கிரேக்கத்து ஸிஸிபஸும் கேரளத்துப் ப்ராந்தனும் – அல்பேர் கமூவின் அபத்தவாதம்

This entry is part 4 of 14 in the series குடாகாயம்

கிரேக்கப் பழங்கதையாடல்கள் கடவுளர்களை எதிர்த்தவர்களுக்குக் கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டன என்று சொல்கின்றன.  பண்டைய கிரேக்கத்தின் ஒருபகுதிக்கு அரசனாக இருந்த டாண்டலஸ் (Tantalus) என்பவன் இப்படித் தண்டனை பெற்றவன். அதற்கான காரணம் இருவேறாகச் சொல்லப்படுகிறது. ஒரு கதைவழியில் அவன் கடவுள்களால் விருந்துக்கு அழைக்கப்பட்டதாகவும், அவ்விருந்தில் அளிக்கப்பட்ட அமுதத்தைத் திருடிக் கொண்டுவந்து தன் குடிமக்களுக்குத் தந்ததாகவும் வருகிறது. வேரொரு கதையில், அவன் கடவுள்களை விருந்துக்கு அழைத்து அவர்களுக்குத் தன் மகனை வெட்டி விருந்தளித்ததாகச் சொல்லப்படுகிறது. எது எப்படியோ, அவன் கடவுளரின் கோபத்துக்கு ஆளானான். அவனுக்கு அளிக்கப்பட்ட சாபம் விசித்திரமானது. அவன் ஒரு சுனைக்கருகில் பழங்கள் முதிர்ந்த மரத்தினடியில் நின்றாக வேண்டும். அவனுக்குத் தாகம் எடுத்துக் குடிக்க கைகுவித்து நீரை அணுகும்பொழுது அந்த நீர்ப்பரப்பு பின்னுக்கு இழுத்துக்கொள்ளும். இப்படி அருகில் இருந்தும்  கனியின் சுவையையும் வற்றாத சுனையின் நீரையும் அவனால்  பெற முடியாது. (இவனுடைய கதையிலிருந்துதான் ஆங்கிலத்தில், Tantalus > tantalize)என்ற வார்த்தை உருவானது).  இதைப்போலவே  இடிகளின் கடவுள் ஸீயுஸ்க்கும் ( Zeus) எலராவுக்கும் (Elara) பிறந்த டிட்யோஸ் (Tityos), அப்போலோவின் தாயாரைக் கற்பழிக்க முயன்ற குற்றத்திற்காக உயிருடன் பிணைக்கப்பட்டு வல்லூறுகளால் கொத்தித் தின்ன விதிக்கப்பட்டான். 

டாண்டலஸ்க்கும் டிட்யோஸ்க்கும் இப்படிச் சாபம் என்றால் ஸிஸிபஸ்க்கு (Sisyphus) வேறொருவகை சாபம்.  அவன் கிரேக்கத்தின் தென்மத்திய பகுதியில் இருக்கும் கொரிந்த் (Corinth) என்ற பகுதிக்கு அரசனாக இருந்தான்.  அவன் நல்ல சாமர்த்தியசாலி.  நாட்டின் பாதுகாப்புக்குப் பயந்து தன் அரண்மனைக்கு வரும் விருந்தாளிகளையும் யாத்ரிகர்களையும் கொன்றான். இது  இடிகளின் கடவுளான ஸீயுஸ்க்குக் கோபமூட்டியது. (இதைத் தவிர அவன் தன் குடும்பத்தினருக்கும் குடிமக்களுக்கும் பல அநீதிகளை இழைத்திருந்தான்). அவர் அவனைச் சங்கிலியால் பிணைத்துவர, ஹாடெஸ் (Hades) எனும் காலதூதனை அனுப்பினார். அவனிடமிருந்து பிணைச்சங்கிலி எப்படிச் செயல்படுகிறது என்று தெரிந்துகொண்ட ஸிஸிபஸ், அவனையே அந்தச் சங்கிலியால் கட்டிப்போட்டான். மரணத்தின் தூதனான ஹாடெஸ் பிணைக்கப்பட, நாட்டில் யாரும் சாகவில்லை. பிறகு கடவுளரால் ஹாடெஸ் விடுவிக்கப்பட்டான். கோபம்கொண்ட ஹாடெஸ் ஸிஸிபஸ்க்குச் சாபமளித்தான். ஸிஸிபஸ் மலையடியில் நிறுத்தப்பட்டான். அவன் ஒரு மாபெரும் பாறையை நகர்த்தி மலையுச்சிக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஆனால் மலையுச்சியில் அவன் கையை விடுத்தவுடன் பாறை சரிந்து கீழே வந்துவிடும். மீண்டும் ஸிஸிபஸ் இதை உச்சிக்கு ஏற்றியாக வேண்டும். இப்படி முடிவில்லாத் தண்டனையில் ஸிஸிபஸ் மாட்டிக்கொண்டான்.  

