நவீன சிறைச்சாலைத் தத்துவம்

“ஷகோர்! ஏமாற்றுக்காரா!” 

விண்மீன் பட்டையினருகே (Galactic Bar) அமைந்த க்ஸெர்சஸ் சுழலின் (Xerceus spiral arm) அருகே அவனைப் பார்த்த அதிர்ச்சியில் கத்தினேன் நான் – அவன் உயிரோடே இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

என்னைப் பார்த்ததும் அவனது முகமும் வெளிறியது. தான் இருந்த சிறிய விண்கலனின் ஜன்னலினூடே என்னை எகத்தாளமாகப் பார்த்தான். சற்றைக்கெல்லாம், எனது பக்கமிருந்த அகச்சிவப்பு தொலைத்தொடர்புக் கருவியின் வாயில்கள் (Infra-red communication ports) ஆக்ரமிக்கப்பட்டன. அதன் வழியே,

“உலகளாவிய ஆளுமை அட்டவணை அமைப்பு (Universal personality metric system) ஒரு நவீன யுக இன அழிப்பு, தோழா” 

ஷகோரின் குரல் கேட்டது. அது தேவைக்கும் அதிகமாகவே சத்தமாக இருப்பதாகப் பட்டது. ஒலிப்பெருக்கியின் வழி, காற்று அடைக்கும் சத்தம் கேட்டது – ஏதோ அவனே என் செவியருகில் பேசியது போல.

நான் அந்த விண்கலனில் பொதுவில் பகிரப்படும் தகவல்களை (Public domain data) எனது பக்கமிருந்த திரையில் சுட்டிப் பார்த்தேன் – அது ஒரு வாடகை விண்கலன் எனில் நிச்சயம் பயணிப்பவர் குறித்த தகவல்கள் பகிரப்பட்டிருக்கும். அத்தகவல்களில் அவன் பெயர் ஆகில் என்றிருந்தது. 

“மோசக்காரா! உன் தரப்பில் நியாயம் இருக்கிறதென்றால் பெயரை மாற்றுவானேன்? பிரச்சனையைக் கொல், மனிதர்களை அல்ல” என்று பதிலுக்கு அவனது விண்கலனின் அகச்சிவப்பு தொலைத்தொடர்புக் கருவியின் (Infra-red communication ports) வாயில்கள் வழி கத்தினேன். ஓர் உரத்த, செவிகளைச் செவிடாக்கும் சத்தத்துடன் தொலைத்தொடர்பு வாயில்கள் பலவந்தமாக மூடப்பட்டன – அவன் அனுமதி மறுத்திருக்கவேண்டும்.

நான் அவனைப் பிடித்து, ஒரு மாமிசம் வெட்டுபவனைப்போல், அவனைத் துண்டு துண்டாக வெட்ட விரும்பினேன்.அவனது தசைகளைப் புழுக்களுக்கு உணவாக இட விரும்பினேன். அவன் உயிரோடு இருக்கிறான். அதற்கான ஆதாரத்தை நான் சேகரிக்க வேண்டும். இல்லையெனில் அவனைக் கொன்ற கொலை வழக்கில் நான் தவறாக அவனால், சித்தரிக்கப்பட்டேன் என்பதை என்னால் எக்காலமும் நிரூபிக்க இயலாமல் போகும். செய்யாத கொலைக்காக நான் தப்பி வந்த சிறைக்கு மீண்டும் செல்ல வேண்டி இருக்கும். அதை நடக்க விடுவதாக இல்லை. 

அதற்கு எனக்கு நேரம் தேவைப்படும். இப்போது அதுதான் என்னிடம் இல்லை. 

நான் முதலில் என்னைத் தேடும் விண்மீன் மண்டலக் காவல் துறையிடமிருந்து தப்பிக்க வேண்டும். அதன் பிரகாரம், சிறைக் கைதிகளிடமிருந்து எனக்குக் கிடைத்த சில அதிர்வெண்கள் (frequency) கொண்டு, நியூட்ரினோ புயல்களிலிருந்து (neutrino transmission) மறைகுறியாக்கப்பட்ட (Encrypted data) தகவல்களைத் தரவிறக்கம் செய்தேன். அதனிலிருந்து, ‘பேதால் பச்சிஸி’ என்றொரு ரகசிய கிரகத்தின் பிரபஞ்ச ஒருங்கிணைப்பு (Galactic coordinates) எண்கள் கிட்டின. 

என் வாடகை விண்கலனின் ஓட்டுனர்களிடம் அங்கு என்னை அழைத்துப் போகப் பணித்தேன். 

“இந்தக் கிரகம் குறித்து ஏதேனும் தெரியுமா?” என்று அவர்களிடம் விசாரிக்கத் தவறவில்லை. ஆனால், அந்த விசாரணையில் பலனேதும் இருக்கவில்லை.

“கடந்த காலத்தில் சிலரை இங்கே இறக்கி விட்டிருக்கிறோம். அந்தப்படி, இக்கிரகத்தில் ஒரு நாள் என்பது சுமார் இருபத்து ஏழு மணி நேரம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்றபடி எங்களுக்கு வேறொன்றும் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய தேவையும் எழவில்லை. எங்கள் வேலை இங்கே கொண்டு வந்து விடுவது மட்டுமாகத்தான் இதுகாறும் இருந்திருக்கிறது.” என்றார்கள்.

“அப்படியானால் இந்தக் கிரகம் வருபவர்கள் வேறு எங்கும் செல்வதில்லையா?” என்றேன் நான்.

“அப்படியில்லை. இந்தத் தொழிலில் நாங்கள் மட்டும் இல்லை. வேறு பலரும் இருக்கலாம்” என்றார்கள் அவர்கள்.

விண்கலன் கிரகத்தை நெருங்க நெருங்க என்னை ஒருவிதமான பரவசம் சூழ்ந்துகொண்டது. அந்தக் கிரகம் டாக்கிடாரஸ் (Taggitarus A*) என்னும் கருந்துளையைச் (Black Hole) சுற்றி வந்துகொண்டிருந்தது. கருந்துளை மடித்து வளைத்த வெளிச்சத்தின் பின்னணியில், கிரகம் அமானுஷ்யமாகத் தெரிவதைப் போலிருந்தது. அதுகாறும், ஒரு கருந்துளையைச் சுற்றிவரும் கிரகத்தை அத்தனை கிட்டத்தில் நான் பார்த்ததே இல்லை. முதல் முறை பார்ப்பதினால், மயிர்க்கூச்செறிந்தது.

அந்த கிரகத்தை நெருங்கியதும், அவர்கள் என்னை ஒரு தரையிறங்கு களனில் (Descending Pod) வைத்து, அக்கிரகத்தில் தரையிறங்கச் செய்துவிட்டுச் சென்றனர். 

தரையிறங்குதல் அப்படி ஒன்றும் சொகுசாக இருக்கவில்லை. எவ்விதப் பிடிப்பும் இல்லாமல் உயிர் போய்விடுமோ என்று தோன்றச்செய்யும் அளவிற்கு, அடிவயிற்றைத் தொண்டையில் உணரச்செய்யும் வகைக்கு, வாந்தி வரச்செய்யும் அளவிற்கு ஒரு வீழ்ச்சி. பிறகு சட்டென, அடுத்த நொடியில், அந்தரத்தில் மயிலிறகு போல் காற்றில் தவழ்ந்து, அங்குமிங்கும் அலைபாய்ந்து மெல்ல மெல்ல தரை தொட்டேன். தரையிறங்கு களனின் கதவு தானாகத் திறந்து கிரகத்தின் வெம்மைக் காற்று நாசியில் பரவசமாக உணரச்செய்தது. தரையிறங்கு களனோடு பிணைக்கப்பட்டிருந்த வான்குடை மிதவை (parachute) காற்றில் படபடத்தபடி இங்குமெங்கும் அலைந்து கொண்டிருந்தது.

நான் எழுந்தேன். சுற்றிலும் பார்த்தேன். அத்துவானத்தில் கருந்துளை! 

