ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி

This entry is part 3 of 4 in the series ஆத்தோரம் மணலெடுத்து

மணல் இழப்பின் தீய விளைவுகள்

கனமான மணலை எடுத்துப்போவதில் செலவு மிக அதிகம் என்பதால் பெரும்பாலும் உபயோகிக்கும் இடங்களுக்கு அருகிலேயே அது அகழ்ந்து எடுக்கப்படுகிறது. 

ஆற்றுப்படுகைகளில் இருந்து மணல் அகற்றப்படுவதால் நதிகள் வளம் இழப்பதுடன் கரைகள் சரிவதும் எதிர்பாராத வெள்ளப்பெருக்கும் அடிக்கடி நிகழ்கின்றன. கழிமுகங்கள் மணலை இழப்பதால் கடல் நீர் உள்ளே புகுந்து நிலத்தடி நீரின் உவர்ப்பை அதிகரிக்கிறது.  

கடலின் அடியில் மணல் தோண்டப்படும்போது தாவரங்களும் அவை சார்ந்த உயிரினங்களும் குறைகின்றன. வேண்டாத பொடிமணலால் நீரின் கலங்கல் அதிகரித்து ஒளிச்சேர்க்கைக்கு அவசிமான சூரியவொளி ஆழத்துக்குப் பரவுவது தடுக்கப்படுகிறது. 

கனமான கனிமங்களுக்காக கடற்கரைகளில் மேல் மணல் வெட்டி எடுக்கப்படும்போது அவற்றின் அழகு சிதைகிறது. அப்பகுதிகளில் வாழும் உயிரினங்களும் மக்களின் வாழ்க்கை நியதிகளும் நிரந்தரமாக பாதிக்கப்படுகின்றன. 

கடற்கரை மற்றும் ஆற்று மணலின் பற்றாக்குறையை நிவர்த்திக்க இயந்திர-மணலின் (படுகைக் கற்களையும் மலைகளின் பாறைகளையும் அகழ்ந்தெடுக்கும் எரிபொருள் சக்தியில் பொடியாக்கி சலிக்கும்) தயாரிப்பு கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்து இருக்கிறது. இது பிரச்சினையை இன்னும் சில ஆண்டுகள் ஒத்திப்போடுவதுடன் தீர்க்கமுடியாத சமுதாய சிக்கல்களையும் உருவாக்கும்.

ம்.எஸ்ஸி.க்கான எல்லா தேர்வுகளையும் முடித்த மறுநாள். முன்பே தீர்மானித்தபடி நிகில் மணிமொழியின் ஆய்வகத்தில் அவளுக்காகக் காத்திருந்தான். அவன் ஆர்வத்தைப் பாராட்ட, 

“முதல் காதல், முதல் வேலை போல… நீ என் முதல் மாணவன். என் ஆராய்ச்சியில் உனக்குத் தனி இடம்” என்றாள் மணிமொழி.  

‘என் வாழ்க்கையிலும் உனக்குத் தனி இடம்’ என்பதை விழுங்கி, “நீ கொடுத்த ‘வாட் ஈஸ் சஸ்டெய்னப்ல்’ உரையைக் கேட்டபோதே என் வாழ்க்கைப்பாதை தீர்மானிக்கப்பட்டு விட்டது” என்றான். 

புன்னகையில் அவன் வார்த்தைகளை அசை போட்டாள். பிறகு, 

“என் ஆராய்ச்சியின் பொதுவான குறிக்கோள்கள் உனக்கு ஏற்கனவே தெரியும். உன் ப்ராஜெக்ட்டின் குறிக்கோளையும் அதை அடையும் வழிகளையும் நீயே தேர்ந்தெடுக்கலாம். உன் முன்னேற்றத்தில் தடங்கல் வந்தால், குழப்பம் நேரிட்டால் நான் நிச்சயம் உதவி செய்வேன்.” 

நிகில் பிரமித்தான். அந்த அளவுக்கு அறிவும் திறமையும் அவனிடம் இருக்கிறதா? அவன் சுயசந்தேகத்தைக் கவனித்த அவள்,  

“ஒரு வாரம் இல்லை ஒரு மாதமே எடுத்துக்கொள்! இரண்டு மூன்று எண்ணங்கள் தோன்றினால் அவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க உதவுவேன்.” 

இரண்டு நாள் போனதும், 

“தொடர்நிலைத்த சமுதாயத்தை ஆராய மணலைப் பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.” 

பயன்படுத்தலாம் என்று அவன் சொன்னதை வைத்து மணிமொழி,

“மணலுக்கு எத்தனையோ உபயோகங்கள் இருக்கின்றன. இப்போது நீ கண்டுபிடித்த இன்னொன்று” என சிரித்தாள். “இந்த எண்ணம் எப்படி வந்தது?” 

