ரசனையைக் களித்தலும் நுட்பத்தை வியத்தலும்

This entry is part 10 of 11 in the series காருகுறிச்சி

காருகுறிச்சியைத் தேடி
லலிதாராம்
எழுத்து பதிப்பகம் (ஜீரோ டிகிரி)

நாகஸ்வர மேதை காருகுறிச்சி ப அருணாசலத்தைக் குறித்து மேலதிகமாக அறிந்து கொள்ள, தான் மேற்கொண்ட பயணம், சந்திப்புகள், அவற்றில் துலங்கி எழுந்த அனுபவங்களைப் பேசும் லலிதாராமின் கட்டுரைத் தொகுப்பு. 

லலிதாராமின் எழுத்துகளுக்கு – இந்த பிரயோகத்தை அவர் எளிதாக ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றாலும் – ஒரு விசேஷம் உண்டு.  அவர் தனக்கு தெரியாத எதையும் எழுதுவதில்லை.  இது எழுத்தாளனின் முக்கிய அம்சம்.  இவர் அடிப்படையில் ஒரு தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர்.  ஆனால் கூகிள், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை மட்டுமே முழுதாக நம்பி இறங்காதவர். களத்தரவுகளை நம்புபவர்.  இதுவே படைப்பின் ஆன்மா ஆகையால், அவர் காருகுறிச்சியைத் தேடி நேரில் சென்று அனுபவத்தை பெற்று நமக்கு கடத்தியிருக்கிறார். அதனால்தான் கிடைக்கிற இசைப்பதிவுகளை கேட்கும் நமக்கு அப்பதிவுகளில் கிடைக்காது போன பிரசித்தி பெற்ற மல்லாரிகள் குறித்து – உடன் வாசித்த எம்.அருணாசலத்தின் பங்களிப்பு, அது மேற்கத்திய ஹார்மனிக்கு நிகரானது – போன்றவை அவருக்கு தெரிய வருகிறது. அவர் மூலம் நமக்கும். 

மற்றொன்று, இசையின் சகல பரிமாணங்களையும் தேடித்தேடி அறிந்து, அனுபவித்து பிறகு இஷ்டமிருந்தால் எழுதுபவர். அவருடைய முதன்மையான நோக்கம் இசை. எழுத்து ஒரு உபவிளைவு.  ஜிஎன்பி குறித்த ‘இசைவசீகரன்’, பழனி சுப்ரமணியபிள்ளை குறித்த ‘துருவ நட்சத்திரம்’ இவரை இவருக்கே அடையாளம் காட்டிய படைப்புகள் என்று சொல்லலாம்.  சொல்வனத்தில் ‘நேநெந்து வெதுகுதுரா’ என்ற தலைப்புடன் காருகுறிச்சியாரை மனதில் வைத்து இவர் எழுதிய சிறுகதை, இவர் புனைவு எழுத வேண்டியதற்கான ‘துளி விஷத்தை’ பருகிவிட்டார் என்பதைக் காட்டிவிட்டிருந்தது. 

இசை பற்றிய தொழில்முறை நுணுக்கங்கள் தெரியாதவருக்கும் சலிப்பூட்டாத எழுத்துமுறை இவருடையது என்பதல்ல  – அந்த நுணுக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலை உந்தக்கூடியதாக இருக்கிறது என்பதே சிறப்பு.  உதாரணமாக, பழனி சுப்ரமணியபிள்ளை குறித்த இவருடைய ‘துருவநட்சத்திரம்’ புத்தகத்தில்  புறா குனுகுவது போன்ற மிருதங்கத்தின் கும்கி என்ற பிரயோகம், இசை நுட்பம் தெரியாதவரைக் கூட ஈர்த்த ஒன்று.  தி.ஜானகிராமனின் ஆதர்ச வாசகர் என்பதாலும், இசை குறித்து அவர் எழுதியவற்றை இனம் காணும் வாசிப்பு நெருக்கம் இருப்பதாலும், இவரால் சரளமாகவும், இயல்பாகவும் எழுதிவிட முடிகிறது. 

