கவி பாஸன் எழுதிய ஸ்வப்ன வாசவ தத்தா – 2

This entry is part 1 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

கஞ்சுகி : ஆபீரக! ஆபீரக! அரசர் மகாசேனர் வாசல் காவல் காப்பவனிடம்  சொல்லச் சொன்னார்.  அவரே சொன்னதாகச் சொல்லு. ஜைவந்தி என்ற மகா புருஷர் வருகிறார்.  ஏதோ வழக்கமாக வரும் தூதர் போல நினைக்காமல் மரியாதையாக அழைத்து வரச் சொன்னார்.   விருந்தோம்பல்கள் குறைவற செய்யுங்கள்.  இது போல தினந்தோறும் ஒருவர் வருகிறார்.  நமது இளவரசியை பெண் கேட்டு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.  தானாக வராமல்   யாரோ ஒருவரை தூது அனுப்புகிறார்கள் . மகா சேனர் மனதில் என்ன நினைத்திருக்கிறாரோ, யாருக்குத் தெரியும்? வந்தவர்களை உபசரித்து திருப்பி அனுப்பி விடுகிறார்.  

காட்சி மாறுகிறது

பரிவாரம் ஸூழ அரசன் மகாசேனன் வருகிறார்

என் மகளை பெண் கேட்டு வரும் இந்த அரசர்கள் காலில் விழுந்து வணங்க  கூட தயாராக இருக்கிறார்கள். ஏனோ அதில் என் மனம் மகிழ்வதில்லை. வத்ஸராஜன் வருவதைத் தான் எதிர் நோக்கி இருக்கிறேன். குணவான், யானைகளின் பரி பாஷை அறிந்தவன், அறிவுள்ளவன். அவன் தான் எனக்கு மருமகனாக ஆக தகுதியுடையவன்.  உரக்க: பாதராயணா!

கஞ்சுகி:   ஜயது மகாசேன ராஜா !

மகாசேன ராஜா: ஜைவந்தி வந்திருப்பதாகச் சொன்னார்களே, அவரை அழைத்து வா. 

பாதராயணர்: வந்து விட்டார். அவருக்கான வசதிகளைச் செய்து கொடுத்து விட்டோம். 

அரசர்: நல்லது. அதிதிகளை அவர்களின் தகுதிக்கேற்ப உபசாரம் செய்வது தான் நியாயமானது. இது வரை வந்தவர்கள் பெண் கேட்டு வருகிறார்கள், நாம் ஏதோ காரணம் சொல்லி தட்டிக் கழிக்கிறோம்.  அது சரி, பாதராயணா! ஏதோ சொல்ல வந்தாயே. 

பாதராயணர்: ஒன்றும் இல்லை. நம் இளவரசிக்கு ஏற்ற வரன் பற்றி ஒரு விஷயம்.

அரசர்: ஏன் யோசிக்கிறாய், சொல்லு.

பாதரயணர்: அரசரின் மனதில் என்ன இருக்கிறது என்பது புரியவில்லை.  நிறைய வல்லரசுகளிடம் இருந்து கூட தூது வந்துள்ளது. அரசர் திருப்பி அனுப்புகிறார். என்ன காரணம்? 

அரசர்: என் மகள் அழகும், நற்குணங்களும் உடையவள். யாருமே அதற்கு ஏற்ற குணங்கள் உடைய வரனாக எனக்கு தெரியவில்லை.  எனக்குத் தான் அதிக ஆசையா? அல்லது நற்குணங்கள் நிறைந்த அரச குமாரனே, இல்லையா?  வாசவதத்தாவிடம் உள்ள பாசம் கண்களை மறைக்கிறதா? அவளுக்கு தகுந்த குணவானாக யாரையுமே என் மனம் ஏற்கவில்லையே. என் செய்வேன்? முதலில் நல்ல குலம் என்று தேடினேன். குணம் இல்லாமல் குலப் பெருமை மட்டும் இருப்பதை மறுத்தேன். அன்பும், பரிவும், நற்குணம் என்று மட்டும் பார்த்தால், அரசனுக்குரிய வீர்யம் இல்லை என்றால்? அதனால் மறுதளித்தேன்.  நல்ல ரூபம், ஆணழகன்  ஆனால் பெண்களை வெறுப்பவன். அவனையும் மறுத்தேன்.  சிறந்த போர் வீரன், பெண்களிடம் முரட்டுத் தனமாக நடந்து கொள்பவன் – பயனில்லை என்றேன். 

