அக்குரு அம்மா

Betty Woodman (1930-2018)
Balustrade Relief 6-94, 1994

-1-

அக்குரு அம்மா இறந்துவிட்டாள்.

அக்குருக்கு துக்கமாக இல்லை!

அக்குரு அம்மா இறந்துவிட்டாள்.

அக்குரு அழவில்லை!

அக்குரு அம்மா இறந்துவிட்டாள்.

தகவல் சொல்ல வந்தவனை சட்டை செய்யாமல் அக்குரு பார்த்தான். நினைவிலிருந்து இறந்து போனவளுக்கு அந்த செய்தி மீண்டும் உயிர் தந்தது.

அக்குரு அம்மா இறந்துவிட்டாள்.

‘எவ செத்தா எனக்கு என்னடா’ என்பதுபோல், அக்குரு முகத்தில் ஒரு அலட்சிய பாவம்.  லேசாக இடது புருவத்தை ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவாக எழுப்பியது மட்டும் தான் அம்மா தவறியதற்கு அவன் காட்டிய அதிகபட்ச எதிர்வினை. 

“ஓ. அப்பாட்ட சொல்லிடுங்க”, பதிலுக்கு கூட பொறுக்காமல் நகர்ந்தான் அக்குரு.

“த்ச்சு…..த்ச்சு” குரைத்து கொண்டிருந்த நாயை விரட்டி விட்டபடி, “அண்ணே, வீட்டுல யாரும் இருக்கீங்களா. அண்ணே”.

“லொள்… ல்ல்..லொள்..லொள்”

“சேம்பரத்திலிருந்து வாரண்ணே. முருகு வீட்ல எளவுங்க”.

“லொள்… ல்ல்..லொள்..லொள்”

“முருகு மாமா பெரிய மக பாக்கியமக்கா தவறிட்டாங்க. சாய்ங்காலம் எடுக்கிறாங்களாம். தகவல் சொல்ல சொன்னாங்க அண்ணே”, ஒருவழியாக நாயின் குரைச்சலுக்கு ஊடே  சொல்லி முடித்தான் செந்தில்.

“லொள்… ல்ல்..லொள்..லொள்”

தகவலுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தது, வாசலில் கட்டப்பட்டிருந்த நாயொன்று. அது போமெரியன் வகையை சார்ந்தது என்ற விவரமெல்லாம் செந்திலுக்கு தெரிந்திருக்கவில்லை.

“லொள்….லொள்….க்கர்.. ர்..ர்…”

“யேய் சும்மாயிரு…யாருங்க அது”, உச்சந்தலைக்கு வைத்த எண்ணெய் உடலில் வழிந்திறங்க தலப் தலப்பென்று தலையை தட்டி கொண்டே வெளியே வந்தான் அக்குருவின் அப்பன், சுப்பு.

“லொள்….லொள்….க்கர்.. ர்..ர்”

கருத்த தடிமனான உடல், கழுத்தில் சன்னமாக சுருளும் டிஸ்கோ செயின், அம்பது வயதிலும் அரும்பாத பூனை மீசை, இடுப்பில் தேங்காப்பூ துண்டு கட்டியிருந்த சுப்புவை பாக்கியத்தின் திருமணத்தின் போது பார்த்தது, அதன் பிறகு சற்றேறக்குறைய இருவது வருடங்கள் கழித்து இப்பொழுது தான் பார்க்கிறான் செந்தில்.

“அண்ண பாக்கியம் அக்கா தவறிட்டுது. அதான் சேதி சொல்லலாம்ன்னு”, இழுத்துக்கொண்டே சுப்புவின் முகத்தையே வெறித்துப் பார்த்தான்.  

சுட்டுவிரலை காதுக்குள் விட்டு குலுக்கி கொண்டே வீட்டிற்க்குள் திரும்பி நடந்தான் சுப்பு.

“சீ…ச்சி.  அவமானமா போயிடிச்சி. என்னா எதுன்னு கூட கேக்காமா அவன் பாட்டுக்கு உள்ள போறான், பொன்னப்பய, பொண்டாட்டி செத்த துக்கம் கொஞ்சமாவது இருக்காது. அட அவ எப்படியோ இருக்கட்டும்யா நீயும்தான படுத்து புள்ள பெத்துகிட்ட அவகிட்ட. அவ வேண்டாம், அவ நாத்தமும், சீக்கும் புடிச்சவ, ஆனா அவ சூத்துலேர்ந்து வந்த புள்ள மட்டும் வேணுமோ?  அது மட்டும இனிச்சு கெடக்கோ? மானங் கெட்டத்………. மொவன்”, ஒரு வசையோடு முடித்தான் செந்தில். 