சுருங்கச் சொன்னால் மனதுக்கினிய ஒரு பாடலைக் கேட்டு விட்டு, அதன் லயிப்பில் பிறகு எப்போதோ நமக்குநாமே அந்த பாட்டை விசிலடித்தோ, முணுமுணுத்துப் பாடும் சுகத்தையோதான், இவர் இசை மற்றும் இசைக் கலைஞர் குறித்து ஆழ அனுபவித்தபின், எழுத்தில் வெளிப்படு(த்து)கிறார் என்று தோன்றுகிறது.  ஏனென்றால் அதில் தெரிவது, அவ்வளவு எளிமை.  அவ்வளவு இயல்பு.  தான் கேட்டறிந்தவற்றை, பார்த்துணர்ந்தவற்றை, அதன் அசல் ஈரம் காயாமல் நமக்கு கைமாற்றியிருக்கிறார்.  அதில் நாம் காணும் இசை குறித்த நுட்பத்தின் புள்ளிகள், அவருடைய கைச்சூடு.

***

இசைக்கருவிகளின் இசையைக் கேட்டு ரசிக்கும் நமக்கு அந்த இசை ஒரு மகிழ்வை, சமாதானத்தை, நெகிழ்வை, குதூகலத்தை, லயிப்பை, நமக்கேயான உணர்வுச்சூழலை உருவாக்க வல்லது. அது குறித்த மேலதிக விவரம் தெரிந்து கொண்டு ரசிக்கத் துவங்கும்போது நமது மனம் ஈடுபாட்டுடன் திரை விலக்கி, சிறு வெளிச்சம் போல கசிந்து உள் நுழைகிறது.  மேலும் பரிச்சயமாகிறது. ராகம், பாடியவர், கிருதிகள் போன்ற எதையும் பற்றி ஓரளவு தெரிந்துகொண்டு ரசிக்கும்போது அவ்வனுபவம் வேறொன்றாக மிளிர்வதை பெரும்பாலும் அறிய முடியும். 

நாகஸ்வரம் உள்ளிட்ட இசைக்கருவிகளை பயில்பவர்கள் பேரதிகமும் வாய்ப்பாட்டின் மூலம் அவற்றை அறிந்து கொண்டு – அது கட்டாயம் என்றில்லை என்றபோதும் –  கிருதிகள், ராகங்கள் அடிப்படைகள் உள்ளவற்றை உட்செரித்து தனது கருவியின் மூலம் மீளுருவாக்கம் செய்பவர்கள். அதில் அவர்கள் கொண்டுவரும் பரிமாணம், அந்த இசையின் வீச்சு.  அதைப்போலவே கேட்கும் ரசிகருக்கும் கிருதிகள், ராகங்கள் போன்ற பரிச்சயங்கள் இருக்கக்கூடுமெனில் அவர்களுடைய ரசிப்பின், லயிப்பின் தளங்கள் மேலும் அணுக்கமாயிருக்கும்.  ஆனால் அவை கட்டாயமல்ல. ஆனால் மரபான இசையனுபவத்துக்கு மிக அருகில் செல்வதற்கும், நெருங்கி உள்ளே செல்வதற்குமான சன்னமான இழையைத் தாண்ட இவை உதவக்கூடும்.  ஒரு ஓவியம் உருவாகக் காரணமாக இருந்திருக்ககூடிய கற்பனையை, அந்த ஓவியத்தை ரசிப்பதின் மூலம் தீண்டிவிட முயலும் பேராவலைப் போன்றது.  

நாகஸ்வரத்தை அசுர வாத்தியம் என்பார்கள்.  இசைக்க அவ்வளவு எளிதல்ல.  இசை விற்பன்னர்களிடம் பொதுவாக ஒருசில பண்புகளை நாம் பார்க்கலாம்.  இசைப்பயிற்சி அல்லது இசைக்கருவி. மற்றொன்று கலைஞனின் தனித்திறமை.  இன்னொன்று இந்த இரண்டுக்கும் உள்ள அந்தரங்கமான தொடர்பு.   ஒரு கட்டுரையில் படித்த ஞாபகம். பழனி சுப்பிரமண்ய பிள்ளை மிருதங்கத்துக்கு தொப்பி செய்பவரிடம் பாலக்காடு மணி ஐயர் தனது மிருதங்கத்தில் அப்படி ஒரு  நாதம் எழுமா என்று கேட்டாராம்.  தனது கருவியோடு உறவாடுபவன் கலைஞன்.  ஒரு பாடகருக்கு குரல் என்னவோ, அதுதான் ஒரு இசைக்கலைஞனுக்கு இசைக்கருவி.  சொன்னதைக் கேட்கும் கருவியாக அமையும்போது, அமைக்கும்போது,  உன்னத கலைஞன் வெளிப்பட்டு விடுவான். அப்போது அவனும் இசைக்கருவியும் ஒன்றாகிவிடுவார்கள். அவன் தன்னையே தான் கவனிக்காமல் பாடிக் கொண்டிருப்பவன்.  இந்த மூன்றையும் கவனிக்க முடிந்த ஒருவரால், அதை எழுத்தாக்குவது என்பது படிப்பவருக்கு கிடைத்த நல்வாய்ப்பு. லலிதாராம் அதை செய்கிறார்.   