கஞ்சுகி: மகாசேன ராஜாவைத் தவிர இந்த குணங்கள் வேறு எவரிடமும் இல்லை மகாராஜா.

மகாசேன ராஜா. ம்.. அதனால் தான் யோசனை: தந்தைக்கு தன் மகளை உரிய இடத்தில் கொடுக்க நிறைய யோசிக்க வேண்டியுள்ளதே.   நாம் முயற்சி செய்வோம், மீதி அவள் பாக்யம் என்று தான் சொல்வோம்.  அது தானே நடை முறை. என்னை விட தாய் மார்கள் அதிக ஆவலுடன், பல விதமான எதிர் பார்ப்புகளுடன் இருக்கிறார்கள். அவள் தாயாரை அழைத்து வா. 

கஞ்சுகி: ஆணை, அரசே. (போகிறாள்)

மகாசேன ராஜா:  நமது ஆலோசகரான அந்தணர் சாலங்காயனை அனுப்பியிருந்தேன்.   (தனக்குள்-காசிக்கு ஏதோ காரியமாக செல்கிறார் என்ற காரணம் சொன்னேன். உண்மையில் வத்ஸ தேசத்து அரசனை, அழைத்து வரச் சொல்லி அனுப்பியிருந்தேன்.) உரக்க:  வந்தாரா?  இதுவரை எந்த செய்தியும் வரவில்லையா?  சபையில் யாரிடமும் சொல்லவில்லை. அவர் போன காரியம் வெற்றியாக ஆக வேண்டும் என்று நான் மனதில் வேண்டிக் கொண்டிருக்கிறேன். 

மகாராணி தன் பரிவாரங்களுடன் வருகிறாள்.

தேவி: ஜயது ராஜா மாகாசேனர்! 

அரசர்: வா, உட்கார்.  வாசவதத்தா எங்கே?

தேவி: அவளுடைய வீணை ஆசிரியை உத்தரா ஏதோ நாரத வீணா என்றும் அதை சொல்லிக் கொடுக்க ஏற்ற ஒருவரிடம் அழைத்து போகிறேன் என்றாள்.  அது மஹதி என்ற விசேஷமான வீணையாம். 

ராஜா: ஆமாம்,அவளுக்கு வீணையில் தேர்ச்சி பெற ஆசை. இருக்கட்டும். குழந்தைக்கு பிடித்ததைச் செய்யட்டும். 

தேவி: மகா சேன ராஜா ஏதோ சொல்ல விரும்பியதாக தோன்றுகிறது

ராஜா: சொல்லத்தான் அழைத்தேன்.  

தேவி: எதற்கு வீணை ஆசிரியரை தேட வேண்டும் என்றா?

ராஜா: அதில்லை. மகள் வளர்ந்து விட்டாள். தகுந்த பதியை தேட வேண்டாமா?

தேவி: இந்த புது ஆசிரியர் வேண்டாமா? மணமாகி அனுப்பத்தான் வேண்டும் என்றாலும், அவளைப் பிரிய வேண்டியிருக்குமே என்பதால் நான் அதை எண்ணிப் பார்ப்பதேயில்லை.

ராஜா: காசியிலிருந்து ஜைவந்தி என்பவர் வந்திருக்கிறார். அவர் கொண்டு வந்த செய்தி நல்லதாக  இருக்கும் என்று என் உள் மனம் சொல்கிறது. தகுந்த வரனை கண்டு கொண்டு விட்டோம் என்பதாக ஒரு நம்பிக்கை.  நம் மகளும் புகுந்த வீட்டிற்கு செல்வாள்.   மகளை மணம் செய்து கொடுத்து அனுப்பாமல் இருக்கிறோமே என்று ஒரு பக்கம் லஜ்ஜை, மற்றொரு மனம் ஆ அனுப்புவதாவது என்று வருத்தம். ஒன்று தர்மம் மற்றது பாசம். 

பெற்றோர் மகள் விஷயத்தில் இந்த தர்ம சங்கடத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

தேவி: எதற்கு கவலைப் படவேண்டும்? நம் மகள் சந்தோஷமாக சௌக்யமாக இருக்க வேண்டும்.  நல்ல  துணைவனாக, குணவானான முற்றிலும் தகுதியான  மணமகனையே தேர்ந்தெடுப்போம்.

