- கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை
- இமானுவல் கன்ட்டின் அழகியல் தத்துவம்
- இமானுவல் கன்ட்டின் உணர்வோங்குப் பெருநிலை
- கிரேக்கத்து ஸிஸிபஸும் கேரளத்துப் ப்ராந்தனும் – அல்பேர் கமூவின் அபத்தவாதம்
- சபலங்களைக் கடத்தல்
- எங்கிருந்து வந்தோம்? நாம் யார்? நாம் எங்கு செல்கிறோம்?
- எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 1
- எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 2
- பாவம், மரணம், நரகம்
- கானலின் நீரோ, காட்சிப்பிழையோ?
- இருளையும் ஒளியையும் வென்றவன்
- கண்டுணரும் நொடிப்பொழுதின் காட்சி
- ஒழுங்கின்மையின் உன்னதம்
- காலம் எரித்ததும், கணினி மீட்டதும்
அரசியல் பிரச்சாரம் என்ற சொற்றொடர் உங்கள் மனதில் என்ன பிம்பத்தை உருவாக்குகிறது? அதைக் கேட்டவுடனேயே பெரும்பாலும் நாம் முகம் சுளிக்கிறோம். நேர்மையின்மை, வஞ்சகம், உணர்ச்சியைத் தூண்டி ஏமாற்றுதல், பொய் வேடமிடுதல்,… இப்படிக் கலவையான எதிர்மறை உணர்வுகளே நம்மில் தோன்றுகின்றன. ஒரு உயரிய கலை நினைவிற்கு வருகிறதா? காலந்தோறும் கலையைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள் (இதைப்பற்றி, தமிழர்களாகிய நாம் உலகுக்கே பாடம் எடுக்கும் அளவிற்கு திறமைசாலிகள்). ஆனால் நம்மில் பலரும் அப்படிப் பிரச்சாரத்திற்காக உருவாக்கப்பட்ட கலையை உன்னதமானது என்று ஒரு பொழுதும் தூக்கிப் பிடிக்கமாட்டோம். ஆனால், பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சு ஓவியர் ழாக்-லூயி தாவீத் (Jacques-Louis David 1748–1825) என்பவர் அரசியல் பிரச்சார நோக்கங்களுக்காக பல படங்களை வரைந்திருக்கிறார். மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதும் அவை மாபெரும் ஓவியங்களாகப் போற்றப்படுகின்றன.

படம் – 1 ழாக்-லூயிதாவீத் சுய ஓவியம். இது கணினி உதவிகொண்டு வண்ண மறு-உருவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் பிரான்ஸின் லூவர்அருங்காட்சியகத்தில் இருக்கிறது
அவருடைய ஓவியங்களைப் பார்க்குமுன் அந்த நாட்களின் வரலாற்றுப் புலம், ஓவியக் கலையில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றைக் கொஞ்சம் தெரிந்துகொள்வது அவசியம்.
ழாக்-லூயி தாவிதின் ஓவிய பாணி நவ-செவ்வியம் என்பது, அதாதவது, பழைய செவ்வியல் உத்திகளை மீண்டும் கையாள்வது. உணர்ச்சி எழுப்பும் நாடகத்தன்மை கொண்ட பரோக் (Baroque) வடிவம் ஐரோப்பாவில் 16-17-ஆம் நூற்றாண்டுகளில் செல்வாக்குடன் இருந்தது. அதன் நாடகத்தன்மையை உள்ளடக்கி, வரையும் முறைகளைச் சற்றே மாறுபடுத்தி இயக்கங்களையும், அசைவுகளையும், விளையாட்டுத்தனத்தையும் கொண்ட ரொகுக்கு (Rococo), 17-18ஆம் நூற்றாண்டுகளில் புழக்கத்தில் இருந்தது. இதன் முழுவடிவத்தை ழான்-ஆனொரெ ஃப்ராக்நார் (Jean-Honoré Fragonard) வடித்த ‘ஊஞ்சல்’ (L’escarpolette) என்ற அற்புதமான ஓவியத்தில் காணலாம். ஆரம்ப காலங்களில் தாவீத் ரொகுக்கு பாணியில் சில ஓவியங்களை வரைந்திருக்கிறார். ‘கீமார் சீமாட்டி ட்ரெப்ஸிகோர் எனும் நாட்டிய தேவதை வடிவில்’ (Mademoiselle Guimard as Terpsichore, 1774–1775) என்ற ஓவியம் ரொகுக்கு முறையில் அவரது திறமையைக் காட்டுகிறது. ஆனால், விரைவில் அதைமீறி தனக்கென பாணியை உருவாக்க வேண்டும் என்று அவர் விருப்பப்பட்டார். அதே நேரத்தில் மன்னர் அரச விசுவாசத்தைக் காட்டும் ஓவியம் வரையும் வேலையை அவருக்கு அளித்தது வசதியாக மாறியது; ‘ஹொராஷியைகளின் உறுதிமொழி’ உருவானது.

படம் – 2 ழாக்-லூயி தாவீதின் ஆரம்பகால ஓவியம். கீமார் சீமாட்டி ட்ரெப்ஸிகோர்எனும் நாட்டிய தேவதை வடிவில் (Mademoiselle Guimard as Terpsichore)195.செ.மீx 120.5 செ.மி. கிரேக்கத் தொல்கதைகளில் ட்ரெப்ஸிகோர் நாட்டிய தேவதை, ஒன்பது தேவதைகளில் ஒருத்தி. ரொகுக்கு பாணிக்கு ஏற்ப கனவுத் தோற்றம் தரும் வெளிர் வண்ணங்கள், மலர்களும், மெல்லாடைகளும் அணிந்த அழகுப்பெண், நளின அசைவு, போன்றவை இவ்வோவியத்தில் அழகாக வெளிப்படுகின்றன. க்யூபிட் காலடியில் காதல் கணையைத் தொடுக்கிறது.
