பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1

முன்னுரை

சம்ஸ்க்ருத வசன கவிகளுல், பானா -BHATTA BANA – என்பவர் முதன்மையானவர். காதம்பரி, ஹர்ஷ சரிதம் இரண்டும் அவருடைய முக்கியமான நூல்கள். பானர்,  ஹர்ஷர் என்ற அரசனின் சமகாலத்தவர். இது அரசன் ஹர்ஷனின் சரித்திரம், ஸ்ருங்கார ப்ரதானமான இதில் ஹர்ஷரே கதா நாயகன்.  சீன தேசத்து யாத்ரீகர், ஹுயான் த்சங்க் -Huyen Tsang – ஒரு சமயம் ஹர்ஷரின் ராஜ சபையில் இருந்ததாக தெரிகிறது. 

ஹர்ஷ என்ற அரசன் வட இந்தியாவை  கி.மு 606 லிருந்து 648 வர ஆண்டவர். அதனால் இந்த கவியில் காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, கி.மு ஏழாம்  நூற்றாஅண்டுகளில் இருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள்.  

பாணருடைய படைப்புகள் நீள நீளமான சம்ஸ்க்ருத கூட்டு எழுத்துக்களால் ஆன வசன நடை.  காதம்பரியில் எளிய சொற்களை பயன்படுத்திய பாண கவி, இந்த ஹர்ஷ சரித்திரத்தில் பத பிரயோகங்களும், வசனங்களுமாக  கடினமான வாசிப்பு அனுபவத்தை தருகிறார்.  பதங்களைப் பிரித்தபின் திரும்ப படித்தால் தான் பொருளே புரியும்,  மற்ற மூன்று நாடகங்கள் பிரசித்தமானவை. ரத்னாவளி, நாகாநந்தா மற்றும் பிரிய தர்சிகா. அவர் காலத்தில் ஹிந்து மதமும், பௌத்தமும் தழைத்திருந்தன என்று அறிகிறோம்.

ஹர்ஷ சரித்திரத்தின் விசேஷமே, இதிலிருந்து நமக்கு கிடைக்கும் விவரங்கள்-  அந்த காலத்தின் மரபுகளும், நடை உடை பாவனைகளும், அரச சபையில் அனுசரிக்கப்பட்ட, ராணுவம் பின்பற்றிய விதி முறைகளையும் கோடி காட்டுவது தான்.  இந்தியாவின் கடந்த காலத்து மதங்கள், மத சம்பந்தமான நம்பிக்கைகள். சமூகத்தின் அமைப்பு, மருத்துவ மற்றும் பல விக்ஞானங்கள்,  மற்றும் பல விவரங்கள் உள்ளன. சரித்திர சம்பந்தம் தவிர, சாதாரண குடி மக்களின் வாழ்வின் தரமும் அறிய முடிகிறது. 

எட்டு பகுதிகளாக விரியும் பாண கவியின் ஹர்ஷ சரித்திரம், முதல் இரண்டு பகுதிகளில் பாணர் தன் சரித்திரத்தைச் சொல்கிறார்.  அடுத்து ராஜா ஹர்ஷனின் தந்தை வழி மூத்தவர் புஷ்ப பூதி என்பவரின் சரித்திரம். இதில் முக்கியமான அம்சம்,  பைரவாசர்யா என்ற அந்தணர் நடு இரவில்  செய்த ஹோமத்தை அழிக்க வந்த ஸ்ரீகந்தன் என்ற அசுரனை தடுத்து அந்த ஹோமம் நடைபெற உதவியது.

நாலாவது பகுதி, யசோவதி என்ற பெண்ணை மணந்து ராஜ்ய வரதன், ஹர்ஷன், மற்றும் ராஜஸ்ரீ என்ற பெண் மகவும் பிறந்த சரித்திரங்கள்.  அந்த மகளை மௌகரி வம்சத்து க்ரஹ வர்மனுக்கு மணம் செய்து கொடுத்தது. 

ஐந்தாவது பகுதி ப்ரபாகர வர்தனின் மறைவு.  ஆறாவது பகுதி ராஜ்யவர்தனன் நாடு திரும்புதலும், மால்வா அரசன் க்ரஹ வர்மனை வதைத்தலும். ராஜ்யஸ்ரீ என்ற மகளை கான்யகுப்ஜம் என்ற இடத்தில் சிறை வைத்ததும், ராஜ்யவர்தனன் பதிலுக்கு அவன் மேல் படையெடுத்துச் செல்லுதலும்,  மால்வா அரசனை வெற்றி கொண்டு அவனை வதைத்தலும். அதற்கு கௌட அரசன் ரகசியமாக உதவியதும்,  ராஜா ஹர்ஷன் தன் சகோதரன கொன்றதற்கு பழி வாங்கியதும்.

