விதூஷகன் என்ற ஒரு பாத்திரம் இந்த நாடகங்களில் உரையாடல்களாக இல்லாமல் நடக்கப் போவதை அறிவிக்கும் விதமாக சொல்வது வழக்கம். விதூஷகன் என்பதை வசந்தகன் என்றும் சொல்வர். இவர்களும் ப்ராக்ருத என்ற வட்டார மொழியில் பேசுபவர்கள்.

இந்த பகுதியில் அந்த வசந்தகன், கோவிலில் தனக்கு கிடைத்த பிரசாதத்தை தேடிக் கொண்டு வருவது போல அறிமுமாகிறான். அவனும் யௌகந்தராயனின் திட்டத்துக்கு உதவுகிறான். உஜ்ஜயினியின் சில அரண்மனை பணியாளர்களைச் சந்தித்து பேசியும், அவர்கள் அறியாமலும் சில நடப்புகளை அறிந்து கொண்டு வந்து யௌகந்தராயனுக்கு தெரிவிக்கிறான். அதில் ஒன்று மகா சேன அரசனுக்கு பிரியமான பட்டத்து யானையின் பெயர் நலாகிரி என்றும், அதன் அருகில் செல்வது கடினம் என்றும் தெரிவிக்கிறான். எல்லோருமாக அந்த யானைக்கு மதம் பிடிக்க வைத்தால், மகாசேன ராஜா கண்டிப்பாக வத்ஸ ராஜன் உதயணன் உதவியை நாடுவார் என்றவரை நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆனால் பட்டத்து யானை பலத்த பாதுகாப்புடன் உள்ளது. அருகில் செல்ல என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்கள். அப்படி வத்ஸ ராஜன் தன் வீணையுடன் வந்து விட்டால், உதவிக்கு தயாராக வீரர்களையும் தயார் செய்து கொள்கிறார்கள். யானையின் மதம் அடக்கும் செயல் தொடர்ந்து அதன் மேலேயே தங்கள் வத்ஸ தேசத்துக்கு சென்று விடுவது வரை திட்டங்கள் தீட்டப் படுகின்றன.
வசந்தகன்: வினோதமான வேஷங்கள் தரித்து ஹாஸ்யமாக பேசியபடி வருகிறான்.
ஹா, என்னுடைய பையைக் காணவில்லையே. அதில் தான் தக்ஷிணையாக கிடைத்த சில்லறைகள், பிரசாதங்கள் மற்றும் உடைகள் வைத்திருந்தேன். தேவா! உன் சன்னிதியில் கூட திருடுவார்களா? என் செய்வேன், யாரைக் கேட்பேன். தண்ணீராவது கிடைக்குமா பார்க்கிறேன். தேடுவது போல நடித்து ஒரு குளத்தை காண்கிறான். அதன் சுவர்களில் பகவான் பரம சிவனின் சிலைகள் செதுக்கப் பட்டுள்ளன. அடடா, என்னைப் போலவே சிவ பெருமானும் மோதகங்களை தொலைத்து விட்டார் போலும், இங்கும் வந்து விட்டார் என்னைப் போலவே, என்று சொல்லியபடி நீரில் இறங்கி சிரம பரிகாரம் செய்து கொள்வதாக நடிக்கிறான். அதிலிருந்து யௌகந்தராயன் சித்ரகரன் என்ற பெயரில் உஜ்ஜயினியில் நுழைந்து விட்டது தெரிகிறது.
வசந்தகன்: ஹே, சித்ரக! உன் கை வேலை மிகச் சிறப்பு. உன் அறிவும் அதை விட சிறப்பு. எப்படி தத்ரூபமாக செய்திருக்கிறாய். வர்ணங்களை அழகாக தேர்ந்தெடுத்து அழகாக சித்திரங்களை வரைந்திருக்கிறாய். இருக்கட்டும். நீரைப் பார்த்து, ஆகா, இந்த தடாகம் தான் என்ன அழகு. சுத்தமான நீர். உஜ்ஜயினியில் எல்லாமே அழகு தான். மங்களமான இடம். பகவான் பரம சிவனும் என்னைப் போலத்தான். கவலையில்லாதவர். மற்றொரு பொருள்-ஆசா ரஹித: (आशा रहित:) – எல்லையில்லாதவர். யௌகந்தராயனைக் குறிப்பதாகவும் ஆகிறது.