ஹொராஷியைகளின் உறுதிமொழி ஓவியம் நவசெவ்வியல் (Neoclassical) முறையை வரையறுத்த துவக்கம் என்று சொல்லப்படுகிறது. நவசெவ்வியலைக் கிட்டத்தட்ட பழைய (செவ்வியல்) நிலைக்குத் திரும்பவது எனக் கொள்ளலாம். கட்டிடங்கள் பழங்கால கிரேக்க-ரோமன் கோவில்களைப் போல நெடிதுயர்ந்த தூண்களையும் அகண்ட விசாலமான அறைவெளிகளையும் கொண்டவையாக மாறத்தொடங்கின. அதைப்போலவே ஓவியத்திலும் காட்சிநிலை உள்ளார்ந்த அமைதிக்குத் திரும்பியது. காட்சிகள் இயல்பான இயைந்தொழுகும் தன்மையைக் கொண்டிருந்தன. வரையும் முறையில் ஆடம்பரத்தையும் விளையாட்டையும் குறைத்துக் கட்டுப்பாடான நிலை உருவானது. பொதுயுகம் 1750 முதல் 1830 வரை செல்வாக்குடன் விளங்கிய நவசெவ்வியம் அதனையடுத்து வந்த கற்பனாவாதத்திற்குப் (Romantism) பாட்டை போட்டுக் கொடுத்தது.
நவசெவ்வியல் ஓவியங்கள் அழகுணர்வில் மாத்திரமல்லாது உள்ளடக்கத்திலும் பண்டைய ரோமன் குடியரசின் ஆதார நீதியுணர்வுகளையும், தனிமனித மற்றும் சமூக நெறிகளையும் பிரதிபலித்தன. ரொகுக்கு ஓவியங்கள் செல்வாக்குடன் இருந்த காலம் பிரான்ஸின் அரச குடும்பங்களிலும், மேல்வர்க்கத்தினரிடமும் கேளிக்கையும் கூத்தும் பெருகியோடியன. கீழ்த்தட்டு மக்களைப் பற்றிய எந்தக் கவலையுமில்லாத பணக்காரர்கள், தங்கள் காதல், ஆடம்பர வாழ்க்கை, அந்தரங்க ஆசைகள் போன்றவற்றை ஓவிய மேதைகளைப் பணியிலமர்த்தி வரைந்து வைத்துக்கொண்டார்கள். இவை எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு ஏற்பட்டு, பிரான்ஸ் சமதர்ம சமூகமாக உருவெடுக்க வேண்டும் என்ற உள்ளக்கிடக்கை அடித்தர, நடுமட்டக் குடிகளிடையே தீர்க்கமாக வலுப்படத் தொடங்கியது. அப்படி உருவாகவிருக்கும் புதிய குடியரசிற்கு முன்மாதிரியாகப் பொற்கால ரோம சாம்ராஜ்ஜியம் கொள்ளப்பட்டது. மேன்மை பிறப்பினால் வருவாதாக இல்லாமால் உயர் நடத்தையால் ஈட்டப்படுவதாக அமைய வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. பொது நலத்த்திற்கான தனிமனிதத் தியாகங்கள் போற்றப்பட்டன. கலையும் இலக்கியமும் இந்தச் சமூக மாற்றங்களை வெறுமனே பிரதிபலிக்காமல் அவற்றுக்கு முன்னின்று வழிநடத்தின. வோல்டேர், ரூசோ, டெனி டிடெரோ (Denis Diderot) போன்ற எழுத்தாளர்கள் தனிமனித, சமூக, அரசியல் நெறிகளை தங்கள் இலக்கியப் படைப்புகள் வாயிலாக வரையறுத்தார்கள். ழாக்-லூயி தாவீத், அந்தோனியோ கனோவா (Antonio Canova, 1757–1822) ழான்-அகுஸ்த்-தொமினிக் ஆங்ரெ (Jean-Auguste-Dominique Ingres, 1780–1867) போன்றவர்கள் இந்த யுகத்தின் முதன்மை ஓவியர்களாக அறியப்படுகிறார்கள். ஆங்ரெ தாவீதின் மாணவர்.

படம் – 3 பிரெஞ்சு மறுமலர்ச்சி கால எழுத்தாளர்கள், தத்துவ அறிஞர்கள் வோல்டேர், ரூசோ, டெனி டிடெரோ. இவர்கள் எழுத்துகள் பிரஞ்சுப் புரட்சியில் சமூக, தனிமனத விழுமியங்களை வரையறுத்தன.
ழாக்-லூயி தாவித் நவசெவ்வியல் ஓவியக்கலையின் உச்சத்தை வரையறுப்பவராக அறியப்படுகிறார். சொல்லவரும் கதையின் மையக்கருத்தைத் துல்லியமாக ஓவியத்தில் வடித்தவர் அவர். 1748-ஆம் ஆண்டு பாரீஸில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார். ஒன்பது வயதில் அவருடைய தந்தை ஒரு சண்டையில் இறந்துபோக, அவர் தாய்மாமன்களின் பார்வையில் வளர்ந்தார். கட்டிடக்கலை நிபுணர்களான மாமன்கள் அவரும் தங்கள் தொழிலுக்கே வரவேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஆனால் தாவித்க்கு இளம்வயதிலேயே முகத்தில் கட்டி வந்து அவருடைய பேசுதிறனைப் பாதிக்க, அவருக்குக் கல்லூரிப் படிப்பில் நாட்டமில்லாது போயிற்று. பின் பிரான்ஸ்வா பூஷே (François Boucher) என்ற முன்னணி ஓவியரிடம் பயின்றார். தொடர்ந்து ஜோஸெப்-மரி வியென் (Joseph-Marie Vien) என்பவர் அறிமுகத்துடன் லுவரில் இருந்த ராயல் அகதெமியில் சேர்ந்தார். அங்கு முதலிடம் பெற்றதால் ரோம் பரிசு என்ற உதவித்தொகையுடன் இத்தாலிக்கு உயர் பயிற்சிகளுக்கு அனுப்பட்டார். இது அவருக்கு ரோமன் செவ்வியல் அறிமுகத்தைக் கொடுத்தது. கரவாஜியோ, ரஃபயேல் போன்றவர்களின் மேதைமையால் கவரப்பட்டு செவ்வியல் ஓவியமுறையைக் முழுவதுமாகக் கைக்கொள்ளத் துவங்கினார்.