உதாரணமாக – நாகஸ்வரத்தில் மூச்சுக்கட்டி இசைக்க வேண்டியது சவால்.  ஊதும்போது துளைகள் வழியாக செல்லும் காற்றை, விரல் பிரயோகங்களால் நாதமாக வெளிப்படுத்தும் போக்கில், மூச்சுழுத்தம் குறையும் சமயங்களில் பிசிறான ஒலிகள் தோன்றும் வாய்ப்புகள் அதிகம்.  ஆனால் காருகுறிச்சியாரிடம் அதைக் காணமுடிவதில்லை என்பதைப் பற்றி எழுதும்போது // நீண்ட பிரயோகங்களின் முடிவுகளில் சுவாச எல்லைகள் நெருங்கும்போது அவர் வாத்தியம் வெளிப்படுத்தும் ஒருவித குழைவு, கலந்த கம்மல் ஒலி அவர் வாசிக்கும் சஞ்சாரத்தை மேலும் ரஞ்சகமாக்கும். இந்த அதிசயத்தையும்தான் இயற்கையிலமைந்த நாதத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது // என்றும், // மூச்சின் எல்லைகள் நெருங்க நெருங்க அது வாத்தியத்தின் தொனியில் ஒரு மட்டு குறைவாகவோ அல்லது வாசிக்கின்ற பிரயோகத்தில் அபஸ்வரம் கலந்தோ வெளிப்படக்கூடிய சாத்தியங்கள் நிறைய என்னும்போது, காருகுறிச்சியாரின் வாசிப்பில் மட்டும் உடலின் எல்லையின் விளிம்பில் இருந்தபடி வெளிப்படுத்தும் ஒலிகள் இன்னும் நளினமாய் ஒலிப்பது எங்கனம்? // என்றும் எழுதி வியக்கிறார். 

இந்த வரியை உணர அந்த இசையைக் கேட்கவேண்டும். இப்படி, எழுத்தின் மூலம் இசையை நோக்கி அணுக்கமாக நகரும் விழைவை வாசகனுக்கு இந்த வகை எழுத்து உருவாக்குகிறது. 

***

இரண்டு சிறுகதைப் புனைவுகள் உள்ளிட்ட இப்புத்தகத்தின் பத்து அத்தியாயங்களில் முதல் நீண்ட அத்தியாயம் இவர் காருகுறிச்சியாரைப் பற்றி அறிந்துகொள்ள தூத்துக்குடி, திருச்செந்த்தூர், கல்லிடைக்குறிச்சி, ஹரிகேசநல்லூர், ஏரல், எட்டையபுரம், நெல்லை, காருகுறிச்சி போன்ற இடங்களுக்கு சென்று பலரையும் சந்தித்து காருகுறிச்சியாரைப் பற்றிய தகவல்களை சேகரித்ததையே எழுதியிருக்கிறார்.  அவர் கேட்ட அனைத்தையும், சீர் தூக்கி, கட்டுரைகளில் காருகுறிச்சியார் குறித்த கதைகளை தரவுகள் இல்லாதபோது வரலாறாக ஏற்கத் தயங்குவதை சொல்லியும் விடுகிறார். 

