துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்

கார்லோ ரொவெல்லி எழுதிய Reality is not what it seems நூலின் மொழியாக்கம்.

முன்னுரை:  கரையோர உலாவல்

 நம்மைப் பற்றிய மிதமிஞ்சிய விருப்புடனே எப்போதும் இருக்கிறோம். நமது தத்துவம்,நமது வரலாறு, நமது உளவியல், நமது கடவுள்கள் என்றே கற்கிறோம். பிரபஞ்சத்தின் மையமே மனிதன் தான் என நினைக்குமளவு நமது பெரும்பாலான அறிதல்கள் அவனைப் பற்றியதே. மூடிக்கிடக்கும் அறையில் இளந்தென்றல் வீசுவது போல  நமது பார்வையை விரிவாக்கும் சாளரத்தை கொண்டிருப்பதாலேயே இயற்பியலை நான் விரும்புகிறேன். 

இந்த சாளரத்திற்கு வெளியே தொடர் ஆச்சரியங்களை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். பிரபஞ்சத்தினைப் பற்றி நிறைய அறிந்திருக்கிறோம். நூற்றாண்டுகளின் வழியாக நம்முடைய எண்ணற்ற பிழைபுரிதல்களை கண்டுகொண்டிருக்கிறோம். பூமி தட்டையானது மற்றும் பிரபஞ்சத்தின் மையம் எனவும் பிரபஞ்சம் மாறாத சிறிய ஒன்று எனவும் நினைத்திருந்தோம். பிற உயிரினங்களிடமிருந்து தனித்த இனமே மனிதன் என நினைத்திருந்தோம்.  நமது ஒவ்வொரு உயிரணுக்களின் அசாதாரணமான மூலக்கூறு அமைப்புக்கள், ஒளித்துகள்கள், அலைவெளிகள் (waves of space), கருந்துளைகள், குவார்க்குகளின் இருப்பு போன்றவைகளையும் கற்றிருக்கிறோம்.  உலகம் தனது துயிலறை மற்றும் விளையாட்டு அரங்கில் மட்டுமல்லாது பலகோடி மடங்கு பெரியது எனவும், அறிந்து கொள்ள வேண்டிய ஆயிரக்கணக்கான விஷயங்கள் மற்றும் புதிய சிந்தனைகள் உள்ளன என்பதையும் பெரும் ஆச்சரியத்துடனும் உவகையுடனும் கண்டுகொள்ளும் ஒரு குழந்தையின் இடத்தில் மனித இனம் இருக்கிறது. எல்லையற்ற பலவடிவ பிரபஞ்சம் குறித்த புதிய கூற்றுகளில் திகைத்து விடுகிறோம். அதன் விரிவையும் அழகையும் எளிமையையும் இந்த அறிதலின் வழியே கண்டு பிரமித்து விடுகிறோம்.  

ஆனால், நமக்கு தெரியாதது, தெரிந்ததை விட பலமடங்கு அதிகம் என்பதையும் காண்கிறோம். தொலைநோக்கிகளின் அறிதிறன் வழியே எதிர்பாராத புதிய புவனங்களைக் நோக்குகிறோம். பொருட்களின் நுண்மையை நோக்கி நகர நகர அவற்றின் அபாரமான கட்டமைப்பினை அறிகிறோம். விண்மீன் மண்டலங்கள்(Galaxies) தோன்றிய, ஆயிரத்து நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பெருவெடிப்பு நிகழ்வு வரை கிட்டத்தட்ட நெருங்கினாலும், அதற்கு முன் உள்ள ஏதோ ஒன்றின் தீற்றலை அறிகிறோம். வெளி(Space) வளைவானது என தெரிந்திருந்தாலும் அது அதிரும் துளிமக் கூலங்களால் (Quantum Grains) நெய்யப்பட்டுள்ளது என்பதையும் முன்னறிகிறோம். 

பிரபஞ்சம் குறித்தான நம்முடைய அடிப்படை இலக்கண அறிவு தொடர்ந்து வளர்கிறது. புறவுலகம் குறித்தான இந்த இருபதாம் நூற்றாண்டின் அறிதல், கல்விக்கூடங்களில் நாம் கற்பிப்பதை விட தடங்காணாவியலாத முற்றிலும் புதிய ஒன்றை நோக்கிய தடயத்தினை அளிக்கிறது. காலமும் இடமும் இல்லாத, துளிம நிகழ்வுகளின்(Quantum Events) திரளாலான பிரபஞ்சத்தின் அடிப்படை கட்டமைப்பை வெளிக்கொணர்கிறோம்.  நிகழ்வுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்துடன் இடம், காலம், பொருள் மற்றும் ஒளியை  துளிம புலங்கள் (Quantum Fields) வரைந்தெடுக்கின்றன.  நிகழ்தகவு சாத்தியங்களின் இயக்க அடிப்படையிலான நுண் நிகழ்வுகளின் வலைப்பின்னலே நிதர்சனம் (Reality).  நிகழ்வுகளுக்கு இடையே சாத்தியக்கூறுகளின் தொகையில் காலம், ஆற்றல், பொருள் மற்றும் வெளி ஆகியவை அமிழ்ந்துள்ளன.