இத்தாலியிலிருந்து தாவீத் பிரான்ஸ் திரும்பிய காலம், அங்கே புரட்சி சூல்கொண்டு இருந்தது. 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளில் வலுப்பெற்றிருந்த அறிவொளி இயக்கம் (Enlightenment Movement), பகுத்தறிவையும் புலனறி சாட்சியங்களையும் முன்னிருந்தி, பழங்கட்டுப்பாடுகளையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் வலுவாக எதிர்த்தது. பலநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்தாலியக் கலை, நாளைய சமதர்மக் குடியரசாக மலரப்போகும் பிரான்ஸ்க்குத் தேவையான விழுமியங்கள், ஐரோப்பா முழுவதும் கலை, இலக்கியம், அறிவியல், இசை போன்ற துறைகளில் அறிவொளியினால் உண்டான அசுர வளர்ச்சி, இவற்றுக்கான சந்தியில் தாவீதின் ஓவியங்கள் உருப்பெற்றன. ஹொராஷியைகளின் உறுதிமொழி, சாக்ரடீஸின் மரணம், டென்னிஸ் ஆடுகள உறுதிமொழி, மராட்டின் மரணம், ஸபைன் பெண்களின் குறுக்கீடு போன்ற வரலாற்றில் நிலைபெற்ற ஓவியங்களைத் தொடர்ச்சியாகப் படைத்தார். அவர் பிரான்ஸ் திரும்பிய ஆரம்பகாலங்களில் அரசர், மேல்குடியினர், மற்றும் ஓவிய அகதெமி போன்றவற்றின் முழுமையான ஆதரவிலேயே பிரபலமடைந்தார். மிகச் சிறிய வயதிலேயே அவருடைய ஓவிய மேதைமை எல்லாராலும் பாராட்டப்பட்டது. ஆனால் பிரஞ்சுப் புரட்சியின் துவக்கத்தில் அதில் முக்கிய பங்காற்றிய மேக்ஸிமில்லியன் ரோப்ஸ்பியர் (Maximilien Robespierre) என்ற வழக்கறிஞரின் நட்பினால் அவர் அரசுக்கும் ஆதிக்க நிறுவனங்களுக்கும் எதிரானவராக மாறினார். அவருடைய கலை உணர்வு, சடுதியில் மாறும் குணம், அதீத உற்சாகம், யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர உணர்வு இவை அவரைச் சமதர்ம சமுதாயத்தை விழைந்த புரட்சியின் பக்கம் திருப்பின. அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிக் கட்டமைப்பின் ‘கொள்கைபரப்பு அமைச்சாராக’ தாவீத் செயல்பட்டார். ஒரு கட்டத்தில் ஆதிக்கத்தில் இருந்த பலருக்கான தண்டனை, கொலைத் தண்டனை உட்பட, உத்தரவுகளை புரட்சியின் முக்கியத் தலைவராக அவர் விதித்திருக்கிறார். இதில் மன்னர் பதினாறாம் லூயிக்கு அவர் விதித்த மரண தண்டனைப் பிணையுத்தரவும் அடங்கும். மன்னர் கொல்லப்பட, பிரான்ஸின் பெரும் கலவரம் ஏற்பட்டு பல உயர்குடியினர் பொதுவெளிகளில் கியட்டினால் (guillotine) சிரச்சேதம் செய்து கொல்லப்பட்டனர்.
விரைவில் புரட்சியின் வேகம் தணிய, அரச ஆதரவுப்படைகள் புரட்சியாளர்களைக் கைது செய்து தண்டித்தார்கள். தாவீதின் நெருங்கிய நண்பரும் புரட்சியாளருமான மேக்ஸ்மில்லியன் ரோப்ஸ்பியர் கியட்டினால் கொல்லப்பட்டார். பிடிபட்ட தாவீத் லக்ஸம்பர்க் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டார். அங்கே அவருடைய இன்னொரு புகழ்பெற்ற ஓவியமான ஸபைன் பெண்டிர் (Les Sabines, 1799) என்ற ஓவியத்தை வரைந்தார். முன்-பொதுயுகம் 8-ஆம் நூற்றாண்டின் ரோம் பழங்கதையின் அடிப்படையிலான அந்த ஓவியத்தில் பெண்கள் போரிடும் குழுக்களுக்கு இடையே துணிவாகப் போரை நிறுத்த முயல்வதையும், சண்டைகளை அன்பினால் வெல்லாலாம் என்றும் சுட்டியது. அது பிரான்ஸில் அந்தக் காலங்களில் போரிட்டுக்கொண்டிருந்த குழுக்களை நிறுத்திக்கொள்ள ஓவியர் தாவீத் விடுத்த நேரடி கோரிக்கையாகவும் அறியப்பட்டது. தொடர்ந்து நெப்போலியன் போனபார்ட் ஆட்சிக்கு வர, தாவீத் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறத் தொடங்கினார். அவருடைய ஆட்சியில் தாவீத் அரசவை ஓவியராக நியமிக்கப்பட்டர். அதுசயமம் அவரது இன்னொரு புகழ்பெற்ற ‘போனபார்ட் (நெப்போலியன்) புனித பெர்னார் கணவாயைக் கடத்தல்’ (Bonaparte franchissant les Alpes au Grand-Saint-Bernard, 1805) என்ற ஓவியத்தை வரைந்தார்.

படம் – 4 ‘போனபார்ட் (நெப்போலியன்) புனித பெர்னார் கணவாயைக் கடத்தல்’ 1805. திரைச்சீலையில் தைலவண்ணத்தால் வரையப்பட்டது. 273 செ.மீ x 234 செ.மீ அளவுடையது.