சிலவற்றை, நிஜ சம்பவமா, புழங்கும் கதைகளா என்று கேள்வி எழுப்பிக்கொண்டு தேடுகிறார்.  பிற தரவுகளை வைத்து அவை நிஜமாக இருக்கக் கூடும் என்று கருதுகிறார்.  அப்படி இல்லாதபோது, பெரும் ஆளுமைகள் தங்கள் ரசிகர்களை ஈர்த்த விதங்களில் அப்படியான கதைகள் உலவுவது அவர்களின் புகழுக்கு உகந்தவையாகவே தெரிகின்றன என்றெழுதவது, கவனிக்கத் தக்கது.  உதாரணமாக சிவாஜி கணேசன் வீட்டு திருமணத்தில் காருகுறிச்சியார் விருந்தினராகவே வருகிறார்.  அங்கே பிஸ்மில்லா கான் கச்சேரி அபாரமாக நடக்கிறது.  அப்போது ‘இதைவிட உசத்தியாய் யாரும் வாசிக்க முடியாது’ என்பதாக ஒருவர் சொல்ல சிவாஜியை அது உசுப்ப, காருகுறிச்சியை வாசிக்க வேண்டுகிறார்.  அது தர்ம சங்கடம் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று யோசனைகள் இருக்க, கான் கிளம்பி போன பின் அவர் பாடிய பாடலை கர்நாடக சங்கீத ஹிந்தோள ராகத்தில் காருகுறிச்சியார் வாசிக்கிறார்.  சங்கீதம் காதில் விழுந்ததும் கான் திரும்பி வந்து கடைசி வரிசையில் உட்கார்ந்து ரசிக்கிறார். பிறகு மேடைக்க்கு வந்து காருகுறிச்சியாரை ஆரத்தழுவிக் கொள்கிறார். மகிழ்ச்சித் துள்ளலில் சிவாஜி அவர் மேல் கரன்சிகளை பொழிந்து கொண்டாடுகிறார்.  இது சொல்லப்பட்ட கதை. ஆனால் எழுத்து பூர்வமான தரவுகள் இல்லை என்றாலும் சிவாஜி வீட்டு திருமணத்தில் காருகுறிச்சியார் ஹிந்தோளம் வாசித்திருக்கும் பதிவு இருப்பதால் அந்தக் கதைக்கு கால் இருக்கக் கூடும் என்று கருதுகிறார்.  காருகுறிச்சி வீட்டு விசேஷ சாப்பாட்டு பந்திக்கு தானே பரிமாறியவர் சிவாஜி எனும்போது இந்த கதையின் நெருக்கத்தை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

தவிர ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி என்ற இரு பெரும் ஆளுமைகளை இவர் ஒப்பிட்டிருக்கும் விதம் அழகானது. சவாலானது. பிள்ளையின் சீடர்தான் காருகுறிச்சி.   சீடனை தானே வாசிக்க விட்டு அழகு பார்த்த பிள்ளையை இந்த கட்டுரைகளில் நாம் காணும்போது அசல் கலைஞர்கள் குறித்த மரியாதை மேலெழுகிறது. 

சென்னையில் ஒரு திருமண ஊர்வலத்தில் காருகுறிச்சி வாசித்துக்கொண்டே நடந்து போகையில், ராஜரத்தினம் பிள்ளை அவர் முன் தரையில் அப்படியே உட்கார்ந்து ரசிக்கிறார். போக்குவரத்து நெரிசல் ஆனாலும் சட்டை செய்யாமல் ரசிக்கிறார்.   

இன்னொரு முறை ஒரு பூங்காவில் நடந்து செல்லும்போது எங்கோ வானொலியில் ஒலித்த காருகுறிச்சியின் உசைனியை கேட்டுக்கொண்டே ‘வேலையைக் கெடுக்கறானே பாவி” என்று ரசித்து ஸ்தம்பித்து நிற்க, அவரைச் சுற்றி கூட்டம் கூடிவிடுகிறது. பிறகு நகர்ந்து சென்று ‘என்னைக் குழி தோண்டிப் புதைக்க இவன் ஒருத்தன் போதும்’ என்று முகத்தில் பெருமை பொங்கநடந்து செல்கிறார் ராஜரத்தினம் பிள்ளை என்று எழுதுகிறார்.

இதைவிட சிறப்பு இன்னொரு இடம் – ராஜரத்தினம் பிள்ளை நாகஸ்வர ஜாம்பவான்.  அவருக்கு உடன் வாசிக்கத் துவங்கி பிறகு பெரும் ஆளுமையாக எழுந்தவர் காருகுறிச்சி அருணாசலம்.  ஒரு முறை, கச்சேரியில் இரவு வாசிக்கத் துவங்கி பதினைந்து நிமிடம் வாசித்துவிட்டு தன்னுடன் வாசிக்கும் இரண்டாம் நாயனக்காரரான காருகுறிச்சியிடம் “எல்லாப் பயலுவளும் ஒன்னைக் கேக்கத்தான் வந்துருக்கானுவோ. நீ வாசி” என்று வாசிக்க வைக்கிறார். சங்கு சுட்டாலும் வெண்மை. 

இப்படி சம்பவங்களை வைத்து எல்லோரும் எழுதிவிடலாம். ஆனால் இசையின் நுட்பத்தின் கூறுகளை வைத்து அவர்களை ஒப்பிட்டு பார்க்கும் கட்டுரையின் பார்வை விமர்சன ரசனைக்குரியது. 

