டிருந்தார். 312 ’ஆசாரத்தம்பல்’ தனக்குள் சொல்லிக் கொண்டு விட்டுப் பிறகு சத்தமாக “இங்கே யாராவது இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

ஓர் இளம்பெண் வெளியே வந்தாள்.

தன் கையிலிருந்த தாளைப் பார்த்தபடி “ உங்கள் பெயர் உம்மிணியா?” என்று கேட்டார்.

அந்த இளம்பெண்ணின் பெரிய கண்கள் விரிந்தன. அந்த மனிதர் காவல் நிலையத்திலிருந்தோ அல்லது நீதி மன்றத்திலிருந்தோ வந்திருப்பார் என்று பயந்தாள்.

“நான் கணக்கெடுக்க வந்திருக்கிறேன். இந்த வீட்டில் எவ்வளவு பேர் வசிக்கிறார்கள்?”

“இப்போது நான் மட்டும்தான் வீட்டிலிருக்கிறேன். என் அம்மா பைன் இலைகளைச் சேகரிக்க ஆற்றின் கரைக்குச் சென்றிருக்கிறாள். என் தம்பியும் வேலைக்காக வெளியே போயிருக்கிறான்”

“யார் உம்மிணி?”

“அது என் அம்மாவின் பெயர்”

“சரி. உம்மிணி என்பது ஆணா பெண்ணா?”

அவள் பரிகாசமாய்ச் சிரித்தாள். இருப்பினும் அது அழகாக இருந்தது.

“நானும், என் அம்மாவும் பெண்கள். என் சகோதரன் ஆண் ”

“உங்கள் தந்தை?”

“அவர் இறந்து விட்டார்”

“ஓ, அப்படியானால் உம்மிணி விதவையா?”

“ஆமாம். இப்போது அவள் விதவை” சொல்லி விட்டு அவள் தொடர்ந்தாள். ”நீங்கள் கணக்கெடுக்கப் போகும் போது குடை எடுத்துக் கொண்டு போக மாட்டீர்களா? இந்தச் சுட்டெரிக்கும் வெயிலில் நின்று கொண்டு நீங்கள் மனிதர்களைக் கணக்கெடுத்தால் விரைவில் அந்த எண்களில் ஒன்று குறைந்து விடும். நீங்கள் உள்ளே வந்து இந்த பெஞ்சில் உட்காரலாம் ”

அவர் அந்த பெஞ்சில் உட்கார்ந்தார். வராந்தாவின் தரை சாணத்தால் நன்றாக மெழுகப்பட்டிருந்தது. உம்மிணியைப் பற்றி எல்லா  விவரங்களையும் பதிவ செய்து கொண்டார்.

“உங்கள் பெயரென்ன?”

“என் பெயர் நளினி ” அவள் மெதுவாகச் சொன்னாள்.

“வயது?”

“என்னைப் பார்த்தால் எவ்வளவு நினைக்க முடியும்?”

“நான் எதையும் நினைக்கவில்லை”

“இருபத்தி மூன்று” சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“உங்களுக்குத் திருமணமாகி விட்டதா?”

“ஹும்ம்”

“எங்கே உங்கள் கணவர்?”

அவள் குழம்பியவளாகத் தெரிந்தாள்.

“அவர் இப்போது இங்கேயில்லை… 13 மைல் பகுதியில் நீங்கள் கணக்கெடுப்பு சேகரித்து விட்டீர்களா?”

“வேறு யாரோ அந்தப் பகுதிக்குப் போயிருக்கிறார்கள். உங்கள் கணவர் இருக்கிறார் அல்லவா?”

“ஒருவர் இருக்கிறாரென்று நீங்கள் எழுதிக் கொள்ளலாம் அல்லது இல்லை என்றும் எழுதிக் கொள்ளலாம் ” அவள் விட்டேற்றியாகச் சொன்னாள்.

“ஒருவர் இருக்கிறார் அல்லது ஒருவர் இல்லை என்று நான் எழுதினால் இரண்டும் ஒன்றான அர்த்தம் தருவதில்லையே ”

“அப்படியானால் என் திருமண விவரம் தெளிவற்று இருக்கிறது என்பது போல எழுதிக் கொள்ளுங்கள் ”

“உங்கள் திருமணம் யாருடனோ நிச்சயிக்கப்பட்டிருக்கிறது, சரிதானே? ’திருமணமானவர்’ என்பதற்குப் பதிலாக ’ திருமணமாகாதவர்’ என்று நான் எழுதிக் கொள்ள வேண்டும்” 

“இல்லை. அப்படியில்லை. நான் திருமணமானவள் ”

அவள் தலையைச் சொறிந்து கொண்டாள். நீண்டிருந்த, வரண்ட ஒழுங்கற்ற கூந்தல் அவள் தோளில் விரிந்திருந்தது. 

