பகரம்

‘ஒரே வெளிச்சம்…சோ பிரைட்…ஆனா கண்ணு கூசலை.’

‘நீ எங்கம்மா இருக்க’

‘வீட்டுக்கு வெளிய, அதோ அங்க வினு இருக்கானே’

‘வினு யாரு’ சுமந்த் தன் கண்ணாடியைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார் 

‘ஸ்ட்ரே…அப்பப்ப பிஸ்கட் ஏதாவது போடுவோம். நல்ல நாய்’ என்றாள் அம்ருதா.

‘அந்த வெளிச்சம் எங்கிருந்து வருது?’ 

‘மேல, வானத்திலிருந்து’ அவள் மேலே நோக்குவதை மூடியிருந்த அவளது இமைகள் காண்பித்துக் கொடுத்தன.

‘ஓகே. வெளிச்சதுக்குள்ள ஏதாவது தெரியுதா’ 

‘இல்ல…ஆனா வெளிச்சத்தை சுத்தி ஒரு கருப்பு பார்டர் அதுல சின்ன சின்ன கலர் லைட்ஸ், குடை ராட்டினம் மாதிரி சுத்துது. அம்ருதாவின் குரலில் ஆச்சர்யமும் சிறிது சந்தோஷமும் துள்ளியது.

‘மனசு சந்தோஷமா இருக்கா?’ என்றார் சுமந்த் கண்ணாடியை அணிந்து கொண்டே.

‘ஆமாம், ரொம்ப ஸ்பெஷல் நாள். பாப்பாவோட அசைவு தெரியுது. சின்ன துடிப்பு’ அம்ருதாவின் இதழோரம் சற்று விரிந்து, ஒரு சிறு புன்னகை குடியேறியது. 

‘அதோட எங்களோட பத்தாவது மேரேஜ் அனிவேர்சரி. அஸ்வின் ஊர்ல இல்ல. ஆனாலும் கிப்ட் அனுப்பி இருக்கான். எனக்கும், பொறக்கப்போறதுக்கும்’ 

‘ஆ…ஹவ் நைஸ்’ என்றார் சுமந்த். அம்ருதாவின் புன்னகை மேலும் மலர்ந்து வலது கன்னத்தில் சிறு குழி தோன்றி மறைந்தது.

‘அந்த வெளிச்சத்தை இன்னும் பாத்துகிட்டு இருக்கியா அம்ருதா?’ சோபாவின் பக்கவாட்டில் வைத்திருந்த தலையணையில் கிடந்த அவளது முகம் ஆமாம் என்று அசைந்தது.  

‘ஆனா…’

‘சொல்லு அம்ருதா’

‘ஆனா…அத பாக்க கொஞ்சம் பயமா இருக்கு’

‘அப்படியா…ஏன்?’ 

சில நொடிகளுக்கு அவள் எதுவும் பேசவில்லை. நீர் குடிப்பவள் போல அவளது கண்டம் ஏறி இறங்கியது.

‘அம்ருதா, என்ன பயம்?’

‘தெரியல…ஐயோ, அந்த வெளிச்சம். என்ன மேல இழுக்குது…நான் காத்துல மிதக்கறேன்…மேல மேல. வினு…வினு ஏன் குரைக்கிறான்’. அம்ருதாவின் குரலில் பதட்டம் புரண்டோட அவளின் விரல்கள் சோபாவின் விரிப்புகளை இறுக்கின. விரல் கணுக்கள் வெளிறி, புடைத்து நின்றன. 

அறிதுயில் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல என்று சுமந்த் அடிக்கடி கூறுவார். ஆழ் இருட்டும், மேலே இருக்கும் தண்ணீரின் கனமும், நீரின் இழுப்பும், சுழலும் பல நேரங்களில் நம்மை பீதியின் விளிம்பிற்கே இட்டுச் செல்லும். அப்பொழுது ஆழ் நீச்சல் பயிற்சியாளர்கள் கூறுவதைத் தான் ஹிப்னாஸிஸ் சிகிச்சையிலும் சுமந்த் கூறுவார்.

