- கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை
- இமானுவல் கன்ட்டின் அழகியல் தத்துவம்
- இமானுவல் கன்ட்டின் உணர்வோங்குப் பெருநிலை
- கிரேக்கத்து ஸிஸிபஸும் கேரளத்துப் ப்ராந்தனும் – அல்பேர் கமூவின் அபத்தவாதம்
- சபலங்களைக் கடத்தல்
- எங்கிருந்து வந்தோம்? நாம் யார்? நாம் எங்கு செல்கிறோம்?
- எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 1
- எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 2
- பாவம், மரணம், நரகம்
- கானலின் நீரோ, காட்சிப்பிழையோ?
- இருளையும் ஒளியையும் வென்றவன்
- கண்டுணரும் நொடிப்பொழுதின் காட்சி
- ஒழுங்கின்மையின் உன்னதம்
- காலம் எரித்ததும், கணினி மீட்டதும்
எல்லாம் முடிந்துவிட்டது. ஹிட்லரின் ரெய்க் (Reich) ஆட்சி வீழ்ந்தது. எரிந்துபோன பெர்லின் மாநகரத்தின் சிதைவுகளுக்கிடையே இரஷ்யப் படைகளுக்குக் கிடைத்தது ஹிட்லரின் தாடை எலும்பு மாத்திரமே. புலன்விசாரனைகளுக்குப் பின் அவர் சுட்டுக்கொண்டு தற்கொலையானதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தெற்கே, பலநூறு மைல்களுக்கு அப்பால் SS என்று அறியப்பட்ட ஜெர்மனியின் தற்காப்புப் படை (Schutzstaffel) இன்னொரு அழிவை நடத்திக்கொண்டிருந்தது. 1945 மே மாதம் 7-ம் நாள் அவர்கள் தெற்கு ஆஸ்திரியாவில் இம்மெண்டார்ஃப் கோட்டைக்கு (Schloss Immendorf) வந்தார்கள். அங்கிருந்த ஜெர்மன் படைகள் அன்றுதான் சரணடையும் ஒப்பந்த்ததில் கையெழுத்திட்டிருந்தார்கள். அது பரந்த வெளியில் அமைக்கப்பட்ட மிக அழகான கோட்டை. அதனுள்ளே பல அற்புதக் கலைப்படைப்புகள் ஜெர்மானியப் படையால் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஆஸ்திரிய மேதை குஸ்தாவ் கிளிம்ட்டின் (Gustav Klimt) பதின்மூன்று ஓவியங்களும் அடக்கம்.
அரசியலுக்கு வருவதற்கு முன்னால் ஹிட்லரின் முதல் ஆர்வம் ஓவியம்தான். இரண்டு முறை முயன்றும் அவருக்கு வியென்னா ஓவியப் பள்ளியில் இடம் கிடைக்கவில்லை. பிறகு அவர் ஜெர்மனியின் வேந்தராகி, மில்லியன்களில் யூதர்களையும், இன்னபிற ‘உன்னதமற்ற’ மக்களையும் தீவிரமாக கொன்று குவித்துக் கொண்டிருந்த பொழுதும் இடையிடையே காட்சிகளுக்கு வந்து ஓவியங்களில் திளைப்பதைக் கைவிடவில்லை. அவருடைய ஓவிய ரசனை செவ்வியல் சார்ந்தது. 1935-ல் ஒரு மாபெரும் கூட்டத்தில், ஹிட்லர் “மலினத்திற்காக மலினத்தில் திளைப்பது, மனிதனை அழுகும் துர்நாற்ற நிலையில் வரைவது, அரூபிகளைத் தாய்மையின் அடையாளமாகச் சித்தரிப்பது, சிதைந்த முட்டாள்களை ஆண்மையின் சொரூபமாக அடையாளப்படுத்துவது கலையின் நோக்கம் இல்லை.” என்று வெகுண்டார். அதுவே மூன்றாம் ரெய்க்கின் கலைக்கான வரையறையாக ஆனது. நாட்ஸிகள் ஐரோப்பாவின் முதன்மை ஓவியர்களின் அரூப ஓவியங்கள், கருத்துப்பதிவு ஓவியங்கள், என்று அப்பொழுது பிரபலமாக இருந்தவர்களின் தலையாய படைப்புகளைத் தேடித்தேடி வாங்கினார்கள். அவை பிறர் கண்களில் பட்டுவிடக்கூடாது என்று அவற்றைப் பதுக்கி வைத்தார்கள். இவற்றில் வாஸிலி கன்டின்ஸ்கி (Wassily Kandinsky), ஆஸ்கார் கொகோஷ்ச்கா (Oscar Kokoschka,), எர்ன்ஸ்ட் லுட்விக் கிர்ச்னெர் (Ernst Ludwig Kirchner), பால் க்ளீ (Paul Klee), மாக்ஸ் என்ர்ன்ஸ்ட் (Max Ernst), மார்க் சகால் (Marc Chagall) போன்ற, இன்றும் காலத்தைக் கடந்து நிற்கும் படைப்பாளிகளின் ஆக்கங்களும் அடக்கம். அவ்வப்பொழுது ‘அவமானக் காட்சி’ (Schandausstellungen) என்ற பெயரில் இவற்றைப் பொதுவெளிகளில் காட்சிப்படுத்தி நாட்ஸிகள் அவற்றை இழிவுபடுத்தினார்கள்.

நாட்ஸிகளால் சேமிக்கப்பட்ட ஓவியங்கள் பல ஆஸ்திரியாவின் இம்மெண்டார்ஃப் கோட்டையில் இருந்தன. தோல்வியின் விளிம்பில் இருந்த SS படை, அந்த சிக்கலான காலகட்டத்திலும் அதிமுக்கிய காரியமாக கோட்டையில் இருந்த ஓவியங்களை எரித்தார்கள். காரணம், அவை அவமானகரமான, இழிந்த ஓவியங்கள் என்பது மாத்திரமல்ல. விரைவில் அந்தக் கோட்டைக்கு ரஷ்யப் படைகள் வந்துவிடுவார்கள், அவர்கள் கைகளில் இந்த ஓவியங்கள் கிடைத்தால் ரஷியர்கள் அவற்றைப் பெருமைப்படுத்தி காட்சியில் வைக்கக்கூடும். எப்படியும் ஹிட்லருக்கு ஒவ்வாத இந்த ஓவியங்கள் பெருமையை அடையக்கூடாது என்பது தங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையிலும்கூட அவர்களுக்கு அதிமுக்கியமாக இருந்தது.