“உங்கள் கணவர்?”

“எனக்கு ஒரு கணவர் இருக்கிறார், எனக்கு இல்லை ”

“அவர் உங்களை விட்டுப் போய் விட்டார். சரிதானே? ’கைவிடப்பட்ட மனைவி’ [ Abandon Wife]

“நீங்கள் என்னிடம் சொன்னது போலவே எழுதிக் கொள்ளலாம். தயவு செய்து இன்னொரு முறை “லண்டன் மனைவி!” என்று சொல்லுங்கள். என்னுடையது சிக்கலான கேஸ்தான். ஆனால் அவர் என்னைக் கைவிடவில்லை. அப்படி அவர் என்னைக் கை விட்டிருந்தால் ஒவ்வொரு வாரமும் ஒரு தூதுவரை என்னிடம் ஏன் அனுப்ப வேண்டும்?”

“அப்படியானால் நீங்கள் அவரைக் கை விட்டீர்களா?”

“அப்படியெல்லாம் இல்லை. நான் அவரைக் கைவிடவில்லை, கெஞ்சி அவரிடம் போகவுமில்லை. உங்களுக்கு எல்லாம் தெரிந்திருப்பதால் என்ன வேண்டுமோ எழுதிக் கொள்ளலாம்”

“எனக்கு உங்கள் கணவரைப் பற்றி எதுவும் தெரியாது. என்னிடம் நீங்கள் என்ன சொன்னீர்களோ அதை எழுதுவேன்; உங்களுக்குக் கணவர் இருப்பதாக”

“அது நல்லது”

“இந்தப் புத்தகம் எந்த நல்லது கெட்டதையும் எழுதுவதற்கானதல்ல. உண்மையை, இருப்பதை எழுதுவதற்குத்தான்”

“நான் சொன்னது உண்மைதான்” என்று சொல்லிவிட்டு தலைமுடியை உயர்த்திக் கட்டினாள். அது அவருடைய அலுவலக வேலையின் ஒரு பகுதியாக இல்லாத போதும் முகத்தில் விழுந்த முடியை அவள் இழுத்துக் கட்டுவதை அவர் கவனித்தார்.

“குழந்தை பிறந்ததா?”

“ஆண் பிறக்கவில்லை: பெண்ணும் பிறக்கவில்லை”

“உங்களுக்குள் சண்டை சச்சரவு, கருச்சிதைவு பிரச்னை ஆனதா?

“சொல்ல வேண்டிய தேவையில்லை! என் கணவர் வீட்டில் ஆறு மாதங்கள் முடிவதற்கு முன்பே சண்டை தொடங்கி விட்டது. சண்டை இல்லாமல் ஒரு நாள் கூட கழிந்ததில்லை”

“சண்டை தினமுமா?”

“அதனால்தான் நான் திரும்ப வந்து விட்டேன்’

“என்ன சொல்கிறீர்கள்? நான் கேட்பது கருச்சிதைவு…கருச்சிதைவு ஏற்பட்டதா?”

“என்ன வெட்கக் கேடான கேள்வி கேட்கிறீர்கள்? நல்ல வேளை என் சகோதரன் இங்கில்லை”

கணக்கெடுப்பவர் சிறிது எரிச்சலடைந்தார். “உங்கள் சகோதரர் இங்கிருந்தால் என்ன நடக்கும்? இது அரசு சம்பந்தமான விஷயம். .உங்கள் தாத்தா இங்கிருந்தால் கூட நான் கேட்க வேண்டியவைகளைக் கேட்டிருப்பேன். நீங்கள் உண்மையான பதிலைச் சொல்லியாக வேண்டும். தவறான தகவல்களைத் தருவது பெரிய குற்றம். நீங்கள் சொல்வது எல்லாம் ரகசியமாகவே பாதுகாக்கப்படும் ”

’‘நீங்கள் உஷ்ணமாக உணர்ந்தால் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு கையால் செய்த சருகு விசிறியைத் தந்தாள்.

“நான் சொல்ல வந்தது என் சகோதரன் இங்கிருக்கும் போது நீங்கள் அந்தக் கேள்வியை கேட்டிருந்தால் எனக்கு எவ்வளவு சங்கடமாக இருந்திருக்கும் என்றுதான்”

“சரி, மேலே சொல்லுங்கள்”

“இல்லை”

“என்ன இல்லை? என் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல மாட்டீர்களா?”

“இல்லை, இல்லை! கருச்சிதைவு ஆனதா என்று கேட்டீர்கள் அல்லவா? ஆகவில்லை என்று சொன்னேன்”

“உங்கள் சராசரி மாத வருமானம் எவ்வளவு?”