ராஜா: தேவி! மகத, காசி, வங்க, சௌராஷ்டிர, மிதிலா, ஸூரசேனர் என்று அரசர்களிடமிருந்து பெண் கேட்டு வேண்டுகோள் வந்துள்ளது.  விசாரித்து பார்த்ததில் எதுவுமே எனக்கு மனதுக்குகந்ததாக இல்லை. வத்ஸ ராஜன் என்றவர், 

திடுமென கஞ்சுகி நுழைவதைப் பார்த்து, மேற் கொண்டு சொல்ல வந்ததைச் சொல்லாமல், அவளை விசாரிக்கிறார்.

கஞ்சுகி: ஜயது மகாராஜா! நல்ல விஷயம் சொல்ல வந்தேன், பதட்டத்தில் தேவியுடன் இருப்பதை கவனிக்கவில்லை.

ராஜா: நல்ல விஷயமானால் தேவியும் கேட்க கூடாதா? அமர்ந்து நிதானமாக சொல்லு.  தேவி, நீயும் கேள்

கஞ்சுகி: நீங்கள் அனுப்பிய சாலங்காயன் என்ற ஆலோசகர், வத்ஸ ராஜனை அழைத்து வருகிறார். 

ராஜா: மகிழ்ச்சியுடன், சொல்லு சொல்லு, என்ன சொன்னார். 

கஞ்சுகி: அவர் வத்ஸ ராஜனை பிடித்து விட்டார். அழைத்து வருகிறார்.

ராஜா: உதயணனையா?

கஞ்சுகி: ஆமாம்.

ராஜா: சதானீகரின் மகன்?

கஞ்சுகி: அவரே தான்.

ராஜா: சஹஸ்ரானீகரின் மகள் வழி பேரன்.

கஞ்சுகி: அவரே தான்.

ராஜா: கௌசாம்பி நகரத்து அரசன்

கஞ்சுகி: சரியாக சொன்னீர்கள். 

ராஜா: கந்தர்வ வித்தை என்ற சங்கீத கலைஞன். 

கஞ்சுகி: அப்படித்தான் சொல்கிறார்கள்.

ராஜா: வத்ஸ தேசத்து ராஜன் தானே.

கஞ்சுகி: அவரே தான், வத்ஸ ராஜன்.

ராஜா: எப்படி பிடித்தார். யௌகந்தராயன் போய் விட்டாரா? 

கஞ்சுகி: இல்லை அவர் இருக்கிறார். கௌசாம்பி நகரில். 

ராஜா: இருக்கிறாரா? அப்படியானால் வத்ஸ ராஜனை மீட்டு விடுவார். வத்ஸ ராஜனை அவர் எப்படி பாதுகாக்கிறார் என்று அறிவாயா? 

கஞ்சுகி:  மகா ராஜா, இந்த செய்தி உண்மை தான். நம்புங்கள். 

மகாசேன ராஜா: நம்பத்தான் விரும்புகிறேன்.  யௌகந்தராயனின் பாதுகாப்பில் உள்ளவன். யுத்தமோ, ராஜ கார்யமோ, அவரை மீறி எதுவும் நடக்காது. 

வந்து கொண்டே: மகாசேன  ராஜா தயவு செய்து நம்புங்கள். முதிய அந்தணன் நான். உங்களிடம் தவறாக அசத்யமான சொல்லை சொல்ல மாட்டேன். மகா சேன ராஜாவின் எதிரில் அசத்யமாக சொல்ல யாரானாலும் 

முடியுமா?  என்னை சாலங்காயனர் அனுப்பினார். தூதன் நான்.

ராஜா: அப்படியா? பிரியமான தூதன் தான். சொல்லுங்கள். 

வந்தவர்: மகா சேனர்- மா பெரும் சேனையை உடையவர் நீங்கள். உங்களால் போரில் வெற்றி பெறமுடியாததா?  ஏதோ காரணமாக ரகஸ்யமாக செய்யச் சொன்னீர்களாம். அதனால் யாருமறியாத என்னை தூதனாக அனுப்பினார் சாங்கலாயனர். இதோ வந்து கொண்டே இருக்கிறார். ரதத்தில் வத்ஸராஜனை அழைத்து வருகிறார். 

தேவி: அமைச்சர் அழைத்து வருகிறாரா? 

ராஜா:  என்ன சந்தேகம்? அவரே தான்.