இப்படி எரிக்கப்பட்ட ஓவியங்களில் மூன்று குஸ்தாவ் கிளிம்ட் வியென்னா பல்கலைக்கழகத்திற்காக வரைந்தவை. அவை நாட்ஸிகளின் கையில் கிடைக்கும் முன்பு, வியென்னாவில் காட்சியில் வைக்கப்பட்டதை ஒருவர் கருப்பு-வெளுப்பு நிழற்படமாக எடுத்திருக்கிறார். அவை மாத்திரமே இப்பொழுது நமக்குக் கிடைக்கின்றன. நாட்ஸிகள் மாத்திரம் அவற்றை வெறுக்கவில்லை; அவை படைக்கப்பட்ட காலத்தில் வேறு காரணங்களுக்காக அந்த ஓவியங்கள் ஆஸ்திரியர்களால் (குறிப்பாக பல்கலைக் கழகத்தால்) நிராகரிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டவை. அதன் வரலாறு சுவாரசியாமானது.

படம் – 1 வியென்னா வளையச்சாலையில் அமைந்திருக்கும் தேசிய ஓபரா (Wiener Staatsoper) கட்டடம். இது அடால்ஃப் ஹிட்லர் 1912-ஆம் ஆண்டு வரைந்த நீர்வண்ண ஓவியம். பெரும்பாலும் மாபெரும் மாளிகைகள், நகர வீதிகள் போன்றவற்றையே ஹிட்லர் வரைந்தார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. இவற்றுள் முக்கியமானது பதின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு நகரைச் சுற்றியிருந்த சுவர்கள் தகர்க்கப்பட்டு மிக அகலமான சாலை ஒன்று உருவாக்கப்பட்டமை. வளையச்சாலை (Ringstraße) என்று பெயரிடப்பட்ட இந்தச் சாலையின் உருவாக்கம் நகரின் முக்கிய பல கட்டடங்களையும், நிறுவனங்களையும் கூடவே உருவாக்கித் தந்தது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் பிரமிப்பைத்தரக்கூடிய பல அற்புதமான கட்டடங்கள் எழுப்பப்பட்டன. ஆஸ்திரிய நாடாளுமன்றம், வியென்னா பல்கலைக்கழகம், ஓபரா, கவின்கலைக் கழகம், நீதிமன்றம், நகரசபை, இன்னும் பல காட்சிக்கூடங்கள், கலை மன்றங்கள் இந்த வீதியில் அமைந்திருக்கின்றன. இந்த அபரா நகர வளர்ச்சி அதே சமயத்தில் கலை, தத்துவம், இலக்கியம், மருத்துவம் போன்ற துறைகளில் வியன்னா உருவாக்கிய மாபெரும் சாதனைகளைப் பிரதிபலித்தது. நரம்பியல், உளப்பகுப்பாய்வு, நோயியல், அறுவை சிகிச்சை முறைகள் போன்ற பல மருத்துவத் துறைகளில் வியன்னா உலகை வழிநடத்தியது. அவை தவிர, சிக்மன்ட் ஃப்ராய்ட் (உளப்பகுப்பாய்வு), லுட்விக் விட்கென்ஸ்டைன் (தத்துவம்), ப்ராம்ஸ், குஸ்தாவ் மாலர், ரிச்சர்ட் ஸ்ட்ரௌஸ் (இசை) போன்ற பல மேதைகளின் படைப்புகள் அதே காலத்தில் வியென்னாவில் உருவாகின.

படம் – 2 ஏதென்ஸ் பள்ளி, இத்தாலிய மறுமலர்ச்சிக் கலைஞர் ரஃபயேல் 1509-1511-ல் வரைந்த சுவரோவியம். வத்திகான் நகரின் அப்போஸ்தொலிக் அரண்மனையிலிருக்கும் இந்த மாபெரும் ஓவியம் 500 × 770 செமீ அளவுள்ளது.
வளையச்சாலையில் அமைந்த பல்கலைக் கழகத்தில் பெரிய மண்டபம் ஒன்று வடிவமைக்கபட்டது. 1894-ஆம் ஆண்டு ஆஸ்திரிய கலாச்சார, கல்வி அமைச்சகம் அதற்கான முக்கிய ஓவியங்களை வரைய குஸ்தாவ் கிளிம்ட்-டையும் அவருடைய நண்பர் ஃப்ரான்ஸ் மாட்ஸ்ச் (Franz Matsch) -யையும் பணியில் அமர்த்தியது. மண்டபத்தின் மேற்பகுதியில் பொருத்தப்பட ஓவியங்களை வரையவேண்டியது கிளிம்ட்டின் பணி. அறியாமையிலிருந்து அறிவொளியை அடைவதைச் சுட்டுவது ஓவியங்களின் அடிப்படைக் கருத்தாக இருக்கவேண்டும், தத்துவம், மருத்துவம், நீதி, இறையியல் இந்த நான்கு துறைகளிலும் வியென்னா பல்கலைகழகத்தின் மாபெரும் சாதனைகளை வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும். பொதுவாகச் சொன்னால், வரையப்பட வேண்டியது ஒரு வரலாற்றுப் பெருமை காட்டும் ஆவணம். அவை 1755-ல் வரையப்பட்ட பழைய சுவரோவியத்தை மறைத்துத் தொங்கவிடப்படும் என்பது நிறுவனத்தின் திட்டம். புதுப்படைப்பு ஒருவகையில் 1511-ஆம் ஆண்டு வத்திகான் நகரத்தின் அப்போஸ்தொலிக் அரண்மனையின் (Apostolic Palace, Vatican City) சுவரை அலங்கரிக்க ரஃபயேல் (Raphael) வரைந்த ஏதென்ஸ் கல்விக்கூடம் (The School of Athens) போன்று இருப்பது உசிதம். ரஃபயேல்-ஐ மாபெரும் மேதையாக உயர்த்திய அந்த அந்த ஓவியத்தில் சாக்ரடீஸ் பிளாட்டோவுடன் விவாத்தித்துக் கொண்டிருப்பார். பித்தாகோரஸ் ஆர்க்கிமிடிஸுக்கு வாசித்துக் காட்டுவார். இன்னும் லெனார்டோ டாவின்சி, அரிஸ்ட்டாட்டில், ஹெராகிளிட்டஸ், ஸரதுஸ்ட்ரா, டாலமி போன்ற மேதைகளை அதில் அடையாளம் காணமுடியும். ஏதென்ஸ் உலகுக்கு அளித்த கலை, தத்துவம், பொறியியல், ஒளியியல், வானியல், உடற்கூறியல், வரலாறு, கட்டடக் கலை சாதனைகளை அந்த ஓவியம் உரக்கச் சொல்கிறது. எப்படி ரஃபயேல் மறுமலர்ச்சி கால ஏதென்ஸ் நகரை உன்னதப்படுத்திக் காட்டினாரோ, அதேபோல் கிளிம்ட் வியென்னாவை வரைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிளிம்ட் வரைந்த ஓவியங்கள் அரசாங்கத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் பெரும் அதிர்ச்சியையும் எரிச்சலையும் தந்தன.