இருவருடையதுமே கங்கைப் பெருக்குதான். ராஜரத்தினம் பிள்ளையின் ஒவ்வொரு சஞ்சரமும் கேட்பவரை சுழற்றி வீசி தட்டாமாலைச் சுற்றி தரையிறக்குவத்தற்கு முன்பாகவே அடுத்த சஞ்சாரம் தூக்கி சுழற்றத் துவங்கிவிடும்.  அதன் முன் மண்டியிட்டு கரைந்து போவதை தவிர வேறு வழியேயில்லை என்றும்,  காருகுறிச்சியார் வாசிப்பு பிரமிக்க வைத்தாலும் அமைதியான பிரவாகம்; சுழற்றித் தள்ளுமோ என அஞ்சாமல் முங்கிக் குளிக்கலாம் என்றும் ஒப்பிடுகிறார்.

லலிதாராம் விசாரித்து அறியச் செல்லுமிடங்களில், எதிர்பாராத இடத்தில் இருந்து சிறிய மற்றும் புதிய தகவல்கள் கிடைக்கின்றன.  நெல்லையில் எங்கு போனாலும் ஏதாவது கிடைக்கிறது என்கிறார். அதுதான் இசை ஆளுமையின் வீச்சு. காருகுறிச்சியில் பெரும்பாலானோர் வீட்டில் அவர் படம் மாட்டப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியமான ஒன்று.  ஆனால் படம் தவிர வேறு வகைகளில் அவரை வேண்டிய அளவுக்கு உயர்த்திப் பிடிக்கவில்லையே என்பதை ‘திருநெல்வேலிகாரர்கள் தங்கள் ஊர்ப்பெருமையை சொல்லும்போது கேசரியில் ஒரு பிடி ரவைக்கு ஒரு படி சர்க்கரை என்று கிண்டலடிப்பதுண்டு. காருகுறியாரைப் பொருத்தவரை ஒருபடி ரவைக்கு ஒரு சிட்டிகை சர்க்கரை கூட சேர்க்கவில்லை” என்று இறுதியில் ஆதங்கமாகப் பதிவு செய்கிறார்.

இவருடைய எழுத்தின் மெருகுக்கு ஒரு உதாரணம்.  காருகுறிச்சி ஊர் நுழைவில் வைக்கப்பட்டிருக்கும் சிலை காருகுறிச்சியார் போலவே இல்லை. சட்டித் தலை. குன்னக்குடி வைத்யநாதன் போல பெரிய பொட்டு.  சிப்ளா கட்டை போல காதுகள்.  அளவுக்கதிகமாய் நீண்ட கிரேக்க மூக்கு, அதீதமாய் வளர்ந்த புருவங்கள்; ஐந்து விரலும் ஒன்றாக தோன்றும் அதிசய கை; நெய்ல் பாலீஷ்; அவசரத்துக்கு குளியலறையிலிருந்து பிடுங்கிய குழாய் போன்ற நாகஸ்வரம் என்று சிலையைப் பற்றி கிண்டலாக விவரிக்கும்போது  ஒரு நல்ல சிலை வைக்கக் கூடாதா என்று, படிக்கும் நமக்கும் ஆதங்கம் வருகிறது. ‘உள்ளூர்காரர்கள் பார்த்தால் வருந்தும்படியாகவும், வெளியூர்காரர்கள் பார்த்தால் சிரிக்கும்படியாகவும் உள்ள சிலை என்று குறிப்பிட்டுவிட்டு, தொடர்ந்து அந்த சிலை நிறுவப்பட்டது எப்படி என்று கேள்விப்பட்ட கதையை சொல்கிறார்.  சிலை வைப்பதற்காக பணத்தை வாங்கிக்கொண்டு திறப்புவிழாவுக்கு இரண்டு நாள் முன்பு அந்த ஆசாமி ஓடிப்போய் விடுகிறார்.  நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது. அப்போது உள்ளுரில் பானை செய்யும் குயவர்களிடம் சொல்லி அந்த சிலையை அமைக்கிறார்கள்.  தனது ஊர் கலைஞனுக்கு அதே ஊர் குயவர்களின் அவர்களாலான கலை முயற்சி மற்றும் சேவை என்று அறியும்போதும்,  ‘பிள்ளையார் சதுர்த்திக்கு வாண்டுகள் களிமண் உருண்டைகளை உருட்டி இதுதான் பிள்ளையார் என்று சொல்லும்போது அது உலகின் மிக அழகான பிள்ளையார் அதுதான் என்று தோன்றும்படி இருந்தது’ என்பதை படிக்கும்போதும் அதுவரையில் அழகற்றதாக காட்சியளித்த அந்த சிலை இப்போது மிக அழகாக நமக்கும் தோன்ற ஆரம்பிக்கிறது. 