என்ன ஒரு காட்சி! வழக்கமாகச் சூரியனைக் கண்டிருக்கிறேன். அவ்விடத்தில் கருந்துளை! அக்காட்சியை என் மனதுள் பீராய்ந்து பார்க்க நேரமெடுக்கும் என்றே தோன்றியது. தோள்களில் ஒரு சிறிய குரங்கு அமர்ந்திருப்பது போல் தோன்றி தலையை இப்படியும் அப்படியுமாக அசைத்துப் பார்த்தேன். எதுவும் இல்லை. ஆனாலும் பாரம் உணரமுடிந்தது. அது எதனால் என்பது புரியவில்லை. அதன் பிறகு நான் சுற்றிலும் நோட்டமிட்டேன். தொலைவில் மலைகள். நடுவே ஆறொன்று ஓடிக்கொண்டிருந்தது.

அந்த இடம் ஒரு கோதுமை வயல். சீராக வளர்ந்திருக்கும் கோதுமை வயல். ஓரங்கள் செப்பனிப்பட்ட கோதுமை வயல். ‘மனிதர்களற்ற கிரகமா’ என்று தோன்றியது. கூடவே ‘சேச்செ’ என்றும் தோன்றியது. யாரெனும் கோதுமையை விளைவித்திருக்க வேண்டுமே?

நெஞ்சு வரை வளர்ந்திருந்த கோதுமைச் செடிகளுக்கு அப்பால் ஒரு மனிதனின் தலை தெரிய நான் அவனை நோக்கி நடந்தேன். நான் அருகே வர வர, அவன் என்னிடம் ஒரு சிறிய மருத்துக்குடுவையை நீட்டினான்.

“இது உனக்குத் தேவைப்படும்” என்றான். அந்தக் குடுவையில் ‘தசை வலி, மூட்டு வலி, தோள் வலி’ என்று எழுதப்பட்டிருந்தது. நான் அக்குடுவைத் திறந்து, இரண்டு கை விரல்களிலும் மருந்தை எழுத்தி எடுத்து, என் தோள்களில் தடவினேன்.

“நான் ஒரு முறையான தரையிறங்கு தளம், குடியேற்றத்திற்கான முறையான சோதனைக்கூடங்கள், சோதனை அதிகாரிகள் என்று இருக்குமென்று எதிர்பார்த்தேன்” என்றேன். 

அவன் சிரித்தான்.

“தேனீர் வேண்டுமா?” என்றான். என் கேள்விக்கு அவன் பதிலே சொல்லவில்லை என்பதைக் குறித்துக் கொண்டேன். அவன் சற்று தொலைவில் இருந்த குடிலை நோக்கி நடந்தான். தென்னங்கீற்றாலும், பனை ஓலைகளாலும் வேயப்பட்டிருந்த அந்தக் குடிலை தரையில் ஊனப்பட்டிருந்த மரக்கட்டை ஒன்று தூணாய்த் தாங்கி நின்றிருந்தது.

“நான் அபாதி”

“நான் துகான். தேனீருக்கு நன்றி” என்று சொல்லியபடி அபாதி நீட்டிய தேனீர்க் கோப்பையை வாங்கிக்கொண்டேன்.  அந்தத் தேனீரைப் பருகியபோதுதான் அது ஒரு கோதுமைத் தேனீர் என்பது தெரிந்தது.

“இங்கே பால் தரும் விலங்குகள் இல்லை அல்லவா?” என்றான் நான் தேனீர் பருகி லேசாக உதடு கோணுவதைப் பார்த்துவிட்டு. 

“எத்தனை காலமாய் இங்கிருக்கிறீர்கள்?” என்றேன் நான். 

“வெகு காலம் இல்லை” என்றான் அபாதி. இது என்ன பதில் என்று எனக்கு உள்ளுக்குள் தோன்றியது. கேட்கவில்லை. 

பேச்சை மாற்ற, “என்ன செய்து இங்கே வந்தீர்கள்?” என்றேன் நான்.

“குற்றம் செய்தேன். என்ன குற்றம் என்று கேட்காதே. அது என் தனிப்பட்ட விடயம். காவல் துறையால் தேடப்பட்டேன். குற்றத்திற்கான தண்டனை அனுபவிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், என்னைக் குற்றம் செய்யத்தூண்டியவர்கள் தப்பிவிடக்கூடாது. அவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்கள். அவர்களுக்கான தண்டனையைத் தர முதலில் நான் பதுங்க வேண்டும். அப்படித்தான் இங்கே வந்தேன். நான் மட்டுமல்ல. இங்கு வரும் பெரும்பாலானவர்களுக்கு இப்படிப்பட்ட பின்னணி தான்” என்றான் அபாதி.

“அப்படியானால், இங்கே வேறு சிலரும் இருக்கிறார்களா?”

“கிரகம் முழுமைக்கும் இது ஒன்று தான் தரையிறங்கு தளம் என்று நான்  நினைக்கவில்லை. ஆனால், வாகனங்கள் இன்றி, ஆகாய ஊர்தி இன்றி கிரகத்தின் பிற இடங்களுக்குச் சென்று பார்க்க முடியவில்லை. மற்றபடி சற்று தொலைவில் ஒருவர் இருக்கிறார். பெயர், முல்தான். தொலைத் தொடர்பு நிபுணருடன் வேலை செய்வது அவர் தான். அவருக்கும் இதே பின்னணி தான்”

எனக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது.

“காவல் துறையால் தேடப்படும் அளவிற்கு நீ என்ன செய்து இங்கே வந்தாய்?” என்றான் அபாதி.

“உங்களுடையதைப் போல் என்னுடையது தனிப்பட்ட காரணம் இல்லை. பொதுவான காரணம் தான்” என்றேன் நான்.

“அப்படியென்ன காரணம்?”

“உலகளாவிய ஆளுமை அட்டவணை அமைப்பின் கணிணிப்பிரிவில் வேலை பார்த்தவன் நான். மனிதர்களை அவர்தம் தகுதிக்கேற்ப அது வரிசைப்படுத்தும். பிரபஞ்சம் முழுமைக்கும் இந்த வரிசையே அவர்களின் அடையாளம். அதில் ‘9’ என்ற எண் அமையப்பெற்ற ஷகோர் என்பவன், கணிணியில் தில்லுமுல்லு செய்து தன் எண்ணை ‘1’ என்றாக்கி இருந்தான். இதனால் பல நன்மைகளை அடைந்து பலரை ஏமாற்றியிருந்தான். அந்தத் தவற்றைக் கண்டுபிடித்துப் புகார் செய்தேன். அப்போது நான் பூமியில் கடலோரம் அமைந்த தில்லியில் என் மனைவி வீட்டில் இருந்தேன். என் மனைவி உடல் சுகவீனம் கொண்டிருந்தாள். என் மனைவியின் வீட்டருகே ஷகோர் இறந்து கிடந்தான். அந்தக் கொலைப் பழி என் மீது விழுந்துவிட்டது. காவல் துறை என்னைத் தேடுகிறது. என் தரப்பு நியாயத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. அதனால் காவல்துறையிடமிருந்து தப்பித்தபோது தான் ஷகோர் உயிருடன் வேறொரு அடையாளத்தில் உலவுவதைக் கண்டுபிடித்தேன். அவன் உயிருடன் இருப்பதை நிரூபித்தால் தான் கொலைப்பழி என்னை விட்டகலும். அதனால் இங்கே தப்பி வந்தேன்” 

“உலகளாவிய ஆளுமை அட்டவணை அமைப்பா? அதில்  நீ பணி செய்தாயா? அப்படியானால், உனக்கு  நடந்திருப்பதற்கு நீ தகுதியானவன் தான்” 

நான் மெல்லியதாகச் சிரித்தேன். 

“அதெல்லாம் புரிந்துகொள்ளாதவர்களின் அர்த்தமற்ற வெறுப்பு” என்றேன்.

“என்ன? என்ன புரிந்துகொள்ளவில்லை? இன்னாருக்கு இன்னார் தான் பொருத்தம், இன்னாருக்கு இன்னார் பொருத்தமில்லை என்று சொல்ல நீங்கள் யார்? எதன் அடிப்படையில் அப்படிச் சொல்கிறீர்கள் என்று வேண்டாமா? நீங்கள் செய்வது இனவழிப்பு தானே” என்றான் அபாதி சற்றே கோபத்துடன்.

“நீ என்ன ஜாதி?” 

“ஹ்ஹஹ… எத்தனை பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் பார்க்கிறாய் நீ?”

“இருபதாம் நூற்றாண்டு மனிதன் போல் நடக்காதே. இது இருபத்து நான்காம் நூற்றாண்டு”

“என்ன? என்ன இருபதாம் நூற்றாண்டு, இருபத்து நான்காம் நூற்றாண்டு?”

