நூல்: காருகுறிச்சியைத் தேடி
ஆசிரியர் : திரு. லலிதாராம்
எழுத்து பதிப்பகம்
சில தினங்களில், தை மங்கை பிறந்துவிடுவாள். அவள் பிறக்கும் போது ஆதவனை வழிபடுவோம். பிரபஞ்சத்திற்கே ஒளி தரும் சூரியனுக்கு நாம் கற்பூர தீபம் காட்டி மகிழ்ச்சி அடைவோம். இளஞ் சூரிய ஒளியைப் போல், காற்றில் பரவும் இன்னிசை அலைகளைப் போல், நாத லயத்தை கண்களாலும் கேட்க முடியும் என்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு. நான் எழுதும் இக்கட்டுரை, ஆதவனுக்குக் காட்டும் கற்பூர ஒளியைப் போல் என எடுத்துக் கொள்ளலாம்.
‘பாட்டினைப் போல் ஆச்சர்யம் பாரின் மிசை இல்லையடா’ என்ற பாரதியும்,’பருந்தொடு நிழல் சென்றன்ன’ என்று வியந்த கம்பனும் வானிலிருந்து இந்த நூலை வாழ்த்துவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.

நாகஸ்வர இசைக் கலைஞரான காருகுறிச்சி அருணாசலத்தின் பலப் பரிமாணங்களைக் காட்டுகிறது இந்த நூல். இசைரசனை, கலைஞானம், கலைஞரைத் தேடிச் சென்று அறிமுகம் இல்லாத பல நபர்களைத் திறமையாகப் பேச வைத்து பதிவிட்டது, நெகிழ்வான நிகழ்வுகள், மகிழ்ச்சியான தருணங்கள், நுணுக்கங்கள், நுட்பங்கள், அருமையான இயற்கை வர்ணனைகள், நகைச்சுவை, அரிய புகைப்படங்கள், கட்டுரைகள் அனைத்தும் இந்த நூலில் எளிய நடையில், வளமான மொழியில் இடம் பெற்றுள்ளன.
சரளி வரிசை
நடேசப் பிள்ளையின் ‘ஆரபி’, அபிமானம் வைத்து அழைத்த ஒலி கேட்டு பலவேசம் பிள்ளை பூக்கட்டும் தொழிலை விட்டுவிட்டு நாகஸ்வரத்திற்கு வந்து சேர்கிறார். ‘சால கல்லலாடு’ என்ற அழகிய சிறுகதையின் மூலம் இசையின் வீச்சைப் புரிந்து கொள்கிறோம். நடப்பும் நினைவும் நடக்கப் போவதற்குமான ஒரு தொடக்கத்தையும் இதில் காண்கிறோம். “எங்கு போகாமல் எங்கு வரவேண்டும்?” என்று புலம்புகிறார் அவர்.
‘தார ஸ்தாயி ரிஷபத்தில் இருந்து மின்னல் கீற்று போல் கீழே பாய்ந்து மந்தர தைவதத்தை தொட்டு மீண்டும் தாரஸ்தாயிக்கு வந்து நிற்கும்படி ஒரு சங்கதி வாசித்தார்.’ காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது இந்த ஆரபி.
கிட்டத்தட்ட அப்பாவைப் போலவே பிள்ளை அருணாசலத்திற்கும் ராஜரத்தினம் பிள்ளையுடன் இப்படி ஒரு சந்தர்ப்பம் தான் ஏற்படுகிறது.
துணை நாயனம் வாசிப்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, கச்சேரி கேட்பதற்காக நண்பர் வீட்டில் தங்கி இருக்கும் காருகுறிச்சியார், ராஜரத்தினம் பிள்ளையுடன் மேடை ஏறுகிறார்.