“ஒரு கூரை வேய என் சகோதரன் மூன்று ரூபாய் கூலி வாங்குவார் ”

“நான் உங்கள் சகோதரனின் கூலியைப் பற்றிக் கேட்கவில்லை. உங்கள் மாத வருமானம் எவ்வளவு?”

“‘நான் வேலைக்குப் போகவில்லை”

“உங்களுக்கு வருமானமில்லை. நீங்கள் யார் பாதுகாப்பிலோ இருக்கிறீர்கள்!”                                                                     

“நானா? உங்களிடம் யார் சொன்னது? படகு நிற்கும் இடமருகே வசிக்கும் காத்தா சொன்னாளா? நானும் அவளைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும்”

அவர் வேடிக்கையாகச் சிரித்தார்.

“காத்தா? என்ன சொல்கிறீர்கள்? நான் சொல்வதை நீங்கள்  கவனிக்கவில்லை. யாருக்காவது வருமானம் இல்லையென்றால், அவர் மற்றவர் வருமானத்தில் வாழ வேண்டியிருக்கும். உங்களுக்கு வருமானமில்லை. அதனால் உங்கள் சாப்பாட்டிற்கும், உடைக்கும் ஒருவர் செலவு செய்வார். நீங்கள் யாரையோ சார்ந்து இருக்கிறீர்கள் — உங்கள் அம்மா அல்லது சகோதரர். சரிதானே?”

“இது, நீதி மன்றத்தில் குறுக்குக் கேள்விகள் கேட்பது போல இருக்கிறது!”

“நீதி மன்றத்தில் உங்களிடம் யாராவது இந்தக் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்களா?”

“அந்தக் கொடுமைகளையும் எனக்குச் செய்திருக்கிறான் அந்தப் பாவி”

“உங்கள் கணவரா?”

“அவன் புருஷனா? எனக்குக் கணவர் இல்லை என்று எழுதுங்கள். அதைச் செய்ய நான் உங்களுக்கு ஏதாவது தருகிறேன் !”

“போகட்டும். உங்களுக்கு எந்த வருமானமுமில்லை, சரிதானே? ”

“எனக்கு வருமானமிருக்கிறது. நான் யாரையும் சார்ந்திருக்கவில்லை. ஒரு மாதத்திற்குப் பதினைந்து ரூபாயாவது சம்பாதிப்பேன் ”

“சரி, என்ன வியாபாரம் செய்கிறீர்கள்? ”

“அரசாங்கத்திற்கு என்னவெல்லாம் தெரிய வேண்டும்? என் வியாபாரம் ஒன்றில்லை, பல ”

“என்னிடம் எல்லாவற்றையும் சொல்லுங்கள். எழுதுவதற்கு இந்தத் தாளில் நிறைய இடமிருக்கிறது ”

“முழுக் குடும்பத்திற்கும் நான் சமைப்பேன். வீட்டைச் சுத்தம் செய்வேன்… வராந்தாவை நன்றாகத் தேய்த்துக் கழுவுவேன்”

“அருமையான வேலை. வராந்தா தரை கண்ணாடி போலப் பளபளக்கிறது”

“என் கணவன்— ஹா ஹா, அவன் இப்போது எனக்கு உறவில்லை— என் கன்னங்கள் கண்ணாடி போலப் பளபளப்பதாகச் சொல்வான். அதனால் இந்த வராந்தா என் கன்னங்கள் போல மின்ன வேண்டும்” அவள் சிரித்தாள்.

அவரும் சிரித்தார்.

அப்போது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சிறுமி முற்றத்திற்கு வந்து நின்று கொண்டு கணக்கெடுப்பவரை வெறித்துப் பார்த்தாள்.

“அந்தச் சிறுமி உங்களை வெறித்துப் பார்த்ததைக் கவனித்தீர்களா? அவளுக்குப் பத்து வயதுதானாகிறது. இன்னும் ஓரிரு வருடங்களில், அவள் இந்தப் பாதையில் மனிதர்களை நடக்கவே விடமாட்டாள் ”

“நான் அவரைப் பார்த்ததால் உனக்குக் கோபம் வந்து விட்டதா? நான் போகிறேன்!” தனக்குள் முணுமுணுத்தபடி அந்தச் சிறுமி போய் விட்டாள்.

“அவள் எரிச்சலில் வேகட்டும்! யாராவது இந்தப் பாதையில் வந்தால், எங்கிருந்தோ ஓடி வந்து என் முற்றத்தைப் பார்ப்பாள்!” நளினி சொன்னாள்.

“அந்தப் பெஞ்சில் அப்போது உட்கார்ந்திருப்பது கணக்கெடுப்பவருக்குப் பதட்டமாக இருந்தது. 