‘ரிலாக்ஸ் அம்ருதா. நீ பத்திரமா இருக்க. உன் நினைவுகள்ள தான் இருக்க, ரிலாக்ஸ்…டோன்ட் ஸ்ட்ரகிள்…அந்த நினைவு கூட்டி போற இடங்களுக்கு போ…யூ ஆர் சேப்’ என்றார் சுமந்த். 

‘ம்…’ என்றாள் அம்ருதா. அவளின் கை விரல்கள் சற்று நெகிழ்ந்தன. 

‘இது எதோ ரூம் மாதிரி இருக்கு…சுவரெல்லாம் மெட்டல், ஸ்டீல் மாதிரி’ அம்ருதாவின் குரல் மீண்டும் ஒலித்தது.

‘அந்த அறையில வேற ஏதாவது இருக்கா?’ 

‘சரியா தெரியல…ஆனா, நான் எதுலயோ படுத்துகிட்டுருக்கேன். ஆபரேஷன் அறை மேஜை மாதிரி இருக்கு. அதுவும் மெட்டாலிக் தான். ஜில்லுனு இருக்கு. ஓ மை காட்…நான் நிர்வாணமா இருக்கேன். வெர் இஸ் மை ட்ரெஸ்’. நுங்கம்பாக்கம், கோத்தாரி சாலையில், உளவியல் மருத்துவர் சுமந்தின் அறையில், சோபாவில் படுத்துக் கொண்டிருந்த அம்ருதாவின் கரங்கள் சூடிதார் மூடிய மார்பை மறைத்துக் கொண்டன. கால்கள் அனிச்சையாக ஒன்றை ஒன்று பிணைந்துக் கொண்டன.

‘அது ஒரு நினைவு தான் ரிலாக்ஸ். நீ இருக்குற அறையில வெளிச்சம் இருக்கா மா’

‘இருக்கு. ஆனா மங்கலா இருக்கு’

‘வேற என்ன இருக்கு ரூம்ல?’ 

‘கொஞ்சம் தள்ளி ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேஜை இருக்கு. அதுல…’ அம்ருதாவின் குரலில் ஒரு சிறு நடுக்கம் தொற்றிக் கொண்டது.

‘என்ன இருக்கு…?’ சுமந்த் வினவினார்.

‘சின்னச் சின்ன இன்ஸ்ட்ருமென்ட்ஸ். ஆப்பரேஷனுக்கு யூஸ் பண்ணுவாங்களே அந்த மாதிரி. ஆனா வளைஞ்சு, நெளிஞ்சு அதோட வடிவங்கள் ரொம்ப வித்தியாசமா இருக்கு’

‘அந்தப் பொருட்களைப் பாக்கறச்சே உனக்கு என்னமா தோணுது’

‘பயம். அவங்க அந்தக் கத்தியையும், ஊசி போல இருக்கறதையும் வச்சு என் உடம்பைக் கிழி…’ அம்ருதாவின் குரல் தசை கிழிக்கப் போகும் கூர்மையை எதிர்நோக்கி, மனதைத் திடப்படுத்தி, அந்தத் திடம் உடைந்த செய்தியை ஏந்தி வந்தது. 

‘அவங்கன்னு சொன்னியே…அங்க வேற யாராவது இருக்காங்களா?’ என்றார் சுமந்த்.

சில வினாடிகள் மௌனமாக இருந்தாள் அம்ருதா.

‘இருக்காங்க. என் காலுக்கிட்ட தான் நிக்குறாங்க. ஆனா, நான் அவங்கள பாக்க பொருதில்ல’ இரவில் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து இருக்கக் கூடிய பயங்கரம் எட்டிப் பார்த்தால் உரு பெற்று விடும் என்று அஞ்சும் குழந்தையைப் போல  ஒலித்தது அம்ருதாவின் குரல். 

‘நோ ப்ராபளம். விட்டத்துல ஏதாவது இருக்கா?  விளக்கு? பேன்?

‘இல்ல. என்னோட பிம்பம் தான் தெரியுது…அய்யோ என் காலு கிட்ட..’ அம்ருதாவின் உடல் அதிர்ந்தது.

‘யாரு இருக்காங்க? தைரியமா பாரு அம்ருதா’. சுமந்த் தன இருக்கையில் சற்றே முன் நகர்ந்து தாழ்ந்த குரலில், அழுத்தமாகப் பேசினார். 