படம் – 3 ஓவியர் குஸ்தாவ் கிளிம்ட் (1862-1914)
கிளிம்ட்டிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? குஸ்தாவ் கிளிம்ட் (Gustav Klimt) பொஹிமியாவிலிருந்து வியென்னாவிற்குப் புலம்பெயர்ந்த பொற்கொல்லர் குடும்பத்தில் ஏழாவது குழந்தையாக 1862-ல் பிறந்தார். பதினான்கு வயதில் ஓவியம் மற்றும் கலைகளுக்கான அரசுப்பள்ளியில் சேர்ந்து ஓவியப் பயிற்சி பெற்றார். அங்கே அவரும் அவருடைய இளைய சகோதரர் எர்ன்ஸ்ட், நெருங்கிய நண்பர் ஃப்ரான்ஸ் மட்ஸ்ச் அவர்களுடைய திறமைக்காகப் பாரட்டப்பட்டார்கள். படிக்கும்பொழுதே அவர்கள் ஒரு குழுவாகப் பொதுவிடங்களுக்கான ஓவியங்களை வரைந்து சம்பாதிக்கத் தொடங்கினார்கள். இவர்களும் இன்னும் சில கலைஞர்களும் வியென்னா நகரத்தின் கலை இரசனை பாரீஸ், ம்யூனிக், பெர்லின் போன்ற பிற ஐரோப்பிய நகரங்களுடன் ஒப்பிட மிகவும் தேங்கிப் போனதாக வருந்தினார்கள். இதிலிருந்து உத்வேகம் பெற ஓவியர்கள், கட்டடக் கலைஞர்கள், சிற்பிகள் உள்ளிட்ட குழு 1897-ல் வியென்னா பிரிவினை (Wiener Secession) என்ற கலைப் புரட்சி அமைப்பைத் தோற்றுவித்தது. கிளிம்ட் அதன் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுபோன்ற சிறு குழுக்கள் ஐரோப்பாவில் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கின்றன. உதாரணங்களாக, க்யூபிஸத்தை வளர்த்த பிக்காஸோவின் நண்பர்கள் குழு, ஆந்ரே பிரெடான் (André Breton) முன்னடத்திய சர்ரியலிஸக் குழு, பிஸாரோ, மொனே, ரென்வார், செஸான் போன்றவர்களின் உணர்வுப்பதிவுக் குழு போன்றவற்றைச் சொல்லலாம். இந்த குறுங்குழுக்கள்தாம் கலையின் போக்கை மாற்றியமைத்த பல உத்திகளையும் முறைமைகளையும் உருவாக்கித் தந்தன. ஆனால் வியென்னா பிரிவினைக் குழு பொதுவான நோக்கங்கள் என்று எதையும் வரையறுக்காமல் கலைஞர்கள் சுதந்திரமாகச் செயல்பட ஊக்குவித்தது. கலையை உருவாக்குவதில் மாத்திரமே கவனத்தைச் செலுத்தாமல் பாரீஸ் சலான் போல ஓவியக் காட்சிகளை நடத்தி ஐரோப்போவின் கவனத்தை ஈர்ப்பதுவும், பொதுவில் கலைகளைத் துய்க்க, பாராட்ட ஆஸ்திரிய மக்களைப் பயிற்றுவித்தலும் அவர்கள் இலக்குகளாக இருந்தன.

படம் – 4 பெத்தொவென் அகல ஓவியம் (Beethovenfries, 1901-1902). இசைமேதை லுட்விக் வன் பெத்தோவெனின் (Ludwig van Beethoven) 75-ஆம் ஆண்டைக் கொண்டாடவும், வியென்னா பிரிவினைக்குழுவின் பிரச்சாரமாகவும் குஸ்தாவ் கிளிம்ட் உருவாக்கிய மாபெரும் கலைப்படைப்பின் ஒருபகுதி. நவகலையின் அம்சங்களை இதில் நன்றாகக் காணமுடியும். அழகின் கொண்ட்டாடமாக வண்ணக்கலவைகளும் சீரமைந்த நுண்வளைவுகளும் ஒருபுறமிருக்க, அதன் நடுவே கிரேக்கப் பாரம்பரியத்தில் கடவுளரே பயப்படும் டைஃபான் எனும் பெரும் அரக்கன். இடப்புறமிருக்கும் அவனுடைய மூன்று பெண்கள் காமம், துரோகம், அலட்சியம் இவற்றின் வடிவானவர்கள். கரிக்கோல், வண்ணக்கட்டிகள் கொண்டு வரையப்பட்ட ஓவியத்தின் மீது, கிளிம்ட் தங்கம், வெள்ளி, முத்துச்சிப்பி, பித்தளை, கண்ணாடி, இரும்பு ஆணிகள், இரத்தினக்கற்கள் போன்று பலவற்றால் அலங்கரித்திருக்கிறார்.