“என் தாத்தா தன் சிறு வயதில் நடந்த சம்பவங்களை எனக்குச் சொல்வது வழக்கம்.” 

“நீ ஆர்வத்துடன் அவற்றைக் கேட்டிருக்க வேண்டும்.” 

“அமராவதி ஆற்றின் கரையில் பிறந்து பள்ளிக்கூடம் முடியும்வரை அங்கே வளர்ந்தார். வருஷத்தின் இரண்டு மூன்று மாதங்களில் வெள்ளம். மற்ற சமயங்களில் ஆற்றின் பாதிக்குமேல் மணல். மாலை வேளைகளில் அங்கே காலத்துக்கு ஏற்றபடி பட்டம், பந்து, சடுகுடு. விளையாட யாரும் கிடைக்காவிட்டால் தாத்தா காந்தத்தினால் மணலில் கலந்திருக்கும் கறுப்புத் துணுக்குகளை சேகரிப்பார்.” 

“மணல் போல காலப்போக்கில் உடைந்து பொடியான மாக்னடைட்.” 

“அதைக் காகிதத்தின் மேல் பரப்பி, கீழே காந்தத்தை நகர்த்தி விளையாடுவாராம்.” 

“அதிருஷ்டசாலி. என்ன சந்தோஷமான இளமைப் பருவம்!”  

“கரெக்ட். இப்போது குழந்தைகள் அப்படிச் செய்ய முடியாது. அங்கே கற்களும் மண்ணும் தான்.” 

“மணல் பற்றிய ஆராய்ச்சி நல்ல தேர்வு. விவரங்களையும் எதிர்காலத் திட்டங்களையும் இருவரும் சேர்ந்து விவாதிக்கலாம்.” 

டுத்த சில ஆண்டுகளில்…  

நிகில் மாமாவின் மாளிகையில் ஒரு வாரம். பெங்களூரைச் சுற்றிலும் ஏரிகளில் மணலை வெட்டியெடுத்து அவற்றைப் பாழ்செய்ததைப் படங்கள் எடுத்தான். ஐம்பது கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு இயந்திர மணல் தொழிற்சாலையைச் சென்று பார்த்தான். அதே சமயம்… 

சாமுண்டி டவர்ஸின் இருபத்திஇரண்டாம் மாடியில்… 

க்ரானைட் இன்வெஸ்ட்மென்ட்டின் உதவித் தலைவர் ஹின்ட்மன்னுக்கு முதல் பார்வையிலேயே ஷோபாவைப் பிடித்துவிட்டது. அசப்பில் அவர் மனைவியின் சிரமமான நான்காவது பிரசவத்தை அநாயாசமாகக் கையாண்டு தாய் மகள் இருவரையும் யாருக்கும் சேதம் இல்லாமல் பிரித்த டாக்டர் மீராவைப் போல ஐந்தடியும் நூறு பவுன்டும். அவளைப்போலவே எந்தப் பிரச்சினையையும் எந்த சந்தர்ப்பத்திலும் சந்திக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை காட்டும் முகம். 

“சம்ப்பங்கி ரியல் எஸ்டேட் அக்கௌன்ட்டின் பிரதான ஆலோசகர் இவ்வளவு இளமையாக இருப்பாள் என நான் எதிர்பார்க்கவில்லை.” 

அது பாராட்டு தான். என்றாலும், 

“உங்கள் நம்பிக்கையை சம்பாதிக்க நான் ஒப்பனை இல்லாமல் வந்திருக்க வேண்டுமோ?” 

“அவசியமே இல்லை. ஆரம்பித்த நான்கு ஆண்டுகளில் அதன் ஒரு பங்கின் மதிப்பு இரட்டித்து இருப்பதால் தான் இந்த சந்திப்பு. உன் சாதனையின் பின்னணி?”  

“சென்னையில் பி.டெக் ஆர்கிடெக்ச்சர். இன்டியன் இன்ஸ்டிட்யுட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் ரியல் எஸ்டேட் எம்பிஏ. அரசு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் இரண்டு வருஷம் கைகளை அழுக்காக்கிச் சேர்த்த நடைமுறை அனுபவம். பிறகு டிஐஏஏ(ஆசிரியர்கள் ஓய்வுக்கால சேமிப்பு நிதி)யின் ரியல் எஸ்டேட் பகுதியில் நான்கு ஆண்டுகள்.” 

“அவர்களிடம் நீ கற்றுக்கொள்ளாதது எதுவும் மிச்சம் இருந்திருக்காது.” 

புன்னகையில் இன்னொரு பாராட்டை ஏற்றுக்கொண்டாள். 