‘மூணு உருவம்’. சில வினாடிகளுக்குப் பின் அம்ருதாவின் குரல் ரகசியமாக கிசு கிசுத்தது.

‘யாரு அவங்க’

‘மனுஷங்க மாதிரி இருக்காங்க, ஆனா மனுஷங்க இல்ல’

‘ஓ…பாக்க எப்படி இருக்காங்க?’

‘குள்ளமா’

‘ஓகே. அவங்க முகம் தெரியுதா?’

‘கண்கள் ரொம்ப பெரிசா, பாதாம் பருப்பு மாதிரி. மூக்கு, வாயெல்லாம் ஒரு கோடு தான். அவங்க தல முடியெல்லாம் எதுவும் தெரியல. மொழுக்குனு, ஏதோ ரப்பர் முகமூடிய மாட்டிக்கிட்டா மாதிரி இருக்காங்க.’ கண்களாலேயே நம்ப முடியாதக் காட்சியை வர்ணிக்க முயற்சித்து தோல்வி அடைந்தவளின் சலிப்புத் தட்டியக் குரலில் கூறினாள்.

‘அப்படியா? நிக்கறாங்களா? உட்கார்ந்திருக்காங்களா?’ என்று கேட்டார் சுமந்த். புதைந்து இருக்கும் நினைவுகளைத் தோண்டி எடுத்து, வெளிச்சமூட்ட உதவும் பல கேள்விகளில் இதுவும் ஒன்று. இது போன்ற கேள்விகள் துணியின் சுருக்கங்களை கைகளால் தடவி நேராக்குவதுப் போல், முறுக்கிக் கொண்டிருக்கும் நினைவுகளை நீவி, நேர் படுத்த சுமந்த் கையாளும் யுக்தி.

‘நின்னுகிட்டு இருக்காங்க’

‘அவங்கள பத்தி வேற ஏதாவது சொல்ல முடியுமா அம்ருதா’.

‘ம்…கையெல்லாம் நீளமா இருக்கு. மூணு விரல் தான். ஆனா அது நெளிஞ்சிகிட்டே இருக்கு.’ அம்ருதாவின் நாசியும் உதடுகளும் சுளித்தன.

‘ஐ டோன்ட் லைக் தேம்’. அம்ருதா தொடர்ந்தாள். ‘என் வயத்தையே உத்து பாத்துக்கிட்டிருக்காங்க. ஒய் ஆர் தே லுக்கிங் அட் மை பேபி…’ அம்ருதாவின் கைகள்  தட்டையான அவள் வயிற்றின் மீது படர்ந்து, விரல்கள் வயிற்றில் இல்லாத ஒரு சிசுவை வேலி போட்டு அணைத்தன.  

‘கவலை படாத மா… யூ ஆர் சேப்’

இல்லை என்பது போல் அம்ருதாவின் தலை இடமும் வலமும் அசைந்தது.

‘எனக்கு ரொம்ப பயமா இருக்கு’ அடைபட்டிருந்த நினைவில் இருந்து தப்பித்து வெளியே வர முயற்சிக்கும் துடிப்புடன் சொன்னாள் அம்ருதா.

‘ரிலாக்ஸ் அம்ருதா…ஆழ்ந்து மூச்சு விடு. மெதுவா’ சுமந்தின் குரல் ஆதரவாக ஒலித்தது.

அம்ருதாவின் மார்பு மேலெழுந்து, பெருமூச்சாகி தணிந்தது.

‘தட்ஸ் இட்.  உன் காலுக்கடியில நிக்கறவங்கள நல்லா பாரு. உன் கவனத்தை அவங்க மேலேயே வை. அவங்க என்ன பண்ணறாங்க இப்ப?’ இது ஒரு விதத்தில் அறுவை சிகிச்சையே. சீயும், ரத்தமும் கொண்டு கொப்பளித்து இருக்கும் அகக் கட்டிகளை உற்றுப் பார்ப்பதால் மட்டுமே அதை அறுத்தெடுக்க முடியும் என்பது சுமந்தின் பல்லாணடு கால உளவியல் சிகிச்சை அனுபவம் கொடுத்த பாடம்.   

‘மேஜையில இருந்த பெரிய ஊசியை ஒரு உருவம் கைல வச்சிருக்கு. அத என்னோட வயத்துல…என்னோட குழந்தை.’ 