“இவனுக்கெல்லாம் நல்ல சாவா வரும், புழுத்து தான் சாவான்ப்..…….. மொவன்”, மேலும் ஒரு வார்த்தை மோனையில் முடிந்தது.

பேருந்தின் பின்னிருக்கையில் தனக்கு தானே சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தவன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த வெற்றிலை பொட்டலத்தை பிரித்தான். காய்ந்த ஒரு வெற்றிலையின் நடு நரம்பில் சுண்ணாம்பை அப்பி புகையிலையோடு வாயிலிட்டு அதக்கிக் கொண்டான். அவனுக்கு அந்த நாயின் குரைச்சல் சத்தம் பேருந்தின் இரைச்சலை மீறி கேட்டது அவனுக்கு. 

பேருந்து முனகி கொண்டே முன்னே நகர்ந்தது. நினைவுகள் ஜன்னல் வழியாக பின்னோக்கி வழிந்து கொண்டிருந்தன. 

-2-

“இந்த சின்ன வயசுல அவளுக்கு ஏன்டா கல்யாணம் பண்ணி வைக்கிற, வேண்டாம் டா, சொன்னா கேளு, அந்த பய வீமசேனன் மாதிரி இருக்கான், நம்ம புள்ள கோழிகுஞ்சி மாரி. இரண்டுக்கும் ஒத்து வராது.பாவம் வந்து சேரும் டா முருகு, ஊர் பேச்சை கேட்டுகிட்டு ஆடாத, நான் சொல்றத கேட்டு நடந்துக்க, கூட்டமா இருந்த பொண்ணு, அங்க தனியா இருக்க சிரமப்படுவா”, பேத்தியை பற்றிய கவலையில் புலம்பி கொண்டாள், முருகு வின் தாயார் மாரியம்மாள்.

“த. சீ… சும்மா கெட..சனியன் எதை தொட்டாலும் தடங்க மசுரு சொல்லிக்கிட்டு. சாவுறாளா பாரு. இப்படியே பேசிக்கிட்டு இருந்தா அவளுக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு பண்ணி பாக்க முடியுமா”, அடிக்காத குறையாக கத்தினார் முருகு.

“ஏங்க, அவுங்க சொல்றதும் நாயம் தானே, நம்ம பாக்கிக்கு என்ன கல்யாண பண்ற வயசா இப்ப. இன்னும் இருவத தாண்டல, அந்தாள பாத்தாக்க புள்ள பெத்தவன் மாரி இருக்கான், இது சரிப்பட்டு வராது, வேண்…… “,  பேசிக்கொண்டிருக்கும் போதே தன்  மனைவியை எரித்துவிடுவதை போல ஒரு பார்வை பார்த்தார் முருகு;

அந்த பார்வையின் அர்த்தம் அவளுக்கு புரிந்ததால் அந்த அம்மாள் அதற்கு மேல் வாய் திறக்கவில்லை.

சச்சரவுகள் இருந்த போதிலும் திருமணம் இருவரின் சம்மதத்துடன் தான் நிகழ்ந்து முடிந்தது. இந்த இருவரில் ஒருவர் முருகு, மற்றவர்  சுப்பு.

“காசு இருக்குன்னு இப்படியா போய் விழுவான் மனுஷன். அந்த பயல பாரு, ஒழுவுர மொகர, முப்பத்தைந்து வயசாம், பயலுக்கு இன்னும் வீசை கூட சரியா வரல. தடி போத்து கணக்கா இருக்கான்”

“பாக்கியத்தை செல்லமா வளத்துட்டான், சவுரியமா வாழலும்ன்னு சரின்ட்டான் போல”

“அட விடுய்யா கல்யாண வீட்ல வந்து நொள்ள நொட்டை சொல்லிக்கிட்டு, ஏதோ நல்லா இருந்தா சரி தான்னு வாழ்த்திட்டு போவியா”

தாம்பூலம் தேடி கொண்டிருந்த உறவுகளின் வெவ்வேறு வாய்களில் வெற்றிலையாய் மெல்லப்பட்டு கொண்டிருந்தார் முருகு.

வெப்பமும் குளிர்ச்சியுமாய் பீறிட்ட ஜன்னலோர காற்று கழுத்தின் பின்புறம் வருட தலையை குலுக்கி சிலிர்த்து கொண்ட செந்திலுக்கு நிகழ்ந்தவைகளெல்லாம் ஒருகணம் அவன் மனதில் தோன்றி மறைந்தது.

