ஸ்வப்ன வாசவ தத்தா – 5

This entry is part 5 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா
Chetan Katigar

நாடகம்: பகுதி 1

நகரு, நகரு,  வண்டி வருது , நகரு- என்ற குரலும் அரச சேவகர்கள் வருவதும் தூரத்தில் கேட்கிறது. அருகில் இருந்த  தபோவனம் – அதில் யௌகந்தராயன் என்ற அந்தணர், வாஸவதத்தா என்ற உதயன அரசனின் மனைவி வாஸவதத்தா என்ற பெண்ணும் பேசிக் கொள்கிறார்கள்.

வாஸவதத்தா:   ஐயா, யாரை நகர சொல்கிறார்கள்.  என்னையும் சேர்த்து சொல்வது போல தோன்றுகிறது என்றாள் வருந்தும் குரலில். யௌகந்தராயன் என்ற அந்த பெரியவர் அரசனின் பிரதான மந்திரியாக இருப்பவர், திரும்பி அவளைப் பார்த்தவர் மனம் நெகிழ்ந்தார்.  ஏதோ ஒரு திட்டத்துடன்  ராணியை அழைத்துக் கொண்டு மகத ராஜ்யத்துக்கு வந்திருக்கின்றார்.  அவளை சமாதானப் படுத்தும் விதமாக, மகளே, வருந்தாதே. ஒரு பெரிய காரியம் நிறைவேற இந்த சிறு அவமதிப்புக்களை பொறுத்துக் கொள். நல்ல காலம் வரும்.

திரும்பவும் நகருங்கள், வழி விடுங்கள் என்ற குரல் கேட்டது.  சற்று தலைவனாக இருந்தவன் யௌகந்தராயனிடம் வந்து மரியாதையாக ஐயா, மன்னித்துக் கொள்ளுங்கள்.   ராஜ சேவகன். அவனுக்கு இட்ட கட்டளையைச் செய்கிறான். உங்களை தனித்து சொல்லவில்லை. ஐயா, தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்களும் சற்று ஒதுங்கியே இருங்கள் என்று பணிவாக சொல்லி அவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வழி செய்தான்.

வாம்மா என்று சொல்லி வாஸவதத்தாவை அழைத்துக் கொண்டு யௌகந்தராயன் என்ற அந்த பெரியவர், இந்த மட்டும் மரியாதையாக சொன்னானே என்றார்.

அந்த தலைவனைப் பார்த்து, என்ன விசேஷம்? யார் வருகிறார்கள்? என்று வினவினார்.

ஓ தபஸ்வியே! வருவது இந்த தேசத்து ராஜா தர்சகனின் சகோதரி பத்மாவதி. அவள் தாயாரை பார்க்க வந்தவள் நகரம் திரும்பி கொண்டிருக்கிறாள். அவள் தாயாரும் ஆசிரமத்தில் தான் இருக்கிறாள்.  பத்மாவதி அரசகுமாரி என்றாலும், ஆசிரம வாசிகள் என்றால் மரியாதையுடன் இருப்பவள். உங்களை விரட்டியதாக நினைக்க வேண்டாம். அரசாங்க பணியாளர்கள் எங்கள் கடமையைத் தான் செய்ய வேண்டியுள்ளது, என்றான்.

யௌகந்தராய மந்திரி மனதுக்குள் ஆச்சர்யத்துடன் சொல்லிக் கொண்டார். இது தான் பத்மாவதியா? மகத ராஜாவின் மகள், தற்சமயம் சகோதரனுடன் இருக்கிறாள். இவளைத் தான் சித்தாந்த சிரோமணி என்ற ஜோதிட நிபுணர்கள், இவள் ஜாதகத்தை கணித்த சமயம் ராஜ மகிஷியாவாள் என்று சொல்லி இருக்கிறார்கள். இயல்பாகவே அவர் அவளை ராஜமகிஷியாகவே எண்ணத் தலைப்பட்டு விட்டவர் போல தோன்றியது. 

அதே எண்ணம் வாஸவதத்தா மனதிலும் ஓடியது. இவள் தானா.  எனக்கும் சகோதரியாகவே எண்ணத் தோன்றுகிறது. 

பரிவாரங்கள் வரவேற்பதும், பத்மாவதி ஆசிரமத்திற்குள் நுழையும் பொழுது செய்யும் வாத்ய முழக்கங்களும் கேட்கின்றன.    

ஆசிரமத்து முதியவள் ஒருவள் வந்து வரவேண்டும், வரவேண்டும், ராஜ குமாரியே என்று வரவேற்றாள். அவளும் பதில் வணக்கம் செய்தாள். ஆசிரமத்தினரின் நலம் விசாரித்தாள். 