“ஆம்.  நான் சொல்வது இருபதாம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த ஐயாயிரம் ஜாதிகள் அல்ல. இருபதாம் நூற்றாண்டில் போல் சத்திரியன், வைஸ்யன், சூத்ரன், மந்திரம் ஓதுபவன் என்றெல்லாம் பாகுபாடுகள் இப்போது இல்லையே. இது இருபத்து நான்காம் நூற்றாண்டு. இங்கே மனிதர்கள் மரபணுக்கள் ரீதியில் பாகுபடுவதும், எவ்விதக் காரணமும் இல்லாமல் செய்யும் தொழில் ரீதியில் மனித இனம் பாகுபடுவதும் ஒன்றா?  பூமி மனிதர்களும், செவ்வாய்க்கிரக மனிதர்களுமே ஒன்றல்ல. மனித இனம் பால்வெளி மண்டலத்தின் பிற கிரகங்களுக்கு குடிபெயர்ந்ததில் மனித இனம் பலவாறாகப் பிரிந்துவிட்டது. இது இயற்கையின் பாகுபாடு. அதை நாம் ஏற்கத்தானே வேண்டும்.”

“அது புரியாமல் இல்லை, துகான். இன்னாருக்கு இன்னார் என்று எப்படி முடிவு செய்கிறது உங்கள் உலகளாவிய ஆளுமை அட்டவணை அமைப்பு? அதில் தான் குழப்பமே.”

“அதிலென்ன குழப்பம்? ஷகோரும் உன் போல் குழம்பியவன் தான் என்று நினைக்கிறேன்”

“ஓ? சரி நீதான் தெளிவாகச் சொல்லேன். இன்னாருக்கு இன்னார் என்று எப்படி முடிவு செய்கிறது உங்கள் உலகளாவிய ஆளுமை அட்டவணை அமைப்பு?”

“சரி, சொல்கிறேன் கேள். ஆண் இனம் அழிந்துகொண்டிருக்கிறது. அதாவது, ஆண் நிருவுருவான (chromosome) Y …….” என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே வெடித்துச் சிரித்தான் அபாதி.

“அது தெரியாதா? தம்பி, அது மிகவும் பழைய தகவல். ஆண் நிருவுரு அழிகிறது என்று முழுமையாக ஒப்புக்கொள்வதற்கில்லை என்பதை நீங்கள் தான் மறந்துவிட்டீர்கள். ஆண் தன்மைகளைத் தாங்கும் மரபணுக்கள் (genes) அந்த Y நிருவுருவை விட்டுப் பிரிந்து வேறு, சமமான நிருவுருக்களில் சென்று சேர்ந்துவிட்டதே. அது உங்களுக்குத் தெரியாதா?”

 நான் மத்திமமாகச் சிரித்தேன்.

“நல்லது. எங்கே சரித்திரம், மனித இனத்தின் பரிணாமம் எல்லாம் விளக்கவேண்டி வருமோ என்று எண்ணி பயந்துவிட்டேன். பாதி விஷயம் உங்களுக்கே தெரிந்திருப்பதில் மகிழ்ச்சி. இத்தனை தெரிந்திருக்கும் நீ, இப்போது ஆதிக்க சமூகமாய் இருப்பதில் தலை சிறந்த ஜாதியாய் ‘எள்ளா’ இனம் இருப்பதையும் அதற்கடுத்த இடத்தில் ‘மேனா’ இனமும், அதற்கடுத்து, ‘சளா’ இனமும், கடைசியாகவும், அழியும் இடத்திலும் ‘கபான்’ இனமும் இருப்பதை அறிவாய் என்று நம்புகிறேன்”

“ஆம். அறிவேன். அதற்கென்ன?”

“உனக்கு ஒன்று தெரியுமா? இருபத்தியிரண்டாம் நூற்றாண்டு முன் வரை, சமூக அடுக்கில், வசதி படைத்தவர்களாகவும், அதிகாரம் மிக்கவர்களாகவும் இருந்தவர்களெல்லாம் இப்போது என்ன செய்கிறார்கள் என்பது தெரியுமா?”

“தெரியாது. ஏன் பழமைகளை அகழாய்ந்து கொண்டிருக்கிறாய். மக்கள் மடத்தனத்தில் எதையோ செய்து எப்படி வாழ்ந்துமுடித்துவிட்டார்கள். அதெல்லாம் அழிந்து நூற்றாண்டாகிவிட்டது. அதையெல்லாம் ஏன் நினைவில் வைத்திருப்பானேன்? உன் மனம் இத்தனை அழுக்கானது என்று முன்பே தெரிந்தால், உன்னை அமர வைத்து உபசரித்திருக்க மாட்டேன்”

“அப்படியானால் மறந்துவிட்டாய் அல்லது தெரிந்துகொள்ளவில்லை”

அபாதி மெளனமாக என்னையே உற்றுப் பார்த்தபடி சுருங்கிய புருவங்களுடன் அமர்ந்திருந்தான்.

“சரி. விடு. நான் நினைவூட்டுகிறேன். அவர்கள் தான் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கும், இழி வேலைகள் செய்யும் ‘கபான்’ இனத்தவர்கள்”

“என்ன? என்ன சொல்கிறாய் நீ?”

“ஆம். அவர்கள் தான் இன்று சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள். இருபத்தியிரண்டாம் நூற்றாண்டில் சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்த இனம் தான் இப்போது, சமூகத்தின் மிக உயர்ந்த  ‘எள்ளா’ இனமாக இருக்கிறார்கள். இயற்கையின் விளையாட்டு!”

“என்ன? ஆச்சர்யமாக இருக்கிறதே? இது எப்படிச் சாத்தியமாயிற்று?”

“அதைப் பிறகு சொல்கிறேன். உலகளாவிய ஆளுமை அட்டவணை அமைப்பு குறித்து என்ன தெரியும் உனக்கு? அதன் மீது உனக்கு ஏன் இத்தனை வெறுப்பு? அதைச் சொல்?”

ஒருமுறை தலையைச் சிலுப்பிக்கொண்டான் அபாதி.

“நானறிந்தவரை, இருபத்தி இரண்டாம் நூற்றாண்டில் ஒரு அறிவியல் புனைவு எழுத்தாளரால், கணிதப்புனைவென உருவாக்கப்பட்ட அட்டவணை தான் அது. அதை அவர் நூலாக வெளியிட்டார். அது பெரிதாக எடுபடவில்லை. இருபத்து மூன்றாம் நூற்றாண்டில் அது அவரது வழித்தோன்றல்கள் வாயிலாக மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த முறை, அது உலகளாவிய ஆளுமை அட்டவணை அமைப்பாகிவிட்டது. இந்த அட்டவணை ஒவ்வொரு ஆண்-பெண்ணுக்கும் ஒரு எண்ணைத் தருகிறது. அந்த பூஜ்யத்திலிருந்து ஒன்பது வரையிலான எண்ணாக இருக்கிறது. ‘1’ என்ற எண் கொண்ட பெண், ‘1’ என்ற எண் கொண்ட ஆணைத்தான் மணமுடிக்க வேண்டும், போலவே பிற எண்கள் கொண்டவர்கள் என்று சொல்கிறது அந்த அட்டவணை. இதில் தான் குழப்பம். அது எப்படி ஆண், பெண்ணை இப்படி எண்களுக்குள் அடைக்க முடியும்? அது சரியா? தவறல்லவா? என்ன ஒரு மடத்தனமான அட்டவணை என்று தானே தோன்றும் யாரொருவருக்கும்?” என்றான் அபாதி.

“நீ அட்டவணை என்ன செய்ய வருகிறது என்பதைப் புரிந்துகொள்ளவே இல்லை என்று நினைக்கிறேன். அது சரியாகப் புரிந்துகொள்ளப்படாததால் தான் பெரிதாக எடுபடவில்லை. இருபத்து மூன்றாம் நூற்றாண்டில் அது அவரது வழித்தோன்றல்கள் வாயிலாக மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த போது, இந்த முறை சரியாக புரிந்துகொள்ளப்பட்டதால் தான் உலகளாவிய ஆளுமை அட்டவணை அமைப்பாகிவிட்டது.”

“சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்று சொல்கிறாயே? தயவுசெய்து அந்தப் பகுதியை விளக்க முடியுமா? எதில் கோட்டை விட்டேன் என்று நானும் தான் தெரிந்துகொள்கிறேனே” என்ற அபாதியின் குரலில் லேசான எகத்தாளம் இருப்பதை கவனித்தேன் நான். ஆயினும், அதனை பொருட்படுத்தவில்லை.

“அந்த அட்டவணையில் உன் பிரச்சனை என்ன?”

“அது எப்படி ஆண், பெண்ணை இப்படி எண்களுக்குள் அடைக்க முடியும்? அது தவறல்லவா? வாழ்க்கை என்பது அடுத்தவர் குறைகளை ஏற்றுக்கொள்வதும், அதைச் சமன்செய்வதும், அதில் ஒரு சம நிலையை அடைவதும் தான் அல்லவா? இதில் உயந்தவர், தாழ்ந்தவர் என்றெல்லாம் இல்லையே?”

“உனக்கு வேறு விதமாகத்தான் சொல்ல வேண்டும். தலைமுறைகள் கடந்த ஒரு வெற்றிகரமான மகிழுந்து உற்பத்தி நிறுவனம் எப்படி இயங்க வேண்டும்?”

அபாதி சற்று யோசித்துவிட்டு, 

“மகிழுந்து, அதன் அத்தனை ஆயிரம் அம்சங்களிலும் (Aspect) உச்சத்தை அடைந்திருக்க வேண்டும்” என்றான்.

“முதல் நாளிலேயே அந்த இடத்தை எப்படி அடைய முடியும்?”

“முதல் நாளிலேயே சாத்தியமில்லை தான். முதல் தலைமுறையில் குறைகள் கண்டறியப்பட்டு, அடுத்த தலைமுறையில் அவைகள் சரிசெய்யப்படும் விதமாய், ஒரு முறைப்படுத்தப்பட்ட-தொடர்-முன்னேற்றம் நடக்க வேண்டும்.. இது, தொடர்ச்சியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நடக்கையில், ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு மகிழுந்தில் வரக்கூடிய பொதுவான குறைகள் கண்டறியப்பட்டு களையப்படும். இவ்வாறான தொடர்-குறை-நீக்கத்தில் , சில அல்லது பல தலைமுறைகளில் மகிழுந்து சிறந்ததாக மாறும்”

“ஆக,இந்த ஒட்டு மொத்த செயல்முறையில் (Process) தொடர்-குறை-நீக்கம் நடக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தலைமுறையிலும், ஆற்றலின் நிமித்தம் அடுத்தடுத்த கட்டங்கள் முன் நகர வேண்டும். அதாவது முறைப்படுத்தப்பட்ட-தொடர்-முன்னேற்றம் நடக்கையில் அதன் கழிவாக தொடர்-குறை-நீக்கம் நிகழவேண்டும். இல்லையா?”

அபாதி ஆமோதிப்பாய்த் தலையசைத்தான்.

“இருபத்தியிரண்டாம் நூற்றாண்டு வரை மனித சமூகத்தில், இந்த இரண்டும் நிகழ்ந்தனவா? நிகழ்ந்ததற்கான ஆதாரம் ஏதேனும் இருக்கிறதா? அப்போதைய மனித சமூகத்தின் முன்னேற்றம் எத்தகையதாக இருந்தது?” என்றேன் நான்.

அபாதியின் கண்கள் இடமும் வலமுமாக அசைந்தன. அவன் எதுவும் பேசவில்லை. என்னையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

“வாழ்க்கை என்பது அடுத்தவர் குறைகளை ஏற்றுக்கொள்வதும், அதைச் சமன்செய்வதும், அதில் ஒரு சம நிலையை அடைவதும் தான் எனில் அதில் முறைப்படுத்தப்பட்ட-தொடர்-முன்னேற்றமோ, அதன் கழிவாக தொடர்-குறை-நீக்கமோ நடக்க இடமேதும் இல்லையே? தொடர்-குறை-நீக்கம் இல்லையெனில், மனித இனத்தில் உச்ச ஆற்றல் என்பது சராசரி (average) ஆக இருக்கத்தானே வாய்ப்பதிகம்?” என்றேன் நான் தொடர்ந்து. 

இப்போதும் அபாதி எதுவும் பேசவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தான்.

“ஆண் நிருவுரு மெல்ல வலுவிழந்து மற்ற மரபணுக்களில் சென்று சேர்ந்துவிட்டதால் தான் பற்பல ஆண் இனங்கள் உருவாகியிருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறாய் தானே?”

“ஆம். அது தானே நடக்கிறது?”

“நிருவுருக்களில் (chromosome) உள்ள மரபணுக்கள் எத்தனைக்கெத்தனை பயன்படுத்தப்படுகிறதோ, எத்தனைக்கெத்தனை அதன் விளிம்புகள் விஸ்தரிக்கப்படுகிறதோ அத்தனைக்கத்தனை அவைகள் திடப்படும். சக்தி பெறும். தொடரும். இருபத்தியிரண்டாம் நூற்றாண்டின் சமூகப்படி நிலையில் மிகவும் விளிம்பில் இருந்த மனிதர்களுக்கு வாழ்க்கை கடினமாகத்தான் இருந்திருக்கும். ஆனால், இயற்கையின் விந்தை இதுதான். கடினமான வாழ்க்கையில் தான், ஒரு விலங்கு, தனக்கிருக்கும் திறனின் ஒட்டுமொத்தத்தையும், பயன்படுத்தி பிழைக்க முயல்கிறது. இந்தத் தன்மை தான் மரபணுக்கள் இழப்பைத் தவிர்க்கிறது”

“ஹ.. இதற்கென்ன நிரூபனம்?”

“போலி மரபணுக்கள் (pseudogenes). நம் நிருவுருக்களில் இப்படி நம் மூதாதையற்களிடையே வேலை செய்த, இப்போது வேலை செய்யாத மரபணுக்கள் உள்ளன.  MYH16 என்பது அப்படியொரு மரபணு தான். தாடை தசைகளுக்கான மரபணு இது. உணவை வாயிலிட்டு மசித்து அரைப்பதற்கு வலு சேர்க்கும் இந்த மரபணு, மனித பரிணாமத்தில் பயன்படுத்தப்படாமல் இப்படி செயலற்றதாகிவிட்டது.”

அபாதியிடமிருந்து வார்த்தைகளில்லை.

“இருபதாம் நூற்றாண்டு வரை செல்வாக்கில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை அதிக சவால்கள் இன்றி, எல்லாமும் எளிமையாக இருந்திருக்க வேண்டும். ஆதலால், அவர்களின் மரபணுக்கள், பிற மனிதர்கள் சந்திக்கும் சவால்கள், பிரச்சனைகள், நிர்பந்தங்கள் ஏதுமின்றி, அதிகமான பயன்பாடு இன்றி மெல்ல மெல்ல அழிவைச் சந்தித்திருக்கிறது.”

அபாதி ஒரு முறை தலையை சிலுப்பிக்கொண்டான்.

“மனித இனத்தின் காலத்தின்-வழி முன்னகர்தலை, மகிழுந்துகளோடு ஒப்பிடுவது சரியா?”

“இந்தக் கேள்விகளால், மரபணு-இழப்பை நியாயப்படுத்த முடியாது, அபாதி.”

அபாதி சற்றே திணறிவிட்டு,

“சரி. இதற்கும் உலகளாவிய ஆளுமை அட்டவணைக்கும், அதிலுள்ள எண்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்றான்.

“ஏன் இல்லாமல்? முதலாவது, தகுதியற்றவற்றுக்கு இனப்பெருக்க வாய்ப்பை மறுப்பது. அட்டவணை சொல்வதென்ன? நூறு ஆண்களுக்குத் தொண்ணூற்று மூன்று பெண்கள் தாம் என்றிருக்கிற சமூகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற தேவையின் அடிப்படையில், ஏழு ஆண்களுக்குப் பெண்கள் இருக்க மாட்டார்கள். அந்த ஏழும் ஒரு சமூகத்திற்குத் தேவைப்படாத, பெண்களுக்கு எதிரான தன்மையினதாக இருந்துவிட்டால், இந்த ஒட்டுமொத்த சமூக ஒழுங்கிற்கும் நன்மை. இந்தப் பின்னணியில், சிலவற்றுக்கு இனப்பெருக்க வாய்ப்பை நிராகரிக்க வேண்டிய கட்டாயம் ஒரு சமூக இயங்கியலுக்கு அவசியமாகிறது.” 