செந்தில் பாக்கியத்தின் முறை பையன். முறை என்றால் நேர்முறையில்லை. தூரத்து உறவுக்காரன். பாக்கியத்திற்கு செந்தில் மாதிரியே இன்னும் நிறைய முறைகள் இருந்தன. எண்ணிக்கையில் சொன்னால் பத்தோ பதினொன்றோ.

எல்லோருமே அவளுக்கு பிந்தி பிறந்தவர்கள். அந்த கூட்டத்தின் பெரிய அக்கா அவள் தான். இளங்கோ ஒருவனை தவிர்த்து. அவன் ஒருவன் தான் அவளை பாக்கியம் என்று பெயர் சொல்லி அழைப்பவன். இளங்கோ பாக்கியத்தின் சொந்த அத்தை மகன்.  ஆறு மாதம் மூத்தவன். தனக்கு முறை என்று அவள் எண்ணிய ஒரே ஆண். 

பத்து வயதில் காமாலைக்கு இரையானான். அவன் இறந்த துக்கத்தில் அழுது கொண்டிருந்தவள் தீடீரென்று சமையலறைக்கு போய் பெரிய தட்டத்தில் சோற்றை போட்டு தின்றவளை, “வினோதமான சிறுக்கி என்று மாரியம்மாள் கிழவி அடிக்கடி சொல்வதுண்டு.

“எளங்கோ உயிரோடு இருந்து பாக்கியமக்காவ கெட்டியிருந்தா, அக்காவும் நல்லா இருந்திருக்கும், மாமா வீடும் நல்லா இருந்திருக்கும்”, செந்தில் தனக்கு தானே சொல்லி நொந்தான்.

-3-

பாக்கியம் இறந்தது அக்குருவை கிஞ்சித்தும் பாதிக்கவில்லை. அவனுக்கு அவளின் முகம் கூட சிதிலமாக தான் நினைவில் இருந்தது. ஒரு மழை இரவில் மண்டை உடைந்து, முகமெல்லாம் ரத்தத்துடன் அடைத்த கதவுகளுக்கு முன்னே அழுது ஓலமிட்ட ஒருத்தியை பார்த்தது மாதிரி தான் அவன் நினைவிலிருந்தது.

‘நீ பொறந்து தவழ ஆரம்பிச்சப்ப அவளை ஒங்கப்பன் அடிச்சி துரத்திட்டான்’ எப்போதோ ஒருமுறை அவன் ஆயா சொல்லக் கேட்டுருக்கிறான் அக்குரு.

ஆயா தீடீரென்று எதையேனும் நினைத்துக்கொண்டு அழுது புலம்புவாள். “வீடு இப்படி விலங்காம போனதுக்கு ஒம்மா சாபமா கூட இருக்கும்டா பயலே” என்பாள்.

ஆயாவின் வார்த்தைகளை நினைத்துக்கொண்டான்.

“ஒம்மா விளையாட்டு கொணம் மாறாத பச்சை புள்ள. வீட்டுக்கு அடங்க தெரியாது. கால்ல சக்கரம் கட்டினாப்புல ஊரை சுத்துவா. தெரிஞ்சவங்க தெரியதவங்க யாருக்கிட்டயும் சட்டுன்னு பேசி பழகிபுடுவா. காசு எடுத்துக்கிட்டு கெளப்பு கடைக்கு போய்டுவா யாருக்கும் தெரியாம. சரியான சினிமா பைத்தியம். தினம் கோவிலுக்குன்னு சொல்லிப்பிட்டு சினிமா கொட்டைய சுத்துவா. ஒரு நாள் சினிமா கொட்டையிலே யாருடனோ தனியா நின்னு பேசிட்டு இருந்த விசயம் தெரியவந்து. பிரச்னையா ஆயிட்டுது.

ஒப்பன் ஒரு முசுடு புடிச்சவன். எல்லாத்தையும் பூட்டி வைக்கிற பய. டிவிப் பொட்டிய கூட ரூம்ல வச்சிகிட்டு தனியா தான் பாப்பான். கடைக்கு போகும்போ உள்ள வச்சி பூட்டிட்டு போற பய. என்னை கூட பாக்கவிட்டது கெடையாது. அப்படியாப்பட்ட பய. அவனுக்கு  இந்த சேதி தெரிஞ்சா சும்மா இருப்பானா. 

அந்நேரம் பாத்து இந்த கிறுக்கு பக்கத்து வீட்டுக்கு டிவி பாக்க போயிருந்தா. தர தரன்னு சூத்துத் துணி கிழிய தெரு வீதியில இழுத்து வந்து போட்டு மாருலையும், வவுத்துலயும், ஓங்கி ஓங்கி மிதிச்சான்.