முதியவள், நீடுழி வாழ்க, ஆசிரமம் இங்கு வருபவர்களுக்கு சொந்த வீடு போலத் தானே. விருந்தினர்கள் சுதந்திரமாக இருக்கலாம்.  வா, வா என்று உள்ளே அழைத்துச் சென்றாள். வாஸவதத்தா மனதுக்குள், நல்ல அழகி, மட்டுமல்ல குரலும் இனிமையாக உள்ளதே, என்று வியந்தாள். . 

கஞ்சுகீ என்ற அந்த தலைவி சொன்னாள்:-  ஆசிரம வாசிகளே, இதோ ராஜகுமாரி கிளம்பி விட்டார்கள். உங்களில் யாரானாலும் ஏதாவது சொல்ல வேண்டுமானாலும், தேவையானாலும் விண்ணப்பிக்கலாம். முன்னால் வாருங்கள் என்றாள்.  யார் வரப் போகிறார்கள் தேவி, இங்கு அனைவரும்  உடல் நலமாக, மன நிறைவோடு தான் இருக்கிறார்கள் என்று பத்மாவதியைப் பார்த்துச் சொன்னாள்.

எனக்கு ஒரு உதவி தேவை என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தனர். யௌகந்தராயன் என்ற அந்த மந்திரி அந்தணர் வேஷத்தில் இருந்தவர் அருகில் வந்தார். வாஸவதத்தாவும் திகைப்புடனே அவரை பார்த்தாள். ராஜ குமாரியின் அருகில் சென்றவர், தேவி! தாங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.    கஞ்சுகி அருகில் வந்தவள், ஓ நீங்கள்  புதியவரா, சற்று முன் வந்தீர்களே என்றாள். பத்மாவதியும் மரியாதையுடன் ஐயா, சொல்லுங்கள். நானே எதுவானாலும் தருவதாக வாக்களித்து விட்டு மறுப்பேனா, தயங்காமல் சொல்லுங்கள், என்றாள். 

யௌகந்தராயன்:- அரச குமாரி, இதோ இருப்பவள், என் சகோதரி. நான் ஒரு வேலையாக தொலை தூரம் செல்கிறேன். நான் வரும் வரை இவளை உங்களிடம் ஒப்படைத்துச் செல்கிறேன்.  கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.  நான் வந்து திரும்ப அழைத்துச் செல்வேன், என்றார்.  இவள் கணவன் தொழில் முறையாக வெளியூர் சென்றிருக்கிறான்.  அதிக நாட்கள் ஆகாது. நானும் அதற்குள் வந்து விடுவேன்.  நல்ல குடும்பத்துப் பெண்.  குணவதி. இனிமையாக பேசுவாள். தயங்காமல் அருகில் வைத்துக் கொள்ளலாம், என்றார். 

பத்மாவதி, பெரியவரே! கண்டிப்பாக செய்கிறேன்.  பொருளோ,  பண்டமோ தேவையானாலும் சொல்லுங்கள் என்றாள்.  யௌகந்தராயன், தாயே! பொருளோ, ஆடை அணிகலன்களோ தேவையில்லை. இக்கட்டான ஒரு நிலை. சிறு பெண், தனியாக இருக்கச் செய்வது உசிதமல்ல. எனவே தான் இந்த வேண்டுகோள்,  இவள் பெயர் அவந்திகா என்றார். . 

பத்மாவதி அன்புடன்  அவந்திகாவை பார்த்தபடி, கவலையே வேண்டாம்.  எனக்கு உற்ற தோழியாக இருப்பாள். கவலையின்றி உங்கள் பணியை முடித்துக் கொண்டு வாருங்கள். என்றாள்.    

கஞ்சுகி எச்சரித்தாள்.  தேவி ந்யாசம்- பாதுகாத்து வைக்கச் சொல்வதை ஏற்பதை யோசிக்க வேண்டும் தேவி. இதில் ஆபத்தும் இருக்கிறதே, என்றாள். பத்மாவதி அவளைப் பார்த்து நாமே வாக்களித்து விட்டு, மாற்றச் சொல்கிறாயே. பயப்படாதே. நல்லதே நடக்கும்.

யௌகந்தராயன் அவள் சொல்வதைக் கேட்டு மனதிற்குள் அவள் பெருந்தன்மையை வியந்தார். தேவி,  இந்த உதவியை மறக்க மாட்டேன்.  மிகப் பெரிய சகாயம் இது.  மகளே, வா, இவர்களுடன் செல். என்றார். வாஸவதத்தாவுக்கு குமுறிக் கொண்டு வந்தது. இப்படி ஒரு காலம் வந்ததே.  சேடிகள் ஸூழ இருந்தவள், நானே அந்த நிலைக்கு வந்து விட்டேனே, தெய்வமே என்று வருத்தம் மேலிட்டது.   சமாளித்துக் கொண்டாள். யௌகந்தராயன் யோசிக்காமல் செய்ய மாட்டார். இதுவும் நன்மைக்கே என்று தன்னையே தேற்றிக் கொண்டவளாக நிமிர்ந்தாள்.