1: தண்டனையால் கல் சுமக்கும்ஸிஸிபஸ். முன் பொது யுகம் 530-ல் வடிக்கப்பட்ட இந்த களிமண் சாடி.

ஒருபுறத்தில் இது அன்றாடம் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் சூரியனுக்கும், ஓயாது கரையைத் தொடும் அலைகளுக்கும் படிமமாக அறியப்பட்டாலும் ஸிஸிபஸின் முடிவில்லா தண்டனை யாருக்கும் சலிப்பூட்டுவது நிச்சயம்.  ஸிஸிபஸின் தண்டனையைப் பலரும் ஓவியமாக வடித்திருக்கிறார்கள்.  இவைகளுக்குள்ளே முன் பொதுயுகம் 530-ல் சுட்ட களிமண் பானையில் வரையப்பட்டதே நமக்குக் கிடைத்தவற்றில் மிகப் பழமையானது.   பொதுயுகம் 1549-ல் இத்தாலியஓவிய மேதை டிஷியன் என்பவரால் திரைச்சீலையில் தைலவண்ணம் கொண்டு வரையப்பட்ட ஸிஸிபஸ் ஓவியங்களுக்குளே மிகச் சிறப்பானதாக அறியப்படுகிறது.

2: ஓவியர் டிஷியன்,  திரைச்சீலையில் நெய்ப்பூச்சினால் வரையப்பட்ட சுயஓவியம்.  பொ.யு. 1546-47.

டிஷியன் என்று அழைக்கப்படும் டிஸியானோவெச் செல்லியோ (Tiziano Vecellio 1485–1576) பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியில் பெரும் செல்வாக்கிலிருந்த மறுமலர்ச்சி ஓவியக் (Renaissance art) கலைஞர்களுக்குள்ளே மிக முக்கியமானவராக அறியப்படுகிறார்.  பொதுயுகம் 1300 முதல் 1600 வரை பிரபலமாக இருந்த மறுமலர்ச்சி காலத்தில் இலக்கியங்களும் கலைகளும் உத்வேகம் பெற்று வளரத்தொடங்கின. இது நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, இசை எல்லாவற்றுக்கும் பொருந்தும்.  காகிதம், அச்சிடல், கடல் திசைகாட்டி, வெடிமருந்து என வரலாற்றை மாற்றியமைத்த பல கண்டுபிடிப்புகள் இக்காலத்தில் உருவாயின. ஷேக்ஸ்பியரும், மாக்கியவெல்லியும், கோபர்நிகஸும் இலக்கியம், தத்துவம், அறிவியல் இவற்றின் பரப்புகளைநீட்டித்தார்கள். கிரேக்கமும், இத்தாலியும் மறுமலர்ச்சிக் கலையில் முதன்மை இடம் பெற்றன. அங்கிருந்து மத்திய ஐரோப்பா, பிரிட்டன், நெதர்லாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பரவி கலைகள் செழித்திருந்தன. தனிமனிதனையும் சமூகத்தில் அவனது இடத்தையும் குறித்த பிரக்ஞைகள்உருவாகின; இவை கலைகளை வழிநடத்தின.  நிஜ மாந்தர்களை வடிவ மாதிரிகளாக் கொண்டு பரிமாணம், பார்வைக் கோணம் போன்றவற்றில் ஓவியர்கள் தங்கள் திறமைகளை வளர்த்தார்கள். ஸான்றோ போட்டிச்செல்லி (Sandro Botticelli, c. 1445–1510), லெனார்டோ டாவின்சி (Leonardo da Vinci,1452-1519), மைக்கெலாஞ்சலோ (Michelangelo,1475-1564), ரஃபயேல் (Raphael, 1483–1520) போன்று இன்றளவும் புகழுடன் இருக்கும் ஓவியர்கள் வரிசையில் டிஷியனுக்கும் முக்கிய இடம் உண்டு.

3: ஸிஸிபஸின் தண்டனை. (1548-49). ஓவியர் – டிஷியன். திரைச்சீலையில் தைலவண்ணத்தினால் வரையப்பட்ட ஓவியம். 237 செ.மி× 216 செ.மி. தற்பொழுது ஸ்பெயின் நாட்டின் மூஸியோ டெல்ப்ராடோ, மாட்ரீட் நகரில் இருக்கிறது.