உரக்க: அடடா, யாரது? ஏய் ஏன் ஓடுகிறாய்? நீதானா என் பையை அபகரித்தது? அதிலிருந்த கோவில் பிரசாதங்களை தின்று தீர்த்து விட்டாயா? இதோ வருகிறேன் பார். உன் மண்டையை உடைக்கிறேன், ஓடுகிறான்.
உன்மத்தமான ஒருவன்: (யௌகந்தராயன்) என்ன சொல்கிறாய். உன்னுடையதா ? எது? எங்கிருக்கிறது?
வசந்தகன்: எனக்கு சற்று அவகாசம் கொடு. ஓடி வந்தேனா, களைத்து விட்டேன். நீ சொல்வது போல எதுவும் நம் கையில் இல்லை. சுதந்திரமாக இருந்தால் தானே யோசிக்க முடியும். இரு சொல்கிறேன். அது சரி நீ யார்?
யௌ: உன்மத்தன் வேஷத்தில்: நான் தான் அதோ கோவிலின் உள்ளே இருக்கிறானே., அவனே தான்.
வசந்தகன்: அப்படியா, நல்லது. சீக்கிரம் இந்த இடத்தை விட்டு போய் விடு. அரச சேவகர்கள் கண்ணில் பட்டால் , அவ்வளவு தான். நீ நினைப்பது போல எதுவும் நடக்காது. ( உட் பொருள்- ஹே யௌகந்தராயனா, வத்ஸ ராஜன் சுதந்திரமாக இல்லாத சமயம், எப்படி கௌசாம்பி கொண்டு செல்வாய். சற்று பொறு)
யௌ: ஹா, ஹா என்னை யார் பிடிப்பார்கள், நானா பிடிபடுவேன், இதோ பார், என்னைச் சுற்றி பத்து பேர்—(பித்தனைச் சுற்றி பத்து பேர் என்ற பழமொழி) (உட் பொருள் – வத்ஸ ராஜ சேவகர்கள் என்னை பாதுகாக்க இருக்கிறார்கள் )
வசந்தகன்: ஹே, பித்தா! நீ நல்லவன் தானே, என் பையைக் கொடுத்து விடு. எனக்கு அதில் சில பொருட்கள் அவசியம் வேண்டும்.
யௌ: தருவேனா, எனக்கும் வெகு தூரம் போக வேண்டுமே, எப்படித் தருவேன்.
வசந்தகன்: நீ என்ன இந்திரனுடைய ஐராவதமா? எப்படி போவாய்?
யௌ: ஆமாம். ஐராவதமே தான். ஆனால் தேவ ராஜன் என் மேல் ஏற மாட்டானாம். ஏன் தெரியுமா? அவன் ஏறியதும், நான் வெகு வேகமாக நூறு யோஜனை வேகத்தில் ஓடுவேனே, அதனால் பயந்து விட்டான். அவன் கால்கள் கட்டப் பட்டிருக்கின்றன, என்கிறான். அறிவில்லாதவன். என்ன பிரமாதமான கட்டு, ஒரு இழுப்பு இழுத்தால் கட்டெல்லாம் தானே விலகி விடும். என்னைப் பார், இதை விட பெரிய கட்டுகளைக் கூட உடைத்தெறிந்து விட்டு ஓடி விடுவேன் வேகமாக. பார்க்கிறாயா என் ஓட்டத்தை.
வசந்தகன்: இந்திரன் கூட பயப்படுவானா?
யௌ: மழைஜலம் தாரையாக விழும். அதைக் குடித்து விட்டு வரும் மேகங்களை பளீரென்று அடிப்பது போல மின்னல் வரும். அதற்குள் காற்று மேகத்தை தள்ளிக் கொண்டு போய் விடும். மின்னலால் எதுவும் செய்ய முடியாது. ஹெ, ஹெ சிரிக்கிறான்.