அன்று தொடங்குகிறது குருவும் சீடனும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும், ஆனால் பிறர் அறிய முடியாத ஓர் அனுபவம். ரத்தினம் சொல்கிறார் :”யோசிச்சு பார்த்தா வெளியில வர்ற சங்கீதத்தில, வித்தையோட, சேர்ந்து வாசிக்கிறவனோட சுபாவம் கலந்து தான் இசையா வருதுன்னு தோணுது.” ரத்தினம் தன்னை உணரும் இடம், சீடன் தன்னை உணர்த்திய விதம் என்ற இந்த நிகழ்வு பல கலைஞர்களுக்கு வழிகாட்டட்டும்.
ஜண்டை வரிசை
‘அண்ணன் நிறைய மல்லாரி வாசிப்பாங்களே! தேர் மல்லாரி பிரமாதமா வாசிப்பாங்க. சங்கீர்ண திரிபுடை, மிஸ்ரஜம்பை, கண்ட திரிபுடை தாளங்கள்ல மல்லாரி வாசித்து கேட்டு இருக்கேன்.’ என்று சொல்லும் மீனாட்சி கம்பர் மிஸ்ரஜம்பை மல்லாரியை இரண்டு காலங்களில் பாடிக் காட்டுகிறார். இங்கே லலிதாராமின் ரசனை மனம் சிறகடித்துப் பறக்கிறது. ‘பா’ ‘பா’ ‘ப’ ‘சா’ என்று மந்திர பஞ்சமத்தை நங்கூரம் பாய்ச்சியபடி,கண்ட திருபுடை மல்லாரியை அவர் பாடிய போது காருகுறிச்சியாரே வாசிப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. பிசிர் இல்லாத மந்திரஸ்தாயில் மத்தகத்தின் கம்பீர பவானியாய் கண் முன் மல்லாரி எழுந்தது.’
திருநெல்வேலி அய்யா குட்டி கம்பர் அப்படின்னு ஒருத்தர், கையிலே ரெண்டு நடை, காலிலே ரெண்டு நடை, வாயில ஒரு நடைன்னு ஒரே நேரத்துல அஞ்சு நடையில பாடுவாராம்.
எப்பேர்ப்பட்ட சிறந்த கலைஞர்களை நமக்கு காட்டிக்கொண்டே செல்கிறார் லலிதாராம்.
கீதம்
காருகுறிச்சியாருக்கு செட்டுத்தவில்னா அம்பாசமுத்திரம் போஸ் தவில் காரரும், அம்பாசமுத்திரம் குழந்தைவேல் தவில் காரரும் தான். பெரிய கச்சேரி என்றால் நாச்சியார் கோயில் ராகவப் பிள்ளையும் நீடாமங்கலம் சண்முகவடிவேலுவும்.
திருச்செந்தூர் உற்சவத்தில் நடந்த ஒரு சுவையான சம்பவம். வீருசாமி பிள்ளை என்பவர் 12 நாட்களுக்கு அங்கே வாசிப்பதாக ஏற்பாடு. ஏழாம் திருநாள் அன்று வீருசாமி பிள்ளை மல்லாரி வாசித்துக் கொண்டு ஊர்வலத்தில் வருகிறார். ஒப்பந்தத்தின்படி அன்று வாசிக்க காருகுறிச்சி யாரும் வந்துவிட்டார். ஊர்வலத்திற்கு சாமியை அழைத்து வருபவர் தான் திரும்பக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வீருசாமி பிள்ளை சொல்ல, அதை அப்படியே ஒப்புக்கொண்டு வசந்த மண்டபத்தில் போய் இவர் வாசிக்கிறார். கொஞ்சமும் தலைக்கனம் இல்லை, சண்டையிடவில்லை. இரு நாயனங்களும் ஒலித்த அபூர்வ தருணம்.