டிஷியனின் ஓவியங்களில் வண்ணங்களின் பயன்பாடு மிகத் துல்லியமானதாக இருக்கும். இவர் ஓவியங்கள் தேவாலயம், அரண்மனை, செல்வந்தர்களின் இல்லங்கள் எனப் பல சுவர்களையும்கூரைகளையும் அலங்கரித்தன.  டிஷியன் கிட்டத்தட்ட 500 பெரும் ஓவியங்களை வரைந்திருக்கிறார்.   பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் ஹங்கேரி மற்றும் பொஹிமியாவின் அரசியாக இருந்த ‘ஹங்கேரியின் மேரி’-க்காக (Mary of Hungary) தெய்வ தண்டனைகளைச் சித்தரிக்கும் ஓவியங்களை வரைந்தார்.   டாண்டலஸ், டிட்யோஸ், ஸிஸிபஸ் இவர்களது தண்டனைகள் மேரியின் அரண்மனைச்சுவரை அலங்கரித்தன. இந்தக் கொடூரமான ஓவியங்கள்  மேரியின் குடிமக்களுக்குக் கடவுளையும்,அதிகாரத்தையும் மீறினால் அனுபவித்தாக வேண்டிய தண்டனைகள் குறித்து எச்சரிக்கையூட்டுவதற்காகவே அரண்மனையில் வைக்கப்படன.  ஸிஸிபஸ் ஓவியத்தில்டிஷியனின் மேதமையைக் காண முடியும். அவனைப் பலசாலி எனக்காட்டத் திரைச்சீலை முழுவதையும் ஸிஸிபஸின் உருவத்தால் நிறைத்திருக்கிறார்.   அவன் மலையின் அடிவாரத்தில் இருக்கிறான். அங்கே கிட்டத்தட்ட ஒரு கொல்லனின் சூளையைப் போல வெப்பம் தகிப்பதாக வரைந்திருக்கிறார். அங்க பரிமாணங்கள் மிகத் துல்லியமாக வரையப்பட்ட ஸிஸிபஸின் உடலில் பரவும் வெளிச்சம் அவனது புடைக்கும் தசைகளையும், விலா எலும்புகளையும், நரம்புகளையும் அற்புதமாகக் காட்டுகிறது. ஆனால் குற்றவுணர்வால் கருத்த அவன் முகம் இருளில் இருக்கிறது. 

* * *

ஸிஸிபஸின் தொன்மத்தை முற்றிலும் வேறுவிதமாக முன்வைத்தார் பிரெஞ்சு எழுத்தாளர் அல்பேர் கமூ (Albert Camus, 1913-1960).  படைப்பாற்றலின் உச்சத்தில் இருக்கும் பொழுது, தனது நாற்பத்தேழாவது வயதில், அகாலமாக கார் விபத்தில் இறந்துப் போன கமூ, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளராகவும், மெய்யியல் மேதையாகவும் மதிக்கப்படுகிறார்.  இவருக்கு 1957-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.  கமூவைப் பொருத்தவரை ஸிஸிபஸ் சந்தோஷமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.  ஏன்? இதைப் புரிந்துகொள்ள அவருடைய அபத்தவாதத்தைக் (Absurdism) கொஞ்சம் தெரிந்துகொள்வது அவசியம்.

4 பிரெஞ்சு நாவலாசிரியர், நாடக ஆசிரியர், தத்துவஞானி அல்பேர்கமூ (Albert Camus, 1913-1960).

மானுட வாழ்வு அபத்தமானது.  ஒருபுறம் நாம் வாழ்வின் அர்த்தத்தைத் தேடிக் கொண்டிருக்க, மறுபுறம் இவ்வுலக நடப்புகள் எல்லாம் நம்மை அலட்சியத்தால் தாக்குகிறன.  அகால மரணம்,  நோய் போன்றவை நம்மை எதிர்பாராதவிதமாகத் தாக்கும்பொழுது வாழ்வின் அர்த்தமின்மையை நாம் முழுமையாக உணருகிறோம்.  சொல்லப்போனால் அன்றாட வாழ்வில் சுற்றியிருப்பவர்களுடன் நமக்கிருக்கும் உறவே பல சமயங்களில், தொடர்ந்து, இந்த அபத்தத்தை நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.  இந்த தத்துவார்த்த அபத்தம் நம் முன்னே ஒரு மாபெரும் கேள்வியை எழுப்புகிறது; அபத்தங்களால் சிறைபட்டுக் கிடப்பதை விடுத்து நாம் ஏன் உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது? இந்தக்கேள்வியே அல்பேர்காமூவின்’ஸிஸிபஸின் பழங்கதை’ (Le mythe de Sisyphe) என்ற மிகச் சிறிய, ஆனால் அற்புதமான நூலின் துவக்க வாதம்.