(தனியாக நீ எதுவும் செய்ய வேண்டாம். ருமன்வான் வருவான். மேகத்தை தள்ளி காக்கும் காற்று போல. மழை தாரை போல படைகளும் வரும்)
வசந்தகன்: ஹே பித்தனே! ஏதோ உளறுகிறாய். நான் போகிறேன்.
யாரோ வருவதைப் பார்த்து, ஓ, துறவியே, இதோ பார், இந்த பித்தன் என் பொருளை எடுத்துக் கொண்டு தர மறுக்கிறான்.
ஸ்ரமணகன். என்ன பொருள், காட்டு பார்க்கலாம்.
உன்மத்தனாக யௌ: இதோ, கையை நீட்டி, என்னிடம் எதுவுமில்லை. இவன் பொய் சொல்கிறான்.
ஸ்ரமணகன்: ஏய் நீயா, உன்னை எங்கெல்லாம் தேடுகிறேன். வசந்தகா, இவனிடம் எதுவுமில்லை. நீ போ. உன் வேலையைப் பார். இவனிடம் உன் பொருள் எதுவுமில்லை. அக்னிக்ருஹம் போ. அங்கு மத்யான்ன ஆகாரம் தருகிறார்கள். உன் குடும்பத்துக்கும் சேர்த்து வாங்கிக் கொள். நான் இவனிடம் பேச்சு கொடுக்கிறேன்.
உன்மத்தன்: ஆகாரமா? நானும் வருகிறேன். இரு.
ஸ்ரமணகன்: நானும் வருகிறேன்.
அக்னிக்ருஹம் வந்து சேருகிறார்கள். யாரும் இல்லை.
யௌ: வசந்தக, பார்த்தாயா? நம் அரசர் எங்கு இருக்கிறார்.
வசந்தகன்: பார்த்தேன்.
யௌ: இதோ விடிந்து விடும். என்ன வேடிக்கை பார். பகல் பொழுதில் இரவு வரும் என்று காத்திருக்கிறோம். இரவில் விடிவதை எதிர் நோக்கி காத்திருக்கிறோம். விடிந்தபின் பகல் பொழுது வரட்டும் என்று காத்திருக்கிறோம். இதோ நல்ல காலம் வரும் இதோ வந்து விடும் என்று காத்திருந்து பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே காலம் ஓடி விடுகிறது.
ருமன்வான்: சரியாக சொன்னீர்கள். காலம் ஒன்று தான். இரவு, பகல் என்று நாம் தான் சொல்கிறோம்.இரவில் நாமே பந்தனம் – கட்டுப் பட்டது போல நினைத்து துக்கப் படுகிறோம். ஏன் தெரியுமா? இரவில் நமது செயல்களைச் செய்வது சாத்யமில்லை. வெளிப்படையாக இல்லாமல் சூழ்ச்சி செய்வது இரவு என்றால், பகல் அதிலிருந்து மீள்வதும், செயல்கள் நிறைவேறுவதும் சாத்யமாகும் நேரம். அது இருக்கட்டும். வசந்தக! நீ நம் அரசனுடன் பேசினாயா?
வசந்தகன்: ஆம். விஸ்தாரமாக உங்களுடைய திட்டங்களைப் பற்றி நீங்கள் சொன்னபடியே விளக்கினேன். வரும் சதுர்தசியில் நீராட வேண்டும் என்றார். எதுவும் தெளிவாக சொல்லவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீராடி விட்டீர்களா?
யௌ: ஆமாம். தேவ காரியங்களை செய்து விட்டேன்.
வசந்தகன்: விஸ்தாரமாக இல்லாவிட்டாலும், வணங்கி எழுந்தாலே, தேவ கார்யம் ஆனது போலத்தான்.
யௌ: இந்த விபத்து காலத்திலும் நம் அரசனுக்கு சாதகமான பரிஜனங்கள் அவருக்கு சேவை செய்ய காத்திருக்கிறார்கள். அபிஷேகங்கள் முடிந்த பின் தெய்வங்களுக்கு பூஜாங்கமாக படகம் என்ற வாத்யங்களை இசைப்பார்கள். சதுர் தசி போன்ற புண்ய திதிகளில், பூஜைக்கு பிறகு கால சக்தி கால்களில் சலங்கை கட்டிக் கொண்டு ஆடுவாள். அதுவும் கோலாஹலமான நாதமாக இருக்கும்.