கலையின் உன்னதங்களை கலைஞர்களிடம் தேடினால் ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் காருகுறிச்சியார் ஏமாற்றவில்லை என்கிறார்.  திருமண வீட்டார் கச்சேரியில் ரசிகர்களுக்கு உணவு விஷயத்தில் மரியாதை செய்யவில்லை என்று தானே சந்திர விலாஸில் உணவு ஏற்பாடு செய்வது; தனது  பிரமுகத்துவத்தைப் பயன்படுத்தி ஊருக்கு வசதிகள் செய்ய உதவுவது போன்றவற்றை சொல்கிறார். மிக நல்ல பாடும் குரல் வளம் இருந்தாலும் குருவுக்கு (ராஜரத்தினம் பிள்ளைக்கு)  நாகஸ்வரம் தவிர வேறொன்றில் ஈடுபாடு கொள்வது பிடிக்காது என்பதால் இவர் பாடுவதில்லை;  உடன் வாசிக்கும் எம்.அருணாசலம் காருகுறிச்சியார் மறைவுக்குப் பின் வாசிப்பதில்லை என்பதிலிருந்தெல்லாம் எவ்வளவோ உணர முடிகிறது. 

காருகுறிச்சியாருக்கு பெயர் பிரபலம் எவ்வளவோ அவ்வளவு எதிரிகளும் இருந்துள்ளனர். அவர் சுயபாதுகாப்புக்காக கைத்துப்பாக்கியை வைத்துக்கொண்டு இருந்திருக்கிறார். ஒரு நிலையில், அந்த ஊர் குடும்பத்துக்கு பாதுகாப்பு இல்லை என்று அதுவரை இருந்த வீட்டு விட்டுவிட்டு நெல்லைக்கு குடி பெயர்கிறார். அதை ஒரு செய்தியாகவே சொல்லி கடந்து போகிறார். அது ஒரு சிறுகதைக்கு உரிய இடம். அந்த வீட்டில்தான் அப்பா பலவேசம் பூக்கட்டியதும், இவர் வளர்ந்ததும். அவர் இந்த கலையின் மீது ஆசைப்பட்டிருக்காவிட்டால் காருகுறிச்சியார் இல்லை. லலிதாராமின் அடுத்த சிறுகதைகான கருக்களம் அது. பாரதிக்கு சின்னசாமி ஐயர் என்னவோ அது போல அருணாசலத்துக்கு பலவேசம் என்று தோன்றுகிறது. 

‘ஆலாபனைக்கு ஏது வரி! ‘ –  அவர் சாதகம் செய்யும் அறையில் இருந்த ஆளுயரக் கண்ணாடி  எத்தனை பைரவியையும், காம்போஜியையும் கேட்டிருக்கும் – மனதில் தூங்கியிருக்கும் வரி அகபப்டாமல் நீர்த்துளி என்ற சொல் மூலம் ‘ஸஹஸ்ர கலச அபிஷேக’ என்ற கீர்த்தனை வரி நினைவில் மின்னியெழுவது – இத்தனை பெரிய இசைமேதை தனது குடும்பத்தினருக்கு எதுவும் சொல்லித் தந்ததில்லை. என்னமோ தோன்றி ஒருநாள் ‘சாமகான ப்ரியே’ என்ற ஒரு பாடலை மட்டும் கற்றுத்தந்தார் என்று அவரது மகள் கண்ணீருடன் நினைவு கூர்வது – போன்ற  புனைவழகுக்கு அருகில் செல்லும் சில இடங்கள் உள்ள புத்தகம் இது. 

இறுதி அத்தியாயங்களில் மிகவும் இசை நுணுக்கங்கள் கொண்ட சிலவற்றை சொல்கிறார்.  இசை பற்றி முழுதாக அறிந்தவர்களே அதனைப் பாசாங்கின்றி கொண்டாட முடியும்.  ஆனால் இந்த கட்டுரையின் அடிநாதம் அப்படியான பத்திகள்தான். அதனால்தான் இணையத்தில் காணும் பொதுவான பதிவுகள், யூடியூபர்களின் பாராட்டுக்கள் போன்றவற்றில் கிடைக்காத, கைக்கு எட்டாத பூக்களை லலிதாராம் கிளை தாழப் பிடித்து கொடுத்திருக்கிறார்.  ‘சுநாதமும் சுஸ்வரமும்’ ‘ராக ஆலாபனை’  ஜாரு குறித்த அவதானிப்புகள், ‘சூட்சும உரசல்’ போன்ற பகுதிகள் தனித்துவம் வாய்ந்தவை.  இவற்றை இப்படியாக எழுத லலிதாராம் தேவைப்படுகிறார்.