5 அல்பேர் கமூவின் ஸிஸிபஸின் பழங்கதை நூல்

நாளை குறித்த நம்பிக்கையுடனே நாம் வாழ்வை நடத்திச்செல்கிறோம். ஆனால் நாளையோ,  மரணத்தையும் பிணியையும்நமக்கருகே அழைத்து வருகிறது.  சர்வ நிச்சயமான சாவைக் கண்டு கொள்ளாமலே மனிதர்கள் தங்கள் வாழ்வை நடத்தி வருகிறார்கள்.  வாழ்வு குறித்த கற்பனைகளை நிரந்தரமற்றவை என ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இவ்வுலகு நமக்கு எவ்வளவு அந்நியமானது, கருணையற்றது எனப் புரியும்.   நிச்சயமின்மையாலும் அபத்தங்களாலும் நிறைந்த இவ்வுலகைப் பகுத்தறிவும், அறிவியலும் நமக்கு ஒருபோதும் விளக்க முடியாது. இதை நன்றாகத் தெரிந்து கொண்டாலும், நாம் அர்த்தமற்ற விளக்கங்களாலும், கவித்துவமான உவமைகளாலும் இவ்வுலகை அற்புதமானதாக தர்க்கங்களின்றிக் கற்பிதம் செய்துகொள்கிறோம்.  அதன் அபத்தத்தை ஒத்துக்கொண்ட அடுத்த நிமிடம் நம் இருப்பு வேதனையானதாக மாறிப்போவது உறுதி.

அந்நிலையில் இந்தப் பயனற்ற வாழ்வை வாழ்வதற்குப் பதிலாக நாம் ஏன் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்று தோன்றலாம்.  கமூவைப் பொருத்தவரை இதுவே தவிர்க்க முடியாத இருத்தலியல் கேள்வியாக நம் முன் நிற்கும். ஏனென்றால், இவ்வுலகில் யாரும் அறிவியல் வளர்ச்சிக்காகவோ, தத்துவ முன்னெடுப்புக்காகவோ தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதில்லை.  எல்லா தற்கொலைகளுமே அற்ப காரணங்களுக்காகத்தான் (வாழ்வதன் மீதான அவநம்பிக்கை) நிகழ்கின்றன. அதைக் காதல் தியாகம், தேசப்பற்று, குடும்பத் தியாகம் என்றெல்லாம் உன்னதம் ஆக்குவதன் அபத்தம் கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே விளங்கும்.  “தற்கொலை செய்து கொள்வது, உயிர்த்திருக்கச் செய்யவேண்டிய எல்லா முன்னெடுப்புகளிலும் எந்தப் பிரயோசனமும் இல்லை என்று முடிவுக்கு வருவதால்தான்” என்றார் கமூ. வாழ்ந்தாக வேண்டியதன் அர்த்தம் பிடிபடாத போது நாம் இவ்வுலகிலிருந்து தனிமைப்பட்டுப் போகிறோம். இதையே’அபத்தம்’ என்று வரையறுத்தார் அவர். இந்தச் சலிப்பு உயிரை மாய்த்துக் கொள்வதற்கு இட்டுச்செல்லும் என்றார்.

இதன் தீர்வாக மூன்று வழிகளை அவர் அடையாளம் கண்டார். முதல் வழி, அபத்தத்தின் வேதனையை முழுவதுமாகப் புறக்கணிப்பதன் மூலம் இதை வெல்ல  முயலலாம். நம் வாழ்வு ஏதோ ஒரு மாபெரும் இலக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று நம்பலாம். பணி ஓய்வு தரப்போகும் நிம்மதி, மனிதகுலத்தின் முன்னேற்றம், இறப்புக்குப் பின் சொர்க்கம், மேன்மையான மறுபிறவி என்று ஏதாவது ஒன்றுதான் நம் வாழ்வின் இலக்கு என்று கொள்ளலாம்.  ஆனால் அப்படிச் செய்தால் நம் வாழ்வின்சுதந்திரத்தை முழுமையாக இழந்து விடுகிறோம். நம் இருப்பும்,நடப்பும் வேறு ஏதோ ஒன்றுக்காக என்றாகிவிடுகிறது.  நாம் ஏற்கனவே சொன்னதுப்போல் இவற்றில் எதுவும் நிச்சயமில்லை. வேலையிலிருந்து ஓய்வுபெற்றால் அன்றாட அலைச்சலிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று நாம் நம்பிக்கொண்டிருக்க, அதே சமயத்தில் நாம் நோய் வாய்ப்படக்கூடும். ஏன்,  அபத்தங்களைப் பொறுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்ததற்கு எல்லாம் பலனின்றி அகாலமாகச்செத்துப் போகவும் கூடும்.  சொர்கத்தையும் மறுமையையும் பற்றிச்சொல்லத் தேவையில்லை.