ஏழாவதில் ராஜா ஹர்ஷனின் யாத்திரைகள். மால்வா அரசனின் உதவியாக இருந்த சிற்றரசன், பண்டி என்பவன், அவனை மீதி இருந்த மால்வா அரச வம்சத்தினரை அழிக்கச் சொல்லி அனுப்பி விட்டு, தான் விந்த்ய மலைக்குச் சென்று சகோதரி ராஜ்யஸ்ரீயை தேடியதும். சிறையிடப் பட்டிருந்த ராஜ்யஸ்ரீ தப்பித்து விட்டிருந்தாள், அவளைக் கண்டதும்..  அதன் பின் தீக்குளித்து தன்னை மாய்த்துக் கொள்ள துணிந்தவளை காப்பாற்றியது, ஒரு பௌத்த சன்யாசி  -பதந்தகன் என்பவனை சந்தித்தலும்.  அவரிடம் சகோதரியை பாதுகாப்பாக விட்டு விட்டு, கிளம்பிய சமயம் ராஜ்யஸ்ரீ புத்த மதத்தில் சேர்ந்து பிக்ஷுணியாக விரும்புவதாக தெரிவித்தாள்.  அவளிடம், தானும் கௌட அரசனிடம் செய்து கொண்டிருந்த போரை முடித்து விட்டு அவளுடன் சன்யாச வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி விட்டு போனவன் தான். ராஜ ஹர்ஷனின் கதை இத்துடன் பாதியில் நின்று விட்டது.

இது ஸ்ரீ விஸ்வனாதன் என்பவர்,  Mylapore, Balamanorama Series, General Editor – 1963 ம் ஆண்டு பதிவிட்டதில் கொடுத்துள்ள முன்னுரை.

ஹர்ஷ சரிதம் -1

ஒரு சமயம் ப்ரும்மாவின் சபையில் பலர் கூடியிருந்தனர்.  அந்த சமயம் பிரஜாபதிகள் என்பவர்கள், மனு, தக்ஷன், சாக்ஷுசன் என்பவர்களும் மற்றும், சப்த ரிஷிகள், மஹரிஷிகள், அமர்ந்திருந்தனர். சிலர் வேத மந்திரங்களில் இருந்து ருசா- (வேத பரிபாஷை) துதி செய்வது போன்றதை அதன் விதி முறைப் படி பாடினர்.  மற்றும் சிலர் யஜுர் வேத சாகைகளைப் பாடினர். சிலர் பொதுவான பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர்.  மற்றும் சிலர் பலவிதமான  யாக, கர்ம மார்கங்கள், மந்திரங்கள் என்று விவரித்து பேசினர்.  அனைவரும் கற்றறிந்த பெரியவர்கள்.  அவர்கள் தங்கள் மனதில் தோன்றிய படி சில அபிப்பிராயங்களை சொல்லவும், வாதம், விவாதம் என்று வளர்ந்தது. 

இயல்பாகவே அதிக கோபக் காரான, தவ பலம் மிகுந்தவரும், அத்ரி மகரிஷியின் மகனும், தாராபதியின் சகோதரனுமான   துர்வாசர் என்ற பெயருடையவர், தனக்கு எதிராக பேசிய மந்த பாலகன் என்ற முனிவருடன் கலஹம் செய்யலானார்.  பாதி சாம கானம் செய்து கொண்டிருந்தவர், கலஹம் காரணமாக கவனம் சிதற சாம கானத்தில் ஸ்வரம் தப்ப தவறு  செய்தார்.  அனைவரும்  அவர் குணம், அல்ப காரணமாக கூட  சபித்து விடுவார் என்ற பயத்தால் பேசாமல் இருந்தனர்.  ப்ரும்மாவும் கவனியாது போல வேறு எதிலோ கவனமாக இருந்தவர் நிமிரவேயில்லை.  ஆனால், 

பகவதி, குமாரி  குழந்தை பருவம் முடிந்து சற்றே வெளிப்பட்ட  யௌவன பருவம், அழகிய  இளம் யுவதியாகிக் கொண்டு இருந்தவள்,  பிதாமகரான ப்ரும்மாவுக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தவள், அவள் கைகள்  அதை வீசுவதில் மும்முரமாக இருந்தன.  அவள் காலில் அணிந்திருந்த நூபுரங்கள், கால்களில் ஓசையிட,கால்களில் பட்டு உரசி, ஏற்கனவே சிவந்திருந்த பாதங்கள், மேலும் சிவக்க, இரு சிஷ்யர்கள் மூலம் தன் பாத சிலம்புகளின் ஓசையாலேயே செய்தி சொல்வது போல இருக்க, நகரத்தில் கட்டப்பட்ட  தோரணங்களைத் தாங்கிய ஸ்தம்பங்கள் போன்ற துடைகளின்  அழகும், விளையாட்டாக கூச்சலிடும் கல ஹம்சங்கள் போன்ற குரலால் ஏதோ சொல்லக் கேட்டு அவள் பக்கம் திரும்பினர்.  இடையில் வைத்த  துளிர் போன்ற இடது கையும், அங்கு இருந்த வித்வான்கள் மனதை சுண்டி இழுத்தன. 