தேவி: அமைச்சர் அழைத்து வருகிறார் என்பதால் மட்டும் யாரென்று அறியாமல் வாசவதத்தாவை கொடுக்க மாட்டோம்.

ராஜா:  தேவி! நேருக்கு நேர் நின்று போரில் என்னால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்.  வந்தவரிடம்-  சாலங்காயனர் எங்கிருக்கிறார். 

கஞ்சுகி: இதோ வந்து விட்டார். மாளிகை வாசலில் நிற்கிறார்.

ராஜா: பரபரப்புடன்,  அரச குமாரனுக்குரிய மரியாதைகளுடன் வத்ஸ ராஜனை முன்னிறுத்தி வாத்யங்களுடன் வரவேற்று அழைத்து வாருங்கள்.

கஞ்சுகி : அப்படியே, மகாராஜா.

ராஜா: மற்றொருவரை கூப்பிடுகிறார்.

வந்து கொண்டே, அரசே, இதோ வந்து விட்டேன், என்ன ஆணை?

ராஜா: வத்ஸ ராஜா என்னையே வெற்றி கொண்டவன் என்பதை பிரஜைகள்  அறிவார்கள்.   நேரில் காணட்டும். 

அடங்கிய சிங்கம் போல பலவான்.  ஏதோ காரியமாக நான்  சொல்லித் தான் அழைத்து வந்திருக்கிறோம் என்று அறிவியுங்கள். 

தேவி: அரசே, உங்களுடைய இந்த பரபரப்பு எனக்கே புதியதாக இருக்கிறது. எவ்வளவோ வெற்றிகள், நன்மைகளைக் கண்டிருக்கிறோம். ஆயினும் நீங்கள் இந்த அளவு மகிழ்ந்து மன பூர்வமாக அன்புடன் யாரையும் சொன்னதாக கேட்டதேயில்லையே.  

ராஜா: எனக்கே இது புதுமையாகத் தான் இருக்கிறது. இந்த வத்ஸ ராஜன் என் அன்புக்கு பாத்திரமானது போல வேறு யாரிடமும் நானே அனுபவித்தது இல்லை. 

தேவி: வத்ஸ தேசத்து அரசன் உதயணனா? 

ராஜா: ஆமாம்.

தேவி: இதற்கு முன்னும் பல அரசர்களின் தூது வந்தது.  நீங்களே முனைந்து ஆள் அனுப்பி வரவழைத்து, இது புதுமை தான்.

ராஜா: மகாசேன ராஜா யோசியாமல் செய்வானா?

தேவி: இள வயதினன், மட்டும் போதுமா? 

ராஜா: இள வயதினன். அறிவில்லாதவன் அல்ல. நல்ல பண்டிதன்.

தேவி: இப்படி உத்சாகமாக சொல்ல என்ன காரணம்?

ராஜா: இவன் பரத வம்சத்தில் வந்தவன்.  புரூரவன் தெரியுமா? பிரசித்தமான  ராஜரிஷி. வேத சாஸ்திரங்கள், இலக்கண இலக்கியங்கள் அறிந்தவர்.  ருக் வேதத்திலேயே இவரைப் பற்றி புகழ்ந்து சொல்லியிருக்கிறது. அந்த வம்சத்தில் வந்தவன் பரதன்.  புகழ் வாய்ந்த சக்ரவர்த்தியாக ஆண்டதால் இந்த தேசமே பாரதம் ஆயிற்று.  அந்த வம்சத்தில் வந்தவர்கள் பாண்டவர்கள். பஞ்சம வேதமான மகா பாரத அர்ஜுனன் மகன் அபிமன்யுவின் இருபத்தைந்தாவது சந்தானம் இந்த உதயணன்.  பரம்பரையாக வந்த  காந்தர்வ வேதம் எனும் சங்கீதம் முதலான கலைகள் அறிந்தவன். வீணை வாசிப்பதில்  நிபுணன்.  உற்ற தோழனே மதி மந்திரி. அவரிடம் முழுமையாக நம்பிக்கை உள்ளவன். அவரும் அதற்கு ஏற்றவரே. ப்ரஜைகளின் ஆத்மார்த்தமான நம்பிக்கைக்கு பாத்ரமானவன்.  ராஜ்யத்தை  நல்ல முறையில் பரி பாலிக்கிறான். போதுமா? 

தேவி: அது சரி. குலம், கலை, வயது, ரூபம், ப்ரஜைகளிடம் அன்புடையவன், என்று சொன்னீர்கள். என்ன தோஷம் என்று ரகஸ்யமாக சிறை பிடித்து கொண்டு வர காரணம்? 