சுவர்ல சேத்து அறைஞ்சி ‘ஓடுகாலி நாயே, சினிமாவாடீ கேக்குது உனக்கு, யாருடீ அவன்.  அந்த மொவளே இந்த மொவளே அவளே இவளேன்னு ஆப்ப கரண்டியை பழுக்க காச்சி கெண்டைக்கால்ல சூடு போட்டுட்டுடான், பாவி. எல்லாம் நிமிஷத்துல நடந்துருச்சி. அவ மண்ட உடைஞ்சு ரத்தம் வழியும் போது தான் எனக்கு என்ன நடக்குதுன்னே விளங்கிச்சு”. 

ஆயா மேலும் சொன்னாள்:

“ஐயோ ஐயோனு அவ அலறன்ன அலறல் அப்பப்பா. யோசிச்சி பாத்தா இப்பயும் நடுங்குது, வேற ஒருத்தியா இருந்தா அத்தனை அடிக்கு செத்தே போயிருப்பா, ஒம்மா அழுத்தகாரி. பொழச்சிக்கிட்டா. மூஞ்சி மொகரல்லாம் வீங்கி போயி ராத்திரி முச்சூடும் தூங்காம அழுதுகிட்டே திண்ணையிலே கிடந்தா.

மறுநா, காலம்பர ரெண்டாவது பொண்ணு கல்யாணத்துக்கு கூப்பிட வந்த உங்க தாத்தனை உள்ள கூட வர சொல்லல உங்கொப்பன். ஏதோ ஈம காரிய பத்திரிகை போல வாசலிலே வச்சுட்டு அந்தாளு அழுதுகிட்டே போனாரு. பாவம். அவரு பொண்ணக்கூட பாக்கவிடல, இந்த படு பாவி. அந்த மனுசன் மனசு என்னா பாடுபட்டுருக்கும்

அவ உங்கப்பன் கிட்டக் ஒரு வார்த்தைகூட பேச மாட்டா. வாயில்லா பூச்சி. அவன கண்டாலே பயந்து கொள்வா. அவனுக்கு சோறாக்குவது, சாப்பாடு போடுவது எல்லாம் நாந்தான். கதவை பிடிச்சிபடி பாத்துகிட்டே நிப்பா. அவங்க ரெண்டும் பேரும் பேசிகிட்டத நான் பார்த்ததே இல்லை. எப்படித்தான் உன்னை பெத்தாலோ?”

“அதும் சரிதான், புள்ளே பெத்துகிறதுக்கும், புருஷன் பொண்டாட்டி பேசிக்குனும் தான் என்னா சட்டம்”, உதடு பிரியாமல் தனக்குள்ளே சொல்லி கொண்டாள்.

“கடைக்கு போக வர, கோவிலுக்கு போக, யாருக்காச்சும் கடுதாசி எழுத நான் தான் அவளுக்காக உங்கப்பன்கிட்ட வாதிடுவேன். அன்னிக்குக்குட அவ தங்கச்சி கல்யாணத்துக்கு போகணும், என்னைய கூட்டிட்டு போக சொல்லுங்கன்னு என்னைய போட்டு நச்சரித்து கொண்டே இருந்தா. நானும் அவனிடம் சொல்லி சம்மதம் வாங்கி வச்சிருந்தேன். நல்லா தான் கேட்டுகிட்டு கடைக்கு போனான், அந்த படுகாலிக்கு அதுக்குள்ள என்ன வந்ததோ தெரியல, காலையில கல்யாணத்துல கலந்துக்க போறோம்ன்னு நிம்மதியா தூங்கி கொண்டிருந்தவளை போட்டு கண்ணு மண்ணு தெரியாம அடிச்சி போட்டான். அதொட நிக்காம, தாலி கவுற அறுத்து, கையில காதுல இருந்த நகைகளையும் அறுத்து முண்டச்சியாட்டோம் ஆக்கிட்டான்.

காது மூக்கெல்லாம் ரத்தமா வழியிது, ஆனால் கண்ணுல ஒரு பொட்டு தண்ணி வரல, ஏதோ முடிவு செஞ்சிட்டா போல. விருமகத்தி பிடிச்சது போல நின்னு எல்லா அடியையும் வாங்கிகிட்டா.  அவ்ளோ அடிக்கும் பாவி ஒரு போட்டு கண்ணு தண்ணீ விடனுமே . ம்ஹும் .