“ஆரம்பத்தில் இருந்து இந்த அக்கௌன்ட் என் மேற்பார்வையில்.” 

“வர்த்தகக் கட்டடங்களுக்கும் குடியிருப்புகளுக்கும் தனித்தனி கணக்குகள் இருப்பதைப் பார்க்கிறேன்.”   

“கரெக்ட். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பணத்தை முடக்க அடுக்கு வீடுகள், வசதியான உள்நாட்டுக் குடும்பங்களின் உல்லாசப் பொழுதுகளுக்கு கடற்கரை இல்லங்கள், மலையடிவாரக் குடில்கள் – இவற்றில் முதலீடு செய்வதால் குடியிருப்புக் கணக்கில் ஆபத்து குறைவு. அதன் மதிப்பும் வேகமாக வளராது. உங்கள் தேவைக்கு வணிகக் கட்டடங்களுக்கான அக்கௌன்ட். எங்கள் மேற்பார்வையின் கீழ் நாடு முழுவதிலும் எண்ணற்ற வர்த்தக அமைப்புகள். இந்த கோபுரம் கூட அதில் சேர்த்தி.”  

“அப்படியா? நான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று மேஜையில் சிந்திய காப்பியின் கறையைக் காகிதத்துண்டினால் துடைத்தார். 

“நிர்வாகத்தில் இருக்கும் சொத்துக்களின் மொத்த மதிப்பு?” 

அலைபேசியில் வேகமாக விரல்களை ஓட்டி, 

“இன்றைய கணக்குப்படி ஏறக்குறைய நான்கு பில்லியன் யூ.எஸ். டாலர்.”  

“யூ.எஸ்.ஸில் வர்த்தக சொத்துக்களில் இருபது சதம் காலி என்பதால் அங்கே வருமானம் குறைந்துவிட்டது. நாங்கள் உன் கணக்குக்கு ஒரு பில்லியன் தருவதாக வைத்துக்கொள்வோம்.”  

இந்தியாவின் பெரு நகரங்களின் வரைபடங்களை அலைபேசியின் திரையில் ஒவ்வொன்றாகக் கொண்டுவந்தாள். அவற்றில் பல நட்சத்திரங்கள். நான்கு பெங்களூரில்.

“இங்கெல்லாம் கோபுரங்கள் எழுப்ப திட்டம்”. 

“கோ அஹெட்!” 

“அதற்கு நன்றியாக பத்து டாலரில் நல்ல மதிய சாப்பாடு. என் பணத்தில்.”  

எழுந்தார்கள். 

நாற்காலியில் இருந்து கோட்டை எடுத்து மிஸ்டர் ஹின்ட்மன் அணிவதற்கு ஷோபா உதவினாள். 

“உங்கள் கோட் பாக்கெட்டில் இன்னும் சில மில்லியன் சில்லறை மிச்சம் இருந்தால் ‘ஒளஷத் ஃபார்மா ஃபன்டி’ல் முதலீடு செய்யலாம்! பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகள் அதில் அடக்கம்.” 

“அதற்கு நீ மாலைச்சாப்பாடும் தர வேண்டும்.”  

மிழ்நாட்டின் ஆறுகளில் திருட்டுத்தனமாக மணல் தோண்டுவதை மற்றவர்கள் கவனத்தை இழுக்காமல் நிகில் கவனித்தான். ‘சிங்கப்பூரின் அரசாங்கமும் மணலும்’ பற்றிய ஆவணப்படங்களைப் பார்த்தான். .

தாத்தாவும் பாட்டியும் ராமேஸ்வரத்துக்குப் பயணம் மேற்கொண்ட போது, 

“நானும் உங்களோட வரேன். அப்படியே தூத்துக்குடிக்கு ஒரு நடை.”  

“அங்கே உனக்கு என்ன வேலை?”

“கடற்கரை மணலை டைடேனியத்துக்காக பதுக்கி வைக்கிறாங்களாம். அதுக்கு என் தீசிஸில் ஒரு அத்தியாயம்.”  

களப்பணி முடித்துத் திரும்பி வந்ததும் தினம் அறிக்கைகள். 

நடுவில் வளம் இழந்த மணலை ஆராயும் பரிசோதனைகள். 

“பிஎச்.டி. எந்த அளவுல இருக்கு? என்றார் தாத்தா. 

“கடைசி கட்டம்.”  

“சுபத்துக்கு இன்னும் ரொம்ப நாள் இல்ல.” 

“அதுக்கு உன் கிட்ட சில விவரம் கேட்கணும்.”  

“கேள்!” 

“கிராமத்தில உன் வீடு எப்படி இருக்கும்?”  