தேவி: இதில் ஏன் சந்தேகப் படுகிறாய். இதோ பார்-  உலர்ந்த புல்லை அக்னி அழிப்பது போல எதிரிகளை அடக்கி என் ராஜ்யத்தை விஸ்தரித்து மகா சேனன் என்று பெயர் பெற்றேன். நமக்கு அருகில் எல்லையருகில் உள்ள நாடு வத்ஸ தேசம். அதை வெற்றி கொள்ள முடியவில்லை.   அது தான் காரணம்.  மற்ற அரசர்கள் என் சாஸனத்தை ஏற்றுக் கொண்டுள்ள இந்த சமயம் என்னை மீறியவனை என் மருமகனாக அறிவித்தால் மற்ற வல்லரசர்கள் என்ன நினைப்பார்கள்.  அவர்கள் அனைவரும் தூது அனுப்பி நம்முடன் விவாக சம்பந்தம் செய்து கொள்ள தங்கள் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்கள்.  அது தான் காரணம். 

கஞ்சுகி: ஜயது மகா ராஜா! நீங்கள் சொன்னபடியே உபசாரங்களுடன் வத்ஸ ராஜனை ஊருக்குள் அழைத்து வந்து விட்டோம். இதோ இந்த பிரசித்தமான வீணை. 

ராஜா: ஆஹா, இந்த ஜய மங்களமான வீணை வந்து விட்டதா (வீணையை கையில் வாங்கி- இது தான் கோஷவதி என்ற வீணை.  இந்த வீணை, இதை மீட்டினால் வரும் நாதம் கேட்கவே மிக இனிமையாக இருக்கும்.  இதில் தர்மவதி ராகத்தை இசைத்து கேட்க வேண்டும். இயல்பாக இதில் இருப்பது போல மற்ற வீணைகளில் வராது. கைகளால் இழைத்து செய்யப்பட்ட அலங்காரங்கள், இதன் முக பாகத்திலும், மேல் பகுதியில்  நல்ல நாதம் வரும்படி கட்டப்பட்ட தந்திகள்.  ரிஷிகளை மந்திர த்ரஷ்டார: என்பர். அவர்கள் கண் முன்னால் வேதங்களை கண்டவர்கள் என்ற பொருளில்.  அந்த மந்திர பொருளே இதன் நாதம்.  வேதமே நாத மயமானது என்பர்.  வசீகரிக்கும் இதன் நாதம் அனைவரையும் கவருவது பெரிதல்ல, பலசாலியான யானைகளைக் கூட அடக்கி விடும்.  யானைகள் இதயத்தை கவரும் என்பர். 

தன் மூத்த மகன்  கோபாலன் என்பவனைப் பற்றி சொல்கிறார். அர்த்த சாஸ்திரத்தில் பண்டிதன். ப்ருஹஸ்பதி, சுக்ராசாரியார். இவர்களுடைய ராஜ தந்திரங்களுக்கு இணையான அர்த்த சாஸ்திரம் அறிந்தவன். ஆயினும் கலைகளில் அவன் கவனம் சென்றதில்லை. அடுத்தவனும் அப்படியே. இவர்களுக்கு காந்தர்வ வேதம் என்ற சங்கீத கலை புரியாது.  இவனுக்கு மல் யுத்தமே பிரியமானது. அதற்கான பயிற்சிகளை விடாமல் செய்வான்.  இரண்டு மகன் களுமே வீணை போன்ற நளினமான வாத்யங்களின் அருமையை அறியாதவர்கள்.  இதை யாரிடம் கொடுத்தால் இதன் அருமை தெரிந்து வாசிக்கவும்,  பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் முடியும். நல்ல வேளையாக வாசவதத்தா வீணை கற்றுக் கொள்கிறாள். நன்றாக வாசிக்கிறாள்.  தன் தனயர்களுக்கு ரத்னங்களை பரிசாக கொடுப்பர். இது வீணா ரத்னம். இது என் மகளுக்கே உரியது. 

தேவி: ஆம். அவள் விரும்பி வாசிப்பாள். 

ராஜா: அப்படியானால் இதை அவளுக்கு கொடுப்போம். 

தேவி: அது இயல்பாக உள்ளது தானே. உங்கள் உத்சாகம் எனக்கு புரியவில்லை.