அம்ருதாவின் நினைவு அடுக்குகளில் தேங்கி இருந்த பயம், ஆற்றாமை, கோபம் எல்லாம் சேர்ந்து எரிமலை குழம்பு போல கொப்பளித்து அலறலாக வெடித்தது. 

‘என் குழந்தய எங்கிட்டேந்து எடுத்துகிட்டாங்க. அதுக்கு பதிலா வேற எதையோ உள்ள வச்சு… ஒ மை காட்…ஸ்டாப் இட் …நோ…’’

சுமந்த் தன் உள்ளங்கையால் வேர்வை பூத்திருந்த நர்மதாவின் நெற்றியைத் தடவினார்.

‘ஓகே…இட்ஸ் ஓகே. ஒன்னும் இல்ல. ரிலாக்ஸ். சுவாசத்த நல்லா இழுத்து விடு அம்ருதா’ சுமந்தின் குரல் குளிர்ந்த நீர் போல அம்ருதாவின் கொதிக்கும் அகத்தை சற்று நனைத்தது. 

‘ஓகே. பி  காம். என் குரலை கேளு அம்ருதா. கேக்குதா’     அவள் நெஞ்சுக் கூட்டில் இருந்து வந்த கேவல் இழந்ததின் வலியைச் சொல்லியது. ஆனால் அவள் தலை சுமந்த் சொல்வது புரிகிறது என்பது போல ஆடியது.

‘குட். இப்ப நான் எண்ணப் போறேன். மூணு எண்ணின உடனே. நீ தூங்கப் போற. ஓகே’ என்றார் சுமந்த். அம்ருதா மெதுவாகத் தலை அசைத்தாள். அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீர் கோடுகள் சற்றே திசை மாறின.

‘ஒண்ணு, ரெண்டு…மூணு’ சுமந்த் மெதுவாகச் சொன்னார்.

வயிற்றைப் பற்றி கொண்டிருந்த அம்ருதாவின் கைகள் சற்று துவண்டன. பீதியில் மடிந்திருந்த கால் விரல்கள் விரிந்தன. சில வினாடிகளில் அம்ருதா சீராக மூச்சு விட்டுக் கொண்டே நித்திரையில் ஆழ்ந்தாள். 

–0–

இரு உள்ளங்கைகள் அளவே நீளமும், சுருங்கியத்  தோலும், மண்டையில் ஒட்டியிருந்த முடிப் பிசுறும், அழுத்தி மூடியிருந்த சிறு விரல்களும் கொண்ட உயிரற்ற மகனின் உடலை ஆஸ்பத்திரியில் நர்ஸ் அவர்களிடம் காண்பித்த போது, ‘இது என்னோடது இல்ல’ என்று அம்ருதா முகம் திரும்பிக் கொண்டாள்.

குறைப் பிரசவத்தில் இறந்தக் குழந்தை கொடுத்த அதிர்ச்சியை விட ‘இது’ என்று உச்சரிக்கப்பட்ட வாக்கியத்தில் பூசப்பட்டிருந்த வேற்றுத்தன்மை அஸ்வினைத் தாக்கியது. உண்மையை காண மறுத்து தலையை திருப்பிக் கொண்ட அம்ருதாவின் மீது கோபம் கூட வந்தது. அது சட்டென்று உருமாறி பச்சாதாபமானது. பாவம் எவ்வளவு கனவுகள் கண்டிருப்பாள். அத்தனையும் சிறு வெள்ளைத் துணியில் முடியப்பட்டு எங்கோ எரி மூட்டப்படும். பாவம்.

ஆனால், அதன் பிறகு ஏறக்குறைய ஒரு மாதம் வரை சிசு ஒன்று இறந்துப் போன சம்பவமே நடக்காதது போல அம்ருதா சாதாரணமாகத் தான் நடந்து கொண்டாள். மதியத்திற்கு ஆலூ பராத்தா செய்யட்டுமா, புதிதாக வெளியான விஜய் படத்திற்கு போகலாமா என்று ஆழமில்லா அன்றாடத்தில் தன்னை அமிழ்திக் கொண்டாள். 