நெப்போலியனின் ஆட்சி முடிவுக்கு வந்தது; பழைய அரச பரம்பரையான போர்பன்கள் (Bourbon) மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள். பதினெட்டாம் லூயி மன்னரானவுடன் புரட்சிக் காலங்களிலும், நெப்போலியன் ஆட்சியிலும் போர்பன்களுக்கு எதிரானவர்களை ஆட்சியிலிருந்தவர்கள் தண்டிக்கத் தொடங்கினார்கள். பதினாறாம் லூயியின் மரண தண்டனைக்கு ஆதரவு அளித்தற்காகவும், பதினேழாம் லூயி கொலையில் அவருக்குத் தொடர்பிருக்கிறது என்றும், ஓவியர் தாவீத் குற்றம் சாட்டப்பட்டு அவருக்குத் தண்டனை அளிக்க முடிவானது. ஆனால் புதிய மன்னர், பதினெட்டாம் லூயி அவருக்கு மன்னிப்பு அளித்து விடுவித்தார். ஒருபடி மேலாகச் சென்று, அவருக்கு மீண்டும் அரசவை ஓவியர் அந்தஸ்தைக் கூடக் கொடுத்தார். ஆனால் அதை மறுத்து தாவீத் பிரஸல்ஸ் நகருக்குத் தஞ்சம் புகுந்தார். அங்கே அவருடைய கவனம் ரோமன் செவ்வியல் பக்கம் திரும்பியது. அதன் அடிப்படையில் இன்னும் சில அற்புதமான ஓவியங்களை வரைந்தார். சில வருடங்களுக்குப் பிறகு ஒரு விபத்தில் பெல்ஜியம் நாட்டிலேயே காலமானார்.
ரோம் நாட்டில் பயிற்சிக்குப் பிறகு பாரீஸ் திரும்பிய தாவீத்-க்கு பிரெஞ்சு அரசு லூவர் அருங்காட்சியகத்திலேயே தங்க அதிலிருந்த வீடு ஒன்றை அளித்தது. அப்பொழுது அவர் அந்தக் கட்டடத்தைக் கட்டிய குத்தகைதாரரின் மகளை மணந்தார். இது ஏற்கனவே வசதியாக வாழ்ந்த தாவீதை இன்னும் செல்வாக்குள்ளவராக மாற்றியது. அவரால் எளிதில் அரசாங்கத்தில் இருந்தவர்களுடன் உறவாட முடிந்தது. அந்த வழியில் மன்னர் அவருக்கு அரச விசுவாசத்தைக் காட்டும் ஒரு ஓவியத்தை வரைய மானியம் அளித்தார். அதைக்கொண்டு தாவீத் ‘ஹொராஷியைகளின் சபதம்’ என்ற ஓவியத்தை வரைந்தார். இது நவ-செவ்வியத்தின் வருகையை உறுதிப்படுத்திய ஓவியமாக அறியப்படுகிறது.

படம் – 5 ‘ஹொராஷியைகளின் சபதம்’, பொ.யு. 1784. ஓவியர் – ழாக்-லூயி தாவீத், 329.8 செ.மீ × 424.8 செ.மீ. திரைச்சீலையில் தைலவண்ணத்தால் வரையப்பட்டது. இப்பொழுது பாரீஸின் லூவர் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
படத்தின் அமைப்பை முதலில் பார்ப்போம். காட்சி ஒரு பெரிய மாளிகையில் நிகழ்கிறது. பிரம்மாண்டமான தூண்களைக் கொண்ட மூன்று தோரண வளைவு வாயில்கள் ஓவியத்திற்குப் பின்புலமாக இருக்கின்றன. ஓவியத்திற்கு இடதுபுறமிருந்து விழும் ஒளி, மனிதர்களைத் தெளிவாகக் காட்டுகிறது. இது ஒரு குடும்பத்துக்குள்ளே நடக்கும் நிகழ்வு. மூன்று சகோதர்கள் தங்கள் கைகளை உயர்த்திச் சபதம் எடுக்கிறார்கள். ஒரு முதியவர் (அவர்கள் தந்தை) அவர்களுக்கு மூன்று போர்வாள்களை அளிக்கப் போகிறார். அதற்கும் முன் அவர் வானத்தை நோக்கி வேண்டுதல் விடுப்பதுபோல் தெரிகிறது. மறுபுறத்தில் பெண்களும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இரண்டு பெண்கள் தாளமுடியாத துக்கத்தில் ஆழ்ந்து ஒருவர் மீது ஒருவர் சாய்ந்திருக்கிறார்கள். அந்தத் துயரைக் கடப்பதற்கு அவர்களுக்கு பரஸ்பர அன்பு தேவைப்படுகிறது. அவர்களுக்குச் சற்றுப் பின்னால் தாயார் இரண்டு பேரக்குழந்தைகளை அரவணைத்துத் தேற்றிக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு முன்னால் போருக்குத் தயாராகும் ஆண்களை எந்தவிதத்திலும் தடுத்து நிறுத்தமுடியாத கையறு நிலையில் பெண்கள் அவர்களை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் தங்களுக்குள்ளேயே சோகத்தை அழுத்திக் கொள்கிறார்கள்.
அரச விசுவாசத்தை விளக்க ஓவியம் வரையச் சொன்ன மன்னர் இந்த ஓவியத்தால் பெரிதும் மகிழ்ந்திருப்பார் என நம்பலாம். நாட்டின் இளைய தலைமுறை குடும்பத்தின் வேதனையைச் சற்றும் பொருட்படுத்தாமல், நாட்டைக் காக்க உயிரையும் இழக்கத் தயார் என்று சூளுரைக்கிறார்கள். இதைவிடத் துல்லியமாக் ராஜவிசுவாசத்தை எப்படிப் பிரச்சாரம் செய்யமுடியும்? நடந்தது என்னவோ, இந்த ஓவியம் நாட்டு மக்களை பிரெஞ்சு அரசுக்கு எதிராகத் திருப்பியது!
ஆனால், இந்த ஓவியம் ஏன் மூன்று நூற்றாண்டுகள் கடந்தும் உயர்ந்த ஓவியமாகப் போற்றப்படுகிறது?