கழுத்திலிருந்த ப்ரும்ம சூத்ரம், (பொன் மாலை) அவளை அலங்கரித்ததா, அவளால் அது அழகு பெற்றதா ? உயர் முத்துக்கள் வரிசையாக கோர்க்கப் பெற்று, மத்தியில் பளீரென்று தெரிந்த  பெரிய உயர் மணி  ஸுரியனின் ஒளியை மிஞ்சியது. எப்படி இருந்தது என்றால், ஸுரியனைச் சுற்றி வரும் தேவ உலகத்தினர் செல்லும் வழி (அபவர்க மார்கமும்) -நடுவில் ஒளி வீசும் ஸுரியனும் அதைச் சுற்றி பாதையில்  முக்தியடைந்த ஜீவன் களும் போல என்று வர்ணனை.  சகல வித்தைகளுக்கும் அதிபதியானவள், அவைகளே அலக்த- என்ற பூச்சு (சிவக்கச் செய்யும் ஒரு வஸ்து, அவள் அதரங்களை மேலும் சிவந்ததாக காட்டின)  வேறு எந்த விதமான  பூச்சுப் பொருளும் பயன் படுத்தாமல் வித்யா -கல்வி கலை என்பவைகளே அவள் வாக்கை-உதடுகளை சிவக்கச் செய்தன என்பதாக பொருள். நடுவில் பளீரென்று ஒளி விடும் பற்கள். நிலவின் களங்கமாகத் தெரியும் க்ருஷ்ண மிருகம் இறங்கி வந்து விட்டனவோ எனும்படி ப்ரும்மாவின் க்ருஷ்ணாஜினம்- கரும் மான் தோல் ஆடை அவள் கன்னத்தில் பிரதி பலித்தது. (கன்னங்கள் முழு நிலவு போல இருந்ததால். )  தன் எதிர்ப்பைத்  தெரிவிக்கும் விதமாக அவள் புருவங்கள் நெரிந்தன.  தவறான உச்சரிப்பைக் கேட்ட காதுகளை நீரால் சுத்தம் செய்வது போல கண்களில் பெருகிய கண்ணீர். மற்ற காதில் வைத்திருந்த சிந்து வார என்ற புஷ்பம் அவள் அறிவில் சிறந்தவள் என்பதை பாராட்டும் விதமாக பெருமையுடன் மலர்ந்து விரிந்தன போலும்.     

அவள் அறியாத ஸ்ருதியா? வேத பாடமா?  வேதம் ஓதுவோருக்கு ப்ரணவம் போல,  அவள் காதில் அணிந்திருந்த மலரை வட்டமிட்ட வண்டுகளின் ரீங்காரம் கேட்டது.  ஒளிர் விடும் வெண் பட்டாடை, சுத்தமான வாக்கு – வெண்ணிறமாக சொல்லப் படும்- அத்துடன் வெண் பற்களும் திசைகளை சூழ்ந்து பரவி இருப்பது போல இருந்ததாம்.  சரஸ்வதி என்றும் அழைக்கப் படும் தேவி, வாக்கின் அதிபதி சிரித்தாள். 