அபாதி கவனமாக கேட்டுக்கொண்டிருந்தான்.

“இரண்டாவது, மரபணுவின் அழிவைத் தடுக்க,  நிருவுருவில் உள்ள அத்தனை மரபணுக்களையும், அதன் உச்ச அளவிற்கு பயன்படுத்தியே ஆகவேண்டுமென்கிற கட்டாயத்தை அளிப்பது.  அட்டவணை இந்த இரண்டையும் சாத்தியப்படுத்தவே உருவாக்கப்பட்டிருக்கிறது. பத்து ஆண்களுக்கு, ஒன்பது பெண்களைப் பொருத்தும் போது பொருத்தமில்லாத ஆண் இனப்பெருக்க வாய்ப்பு மறுக்கப்பட்டு சமூக அமைப்பிலிருந்து வெளியேறிவிட வேண்டி இருக்கும். இது, முதல் அவசியத்தை ஊர்ஜிதம் செய்கிறது. மரபணுக்களின் ஒட்டுமொத்த பயன்பாட்டையும் கண்காணிக்க, அளவிட, மதிப்பிடத்தான் எண் பொருத்தம் அடிப்படையிலான துணை தேர்வு உதவுகிறது. முதலாம் எண் கொண்ட பெண் வேண்டுமென்றால், ஏழாம் இடத்திலிருக்கும் ஆண் தன்னிடத்திலிருந்து ஆறு இடங்கள் மேலேறி வரவேண்டும் என்கிற கட்டாயத்தை உருவாக்குகிறது. அதே போல, முதலாம் எண் கொண்ட ஆண், அந்த முதலாம் எண் கொண்ட பெண்ணைத் தக்க வைக்க, மென்மேலும் உழைக்க வேண்டிய கட்டாயத்தையும் தருகிறது. இதையே இருபாலருக்கும் பொருத்திப் பார்க்கலாம். இது இல்லையேல், நிருவுரு இழந்த மரபணுக்கள்,  நாளை மரபணுத் தொகுப்பையே இழக்க நேரிடலாம். அப்படி நேரிட்டால், அது முழுமையான அழிவாக ஆகிவிடலாம். இதைத்தடுக்கும் உத்தியான முறைப்படுத்தப்பட்ட-தொடர்-முன்னேற்றத்தின் வழி கழிவாக தொடர்-குறை-நீக்கத்தை அட்டவணை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது” என்றேன் நான்.

அபாதி அமைதியாக இருந்தான், அவனது கண்கள் இடமும் வலமுமாக அலைபாய்ந்தன. 

“இப்போது புரிகிறது ஷகோர் ஏன் கணிணி மூலம் தன் எண்ணை உயர்த்தினான் என்பது” என்றான் அபாதி.

“ஆம். அவன் முறையாக உழைத்திருந்தால், தன் சுயத்தினாலேயே ஒன்பதிலிருந்து ஒன்றுக்கு முன்னேறியிருக்க இயலும். அவன் அப்படிச் செய்யவில்லை. அதனை அவன் செயற்கையாக, எவ்வித உழைப்பையும் நல்காமல், குறுக்கு வழியில் செய்தான். அது தவறு. அது மரபணுக்களில் போலிகளை உருவாக்கவும், நாளடைவில் மரபணு இழப்பை உருவாக்கவும் மட்டுமே வகை செய்யும். இன்று இவனை விட்டுவிட்டால், நாளை இவனைத் தொடர்ந்து பலர் இதனைச் செய்வார்கள். அது மனித குலத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கவே செய்யும்.”

“நீ உன் மனைவியைக் காதலிக்கவில்லை என்று நினைக்கிறேன்?” என்றான் அபாதி சட்டென.

அவன் கேள்வி என்னை துணுக்குறச்செய்தது. 

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்றேன் நான்.

“பின்னே? நீ ஷகோரின் தவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், உன் மனைவி பிழைத்திருப்பாள் அல்லவா? உன் மனைவி மீது உனக்கு அன்பிருந்தால் ஷகோரின் முகத்திரையைக் கிழிக்க நீ முயன்றிருக்க மாட்டாய். உன் மனைவியே அதற்கு அனுமதித்திருக்க மாட்டாள். ஏன் தெரியுமா? காதல், சில சமயங்களில் சிலவற்றை அனுமதிக்காது – அவைகள் எத்தனை தான் சரியானவைகள் என்றபோதிலும். கேள்வியுற்றதில்லையா? காதலிலும் சரி, போரிலும் சரி, தவறு என்று எதுவுமில்லை என்று.” என்றான் அபாதி.

நான் மெலிதாகப் புன்னகைத்தேன்.

“எனக்கு இது குறித்து ஒரு பிரஞை இருக்கிறது. பெற்ற பிள்ளை ஐம்பது நாள் கடினமாக வேலை பார்த்து மூன்றாவதாக வந்தால் சந்தோஷப்படும் பெற்றவர்கள், அதே பிள்ளை, நூறு நாட்கள் கடினப்பட்டு சில அவமானங்களைச் சந்திக்கையில், மூன்றாவதே வந்தாலே போதும் என்று நினைப்பார்கள் தாம். ஆனால், அந்தப் பிள்ளை அதோடு நிற்காமல், தொடர்ந்து முயன்று முதலாவதாக வருகையில், அதனால் இரட்டிப்பு சந்தோஷப்படும் பெற்றோர்களும் அவர்களாகத்தான் இருப்பார்கள்.  இப்போது சொல்? முதலாவதாக வந்து இரட்டிப்பு சந்தோஷத்தை தரமுடியும் என்னும் போதும், மூன்றாவதாக வருவதில் நின்றுவிடுவது எத்தகைய இழப்பு?” என்றேன் நான்.

அபாதி புரிந்தது போல் தலையாட்டினான்.

“இந்தக் கிரகம் வந்து நாழியாகிவிட்டது. அடுத்தகட்டம் குறித்து சிந்திக்க வேண்டும்? இந்தக் கிரகத்திலிருந்து வெளியேறுவது எப்படி?” என்றேன் தொடர்ந்து.

“அது என் வேலை அல்ல. முல்தானின் வேலை. அவன் தான் அந்த தொலைத் தொடர்பாளருடன் பழகுகிறான். என் வேலை, இங்கே ரொட்டி செய்து தருவது தான். நீ அவனைப் போய்ப் பார்”

“தொலைத் தொடர்பாளரா?”

“ஆம். நான் நேற்று வந்தேன். எனக்கு முன்பே ,முல்தான் இங்கிருந்தான். அந்த தொலைத் தொடர்பாளன் முல்தானுக்கு முன்பே இங்கு வந்திருக்கவேண்டும்.”

பயணக் களைப்பா, அல்லது வெம்மையா தெரியவில்லை,எனக்கு கண்கள் செருகியது. அமர்ந்த இடத்திலேயே உறக்கம் தழுவ நான் எப்போது உறங்கினேன் என்பது நினைவில் இல்லை. நான் எழுந்தபோது, அபாதி கோதுமை வயலிலிருந்து திரும்பிக் குடிலுக்கு வந்தான். உறக்கத்தில், என் களைப்பு நீங்கி தெளிவு பிறந்தது போலிருந்தது. அபாதி என்னருகே அமர்ந்தான்.

அப்போது தொலைவில் இன்னுமொரு தரையிறங்கு களன் இறங்கிக்கொண்டிருந்தது.

“அதுவும் சிறையிலிருந்து தப்பியவனாகத்தான் இருக்க வேண்டும்” என்றான் அபாதி.

“மன்னியுங்கள். நான் சற்று உறங்கிவிட்டேன்”

“சற்றா?” என்று சொல்லிச் சிரித்தான் அபாதி. தொடர்ந்து, அடுப்பு மூட்டி, சுள்ளிகளை இட்டு கோதுமை மாவு பிசைந்து கைகளாலேயே அழுத்தி விரிவடையச்செய்து, வாணலியில் இட்டு சுடத்துவங்கினான்.

“ஒரு நாள் என்பது இக்கிரகத்திற்கு வெளியே பூமி முதலான ஏனைய கிரகங்களில் எத்தனை காலம்?” என்றேன் நான்.

“அதைக் கணக்கிட நமக்கு வேறொரு வழி தேவைப்படுகிறது.” என்றான் அபாதி ரொட்டி சுட்டவாறே.

