“chacun doit être prêt à mourir n’importe quand.” – Paul Benjamin Auster
எப்பொழுதும் இறப்பதற்குத் தயாராக எவரும் இருக்க வேண்டும். – பால் ஆஸ்டர்
’இலக்கிய புரூக்ளினின் புரவலர் துறவி’ என்று நியு யார்க் டைம்ஸ் நாளிதழால் அஞ்சலி செலுத்தப்பட்ட அமெரிக்க எழுத்தாளரான பால் ஆஸ்டர் கடந்த வாரம், ஏப்ரல் முப்பது அன்று நுரையீரல் புற்று நோயால் இறந்தார். பின் நவீனத்துவத்தில், ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியவர் என்று விமர்சகர்கள் சொன்னாலும் அவருக்கு அது அவ்வளவு ஏற்புடையதல்ல.
இன்று நியு யார்க் நகரமும் அதனுள் இருக்கும் ப்ரூக்ளின் பேட்டையும் அவரைக் கொண்டாடினாலும் ’நியூயார்க் முத்தொகுப்பு’ நாவலின் முக்கிய கதையான ’கண்ணாடி நகரம்’ பல்வேறு பதிப்பாளர்களால் பதினேழு முறை நிராகரிக்கப்பட்ட பின்பே பிரசுரம் கண்டது.
ஃபெப்ரவரி மூன்று 1947ல் அமெரிக்காவில் பிறந்த அவர், கொலம்பியா பல்கலையில் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். தன் இலக்கிய செயல்பாடுகளை அவர் பாரிஸில் தொடங்கினார். முதலில் பல வேலைகளுக்கிடையே அவர் ஃப்ரெஞ்ச் இலக்கியத்தின் முக்கியப் படைப்புகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஃப்ரெஞ்சு வாசகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டவர் அவர்.
லூயிசியானா ஒளியலை தளத்தின் நேர்காணலில் ‘ஏன் எழுத வேண்டும்?’ (New Yorker piece titled “Why Write?”) என்ற கேள்விக்கு தன் வழியில் அவர் பதில் சொன்னார். “எனக்கு அப்போது எட்டு வயதிருக்கும். பேஸ் பால் என்றால் உயிர். போலோ விளையாட்டரங்கில், ந்யூயார்க் ஜெயின்ட்ஸ் மற்றும் மில்வாக்கி ப்ரேவ்ஸ் இடையே கடும் போட்டி. புகழ் பெற்ற வீரரான வில்லி மே(ஸ்), விளையாட்டு முடிந்ததும், அரங்கை விட்டுச் செல்கிறார். சிறுவனான நான் தயக்கத்துடன் வில்லி மேயை அணுக எண்ணுகிறேன். கால்கள் நடுங்குகிறது. என்னிடம் இருந்த அத்தனை செல்களையும் திரட்டி தைரியத்தை வரவழைக்க நாக்குழறலை சற்றே நேர் செய்து, ஆட்டோக்ராப் கேட்டேன். ஒரே ஒரு சிக்கல். என் கையில் பென்சில் இல்லை. அப்பாவிடமும் இல்லை. அம்மாவும் கைவிரித்தார். எந்தப் பெருசிடமும் பென்சில் இல்லை.” அன்று தீர்மானித்தாராம், எழுதுகோல் இன்றி வெளியில் செல்வதில்லையென.
இந்த சிறுவயது கதையில் கூட, வாசகர்கள் ஆஸ்டரின் கையொப்பக் கூறுகளில் சிலவற்றை அடையாளம் கண்டுகொள்வார்கள்: கடந்த நூற்றாண்டின் நியூயார்க்கின் சின்னங்கள், வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பு சந்திப்பு, கசப்பான வருத்தத்தின் நிலை – எல்லாமும் எள்ளல் கலந்த சுயசரிதைத் தன்மையுடன் வெளியாகிறது.