ஸ்வர ஜதி, ஜதி ஸ்வரம், தில்லானா
ஒரே குருவிடமே குருகுல வாசம் செய்து கற்றுக் கொள்பவர் உண்டு. தொடக்கத்தில் சிலரிடம் கற்றுக் கொண்டு, பின்னர் மெருகேற்றிக் கொள்வதற்காக, பிற குருமார்களைத் தேடிச் செல்வாரும் உண்டு. தந்தை பலவேசம் பிள்ளை, சுத்தமல்லி சுப்பையா கம்பர், குருமலை லட்சுமி அம்மாள், சிறுமலை சுப்பையா என்ற பலரிடம் பாடம் பயின்றவர், ராஜரத்தினம் பிள்ளையிடம் இராக ஸ்வரூபங்களைப் பயின்றிருக்கிறார். தமிழ் நாட்டின் வழக்கப்படி லட்சுமி அம்மாள் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டார். சுத்தமல்லியாரைப் பற்றிய செய்திகளும் இல்லை. ஆனால், காருகுறிச்சியாரின் உசைனியிலும், யதுகுல காம்போதியிலும் அவர்கள் இருக்கிறார்கள். வாசஸ்பதியிலும், நட பைரவியிலும் அனைத்துக் குருமார்களும் இருக்கிறார்கள்.
வர்ணம்
பல வர்ணங்கள் அவருக்குப் பாடம். ஸ்வர ஸ்தானங்களுக்கு வர்ணம் எவ்வளவு அத்தியாவசியமானது என்பதை இது காட்டுகிறது. வருத்தம் என்னவென்றால், அவர் வாசித்த கானடா ராக வர்ணம் மட்டும் தான் இன்று கிடைக்கிறது. இசையே மூச்சென வாழ்ந்திருக்கிறார், ஓய்வு நேரங்களில் கீர்த்தனைகளைக் கேட்பதும், பாடாந்திரம் செய்வதும், அதன் சங்கதிகளை மெருகேற்றி விஸ்தரிப்பதும், விவாதிப்பதுமாக செயல்பட்டிருக்கிறார்.
இவருடன் இரண்டாவது நாயனம் வாசித்தவர் எம். அருணாசலம். பெயர் மட்டும் பொருத்தமில்லை, வாசிப்பிலும் அப்படி ஒரு இசைவு. அவருமே சிறந்த கலைஞர். பியும், எம்மும் சேர்ந்து பி.எம்.மாக வலம் வந்திருக்கிறார்கள். இணைந்து வாசிக்கும் அருணாசலம், பெரும்பாலும் ஒரு உசிதமான ஸ்வரத்தில் கார்வையாகச் சேர்ந்து கொள்வாராம். அந்தக் கார்வை இல்லாவிட்டால், மொத்த ஆலாபனையின் கனத்தில் பாதி குறைந்துவிடும். இப்படியான கார்வை தரும் ஒத்த இசையை, லலிதாராம் மேற்கத்திய சிம்பொனியுடன் ஒப்பிட்டு அழகாக எழுதியிருக்கிறார். குறிப்பிட்ட சங்கதிகளை மத்திய ஸ்தாயியில் பி அருணாசலம் வாசிக்க, அதற்குக் கீழ் ஸ்தாயியில் சுஸ்வரமாய் எம், அருணாசலம் வாசித்து உருவாக்கும் சூழல் அலாதியானது.
தஞ்சாவூர் சங்கர ஐயரை இவர்கள் சந்தித்ததும், முது பெரும் வயதிலும், ‘ராம நன்னு ப்ரோவரா’ என்ற ஹரிகாம்போதி தியாகராஜ கீர்த்தனையை அவர் பாடியதும் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்றால், ‘அவர் பாடிக் கொண்டிருக்கிறார், ராமனும், தியாகராஜரும் அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று லலிதாராம் எழுதியுள்ளது என் கண்களில் நீர் வரச் செய்தது.
கீர்த்தனை
தியாகராஜ சுவாமிகளுக்கு பகுள பஞ்சமியில் நடக்கும் ஆராதனையைப் போல, ஏரல் ஆடித் திருவிழாவை காருகுறிச்சியார் மிக அற்புதமாக நடத்தி வந்திருக்கிறார். ஏ கே சி நடராஜன் போன்ற பல வித்வான்கள் அங்கே வாசித்திருக்கிறார்கள்.