நவகலை (Art Nouveau) என்ற இயக்கத்தை இந்த வியென்னா பிரிவினைக்குழு வளர்த்தெடுத்தது. விளையாட்டுத்தனம், சொகுசு, விநோதம் இவற்றைக் கொண்ட நவகலை, ஒழுங்கமைவில் இருந்த பழைய கலைமுறைகளைப் பின்னுகுத் தள்ளி, தனித்துவம், நளினம், சீரொழுகும் முறை இவைகளை முன்னிருத்தியது. அது செல்வச் செழிப்பு, மேல்தட்டுச் சீர்மை, தரச் சீர்கேடு, அதிர்ச்சியூட்டல் எனப் பல முரண்களை உள்ளடக்கியது. ஓவியத்தைப் போலவே விளம்பரம், தளபாட வடிவமைப்பு, வனைதல் (pottery) போன்றவற்றிலும் நவகலை பேராதிக்கம் செலுத்தியது. இயற்கையின் மெல் வளைவுகள் (பூவிதழைப் போல), தாவரச் சீர்வளர்ச்சி போன்றவை இதன் நுட்பங்களாயின. அதுவரை நுண்கலைகள் என்று பெரிதும் போற்றப்பட்டுவந்த ஓவியம், சிற்பம் இவற்றையும் புழங்குகலைகளான கட்டடம், தளபாடம், சராசரிப் பயன்பொருட்கள் போன்றவற்றுக்கும் இடையேயான வேலிகளைத் தகர்த்து நவகலை எல்லாவற்றையும் பெருங்கொண்டாட்டமாக மாற்றியது. இவற்றின் காலக்கண்ணாடியாக, புனித வசந்தம் (Ver Sacrum) என்ற சஞ்சிகை வியென்னா பிரிவுக்குழுவால் வெளியிடப்பட்டது.

படம் – 5 வியென்னா பல்கலைக்கழகத்திற்காக குஸ்தாவ் கிளிம்ட் வரைந்த ‘தத்துவம்’ ஓவியத்தின் நிழற்பட நகல். (1899-1907). ஓவியம் 1945-ஆம் ஆண்டு நாட்ஸிப் படையினரால் எரிக்கப்பட்டது.
அதே நேரம் வியென்னாவின் வளையச்சாலையில் அமைந்த கலை வரலாற்று அருங்காட்சியகத்திற்காக (Kunsthistorisches Hofmuseum) சகோதர்கள் வரைந்த ஓவியம் பெரும் பாராட்டைப் பெற, கிளிம்ட்க்கு பல்கலைக்கழக ஓவியங்களை வரையும் ஒப்பந்தம் கிடைத்தது. அந்த ஓவியத் தொடருக்காக கிளிம்ட் வரைந்த முதல் படம் தத்துவம் குறித்தது. அது 1900-ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த உலகக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டது. அங்கு அதற்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் அது வியென்னாவிற்கு வந்தபொழுது அதன் கலைப்பாய்ச்சலுக்கு அவர்கள் தயாராக இல்லை; அதைப் பலரும் வெறுத்தார்கள். கிளிம்ட்டின் ஓவியம் அறிவுசார் சாதனைகளின் அனைத்து பெருமைகளையும் முற்றாக நிராகரிக்கிறது கல்விக்கூட மேதைகளின் பெருவிருப்புகளையும் ஆணவத்தையும் தகர்க்கிறது. ஓவியத்தில் இயற்கையின் முன் மனித குலத்தின் இயலாமையே ஓங்கி நிற்கிறது. இருபத்தைந்து வருடங்கள் கழித்து டி.எஸ். எலியட், ஆன்மாவைத் தொலைத்து, நோக்கமும் தொடர்புகளுமின்றி, புறத்தேட்டம் மட்டுமே கொண்ட வெற்றுமனிதர்களைப் பற்றி சொன்ன “உருவில்லா வடிவு, நிறமில்லா சாயல்; செயலிழந்த சக்தி, அசைவில்லா சைகை” என்ற வரிகள் கிளிம்ட்டை நினைவூட்டுக்கூடும். சிலர் அவை வெளிப்படையாகப் பால்கிளர்வூட்டுகின்றன என்றார்கள். இன்னும் சிலர் அது சிக்கலான குறியீடுகளைக் கொண்டிருக்கின்றது என்றார்கள். பலருக்கும் அந்த ஓவியம் என்ன சொல்கின்றதென்றே புரியவில்லை. பொதுவில் தன் ஓவியங்களைப் பற்றி அதிகம் பேசாத கிளிம்ட், “இடதுபுறம் இருக்கும் உருவங்கள், உயிரின் துவக்கம் (குழந்தை), வளர்ச்சி, பின் சிதைவைக் குறிக்கின்றன. வலப்புறம் அறியாமை என்ற இருளிலிருந்து அறிவு எனும் உருவம் வெளிப்படுகிறது.” என்று ஓவியத்தைப் பற்றிச் சொன்னார். ஆனால் விமர்சகர்களோ, நோக்கங்கள் எதுவும் இன்றி ஆண், பெண் உருவங்கள் காற்றில் அலைகின்றன என்று கடுமையான எதிர்வினைகளை எழும்பினார்கள். அறியாமை இருளை அறிவொளி வெற்றிகொள்வதைக் காட்சிப்படுத்த கிளிம்ட் பணியில் அமர்த்தப்பட்டார். ஆனால் அவர் வரைந்த ஓவியமோ, இலக்குகள், நம்பிக்கைகள், பகுத்தறிவு இவற்றுக்குப் பதிலாகக் கனவென்னும் அடர் திரவத்தில் இலக்கின்றி மிதக்கும் உடல்களைத்தான் தந்திருக்கிறன என்று அவர்கள் சாடினார்கள். பல்கலைக்கழகத்தின் பிரபல தத்துவப் பேராசிரியர் ஃப்ரீட்ரிக் ஜோட்ல் (Friedrich Jodl) ‘நான் நிர்வாண ஓவியத்தை எதிர்க்கவில்லை, அசிங்கமான ஓவியத்தையே எதிர்க்கிறேன்’ என்றார்.
Shape without form, shade without colour,
Paralysed force, gesture without motion…
– The Hollow Men, T. S. Eliot, 1925
அதற்கு அடுத்த வருடம், 1901-ல், தொடரில் இரண்டாவதாக, கிளிம்ட் மருத்துவம் குறித்த ஓவியத்தை அளித்தார். இது முன்னதைவிட அதிக எதிர்ப்பைச் சம்பாதித்தது.

படம் – 6 வியென்னா பல்கலைக்கழகத்திற்காக கிளிம்ட் வரைந்த ‘மருத்துவம்’ ஓவியத்தின் நிழற்படம். இதுவும் நாட்ஸிகளால் 1945-ல் தீயிடப்பட்டது.