அந்த சமயம்  மாணவன் போல இருந்த ஒரு புது மனிதன் வேகமாக வந்தான். ஓ இது ஆசிரமம் என்று எண்ணி நுழைந்து விட்டேன். பெண்கள் உள்ள இடம் , மன்னிக்க வேண்டும் என்றவன் திரும்பிச் செல்பவன் போல கிளம்பியவனை, கஞ்சுகி தடுத்தாள்.  நாங்கள் இதோ கிளம்பி விட்டோம். தாராளமாக ஓய்வெடுத்துக் கொண்டு, உணவோ, எது வேண்டுமானாலும் ஆசிரமத்தின் உள்ளே சென்று பெறலாம் என்றாள். 

யௌகந்தராயன் வந்தவனைப் பார்த்து,  எங்கிருந்து வருகிறீர்கள் ? எங்கு போக வேண்டும்? எந்த ஊர்க்கார் நீங்கள்? 

வந்தவன்: அதுவா, அரச சபையைச் சேர்ந்தவன் தான்.   லாவணகம் என்ற கிராமம் செல்கிறேன். வத்ஸ ராஜ்யத்தில் உள்ளது. தெரியுமா?   யௌகந்தராயன் திடுக்கிட்டாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல், லாவணகமா, தெரியும், உயர் கல்வி படிக்க அங்கு நிறைய மாணவர்கள் வருவார்கள், என்றார்.  நீங்களும் அந்த உயர் கல்வி கற்கத் தான் போகிறீர்களா? நல்ல ஆசிரியர்கள் உள்ள இடம் அது. 

அது எங்கே, ஒரு பெரிய விபத்து. உதயணன் என்ற அரசன், அவனுடைய பிரிய  மனைவி அவந்திகா தேசத்து இளவரசி, இருவரும் அன்யோன்யமாக இருந்தார்கள், தெரியுமா?

இருக்கலாம், சொல்லுங்கள். என்ன விபத்து? 

வந்தவன்: அரசன் வேட்டையாடச்  சென்றிருந்த சமயம் பெரும் காட்டுத் தீ போல தீ ஸூழ்ந்து அந்த இளவரசி அதில் அகப்பட்டுக் கொண்டு விட்டாள்.  அவளைக் காப்பாற்றச் சென்ற யௌகந்தராயன் என்ற முதல் மந்திரி அவரும் நெருப்பில் மாட்டிக் கொண்டார். 

அடடா,  அதன் பின் என்ன நடந்தது? பிழைத்தார்களா? 

எங்கே பிழைப்பது, அரசனும் அதே நெருப்பில் குதிக்கப் போனார். மந்திரிகள் தடுத்து விட்டனர். ஒரே அழுகை. கதறுகிறார். தேவியின் சில ஆபரணங்கள் மட்டுமே கிடைத்தன. இருவரும் என் வாழ்க்கையின் உயிர் நாடியாக இருந்தவர்கள் இனி எப்படி வாழ்வேன் என்று புலம்புகிறார். 

யௌகந்தராயன் : பிறகு?

ஒரு சேடிப் பெண்: அம்மா இந்த பெண் இதைக் கேட்டே கண்ணீர் விடுகிறாள்.

யௌகந்தராயன்: இவள் மிகவும் சாது. யார் கஷ்டப் பட்டாலும் தாங்க மாட்டாள்.  பின்,  புது மனிதனைப் பார்த்து, ஐயா, அதற்குப் பின் என்ன நடந்தது.  இதோ பாருங்கள் இங்கு எல்லோருமே வருந்துகிறார்கள், யாரென்று தெரியாமலே, ஏதோ ஒரு மனிதன் கஷ்டப் படுகிறான் என்று.

பின் என்ன, உபசாரங்கள் செய்த பின் எழுந்தார். அவன் மனவியை பெயர் சொல்லி, ஏ வாசவத்தே! ராஜ குமாரி! என் பிரிய சிஷ்யே என்று அழுதார். 