ஹொராஷியைகளின் உறுதிமொழி பழைய ரோம் நாட்டின் வரலாற்றிலிருந்து வருகிறது. அந்தக் காலங்களில் ரோம் ஒரு முழு நாடாக இருக்கவில்லை. அதன் பல பகுதிகள் தனித்தனிச் சிற்றினக் குழுக்களால் ஆளப்பட்டு வந்தது. பின்னரே அது சக்திவாய்ந்த ரோம் அரசாகவும், தொடர்ந்து பல வெற்றிகளுக்குப் பிறகு ரோமப் பேரரசாகவும் வளர்ந்தது. இதற்கெல்லாம் முன் அந்தச் சிறு நாடுகளில் ஒன்று ரோம். அவர்களுக்கும் அண்டை சிறு நகரம் ஆல்பா லாங்கா (Alba Longa)-வுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அதற்கும் முன் நடந்த போர்களில் ஏற்பட்ட பெரும் ஆட்சேதங்களைக் குறைக்க இரண்டு மன்னர்களும் ஒரு முடிவெடுத்தார்கள். இரண்டு நாடுகளும் நேரடியாக போரில் ஈடுபட்டால் இருவருமே பலமிழந்து போவோம், அப்பொழுது பிற எதிரிகள் நம் இருவரையும் எளிதில் வெல்வார்கள் என்று கருதினார்கள். ரோம் நாடு ஹொராஷியை (Horatii) என்ற குடும்பத்தின் மூன்று சகோதர்களைத் தெரிந்தெடுத்தது. மறுபுறம் ஆல்பன் அரசு க்யூரியாஷியை (Curiatii) என்ற குடும்பத்தின் மூன்று மகன்களைப் போரிடச் சொன்னது. இவர்கள் அறுவரும் நேரடியாகப் போரிடுவது, அதில் தோற்கும் குடும்பம் தன் பகுதியை வெல்லும் குடும்பத்தின் அதிகாரத்தில் இணைக்கும் என்பது திட்டம். இரண்டு நாடுகளும் இதை ஏற்றுக்கொண்டன. ஆனால், அது ஒன்றும் அப்படி எளிதானதல்ல. ஹொராஷியை சகோதரிகளில் ஒருத்தியான கமீலா (Camilla) க்யூரியாஷியை பையனை மணக்க நிச்சயிக்கப்பட்டிருந்தது. க்யூரியாஷியை குடும்பத்துப் பெண் சபீனா (Sabina) ஒரு ஹொராஷியை மணந்தவள். போரில் நாடுகள் தோற்பது மட்டுமல்ல, எந்த முடிவு ஏற்பட்டாலும் குறைந்தது மூன்று இளைஞர்கள் சாவார்கள், ஒரு பெண்ணாவது கணவன் அல்லது காதலனை இழப்பாள்.
போரில் ஹொராஷியைகளில் ஒருவன் மட்டும்தான் மிஞ்சினான், இருவர் கொல்லப்பட்டனர். க்யூரியாஷியைகள் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நிலையில், மூன்றாவது ஹொராஷியஸ் (ஹொராஷியஸ் – ஒருமை; ஹொராஷியை – பன்மை), அவன் பெயர் பூப்லியஸ் (Publius), தந்திரமாகக் களத்தைவிட்டு ஓடத் துவங்கினான், மூவரும் துரத்தினர். ஏற்கனவே போரில் காயமடைந்திருந்த இரண்டு க்யூரியாஷியைகள் பின்தங்கிய பிறகு, ஓட்டத்திலிருந்து திரும்பிய பூப்லியஸ் தனித்திருந்த மூன்றாமவனைக் கொன்றான். அது அறிந்த இரண்டு க்யூரியாஷியைகளும் மீண்டும் அவனைத் துரத்தினர். விரைவிலேயே இருவரில் ஒருவன் களைத்துப்போக, இரண்டாம் க்யூரியாஷியஸ் கொல்லப்பட்டான். பிறகு பூப்லியஸ் தனித்திருந்த கடைசி க்யூரியாஷியஸையும் கொன்று அவன் தலையை அடையாளமாக எடுத்துவந்தான். ரோம் விரர்கள் வெற்றி ஊர்வலமாகக தனித்திருந்த பூப்லியஸை நகருக்குள் தூக்கிவந்தார்கள். நுழையும்பொழுது, வெற்றிவீரனாகத் திரும்பும் சகோதரனைக் கண்டவுடனேயே சகோதரி கமீலாவுக்கு நிலைமை புரிந்தது, இறந்துபோன தன் காதலனை (க்யூரியாஷியைகளில் ஒருவன்) நினைத்து அழுதாள். போரில் தோற்றவனுக்காக அழுவது வீரமில்லை என்று கருதிய அவள் சகோதரன், உடனே உடைவாளை எடுத்து கமீலாவை வெட்டிக் கொன்றான். ஆனால், சகோதரியைக் கொன்றதற்காக அவன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டான். நடந்த விசாரனையில், தகப்பன் ஹொராஷியஸ் தன் மகனுக்காக மனமுருக வாதிட்டான்; ரோம் நகர மக்கள் பெருவாரியாகத் தங்களுக்காகப் போரில் வென்றவனை விடுவித்தார்கள். ஆனால், சகோதரியைக் கொன்றதற்கான பழிச்சின்னம் ஒன்று ஊரின் எல்லையில் நடப்பட்டு, பூப்லியஸ் அவமானப்படுத்தப்பட்டான்.