ருமன்வான்: நீங்கள் சொல்வது போலவே சதிர்தசி திதியில் (பகவானுக்கு செய்வது போல நம் அரசனுக்கு) செய்ய வேண்டியவைகளை நாங்கள் குறைவற செய்கிறோம். (அரசனை அன்று கட்டுகளில் இருந்து விடுவித்து விடுவோம் ). இப்படி சொல்வதால் தங்கள் செயல், எந்த நாளில், எந்த நேரத்தில் என்ற வரை யௌகந்தராயனிடம் மறை முகமாக சொல்கிறார்.
யௌ: வசந்தக! கிளம்பு. திரும்பவும் அரசனை பார். இதுவரை நாம் செய்துள்ள திட்டங்களை விவரித்துச் சொல். இடம், நலாகிரி யானையை நீராட்டும் இடம். ஏற்கனவே நம் ஆட்கள் அதன் அருகில் புல்லுடன் அதற்கு மதம் பிடிக்க ஏதுவான பொருட்களை கலந்து வைக்கச் செய்து விடுவோம். நலாகிரி ப்ரத்யோத ராஜனின் பட்டத்து யானை. அரசனுக்கு பிரியமானது என்பதால் அதிக கவனமாக பாதுகாக்கப் படுவது. தாகம் எடுத்தவனுக்கு உப்பு கொடுப்பது போல, ஏற்கனவே மதம் வரும் நிலையில் இருக்கும் அந்த மகா கஜம், சங்க பேரி நாதங்களால் மிரளும். அந்த சமயம் யானைகளைப் பற்றிய விவரங்கள் அறிந்தவர் என்ற காரணத்தால் நம் அரசரை அழைப்பார்கள். கோஷவதி வீணையின் நாதத்தில் யானைகளின் மதம் நீங்கும் என்பர். அப்படி நலாகிரியின் சமீபம் வரை வந்த அரசர், வீணையும் கையில் இருக்க,
வாரணம்-நலாகிரி யானை, மகாசேனரின் வீரர்கள் பின் தொடர்ந்து வர நினைப்பார்கள். ஆனாலும் யானையின் பின் பக்கம் நிற்பதை தவிர்ப்பார்கள். அதை அடக்கும் வீணை வாசித்து, அந்த நாதத்தால் யானை சற்று அடங்க, வேகமாக ஏறி அதன் மேல் திடமாக அமர்ந்தபடி வனங்களில் சிங்கத்தை எதிர் கொண்டால் யானைகள் மிக வேகமாக ஓடும். அதே போல கௌசாம்பி நகரம் சென்று விட வேண்டும்.
ருமன்வான்: வசந்தக! என்ன யோசனை?
வசந்தகன்: ஒரு பெரிய இடர் வரும் என்று நினைக்கிறேன். அது உங்கள் திட்டத்தை நடக்க விடாமல் செய்யலாம்.
இருவரும்: புரியும்படி சொல்லு
வசந்தகன்: நான் முதலில், நீங்கள் இருவரும் எனக்குப் பின்.. காலாஷ்டமி அன்று இளவரசி வாசவதத்தா அவள் தாத்ரி (நெருங்கிய பணிப்பெண் -குழந்தை பருவத்திலிருந்து உடன் இருப்பவள்) மட்டுமே உடன் வர, பல்லக்கில் சென்று கொண்டிருந்தாள். திரையை விலக்கி இடையில் நதியை கடக்கும் பொழுது நீரின் வேகத்தையும், அதிலிருந்து தன் மேல் தெறித்த நீர் திவலைகளையும் ரசித்துக் கொண்டிருந்தாள். அந்த சமயம் நதிக் கரையில் சிவிகை தூக்கிகள் சற்று பல்லக்கை இறக்கி வைத்து விட்டு சிரம பரிகாரம் செய்து கொண்டிருந்தனர். அந்த இடம் நம் அரசனை வைத்திருக்கும் சிறையின் வாசல் புறமாக இருந்து விட்டது. அரசர் அவளைப் பார்த்தார். பார்த்துக் கொண்டே இருந்தார்.