அவள் சிரிப்பதைப் பார்த்த முனிவர், “ஹா! பாப காரினீ ! ஏதோ சிறிது வித்யா-கல்வி அறிவு பெற்ற மமதையுடன், என்னை பரிகசிக்கிறாயா?” என்றபடி தலையை வேகமாக ஆட்டிய சமயம்., ஜடை அவிழ்ந்து தொங்க, மின்னலின் பொன் நிறமான கேசம் தனித் தனி நூல் போல பரவி அதன்  மஞ்சள் நிறமே முகத்தை மறைத்தது போலவும், ரோஷம் எனும் அக்னி பத்து திசைகளையும் தகிக்கச் செய்ய,  காலனே வந்து நின்றது போலவும், அந்தகாரி எனப்படும்  பரமசிவனின்  அடையாளமான பஸ்மம் பூசிய நெற்றியில்  யமனே  குடி கொண்டு விட்டது போல சிவந்து தெரிய. உடலின்  உதிரம் முழுவதுமே முகத்தில் சேர்ந்து கொண்டது போல கோபம் கொப்பளித்து,  நற நறவென்று கடித்த பற்களின் ஓசையில்  பேச்சு எழும்பாமல், ஒரு வேளை அந்த சொல்லுமே பயந்ததோ அருகில் வராமல் தள்ளி நின்றதோ எனும்படி,  பற்கள் உதட்டைக் கடித்து குதறின.  சபிக்கத் துணிந்தவர் போல க்ருஷ்ணாஜினம் நழுவ, அக்ஷமாலையை இறுகப் பற்றியபடி, உடல் வியர்வை பெருகி துளிகளாக தெரிய, தேவர்களும் அசுரர்களும் நிரம்பியிருந்த அந்த சபையில் அனைவரும் சாப பயத்துடன் முனிவரையே பார்த்து நடுங்கியபடி நின்றனர்.   அவர் விரல்களும் நடுங்கின.  கமண்டலுவை அந்த நடுக்கத்துடனே எடுத்து கையில் சாபம் கொடுக்க நீரை எடுத்துக் கொண்டார். 

இதற்கிடையில், ஸ்வயம்பூ எனப்படும் ப்ரும்மாவின் அருகில் இருந்த தேவி,  அமிருதமே உருவெடுத்து வந்தது போலவும், அம்ருத கடலின் நுரை போன்றதுமான ஆடையின் வெண்மை மிளிர,  தாமரைத் தண்டு போல கோமளமான அவள் ஸ்தனங்களை மறைத்த மேலாடையும்,  மூவுலகையும் வெற்றி கொள்ளும் கொடி போன்ற அவள் நெற்றியின் பஸ்மத்தால் ஆன புண்டரீகம், திலகமும், தோளில் சரிந்து விழுந்த பட்டாடை கொத்தாக இறங்கி மறைத்த  தவம் செய்து சாதனைகளால் பெற்ற சக்திகளே பட்டையாக தெரிவது போல மார்பு கச்சையில் விழுந்ததை   சரி செய்தபடியே, இடது கையால், ஸ்படிக கமண்டலத்தை கையில் எடுத்து, அதட்டுவது போன்ற ஆள் காட்டி விரலில் அக்ஷமாலையை ஏந்தியபடி சொன்னாள். 

“ஹா! பாபியே. கோபம் தலைக்கேற நிற்கும் துராத்மன்!  அறிவில்லாதவன்,  ஆத்ம ஞானம் பெற்றவனா நீ,  ப்ரும்ம பந்தோ! (இது ஒரு வசைச் சொல்)  முனிவர்களின் கேடாக வந்தவன், நகரு.  உன் தவறு, வாய் தவறுதலாக வேத மந்திரத்தை உச்சரித்து. முனிகள் கூடியிருக்கும் சபையில், அனைவரும் வணங்கும் தேவி சரஸ்வதியை,  மூவுலகுக்கும் தாய் போன்றவளை சபிக்கவா துணிந்தாய்? “ என்றவள், தானும் கோபத்துடன்  ஓங்காரமாய் ஒலித்த குரலுடன், விரித்த குழல் திசைகளில் பறக்க, க்ருஷ்ணாஜினம் பட படக்க, தானே ஸ்யாமளா, கறுத்த நிறத்தினள், மேலும் கருமை படர மூச்சுக் காற்றில் அக்னி ஹோத்ரிகளின் கலசங்கள் ஆடி விழ, அவர்களும் என்ன நடக்கிறது என்பதைக் கண்ணால் காண வந்து நின்றனர்.  வேதங்கள் தாங்களும் சாவித்ரியான அவளை சூழ்ந்து வந்து நின்றன. 

அதே சமயம் அருகில் இருந்தவர்கள், பகவன்! பொறுங்கள்.  இவனை மன்னித்து விடுங்கள்.  இந்த பூமியில் சாபமா? வேண்டாம் என்று முனிவரை மற்றவர்களும், தந்தையான அத்ரியும், அவரது சிஷ்யர்களும் கைகூப்பி வேண்டினர்.   தடுத்தனர். .

புத்ர!  இன்னாள் வரை செய்த தவப் பலன்கள் அழியும். வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல், தன் ரோஷம் கண்களையும் புத்தியையும் மறைக்க, “துர்விநீதே!  கல்வியால் நீ பெற்ற அபிமானம், அதனால் பெற்ற பெருமைகள்  அனைத்தையும் இதோ  அழிக்கிறேன். பூ லோகத்தில் விழுவாய். மனிதர்கள் இடையில்  துன்பங்களைஅனுபவி”  என்று சொல்லியபடியே சாப ஜலத்தை விட்டார்.  பிரதி சாபம் கொடுக்கத் தயாராக இருந்த தேவி சாவித்திரியை “ சகி! உன் கோபத்தை அடக்கிக் கொள்.  தவறு செய்தவன் தான், என்றாலும் இந்த அந்தணன், இவன் பிறந்த குலத்தை எண்ணி சற்று மதிப்பு கொடு”  என்று  சரஸ்வதியே வந்து அவளை வேண்டினாள்.  