அவருடைய ‘தத்துவம்’ ஓவியத்தைப்போலவே இதுவும் சமச்சீரற்றது. இடது புறத்தில் ஒற்றை நிர்வாண மங்கை இலக்கின்றி, மிதந்து, விலகிச் செல்கிறாள். கிளிம்ட் அவளை வாழ்வின் குறியீடாக்கியிருக்கிறார். அவள் காலடியில் ஒரு குழந்தை. மாறாக வலப்புறத்தில் அடர்த்தியாக பல்வேறு வடிவங்களில், பல நிலைகளில் பெண்களும், ஆண்களும் (எலும்புக்கூடும் கூட) நிரம்பியிருக்கிறார்கள். அக்கூட்டத்திலிருந்து விலகும் நிர்வாணப் பெண்ணை ஒரு ஆணின் கரம் பிடித்திருக்கிறது (கிட்டத்தட்ட அவளை இழுத்துத் தம் கூட்டத்துடன் திரும்பச் சேர்க்க முயல்வதைப்போல்.) இது வாழ்வின் ஓட்டத்திலிருந்து யாரும் தப்பிவிட முடியாது என்று உணர்த்துவதைப் போலிருக்கிறது. ஓவியத்தின் கீழ் பெரும்பகுதியை ஒரு அலங்கார மங்கை நிரப்புகிறாள். அவள் ஹைஜியியா (Hygieia), கிரேக்க மருத்துவக் கடவுளான ஏஸ்க்ளிப்யஸ்-ன் (Asclepious) மகள்; வியாதிகளிலிருந்து குணப்படுத்தும் கடவுள். இன்றும் உலகம் முழுவதும் மருத்துவப் படிப்பை முடித்துப் பட்டம் பெறும் பொழுது ‘ஹிப்போக்ரடிக் உறுதிமொழி’-யைச் (Hippocratic Oath) சொல்லித் தங்கள் மருத்துவப் பணியைத் துவங்குகிறார்கள். அது அப்போலோ, ஏஸ்க்ளிப்யஸ், ஹைஜியியா, பனாசியா என்ற தெய்வங்களுக்குத் தரும் வாக்குறுதியாகவே சொல்லப்படுகிறது. அவள் மேல் மருத்துவத்தின் அடையாளமான ஏஸ்குலாப்பியன் பாம்பு படர்ந்திருக்கிறது. அவள் கையிலிருக்கும் கோப்பையில் லெத் (Lethe) ஆற்று நீர் இருக்கிறது. அதைக் குடிப்பவர்கள் தங்கள் பழைய நோவுகளையும் கவலைகளுயும் முற்றிலும் மறந்துவிடுவார்கள். ஓவியத்தின் மேற்பகுதியில் ஒரு கர்ப்பிணிப் பெண், அவளையொட்டி ஒரு சிறுமி அவளுக்கருகில் ஒரு மண்டையோடு பிரதானமாகத் தெரியும் ஒரு எலும்புக்கூடு. இது பிறப்பு நிகழும்போதே அதையொட்டி மரணமும் சர்வநிச்சயம் என்று உணர்த்துகிறது. மரணத்தையும் பிணியையும் வென்றுகொண்டிருக்கிறோம் என்று இருமாப்பில் இருந்த மருத்துவர்களிடம் அவர்களது தொழிலின் இயலாமையை, மனிதனைத் தொடர்ச்சியாக வெல்லும் இயற்கையின் பேராற்றலை, அப்பட்டமாகச் சுட்டுவதைப் போல இந்த ஓவியத்தை கிளிம்ட் வரைந்திருக்கிறார்.

படம் – 6 மறுமலர்ச்சி காலந்தொட்டு மேற்கத்திய ஓவியங்கள் அழகின் வெளிப்பாடாகவே பெண்களைக் காட்டியிருக்கிறது. கிளிம்ட் நிறைமாதக் கர்ப்பிணி, பயந்த சிறுமி, அவலத்தின் உருவாகப் பெண். சாவின் வெளிப்பாடாக எலும்புக்கூடு என வடிவ நேர்த்தியைப் புறந்தள்ளி இயல்பான பெண் வடிவங்களாக வரைந்தவை பெரும் அதிர்ச்சியூட்டின.
இந்த ஓவியம் வெளியான பொழுது மருத்துவ வார இதழ் (Medizinische Wochenschrift) என்ற சஞ்சிகை நோய்த் தடுப்பு, குணமாக்கல் இரண்டிலும் நவீன மருத்துவம் சாத்தித்திருக்கும் முன்னேற்றங்களை ஓவியர் முழுவதுமாக மறந்துவிட்டார் போலிருக்கிறது என்று சீறியது. அந்தக் காலங்களில் தியோடர் பில்ரோத் (Theodor Billroth, 1829-94), ஃப்ரான்டிஸெக் ச்வோஸ்டெக் (Frantisek Chvostek, 1835-84), லுட்விக் டுர்க் (Ludwig Türck, 1810-68) போன்ற உலகப் புகழ்பெற்ற மருத்துவர்கள் வியென்னாவில் இருந்தார்கள். ரஃபயேல் அரிஸ்டாட்டிலையும், பிளாட்டோவையும் காட்டியதைபோல உன்னதப்படுத்தாமல், அரைமயக்கத்தில் இலக்கின்றி மிதக்கும், விதியின் போக்கில் அலையும் வெற்றுடல்களால் ஓவியத்தை நிரப்பிவிட்டார் என்று மருத்துவர்கள் வெறுத்தார்கள். பாரீஸிலும், ம்யூனிக்கிலும், ஆம்ஸ்டர்டாமிலும் கிளர்த்து எழும் நவீன ஓவியத்தின் போக்குகள் அவர்களுக்குத் தெரிந்திருக்கச் சாத்தியமில்லை! நிர்வாண உடல்களை வரைவது மேற்கத்திய ஓவியமுறையில் பல நூறு ஆண்டுகளான பாரம்பரியம்தான். ஆனால் அவர்கள் வரையும் உடல்கள், கிரேக்கம் வளர்த்தெடுத்த பெண்மையின் மென்மை, பேரழகு, ஆணின் திடம் என்பவற்றின் வரையறைகளாக உன்னதப்படுத்தப்படும் உருவங்கள் மாத்திரமே. கிளிம்ட் வரைந்ததென்னவோ கர்ப்பிணிகள், மூதாட்டிகள், சிதிலமடையும் எலும்புக்கூடுகள் போன்றவை. இவை எல்லாவற்றையும் அன்றாடம் பார்த்துக் கொண்டிருந்தாலும், ஓவியத்தில் இவற்றைக் கண்டபொழுது ஆஸ்திரிய மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சியைச் சொல்லி மாளாது.