“செங்கல் கூட பயன்படுத்தாத ஒரு வீட்டில தான் பிறந்து எட்டு வயசு வரைக்கும் வளர்ந்தேன். களிமண் தரை, சாணி மெழுகி கெட்டியா இருக்கும். தென்னங்கீற்றில வேய்ந்த கூரை. நடுவில மட்டும் மேலே காரை. சுண்ணாம்பு அடிச்ச சுவர்கள். தரையில கோரைப்பாய் விரித்துப் படுக்கணும். திண்ணையில தாழங்குடை. கொல்லையில கிணத்திலேர்ந்து தண்ணி இழுக்கணும். வெயிற்காலத்தில நீர் மட்டம் கீழே இறங்கும். ஆனா முழக்க வற்றினது இல்ல.” 

எல்லாமே அருகில் கிடைத்த இயற்கைப் பொருட்கள். 

“சமைக்கறதுக்கும் அந்தத் தண்ணி தான்.” 

“சுத்தமாவே இருக்கும். ஆற்றில வெள்ளம் வடிந்து தெளிவா ஓடும்போது மட்டும் ஈரமான மணிலில குழிபறித்து நதியின் தண்ணீரை எடுத்துண்டு வருவோம். அதாவது, மணலையே வடிகட்டியா பயன்படுத்தினோம்.”  

“படம் போட்ட மாதிரி சொல்லிட்டியே. கூரை ஒழுகாது?” 

“மழை கொட்டினா சில இடங்களில சொட்டும். ஆனா வெயிற்காலத்தில சூடு தெரியாது.” 

“இப்ப அந்த மாதிரி வீட்டில உன்னால இருக்க முடியுமா?” 

தாத்தா யோசித்துப் பார்த்தார்.   

“கொஞ்சம், கொஞ்சம் என்ன நிறையவே சிரமம். இங்கே வாசிக்கிற பேப்பரும் புஸ்தகங்களும் இருந்தா ஒரு வேளை முடியலாம். பாட்டி சென்னையில பிறந்து வளர்ந்தவ. அவளால நிச்சயம் முடியாது.” 

“நீ சொன்னதை வச்சு முடிவுரை. அப்புறம், ‘மணலின் எதிர்காலம்’ என்று ஒரு நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை.”  

பாரதிதாசன் பல்கலையில் இரண்டு உரைகள் வழங்க மணிமொழிக்கு அழைப்பு. தாவர உயிரியல் துறையில் ஆராய்ச்சி செய்கிறவர்களுக்கு ஒரு தனிப்பட்ட உரை. 

“நிகில்! உன் ‘மணலின் எதிர்காலம்’ அதன் பிரதான பங்கு. நீ தயாரித்த படங்களும் அட்டவணைகளும் எனக்கு அனுப்ப முடியுமா?” 

“இப்பொழுதே.” 

“தாங்க்ஸ்.” 

 “என் புகழ் திருச்சி வரை போகப்போகிறது.” 

“உன் பேப்பர் வெளிவந்ததும் அதையும் தாண்டிப் போகலாம்.”  

இன்னொரு உரை பல்கலையின் பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பொதுவான உரை. டெல்லியில் மணிமொழி பங்கெடுத்த இரண்டு நேர்காணல்களின் விவரங்களைப் அதில் சித்தரித்தால் கேட்பவர்களுக்கு சுலபமாகப் புரியும் எனத் தோன்றியது. ‘சஸ்டெய்னப்ல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யுட்டி’ன் தகவல் பத்திரிகையில் சில ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று…  

“ப்ரைவேட்ஸியே ஸெர்கி லோகினாவ்!” 

“நமஸ்கார் எம்எம்!”

“பிஎச்.டி. ஆராய்ச்சியில் நுழைய இருக்கும் உன்னை இன்ஸ்டிட்யுட்டின் சார்பில் வரவேற்கிறேன்.” 

“தாங்க்ஸ், எம்எம்! இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திய சேவை நிறுவனங்களுக்கும் இந்திய அரசுக்கும் நன்றி!”

“முதலில் உன்னைப் பற்றி…”  

“ரஷ்யாவின் வடக்குக் கோடியில் கோமி குடியரசு.” 

“அப்பெயரை இப்போது தான் முதலில் கேள்விப்படுகிறேன்.” 

“மாஸ்கோவிற்கும் வடக்கே ஆயிரத்திஅறுநூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சிறுவயதில் ஒவ்வொரு கோடையிலும் மாஸ்கோவில் ரயில் மாறி கருங்கடல் கரைக்கு நான் வருவது வழக்கம். அந்த மூன்று நாள் பயணம் எனக்கு மிக சந்தோஷமான நேரம். 