அதை பார்த்த பிதாமகர், தான் அவதரித்த கமலத்தின் தண்டு போன்று மென்மையானவள், அவள் இள வயதிற்கு அவள் அணிந்திருந்த மாலைகளும் யஞோபவீதம் எனும் நூலும், அழகூட்டுகின்றன என்று எண்ணியவராக குனிந்து அவளை ஆசீர்வதித்தார்.  அழகிய விரல்கள் மரகத மணியால் ஆன மோதிரங்களால் பிரகாசித்தன.  மூவுலகையும் முழ்கடிக்கும் அளவு ஆத்திரத்துடன் நின்ற தேவி சாவித்திரியின் கையிலிருந்து கமண்டலுவை இடது கையால் பற்றி தன் கையில் வைத்துக் கொண்டு, வரப் போகும் அனர்த்தங்களை தடுத்தவராக, முனிவரை சபித்ததோடு இந்த விஷயம் நிற்காது, இதே காரணமாக வைரம் வளரும், யுக முடிவே வந்தாலும் ஆச்சர்யம் இல்லை, என நினைத்தவர், திரும்பி  கிளம்பத் தயாராக இருந்த சரஸ்வதியைப் பார்த்து,   வழியனுப்ப மங்கள வாசகங்களை தன் தீர்கமான குரலால் சொல்லி திசைகளில் எதிரொலிக்க  செய்தார். 

அதன் பின் துர்வாச முனிவரிடம் வந்தார். 

“ப்ரும்மன்! இது முறையல்ல. தாங்கள் செய்ததை சாது ஜனங்கள் ஏற்க மாட்டார்கள்.  அவர்களில் ஒருவன் நான் அல்ல நான் என்பது போல புலன்களின் ஆதிக்கத்தில், குரோதத்துக்கு இடம் கொடுத்து, முற்றும் துறந்த முனிவராக நடந்து கொள்ளத்  தவறி விட்டீர்கள்.  குரோதம் கண்களைக் கட்டும்.  குரோதம் கிளப்பும் தூசி கண்களை மறைத்து விடும்.  கண்களால் எவ்வளவு தூரம் பார்க்க முடியும்?  சாதனைகள் செய்து, கற்ற கல்வியினால் பெற்ற அறிவுக் கண்களால் புத்தியுள்ள பெரியவர்கள் பார்க்கின்றனர்.  நல்லதோ, கெட்டதோ அவர்கள் புத்தியினால் அறிவதால் நிதானமாக செயல்படுவார்கள். இயற்கைக்கு விரோதமான இந்த அடக்கமின்மை, அதனால் பெருகி வரும் வெள்ளத்தின் நீர் போலும், அடக்க மாட்டாத ஜுவாலையுடன் எழும் தீ போலவும் குரோதம் பெருகி அழிக்கும் தன்மையது.  மூவுலகம் முழுவதையும் தவிர்த்து எங்கு சென்று தவம் செய்ய இடம் பெறுவீர்கள்?  மனம் தான் ஒன்றி தவத்தில் ஈடுபடுமா? க்ஷமா- பொறுமை தான் அனைத்து சாதனைகளுக்கும்  அடிப்படை.  மற்றவர்களின் தவற்றை கண்டு கோபித்துக் கொள்ளும் புத்தி, தன்னுடையதே ஆன பேராசை, தோஷங்களை காண்பதில்லை. அஹோ, மகா தபஸ்வியின் விசித்திரமான பண்பாடு.  முன்னிலையில் உள்ளவர் என்பவரின் தகுதி இவ்வளவே தானா? அதி அதிகமான ரோஷம் உடையவரின் கண்கள், கண்கள் இல்லாத கபோதியின் கண்கள் போலவே தான் மதிக்கப் படும்.  குரோதம் நிரம்பி குட்டைபோல கலங்கிய மனம் எனும் குளத்தில் புத்தி தங்காது. செய்ய வேண்டியவை, எதை விட வேண்டும் என்ற பாகுபாட்டை உணராது போகும்.  கோபத்தில் மூழ்கியவனின் வித்யா-கல்வி கற்றதன் பலன், இருளில் மூழ்கும். புருவங்களை நெரித்தீரே,  முதலில் புலன்கள் தங்கள் இயல்பை இழக்கும், கடைசியில் கண்கள். ஆரம்பத்தில் செய்த தவங்கள் நீங்கும்.  அடுத்து  துளித் துளியாக சொட்டிய  வேர்வை ஜலம்,   முதலில் புகழ் மறையும், இகழ்ச்சியே பிரகாசமாகும். அதையடுத்து துடித்த உதடுகள்.  அது எப்படி உலகமே அழியட்டும் என்பது போன்ற பாவனையுடன் , விஷ விருக்ஷம் போல ஜடையும், வல்கலம் என்ற ஆடையும் பறக்க துடித்தீர். . கூத்தாடி போல வீணாக  தபஸ்வி வேஷம்,  செயற்கையான மன அடக்கமும் , சூன்யமான மனதில் தபஸ்வி என்ற கல்பனையும். சிறிதளவு கூட உங்களிடம் நன்மை என்பதை  நான் காணவில்லையே.