முழுவதும் எதிர்ப்புதான் என்றில்லை. கிளிம்ட்டிற்கு ஆதரவாகச் சிலரும் இருந்தார்கள். அவர் புரிந்துக்கொள்ளப்படாத, தனிமைப்படுத்தப்பட்ட, கலைஞர், இவற்றின் எதிர்ப்பாகத்தான் அவர் இந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார் என்று சிலர் எழுதினார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. படிக்கும் காலத்திலிருந்தே கிளிம்ட்டின் ஓவியத்திறமை பலராலும் ஒத்துக்கொள்ளப்பட்டது. அதன் விளைவாகவே அவருக்கு நல்ல இலாபம் தரும் ஓவியப்பணிகள் அரசாங்கத்தாலும், அருங்காட்சியகம், நாடக மன்றம், பல்கலைக்கழகம் போன்ற பொது அமைப்புகளாலும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருந்தன. அவர் முன்னின்று உருவாக்கிய வியென்னா பிரிவினைக்குழுவுக்கு அரசாங்கம் பெரும் மானியம் தந்து ஊக்குவித்தது. அதற்கான தனிக் கட்டத்தைக்கூடக் கட்டமுடிந்தது. வேறு வழியில் பார்த்தால், கிளிம்ட் பாரம்பரியத்தைப் பற்றி அறியாதவரல்லர். அவருடைய தத்துவம் குறித்த ஓவியம், ரிச்சர்ட் வாக்னரின் இசை, ஃப்ரெட்ரிக் நீட்சவின் தத்துவம் இவற்றின் கூறுகளை உள்ளடக்கியதாகப் பின்னாள் விமர்சகர்கள் பலரும் அடையாளம் காட்டியிருக்கிறார்கள். கிரேக்க மருத்துவக் கடவுளான ஹைஜியியா, மருத்துவத்தின் அடையாளமாக அவள் மேல் படரும் பாம்பு போன்ற பாரம்பரியச் சின்னங்களை உள்ளடக்கியே அவர் வரைந்திருக்கிறார். ஐந்து வயதிருக்கும்பொழுது கிளிம்ட்டின் தங்கை இறந்தது அவரில் அழியாத பாதிப்பை உருவாக்கியது. பின்னர் அவருடைய அக்காவும், அம்மாவும் மனப்பிறழ்வுக்கு ஆளானார்கள். அவர் ஓவியத்தை வரைந்த அதே சமயத்தில்தான் வியென்னா நகரில் சிக்மண்ட் ஃப்ராய்ட் உலகப்புகழ் பெற்ற உளப்பகுப்பாய்வுக் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். கிளிம்ட்க்கும் ஃப்ராய்ட்க்கும் அதிகத் தொடர்பிருந்ததற்கான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும், கிளிம்ட் ஃப்ராய்ட்டின் ஆழ்மன உணர்வெழுச்சிகள் குறித்து உருவாக்கிய புரட்சிக் கருத்தாக்கங்களைக் கட்டாயம் கேள்விப்பட்டிருக்கக்கூடும். அதற்கான சாத்தியங்களாகக் கனவுகளும், பாசாங்கற்ற பாலுணர்வு வெளிப்பாடுகளும் அவர் ஓவியங்களில் நிறையவே நிரம்பி இருக்கின்றன. தன்னைத் தனித்தன்மை கொண்டவராகவும், தன் மேதைமையை நிலைநிறுத்தவுமே அவர் முற்றிலும் பாரம்பரியத்தில் தோயும் ஓவியங்களைத் தவிர்த்து, புதிய உத்திகளை உருவாக்கிக் கலையை முன்னெடுத்துச் செல்வதில் கவனம் செலுத்தியதாகத்தான் தெரிகிறது. அது பேருண்மையும்கூட. இன்று நாம் அந்த ஓவியங்களை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் வாழ்ந்த காலத்தை விஞ்சிய அவரது மேதைமையைக் குறித்த வியப்பு மேலிடுகிறது.
மறுமலர்ச்சி காலம் துவங்கி ஓவியர்கள் வரைகணிதத் துல்லியத்துடனான முப்பாரிமாண உலகை வரைந்துகொண்டிருந்தார்கள். மேலும் மேலும் அதன் பரிமாணங்களைத் தீர்க்கமாக விரித்தெடுத்தார்கள். அவர்கள் காண்பவரை கைபிடித்துத் தம் ஓவியங்களுக்குள்ளே அழைத்துச் சென்றார்கள். கிளிம்ட்டோ வேறு உத்தியை முன்வைத்தார். ‘மருத்துவம்’ ஓவியத்தில் இடப்புறம் முப்பரிமாணம் துலங்குகிறது. மறுபுறத்தில் உடல்கள் ஒன்றன்மேல் ஒன்று சுமத்தப்பட்டு துவக்கமும் முடிவுமற்ற ஆழத்தில் இருக்கின்றன. ஒருவகையில் ஃப்ராய்ட் நனவிலி உலகமாகச் சொன்ன தொடர்பற்ற, கட்டுப்பாடற்ற காட்சிகளாக இவை வெளிப்படுகின்றன. இதில் காலத்தால் மேம்பட்ட, நுட்பமான உத்தி முன்னெடுப்பும் இருக்கிறது. அதுநாள் வரை ஓவியர் வரையறுத்த உலகிற்குத்தான் பார்வையாளர் செல்லமுடியும், கிளிம்ட் பார்வையாளரே தனக்கான உலகை வகுத்துக்கொள்ள பாதையிட்டுத் தந்தார். இது பெரும்பாய்ச்சலை நிகழ்த்தவிருக்கும் இருபதாம் நூற்றாண்டின் புதுத்துவக்கம்.

படம் – 7 குஸ்தாவ் கிளிம்ட்டின் மறைவுக்குப் பின் தன்னை அவருடைய மகளாக அறிவித்துக்கொண்ட எலிஸபெத் லெடரர். இதன் நுணுக்கமான வேலைப்பாடுகளும் கண்கவரும் நிறக்கலவைகளும் நவகலையின் வெளிப்பாடுகள். கிளிம்டின் இந்த ஓவியத்தில் ஜப்பானிய ஓவியங்களின் மீது அவர் கொண்ட பெருமதிப்பைக் காணமுடியும். திரைச்சீலையில் நெய்ப்பூச்சினால் வரையப்பட்டது.