அதனால் என்ன?
அதனால் என்னவா? சுருக்கமாகச் சொல்கிறேன். அவருக்கு அந்த இடமே உல்லாசமான உபவனமாகி விட்டது. தகுதியான ஆண்மகன் அழகிய பெண்ணை பார்த்தால் என்ன நடக்கும். அது தான். நாம் அறியாததா? முன் பிறவியின் வாசனா பலத்தால் தனக்குரிய பெண்ணை கண்டு கொள்வார்கள் என்பது தானே நடப்பு நீதி. சத்ரு புத்ரி என்பது மனதில் உறைக்க அதை மறைத்துக் கொண்டிருப்பார்.
யௌ: அப்படி வாசவதத்தாவிடம் அவர் மனம் சென்றதாக தோன்றவில்லையே.
வசந்தகன்: இதைத்தான் எதிர் பாராத இடர் என்றேன். இளவரசியை அரசர் மோஹித்தால் உங்கள் திட்டங்கள் படி ஊர் திரும்புவாரா?
யௌ: சகே! ருமன்வன்! நம் வேஷத்தை கலைக்க வேண்டாம். இன்னமும் ஆழ சிந்தித்த பின் செயல் படுவோம். முதலில் இவன் சொல்வது உண்மையா என்பதை தெரிந்து கொள்வோம்.
வசந்தகன்: அதனால் யோசியுங்கள். ப்ரத்யோத ராஜா, தன் மகளை அவ்வளவு சுலபாக கொடுத்து விட மாட்டார். நீங்கள் அபகரித்தால் தன்னை அவமதித்து விட்டதாக உணர்வார். அரசர் அவளை விரும்புவதாக அவர் வாயாலேயே கேட்டு தெரிந்து கொண்ட பின் உங்கள் திட்டங்களை தீர்மானியுங்கள். அரசர் ஆசைப் படுவது தப்பு என நினைக்க வேண்டாம். வத்ஸ ராஜனை அனாவசியமாக சிறை பிடித்தார், அதன் விளவு தான் அவர் மகளை வத்ஸ ராஜன் அபகரித்துக் கொண்டு தப்பி விட்டான் என்று தான் செய்தி வெளியில் வரும்.
யௌ: இது என்ன பூதாகாரமாக கிளம்பும் சோதனை. அகாலம், அன்னிய தேசம் எதையும் கண்டு கொள்ளாமல் அரசனின் காம லீலை- சத்ரு ஜனங்கள் சிரிப்பார்கள். வெட்கமின்றி இது என்ன புத்தி விபரீதம். நாம் அவரது நலம் விரும்பிகள், அவரது விடுதலைக்காக போராடுகிறோம், நமக்கு இதனால் எந்த அளவு பின்னடைவு என்பதை யோசித்து பார்க்க வேண்டாமா? இது தானா சமயம், பெண் மோகம் மற்ற அனைத்தையும் மறக்கச் செய்து விட்டதே.
வசந்தகன்: அரசரை குறை சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். ப்ரத்யோத ராஜா இதையறிந்தால், தன்னை மீறி மகளை அபகரித்தான் என்று கோபம் கொண்டால், விளைவு பெரும் போரன்றி வேறு என்ன? அதனால் நிதானமாக செயல் படுங்கள்.
யௌ: சகே, ருமன்வான், வாசவதத்தா இல்லாமல் அரசர் கௌசாம்பி வர மாட்டார். இந்த வேஷம் இருக்கட்டும். நாம் சாதாரண பிரஜைகள். அரசரிடம் கொண்ட அபிமானத்தால் யோசிக்கிறோம். புல் படுக்கையில் படுப்பவன் அரச போகங்களை உயர் தர சயனாசனங்களை நினைத்து பார்க்க கூட முடியுமா? அரசனுக்குரிய பட்டு ஆடைகளை, விரிப்புகளை எண்ணித் தான் பார்ப்பானா? நம் வரையில் திட்டமிட்டோம். ஸ்வாமி ஜாதி- செல்வந்தர்கள் வழி. சிறைக்குள் இருப்பவனுக்கு மோகம் வரச் செய்வதில் கந்தர்ப்பனுக்கு என்ன ஆனந்தம் ? அங்குள்ள காவல் பணியாளர்கள் அரசனை மதிப்பார்களா? பெண் சபலம் மிகுந்தவன், அரசன் என்று அழைக்கவே தகுதியில்லாதவன் என்று சிரிப்பார்களோ. நம் அரசனும் இதுவரை சபலத்துக்கு இடம் கொடுக்காமல் தானே இருந்தார். அவரே இப்படி மோகவசம் ஆனார் என்றால் ஆச்சர்யம் தான்.