“நீங்கள் இன்னமும் உங்கள் வியாபாரம் பற்றிச் சொல்லவில்லையே ”

“நான் சொல்லவில்லையா? வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்வேன் என்று சொன்னேனே ”

“உங்களுக்கு வருமானம் தரும் வியாபாரம் பற்றி எனக்குத் தெரிய வேண்டும்”

“எனக்கு வருமானம் தரும் வியாபாரத்தை நான் செய்யவில்லை என்றால் நீங்கள் எனக்கு ஏதாவது தருவீர்களா? ”

“நான் உங்களுக்கு ஏதாவது தருவேனா என்று கேட்கிறீர்கள்…” அந்த வாக்கியத்தை முடிக்க விருப்பமில்லாமல் மிக மெல்லிய குரலில் “ நான் கேட்டால் நீங்கள் கொடுப்பீர்கள், இல்லையா?” இங்குமங்கும் பார்த்தார்.

“வந்திருக்கும் விருந்தினரிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்” அவள் தொடர்ந்தாள்.

“நான் அநாகரிகமாக ஏதாவது சொல்லி விட்டேனா?” அவர் திடீரெனக் கேட்டார்.

“இல்லை, நான்தான் வந்திருக்கும் உங்களிடம் மரியாதை காட்டவில்லை. உங்களுக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருப்பதாகத் தெரிகிறது ”

சொல்லிவிட்டு அவள் வீட்டிற்குள்ளே போனாள். ஏதோ முணுமுணுப்பது கேட்டது. ஓரிரு நிமிடங்களில் வெற்றிலைப் பாக்கு கொண்டு வந்து தந்தாள். வெற்றிலையைச் சுவைத்தார். மீண்டும் அவள் குடிசைக்குள் போய் மூன்று மர பொம்மைகளைக் கொண்டு வந்தாள். “ இதுதான் என் வியாபாரம். ஒரு பொம்மை செய்ய எனக்கு ஒரு நாள் போதும்” என்றாள்.

அவர் அந்த பொம்மைகளைக் கையிலெடுத்தார். அவை ஒரு சாண் முழமுள்ள பெண் உருவச் சிலைகள். ஒவ்வொன்றும் முழுமையான வடிவமுடையவை. மயக்கும் வண்ணத்திலானவை. மென்மையும் வளைவுகளும் கொண்டவை. அழகிய கைகால்கள். மார்புகள் .குறுகிய இடை, நீண்ட கூந்தல், மயக்கும் புன்னகை. மொத்தத்தில் வசீகரமான  சிற்பங்கள். அவர் கண் இமைக்காமல் அவைகளையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு நளினியைப் பார்த்தார்.

“மிக அழகாக இருக்கின்றன. நான்கும் ஒரே மாதிரியாக இருக்கின்றன”

“மூன்று மட்டுமே இருக்கும் போது நீங்கள் நான்கைப் பார்ப்பதுதான் அதிசயம்” என்றாள் 

அவர் பதில் சொல்லவில்லை.

“நீங்கள் இவற்றை அச்சில் வடிப்பீர்களா?”

“நாங்கள் உலோகத் தொழிலாளிகளில்லை ”

“நீங்கள் அவற்றை ஒரு கடைசல் இயந்திரத்தில் செய்திருக்கலாம். திருப்பாற்கடலைக் கடையும் போது லட்சுமி தேவி அதிலிருந்து எழுவது போல இருக்கிறது ”

“திருப்பாற்கடலைக் கடையும் முயற்சியில் நான் ஒருபோதும் கலந்து கொண்டதில்லை. அதனால் நான் லட்சுமியைப் பார்த்ததில்லை. என் வியாபாரம் என்ன என்பதை உங்களுக்குக் காண்பிக்கிறேன். ஏன் நான்கு என்று சொன்னீர்கள்? ”

“உயிரற்ற மூன்றும், அவைகளை உருவாக்கும் ஓர் உயிரும். அதனால் நான்கு. அதிசயம் எதுவெனில் நான்கும் ஒரே மாதிரியாக இருப்பதுதான் ”

“எனில் உயிருள்ள ஒன்று கூட உயிரற்றதாக இருக்கிறதென்பது அர்த்தமா? அதில் வியப்படைய எதுவுமில்லை. அது என் விதி!”

அவள் கண்கள் மின்னின. அவள் மீண்டும் குடிசைக்குள் போனாள். அவள் வெளியே வந்த போது, முகம் செம்மை கண்டிருந்தது. அவள் இன்னொரு பொம்மையைக் கொண்டு வந்து அவர் முன்னால் வைத்தாள். அவர் அதை எடுத்துப் பார்த்தார்.