இந்த  உளப் பாங்குடன்  ஞானி- அறிவுடையவர் என்ற பிம்பத்தை தாங்கிக் கொண்டு உலவுகிறீர்.  இங்குள்ளவர்கள்  வாய் பேச முடியாத ஊமைகளோ,  செவிடர்களோ, ஜட புத்தியுடையவர்களோ அல்ல.  இவர்களும் மகரிஷிகளே ஆவர்.  தன் உள்ளத்தில் ரோஷம் என்ற தோஷம் நிரம்பியிருக்க, அதை அடக்கத் தெரியாமல் எதற்காக குற்ற மற்ற சரஸ்வதியை தண்டிக்க முனைந்தீர். இவையனைத்தும் உங்களிடம் உள்ள தன்னம்பிக்கையும் தான் என்ற அபிமானமும் தான் நியாயமாக மற்றவர்கள் பெற வேண்டியதையும் பெற விடாமல் தடுக்கிறது” 

இப்படி சொல்லி விட்டு, சரஸ்வதியைப் பார்த்து, குழந்தாய்! வருந்தாதே. சாவித்திரி உன்னை தொடர்ந்து வருவாள். எங்களை விட்டு பிரிந்த துக்கம் வாட்டாமல் பார்த்துக் கொள்வாள்.  பூமியில் பிறந்து வாழ்ந்து, உன் மகனின் முகத்தைப் பார்க்கும் வரை தான் உன்னை இந்த சாபம் பாதிக்கும்.  “ இவ்வாறு சொல்லி சபையை கலைந்து போகச் செய்தார். 

பரபரப்புடன் வந்திருந்த நாரதர் மற்றும் கூடியிருந்தவர்களுடன்  தினசரி அக்னி காரியங்களைக் கவனிக்கச் சென்றார். 

முனிவரின் சாபம் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்று ஏற்றுக் கொண்டாலும் மனம் சமாதானம் அடையவில்லை. முகம் வாடி கீழ் நோக்கி பார்வையை செலுத்தியவள்,  வெண் நிறமும், கருமையும் கலந்து இருந்த க்ருஷ்ணாஜினம் என்ற – நீல நிற மானின் தோலால் ஆன ஆடை- அதில் வண்டுகள் ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். ஏதோ புள்ளிகள் இயல்பாக மானின் தோலில் அமைந்தவை என்று தெரிந்தாலும் அவை எழுத்துக்கள்  போலவும் இருந்தன.  சாபத்தையே அந்த எழுத்துக்களில் காண்பது போல அவள் மனம் வாடியது.  ஆனால் வண்டுகள் ரீங்கரித்துக் கொண்டு அவளையே சுற்றி வந்தன. மலர்களைத் தேடி வந்தவை அந்த அழகிய புள்ளிகளை கண்டு வந்ததோ, அல்லது அவள் மூச்சுக் காற்றே மணமாக  அவைகளை கவர்ந்து இழுத்தனவோ என்று கவியின் வர்ணனை. 

தன் உடலே பலமிழந்தது போன்று இருந்தது. கைகள் இற்று விழுந்து விடும் போல வலித்தன.   வண்டுகள், இது தான் பூலோகம் போகும் வழி என்று காட்டினவோ, நூபுரங்கள் உரசி ஒலிக்கும் சப்தமே, கட்டியம் கூற, ஒளி வீசும் நகங்களின் ஒளி வழிகாட்டுவது போல இருக்க, ப்ரும்ம குலத்தின் கல ஹம்ஸங்கள்  ஏதோ நல்ல செய்தியில்லை என்ற மட்டும் அறிந்தவையாக அவளை பின் தொடருவது போல வந்தன.  அவைகளும் வருந்துவது போல உணர்ந்தாள்.  சாவித்திரியின் இருப்பிடம் வந்து சேர்ந்தாள். 