ஓவியர்கள் பலரும் சகோதரியைக் கொல்ல பூப்லியஸ் உடைவாளை உருவிய தருணத்தை வரைந்திருக்கிறார்கள். அதுவே, கதையில் உணர்வெழுச்சியின் உச்சகட்டமாக அறியப்பட்டது. ஆனால், ஓவியர் ழாக்-லூயி தாவித், கதையில் சொல்லப்படாத சம்பவம் ஒன்றை தன் முழுக் கற்பனையில் வரைந்தார். அது போருக்குப் புறப்படும் முன்னர், ஹொரோஷியை சகோதர்கள் தங்கள் நாட்டுக்காக தந்தையின் முன் உறுதிமொழி எடுக்கும் தருணம். அது ஆண்மை, மனவுறுதி, தேசப்பற்று இவற்றைப் போற்றுகிறது. கிட்டத்தட்ட ஒரு சிற்பம் போல வரையப்பட்ட இது அற்புதமாக உணர்ச்சிகளை வெளிக்கொணர்கிறது. கதையில் பல நாடகீயத் தருணங்கள் இருந்தாலும், ஒரு முக்கிய கட்டத்தை அப்படியே உறையவைத்து, கதையின் சாரத்தை வடித்தெடுக்கிறது. உண்மையான குடிமகன்கள் நாட்டுக்காக எதையும் இழக்கத் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்ற உயர் விழுமியத்தைச் சுட்டுகிறது. ரொக்குக்கு பாணியின் களிப்பில் திளைத்திருந்த பிரெஞ்சு மக்களுக்கு உன்னதமான, உயர் நோக்கத்தைப் பாடமாகச் சொல்கிறது. இது நவ-செவ்வியல் ஓவிய பாணியை வரையறுத்துத் துவக்கித் தந்தது என்று பல கலை விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

படம் – 6 ஓவியத்தின் கதாமாந்தர்கள் மூன்று தனித்தனி பகுதிகளில் இருக்கிறார்கள். இவர்களின் இடத்தைப் பின்புலத்தில் இருக்கும் தூண்கள் வரையறுக்கின்றன. ஆண்களின் கைகள் நேராக உயர்த்தப்பட்டிருக்கின்றன. இவை இணையும் இடத்தில் மூன்று போர்வாட்களும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஓவியம் சமநிலையைக் கொண்டிருக்கிறது, இதைக் காணும்பொழுது நம் கண்முன் ஒரு நாடகம் விரிகிறது. அது மூன்று குழுக்களால் நிகழ்த்தப்படுகிறது. முதலாவது சபதமெடுக்கும் சகோதர்கள், இரண்டாவது அந்த உறுதிமொழியைப் பெறும் அவர் தகப்பன், மூன்றாவது எதிர்வரவிருக்கும் அழிவை நினைத்துத் துயருரும் பெண்கள். ஓவியத்தின் பின்புலம் மூன்று வளைந்த முகடுகளைக் கொண்ட வாயில்களால் ஆனது. மூன்று குழுக்களும் தனித்தனியே அவற்றின் முன்புலத்தை நிரப்புகிறார்கள். செவ்வியல் ஓவிய பாணி, சீர், தளை, பா என்று இலக்கண வரையறைகளைக் கொண்ட மரபுக்கவிதை போன்றன வரையறைகளால் ஆனது. இந்தக் கட்டுப்பாடுகள் ஓவியத்தின் முக்கிய கருத்துக்களின் மீது பார்வையாளனின் கவனத்தைக் குவிக்க உதவுகின்றன. இதை முன்னே நாம் பார்த்த ரொகுக்குவுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் வடிவ வித்தியாசங்கள் எளிதில் புலப்படும். ஓவியத்தில் நேர்கோடாக வரும் வடிவங்களில் (வாட்கள், நீட்டப்பட்ட கைகள், பார்வைக் கோணங்கள்) சந்திப்பு ஒருங்கிணையும் புள்ளி வாட்களை இணைத்துப் பிடித்திருக்கும் தந்தையிம் கைப்பிடியில் குவிவதைக் காணலாம். இது காட்சியின் மையக்கருத்தில் பார்வையாளனின் கவனத்தை ஒருங்குபடுத்துகிறது. படத்தில் ஒளி விழும் கோணம் தந்தையின் பார்வைக் கோணத்தில் இருக்கிறது. ஆண்கள்மீது ஒளி நிறைந்திருக்க, பெண்கள் அரை வெளிச்சத்தில்தான் இருக்கிறார்கள்.
ஆண்கள் நால்வரும் நிமிர்ந்து நிற்கிறார்கள். அவர்கள் முகங்களில் எந்தவிதச் சலனமும் இல்லை, எதிர்வரப் போகும் சாவு குறித்த பயம் இல்லை. மாறாகத் தோள்களில் தினவு இருக்கிறது. கரங்கள் சற்றும் தொய்யாமல் நீளுகின்றன. அது அவர்கள் நாட்டிற்காக ஏற்கப்போகும் சபதத்திற்குத் தயாரான நிலையைக் காட்டுகிறது. விரிக்கப்பட்ட கால்கள் முக்கோண வடிவில் இருக்கின்றன. அவை கொண்ட நிலையில் அவர்கள் (காலூன்றி) உறுதியாக நிற்பதை உனர்த்துகிறன. ஒருவனின் மறுகரம் தன் சகோதரனை இடுப்பில் பிணைத்திருக்கிறது, அது அவர்களிடையே இருக்கும் ஒற்றுமையைக் காட்டுகிறது. தகப்பனின் கண்கள் அவருடைய மகன்களை நோக்கவில்லை, மாறாக அது மேல்நோக்கிய பார்வையில் இருக்கிறது. ஒரு கை வாட்களைச் சேர்த்துப் பிடித்திருக்க, மறுகை விரிந்த நிலையில் இருக்கிறது. ஒருவகையில் அது கடவுளிடம் தன் குழந்தைகளின் பாதுகாப்புக்காக இறைஞ்சுவதைப் போலிருக்கிறது (ஆணாக இருந்தாலும் அவன் தகப்பன் அல்லவா). முகத்தில் ஒருவித சோகம் இருந்தாலும் அவரும் தோள்கள் தொய்யாமல் நிமிர்ந்து நிற்கிறார். அவர் கரங்களிலும் கால்களிலும் உறுதி தெரிகிறது. ஆண்கள் உடுத்தியிருக்கும் ஆடைகள் பளீரிடும் சிவப்பு, நீலப்பச்சை நிறங்களினால் ஆனவை; இவை நம் கவனத்தை ஈர்க்கின்றன. தாவீதைப் பொருத்தவரை இதுவே உண்மையான குடிமகனின் அடையாளம். தன் சுயதேவைகளைப் புறந்தள்ளி நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணிப்பவர்களே உயர்ந்தவர்கள். மேன்மை பிறப்பினால் வருவதில்லை, உயர்ந்த நோக்கங்களினாலும் அதனூடான உயர் செய்கைகளினாலும் ஈட்டப்படுகிறது.