“எனக்கும் என் ஊரில் இருந்து டெல்லிக்கு ரயிலில் முப்பத்தைந்து மணி பயணிப்பது பிடிக்கும். 

அங்கே ரஷ்யாவின் பிற பகுதிகளில் இருந்து வந்த சிறுவர்கள். அவர்களுக்கும் கோமி பற்றி அதிகம் தெரியாது. கடுங்குளிரில் நடுங்குவோம். மான்கள் பூட்டிய வண்டிகளில் பள்ளிக்கூடம் போவோம். குளிக்கவே மாட்டோம் என நினைத்தார்கள். அதில் பாதி தான் உண்மை. எங்களுக்கு என்று ஒரு தனி மொழி இருப்பதும் அவர்களுக்குத் தெரியாது.” 

“இங்கே வருவதற்கு முன்…” 

“சிக்டிவ்கார் உயர்நிலைப்பள்ளியில் ஐந்து ஆண்டுகளாக சமூகவியல் ஆசிரியன்.”

“கோமி நிலப்பகுதி பற்றி…”  

“எப்போதும் அமைதியும் நிசப்தமும் நிலவும் பிரதேசம், ஒரு காலத்தில்.”  

“இப்போது?”

“இருபதாம் நூற்றாண்டின் நடுவிலேயே இப்பகுதியில் பெட்ரோலியம் இருப்பது அறியப்பட்டாலும் அதன் கடைசி பத்தாண்டுகளில் எண்ணெய் இறைப்பு வேகம் எடுத்தது. ஊஸின்ஸ்க் ஊரைச் சுற்றிலும் எண்ணெய்க் கிணறுகள், அதைப் பிரிக்கும் கோபுரங்கள், எடுத்துப் போகும் குழாய்கள். பெட்ரோலியம் கலந்த காற்றை ஊரின் எல்லா பகுதிகளிலும் சுவாசிக்கலாம்.” 

“உன் நினைவில் அழியாத ஒரு சோக நிகழ்வு.” 

“இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த எண்ணெய் விபத்து. சில ஆண்டுகளாகவே பெட்ரோலியத்தைக் கடத்தும் குழாய்களில் ஓட்டைகள் இருந்திருக்கின்றன. கம்பெனியும் அரசாங்கமும் கண்டுகொள்ளாததால் ஹைட்ரோகார்பன் ஒழுகி ஒரு சதுர கிலோ மீட்டர் நிலத்தில் பரவி என் கிராமத்துக்கு அருகில் இருந்த ஆற்றில் மிதக்க ஆரம்பித்தது. அப்போதும் நிர்வாகம் ஒன்றும் செய்துவிடவில்லை. கிராமத்து மக்களே எண்ணெயை வாரியெடுத்து எரித்து சுத்தம் செய்தார்கள். அதற்காக அவர்களுக்குக் கிடைத்த சன்மானம் முப்பத்தியாறு ரூப்ல்.” 

“அதற்கு?” 

“இரண்டு புட்டி வோட்கா வாங்கலாம்.”  

“நல்ல வேடிக்கை. அப்படிச் சொல்வது சரியில்லை தான்.” 

“எங்களுக்கும் அப்போது சிரிப்பு வந்தது.” 

“இங்கே உன் ஆராய்ச்சி பற்றி…” 

“இயந்திர நாகரிகம் எட்டாத நிலப்பரப்பின் மக்கள் வாழ்க்கை கனிவளம் தேடும் முயற்சிகளால் வேகமாக மாறிவருவது பற்றிய அறிவை வளர்ப்பது என் குறிக்கோள்.” 

“மிக நல்ல முயற்சி. பட்டம் பெற்ற பிறகு?”  

“எதிர்கால சந்ததிக்காக கோமி பகுதியின் நிலத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதே சமயம் பெட்ரோலியத்தினால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருப்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.”  

“இரண்டையும் இணைத்து…” 

“சுற்றுச்சூழலின் பாதுகாப்புச் சட்டங்கள் எல்லாவற்றையும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். பெட்ரோலிய இருப்பில் நூறில் ஒரு பங்கு மட்டுமே ஓர் ஆண்டில் இறைக்க வேண்டும். அதன் வருமானத்தில் பாதியை அப்பகுதியில் வாழும் மக்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். கிணறுகள் வற்றியபிறகு அவற்றைத் தூர்த்து, அவற்றின்மேல் மரங்கள் வளர்க்க வேண்டும்.” 

“எல்லாமே நியாயமான கோரிக்கைகள். கோமிக்கு நீ திரும்பிப் போனதும் இவற்றை சாதிக்க…” 

“அரசாங்க சார்பு இல்லாத நிறுவனம் தொடங்குவது என் திட்டம்.” 