முன்நெற்றி முடி கொத்தாக பிடிங்கப்பட்டு, உறைந்த ரத்தத்துடன், கிழிந்து தொங்கிய மேல் உதட்டை எடுத்து பொறுத்தியபடி முறைச்சுகிட்டே அவ நின்ன கோலத்தை பாத்து, நான் சமாதானம் செய்ய கூட கிட்ட போவல, அதுதான் நான் அவளை கடைசியா பாத்தது

அதுக்கப்புறம், நானும் அப்படியே அழுதுகிட்டே தூங்க போயிட்டேன். காலையிலே எழுந்து வாச தெளிக்க போகும்போ, கதவு வெறிக்க தொறந்து கெடந்தது. எனக்கு சொரேரென்று இருந்துச்சி. ஓடி வந்து படுக்கையை பார்த்தேன். அவ இல்லை. அன்னைக்கு போனவ தான் திரும்ப வரவே இல்லை”.

ஆயா உயிரோடு இருந்த போது.சொன்னவைகளெல்லாம் அக்குருவுக்கு நினைவுக்கு வந்தது. 

-4-

இரும்பு ஆணிகள் நிலம் அதிர புதைந்து கொண்டு இருந்தன. ‘நல்லா இழுத்து கட்டுடா’ பந்தல்காரர் வேலையாளை ஏவல் செய்து கொண்டிருந்தார். அந்த சாமியானா பந்தலின் நிறம் என்னவென்று அவருக்கும் மறந்து போயிருக்கும். அழுக்கேறி போயிருந்தது. சில இடங்களில் கிழிசலால் ஒட்டு தையல் போட பட்டிருந்தது. சாவு வீட்டில் கட்டி அவிழ்த்த கையோடு கல்யாண வீட்டிலும் கட்டப்படும் அந்த பந்தல் தீட்டு படுவதில்லை. அதனால் துவைக்கப் படுவதுமில்லை. அக்கம் பக்கத்து வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மரபெஞ்சுகள் வந்திருந்த உறவுகளின் இருக்கைகள் ஆயின. கூடுதல் இருக்கைகளுக்காக பிளாஸ்டிக் சேயர்கள் வரவழைக்கப்பட்டன.

ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கியிருந்த சேயர்கள் மீது ஏறி அமர்ந்திருந்தது ஒரு குழந்தை. பெண்கள் கூடி அழுவதை போல வட்டமாக கூடி அமர்ந்து நடித்து காட்டி விளையாடி கொண்டிருந்தன சில குழந்தைகள். 

அடுத்த வீட்டு வாசல் வரையில் சிரித்து பேசி வந்த பெண்கள், சாவு வீட்டில் நுழைந்த உடனே மாரில் அடித்து கொண்டு தீடீரென அழுதார்கள். பெண்களுக்கு எப்படித்தான் அந்த அழுகை வருகிறதோ!

சாவு வீடுகளில் ஒப்பாரி வைக்கும் பெண்கள் இறந்தவருக்காக மட்டுமல்ல தங்களுக்கும் சேர்த்தே தான் அழுகுகிறார்கள். எதையோ வெளியேற்றுவதற்காக தான்  சாவு வீடுகளை பெண்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் போலும்.

தினசரிகளில் வந்த செய்தியை கொண்டு மேல்சட்டை பித்தான்கள் பூட்டபடாமல் திறந்த மாரோடு, வெற்றிலையை குதப்பிக் கொண்டே அரசியல் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார் தெரு நட்டாண்மைகாரர்.

சாவு வீடுகளில் பேசும் அரசியல் படித்துறை வரையில் தான் செல்லுபடியாகும் என்பது அவருக்கும் தெரியும். துக்கத்தையும், அரசியலையும் காவிரியில் ஒருசேர தலைமுழுகிவிடுவார்கள். 

“டேய் சின்னவனே, இந்தா போயி டீ வாங்கி பொம்பளைங்களுக்கு கொடு, பாவம் காலையிலிருந்து ஏதும் சாப்பிடாமல அழுதுகிட்டு இருக்குவோ. அப்படியே முருக கூட்டிபோயி ஏதும் வாங்கி குடுடா, தம்பி, வயசான ஆளுடா. பாத்து”.

“பூ வாங்கியார ஆள் போயாச்சா”

“இன்னும் யாரேனும் வர வேண்டியுள்ளதாப்பா, அவ வீட்டுக்காரனுக்கு சேதி சொல்லியச்சா, யாரு போயிருக்கா”.

பதில் தெரிந்த, அல்லது பதில் தேவையில்லாத கேள்விகளை கேட்டு கொண்டே இருந்தார், நட்டாண்மை.