(முன் கதை. வத்ஸ தேசத்து சிற்றரசன்  உதயணன் ஒரு சமயம் ப்ரதயோத என்ற அவந்தி தேச அரசன் இருந்த இடம் சென்றான். அவர் தன் மகளுக்கு சரியான மண மகனை தேடிக் கொண்டிருந்த சமயம்.  தனக்கு சமமான  ராஜ குலத்தவன், குணவான், வீரன் என்றெல்லாம் அவர் பட்டியல் இருந்தது.  வத்ஸ ராஜா சிற்றரசன். எனவே உதயணன் முயன்றும் பலனில்லை. அவன் கலைஞன். வீணை வாசிப்பதில் தேர்ந்தவன் . அதனால் தன்னை வீணை வாசிப்பவனாக அறிமுகப் படுத்திக் கொண்டு, வாசவதத்தாவுக்கு ஆசிரியனாக ஆனான்.   இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்தமாக ஆக, அவளிடம் கொண்ட ஈடுபாட்டினால், அரசனாக தர மாட்டான் என்பதால் கபடமாக அபகரித்துக் கொண்டு  வந்து மணந்து கொண்டு விட்டான்.  மந்திரி யௌகந்தராயன் இதற்கு பெரும் உதவி செய்தார்.  பரஸ்பரம் இவர்கள் விரும்புவதையும் உறுதியாக இருப்பதையும் அறிந்தவர் அவர்.  )

யௌகந்தராயன்: கேட்கவே கஷ்டமாக இருக்கிறது.  சமாதானம் ஆனாரா? ராஜ்யத்தை கவனிக்கிறாரா? 

ஆமாம். மற்றொரு மந்திரி ருமன்வான் என்பவர், பொறுப்பை ஏற்றிருக்கிறார். ராஜ்ய காரியங்கள் பழையபடி நடக்கின்றன. ஆனால் பிரிய மனைவியை இழந்த அரசனுக்கு என்ன ஆறுதல் சொல்வது? 

யௌகந்தராயன் மனதிற்குள், என் பாரம் குறைந்தது.  ருமன்வான் என் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டான்.  வந்தவனிடம், இப்பொழுது அரசன் தன் நிலைக்கு வந்து விட்டிருப்பான். சோகம் குறைந்திருக்கும். 

 அது தெரியாது. எப்பொழுதும் இங்கு தான் சேர்ந்து இருந்தோம். அவள் சிரித்தாள், பேசினாள், என்று எந்த இடத்தை பார்த்தாலும் வாசவதத்தா நினைவு தான். அவளுடன்  வாழ்ந்த நாட்கள் தான் புலம்பல்.  ப்ரமுகர்களான சிலர், அரசனை அந்த ஊரை விட்டு வெளியே அழைத்துச் சென்றிருக்கின்றனர். அரசன் இல்லாத நகரம், நானும் இதே சாக்கில் வெளி வந்து லாவணகம் செல்கிறேன். 

ஒரு சேடி- அது தான் சரி. சற்று சமாதானம் ஆனபின் மறு மணம் செய்து வைக்கலாம். 

எல்லோரும்: ஆமாம். அது நல்லது 

வந்தவன், அது சரி, நான் கிளம்புகிறேன். 

யௌகந்தராயன்: ஆமாம், நானும் கிளம்புகிறேன். ராஜ குமாரி, என் கடமை முடிந்தவுடன் வந்து என் சகோதரியை அழைத்துச் செல்வேன்.  ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.  என் சகோதரியும் நான் விட்டுச் செல்லப் போவது பற்றி வருந்த மாட்டாள்.  நல்ல இடத்தில் பாதுகாப்பாக இருப்பாள் என்று எனக்கும் ஆறுதலே என்றார்.  பின் வாஸவதத்தாவை பார்த்து, அவந்திகே! நான் வரட்டுமா என்று சொல்லி விடை பெற்றார்.

அனைவரும்: பெரியவரே!  கவலையின்றி செல்லுங்கள். உங்கள் கடமையை வெற்றி கரமாக முடித்து விட்டு வாருங்கள், என்றனர்.  வழி நடை மங்களகரமாக இருக்கட்டும்.

பத்மாவதியும் அங்கு இருந்த மற்றவர்களும், அரசுக்கு சம்பந்தமில்லாத ஒரு சாதாரண ப்ரஜை கூட இவ்வளவு உயர்வாக சொல்ல வேண்டுமானால் நிச்சயம் அந்த அரசன் நல்ல குணவானாக இருந்திருக்க வேண்டும் என்றனர். பத்மாவதியோ மறு மணம் என்ற செய்தியை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தாள். 

பத்மாவதியும் அங்கிருந்த மற்ற தாபசிகளிடம் வணங்கி விட்டு கிளம்பினாள். அவர்களும் மணம் போல மணாளன் வாய்க்கட்டும் என்று ஆசீர்வதித்தனர். மாலை நேரம் பறவைகள் தங்கள் கூட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. ரிஷிகள் சந்த்யா ஜபங்கள் செய்ய தயாராகினர்.  அவந்திகாவை கையை பிடித்து ஆதரவுடன் அழைத்துச் சென்றாள் பத்மாவதி.

ஸ்வப்ன வாசவதத்தா

ஸ்வப்ன வாசவ தத்தா – 4 தன் கணவர் மற்றொரு பெண்ணிற்கு உரியவனாக ஆகப் போகிறான்

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.