அவன் பூடகமாகவும், முழுமையாக இல்லாமலுமே பேசுவதால், முல்தானிடமாவது என் கேள்விகளுக்கு பதில் தேடலாமென்று எனக்கே தோன்றியது. அபாதி அளித்த ரொட்டி உணவை உண்டேன். நிறைய நீர் அருந்தினேன். பிறகு, அபாதியிடம் வந்தனம் சொல்லிவிட்டு, கிரகத்தின் தெற்கு பக்கம் நடக்கத் துவங்கினேன்.

நடக்கையில் எனக்கு என் கேள்விகளே அலைகழித்தன. வந்து பல காலம் ஆன பிறகும், எத்தனை நேரம் கடந்திருக்கிறது என்பது இன்னமும் தெரியவில்லை. அபாதி ஏன் ஒரே ஒருவனாக இருக்கிறான்?  அபாதி நேற்றே வந்ததாகச் சொல்கிறான். அப்படியானால், இந்தக் கோதுமைச் செடிகளைப் பயிரிட்டது யார்? நான் நடந்தேன், நடந்தேன், நடந்துகொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் ஒரு மலைக்குன்றை அடைந்தேன். அதன் அடிவாரத்தில் ஒரு சிறிய குகை. அதன் வாசலில் முல்தான் அமர்ந்திருந்தான்.

என்னைப் பார்த்ததும்  சினேகமாய்ப் புன்னகைத்தான்.

“புதியவனா?” என்றான். ஏற்கனவே நான் அபாதியிடம் பாடம் கற்றிருந்தபடியால், “என் பெயர் துகான். தொலைத் தொடர்பு நிபுணருடன் நீ வேலை செய்வதாக அபாதி கூறியிருந்தார். எனக்கு இக்கிரகம் விட்டு வெளியேற வேண்டும். அதற்கு வழியுண்டா?” என்றேன்.

சற்று தள்ளி ஒரு சிறு குன்றைக் காட்டினான். யாருக்கோ சமாதி செய்து வைத்தது போல் மேடிட்டிருந்தது அந்த இடம்.

“நிபுணர் இறந்துவிட்டார். நான் முந்தா நாள் இங்கே வரும்போதே அவர் உடல் சுகவீனமாகத்தான் இருந்தார். அவர் மரணிப்பதற்குள் இந்தத் தொலைத்தொடர்புச் சாதனங்களை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று தெரிந்துகொள்ள விரும்பியே நான் அவருக்கு உதவியாக இங்கிருந்தேன். அபாதி உணவு தயாரிப்பதைப் பார்த்துக்கொண்டான். ” என்றான் முல்தான்.

“கருவிகளைக் பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டீர்களா?” என்றேன் ஆர்வமுடன்.

“எனக்குக் கற்றுத்தர அவருக்கு விருப்பமில்லை என்றே நினைக்கிறேன். மேலும் கருவிகள் வேலை செய்யவில்லை. அவைகளைச் சீர்செய்வதே பிரதான வேலையாகப் பார்த்துக்கொண்டிருந்தார் அவர்.” 

“கற்றுத்தர விருப்பமில்லையா? ஏன்?”

“தெரியவில்லை”

“உங்களுக்குக் கற்றுத் தர அவருக்கு விருப்பமில்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”

முல்தான் அந்தக் குகையிலிருந்த போர்வையை விலக்க, அதனுள் பல கருவிகள் இருந்தன: சூரியத் தகடுகள், செலுத்துவாங்கிகள் (transponders), உணர்கொம்புகள் (Antennas), அலைவரிசை மாற்றுனர்கள் (frequency shifters).

“சமயத்தில் நான் கண்ணயர்ந்துவிட்டு எழுந்திருக்கையில் அவர் கவலையாய் அமர்ந்திருப்பார். அப்போது  நான் இக்கருவிகளைத் தொடுகையில் அவைகள் சூடாக இருக்கும். ஆனால் என்னிடம் கருவிகள் வேலை செய்யவில்லை என்பார். இவைகள் வேலை செய்யவில்லை என்றால், ஏன் சூடாக வேண்டும்? அவரிடம் கேட்ட போது, வேணல் உஷ்ணம் என்று சொல்லியிருக்கிறார். இக்கருவிகள் குகைக்குள் நிழலில் இருக்கின்றன. வேணல் உஷ்ணம் என்பது நம்பும்படியாகவே இராது.” 

சற்றைக்கெல்லாம் அரவம் கேட்க நாங்கள் திரும்பினோம். அபாதி எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தான். கையில் உணவுப்பொட்டலம். ரொட்டிகள் தாம்.

“ஏதேனும் முன்னேற்றம்?” என்றான் அபாதி. நாங்கள் அதுகாறும் பேசியதை முல்தான் அபாதியிடம் பகிர்ந்தான்.

“நீங்கள்…” என்று முல்தான் என் குறித்து வினவ, நானும் அபாதியும் பகிர்ந்துகொண்டதையெல்லாம் முல்தானிடமும் பகிர்ந்துகொண்டேன்.

“எனக்கும் அந்த அட்டவணை புரிந்திருக்கவில்லை. நானும் அதை, வேலையத்த, முதிர்ச்சியற்ற அணுகுமுறை என்கிற அளவிலேயே புரிந்துகொண்டிருந்தேன். ஆனாலும், அது எப்படி பிரபஞ்ச ரீதியில் எல்லா மனித வாழ்விடங்களிலும் ஒரு முறையான சமூகக் கட்டமைப்பாகப் பரவுகிறது என்ற கேள்வி எனக்குள் எப்போதும் இருந்திருக்கிறது. இப்போது உங்கள் விளக்கங்களைக் கேட்கையில் தான் நான் அந்த அட்டவணையைச் சரியாக உள்வாங்கவில்லை என்று தெரிகிறது” என்றான் முல்தான்.

“நாம் இக்கிரகத்தை விட்டுச் செல்ல என்ன வழி?” என்றேன் நான் பொறுமை இழந்தவனாய்.

“அதற்கு முதலில் நாம் இக்கிரத்தில் நேரம் எப்படி வேலை செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான், தொலைத்தொடர்பு கருவிகளைப் பயன்படுத்த அடிப்படை. முதலில் அதைக் கண்டுபிடிக்கலாம்” என்று சொன்ன முல்தான், பரபரவென அங்கிருந்த அந்தத் தொலைத்தொடர்பு நிபுணரின் கணிணியைத் துழாவத்துவங்கினான்.

நாங்கள் துழாவியதில் அக்கருவியில் பால்வெளி மண்டலத்திலிருந்து பெறப்பட்ட சமிஞைகள் எங்கள் கவனத்தை ஈர்த்தன.

“நம்மில் பால்வெளி மண்டலத்திலிருந்து வந்தவர்கள் யார்?” என்றான் அபாதி.

நான் கை உயர்த்தினேன். “என் மனைவியின் ஊர் பூமிக்கிரகத்தில் உள்ள தில்லி தான். கடலை ஒட்டிய அற்புத நகரம்.” என்றேன்.

“இதை நீ சற்று பாரேன்” என்றான் அபாதி.

நான் அத்தகவல்களைப் பீராய, தகவல்களைத் தொடர்ந்து பூமியிலிருந்து அந்த மடிக்கணிணி பெற்றிருந்திருப்பது தெளிவானது. அதை நான் ஆராய்ந்ததில், உச்சி மண்டையில் விளக்கெறிந்தது. அபாதியும், முல்தானும்  நான் சொல்வதைக் கேட்க காத்திருந்தார்கள்.

“பூமியிலிருந்து சமிஞைகள் வந்திருந்திருக்கின்றன. அந்த சமிஞைகளின் வரத்து இரண்டு முறை தடைபட்டிருக்கிறது. முதலாவதற்கும் இரண்டாவதற்கும் இடையே பதினைந்து மணி நேரம் இடைவெளி. இந்த இரண்டு தடைகளும் ஹாலீஸ் விண்கல் (Comet) பூமியை அண்மித்தபோது நடந்தவைகள். அதை வைத்துப் பார்க்கின், ஒரு மணி நேரம் என்பது பூமியில் சுமார் ஐந்து வருடங்கள் என்றாகிறது. ” என்றேன் நான்.

அபாதியும், முல்தானும் வாயைப் பிளந்தார்கள்.