“இது ’கம்சவதம்’ கிருஷ்ணனா? அல்லது கிருஷ்ணனின் வடிவத்தில் ஒரு ரவுடியை உருவாக்கி இருக்கிறீர்களா? இது இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருந்தால் அச்சுறுத்தும் பொம்மையாக வயலில் வைக்கலாம், கொள்ளிக் கண்ணை விலக்க.. சின்னதாக இருந்திருந்தால்..”

அவள் குறுக்கிட்டாள் ” நான் கிருஷ்ணன் பொம்மைகளைத்தான் செய்து கொண்டிருந்தேன். ஜனங்கள் வாங்கினார்கள். மூன்று அல்லது நான்கு அணாவிற்கு விற்பேன். ஓர் ஐம்பது பொம்மைகள் செய்து முடித்த பிறகு, பொம்மைகள் இன்னொரு கிருஷ்ணனாக — ஒரு காலத்தில் எனக்கான கிருஷ்ணன், என் பணிக்கனாக இருந்தவனாக மாறி விட்டன. எப்போது நான் அவனை நினைக்கிறேனோ அப்போது எனக்கு வெறி வந்து விடும். பொம்மையின் முகம் என் வெறியைப் பிரதிபலிக்கும். மெதுவாக மக்கள் பொம்மைகள் வாங்குவதை நிறுத்தி விட்டார்கள். அதன் பிறகு நான் ஆண் பொம்மைகள் செய்வதை நிறுத்தி விட்டேன். பெண் பொம்மைகள் செய்து  பார்வதி தேவி என்று பெயர் வைத்தேன். நான் பார்வதியைப் பார்த்து இருக்கிறேனா என்ன ? பார்வதி தவம் செய்து சிவனுடன் நடனமாடியதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். சினிமாக்களில் பார்த்து இருக்கிறேன். சில சமயங்களில் இருவரும் சண்டை போடுவார்கள் என்றும் சொல்வார்கள். பொம்மைகள் செய்யும் போது இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டு செய்தேன். சில சமயங்களில் கண்ணாடியில் பார்வதியின் பல முக பாவங்களை அபிநயம் செய்து பார்த்து, அது போல பொம்மைகள் செய்தேன். என்னைப் பார்வதியாகக் கற்பனை செய்து கொண்டேன். கடைசியில் எல்லாப் பார்வதி பொம்மைகளும் ஒரே மாதிரியாக..”

அவள் திரும்பவும் ஆரம்பிப்பதற்கு முன்னால் அவர் குறுக்கிட்டார்: “நீங்களும், பார்வதியும் சமமானவர்களாகி விட்டீர்கள்”

“நானும் பார்வதியும் எப்படிச் சமமாக முடியும்? பார்வதிக்கு என்னைப் போல ஜாடை வந்து விட்டது! எனக்கு அது வெட்கமாகி விட்டது. என் வடிவத்தையே நான் செய்து விற்றால்…”

அவர் குறுக்கிட்டார்: ”நிறைய மனிதர்கள் அதை வாங்குவார்கள்” 

“நிறைய மனிதர்கள் அதை வாங்குவார்கள் என்று நானும் நினைத்தேன்! பொம்மைகள் நன்றாக இருந்தன. வாங்கியவர்கள் என்னை கேலி செய்யத் தொடங்கினார்கள், என் உடலைக் காட்டி, ஆண்களை மயக்குவதற்காக நான் இந்த மாதிரி பொம்மைகள் செய்து விற்கிறேன் என்று. இதைக் காத்தா என் முகத்திற்கு நேரேயே சொன்னாள். வெறுப்போடும், கோபத்தோடும் ’ச்சீ ’ என்று நான் கத்தியதில் அவள் கண்கள் வெளியே வந்து விடுவது போல இருந்தன. அதே விஷயத்தை வேறு யாராவது கூப்பிடு தூரத்தில் நின்று கொண்டு சொல்லியிருந்தால் எப்படிச் ’ச்சீ ” சொல்லி இருப்பேன்? என்று எனக்குள் நினைத்துப் பார்த்தேன். வேறு எந்தப் பெண்ணாவது நான் அவளுக்குச் செய்ததைப் போலச் செய்திருந்தால் நானும் அவளை இழிவு படுத்தி இருப்பேன் ” 

“அது உண்மையாக இருக்கலாம். ஆனால் உங்கள் உருவத்தையே நீங்கள் மாதிரியாக வெளிப்படுத்தும் திறமை மிக அபாரமானது”

“நீங்கள் என்னைப் பாராட்டுகிறீர்கள். என்னால் ஒன்றைச் செய்ய முடியும் போது அதை வைத்து மேலும் சிலதைச் செய்ய முடியாதா? கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டே முதல் உருவத்தைச் செய்தேன். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை”

“அது உண்மைதான்”

“நான் என்ன சொன்னாலும் பெரும்பாலான அக்கம் பக்கத்தவர்கள் ’அது உண்மைதான்’ என்று சொல்வார்கள்.அவர்களை எல்லாம் பார்த்து எனக்கு பயம்”

“நீங்கள் இப்போது என்னைப் பார்த்து பயப்படவில்லை, இல்லையா?”