 இருபதாம் நூற்றாண்டின் மிகமுக்கிய கண்டுபிடிப்புகளாகிய துளிம மற்றும் பொது சார்பு (General Relativity) கொள்கைகளின் இணைப்பில் தொடங்கியுள்ளதும், அடிப்படை இயற்பியலின் விடையற்ற ஆதார கேள்விகள் ஒன்றின் தேடலில் இருந்தும் பிரபஞ்சம் குறித்தான புதிய அறிதல் மெதுவாக வெளிவருகிறது – துளிம ஈர்ப்பியல்(Quantum Gravity). அதற்கும் அதன் ஆய்வுகள் வெளிப்படுத்தும் புதிய உலகத்திற்கும் இந்நூல் சமர்ப்பிக்கப்படுகிறது.

பொருட்களின் அடிப்படை இயல்புகள் குறித்து நாம் என்ன அறிகிறோம், ஏற்கனவே நாம் அறிந்தது என்ன, அறிதலைத் துவங்கியதாக தோன்றுவது எது என்பதான தொடர் ஆய்வு ஒன்றின் நேர்காட்சியே இந்நூல். பிரபஞ்சம் குறித்தான இன்றைய  அடிப்படை கருதுகோள்களின் ஆதிகால  துவக்கத்தில் ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டின் பெரும் கண்டறிதல்களான பொதுச் சார்புக் கொள்கை மற்றும் துளிம இயக்கவியலை (Quantum Mechanics) அதன் மையத்தில் வைத்து அறிவதுடன் இந்நூல் தொடங்குகிறது.  ப்ளாங்க் செயற்கைக்கோள் உறுதிசெய்த அண்டவியல் பொது மாதிரிக் கொள்கை மற்றும் பலரும் எதிர்பார்த்த அதிசீர்மைத் துகள்களை(Super Symmetric) கண்டறிவதில் செர்ன்(CERN) தோல்வியுற்றது ஈடாக , இயற்கை அளித்த தடயங்களிலிருந்தும் துளிம ஈர்ப்பியல் ஆய்வுகளிலிருந்தும் பிரபஞ்சம் குறித்த சித்திரத்தை இந்நூல் கூறுகிறது. வெளியின் நுண் கட்டமைப்பு, நுண் அலகுகளில் காலத்தின் இன்மை, பெருவெடிப்பின் இயக்கவியல், கருந்துளை வெப்பத்தின் மூலம் போன்ற கருதுகோள்களின் பின்விளைவுகளைப் பற்றியும் பேசுகிறது. 

இருட்குகையின் ஆழத்தில் பிணைக்கப்பட்டுள்ள, பின்னால் உள்ள தீப்பந்தம் உருவாக்கும் நிழல்களை மட்டுமே காணக்கூடிய சிலரைப் பற்றி குடியரசு நூலின் ஏழாம் பகுதியில், பிளேட்டோவின் புகழ்பெற்ற தொன்மம் உண்டு. அவர்களின் நிதர்சனம் அதுவே. அவர்களுள் ஒருவர் தனது பிணைகளை அறுத்து, குகையிலிருந்து வெளிவந்து சூரிய ஒளியையும் பரந்த உலகையும் கண்டறிந்தார். முதல் பார்வைக்கு அதிர்ச்சியும் குழப்பமும் கொண்டிருந்தாலும் பிறகு தெளிவாக காண முடிந்ததும் தன் சகாக்களிடம் தான் கண்டதைப் பற்றி கூறினார். அவர்களால் நம்ப இயலவில்லை. 

குகையின் ஆழத்தில் அறியாமை, முன் முடிவுகள், பலவீனமான அறிதல்கள் என்னும் தளைகளால் நாமும் கட்டப்பட்டுள்ளோம். பழக்கமின்மையின் காரணமாக முன்நோக்கினால் குழப்பமடைகிறோம், ஆனாலும் முயல்கிறோம். அறிவியல் என்பது இதுவே. பிரபஞ்சம் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து மறுவரையறை செய்தும், தொடர்ந்து சிறந்த கொள்கைகளை அளிப்பதும் ,  நம்முடைய சிந்தனை முறையில் தொடர் மேம்படுத்தலையும் அறிவியல் சிந்தனை செய்கிறது. சிந்தனை முறைகளில் புதிய வழிகளை கண்டறிவதே அறிவியல். அதன் பலம் தீர்க்கதரிசனத்துடன் முன்முடிவுகளை தகர்ப்பதும், நிதர்சனத்தின் புதிய பகுதிகளை வெளிக்கொணர்வதும், பிரபஞ்சம் குறித்த புதிய தீர்க்கமான சித்திரங்களை உருவாக்குவதிலும் இருக்கிறது. மேற்சொன்ன சாதனைகள் இதுவரையிலான முழு கடந்தகால அறிதல்களை மையப்படுத்தியதே  என்றாலும் தொடர்மாற்றத்தை அதன் மையத்தில் கொண்டிருக்கிறது.  எல்லையற்றதும் பார்வைக்கேற்ப பல்நிலைகளை காட்டக்கூடிய இந்த பிரபஞ்சத்தினை காணவே விரும்புகிறோம். இன்னமும் கண்டறியப்பட வேண்டிய கரைகாணா பகுதிகளைக் கொண்டிருக்கும் அதன் வசீகரத்திலும் மர்மத்திலும் ஆழ்ந்திருக்கிறோம். நமது நிலையற்ற அரைகுறை அறிதல்களும், ஊசலாடும் தன்மையும், இதுவரை அறியாதவற்றின் பெரும் பிலமும் நமது வாழ்வை பொருளற்றதாக்குவதில்லை- மாறாக மதிப்பும் ஆர்வமூட்டும் ஒன்றாகவும் மாற்றுகின்றன. 