“உனக்காக நான் பெருமைப்படுகிறேன். உன் திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!” 

“தாங்க்ஸ், எம்எம்!” 

“ஊடகத்தில் உன் சேவைகளை வாசிக்கும்போது நம் சந்திப்பை நினைவுபடுத்திக் கொள்வேன்.” 

நாம் செய்ய விரும்பி ஆனால் செய்யாத காரியத்தை வேறொருவர் செய்வதைப் பார்த்து பெருமைப்படலாம். சில சமயம் நமக்குப் பொறாமையாகவும் இருக்கும். நான் இரண்டு உணர்ச்சிகளையும் மானுவெலா க்ரெஸ்போவுடன் பேசிய போது அனுபவித்தேன். 

“பாம் எண்ணெய்க்காக காடுகள் வெட்டப்படுவதற்கு முன் அங்கே வாழ்ந்த செனாய் குடிகள் பற்றி ராபர்ட் வுல்ஃப் எழுதிய விவரங்கள்: அவர்களின் தேவைகள் மிகக்குறைவு. அவை அனைத்தையும் காடுகளே கொடுத்தன. எந்தவித மன உடல் இறுக்கமும் அவர்களுக்குக் கிடையாது. மிகச்சில வார்த்தைகளே பேசினாலும் ஒருவரின் எண்ணங்களை மற்றவர்கள் புரிந்துகொள்கிறார்கள். முன்பே தெரிவிக்காமல் வுல்ஃப் திடீரென்று போய் காட்டின் ஓரத்தில் நின்றாலும் யாராவது ஒருவன் அவரை அழைத்துப்போக காத்திருப்பான்? அவர் வருவது அவர்களுக்கு எப்படி முன்கூட்டியே தெரிந்தது?    

“இதை வாசித்த போது ஆதிவாசிகளுடன் பழகி அவர்களிடம் இருந்து நிலைப்பட்ட வாழ்க்கை நெறிகளைத் தெரிந்துகொள்ள ஆசை எழுந்தது. அதற்கான மனத்திண்மையோ நடைமுறை அனுபவமோ எனக்குக் கொஞ்சமும் கிடையாது. அந்த உயர்ந்த பாதையில் ஏற்கனவே நடக்கத் தொடங்கிய மானுவெலா! பூமியின் எதிர்ப்பக்கத்தில் இருந்து வந்த உன்னை வரவேற்கிறேன்.” 

“தாங்க்ஸ் மனிமொளி!” 

“இங்கே உன் ஆராய்ச்சியில்…” 

“மிக நீண்ட காலமாக ஒரு நிலப்பரப்பில் அதனுடன் ஒன்றி வாழ்ந்துவரும் ஆதிக்குடிகளின் சமுதாய இலக்கணங்களைக் கற்பது என் குறிக்கோள்.” 

“அவற்றை நாம் உடனே ஏற்பது சிரமம், இல்லையா?” 

“உண்மைதான். நாம் எண்ணூறு கோடி பேர். அவர்களில் பெரும்பாலோரின் நடைமுறை அறிவு செல்ஃபோன் ‘ஆப்பி’ற்குள்.”  

“அப்படி இருக்கும்போது…”  

“இயற்கை வளங்களை அளவோடு பயன்படுத்தும் வழிகளைத் தெரிந்துகொள்ளலாம். ஒரு வேளை, இயந்திரப் பொருளாதாரத்தின் சரிவில் மக்கள் தொகை பத்தில் ஒரு பங்காகக் குறைந்து, அடிப்படைத் தேவைகளைச் சந்திப்பதே பிரயத்தனமாக இருக்கும்போது அவர்களின் ஒழுகலாறுகள் நமக்குக் கைகொடுக்கும்.”   

“அதற்காக…”

“எக்வடோரின் ‘யாஸுனி நேஷனல் பார்க்கி’ல் வாழும் ஆதிக்குடிகளுடன் ஆறு மாதங்கள் வசிக்கப் போகிறேன்.” 

“வெறும் ஏட்டுப்படிப்பாக இல்லாமல் நீ நடைமுறை அனுபவம் சேர்க்கப் போவதைப் பாராட்டுகிறேன். அத்துடன் முன்னெப்போதோ வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றியும் நீ ஆராய்ச்சி செய்யப்போவதாகத் தெரிகிறது.”  

“சரி தான்.” 

“அது எப்படி நமக்கு உதவும்?” 

“பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமி சூடானபோது பல நிலப்பரப்புகளைக் கடல் ஆக்கிரமித்தது. அப்போது ஆஸ்ட்ரேலியாவின் வடமேற்குப் பகுதியில் வாழ்ந்த ஆதிக்குடியினர் கண்டத்தின் உட்புறமாக நகர்ந்ததற்கு ஆதாரம் கிடைத்திருக்கிறது. அவர்கள் விட்டுச்சென்ற வாய்மொழி இலக்கியத்தை ஆராய இருக்கிறேன்.” 