எந்த அளவு ஆழமாக இசையை அதன் நுட்பத்துடன் அணுகத் தெரிகிறதோ, அந்த அளவுக்கு உயர்வாக அதனை ரசிக்கும் தன்மை உருவாகிறது.  அவ்வாறான ஆழத்தை அடைய முடியாதது குறை அல்ல. அதே சமயம், அந்த ஆழத்தை, நுட்பத்தை, கண்டுணர்தல் என்பது ரசனைத் தடையோ, மேட்டிமைத்தனமோ அல்ல.  உயர்ச்சியே. இசையைக் கேட்கும்போது ஒருவர் இசை நுட்ப அளவுகோலை வைத்து அதை அளப்பதில்லை; இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அந்த அளவைகளின் கச்சிதம் மனதுள் குமிழாகத் தோன்றி ஒடுங்குவதும், பிறகு அதைப் பற்றிய மீள்நினைவும், இசைப் பரிசீலனையுமே, அந்த இசையை விமர்சிக்கத் தூண்டுவன. 

ஒரு கவிதை புரியவில்லை என்று சொல்பவர்கள், கவிதையின் நுட்பங்கள் குறித்து மேலதிக புரிதல் மற்றும் தயாரிப்போடு தகுதிப் படுத்திக்கொண்டு ரசிக்க வேண்டும் என்று சொல்லப்படுவது, இசைக்கும் பொருந்தும்.  வெறும் இசை நுட்பங்களை,  அதன் சொற்பிரயோகங்கள் மட்டும் விஷயங்களை மட்டுமே விரித்து எழுதுவது தேற்றக் கட்டுரை போல ஆகிவிடும். தன்னனுபவ ரசனையை மட்டுமே முன்னிறுத்தி எழுதுவது ஜனரஞ்சகக் கட்டுரையாகியும் விடும். அதை எழுதுவதற்கு இசை நுணுக்கமறிந்த ஒருவர் தேவையில்லை.  இந்த இடைவெளியை ஒருவர் எப்படி கையாளுகிறார் என்பதுதான் முக்கியம்.  இசை சார்ந்த நுட்பத்தை அதற்கான வார்த்தை மற்றும் வரிகளில் கொண்டுவரும்போது, அது ரசனையைக் குறைக்கும் என்று சொல்வது இசையின் மேன்மையை அறிவதற்கு தடையாகவே அமையும். 

சற்று ஜனரஞ்சக வெளியில் வைத்துப் புரிந்து கொள்ள முயலலாமெனில் –  ஹேராம் படத்தில் ஒரு பாடலுக்கு கமல் பியானோவை இசைக்கும் காட்சி. நடிப்பில் பாசாங்கு இருக்கக் கூடாது என்பதால் அவர் பியானோவின் அடிப்படைகளை கற்றுக் கொண்டு அந்தக் காட்சியில் நடித்தார். ஆனால் அந்த இசையமைப்பு ரத்தாகி, மீண்டும் வேறு ஒரு பாடலை வைக்க வேண்டிய சிக்கல் எழுந்தபோது, இளையராஜா வருகிறார். இப்போது அதற்கான மறு இசையைப் புனைகிறார்.  மறு படப்பிடிப்பு செய்யாமல், அதே காட்சியில் கமல் விரல்கள் தொடும் பியானோ கட்டைகளின் அடுத்தடுத்த ரீட்களை தொட்டு வாசிக்கும்படியான வேறொரு இசையை உருவாக்குகிறார்.  பொதுப் பார்வையாளனுக்கு வாசிப்பின் விரலசைவுகள் சரியாக தோன்றினாலும், பியானோ பற்றி தெரிந்தவருக்கு அல்லது அந்த இசையமைப்பு சவாலைப் பற்றி அறிந்தவர்களுக்கு அதன் சிறப்பு விளங்கிவிடும்.  இதை எல்லோராலும் புரிந்துகொண்டு விட இயலுமா என்பது சந்தேகம்.  ஆனால் அதை அறிபவனின் நுட்ப அறிவு, ரசனைக்கு தூரம் என்று சொல்லவியலாது. உண்மையில் நெருக்கம். 