எனக்கு, நான் எப்பேற்பட்ட சிக்கலில் சிக்கியிருக்கிறேன் என்பது புரிந்தபோது தரை நழுவுவது போல் இருந்தது. இது போன்ற கிரகங்களில் ஒத்திசையாத தகவல் தொடர்பே (Asynchronous Communication) சாத்தியப்படும். எதைச் சொல்ல வேண்டுமானாலும், அதனைப் பதிவு செய்து அனுப்பவேண்டும். அப்படி அனுப்பப்படுகையில் அது சிகப்பு அதிர்வெண்வரையில் நீட்டிக்கப்படும் (Red shifted). தகவலைப் பெறுபவர் தங்களது கிரகிப்பான்களை (receiver) அதற்கேற்றார்போல் தகவமைத்துக்கொள்ள வேண்டும். 

என் இமைகளோரம் கண்ணீர் பெறுகியது.

“இறுதியில், அட்டவணையை ஏமாற்றிவிட்டு அந்த ஷகோர் தப்பிவிட்டான். இத்தனை  நேரம் அவன் யாரையேனும் திருமணம் செய்து பிள்ளைகள் பெற்றிருக்கலாம்.  நீ உன் மனைவியையாவது காப்பாற்றியிருக்கலாம்” என்றான் அபாதி.

நான் ஒரு விரக்திப் புன்னகையை உதிர்த்தேன்.

“என்ன பிரயோஜனம்? அட்டவணையை ஏமாற்றுவது எளிதல்ல. எட்டு என்கிற எண்ணுடைய ஷகோர், அட்டவணையை ஏமாற்றி ஒன்று என்கிற எண்ணுடைய பெண்ணை மணமுடிக்கலாம். ஆனால் இரண்டு என்கிற எண்ணுடைய ஆண் அந்தப் பெண்ணை ஈர்க்கையில் அவனால், அந்த ஆணை நேர்மையாக, உழைப்பின் வழி, நேர்மறை வழிகளில் வெல்ல இயலாது. ஆக, அட்டவணை ஏமாற்றுக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் விளங்கும் என்பது பாதுகாப்பான அம்சம் அல்லவா? எப்படிப் பார்த்தாலும் அவன் வாழ் நாள் முழுவதும் யாரையேனும் எதையேனும் ஏமாற்றியபடியே தான் இருக்க வேண்டும். இப்படி யோசித்துப் பார்? தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கையில் உன்னால் நிம்மதியாக உறங்க முடியுமா? அவனை யாரும் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. அட்டவணையே அவனைத் துரத்தும் வேலையைப் பார்த்துக்கொள்ளும்” என்றேன் நான்.

முல்தான் மெல்லிதாகச் சிரித்தான். 

“சக கைதிகளிடமிருந்து நாம் பெற்ற அதிர்வெண்கள் நம்மை மீண்டும் சிறையில் அடைக்க விண்மீன் மண்டலக் காவல்துறையால் போடப்பட்ட திட்டம் என்றே கணிக்கிறேன்”

“எப்படிச் சொல்கிறாய், துகான்?” என்றான் அபாதி.

“அல்லாவிட்டால், இக்கிரகத்தில் கோதுமை விளைவித்தது யார்? நாம் வரும் முன்பே அது இருந்தது. அதுமட்டுமல்லாமல், அந்த தகவல் தொடர்பு நிபுணன்; அவன் காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க ஒருவனாக இல்லாவிடில், இத்தனை நவீன தொலைத்தொடர்புக் கருவிகள், கணிணிகள் அவனிடம் எப்படி வந்திருக்கும்? இப்படி யோசித்துப் பார். காவல் துறையில் இருந்து, சிறையிலிருந்து தப்பிக்கும் கைதிகளை மீண்டும் சிறையில் அடைக்க, இந்தக் கிரகத்தைத் தெரிவு செய்து, இங்கு வர, சிறைக் கைதிகள் மூலமே அதிர்வெண்கள் கிடைக்கச் செய்திருக்கலாம் இல்லையா?” 

“ஆனால் அவர் இறந்துவிட்டாரே?” ஐயமுடன் கேட்டான் முல்தான்.

“அவர் கைவிடப்பட்டிருக்கக்கூடும்.” என்றான் அபாதி தோல்களைக் குலுக்கியபடி.

“அப்படியானால் இதைச் சிறை என்கிறாயா?” என்றான் முல்தான்.

“இக்கிரகத்தில் ஒரு மணி நேரம் என்பது பூமியில் ஐந்து வருடங்கள். இதன் பொருள் என்ன? ஒரு குற்றம் நடக்கிறது. குற்றவாளி, துரோகத்தாலோ, பிற எதுவாலோ ஏமாற்றப்பட்டிருந்தால் அவன் நிச்சயம் பழிவாங்க முற்படுவான். அந்த உணர்வு அவனை மறுபடி குற்றவாளி ஆக்கும். இது ஒரு பெரும் சுழற்சி. இதைத் தடுப்பதெங்கனம்? அவனை எதிர்காலத்திற்குக் கடத்தி விட்டால், அவன் யாரைப் பழிவாங்குவான்? அவன் பழிவாங்க யாரும் இருக்க மாட்டார்கள். பழிவாங்கும் எண்ணத்தை மட்டுப்படுத்த இதை விடவும் ஒரு நவீன உபாயம் இருக்க முடியுமா என்ன? எனக்குத் தெரிந்து இதுதான் இருபத்து நான்காம் நூற்றாண்டின் நவீன சிறைச்சாலைத் தத்துவமாக இருக்க வேண்டும்” என்றேன். 

“நான்  உருப்படியாக என் மனைவியுடனாவது அவளின் அந்திமக்காலத்தைக் கழித்திருக்கலாம்.  நான் வரக் காத்திருக்கிறேன் என்றிருந்தாள். இப்போது என்னை முந்திக்கொண்டாளே” என்று கதறினேன் நான் தொடர்ந்து. என் விழிகளோரம் கண்ணீர் பெருந்திரளென திரண்டு நின்றது. நான் கண்களை இமைக்க, கண்ணீர்த் துளிகள் மெல்ல கன்னமிறங்கி கழுத்தை அண்டியது. கண்ணீரின் வழித்தடங்களை என் புறங்கையால் துடைத்தேன் நான்.

“உன் மனைவியின் பிரேதத்தைக் கண்டு விட்டாயா? இல்லையல்லவா? யார் கண்டது? உன் போல் உன் மனைவியும் இப்படியோர் கிரகம் அடைந்திருக்கலாம் அல்லவா? நான் அறிந்துகொண்ட ஒன்று உண்டு. மனதில் நிலைத்து நிற்பவர்கள் மரணத்தை வென்று விடுகிறார்கள் துகான். நீ நேற்று இக்கிரகம் வந்திருக்கிறாய். ஒரு மணி நேரம் என்பது பூமியில் ஐந்து வருடம் என்றால், நீ பூமி விட்டு வந்து சுமார் நூற்றி முப்பத்தி ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஒரு மனுஷியை, இத்தனை வருடங்களுக்கு மனதில் வைத்திருந்து, நினைவூட்டியது அனேகமாக நீயாகத்தான் இருக்க முடியும். அந்தப்படி, உன் மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் எவரும் இத்தனை ஆண்டுகள் மனதில் நிலைத்து வைத்திருந்திருக்க வாய்ப்பில்லை, துகான். அந்த வகையில் உன் மனைவி ஒருத்தி தான் மிக அதிக காலம் மரணத்தை வென்றவளாகியிருப்பாள்” என்றான் அபாதி.