“அதில் இருந்து தெரிந்துகொள்ளும் பாடங்கள் நம் காலத்தில் நிலப்பரப்பு சுருங்கும்போது நமக்கு உதவும்.” 

“என் எண்ணமும் அது தான்.” 

“வெகு நல்ல முயற்சி. ஆராய்ச்சியில் திட்டமிட்டதைச் சாதிக்க வாழ்த்துக்கள்!” 

“தாங்க்ஸ் மனிமொளி!” 

“பட்டத்துக்குப் பிறகு?” 

“நெஸ்லி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் மிகையாகப் பதப்படுத்தப்பட்ட உணவு அமஸான் பகுதிகளில் ஊடுருவி குழந்தைகளின் உடல்நலத்தைக் கெடுக்கிறது. அதைத் தடுப்பது என் நோக்கம்.” 

“அவர்களின் ஆரோக்கியத்திற்காக உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.”    

‘உலகின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இயற்கை வளங்களைத் தொடரச்செய்யும் வழிகளை ஆராய்ந்து வருகிறார்கள். அவர்கள் பாதைகளில்,’ என்று உரையை ஆரம்பித்து…  

வெள்ளிக்கிழமை மதியத்துக்கு முன். 

“மெஸ் சாப்பாடு அலுத்துப் போயிரிச்சு” என்றாள் ஸ்வர்ணா. 

“இன்னிக்கி வெளியே சாப்பிடப் போகலாம்” என ராஜீவ் தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.  

அவர்கள் இருவருக்கும் ஆய்வகத்தில் அன்று கடைசி நாள். பாரதிதாசன் பல்கலைக்குப் போவதற்கு முன் மணிமொழி அவர்களுக்கு விடைகொடுத்தாள். இப்போது நிகிலின் முறை. 

“எங்கே?” 

“பீட்ஸா கிங் அரை கிலோமீட்டர்ல.”  

நிகிலுக்கு பாட்டியின் சமையல் தான் பழக்கம். மிஞ்சிப்போனால் மாலை வேளைகளில் அம்மா செய்யும் பூரி-பட்டாணி, வெஜிடப்ல் ரைஸ்-குருமா. சந்தித்தபோதெல்லாம் மாமாவின் குழந்தைகள் பீட்ஸாவைப் பிரமாதப்படுத்தியது நினைவுக்கு வந்தது. சாப்பிட்டுப் பார்த்தால் போகிறது. 

“வெஜ்ஜி சுப்ரீம் நல்லா இருக்கும். உனக்கு மஷ்ரூம் அப்ஜெக்ஷன் இல்லையே, நிகில்!”  

“ஊகும். உணவுச்சங்கிலியின் அடித்தட்டு.” 

“அப்படியே கார்லிக் ப்ரெட். ஆரஞ்சு சோடா.”   

“மூணு பேருக்கும் சேர்த்து நீ ஆர்டர் செய்! ஆனா நான் தான் பணம் கொடுப்பேன்.” 

விடுதியின் சிறு வரிசையில் நின்று அவள் அதைச் செய்ய, நிகில் அட்டையைத் தேய்க்க அவனுக்கு சிறு அதிர்ச்சி. மெஸ்ஸில் கணிசமான மூன்று மதிய உணவை விட ஐந்து மடங்கு. பிரிந்து போகிறவர்களுக்கு விருந்து கொடுக்க ஒப்புக்கொண்டதில் அவனுக்கு வருத்தம் இல்லை. கல்லூரி வளாகத்துக்கும் வெளி உலகுக்கும் இடையே இருந்த பள்ளத்தாக்கை அதுவரை அவன் கவனிக்காததால் வந்த தாக்கம். பட்டம் வாங்கப்போகும் அவன் அதைத் தாண்டிக் கால்வைக்க வேண்டும்.   

ராஜீவ் பிடித்துவைத்திருந்த மேஜையில் அமர்ந்தார்கள். முதலில் கார்லிக் ப்ரெட் துண்டுகள். நிகில் ஒன்றுடன் நிறுத்திக்கொண்டான்.  

“சஸ்டெய்னப்ல் ஃபார்மிங்ல ரிசர்ச் செய்தேன்னு ‘லிங்க்ட்-இன்ல’ போட்டா நெஸ்லி கவனிப்பாங்களாம். அதனால சும்மா பேருக்கு மூணு மாசம் வந்தேன். நீ ராஜேஷ்!” 