இசையை அனுபவித்து உணர்வுபூர்வமாக கொண்டாடும் எழுத்து ஒரு வகை.  அந்த கொண்டாட்டத்துக்கு அடியில் இருக்கும் நுணுக்கங்களைச் சொல்லிக் கொண்டாடுவது மற்றொரு வகை. ஓவியத்தில் இருளின் கருப்பை ‘ரசித்து அறிவது’ ஒரு வகை. அது சிவப்பும் நீலமும் மஞ்சளும் அல்லது ஆரஞ்சும் கலந்து உருவான இரவின் கருப்பு என்று ‘அறிந்து ரசிப்பது’ இன்னொருவகை. ஓவியர்கள் தாம் விரும்பிய வண்ணத்தை உருவாக்க மேற்கொள்ளும் ரசாயனக் கலப்பு உத்தி, சித்திரக் கலைக்குள் அடங்கியிருக்கும் கலையே.  அதை அறிவதும் ரசனையின் அங்கமே.

காருகுறிச்சியாரின் வாசிப்பில் ஹுசைனி, யதுகுலகாம்போதி போன்ற தேசிய ராகங்களில் அவருக்கேயான ‘தேசிய வளைவுகள்’ என்று ஒன்றைக் குறிப்பிட்டு அதிலிருக்கும் கிராமியத் தன்மையைப் பற்றி சொல்கிறார். வாசிப்பைக் கேட்டு, நுட்பத்தைக் கேட்டறிந்து உணர்ந்துகொள்ள வேண்டியவை இவை. 

கொஞ்சும் சலங்கை திரைப்படத்துக்கு பின்னால்தான் அவர் பிரபலமானர் என்பதை  மறுப்பதிலாகட்டும்,  ராஜரத்தினம் பிள்ளையிடம் பயின்று வாசித்தால் சிறப்பாக வாசிக்கத்தானே வேண்டும் போன்ற பொது அபிப்ராயங்களை தள்ளி வைத்துவிட்டு, காருகுறிச்சியார் தனக்கான முத்திரையை பதித்திருக்கும் இடங்களை சொல்வதிலாகட்டும் –  விளாத்திகுளம் ஸ்வாமிகளின் சிஷ்யை குருமணி லக்ஷ்மி அம்மாளிடம் காருகுறிச்சியார் கற்றுக் கொண்டதையும் –  நலுங்குப் பாடல் பாடுபவர் என்றே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அவர் கச்சேரிகள் செய்திருப்பதை தி இண்டியன் லிஸனர் இதழைச் சுட்டிக்காடி அவருக்கான இடத்தை நினைவூட்டுவதிலாகட்டும் – ஞாயத்தின் அழகை கட்டுரைகளில் உருவாக்கியிருக்கிறார்.

ராக ஆலாபனை பற்றி எழுதும்போது, // ராக ஸ்வரூபத்தை வல்லின மெல்லினங்கள் மூலம் ஸ்வரங்களை துலக்கியும் அசைத்தும் விஸ்தரித்துக் காட்ட கருவியில் செலுத்தும் காற்றின் அளவைக்கொண்டு வெளிப்படுத்தும் சங்கதிகள் ஒருபுறம்;  ராகத்தின் ஆரோகண அவரோகணங்களில் கிரமமாகவும் வர்ஜ/ வக்கிர பிரயோகங்களாகவும் பல்வேறு காலப்ரமாணங்களின் கலவையாய் வெளிப்படுத்தி ராகத்தை விஸ்தரிக்கும் ‘விரலடி’ பிரயோகங்கள் இன்னொரு புறம்// என்று லலிதாராம் எழுதும் வரிகளில் இசை நுட்பத்தை வரிகளாக்கும் மிளிர்வு. 

இவருடைய எதிர்காலப் படைப்புகள் அமைய வேண்டிய இடம், இசை குறித்த ஆழமான புரிதல்களை இவர் தெரியப்படுத்தும் மேற்சொன்ன பாணிதான்.  இவர் பயணிக்கவேண்டியது அந்த அலைவரிசைகளில்தான். ஏனென்றால் அதுதான் இவருடைய ஆதிக்கம் உள்ள இடம். 

1964-ல் இசைப்பள்ளி துவங்குவதற்காக கலெக்டரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது வந்த மாரடைப்பு 43வது வயதில் காருகுறிச்சி பலவேசம் அருணாசலம் இசைப்பதை நிறுத்துகிறது. ஆனால் அவருடைய கலை அவரது இசையாலும், ரசிகர்களாலும், இவ்விதமான கட்டுரைத் தொகுப்புகளாலும், புனைவுகளாலும், வாசகர்களாலும் ஆங்காங்கே துடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

காருகுறிச்சி

நேனெந்து வெதுகுதுரா சால கல்லலாடு

Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ரசனையைக் களித்தலும் நுட்பத்தை வியத்தலும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.