மேலாக நகைச்சுவையாக அறியப்படும் இது, அவரின் சிந்தனை முறையையும், எழுதும் முறையையும் காட்டுவது எனப் பல எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். 34 அபாரமான நூல்களை எழுதியிருக்கிறார். அதைவிட முக்கியமாக அபாரமான வாசகர். “படைப்பாளியின் வார்த்தைகள் எதிரொலியாக உங்கள் சிந்தையில் கேட்கும்போது உங்களைச் சுற்றியுள்ள இரம்மியமான அமைதி”க்காக வாசிப்பின்பமாக பிறரின் கதைகளை விரும்பினார்.
1974ல் அமெரிக்கா திரும்பிய அவர், Mallarm’e, Blanchot ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
1982ல் வெளியான அவரது முதல் நாவல் ‘The Invention of Solitude’ அவருக்குப் புகழ் சேர்த்தது. பின்னர் ‘Newyork Triology’ வெளியாகி பரபரப்பாகப் பேசப் பட்டது. இந்தப் படைப்புகள் துப்பறியும் கதைகள் போலத் தோன்றினாலும், அவை எந்தப் புதிரையும் விடுவிக்க எழுதப்பட்டவை அல்ல. ஆஸ்டர், இந்தத் துப்பறியும் பாணியை மட்டும் எடுத்துக் கொண்டு. பின் நவீனத்துவ வடிவத்தில், அடையாளம், சுய வெளி, மொழி, இலக்கியம் ஆகியவற்றை ஆராய்ந்தார். அவர் சொன்னார்: ‘அப்படியெல்லாமில்லை, இந்த ‘முத்தொகுப்பு’, ‘தனிமை கண்டறிதலின்’ நீட்சியாகத்தான் எழுதப்பட்டது.’
1980 களின் இறுதியில் அவர் வெளியிட்ட மூன்று நாவல்களிலும் (In the Country of Last Things, Moon Palace, Music of Chance) சுய அடையாளம், இருத்தலின் அர்த்தம், நிலையற்ற எதிர்காலம், நிலைமாறும் அடையாளம், தற்செயல்களில் நிகழ்வுகளைப் பொருத்திப் பார்க்கும் மனித இயல்புகள், சந்தர்ப்பங்கள் ஆகியவற்றை எழுதினார். வாசகர்கள் அவரை போற்றத் தொடங்கினார்கள்.
1990 களில் அவர் மேலும் மூன்று நாவல்களை வெளியிட்டார். பின்னர் திரைக்கதை எழுதுவதிலும், அத்துறையில் பங்கேற்பதிலும் அவருக்கு ஆர்வம் வந்தது.
திரைத்துறையிலிருந்து 90களின் இறுதியில் அவர் வெளி வந்தார் 2002-24 வரை ஒன்பது நாவல்கள், இரண்டு நினைவுக் குறிப்புகள், வாழ்க்கைச் சரிதங்கள் என்று எழுதிக் குவித்தார். அவரது இறுதி பத்து நாவல்களில், எட்டு நாவல்கள் அகில உலக டப்ளின் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டன; மான் புக்கர் விருதின் குறும்பட்டியலில் அவரது 4321 என்ற நாவல் இடம் பெற்றது.
‘இதழியலாளர்கள், நிருபர்கள் இவர்களுக்கெதிராக துருக்கி அரசு செயல்படுகிறது, அவர்களைச் சிறையில் அடைக்கிறது, எனவே, நான் அந்த நாட்டிற்குச் செல்ல மாட்டேன்’ என்று 2012ல் அளித்த பேட்டி ஒன்றில் ஆஸ்டர் சொன்னார்.
ஆஸ்டர் பல விருதுகள் பெற்றவர். ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் இரண்டிலும் சிறந்த மொழியறிவு கொண்டவர். தன் நாவல்களில் அதிகமும், தனிமை மற்றும் இருத்தல் இவற்றிற்கான விடைகளைத் தேடியவர்.