ஆனால், எல்லாம் ஒரு மாதத்திற்கு தான். தண்ணீரில் அமுக்கிய பந்து மேலெழுவது போல பிரச்சனைகள் எழும்பின.

இரவில் படுக்கையில் இருந்து எழுந்து ‘என் குழந்தை, என் குழந்தை’ என்று அரற்றியபடியே வாயில் கதவை நோக்கி ஓடுவதும். பகலில் தன் நிலை மறந்து செயதவற்றையே திருப்பிச் செய்வதும். விட்டத்தை நோக்கியவாறு பல மணி நேரம் உட்கார்ந்திருப்பதும் என்று அம்ருதாவின் செய்கைகள் முற்றிலும் மாறின. உதவிக்கு இருந்த வேலைக்காரி பயந்து வேலையில் இருந்து நின்று கொண்டாள். 

அஸ்வினின் நண்பன் ஒருவன் தான் உளவியல் மருத்துவர் சுமந்தை அறிமுகப்படுத்தி வைத்தான். என்ன? ஏது? என்று கேட்காமல் அஸ்வினோடு அவரை சந்திக்கச் சென்றாள் அம்ருதா. 

–0–

‘தூங்கிட்டு இருக்கா’ என்றார் சுமந்த்.

சோபாவில் படுத்துக் கிடந்த அம்ருதாவை தடுப்புக் கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வின். அம்ருதாவின் மார்பு சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. ஒன்றின் மேல் ஒன்றாக கைகள் இரண்டும் அவள் வயிற்றின் மேல் கிடந்தன. அவனுக்கு அவை சற்றே இறுகி இருப்பதாகத் தோன்றியது. அவளிடம் இருந்த எதையோ பிடுங்குவதைத் தடுக்க முயற்சிப்பது போல.

‘போஸ்ட் டிராமாடிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர், PTSD’. மேஜையில் சீராக அடுக்கப்பட்டிருந்த காகிதங்களை சற்றே நகர்த்தி வைத்து விட்டு சொன்னார் சுமந்த். கண்களில் கேள்வியுடன் முகத்தைத் திருப்பினான் அஸ்வின்.

‘ஒரு பெரிய அதிர்ச்சிக்கு பின்னால ஏற்படக்கூடிய ஒரு வித மன உளைச்சல் இல்ல அழுத்தம்’ என்றார் சுமந்த். அவர் முன்னால் இருந்த மேஜையின் ஓரத்தில் வளைந்த இரு கம்பிகள் இடையே ஐந்து குமிழிகள் நூலில் தொங்கிக் கொண்டிருந்தன. நடுவில் இருக்கும் மூன்றும் அசையாமல் இருக்க இரு முனைகளில் இருந்த குமிழ்கள் மட்டும் பக்கவாட்டில் பெண்டுலம் போல ஆடியபடியே இருந்தன. ஆடும் இரு குமிழிகளும் தீண்டாமலேயே ஒன்றை ஒன்று தள்ளி விட்டுக் கொண்டிருந்தன.

‘என் குழந்தை போனது எனக்கும் அதிர்ச்சி தான், பட் நான்…’ என்று இழுத்தான் அஸ்வின்.

‘ஒருத்தொருத்தரும் அவங்க வழியில அதை எதிர் கொள்வாங்க. நீங்க ப்ராபப்லி உங்க வேலைல இன்னும் கொஞ்சம் மூழ்கிருக்கலாம்’. உண்மை தான் என்று நினைத்துக் கொண்டான் அஸ்வின். கடந்த சில மாதங்களாக எளிதாகத் தவிர்த்திருக்கக் கூடிய அலுவல் நிமித்தமான வெளியூர் பயணங்களை வேண்டுமென்றே தன் தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டான். பிறக்கப் போகும் பிள்ளையைப் பற்றி கனிந்த கனவுகள் தூலப் பொருட்களாக அங்கங்கே வீற்றிருக்கும் வீட்டை விட்டு, அவ்வப்போது வெகு தூரம் விலகி இருப்பது, அதிர்ச்சியை அவன் அறியாமலேயே அவன் எதிர் கொள்ளும் மார்க்கம் தானோ என்று இப்பொழுது தோன்றியது அஸ்வினுக்கு.