“இல்லை. எனக்கு யாரைப் பார்த்தும் பயமில்லை. என்னைத் தவிர வேறு   மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைப்பது கூட இல்லை”

“பெரும்பாலான கலைஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே நளினி உள்ளே போனாள்.

”இதைத்தான் கலைஞர்களின்  ஆணவம் என்பார்கள் ” மெல்லிய குரலில் அவர் சொன்னார்.

அவள் மேலும் நான்கு சிலைகளை அவர் முன் வைத்தாள் — இரக்கம், உக்கிரம், ஆச்சர்யம், கவர்ச்சி என்று  அவளுடைய பிம்பதைக் காட்டும் வடிவங்கள்– “ இவையெல்லாம் மிக அற்புதமாக இருக்கின்றன என்று சொன்னால், நீங்கள் என்னைக் கேலி செய்து, முகஸ்துதி செய்பவன் என்று சொல்வீர்களா?”

“இல்லை, ஆனால் ஏன்  மிக அற்புதமான அழகு என்று நீங்கள் சொன்னீர்கள்? அவை விற்பனைக்காக இல்லை. அவை என்றாவது ஒரு நாள் பயன்படலாம். என்னைப் பற்றி தெரியாதவர்கள் கையில் இந்த பொம்மைகள் கிடைக்கும் போது விலைமாதால் காட்சிப்படுத்தப் பட்ட பொருட்கள் என்று அவர்கள் அவற்றைப் பரிகாசம் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்”

“உங்களுக்கு ஒரு வியாபாரம் தெரியும்; நீங்கள் அதைச் சிறப்பாகச் செய்கிறீர்கள். அவற்றை நீங்கள் விற்க முடியாதது துரதிர்ஷ்டம்! ஏன்  அவதூறு ஆகும் என்று பயப்படுகிறீர்கள்? யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். கண் பார்வையற்றவர் கூட இந்த பொம்மைக்கு ஒரு ரூபாய் கொடுப்பார். உங்களுக்கென்று தனியான வருமானம் கிடைக்கும். உங்கள் தொழில் பகுதியில் ’சிற்பி’ என்று எழுதிக் கொள்கிறேன் ”

அவள் மற்றும் அவளுடைய தம்பியின் விவரங்கள் எல்லாவற்றையும் எழுதிக் கொண்டார், அவர் எழுதிக் கொண்டிருந்த போது அவள் ஒரு பொம்மையை மட்டும் வைத்து விட்டு மற்றவைகளை உள்ளே எடுத்துக் கொண்டு போனாள்.

மீண்டும் பாக்கை எடுத்து போட்டுக் கொண்டார். ”இந்த பொம்மைகள் விற்பனைக்கு அல்ல என்று சொன்னீர்கள் இல்லையா?”

“நான் அவற்றைச் சாப்பிட்டு விட மாட்டேன். அவைகளை எரித்து விடவும் மாட்டேன் ”

“உங்களிடம் இது போல நிறைய இருக்கிறதா?”

“இதுவும் உங்களின் சர்வேக்குள் அடங்குகிற கேள்வியா?”

“நான் அடுத்த கேள்விக்குப் போகிறேன், கணவரோடு சண்டை….?”

அவள் கோபம் அடைந்தாள் ; நாம் என் கணவரைப் பற்றி விவரமாகப் பேசிவிட்டோம் இல்லையா? இதை விட அதிகமாக என் கணவரைப் பற்றி முகம் தெரியாதவரிடம் சொல்ல முடியுமா? அவன் ஒரு மிருகம். கண் மண் தெரியாமல் குடிப்பான். வழியில் யாரைப் பார்த்தாலும் வெறிநாய் போல வம்புக்கிழுத்து சண்டை போடுவான். அடிபட்டுக் கிடப்பான். குடி போதை தணியும் வரை காவல் நிலையத்தில் அடைபட்டிருப்பான். காலையில் திரும்பி வருவான். ஒரு நாள் மாலையில் ஹெட்கான்ஸ்டபிள் ஒரு போலீஸ்காரரை அனுப்பி என்னை அழைத்து வரச் சொன்னார். நான் காவல் நிலையத்துக்குப் போய் என் கணவனை ஜாமீனில் உடனடியாக அழைத்து வர வேண்டுமென்று சொன்னார். அவனைக் காலையில் வெளியே விட்டாலும் எனக்குக் கவலையில்லை என்று சொல்லி விட்டேன். என் கணவன் வீட்டிலில்லை என்று தெரிந்து கொண்டு என்னிடம் யாராவது வந்து தகராறு செய்தால் நான் புகார் கொடுக்கக் கூடாது என்று ஹெட்கான்ஸ்டபிள் சொன்னார். யார் வந்தாலும் என் தலையணை அடியில் இருக்கும் அரிவாள் பதில் சொல்லும் என்று சொன்னேன். அவர் போய் விட்டார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் உளறிக் கொண்டே வீட்டுக்கு வந்தவனிடம் நான் ஒரு வார்த்தைக் கூடப்  பேசவில்லை.