மைக்கேல் டிர்டா என்ற எழுத்தாளர், விமர்சகர் சொன்னார் “ஆஸ்டர், சமகால இலக்கியத்தில், தன் எழுத்துக்களில் நுட்பங்களைப் பொதித்தவர். ஒத்துக் கொள்ளும் ஒரு தொனியில் அவர் கதை மாந்தர்கள் பேசுவது, சமயங்களில் சுய சரிதையின் கூறுகளைக் கொண்டிருக்கும். நாம் வாழும் இந்த உலகில் உலவும் அவரது கதா நாயகர்கள், பிரமைகளுக்கும், தெளிவற்ற அச்சுறுத்தல்களுக்கும் ஆளாவார்கள்.”
டானா சீமேன் என்ற விமர்சகர் அவரது 4321 என்ற நாவலைப் பற்றிச் சொல்லும் போது, கதை சொல்வதையும், அதன் அனைத்து வகைகளையும், காட்சியாகும் திரைப்படம் போல இணைப்பது இவருக்கு இயல்பாக வருகிறது. தந்திரமாக நகைச்சுவையைக் கதைகளில் கொண்டு வந்து அவர் எழுதுவது மிகப் பெரும் பரிசோதனை முயற்சி. இயற்கைக்கும் -இயற்கைக்கும் இடையே நடக்கும் போராட்டம், காலந்தோறும் தொடரும் முடிவற்ற விவாதமான பாரம்பர்யமா, சுதந்திரமா என்ற கேள்வி, விருப்பமும்- சந்தர்ப்பமும், கனவுகளும்- விதியும், நம் அனைவரின் மனதினுள்ளே நடைபெறும் பலவிதப் போராட்டங்கள் என்று அவர் கையாண்ட விஷயங்கள், அவர் கதைகளுக்கு ஆழத்தைக் கொடுக்கின்றன.”
ஆஸ்டர் சொன்னார்: எழுத்தாளன், கலைஞன், இசைக் கலைஞன் இவர்கள் மட்டுமே தம்மை முழுதாக பணிக்கு அர்ப்பணிக்க முடியும். எட்டு மணி நேர உழைப்பிற்குப் பின்னரும் எதுவுமே ஏற்புடையதாக இல்லாமல் போனாலும், அந்த எட்டு மணி நேரத்திலும் தன்னை மறந்து படைப்பவர்கள் இந்த மூவரே!
வாய்ப்புகளின் தற்செயல்தன்மையையும் விதியின் நிகழ்வுகளின் திருப்பங்களினால் எதிர்கொள்ளும் சக்தியையும் அவர் புரிந்துகொண்டதைப் போல வேறு எந்த நாவலாசிரியரும் புரிந்து கொள்ளவில்லை.
“நினைவகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் எழுதும் அளவுக்கு பேனாவால் ஒருபோதும் வேகமாக நகர முடியாது. சில விஷயங்கள் என்றென்றும் தொலைந்துவிட்டன, மற்றவை மீண்டும் நினைவுகூரப்படும், இன்னும் சில விஷயங்கள் தொலைந்து, கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் தொலைந்துவிட்டன.”

உசாவிகள்:
- RIP Paul Auster: Hear the Master of the Postmodern Page-Turner Discuss How He Became a Writer | Open Culture
- “Keyboards have always intimidated me,” he told The Paris Review in 2003
- “The Story of My Typewriter,” with illustrations by the painter Sam Messer
- Auster’s breathless output.
- நாவல்: “Moon Palace” (1989)
- நாவல்: “Leviathan” (1992)
- நாவல்: “The Book of Illusions” (2002)
- நினைவோடை: “Hand to Mouth” (1997)
- நினைவோடை: “Winter Journal” (2012)
- 2017, Vulture published a tart appraisal of his work with the headline “What happened to Paul Auster? A decade ago he was a Nobel candidate.”: Auster’s work as a “gateway drug to stronger stuff — Beckett, DeLillo, Auster’s own ex-wife Lydia Davis.”
- Brooklyn’s bard: Paul Auster’s tricksy fiction captivated a generation
- Paul Auster, American author of The New York Trilogy, dies aged 77
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