‘அம்ருதாவை பொறுத்த வரை ஷி பில்ட் எ ஸ்டோரி இன் ஹேர் மைண்ட்’ என்றார் சுமந்த். அவருக்கு பின்னால் சுவற்றில் அவர் பெற்ற பட்டம் கண்ணாடி சட்டகத்திற்குள் பொதிந்திருந்தது. பட்டத்தில் பொறிக்கப்பட்டிருந்த கொடியும், கேடயமும் ஏதோ வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து அவர் அதை பெற்றார் என்றது. 

‘கதையா?’ என்றான் அஸ்வின்.

‘ஆமாம் அவளோட ஆழ் மனது உருவாக்கின ஒரு கதை. உங்க திருமண ஆண்டு விழாவுல, நீங்க ஊருல இல்லாத போது, அவள் கடத்தப்பட்டு, அவளோட நிஜக் குழந்தை அவளிடம் இருந்து எடுக்கப்பட்டு அதுக்கு பதிலா வேறேதோ ஒன்று அவள் கருப்பையில் பொருத்தப்பட்டு விட்டதா அம்ருதா நம்பறா’

‘வாட்…அது எப்படி சாத்தியம்’  என்றான் அஸ்வின்.

‘கதை தானே. அது ஒரு போலியான நினைவு. அது தான் அவளோட இழப்பை  சமாளிக்க அவள் மனம் கையாண்ட யுக்தி’ 

‘என்கிட்டே அத பத்தி அவ ஒண்ணுமே சொல்லலியே’ என்றான் அஸ்வின் சற்று மிரட்சியுடன்.

‘ஏன்னா அதை பத்தி அம்ருதாவுக்கே தெரியாது. அந்த நினைவை மனத்தோட ஆழத்துல புதைச்சு வெச்சுட்டா. அவளுக்கே தெரியாம அது சில சமயம் வெளிய வரும் போது தான்…ட்ரபிள்ஸ் பிகின்’. மேஜையின் மேல் இரு பக்கமும் மத்தளம் போல அடி  வாங்கிக் கொண்டு அசையாமல் இருக்கும் மூன்று குமிழிகள் அவ்வப்போது ஆட்டம் கண்டு விடுமோ என்று சம்பந்தம் இல்லாத ஒரு எண்ணம் அஸ்வின் மனதில் தோன்றி மறைந்தது. 

‘அப்ப நீங்க அவளுக்கு பண்ண தெரபி அந்த ஆழமான நினைவை தோண்டி எடுக்கவா?’

‘ஆமாம். அம்ருதா உருவாக்கின பாத்திரங்களை அவளே பாக்கணும். அவளோட புற மனம் அந்த நினைவை அலசினா தான் அத்தோட போலித்தன்மை அவளுக்கு புரியும். அண்ட் தட் இஸ் தி வே ஷி வில் ஹீல்’ என்றார் சுமந்த் புன்னகையுடன்.

‘அவளுக்கு சரி ஆகிடுமா’ அஸ்வின் குரல் கரகரத்தது. கண்களில் நீர் முட்டி தளும்புவதை உதட்டைக் கடித்து தடுத்துக் கொண்டான்.

‘இன்னும் ரெண்டு மூணு செஷன் தான். ஷி வில் பி பைன்’ அஸ்வினின் கரத்தை ஆதரவாகத் தட்டினார்.

‘அவளை யார் கடத்தினாங்கன்னு சொல்றா டாக்டர்’ அஸ்வின் நாற்காலியில் இருந்து எழுந்து கொண்டே கேட்டான். 

‘ஏலியன்ஸ், வேற்று கிரக வாசிகள்’ இறுக்கமான முகத்துடன் சொல்லி விட்டு அதிர்ந்து நின்ற அஸ்வினைப் பார்த்து சத்தமாக சிரித்தார்.

‘அவளோட கற்பனைபா அது…டோன்ட் ஒரி’ என்றார் சுமந்த்.