மியூசிக் அகாடமியில், Hall of frameல் காருகுறிச்சியார் படம் இடம்பெற்ற நிகழ்வும் சுவையானது. அந்தப் படத்தை திருவாரூர் பக்தவத்சலம் எடுத்து வருவதற்காக, தன் கச்சேரிக்கு ஈஸ்வரனை வாசிக்கச் செய்த எம் எல் வி அம்மா அவர்களுக்கு எப்படித்தான் நன்றி சொல்ல?
திரையில் கோலோச்சிய நடிகர்களும் காருகுறிச்சியாருடன் நல்ல நட்பை பேணியிருக்கிறார்கள். சிவாஜி கணேசனின் தம்பி கல்யாணத்தில், மிக இனிமையாக, உஸ்தாத் பிஸ்மில்லா கான், ஷெனாயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மால் கௌன்ஸ் வாசித்திருக்கிறார். அதற்கு ஈடாக வாசிப்பவர் எவருமில்லை என்று வந்திருந்தவர்கள் கொண்டாடிய போது, கல்யாணத்தில் கலந்து கொள்ள வந்திருந்த காருகுறிச்சியாரை விட யாரால் சிறப்பாக வாசிக்க முடியும் என்று பொங்கிய சிவாஜி, அவரை வாசிக்க அழைக்க, ‘மாமது ஸ்ரீ சரஸ்வதி’ ஹிந்தோள ராகமும், கீர்த்தனையும், கல்பனாஸ்வரங்களுமாகப் பிரவகித்து ஓடியிருக்கிறது. கான் மெய்மறந்து பாராட்டியிருக்கிறார். இது நடந்த ஒன்று என்று பதிவுகள் காட்டினாலும், ஹிந்தோளம் மட்டுமே கிடைப்பதால், மற்றவற்றின் நம்பகத் தன்மையை முழுதும் ஏற்க முடியவில்லை. ஆனால், கலைஞன், கலைஞனைக் கண்டு கொண்ட அற்புதத் தருணமல்லவா? அதைப் போலவே ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் அவர் வாசித்த ‘சிங்கார வேலனே தேவா’விற்காக ஜெமினியும், சாவித்திரியும் சிலை வடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அந்தச் சிலையை இன்று எந்த நிலையில் வைத்திருக்கிறார்கள் என்று படிக்கும் போது பதைபதைக்கிறது.
அந்தப் படத்தில் ஜெமினி அறிமுகமாகும் காட்சியில் இடம் பெறும் தோடி எப்படிப்பட்டது எனத் தெரியுமா? குளுமையும் (தி ஜா நினைவில் வரவேண்டுமே) முழுமையும், தார ஸ்தாயி காந்தாரத்தின் கம்பீர அசைவும், மத்ய ஸ்தாயியில் வழுக்கிச் செல்லும் ஜாரு பிரயோகங்களும்,…. என்ன சொல்ல? லலிதாராம் வழங்குகிறார், நான் பெறுகிறேன். பேகடாவில் தொடங்கி, கானடாவில் நிறைவு பெரும் ராகமாலிகை, கேதாரகௌளையின் உயிரான தார ஸ்தாயி ரிஷபத்தில் சஞ்சரித்து, ராகத்தை வளர்த்து, தவிலின் சர்வலகுவில் சவாரி செய்தபடி இரண்டாம் கால ஸ்வரங்களில் பவனி வரும்போது பட்டென்று நின்று அது நம்மை ஏக்கம் கொள்ளச் செய்வது என்றெல்லாம் இரசனை பொங்கி வழிகிறது எழுத்தில்.