படம் – 7 மூன்று போர்வாட்களில் இரண்டு வளைவானவை, ஒன்று நேரானது. இது போரில் இரண்டு சகோதரர்கள் உயிரிழக்கப்போவதை எதிர்வு கூறுகிறது.
ஓவியத்தில் மூன்று போர்வாட்கள் இருக்கின்றன, அவற்றை உற்றுநோக்கினால் இரண்டு வளைந்தனவாகவும், ஒன்று நேரானதாகவும் இருக்கின்றன. இது மூவரில் இருவர் இறக்கப்போகிறார்கள் என்று எதிர்வு கூறுகிறது. வளைவுகள் பெண்மையின் அடையாளமாகவும், நேர்கோடுகள் ஆண்மையைக் குறிப்பனவாகவும் செவ்வியல் ஓவியங்களில் பயன்படுத்தப்படுகின்றன. கதைப்படி போரிட்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறுபேரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்தவர்கள். அவர்கள் பங்காளிகள், அந்த வயதில் பங்காளிகள் நல்ல நண்பர்களாகவும் இருந்திருப்பார்கள் என ஊகிக்கலாம். ஓவியர் தாவித் இரு வளைந்த வாட்களை வைத்திருப்பதன் மூலம் இரண்டு பேர் சண்டையின் பொழுது பங்காளிகளைக் கொல்ல வேண்டுமா என்று ஒருகணம் தாமதித்திருக்காலாம்; அந்த நொடியில் கியூரியாஷிகள் அவர் மீது வாட்களைச் செலுத்தியிருக்கலாம். அந்தத் தாமதம், அது உறவினர்/நண்பர் மீதான மென்கருணையாக இருந்திருந்தாலும் கூட, ஆண்மைக்கு அடையாளம் இல்லை. ஆண் அசையாத மனவுறுதியுடன் தன் உயர்நோக்கத்தை நாடவேண்டும். இந்த ஓவியம் வரையப்பட்டுச் சில வருடஙகளில் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டது. அப்பொழுது இதுபோல (நெறி தவறிய) நண்பர்கள், உறவினர்களைக் கொல்ல வேண்டிய அவசியம் சராசரி குடிமகன்களுக்கு ஏற்பட்டது. பிரெஞ்சு சமூகத்தில் சராசரி குடிமக்கள்கூட இதுபோல ஓவியங்களின் உள்ளுறை செய்திகளை விவாதிப்பது மிகச் சாதாரணம். ஓவியர் தாவித் மிகத் திறமையாக புரட்சியின்பொழுது ஆண்கள் செய்ய வேண்டியவை என்ன என்று வரையறுத்திருக்கிறார்.

படம் – 8, ஆண்களைப் போலல்லாது பெண்களின் வளைந்த உடல்கள் அவர்களது மென்மை, சோகம், பலமின்மை, நடக்கும் நிகழ்வுகளைத் தடுக்கவியலாத அவர்களது கையறு நிலை போன்றவற்றைச் சுட்டுகிறது. பெண்களின் உடைகளும் மென்மையான வண்ணங்களால் வரையப்பட்டிருக்கின்றன.
இன்னொருபுறம் படத்திலிருக்கும் பெண்களைக் கவனித்தால் அவர்கள் முற்றிலும் வேறுபட்ட உணர்ச்சி நிலையில் இருக்கிறார்கள். ஒருவர்மீது ஒருவர் சாய்ந்திருக்கும் இரண்டு இளம் பெண்களில் ஒருவர் சகோதரி, மற்றவர் அவளுடைய கொழுந்தியாள். இவர்கள் கனவனையோ, காதலனையோ (அல்லது இருவரையுமோ) இழக்கப்போகிறார்கள். பின்னாலிருக்கும் முதியவள் தன் இரண்டு பேரப்பிள்ளைகளைத் தழுவி ஆறுதல் அளிக்கிறாள். அவர்களுக்கான உடை வெளிர் நிறங்களில் இருக்கின்றன, அவர்களது சோகத்தை மேலிட்டுக் காட்டுகின்றன. ஆண்களின் நிமிர்ந்த உடல்கள், நேர்கொண்ட பார்வைகளுக்கு மாறாக அவர்கள் தலை குனிந்திருக்கிர்கள, தோள்கள் துவண்டு விழுகின்றன. நேர்கோடுகளுக்குப் பதிலாக வளைகோடுகள் அவர்களை வரையறுக்கின்றன.
இது அன்றைய பெண்களின் நிலை. அறிவொளி இயக்கத்தில் பெரும்பாய்ச்சல்கள் நிகழ்ந்தாலும், பிரஞ்சுப் புரட்சியில் பல்வேறு சமதர்மக் கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும், பெண்கள் ஆண்களைவிடத் தாழ்ந்தவர்களாகவே அறியப்பட்டார்கள். அவர்களது வேலை ஆண்களுக்குக் கீழ்ப்படிந்து, குடும்பத்தை நடத்துவதுதான். புரட்சி எழுத்தாளர் ரூஸோ (Jean-Jacques Rousseau) அவருடைய ‘தனித்த உலகங்கள்’ (Separate Spheres) என்ற கோட்பாட்டின்கீழ் இதைப் பிரபலமாக்கினார். தனித்த உலகங்கள், ஆண்-பெண் இருமை நிலை (Male-Female Dichotomy) போன்றவை இன்றும்கூட கோட்பாட்டு ரீதியாக வீடு-உலகம் என்ற இருவேறு புலங்களைத் தனிதனியே பெண்களுக்கும் ஆண்களுக்குமானதாக வரையறுக்கின்றன. இதனால் அவர்களுக்குத் தனித்த விழுமியங்களும், செயல் முறைகளும் கட்டாயப்படுத்தப்பட்டன (படுகின்றன). தகப்பன்வழிச் சமுதாயக் கோட்பாட்டில் பெண்கள் பொதுவிடங்களில் முக்கியத்துவம் பெறுவது தவிர்க்கப்பட்டது. சம்பளம் வாங்கும் வேலை, வர்த்தகம், சட்டம் இயற்றுதல் போன்றவை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. வீட்டுப் பராமரிப்பு, குழந்தைகள் வளர்த்தல், இறைபக்தியுடன் இருத்தல் போன்றவை அவர்களுக்கான உயர் விழுமியங்களாகச் சொல்லப்பட்டன. ரூஸோ, பெண்கள் குழந்தை பெறுவதற்கான உடல்வாகைக் கொண்டிருப்பதால், அவர்கள் சாந்தமானவர்கள், ஆண்களை அண்டியிருப்பவர்கள் எனவே வீட்டுக்கு வெளியே கடின உழைப்புக்குச் சரியானவர்கள் அல்லர் என்று வரையறுத்தார். கல்வி பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டது, ஆனால் அது ஆண்களின் தேவைகளையும், விருப்புகளையும் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. பெண், “ஆணுக்கு மகிழ்ச்சி தருபவளாக, பயனுள்ளவளாக, அவர்களுடைய நேசத்தையும், மரியாதையையும் தேடுபவளாக, அவர்களை மதிப்பவளாக, கனவனைக் குழந்தையைப் போலச் சீராட்டுபவளாக, வயோதிகர்களைப் பாதுகாப்பவளாக, அவர்களுக்கு ஆறுதல் தருபவளாக, குடும்பத்தை இனியாகவும் மகிழ்வானதாகவும் கவனித்துக் கொள்பவளாக இருக்கவேண்டும்” என்றார் ரூஸோ. அதற்கான பயிற்சிகளை அவர்களுக்குச் சிறுவயது முதற்கொண்டே தரவேண்டும் என்று சொன்னார்.