தான் அமர்த்தப்பட்ட பணியைச் செய்துமுடிக்க கிளிம்ட் தொடர்ந்து நீதி பரிபாலனம் குறித்த ஓவியத்தை வரைந்து முடித்தார். அது முந்தைய இரண்டையும்போல காலத்திற்கு விஞ்சிய கருத்துருவாக்கத்தையும் ஓவிய அமைப்புகளையும் கொண்டது. அதுவும் புரிந்துகொள்ளப்படமாலயே போனது. இறையியல் குறித்த ஓவியத்தை ஃப்ரான்ஸ் மாட்ஸ்ச் பெரிதும் செவ்வியல் முறையிலேயே வரைந்தார். வியென்னாவின் கலை இரசனையை பாரிஸ் போன்ற பெருநகரங்களின் அளவுக்கு உயர்த்தவேண்டும் என்ற நோக்கத்திலேயே கிளிம்ட்டும் நண்பர்களும் வியென்னா பிரிவினை அமைப்பை உருவாக்கினார்கள். ஆனால் அது தொடங்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பல்கலைக்கழக ஓவியங்களைப் புரிந்துகொள்ளுமளவிற்கு இரசனை வளர்ந்திருகவில்லை. பல்கலைக்கழக நிர்வாகத்திற்குத் திட்டமிடப்பட்டதைப்போல் இவற்றைக் காட்சிப்படுத்த முனைப்பில்லாமல் போயிற்று. முற்றிலும் மனம் வெதும்பிப்போன கிளிம்ட் அவருடய பணக்கார இரசிகர்களின் உதவியுடன் அவற்றை வரைவதற்காக அளிக்கப்பட்ட ஊதியப் பணத்தைத் திரும்பக் கொடுத்து ஓவியங்களைத் தானே வாங்கிக்கொண்டர்.
குஸ்தாவ் கிளிம்ட் அதிகார்வபூர்வமாக யாரையும் மணந்து கொள்ளவில்லை. ஆடை வடிவமைக்கும் கலைஞரான எமிலி ஃபோல்க-வுடன் (Emilie Flöge) இணையில் இருந்தார்; அவர்களுக்குக் குழந்தைகள் கிடையாது. ஆனால் அவருடைய மாடல்களாகப் பணியாற்றிய பிற பெண்கள் மூலமாக அவருக்குப் பல குழந்தைகள் இருந்ததாகப் பதிவாகியிருக்கிறது. மறைவுக்குப் பிறகு 14 பேர் ‘நான் அவருக்குப் பிறந்தேன்’ என வாரிசுக் கோரிக்கை எழுப்பினார்கள். அதிகார்வபூர்வமாக ஆறு குழந்தைகளே பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருவர் கிளிம்ட்டுக்கு முன்னரே இறந்துபோயிருந்தார்கள். 1918-ஆம் ஆண்டு ஐரோப்பாவை உலுக்கிய இன்ஃபுளூவென்ஸா கொள்ளைநோய்க்கு கிளிம்ட் பலியானார். அப்பொழுது அவருக்கு வயது ஐம்பத்தைந்து. கூடவே இந்த ஓவியங்களில் இணைந்து பணியாற்றிய அவருடைய ஓவிய நண்பர் மோஸரும் மரித்துப்போனார். பின்னர் மருத்துவம் குறித்த ஓவியம் ஆஸ்திரிய கலைக்கூடத்தாலும், நீதிபரிபாலனம் ஓவியம் அகுஸ்ட்-செரினா லெடரர் (August and Szerena Lederer) தம்பதியினராலும் விலைக்கு வாங்கப்பட்டன. லெடரர்கள் மது மற்றும் ரொட்டிமாவு வியாபாரங்களால் கொழித்த பெரும் பணக்கார யூதக் குடும்பம். கிளிம்ட்டை தங்கள் குடும்பத்தினரையும், பிற ஓவியங்களையும் வரையத் தொடர்ச்சியான பணியிலமர்த்தி அவருக்குப் பெரும் ஆதரவு தந்தவர்கள். அவர் மரணத்துக்குப் பிறகும் அவருடைய ஓவியங்களைத் தேடித்தேடி வாங்கிச் சேகரித்தார்கள். ஆனால் நாட்ஸிகள் ஆஸ்திரியாவைக் கைப்பற்றியபின் அவர்கள் குடும்பம் சிதையத் தொடங்கியது. மகள் எலிஸபெத் லெடரர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு ப்ராட்டஸ்டண்ட் செல்வந்தரை மணந்துகொண்டார். அது நிலைக்காமல் மணமுறிவு ஏற்பட்டது. யூதரான தன்னை நாட்ஸிகள் கொல்வார்கள் என்று அஞ்சிய எலிஸபெத், தான் குஸ்தாவ் கிளிம்ட்டிற்கு முறைதவறிப் பிறந்த மகள் என்று விளம்பரிக்கத் தொடங்கினார். யூதரல்லாத மாபெரும் ஓவிய மேதையின் மகள் என்றால் தன் உயிருக்குப் பாதுகாப்பு நிச்சயம் என்ற அவர் நம்பிக்கைக்குத் துணைபோக, அவர் தாயர் செரினா கிளிம்ட்டின் உறவினால் தனக்குப் பிறந்தவர் எலிஸபெத் என்று சட்டப் பத்திரத்தில் கையொப்பமிட்டார். எலிஸபெத் அவருடைய உயிரைக் காப்பாறிக்கொள்ள முடிந்தது. கிளிம்ட் எலிஸபெத்தின் உருவப்படத்தை வரைவதில் காட்டிய தீவிர அக்கறையும், எலிஸபெத்தின் ஓரளவு சிற்பத் திறனும் பலரையும் அவர்களைத் தகப்பன்–மகளாக ஒத்துக்கொள்ள வைத்தது. மறுபுறத்தில் கிளிம்ட்டின் கட்டற்ற பாலுணர்வுத் தொடர்புகளும் லெடரர்கள் சொல்வதில் உண்மையிருக்கலாம் என்று நம்பவைத்தன. இது எந்த அளவிற்கு உண்மை என்று யாருக்கும் தெரியாது.
லெடரர் குடும்பத்தின் சேகரிப்பில் இருந்த எல்லா கலைப்பொருட்களையும் ‘யூதக் கலையாக’ முத்திரையிட்டு நாட்ஸிகள் அவற்றைப் பறிமுதல் செய்து தென் ஆஸ்திரியாவின் இம்மெண்டார்ஃப் கோட்டையில் பதுக்கி வைத்தார்கள். அதிகார்வபூர்வமாக இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த முந்தைய நாளில் அவை அனைத்தும் எரியூட்டப்பட்டன. இவற்றில் வியென்னா பல்கலைக்கழத்த்திற்காக கிளிம்ட் வரைந்த ஓவியங்களை மோரிட்ஸ் நாஹ்ர் (Moriz Nähr) என்ற கலைஞர் 1901-ஆம் ஆண்டு எடுத்த கருப்பு-வெளுப்பு நிழற்ப்படங்கள்தாம் நமக்குக் கிடைக்கிறன.