“குழி வெட்ற ஆளுக்கு முன்பணம் குடுத்து விடுப்பா. ஒரு ஆளு போயி இடத்தை காட்டு”, ஒவ்வொருக்கும் ஒரு வேலை வைத்திருந்தார் அவர்.

‘யாருக்கும் பொறுப்பில்ல இந்த வீட்டில், தான் இல்லாவிடில் இந்த எளவு என்ன ஆகும்’, என்று தனக்குள்ளே பெருமை பட்டுக்கொண்டார். உண்மையில் தெரு நட்டாண்மையின் தேவைகள் என்னவென்பதை சாவு  வீடுகள் துக்கத்துடன் சொல்லி விடுகின்றன.

“நேரம் போய்ட்டு இருக்கு பாரு, சீக்கிரம் முடி, ரொம்பல்ல ஆடம்பரம் பண்ற”, நயமாக பாடை கட்டிக் கொண்டிருந்த குடிமகனிடம் சற்றே கடிந்து கொண்டார்.

“உடம்புக்கு முடியாம இருந்தவ, ரொம்ப நேரம் வைக்க வேண்டா, அந்த பய எங்க வரபோறான். நீ சீக்கிரமா முடிச்சி கொடுப்பா”, நட்டாண்மைக்காரரிடம் முருகு இழைந்துக் கொண்டிருந்தார்.

நடுகூடத்தில் மரபெஞ்சின் மேல் கிடத்தப்பட்ட பாக்கியத்தின் உயிரற்ற உடலை தாண்டி ஒப்பாரியின் ஊடே புகுந்து கொல்லையில் மூத்திரம் பெய்துவிட்டு வந்த தில்லைநாதன் கண்களில் மோதியது காடா துணியில் சேர்த்து கட்டபட்ட பாக்கியத்தின் தேய்ந்த பாதங்கள் தாம். ‘எத்தனை தூரங்கள் கடந்திருக்கும் அந்த பாதங்கள். அந்த பாதங்களில் தான் எத்தனை முறை சூடு வைத்திருப்பேன்’, மனதில் உதித்த எண்ணங்களுக்கு, அவன் ஏனோ ஒலிவடிவம் கொடுக்கவில்லை.

சின்ன அக்காவை மறுவீட்டுக்கு அனுப்பிவிட்டு அப்பாடா என்று சாய்ந்த ஒரு நிமிட நிம்மதியை கூட முழுவதுமாக அனுபவிக்க விடாமல் அறுந்த காதோடு வந்து நின்ற பாக்கியத்தை அவள் அம்மாவும் முருகுவும் கட்டிக் கொண்டு கதறி அழுதது தில்லைநாதனின் கண்களில் தோன்றி மறைந்தது. 

பிரக்கனையேயின்றி தூங்கிப் போன பாக்கியத்தின் சீழ் வடிந்து கொண்டிருந்த கெண்டைகால் சூட்டு காயத்தை பார்த்து ‘ஐயோ’வென கத்தி அலறிய தன் அப்பாவின் சத்தம் மிக துல்லியமாக கேட்டது அவனுக்கு. காதுகளை இறுக்கமாக மூடிக்கொண்டு வெளியே வந்து உட்கார்ந்தான் தில்லைநாதன்.

சாவு வீடுகளில் ஆண்கள் பிணத்தை விலகி வெளியில் வந்து ஊர் கதைகள் பேசுவது துணிவின்மையின் மறுவடிவம்தான். ஒருவேளை அவர்கள் பிணத்தின் அடித்தொட்டு அமர்வார்களாயின் பெண்களை விஞ்சம் அளவுக்கு உடைந்து அழக்கூடும்.

-5-

சுப்புவை சமாதானம் செய்து பாக்கியத்தை கொண்டு போய் விட்டு வருவதும், அவன் அவளை அடித்து துரத்துவதும் வழக்கமாகி போயிருந்தது. 

வெக்கையும்,வெறுமையுமாய் கடந்த பல நாட்களுக்கு பிறகு ஒரு மழை இரவில் கருத்த பெண் உருவம் தயங்கி தயங்கி வாசலில் ஒதுங்குவதை,பிறை விழுந்த கண்களை இடுக்கிக் கொண்டே பார்த்த மாரியம்மா கிழவி, “அடியே பாக்கியம். என்னடி கோலம் இது, பாவி ஒன்னிய இப்படியாடி பாக்கணும், வேண்டா வேண்டான்னு தல பாடா அடிச்சிகிட்டேனே கேட்டானா அந்த படுப்பாவி”, என்ற அழுகை சத்தம் மழையில் கரைந்தது.