இப்படி ஆணுக்கும் பெண்ணுமான தனித்தனி உயர்விழுமியங்களை அந்தக் கால பிரஞ்சுக் குடிகள் விழைந்தார்கள். படத்தில் பாட்டியின் அரவணைப்பில் இருக்கும் பேரனின் கண்கள் சபதமேற்கும் ஆண்களையே பார்க்கிறது. அவனும் நாளை உயர்குடிமகனாக, தன்னை அர்பணிக்கத் தயாரானவனாக மாறுவதற்கான பயிற்சியைப் பெற்றுக்கொண்டிருக்கிறான். ஆண்கள், பாட்டியின் ஆறுதலில் இருக்கும் சிறுவன் உட்பட, தலையை நிமிர்த்து நேர்கொண்ட பார்வை பார்க்கிறார்கள். பெண்களோ தலைதாழ்த்தி பார்வையைத் தவிர்க்கிறார்கள்.
ஓவிய மேதைகளின் ஓவியங்கள் அந்தக் காலங்களில் அரண்மனைச் சுவர்களையும் மேட்டுக்குடியினரின் இல்லங்களையும் மட்டுமே அலங்கரித்தன. பல சமயங்களில் இப்படிப்பட்ட ஓவியங்களின் கருப்பொருளை ஓவியருடன் விவாதித்து, முன்பணம் கொடுத்து, பின்னர் அவருக்கு முழுச் சுதந்திரம் தந்து வரையவிடுவார்கள். அற்புதமான ஓவியங்கள் மிக அதிக விலைகொண்டவை என்பதால் சராசரி மக்களுக்கு அவற்றைப் பார்வையிடும் வாய்ப்புகள் கிடைக்காது. பாரீஸ் சலான் (Salon de Paris) என்ற காட்சியகத்தில் வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற ஓவியங்கள் பொதுப்பார்வைக்கு வைக்கப்படும். இதற்கான ஓவியங்களை Académie des Beaux-Arts என்ற அரசு-சார் அமைப்பு தேர்ந்தெடுக்கும். இலவசமாக யார் வேண்டுமானாலும் அந்த ஓவியங்களைப் பார்வையிட முடியும். இது 1748 முதல் 1890 ஆம் ஆண்டுவரை உலகிலேயே மிக உயர்ந்த கலைக்காட்சியாக விளங்கியது. 1881-ஆம் ஆண்டு முதல் இது Société des Artistes Français என்ற கலைஞர்களின் குழு ஒழுங்கமைக்கிறது. ‘ஹொராஷியைகளின் உறுதிமொழி’ ஓவியம் 1785-ஆம் ஆண்டு பாரீஸ் சலானில் பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டது. அப்பொது பிரஞ்சுப் புரட்சி உருக்கொண்டு எழத் தொடங்கியிருந்தது. தாவீதின் ஓவியம் சலானில் பலத்த சலசலப்பை உண்டாக்கியது. அரசரால், ராஜ விசுவாசம் குறிந்து வரைவிக்கப்பட்ட ஓவியம், இப்பொழுது முழுவதுமாக அரசுக்கு எதிரான பிரஞ்சுப் புரட்சியின் பிரச்சாரமாக மாறிவிட்டது. புரட்சியில் நம்பிக்கை கொண்ட ஓவியர் தாவீத் இந்தப் பரபரப்பையும், அதனால் உண்டான பெரும்புகழையும் முழுவதுமாக அரவணைத்துக் கொண்டார். புரட்சிக் குழுக்களுடன் இன்னும் நெருக்கம் கொண்டு புரட்சி அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளார் ஆனார்.
ழாக்-லூயி தாவீதின் ‘ஹொராஷியைகளின் உறுதிமொழி’ பல காரணங்களால் முக்கியமானது. அது களிப்பின் வடிவமாக இருந்த ரொகுக்கு பாணியைப் பின்னுக்குத் தள்ளி சமூக விழுமியங்களைச் சொல்லும் நவ-செவ்விய ஓவிய பாணியை உருவாக்கியது. ஓவியம் சமூகத்தின் ஆன்மாவைத் தொட்டெழுப்பி ஒரு சமூகத்தை புரட்சிக்கு அழைத்தது. புரட்சியில் ஆளும் வர்க்கம் அழித்தொழிக்கப்பட்டது; பல்லாயிரக்கணக்கான சாதரணர்களும் மாண்டனர். அந்தப் புரட்சியும் சில வருடங்களில் முடிவுக்கு வந்து முடியாட்சி திரும்பியது. ஆனால், இன்றளவும் பிரெஞ்சுப் புரட்சி விதைத்த பல விழுமியங்கள் உலகை வழிநடத்துகின்றன.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