காருகுறிச்சியார் துரிதமான சஞ்சாரங்கள் வாசிக்கும் போது, அதனுடன் ஒலிக்கும் ‘துரித கம்பிதங்கள்’ முரணின்றி மிளிர்பவை. இதை மட்டும் சொல்லிவிட்டால் போதுமா? ரக்தியைப் பற்றி சொல்ல வேண்டாமா? ஒரு சீரான போக்கில் சலனத்தை ஏற்படுத்திப் பாருங்கள். ரக்தி வரும். ராகத்தில் பிரயோகங்கள் எல்லாம் சக்கரம் மாதிரி. சுழன்று கொண்டிருக்கும். ஒரு உராய்வை ஏற்படுத்த வேண்டும். அப்போது வெளிப்படும் தீப்பொறிதான் ராகப் பிரயோகங்களுக்கு உள்ளே பொதிந்திருக்கும் விசையை கேட்பவர்களையும் உணர்ந்து கொள்ள வைக்கும். நிரவலில் ஒதுக்கல்கள், கோர்வைகளில் மௌனமாய் ஒலிக்கும் கார்வைகள் எல்லாம் இந்த ஃப்ரிக்ஷனின் பரிசு.
ராகம், ராகமாலிகை, நிரவல், பல்லவி, விரலடி
ஆபோகியில் குழையும் அந்த மத்யமம், பாரதி சொன்ன தீக்குள் விரலை வைத்து தீண்டும் இன்பம். வாசஸ்பதியில் 28 நிமிட ஆலாபனை. அதில், ஸ்தாயி விட்டு ஸ்தாயி தாவும் வாதி-சம்வாதி பிரயோகங்கள் ஆறு நிமிடங்கள் வரும். அதிலே தார ஸ்தாயி காந்தாரத்தில் குயிலின் கூவல். கரஹரப்ரியாவில் தார ஸ்தாயி சஞ்சாரம் தொடங்கியவுடன் காலக் கடிகாரம் நின்று போனது. பெரிய பெரிய ஸ்வரச் சுழல்களை தன் அமானுஷ்ய மூச்சுக் காற்றின் மூலம் ஒன்றன் பின் ஒன்றாக ஏவிக்கொண்டிருந்தார். மலர்களாய் விரிந்த ஸ்வரங்கள், அவர் மூச்சை அவசரமாய் உள்ளுக்குள் இழுக்கும் ஒலி அந்த மலர்களை மாலையாய்த் தொடுத்தது. அது விஸ்வரூப பெருமாளுக்குச் சாற்றிய வாடா இசை மாலை அல்லவா? ஹேமவதியின் ஆலாபனையில் நீங்கள் வரிகளைக் கேட்பதுண்டா? தைவதத்தை மையமாக்கி, மத்யமஸ்தாயி மத்யமம் முதல், தார ஸ்தாயி மத்யமம் வரை நிதானமாய் ஏறி ஏறி இறங்குவதைக் கேட்டிருக்கிறீர்களா? தார பஞ்சமத்தைத் தொட்டபோது தீபக்கீற்றில் மின்னும் நீர்த்துளிகள். ‘சஹஸ்ர கலச அபிஷேக மோதாம்’. காந்திமதி அன்னையின் மேல் தீக்ஷதர் இயற்றிய அபார கிருதி. இந்த அனுபவம் பெற லலிதாராம் என்ன தவம் செய்தாரோ?
இயற்கை என்னும் இளைய கன்னியும், அமுதத் தமிழும்
‘சூரிய அஸ்தமன நேரத்தில் திருவலஞ்சுழி கோயில் பிரகாரத்தில் ஒரு நாள் நண்பர்களுடன் அமர்ந்திருந்த போது வானத்தில் ஒரு பெரிய மேகத்திரட்டு தென்பட்டது. சூரியனைச் சூழ்ந்த அந்தத் திரட்டு சாதாரணமாய் சூழலை இன்னும் இருட்டாக்கியிருக்க வேண்டும். மேகக் குவியல்களுக்கிடையே சிகப்பும், மஞ்சளும், பொன் நிறமுமாய் பல கிரணங்கள் வானத்தை நிரப்பின. தருணம்! (லா ச ராவின் தருணம்) தருணம் கூடிவிட்டால், சாதாரண எல்லைகளின் கணக்குகளுக்குள் இயற்கை அடங்கியே ஆக வேண்டும் என்று ஒன்றுமில்லையே.’