“மத்தவங்க கிட்ட இடம் இல்லன்னுதான் இங்கே வந்தேன். சஸ்டெய்னப்ல் ஃபார்மிங்குக்கு நிஜமாவே காம்பஸின் தெற்கு மூலையில இருக்கற ஒரு ஃபீல்ட்ல எக்ஸ்பெரிமென்ட் செய்யணுமாம். வெயிலில் சட்டையையும் கையையும் அழுக்கு ஆக்கிக்க நான் தயாரா இல்ல. ஹேமலதா க்ரூப்ல அதையே கம்ப்யுட்டர்ல ஒரு எகனாமிக் ப்ரோக்ராம் வழியா அனலைஸ் செய்யறாங்க. இப்ப ஒரு இடம் காலி. அங்கே போறதா இருக்கேன்.  உட்கார்ந்த இடத்தைவிட்டு நகர வேணாம்.”  

“நிகில்! நீ என்ன செய்யறதா இருக்கே?” 

ஆராய்ச்சி முடியும் தறுவாயில் இருக்கும்போது, எதிர்காலத்தை அவன் அதிகம் யோசிக்கவில்லை என்பதை அவர்கள் நம்ப மாட்டார்கள். அதனால், 

“டெல்லியில சஸ்டெய்னப்ல் மேனேஜ்மென்ட் போகலாம்னு ஒரு திட்டம்.”  

பீட்ஸா வருவதற்குக் காத்திருந்த நேரத்தில், 

“இடம் பிடிக்காததுக்கு மணிமொழி ஒரு காரணம். நானே எல்லாம் செய்யணும்னு எதிர்பார்க்கறா” என்றான் ராஜீவ். 

சுயமாக சிந்திப்பதில் பயிற்சி பெறுவது பிஎச்.டி.யின் ஒரு குறிக்கோள்.  

“அது மட்டுமில்ல. ரொம்ப தெரிஞ்சவ மாதிரி நடந்துக்கறா.”  

அவளுக்கு நிஜமாகவே நிறையத் தெரியும். 

“இப்ப இந்த ட்ரிங்க்கைப் பார்த்தா இதில கால்பங்கு சக்கரைன்னு குறை சொல்வா.” 

“அவளோட ஒத்துப்போறது கஷ்டம்.” 

“அதனால தான் அவ கல்யாணம் நின்னு போயிரிச்சு.” 

நிகிலுக்கு முகத்தை சாதாரணமாக வைத்துக்கொள்வது எளிதாக இல்லை. ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். 

“நான் அதை எதிர்பார்த்தேன்.” 

“கல்யாணத்துக்கு முந்தி அவளும் ஃபியான்ஸேயும் பாண்டிச்சேரி போறதா இருந்ததாம். அவ மறுத்ததில அவனுக்கு ஏமாற்றம்.” 

“அதுக்குப் பிறகு எவனும் அவளை சீந்தி இருக்க மாட்டான்.” 

நிகிலுக்கு அது புதிய தகவல் என்றாலும் அவனை அது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. 

இரண்டு பீட்ஸா தட்டுகள் தயார் ஆனதும் ராஜீவ் பங்கு பிரித்தான். பிரமாதமாக இல்லாவிட்டாலும் நிகிலுக்கு அதன் கலப்பட சுவை பிடித்திருந்தது. 

“தாங்க்ஸ், நிகில்! க்ரேட் பீட்ஸா.” 

“முதல் தடவைக்கு நன்னா ரசிச்சு சாப்பிட்டேன்.” 

திரும்ப நடந்தார்கள். 

தங்கள் உடமைகளை அவர்கள் எடுத்துக்கொண்டு போனதும் ஆய்வகத்தில் அவன் மட்டும். அந்தத் தனிமை பிடித்திருந்தது. 

முன்னொரு தடவை,  

‘ஒரு பேராசிரியர், அவருக்குக் கீழே ஏழெட்டு பேர் என்கிற நியதி எனக்குப் பிடித்தமானது இல்லை. அந்த மாதிரி ஒரு இடத்தில் தான் நான் பிஎச்.டி. செய்தேன். இப்படியே ரொம்ப காலம் தொடராது. நூறு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் ஒரு விஞ்ஞானி தானே எல்லா காரியங்களும் செய்வார். உதவிக்கு ஒருவர். அவ்வளவு தான். அவர் சாதிக்கவில்லையா?’ என்று மணிமொழி சொன்னது நினைவுக்கு வந்தது.    

அப்படி அவள் செய்ய ஆசைப்பட்டால் நிகில் அவளுக்கு உதவியாக இருப்பான். அது தான் அவன் எதிர்காலமா?  

ஆத்தோரம் மணலெடுத்து

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.