அவனது வாதம் என்னைச் சற்று ஆற்றுப்படுத்தியதென்னவோ உண்மைதான்.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

6 Replies to “நவீன சிறைச்சாலைத் தத்துவம்”

  1. இந்தக் கதையில் அறிவியல்,சமூகவியல்,தத்துவம், உளவியல் என கதாசிரியர் பல இடங்களை தொட்டு செல்கின்றார்.
    1. எளிமையான மொழி
    2.விஞ்ஞான கலைச்சொற்களின் சரியான பயன்பாடு
    3. ரசிக்க வைக்கும் வர்ணனைகள்
    கருந்துளையின் காட்சி: “அத்துவானத்தில் கருந்துளை! என்ன ஒரு காட்சி! வழக்கமாகச் சூரியனைக் கண்டிருக்கிறேன். அவ்விடத்தில் கருந்துளை! அக்காட்சியை என் மனதுள் பீராய்ந்து பார்க்க நேரமெடுக்கும் என்றே தோன்றியது.”
    தரையிறங்கும் அனுபவம்: “தரையிறங்குதல் அப்படி ஒன்றும் சொகுசாக இருக்கவில்லை. எவ்விதப் பிடிப்பும் இல்லாமல் உயிர் போய்விடுமோ என்று தோன்றச்செய்யும் அளவிற்கு, அடிவயிற்றைத் தொண்டையில் உணரச்செய்யும் வகைக்கு, வாந்தி வரச்செய்யும் அளவிற்கு ஒரு வீழ்ச்சி. பிறகு சட்டென, அடுத்த நொடியில், அந்தரத்தில் மயிலிறகு போல் காற்றில் தவழ்ந்து…”
    கிரகத்தின் தோற்றம் “அந்தக் கிரகம் டாக்கிடாரஸ் என்னும் கருந்துளையைச் சுற்றி வந்துகொண்டிருந்தது. கருந்துளை மடித்து வளைத்த வெளிச்சத்தின் பின்னணியில், கிரகம் அமானுஷ்யமாகத் தெரிவதைப் போலிருந்தது.”
    உணர்வுகளின் வர்ணனை: “நெஞ்சு வரை வளர்ந்திருந்த கோதுமைச் செடிகளுக்கு அப்பால் ஒரு மனிதனின் தலை தெரிய நான் அவனை நோக்கி நடந்தேன்.”
    **********
    ​கதாபாத்திரங்கள் வெவ்வேறு தளங்களில் இருந்து வருகின்றார்கள். அது கதையின் உரையாடலை சுவையாக்குகின்றது
    துகான் – அறிவியல் ஆய்வக ஊழியர்
    அபாதி – தத்துவம் பேசுபவர்
    முல்தான் – ஆய்வு மனப்பான்மை
    இம்ரூப் பண்ணப்பட கூடிய இடங்கள்
    —————–
    1.பல முக்கிய சம்பவங்கள் நேரடியாக காட்டப்படாமல் விளக்கப்படுகின்றன
    2.துணைக் கதைகள் முழுமை பெறவில்லை
    3.கருந்துளை அருகே தகவல் பரிமாற்றம் எப்படி சாத்தியம்?
    4.கிரகத்தின் இயற்பியல் சூழல் முழுமையாக விவரிக்கப்படவில்லை
    5.வாடகை விண்கலன்களை யார் இயக்குகின்றார்கள் என்பதன் விளக்கம் இன்மை
    6.அபாதி நேற்று வந்ததாகக் கூறுகிறார், ஆனால் கோதுமை விவசாயம் ஏற்கனவே நடந்திருக்கிறது
    7.பாத்திரங்களுக்கிடையே ஆழமான உறவு வளர்ச்சி காட்டப்படவில்லை
    தொடர்ந்து எழுதுங்கள்.

  2. 1.பல முக்கிய சம்பவங்கள் நேரடியாக காட்டப்படாமல் விளக்கப்படுகின்றன
    சிறுகதை ஆசிரியர்: 7வது கேள்விக்கான விடைதான் இதற்கும்.
    2.துணைக் கதைகள் முழுமை பெறவில்லை
    சிறுகதை ஆசிரியர்: 7வது கேள்விக்கான விடைதான் இதற்கும்.
    3.கருந்துளை அருகே தகவல் பரிமாற்றம் எப்படி சாத்தியம்?
    சிறுகதை ஆசிரியர்: சாத்தியம். சிறுகதையில் சொல்லியிருக்கிறேன். சிறுகதையில் விலாவாரியாக வகுப்பெடுக்க விரும்பவில்லை.
    4.கிரகத்தின் இயற்பியல் சூழல் முழுமையாக விவரிக்கப்படவில்லை
    சிறுகதை ஆசிரியர்: 7வது கேள்விக்கான விடைதான் இதற்கும்.
    5.வாடகை விண்கலன்களை யார் இயக்குகின்றார்கள் என்பதன் விளக்கம் இன்மை
    சிறுகதை ஆசிரியர்: 7வது கேள்விக்கான விடைதான் இதற்கும்.
    6.அபாதி நேற்று வந்ததாகக் கூறுகிறார், ஆனால் கோதுமை விவசாயம் ஏற்கனவே நடந்திருக்கிறது.
    சிறுகதை ஆசிரியர்: கோதுமை யார் பயிரிட்டிருப்பார் என்பது குறித்து சிறுகதையின் இறுதிக்கட்டத்தில் வருகிறதே.
    7.பாத்திரங்களுக்கிடையே ஆழமான உறவு வளர்ச்சி காட்டப்படவில்லை
    சிறுகதை ஆசிரியர்: கருந்துளைகளைச் சுற்றும் கிரகங்கள் குறித்த பொதுவான புரிதல் இக்கேள்விகள் எழாமல் தவிர்க்கும் என்று நினைக்கிறேன்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள், நண்பரே!

  3. 17 – ஞாயிறு – நிகழ்வுக்கு வரத் திட்டமிட்டிருந்தேன். வர முடியாத சூழலால் இந்த பதிவு. மேலுள்ள பதிவு (Pnirmalk) தேர்ந்த சுட்டு. நன்றி. படிக்கும் மற்றவர்களுக்கும் தங்கள் பதிவில் ஒரு பயன்.

    மேலும், கூட்டு நிகழ்வுக்கு, கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக்க, ஏற்ற படைப்பே ” நவீன சிறைச்சாலைத் தத்துவம்” என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒரு (புது) தத்துவத்தின் பலன், பயன்களை கருத்தில் கொண்டு எழுத்தப்பட்டமையால், கூராகவும், முடிவு திருப்தியான ஆச்சரியத்தைத் தந்தது (எழுதி முடித்தபின் தங்களுக்கு இருந்தது போலும்)

    படைப்பிற்கு நன்றி திரு ராம்பிரசாத் |
    உரித்தான நிறைவான 10 நிமிடங்கள்

  4. 1.பல முக்கிய சம்பவங்கள் நேரடியாக காட்டப்படாமல் விளக்கப்படுகின்றன
    சிறுகதை ஆசிரியர்: 7வது கேள்விக்கான விடைதான் இதற்கும்.
    2.துணைக் கதைகள் முழுமை பெறவில்லை
    சிறுகதை ஆசிரியர்: 7வது கேள்விக்கான விடைதான் இதற்கும்.
    3.கருந்துளை அருகே தகவல் பரிமாற்றம் எப்படி சாத்தியம்?
    சிறுகதை ஆசிரியர்: சாத்தியம். சிறுகதையில் சொல்லியிருக்கிறேன். சிறுகதையில் விலாவாரியாக வகுப்பெடுக்க விரும்பவில்லை.
    4.கிரகத்தின் இயற்பியல் சூழல் முழுமையாக விவரிக்கப்படவில்லை
    சிறுகதை ஆசிரியர்: 7வது கேள்விக்கான விடைதான் இதற்கும்.
    5.வாடகை விண்கலன்களை யார் இயக்குகின்றார்கள் என்பதன் விளக்கம் இன்மை
    சிறுகதை ஆசிரியர்: 7வது கேள்விக்கான விடைதான் இதற்கும்.
    6.அபாதி நேற்று வந்ததாகக் கூறுகிறார், ஆனால் கோதுமை விவசாயம் ஏற்கனவே நடந்திருக்கிறது.
    சிறுகதை ஆசிரியர்: கோதுமை யார் பயிரிட்டிருப்பார் என்பது குறித்து சிறுகதையின் இறுதிக்கட்டத்தில் வருகிறதே.
    7.பாத்திரங்களுக்கிடையே ஆழமான உறவு வளர்ச்சி காட்டப்படவில்லை
    சிறுகதை ஆசிரியர்: பொதுக்கருத்து: கருந்துளைகளைச் சுற்றும் கிரகங்கள் குறித்த பொதுவான புரிதல் இக்கேள்விகள் எழாமல் தவிர்க்கும் என்று நினைக்கிறேன்.
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள், நண்பரே!

  5. உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள், தோழர்.

    ஆம். கிட்டத்தட்ட என்னுடைய எல்லா சிறுகதைகளையும் எழுதி முடிக்கையில் எனக்கு அந்த பரவச நிலை ஏற்பட்டிருக்கிறது.

    தன் குழந்தைகளைப் பார்த்துப் பரவசப்படாத தாய்மார்களும் இருப்பார்களா என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.