இதற்குள் சரஸ்வதி பூ லோகம் செல்கிறாள் என்ற செய்தி பரவி, அதைக் கேட்டு வேகமாக நிலவும் இறங்கியது போல நிலவு மந்தமாக இருந்தது.  ஸூரியன் முழுவதுமாக மறையும் முன் அவசரமாக வந்து எட்டிப் பார்ப்பது போல வந்த நிலவின் கிரணங்கள்,  

தாமரை மலர்கள் மெள்ள குவியத் தொடங்கிய அந்த வேளையில், குளத்து பறவைகளின் கூச்சலும் அடங்கியது. மெள்ள இறங்கிய வானத்து  உயர் மணியான ஸூரியன், செக்கச் சிவக்க தன் கிரணங்களோடு தன் கிரணங்களுடன் இறங்கிக் கொண்டிருக்கையிலேயே, நிலவின் வருகையால் ஆரவாரமாக சமுத்திரங்கள் வரவேற்பது போல அலையோசை கேட்டது.  பினாகி – சிவ பெருமானின் பக்தர்கள் பூஜை காலம் வந்து விட்டதை உணர்த்தும் மணியோசைகள் முழங்கின. சந்த்யா கால ஜபங்கள் செய்வோரும், ப்ரும்ம லோகம் கோலாகலமாக மூன்றாவது யாமத்தில் சொல்ல வேண்டிய  ப்ரும்ம வாக்யங்களை உரக்க உச்சரித்தபடி வந்தனர்.  சப்த ரிஷி மண்டலங்களின் ரிஷிகள் ஸ்னானம் செய்து விரித்த குழல்களுடன் வந்து கூடினர்.  அகமர்ஷணம்- குற்றங்களை களையும் மந்திரங்களை உச்சரித்தபடி யதிகளும் வந்து கூடினர்.  வழக்கமாக சந்த்யா கால ஜப தபங்கள் என்று கூடும்  தபஸ்விகளின் கூட்டம்  மந்தாகினீ நதியின் மணல் வெளியில் கால் பதிய வந்து அமர்ந்தனர். 

ப்ரதோஷ காலம்.  பகவான்  தூர்ஜடி- ருத்ரனின் ஒரு பெயர்- விரித்த குழலுடையவர் என்ற பொருளில், கேசம் ஜடையாக காற்றில் நால் திசைகளிலும் பறக்க வந்து சேர்ந்தார்.  வான் மண்டலத்தை தாராகணங்கள் அழகுறச் செய்தன. சந்தியா காலத்தில் பழுக்கும் தாள- (பப்பாளி போன்ற பழம்) போன்ற ஒளி ஒரு பக்கம், கரு மேகங்கள் ஒரு பக்கம், பூமியைப் பார்த்து கண் சிமிட்டுவது போல இளம் இருட்டு,  தட தடவென்று தாள வாத்யங்கள் முழங்க,  காளிந்தி நதியின் கரையில், கர்ண பூர, சண்பக மலர்கள் சேர்த்து கட்டிய பூமாலையை அணிந்து பிரகாசமாக,  சந்திரனின் ஒளிக்கு இணையாக மணல் துகள்கள் அல்லது சந்திரனின் ஒளி பட்டு வெளிர் வர்ணம் அடைந்த மணல், இளம் பிறையை தலையில் தரித்த பகவான், ஆடும் நேரம். 

அந்த மயக்கும் மாலை நேரத்தில் சாவித்திரி, சரஸ்வதியுடன் வந்து சேர்ந்தாள்.  சரஸ்வதி தியானத்தில் இருப்பவள் போல பேசாமல் இருந்தாள்.   சகி!  ஏன் அந்த  சமயம் எனக்கு சிரிக்கத் தோன்றியது என்று நினைத்து வருந்துகிறேன்.  என் அறியாமையா, ஆணவமா என வெட்கப் படுகிறேன்.  என் மனமே  வெறுமையாக ஆகி விட்டது. எதையும் நினைக்கவே முடியவில்லை. வெறுமையானது  போல உணர்கிறேன்.  சகி, உனக்குத் தெரியாததா?  எனவும், சாவித்திரி அவளை சமாதானப்படுத்தும் விதமாக சொன்னாள். சகி! 