–0–

சில மாதங்களுக்குப் பிறகு ஒரு இரவு வீட்டுக் கணினியை நோண்டிக் கொண்டிருந்த போது தான் வீட்டிற்கு வெளியே அமைத்திருந்த CCTV படக் கருவியின் பதிவுகள் இயந்திரத்தின் நினைவகத்தை பெரும் அளவுக்கு நிறைத்திருந்ததைக் கண்டான் அஸ்வின். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பக்கத்து வீட்டில் திருடு போனவுடன் அம்ருதா நிர்பந்தித்து வெளியே வாயில் கதவுக்கு அருகே அமைக்கப்பட்ட கருவி அது. கணினியில் அதன் காட்சிகள் தானாக தரவிறக்கம் ஆகி விடும். மாதம் வாரியாக மஞ்சள் கோப்புகளில் காட்சிகள் அடைக்கப்பட்டுக்  கிடக்கும். அஸ்வின் கோப்புகளை ஒன்றொன்றாய் அழிக்கத் தொடங்கிய போது தான் சில மாதங்களுக்கு முன் டாக்டர் சுமந்த் அவனிடம் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அம்ருதா இப்பொழுது நலமாகத் தான் இருக்கிறாள். என்றாலும்…

‘உங்க திருமண ஆண்டு விழாவுல, நீங்க ஊருல இல்லாத போது, அவள் கடத்தப்பட்டு…’ சுமந்தின் குரல் மாதங்கள் கடந்து அவன் நினைவை சீண்டியது.

ஆகஸ்ட் மாதக் கோப்பை சுட்டியால் தொட்டுக் காட்சிகளை ஓடவிட்டான். 2 ஆம் தேதி தான் அவன் திருமண ஆண்டு விழா. காட்சியின் வேகத்தை மட்டுப்படுத்தினான். 

புதிதாக ஒன்றும் தோன்றவில்லை. பால்காரன், குப்பை சேகரிப்பவன், வீட்டிற்கு வேலை செய்ய வருபவள் என்று அன்றாட காட்சிகள் கருப்பு வெள்ளையில் மெளனமாக நகர்ந்தன. இரவின் கரும் பச்சை நிறம் காட்சிகளில் படர்ந்தது. முட்டாள்தனம். ஒன்றும் இல்லை என்று காட்சியை நிறுத்தி அழிக்க முற்பட்டபோது தான் வீட்டின் வாயில் கதவு திறந்து கொண்டது. நேரம் 23:52 என்று திரையின் அடியில் எண்கள் மிளிர்ந்துக் கொண்டிருந்தன. அம்ருதா வெளியே வந்தாள். நயிட்டி உடையில் அவளின் கர்ப்பம் தனித்துத் தெரிந்தது. தாழ்வாரத்தின் இரு படிகளைக் கடந்து கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் நடையில் தூக்கத்தில் நடக்கும் போது உள்ள இறுக்கம் தெரிந்தது. வினு வாலை குழைத்தபடியே அவள் அருகில் வந்தது. அதன் கண்கள் சிறு மின்சார விளக்குகளைப் போல இரவில் மின்னின. எப்போது அந்த நாயைப் பார்த்தாலும் அதன் முதுகை வாஞ்சையாகத் தடவுவாள் அம்ருதா. அந்த இரவு அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. 

திடீரென்று வினு நின்று, பதுங்கிப் பாய்வதற்கு தயாராகுவது போல கால்களை மடக்கியது. அதன் உதடுகள் உள்ளிழுக்கப்பட்டு பற்கள் வெளியே தெரிந்தன. அதன் பார்வை காம்பௌண்ட் சுவற்றில் உள்ள கேட்டிற்கு  மேலே பதிந்திருந்தது. 23:53 என்று திரையின் அடியில் எண்கள் மாறின. அம்ருதா கேட்டை நோக்கி நடந்தாள். வினு சத்தமில்லாமல் குரைத்துக் கொண்டிருந்தது. அம்ருதாவிற்கு அந்த குறைப்பு காதில் விழுந்தது போலவே தெரியவில்லை. சில வினாடிகளில் பளீர் என்ற வெளிச்சம் திரையில் படர்ந்து காட்சிகள் மறைந்தன. மீண்டும் காட்சிகள் தொடங்கிய பொழுது அம்ருதா அங்கில்லை. அவள் நின்றிருந்த இடத்தை வினு முகர்ந்து கொண்டே சுற்றி வந்தது. 23;54 என்று நேரத்தைக் காட்டியது திரை.

அஸ்வின் திரையில் இருந்து கண்களை விலக்கி ஜன்னல் வெளியே பார்த்தான். வானில் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன.      


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.