6 டேனிஷ் தத்துவ ஞானி சோரன்கீயர்கொ (Soren Kierkegaard, 1813-1855)

இரண்டாவதாக, நம் புரிதலுக்கு எல்லை உண்டு அல்லது நம்மைக் கடந்த இறைவனின் விதித்த வழியே நாம் செல்கிறோம் எனக் கொள்ளலாம். ரஷ்யாவின் லெவ்ஷெஸ்தோவ் (Lev Shestov, 1866-1938),  சுவிஸ்ஸின் கார்ல் ஜாஸ்பெர்ஸ் (Karl Jaspers, 1883-1969) போன்ற இருத்தலியலாளர்கள்,  பகுத்தறிவு நம் வாழ்வின் நோக்கத்தையும் பயனையும் புரிந்து கொள்ள ஒருபோதும் உதவாது என்று வாதிட்டார்கள்.  இது எந்தவிதத் தரவுகளுமின்றி நம் அறிதலின் எல்லையாகச் சொல்லப்படுகிறது.   இன்னொரு தீர்வாக, நியாய-அநியாயங்களை நமக்கு மீறிய ஏதோவொருபெரும்சக்தி தீர்மானிக்கிறது என்று நம்பிக்கொள்ளலாம்.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற டேனிஷ் தத்துவ ஞானி சோரன்கீயர் (Soren Kierkegaard 1813-1855) மனித இருப்பின் அர்த்தம், நோக்கம், பயன் போன்றவற்றை விவாதிக்கும் இருத்தலியல் (Existentialism) என்ற தத்துவக் கோட்பாட்டை உருவாக்கினார். (இவர் பெயரை ஆங்கிலம் பயிலும் நாடுகளில் கியர்கெகார்ட் என்று பலுக்குகிறார்கள். டேனிஷ் மொழியில் அது கீயர்கொ)இருத்தலின் அபத்தத்தை ஒத்துக்கொண்ட கீயர்கோ, அதைப் புரிந்துகொள்ளக் கடவுளின் துணையை நாடினார். கடவுளின் நியாயங்களையும் தர்க்கங்களையும் மனிதர்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது, எனவே இறைவனின் விதிப்படி நாம் செல்கிறோம், என்று முன்வைத்தார்.   இவர்களுக்குப் பின் வந்த அல்பேர்கமூவோ இந்த வாதங்களை ஏற்றுக் கொள்ள முற்றாக மறுத்தார்.  இவை மனிதன் “தத்துவரீதியாகத் தற்கொலை செய்துகொள்வதற் குஒப்பானது” என்று புறந்தள்ளினார்.

சரி, அப்படியென்றால் வாழ்க்கை உண்மையிலேயே பயனற்றதா? அபத்த உலகிலிருந்து விடுபட தற்கொலை ஒன்றுதான்முடிவா?   நம்முடைய அறிவு உதவாதது, நம் இருப்பையும் நடப்பையும் யாரோ ஒருவர் (கடவுள்)தான் நிச்சயிக்கிறார் என்பவற்றைத் தத்துவத் தற்கொலை (philosophical suicide) என்று ஏற்றுக்கொள்ள மறுத்த கமூ, உயிரை மாய்த்துக்கொள்ளும் உண்மையான தற்கொலையை எப்படி நியாயப்படுத்துவார்? 

இருத்தலின் அபத்தத்தை, அதைக் கொண்டாடுவதன் மூலம் வெற்றி கொள்ளலாம் என்றார் கமூ.  இது மூன்றாவது வழி; கமூவைப் பொருத்தவரை இதுவே சரியானது.

1. முதல்படியாக, அபத்தத்தின் சலிப்பை நாம் நேர்கொண்டு எதிர்த்து நிற்கவேண்டும்.  நம் கட்டுப்பாட்டில் இல்லாத நோயையும் பிறர் நமக்குச் செய்யும் அநியாயங்களையும், ஏன் சாவையும்கூட எதிர்த்து துணிவாக நேர்கொள்ள வேண்டும் என்றார்.  இந்த போராளிக்குணமே நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. 

2. இரண்டாவதாக, நிரந்த விடுதலை என்று ஒன்றில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.  என்றோ வரவிருக்கும் நிரந்த ஓய்வையோ, சொர்க்கத்தையோ, மறு பிறவியையோ முழுவதாகப் புறக்கணித்து நிகழ் நேரத்தில் வாழ்வைக் களிப்புடையதாக ஆக்க வேண்டும்.

3. இறுதியாக, நாம் எப்பொழுதும் நல்வாழ்வை விழைய வேண்டும்.  தீராத வேட்கையால் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும், ஒவ்வொன்றையும் நாம் நேசிக்க வேண்டும்.