படம் – 8 நாட்ஸிகளால் எரித்தழிக்கப்பட்ட ‘மருத்துவம்’ ஓவியம். ஒற்றை கருப்பு-வெளுப்பு நிழற்படத்திலிருந்து கூகிளின் செயற்கை நுண்ணறிவின் உதவியால் மீளுருவாக்கம் செய்யப்பட்டது.
உலகம் கோவிட் கொள்ளை நோயால் அவதியுற்றிருந்த 2021-ஆம் ஆண்டு சாம்பலிலிருந்து மீண்டெழும் ஃபீனிக்ஸ் பறவைபோல கிளிம்ட்டின் வியென்னா பல்கலைக்கழக ஓவியங்கள் உயிர்பெறத் தொடங்கின. கூகிள் நிறுவத்தின் செயற்கை நுண்ணறிவுக் குழு கருப்பு-வெளுப்புப் படங்களுக்கு மீள்நிறவூட்டம் செய்யும் படிமுறையை (algorithm) உருவாக்கியது. கூகிளும் வியென்னா பல்கலைக்கழகமும் இணைந்து வெறும் கருப்பு-வெளுப்பு நிழற்படத்திலிருந்து கிளிம்ட்டின் எரிந்துபோன மூன்று பல்கலைக்கழக ஓவியங்களையும் மீளுருவாக்கம் செய்யும் முயற்சியைத் தொடங்கியன. ஆஸ்திரியக் கலைக்கூடம் பெல்வடேர் (Österreichische Galerie Belvedere) உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கிளிம்ட்டின் ஓவியங்களைக் கொண்டது. அங்கிருக்கும் கிளிம்ட் குறித்த விற்பன்னர்களும் இவர்களுடன் இணைந்து செயற்பட்டார்கள். உலகெங்கும் பன்னிரண்டு நாடுகளைச் சேர்ந்த 33 நிறுவனங்களின் உதவியுடன் கிளிம்ட்டின் ஓவியங்களின் வண்ண அமைப்புகள் ஆராயப்பட்டன. அதிகணினிகள் கிளிம்ட்டின் 80 ஓவியங்கள், மற்றும் அவற்றின் தொடர்புள்ள 90,000 ஒவியங்கள், கட்டுரைகள், ஆவணங்கள், வரலாற்றுக்குறிப்புகள், பழைய நாளிதழ்களின் செய்திகள், போன்றவற்றை செயற்கை நுண்ணறிவின் உதவிகொண்டு ஆராய்ந்தன. அதன் வழியே கூகிளின் மீள்நிறவூட்டுச் செயலி கிளிம்ப்ட்க்காகவே திருத்திச் செம்மைப்படுத்தப்பட்டது. இவர்களுக்கு எதிர்பாராதவிதமாக 1931-ல் கிளிம்ட் குறித்து வெளியான கட்டுரையில் மருத்தும் ஓவியத்தின் ஒரு சிறிய பகுதி வண்ணப்படமாகக் கிடைத்தது. இது செயலியை மேலும் செழுமைப்படுத்த உதவியது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் இந்த ஓவியங்கள் முழுமையாக மீள்நிறமூட்டப்பட்டன. இவை ஓவிய விமர்சகர்கள், கிளிம்ட் விற்பன்னர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கலைக்கூடக் கண்காணிப்பாளர்கள் போன்றோரின் உதவியுடன் மேம்படுத்தப்பட்டுப் பொதுப்பார்வைக்கு வெளியிடப்பட்டது. இப்பொழுது இவை கூகிளின் தளத்தில் ஒரு மெய்நிகர் காட்சியாகக் காணக்கிடைக்கின்றன. இவற்றின் வண்ண அமைப்பை ஆராய்ந்த ஓவிய விமர்சகர்கள் அன்றைய காலகட்டத்தில் பிறர் பயன்படுத்திய நிறக்கலவைகளுடன் ஒப்பிட இவை முற்றிலும் மாறுபட்ட கலவைகளை கொண்டிருக்கின்றன என்கிறார்கள். ஆனாலும் இவற்றை கிளிம்ட் இந்த நிறக்கலவைகளில்தான் வரைந்திருப்பார் என்றும் நிச்சயப்படுத்துகிறார்கள்.
இரண்டாம் உலகப்போரில் பல அழிவுகள் ஏற்பட்டாலும் பொதுவில் பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள் போன்றவை குறிவைத்துத் தாக்கப்படவில்லை. வேறெதாவது தாக்குதல்களில் சில பல்கலைக்கழகங்கள் பாதிப்படைந்திருக்கின்றன. ஒருக்கால் அரைமனதுடன் அன்று வியென்னா பல்கலைக்கழகம் திட்டமிட்டிருந்ததைப்போல் இவற்றை பெருமண்டபத்தின் உட்கூரையில் தொங்கவிட்டிருந்தால் நாட்ஸிகள் இவற்றை எரித்திருக்க வாய்ப்பில்லை. கிளிம்ட் யூதரல்லர். நாட்ஸிகளால் நடத்தப்பட்ட பல அவமானக் காட்சிகளில் கிளிம்ட்டை அவர்கள் இணைத்ததில்லை. எனவே அவை பல்கலைக்கழகத்தில் இருந்திருந்தால் அழியாமல் தப்பியிருக்கலாம் என்று நம்பப் பெரிதும் இடமிருக்கிறது. மறுபுறத்தில் செவ்வியல் இரசனைகளுக்கு எதிராக வரையப்பட்டவை இந்த ஓவியங்கள். எனவே கிளிம்ட்டை வெறுக்காவிட்டாலும், இவற்றை நாட்ஸிகள் அழித்திருக்கும் சாத்த்தியமும் உண்டு. எது எப்படியோ, எரியூட்டப்பட்டதாலேயே இவற்றின் மீதான் ஆர்வம் பலமடங்கு பெருகியது, இன்றும் நீடிக்கிறது, என்பதும் உண்மை. அந்த ஆர்வங்களை மீட்டெடுக்க, நிறைவூட்ட, இன்று செயற்கை நுண்ணறிவு கைகொடுத்திருக்கிறது.
மேலதிகத் தகவலுக்கு
How machine learning revived long-lost masterpieces by Klimt, Simon Rein
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