ராஜா: மேலும் உத்சாகமாக, வாசவதத்தா எங்கே?

பாதராயணர்: அமைச்சர் உடன் இருக்கிறாள்.

ராஜா: அப்படியா? வத்ஸ ராஜனை  அரண்மனைக்கு அழைத்து வந்து விட்டீர்களா?

பாதராயணர்: சகல உ.பசாரங்களுடன் சாய்வான ஆசனத்தில் அமரச் செய்து பல்லக்கு தூக்கிகளைக் கொண்டு தூக்கி வரச் செய்தோம். மத்திய வீட்டில் இருக்கச் செய்திருக்கிறோம். 

ராஜா: அடடா: எப்படி இந்த விஷயத்தில் கவனமின்றி இருந்து விட்டேன். வீரர்கள் உடலில் காயம் வரச் செய்து விட்டார்களா? பாத ராயணரே, காயத்துக்கு சரியான வைத்யங்கள் ஏற்பாடு செய்தீர்களா? 

கஞ்சுகி: ஆணை அரசே, போய் பார்க்கிறேன்.

ராஜா: சீக்கிரம்.

பாதராயணரே, கௌரவமாக செய்ய வேண்டிய வைத்யங்களைச் செய்யுங்கள். சொல்லும், செயலும் அவருக்கு நம்பிக்கை அளிப்பதாகவே இருக்க வேண்டும். எந்த விதமாகவும் மனம் கோணாதபடி உபசாரமாகவே, பயன் தரும் மருந்துகள், மேற் பூச்சுகள் இவற்றை பயன் படுத்துங்கள். நீடுழி வாழ்க என்று ஆசீர்வதியுங்கள்.  அரசனுக்குரிய துதி பாடல்கள், நீராட்டல் போன்றவைகளும் செய்யுங்கள்.  

கஞ்சுகி: அரசே, வழியிலேயே அவர் காயங்களுக்கு மருந்திட்டு குணமாகி விட்டார்.  உடனே வேறு வைத்யங்கள் தேவையில்லை. மத்யான்ன நேரம்.  ஸூரியன் உச்சிக்கு வந்தாயிற்று. நடுப்பகல். 

ராஜா: நல்லது.  எந்த இடத்தில் இருக்கிறார். 

கஞ்சுகி: மயூரயஷ்டி முகம் என்ற இடத்தில். (வளர்ப்பு மயில்கள் கூட்டமாக இருக்கும் இடம்) அதன் முன் பகுதியில்.

பாதராயணர்: வந்து கொண்டே, நீங்கள் விரும்பியபடி அவருக்கு இட வசதிகள் செய்து கொடுத்து விட்டோம். அமைச்சர் பரதரோஹகர் என்பவர் உங்களைக் காண விரும்புகிறார். 

மகாசேன ராஜா: அவர் தான்  இந்த யோசனையைச் சொன்னவர்.  நானே வருகிறேன்.

தேவி: இந்த சம்பந்தத்தை நிச்சயம் செய்து விட்டீர்களா?

ராஜா: இன்னும் இல்லை. ஏன்? 

தேவி: அவசரப் பட வேண்டாம். நம் மகள் இன்னும் குழந்தையே. 

ராஜா: எப்படிச் சொல்கிறாயோ, அப்படியே ஆகட்டும்.

தேவி: நான் கிளம்புகிறேன். (பரிவாரங்களோடு விடை பெறுகிறாள்.)

ராஜா:  இந்த வத்ஸ ராஜனை கர்வி என்று நினைத்தேன். அதனால் வந்த விரோதம். தற்சமயம் நான் மனம் மாறி மகளை கொடுக்கும் வரை வந்து விட்டேன். வத்ஸ ராஜன் என்ன நினைக்கிறாரோ, என் மன மாற்றம் அவருக்கு தெரிந்திருக்காது. அடி பட்டு விட்டதோ என்று துடிக்கும் அளவு என் மனதில் அவரிடத்தில் நெருக்கம் வளர்ந்து விட்டது.  மாற்று வழியில் யோசித்திருக்கலாமோ,  பலவும் யோசித்து அமைச்சர்களும் சம்மதித்து தானே செய்திருக்கிறேன். நன்மையாகவே முடியும் என நம்புவோம். 

ஸ்வப்ன வாசவதத்தா

கவிஞர் பாசனின் ஸ்வப்ன வாசவதத்தா – 1

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.