“அடுத்த நாள் காலை அவனிடம் நான் என் வீட்டிற்குப்  போகிறேன்” என்று சொன்னேன்.

“ஏன் போகிறாய்?” என்று கேட்டான்.

“நான் இங்கேயேயிருந்தால் யாரையாவது என் அரிவாளால் வெட்டி விடுவேன். அதனால்தான் போகிறேன்” என்றேன்.

“யாராவது அப்படிச் செய்ய முயன்றால் என் கைகள் சும்மா இருக்காது “ என்று வேகமாக பதில் வந்தது.

“என்னால் உன்னோடு வாழ முடியாது” என்றேன்.

பஸ்சில் ஏறி இங்கு வந்து விட்டேன். இது போலப் பல மோசமான நிகழ்வுகள் இருக்கின்றன. ஆனால் அந்த நினைவுகளையே துரத்தி விடுவேன்”

அவள் நிறுத்திய போது அவர் எழுந்தார்.” நீங்கள் இதை வைத்துக் கொள்ளுங்கள் “என்று அவள் ஒரு பொம்மையைத் தந்தாள்.

அவர் அதை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார். அது  கடுமையான உருவம் கொண்ட பொம்மை. அவளுக்கு நன்றி சொன்னார். கையிலிருந்த தாளை அவள் முன்னால் வைத்து விட்டு “இதைப் பாருங்கள் “என்றார்.

அவள் பார்த்தாள். அவளுடைய உருவத்தை அவர் மிகச் சரியாக வரைந்திருந்தார். அவள் மிகக் கவனமாக அதைப் பார்த்தாள்.

“நாம் பேசிக் கொண்டிருந்த போதே நீங்கள் இதை வரைந்திருப்பது மிக வியப்பானது. நான் கொடுத்த பொம்மையைத் என்னிடம் திரும்பக் கொடுத்து விடுங்கள்” சொல்லி விட்டு உள்ளே போய் தவம் செய்து கொண்டிருக்கிற பெரிய பார்வதி பொம்மையை அவரிடம் கொடுத்தாள். அவர் அதை சந்தோஷமாக வாங்கிக் கொண்டார்.

“நீங்கள் போகலாம்” என்ற சொல்லி விட்டு முற்றத்துக்குத் திரும்பினாள்.

அவர் அடுத்த வீட்டிற்குப் போனார் .அவர் மனம் ஒரு வீணையின் இழை போல துள்ளியது.

~oOo~

மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஐம்பது அற்புதமான சிறுகதைகளின் தொகுப்பே ‘தி கிரேட்டஸ்ட் மலையாள ஸ்டோரிஸ் எவர் டோல்ட்’. ஏ.ஜே. தாமஸ் என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட இந்தத் தொகுப்பில், கரூர் நீலகண்ட பிள்ளை, வைக்கம் முகமது பஷீர், லலிதாம்பிகா அந்தர்ஜனம், பொன்குன்னம் வர்க்கி, தகழி சிவசங்கர பிள்ளை, எஸ்.கே. பொட்டேக்காட், உரூப், ஓ.வி. விஜயன், எம்.டி. வாசுதேவன் நாயர் மற்றும் பால் சக்கரியா போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களும், என். பிரபாகரன், சி.வி. பாலகிருஷ்ணன், அய்மனம் ஜான், சந்திரமதி போன்ற திறமையான புதிய குரல்களும் உள்ளனர்.