அல்பேர் கமூ கால்பந்தாட்டத்தில் பேரார்வம் கொண்டவர். அல்ஜீரியாவில் கால்பந்தாட்ட கோல் கீப்பராக விளையாடியிருக்கிறார். பின்னர்  ஏற்பட்ட காசநோயின் காரணமாக அவரால் விளையாடமுடியாமல் போனது.  ‘அபத்தத்திலிருந்து விடுதலை’ (Freedom from Absurdity) என்ற அவரது கோட்பாட்டைக் கால்பந்தாட்டத்தை முன்வைத்துப் புரியவைத்தார்.  அவர் கால்பந்தாட்டத்தை மனித இருப்புக்கும் சமூகக் குழுக்களுக்குள்ளே தனிமனித அடையாளத்தை வளர்த்தெடுப்பதற்கும் படிமமாகச் சொன்னார்.   ஒருவகையில் சொல்லப்போனால் கால்பந்தாட்டமே ஒரு அபத்தம்தான்; பதினொருவர் குழு ஒரு திசையில் ஒரு சிறிய செவ்வகத்துள்ளே பந்தைத் திணிக்க முயல, இன்னொரு குழு அதற்கு எதிர்திசையில் அதே முயற்சியை மேற்கொள்கிறது. வாழ்க்கையைப் போலவே ஆட்டத்திலும் எதுவும் நிச்சயமில்லை.   இலக்குக்கு அருகில் இருக்கும் பொழுது ஒற்றைத் தவறால் பந்தை வெளியே உதைத்து விடக்கூடும். அல்லது, நடுவர் தவறான தீர்ப்பைத் தரலாம். இருந்தும் நாம் தொடர்ந்து பந்தை முன்னெடுத்துச் செல்லவே முயல்கிறோம்.  (மேற்சொன்ன முதற்படி – அபத்தம் என்று தெரிந்திருந்தும் அதை எதிர்கொள்வது).  அப்படியே கோல்போட்டாலும் அடுத்த நிமிடம்  மீண்டும் துவங்கி, அதே அபத்த இலக்கை நோக்கிப் பந்தை உதைக்க வேண்டும். (இரண்டாவது – நிரந்தர விடுதலை என்று ஒன்றில்லை). இது உங்களுக்கு ஸிஸிபஸின் தண்டனையை நினைவுறுத்தலாம்.  ஆனால் இந்த அபத்ததையே களிப்பாக மாற்றுவதுதான் ஆட்டத்தின் நோக்கம். ஆடுபவர்களுக்கு மாத்திரமல்ல, காணும் பல்லாயிரம் இரசிகர்களுக்கும் கூடத்தான். அந்தக் களிப்பினூடே ஒருவருக்கு ஒருவர் உதவி பந்தைக் கடத்துவது, இரசிகர்கள் ஆரவாரமிட்டு அவர்களை ஊக்குவிப்பது என்று அபத்தம் என்று பார்க்கப்படுவதைப் பயனுள்ளதாக, பெரும் கேளிக்கையாக ஆக்குகிறார்கள்.  கடைசியில் வெற்றி-தோல்வியை விட ஆட்டத்தைச் சிறப்பாக ஆடுவதே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது (மூன்றாவது படி).  ஆட்டத்தின் சிறப்பே பலர் ஒன்று கூடி ஒரே இலக்கை அடைய ஒருவருக்கொருவர் உதவுவது.  ஆட்டத்தைப் போலவே, சமூகக் குழுக்களிலும் தனி மனிதருக்கான நோக்கம், இலக்கு எல்லாம் உண்டு, ஆனால் அது பொது நோக்கத்துடன் இணைந்தது.  ஆட்டத்தின் விதிகளை மாற்றிவிட முடியாது, ஆனால் முழுமையான ஈடுபாட்டுடன், மெய்யான உயர்நோக்கத்துடன், செயல்பட்டால் ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைக்க முடியும்.

மேம்போக்காக முதலில் பார்க்கும்பொழுது வாழ்க்கை அபத்தம் என்று கமூ சொல்வதாகத் தோன்றினாலும், அதை எப்படி நேர்கொள்வது என்பதை அவர் துல்லியமாகக்க ற்றுத்தருகிறார். ஷெஸ்தோவ், ஜாஸ்பர்ஸ் போன்றவர்கள் சொன்னது போல விதியைப் புரிந்து கொள்ள முடியாது என்றில்லை. அதை நமக்கு ஏற்றதைப்போல கைக்கொண்டு வாழ்வைக் களிப்பாக்க முடியும்.  கீயர்கொ-வைப் போல கடவுளைத் துணைக்கழைக்க வேண்டியதில்லை.  மனித இருப்பு, நடப்பு, நோக்கம், பயன் போன்றவற்றை விவாதித்துக் கொண்டிருந்த இருத்தலியலை அபத்தவாதத்தின் பக்கம் நீட்டித்து  அதற்கான தீர்வை முன்வைத்தார் கமூ.  ஆக, ஸிஸிபஸ்-க்கு விதிக்கப்பட்டது தண்டனைதான்.  ஆனால், கல்லைச் சுமந்து மலையில் ஏற்றுவதும் மீண்டும் கல் உருண்டு கீழே வருவதுமாக ஸிஸிபஸ் அபத்தத்தின் உழலுவதாகத் தீர்மானிக்கத் தேவையில்லை.  ஸிஸிபஸ் அந்தத் தண்டனையின் அபத்தத்தை ஒத்துக்கொண்டு,  கல்லை ஏற்றுவது முழுக்கத் தன் தோள்களிலேயே இருக்கிறது,  அதை ஏற்றுவதையும் அது கீழே உருளுவதைக் கண்டு களிப்பதையும் தானே தீர்மானிக்கிறேன் என்று இறுமாந்து அதை விளையாட்டக்கலாம்.