நெற்றி புடைத்து, கண்கள் பஞ்சடைந்து, உதடுகள் கருத்து முலைகள் வடிந்து பார்க்கவே அடையாளம் காணமுடியாத மாதிரி இருந்தாள். சதைகளெல்லாம் உதிர்ந்து தலை மட்டும் துருத்தி கொண்டு விகாரமாக இருந்தது பாக்கியத்தின் தோற்றம். மூக்கித்தி துளைகள் துந்து போயிருந்தன. ஈர்க்குச்சி சொருகப்பட்டு கம்மல் துளைகள் பாதுகாக்கப்பட்டிருந்தன. தலை மயிர் நரைத்து, கன்னங்கள் ஒடுங்கி, உதட்டு ஓரத்திலும், நகக் கண்களிலும் கரும்புள்ளிகள் போட்டிருந்தன. கழுத்தில் அழுக்கேறிய மஞ்ச கயிறு.

அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டிற்குள் மழைக் காற்று சுதந்திரமாக சுற்றி வந்தது. கட்டிருந்த புடவையில் கிழிசல்கள் இருந்தன. 

சடசடவென அடித்து பெய்யும் மழையில் நனைந்தவாறு திறக்கப்படாத கதவுகளுக்கு முன்னே அழுவதற்கோ, அழைப்பதற்கோ திராணியின்றி நின்று கொண்டிருந்தாள் பாக்கியம்.

பதறியபடியும் கதறியபடியும் கதவு திறந்தது.  கிழவியின் படுக்கையில் சடீரென்று சரிந்தாள் பாக்கியம். விட்டு விட்டு எழும் லேசான குறட்டை ஒலி மட்டும் அவள் இன்னும் உயிருடன் இருப்பதை சொல்லிக்கொண்டு இருந்தது.

-6-

ஊறவைத்த தென்னை ஓலைகளை கிழித்து துடைப்பமாக மாரியம்மாள் கட்ட, அதை வீடு வீடாக கொடுத்து காசாக்குவாள் பாக்கியம். 

ஈர்க்குச்சி உருவிய செத்தைகளை இரண்டாக மடித்து வாய் அடுப்பில் சொருகி வெந்நீர் போட பயன்படுத்தி கொள்வாள் கிழவி. சில வேளைகளில் அதையும் கூட காசாக்கி விடுவாள். எமபாதகி!

ஐம்பது டிசம்பர் பூக்கள் ஒரு ரூபாயும், ஐம்பது கனகாம்பர பூக்கள் இரண்டு ரூபாய் என்று   விலை தீர்மானிப்பாள் கிழவி. இது தவிர மல்லிப்பூ, பப்பாளி, கொய்யாக்காய், வாதாங்காய், இளநீர் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ரேட். விலை பேச கிழவி, விற்று காசாக்க பாக்கியம்.

பாக்கியம் கேக்கும் போதெல்லாம் கிழவி காசு தர வேண்டும் என்பது எழுத்து பிரதியில்லா புரிந்துணர்வு ஒப்பந்தம்.

வாரமொருமுறை பெரியாஸ்பத்திரி பிரசவ நெடியை சுவாசிக்கவில்லையெனில் கிழவிக்கு இருப்பு தங்காது. சேர்த்து வைத்த காசுகளை முந்தானையில் முடிந்து கொண்டு கிளம்பிவிடுவாள். 

“அது என்ன ஆஸ்பத்திரிக்கா போகுது. காசை சேத்து வைச்சு வக்கனையா திங்க போகுது. வயசான காலத்துல வாயை அடக்குதா பாரு. அப்படியே அது நாக்கை அறுத்தா தான் என்ன. இது கெட்டது பத்தாதுனு அவளையும் சேர்த்து கெடுக்குது. வயசுக்கு வந்த பொண்ண இப்படி கூட்டிகிட்டு ஊர் ஊரா சுத்துறது? இந்த மனுசனும் என்னா ஏதுனு ஒரு வார்த்தை கேக்குறாரா”, மிளகாய் சாந்தை அம்மியில் அரைத்துக் கொண்டே மொவலாசி செய்யும் மனைவின் பேச்சை லட்ச்சை செய்யாமல் நீராகரத்தை மடக் மடக்வென்று குடிப்பார் முருகு.

கிழவி பெரியாஸ்பத்திரிக்கு கிளம்பினாள் போதும் பாக்கியம் ஏதேனும் ஒரு வியாதியை வழுக்கட்டாயமாக வருவித்து கொள்வாள். அதற்கு காரணம் ஒன்றுதான். இல்லை இல்லை இரண்டு காரணங்கள் இருந்தன. 