தகழியின் ‘தி ஃபார்மர்’ மற்றும் வர்க்கியின் ‘தி ஸ்பீக்கிங் ப்ளோ’ ஆகியவை கிராம வாழ்க்கையின் சோதனைகள் மற்றும் இன்னல்களைக் கையாள்கின்றன. பிள்ளையின் ‘மர பொம்மைகள்’ கதையிலும், கேசதேவாவின் ‘தி ஒத்’ கதையிலும், மூன்று கிராமப்புற பெண் கதாபாத்திரங்களின் எளிமையான, ஆனால் உள்ளார்ந்த சிக்கலான ஆளுமைகளை நாம் சந்திக்கிறோம். ‘உலகப் புகழ்பெற்ற மூக்கு’ என்ற தனது உன்னதமான கதையில், தலைசிறந்த நையாண்டி எழுத்தாளரான பஷீர், மனித தற்பெருமையை அம்பலப்படுத்த கடுமையான நையாண்டியை நாடுகிறார். அந்தர்ஜனத்தின் ‘திரேந்து மஜும்தாரின் தாய்’ என்ற நாவலில், 1947 பிரிவினை மற்றும் 1971 வங்காளதேச விடுதலைப் போரின் புரட்சிகர கதாநாயகியாக தாய் வெளிப்படுகிறார். நந்தனாரின் ‘மனிதர்களும் விலங்குகளும்’ பிரிவினையின் கொடூரங்களிலிருந்து நம்பமுடியாத அளவிற்கு கொடூரமான சம்பவத்தை விவரிக்கிறது. ஓ.வி. விஜயனின் தலைசிறந்த படைப்பான ‘தி ஹேங்கிங்’ இல், வாசகர் தனது குழந்தையின் மரணத்தால் ஒரு தந்தையின் துக்கத்தில் ஈர்க்கப்படுகிறார். ‘ஒரு பறவையின் வாசனை’யில் மாதவிக்குட்டி தனக்கென ஒரு தொழிலை உருவாக்க விரும்பும் ஒரு நவீன பெண்ணின் இருத்தலியல் வேதனையை தைரியமாக வரைகிறார். பி. வத்சலாவின் ‘பெம்பி’ என்ற கதை அடியார் பழங்குடி பெண்களின் அவல நிலையை விவரிக்கிறது. எம்.டி. வாசுதேவன் நாயர், தனது புகழ்பெற்ற கதையான ‘விஷன்’ இல், பெண்கள் தங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மற்றும் விடுதலை பெற்ற நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எம். முகுந்தனின் ‘புகைப்படம்’ குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றிய ஒரு துயரமான கதை. ‘தி கார்டன் ஆஃப் தி ஆன்ட்லயன்ஸ்’ இல், ஒரு நோயாளி தன்னை குணப்படுத்த சவால் விடும் ஒரு விசித்திரமான மற்றும் தனிமையில் இருக்கும் மசாஜ்-மருத்துவரின் கதையை ஜக்காரியா தனது ஒப்பற்ற பாணியில் கூறுகிறார். சாரா ஜோசப்பின் ‘ஸ்வெட் மார்க்ஸ்’ ஒரு புத்திசாலித்தனமான தலித் மாணவனை ஏமாற்ற சாதி உயர் சாதியினர் எவ்வாறு ஒன்று சேர்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்தத் தொகுப்பில் உள்ள இவை மற்றும் பிற கதைகள், காலங்காலமாக மலையாளி அனுபவத்தின் சிக்கலான திரைச்சீலைகளை புத்திசாலித்தனமாகவும் நுணுக்கமாகவும் சித்தரிக்கின்றன.

  • நூல்: The Greatest Malayalam  Stories Ever Told 
  • தேர்ந்தெடுப்பும் மொழியாக்கமும்: by A. J. Thomas (Author)
  • Publisher ‏ : ‎ Aleph Book Company
  • வெளியீடு: October 25, 2023
  • Language ‏ : ‎ English
  • Hardcover ‏ : ‎ 464 pages
  • ISBN-10 ‏ : ‎ 9390652766
  • ISBN-13 ‏ : ‎ 978-9390652761


இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் ஏ. ஜே. தாமஸ் – ஒரு கவிஞர், ஆசிரியர் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் மொழிபெயர்ப்பாளர். அவர் சாகித்ய அகாடமியின் இருமாத இதழான இந்திய இலக்கியத்தின் முன்னாள் ஆசிரியர் ஆவார். லிபியாவின் பெங்காசி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பித்துள்ளார்; இக்னோ (IGNOU)வில் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். அவர் கதா விருது, ஏ.கே.எம்.ஜி பரிசு மற்றும் மொழிபெயர்ப்புக்கான வோடபோன் குறுக்கெழுத்து விருதைப் பெற்றவர். தாமஸ் இந்திய அரசாங்கத்தில் சீனியர் பெல்லோஷிப்பைப் பெற்றுள்ளார். மேலும் தென் கொரியா அரசாங்கத்தின் கலாச்சாரத் துறையில் கௌரவ உறுப்பினராகவும் இருந்தார்.

தமிழில் இந்திய இலக்கியம்

குங்கும பரணி வக்கீலின் கடிதம்

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “மர பொம்மைகள்”

Leave a Reply to Geetha SureshCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.