“நான் ஸிஸிபஸை மலையடிவாரத்தில் நிறுத்துகிறேன்.  தனக்கான சுமையை மீண்டும் அவன் பார்க்கிறான்.  ஆனால் ஸிஸிபஸ் கடவுளரை மறுத்து அவன் தனக்கே விசுவாசமானவனாக மீண்டும் அதை மலையில் ஏற்றுகிறான். அவன் எல்லாம் நல்லதாகவே நடக்கிறது எனத் தீர்மானிக்கிறான். எஜமானன் இல்லாத அந்த உலகம் அப்படியொன்றும் வறட்சியானதாகவோ, பயனற்றதாகவே இல்லை என அவனுக்குத் தோன்றுகிறது.  அந்தப் பாறையின் ஒவ்வொரு அணுவும், இருள்சூழ்ந்த அந்த மலையின் ஒவ்வொரு கனிமத்துகளும், இருள் சூழ்ந்த அம்மலையில் அவனுக்கான உலகமாகிறது. உச்சியை நோக்கிச் செல்லும் போராட்டம் மட்டுமே அவன் மனதை நிறைக்கிறது. ஸிஸிபஸ்சந்தோஷமாகவே இருக்கிறான் என்று நாம் கற்பனை செய்துகொள்ளலாம்” என்று முடிக்கிறார் அல்பேர்கமூ.

7: நாராணத்துப் பிராந்தன் சிலை, பாலக்காடு மாவட்டம், கேரளா.

ஸிஸிபஸை விட ஒரு படி மேலானவனாக எனக்குத் தெரிபவன் ‘நாராணத்துப் ப்ராந்தன்’, அதாவது நாராணம் என்ற ஊரிலுள்ள பைத்தியக்காரன். இவனுடைய கற்சிலை பாலக்காடு மாவட்டத்தின் பட்டம்பி என்ற ஊரின் மலை மேல் இருக்கிறது.  இவனுடைய வரலாறு மலையாளத்தில் நாட்டார்பாடலாகப்பாடப்படுகிறது. கொட்டாரத்தில் சங்குண்ணி என்பவர் இந்தக் கதையையும், இதைப் போன்ற நாட்டார் வழக்குக் கதைகளையும் எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டார்.  ஐதீகத்தின் படி, உஜ்ஜயினியை ஆண்ட விக்ரமாதித்தனின் அரசவையில் இருந்த வரருச்சி என்ற  புலவர் கேரளத்துக்கு வந்தார்.  வேதம் ஓதும் அந்தணரான அவர், தேவதையைப் போல அழகாக இருந்த பறயி எனும்தாழ்குலப் பெண்ணைக் கண்டு மயங்கினார்; அவளைத் திருமணம் செய்துகொண்டார்.  அவள் அவரைவிட அழகிலும் அறிவிலும் பல படிகள் மேம்பட்டவளாக இருந்தாள்.  திருமணம் கழிந்து பல மாதங்களுக்குப் பிறகுதான் அவள் பறையர் குலம் என்று அவருக்குத் தெரியவருகிறது. பின் இருவரும் கோயில் யாத்திரைக்குப் புறப்பட்டார்கள். வழியில் அவர்களுக்குப் பன்னிரண்டு குழந்தைகள் பிறந்தன. அவர்களை மொத்தமாக ‘பறயி பெத்த பந்திரு குலம்’ என்று அழைக்கிறார்கள். அவற்றில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு குலத்திற்கும்(மருத்துவன், ஓடக்காரன், அந்தணன், என) தத்துக் கொடுத்துச் சென்றனர். அந்தப் பன்னிருவரும் ஒவ்வொரு வகையில் மாபெரும் அறிவாளிகளாகவும், திறமைசாலிகளாகவும் ஆனார்கள். அவர்களில் ஒருவன் நாராணத்துப் ப்ராந்தன். அவன் தாழ்குலத்தைச் சேர்ந்தான்;  மாபெரும் ஞானியானான்.