 மேற்சொன்ன சாகசம் எனக்கு எவ்வாறு பொருள்படுகிறது என்பதை கூறவே இந்நூலை எழுதினேன்.  பிரபஞ்சத்தின் அடிப்படைக் கட்டமைப்பு குறித்தான  இதுவரை கண்டறியப்பட்டவை மற்றும் கண்டறியப்படாதவற்றின் தேடலில் ஆர்வமுடைய, இயற்பியல் குறித்து மிகச்சிறிய அல்லது முற்றிலும் அறிமுகம் இல்லாத பொது வாசகர்களை மனதில் வைத்தும்,  நாம் காணும் நிதர்சனத்தின் பெருங்காட்சியின் பேரழகினை எடுத்துக்கூறவும் எழுதினேன்.

அறிவியலில் ஆர்வத்துடன் தனது பயணத்தை துவக்கவிருக்கும் இளைஞர்/இளைஞிகளுக்காகவும், எனது சக பயணிகளுக்காகவும் எழுதினேன்.  சார்பியல் மற்றும் துளிம இயற்பியலின் இரட்டை ஒளியில் விளங்கும் புறவுலக கட்டமைப்பின் பொது சித்திரங்களை விளக்கி அவற்றை எவ்வாறு இணைக்கலாம் எனக் காட்ட விழைகிறேன். இந்நூல் வெறும் மறைவெளிப்பாடு மட்டுமல்ல, பிரபஞ்சம் குறித்தான பருந்துப் பார்வையை குழப்பும் துறை மொழியின் கருத்தாக்கத்தினை எடுத்துக்கூறவும் முயல்கிறது. பரிசோதனைகள், முன் ஊகங்கள், சமன்பாடுகள், கணிப்புகள் மற்றும் நீண்ட விவாதங்களால் ஆனதே அறிவியல். ஆயினும் இசைக் கருவிகளைப் போன்று அவை வெறும் கருவிகளே.  எவ்வாறு இசையில் இறுதியாக பொருட்படுத்தத்தக்கது இசையாக மட்டுமே உள்ளதோ, அறிவியல் அளிக்கும் பிரபஞ்ச சித்திரமே இறுதியாக பொருட்படுத்தத்தக்கது. பூமி சூரியனை வலம் வருவதான கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை அறிய‌ கோப்பர்நிக்கஸின் சிக்கலான கணிப்புகளை முழுதும் கற்க வேண்டிய அவசியமில்லை.  பொது மூதாதையர் என்னும் கண்டுபிடிப்பின் அவசியத்தை உணர டார்வினின் நூலிலுள்ள சிக்கலான வாதகதிகளை முழுதும் பின்தொடர வேண்டியதில்லை. தொடர்ந்து விரிவடையும் பார்வையில் பிரபஞ்சத்தினை வாசிப்பதே அறிவியலின் வழி.

பிரபஞ்சத்திற்கான ஒரு புதிய சித்திரத்தின் தேடல் குறித்த எனது புரிதல்களை  இங்கு அளித்துள்ளேன். ஒரு கோடைக்கால மாலையில், கடற்கரை நடையில், “சரி, பொருட்களின் உண்மை இயல்பு தான் என்ன?” என்ற எனது சகா ஒருவரது கேள்விக்கான விடையே இந்நூல். 

Reality Is Not What It Seems: The Journey to Quantum Gravity 

by Carlo Rovelli (Author), Simon Carnell (Translator), Erica Segre (Translator)

Publisher: ‎ Riverhead Books; Reprint edition (January 23, 2018)

Language: ‎ English

Paperback: ‎ 288 pages

ISBN-10: ‎ 0735213933

ISBN-13: ‎ 978-0735213937

துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்

வேர்கள்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

5 Replies to “துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்”

Leave a Reply to Bhanumathi NCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.