வசந்தகன்: வருத்ததுடன், உங்கள் அரசனிடம் அபிமானம், பக்தி என்பதை காட்டி விட்டீர்கள். முடிந்த வரை முயற்சி செய்தோம். அது நமது கடமை. தானே அதற்கு விபரீதமாக அரசர் செய்தால், நாமும் நம் வழி செல்வோம். இதோடு விட்டு விடுவோம். நடக்கிறபடி நடக்கட்டும்.
யௌ: அப்படிச் சொல்லாதே, வசந்தகா! இப்பொழுது தான் நம் பொறுப்பு அதிகமாகிறது. எதிரி கையில் சிக்கி வருந்துபவர். அத்துடன் இந்த மதனனின் தாக்குதல் வேறு. நண்பர்கள் இந்த சமயம் உதவியாகத் தான் இருக்க வேண்டும்.
வசந்தகன்: இப்படியே யோசித்து கொண்டே இருந்தால் நம் தலை தான் நரைக்கும்.
யௌ: வசந்தகா, நீ கண்டு கொண்டு வந்து சொன்னதும் நல்லதாயிற்று. அரசரை மீட்டுக் கொண்டு கௌசாம்பி செல்வது ஒன்று, அவர் விரும்பும் பெண்ணும் அவருக்கு கிடைக்கும்படி செய்வோம். சுபத்ரா கல்யாணம் தெரியும் அல்லவா. ஸ்ரீ க்ருஷ்ண சகோதரி. அவளை அர்ஜுனன் அடைந்தது போல, தாமரைக் கொடியை யானை சுலபமாக தூக்கிச் செல்வது போல இந்த வாசவதத்தாவை அரசனுடன் சேர்த்து அபகரித்துக் கொண்டு ஊர் திரும்பும் படி செய்யாவிட்டால் நான் யௌகந்தராயன் அல்ல.
மறுபடியும் சொல்கிறார்: அதை அவனுடன், இதை இவளுடன் சேர்த்து கொண்டு செல்வோம்.
வசந்தகன்: இது என்ன புதிர்?
நலாகிரி யானையில் அரசரையும், கோஷவதி வீணையுடன், விசாலமான கண்களுடைய இளவரசியையும் கௌசாம்பி நகரில் கொண்டு சேர்க்காவிட்டால் நான் யௌகந்தராயன் அல்ல.
வசந்தகன்: அப்படிச் சொல்லுங்கள். இருவரும் இதைச் செய்து முடிக்க திட்டமிடுங்கள். உங்கள் செயல் நல்லபடியாக முடிய வாழ்த்துக்கள்.
அட, மாலை நேரம், ஊர் மக்கள் வீடுகளிலிருந்து வெளிவந்து வீதிகளில் நடமாடுவது தெரிகிறது. நான் போகிறேன்.
யௌ: உன்மத்தன் போல, ஹிஹி, ராகு சந்திரனை விழுங்கப் பார்க்கிறது. ஏய் ராஹோ, விடு விடு, சந்திரனை விடா விட்டால் இதோ நான் வருகிறேன் பார். உன்னையே அழித்து விடுவேன் – இதோ ஒரு குதிரை வேகமாக எனக்காக ஓடி வருகிறது. முரண்டு பிடிக்கிறது போலும். அதை அடக்கி அதில் ஏறி வருவேன். அட காவல் வீரர்கள். அவர்கள் அருகில் வரும் முன் நான் ஓடி ஒளிந்து கொள்கிறேன். ஓடுவது போல நடிக்கிறார்.
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