சரஸ்வதி! மூவுலகிற்கும் உபதேசம் செய்யும் திறமையுடையவள் நீ.  சொல்லின் செல்வி நீ.  ஏன் வருத்தப் படுகிறாய்.  எல்லாம் வல்ல இறைவனின் செயல். அதை நாம் மறுக்கவோ, ஏன் எதனால் என்று கேட்டு விடை பெறவும் முடியாது. என்ன தான் திட புத்தி உள்ளவனேயானாலும், கண் இமைக்கும் நேரத்தில் தயவில்லாமல் ஒரு சொல்லோ, செயலோ நம் மூலம் வெளிப்படுவது எதனால்? பின்னால் நாமா சொன்னோம், நாமா செய்தோம் என்று வெட்கம் அடைவதும் நியாயமே.  இதைத் தான் நம்மால் கடக்க முடியாத இறைவனின் செயல் என்று  சொல்வர்.  காரணமின்றி ஏன் என் வாயில் அந்த சொல் வந்தது  என்று சொன்னாயே, உன்னை பயன் படுத்திக் கொண்டு ஏதோ ஒரு பெரிய செயலை நடத்த  அந்த இறைவனின் எண்ணம் போலும்.  எதிர் பாராத இடத்தில் எதிர் பாராத நன்மையோ, தீமையோ தன் வரை நியாயமாக இருப்பவரை ஏன் பாதிக்க வேண்டும்? இதற்கு விடையே இல்லை. கவனமாக நீர் விட்டு வளர்த்த மரம் வளர்ந்து வெறுமையாக நிற்கிறது, மாலதி கொடி தானாகவே கிடைத்ததைப் பற்றிக் கொண்டு மலர்களைச் சொரிகிறது.  நியாயமாக நடந்து கொள்பவர்களை அணு அளவு சிறிய அங்குசம் பெரிய யானையை கட்டுப் படுத்துகிறது, அதை வலுவிழக்கச் செய்வது போல. இது தான் உலக இயல்பு.

உடன் பிறந்தவர்கள், அன்புடன், பாசத்துடன் இருந்தவர்களை விட்டு விலகி வந்தது,  இவர்களின் பிரிவு உன் மனதை வாட்டுகிறது. வருத்தப் படாதே.  உனக்கு இந்த தண்டனை அதிகம் தான். நம் கையில் எதுவும் இல்லை. என்றோ செய்த கர்ம பலன், சிலர் விதி என்பர், சிலர் காலம் என்பர், நம்மை பலமாக இழுத்துச் செல்கிறது. சுபம், அசுபம்- நன்மை, தீமை, என்று பலன் களைத் தரும் எனும் பொழுது, காலம் முன்னும் பின்னும், பக்கங்களிலும் நம்மைத் தொடர்ந்து வருகிறது.  உன் அழகிய முகத்தில் இந்த கண்ணிர்   தேவையேயில்லை. போதும் வருந்தியது. சொல்லு, பூமியின் எந்த இடத்தில் வசிக்க விரும்புகிறாய்?  உன் இருப்பினாலேயே அந்த இடம் மங்களமாக அனைத்து வசதிகளையும் உடையதாக ஆகி விடும். எந்த புண்ய பூமி காத்திருக்கிறது உன் பாதங்கள் பட, அதைச் சொல். எந்த நீர் நிலைகளை பவித்திரமாக ஆக்கப் போகிறாய்? எந்த தபோ வனங்கள் உனக்கு பழங்களையும், மலர்களையும் அளித்து, தங்கள்  பிறவிப் பயனை பெறப் போகின்றன. 

எந்த இடமானாலும் உன் சகிகள், வந்து சேர்ந்து கொள்வார்கள்.  நீயே தான் உன் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். தைரியமாக, இன்றே உறுதி எடுத்துக் கொள். மனதால், சொல்லால், உடலால், அனைத்து கல்விகளுக்கும் ஆதாரமான இறைவன், அனைத்து நன்மைகளையும் செய்பவன், போகங்களையும் அவர்  மூவுலக நாயகன், திரயம்பகன், லோக குருவானவர்  தேவ தேவன்- அவரை வணங்கி விட்டு புறப்படு.  சீக்கிரமே, இந்த சாபத்திலிருந்து விடு படுவாய்.  

தன்னை புரிந்து கொண்டவள், பிரிய சகியான சாவித்திரி சொன்ன இந்த சமாதான வார்த்தைகளால், சரஸ்வதி மனம் தெளிந்தாள். “பிரிய சகி, உன் சொற்களால் என்னை மகிழ்வித்து விட்டாய். இனி எந்த துக்கமும் என்னை வாட்டாமல் என்னை காத்துக் கொள்கிறேன். உனக்குத்  தான் தெரியும், எந்த விதமான இடம் நமக்கு நல்லது என்பது.  வழக்கம் போல, நமது யோக சாதனைகளைச் செய்வோம்.  

சொல்லிக் கொண்டே பூமியில் இறங்கியவர்களை  இரவு நேரத்தின் இருள் அணைத்துக்  கொண்டது..  

(வளரும்)

பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்

ஹர்ஷ சரித்திரம்- 2

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.