மங்களம்
நாகஸ்வரமே மங்கல வாத்தியம். அது மகிழவைக்கிறது, மனதை நிரப்புகிறது, என்னமோ செய்கிறது. நீரில் நீந்தும் மீனாக, சுழலில் திணறும் கன்றாக, வானில் பறக்கும் கந்தர்வனாக நம்மை மாற்றி விடுகிறது. ‘நேனெந்து வெதுகுதுரா’ என்ற சிறுகதையை மட்டுமாவது படித்துவிடுங்கள். திரு மாங்கல்யம், மங்கலத் திரு, இசை ரசனை, நட்பின் உன்னதம், சொல்லற்ற புரிதல் என்று எதைச் சொல்ல, எதை விட? புனிதம், புனிதம் என்று சொல்கிறோமே, அது இதுதானா?
அவரது அரசியல் ஆர்வம், கதராடையை விரும்பியது, நேரு, காம்ராஜ், மங்கேஷ்கர் சகோதரிகள் உட்பட பல தலைவர்கள்/ கலைஞர்களுடான அனுபவம், அவரது ஊரில் அவர் கட்டிய பெரும் மாளிகையான ‘ராஜரத்ன விலாஸ்’, வாசிக்கும் முறைகளில் ராஜரத்னத்திற்கும், அருணாசலத்திற்கும் இடையே தென்படும் நுட்பமான வேறுபாடுகள் (முன்னவர் பொங்குமாங்கடல் இராக வாசிப்பில்; பின்னவர் பொங்கிப் பெருகும் கங்கை, கீர்த்தனைகளையும் சேர்த்துக் கொண்டு விரிந்து பரவும்) இவற்றையெல்லாம் புத்தகத்தில் லலிதாராம் விரிவாக எழுதியுள்ளார்.
இந்த நூலிற்காக அவர் எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகள், சந்தித்த நபர்கள், சென்ற ஊர்கள், படித்த பழைய கட்டுரைகள், தேடி சேகரித்த புகைப்படங்கள், கேட்டுக் கேட்டு ரசித்த இசைப் பதிவுகள் அனைத்தும் எனக்கு ஒரு பஞ்சரத்ன கீர்த்தனையைக் கண்முன் காட்டியது.
“எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகி வந்தனமுலு’
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

புத்தக விமர்சனம் என்பது ஒரு எளிதான செயல் அல்ல. புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும், அதை உள்வாங்க வேண்டும், ஆசிரியர் எழுதியதை பற்றி உட்கரு தெரிய வேண்டும், அவர் எதைப்பற்றி எழுதி இருக்கின்றாரோ அத்துறை பற்றிய புரிதல் வேண்டும். எனவே புத்தகம் எழுதுவது போல் அதைப்பற்றிய விமர்சனமும் ஒரு கடினமான விஷயமே. அந்த வகையில் பானுமதி எழுதியுள்ள விமர்சனம் நமக்கெல்லாம் புத்தகத்தைப் பற்றிய ஒரு பெரிய அறிமுகத்தையும் அந் நூலினை வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினையும் ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர் லலிதா ராமுக்கும் அந்த நூல் பற்றிய விமர்சனத்தை எழுதியுள்ள பானுமதி அவர்களுக்கும் பாராட்டுதல்கள்
தெலுங்கு க் கதைகள் இரண்டைச்சுட்டுகிறீர்கள்
அது புரியவில்ல. அதனை எங்கே
காண்பது?
‘சால கல்லலாடு’ மர்றும் ‘நேனெந்து வெதுகுதுரா’ கதைகளைப் பற்றி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். அவை இரண்டும் திரு. தியாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனை. அவற்றைத் தலைப்பாகக் கொண்டு, லலிதாராம் எழுதியுள்ள இரு கதைகளும் ‘காருகுறிச்சியைத் தேடி’ நூலில் இடம் பெற்றுள்ளன.
மிக்க நன்றி, சார்