மலைக்கருகே இருந்த சுடுகாட்டுப் பக்கத்தில் வாழ்ந்த நாராணம், தன்னிடம் வருபவர்களுக்குப் பாடங்களைக் கற்பிப்பான். நம்மூர் சித்தர்களைப் போல பூடகமாக அவன் சொல்லும் பாடங்களையும் தத்துவங்களையும் புரிந்துகொள்ளாதவர்கள் அவனை ‘ப்ராந்தன்’ (பைத்தியக்காரன்) என்று கேலி செய்தார்கள்.  அதுவே அவனுக்கான பெயர் ஆயிற்று.  தினமும் காலையில் மலையடிவாரத்தில் கிடக்கும் ஒரு பெரும் பாறையை உருட்டி உச்சிக்கு ஏற்றுவான். பின் அது இடி போல முழக்கத்துடன் கீழே விழுவதைப் பார்த்துக் கைகொட்டி ச்சிரிப்பான். மலை மேலிருக்கும் அவனுடைய சிரிப்பு, சுற்றிலுள்ள எல்லா கிராமங்களிலும் எதிரொலிக்கும்.  மீண்டும் ஒன்றுமே நடக்காததுபோல் கீழிறங்கி வந்து பாறையை மீண்டும் மலையுச்சிக்கு ஏற்றுவான். வெயில், மழையைப் பொருட்படுத்தாமல் தினமும் இதைச் செய்துகொண்டிருப்பான்.  நம் இந்திய தத்துவங்கள் பரிபூரண ஞானம் பெற்றவனை, ‘பலசாலி, உன்மத்தக்காரன், பைத்தியக்காரன்’ என்று வருணிக்கின்றன.  நாராணத்துக்கு இது முற்றிலும் பொருந்தும், அவன் அயராது பாறையை மேலேற்றும் பலசாலி, அவனுக்கு அந்தச் செயலில் அளவிட முடியாத பேரானந்தம், ஆனால் பிறர் கண்களுக்கோ அவன் பைத்தியக்காரன். 

ஸிஸிபஸ் தொன்மத்தைப் போலவேதான் நாராணத்துப் ப்ராந்தன் கதையும். ஆனால் இவன் ஸிஸிபஸிலிருந்து முற்றிலும் வேறுபட்டவன், மேலானவன். இவனுக்கு எந்தக் கடவுளும் இப்படிச் செய் என்று ஆணையிடவில்லை. எந்தச் சாபமும் இல்லை. அவனாகவே மனமுவந்து இதைத் தொடர்ந்து செய்வான்.  அல்பேர் கமூவுக்கு இந்தத் தொன்மக் கதையாடல் தெரிந்திருந்தால் ஸிஸிபஸ்க்குப் பதிலாக நம் நாராணத்துப் ப்ராந்தனைச் சொல்லியிருப்பார் என்று கட்டாயம் நம்பலாம்.  பட்டம்பி வட்டாரத்தில் இருந்தவர்களில் பலருக்கும் அவன் செய்கை புரியவில்லை. ஆனால் சிலருக்கு நன்றாகப் புலப்பட்டது; அவன் நம் அன்றாட வாழ்வின்அ பத்தத்தை நமக்கு உரத்துச் சொல்லிக்கொண்டே இருக்கிறான்.

குழந்தைகள் சந்தோஷமாக இருக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு விளையாடச் செல்வதில்லை. அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், எனவே இயல்பாக அவர்கள் விளையாடுகிறார்கள்.  ஆனால் பெரியவர்களோ சந்தோஷமாக இருக்கச் சுற்றுலா செல்கிறார்கள். கவலையை மறக்கச் சினிமா செல்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் உடனே அதற்கு நுழைவுச்சீட்டு பெற்று, தக்க நேரத்தில் திரையரங்கம் செல்ல வேண்டிய கவலையால்நிரம்புகிறார்கள்.  மாறாக, குழந்தைகளைப்போல  நம் வாழ்வின் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவே எப்பொழுதும் இருக்க வேண்டும்; அதுவே மனிதனின் இயல்பான குணம். நம் ஒவ்வொரு நடத்தையும் நம் இயல்பான சந்தோஷத்திலிருந்து வெளிப்பட வேண்டும்.  அல்பேர்கமூ சொன்னதைப்போல நம் வாழ்வு அபத்தங்கள் நிறைந்தது தான். ஆனால் அவற்றையே துரத்திக்கொண்டிருக்காமல்,  அதை முழுமையாக அங்கீகரித்துக் கைகொண்டு, அதையே களிப்பாக்குவதன் மூலமே அந்த அபத்தத்தை வெற்றிகாண முடியும். 

தொடர்புள்ள பதிவுகள்:

 

குடாகாயம்

இமானுவல் கன்ட்டின்  உணர்வோங்குப் பெருநிலை சபலங்களைக் கடத்தல்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.