சுடச்சுட நெய் ஒழுகும் அல்வாவை வாழையிலையில் மடித்து கொஞ்சமாக அதன் மேல் மிக்சரை தூவி அய்யனார் கொடுக்க நீட்டும் முன்னே பிடுங்கி திண்ணலாம் போல இருக்கும். ஒருமுறையோடு போதுமென்று போனவன் சிங்கமடை சரித்திரத்தில்லை எனலாம். ஆஸ்பத்திரியின் பினாயில் வீச்சத்தை கூட அதற்க்காகவே பொறுத்து கொள்வாள் பாக்கியம். 

அடுத்து நேராக ராமய்யர் கடைக்கு தான். ஆளுக்கு ஒரு மசால்தோசை. ஒரு திக்கான மசாலா பால். சாப்பிட்ட பிறகு தான் இரண்டு பேரின் வியாதியும் குணமாகும்.

“வாய நல்லா தொடச்சிகோடீ…கைய உள்பாவாடையில நல்ல சூடு பறக்க தேச்சு விட்டுடு….யாரு கேட்டாலும் சாப்பிடத்தை சொல்லக்கூடாது… கோள் சொல்றதுக்குனே ஒம்மா காத்திருப்பா”, கிழவி.

பாயில் சுருண்டு, குன்னிக் கொண்டு கிடந்த பாக்கியத்தின் கால்களை நீட்டித்து போர்த்திவிட்டாள். வாயை பிளந்து கொண்டு தூங்கும் பேத்தியை பரிதாபமாக பார்த்து கொண்டே இருந்தாள். அவளை அறியாமலே கண்களில் தேங்கிய கண்ணீர் உடைந்து கண்ணங்கள் வழியே ஓடி வழிந்தது.

பொழுது எப்போதும் போல இருக்கப்போவதில்லை என்பதை அவதானித்தவாறே படுக்கையை விட்டெழுந்தாள் எழுந்தாள் கிழவி.

கொல்லைப்புறத்தில் பாக்கியத்தின் அம்மா முசு முசுவென அழுகும் ஓசை கேட்டது ” இந்த படுகாலிக்கு ஒரு சாவு வந்தா எல்லாத்தையும் தன்னகட்டி விட்டுறலாம், இருந்துகிட்டு இப்படி மானத்தை வாங்குறாளே. பாவி.யாரையும் நிம்மதியா விட மாட்டுறாளே”. 

இவ்வளவு நாளாக எங்கே தங்கி இருந்தாள், எப்படி சாப்பிட்டாள், எங்கே தூங்கினாள், செலவுக்கு என்ன செய்தாள், எங்கே குளித்தாள், எங்கே மலம் கழித்தாள். இதோ இப்போ கட்டியிருக்கிறாளே இந்த புடவையும், ஜாக்கெட்டும், யாருடையது. ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு எண்ணங்கள்..

முன்பொருமுறை இப்படிதான் வந்து நின்றாள். என்னவென்று கேட்டதற்கு சுவரில் முட்டி தலையை உடைத்துக்கொண்டு அழுதாள். சாப்பிட்டாள். உறங்கினாள். பின்பு எங்கோ தொலைந்துவிட்டாள். வீட்டில் எந்த சத்தமுமில்லை. கனத்த மௌனம். ஒருவர் முகத்தை மற்றவர் தவிர்த்தபடி நடந்தார்கள் மதியம் வரையில்.

-7-

இன்ன கெட்ட வார்த்தைகள் இன்ன உறுப்பைதான் குறிக்கிறது என்று புரிய ஆரம்பித்த வயது தில்லைநாதனுக்கு அப்பொழுது. வேட்டி கட்டு சரியாக வராமல், கைலியை போன்று மூட்டிக் கட்டிக்கொண்டான். முளைக்காத மீசையை ஓரங்சாரமாக ஒதுக்கி ஒழுங்கு செய்கிறான். கெண்டைக்காலில் முளைத்த சுருட்டு முடிகளை பார்த்து பெருமை கொள்கிறான். அக்குள்களில் சென்ட் பூசிக்கொள்கிறான். அப்பனுக்கு வைக்கும் பெரிய தட்டத்தில் தனக்கும் சோறு வார்க்க சண்டையிடுகிறான். 

பாக்கியத்தின் நடத்தையை பற்றி ஊர் தெருவில் பேசுவது அவனை கோவம் கொள்ள செய்யும். வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் பாக்கியத்தை பற்றி விசாரித்தால் அவமானமாக இருந்தது அவனுக்கு.

ஒருமுறை வீடு மாற்றும் பொழுது தட்டு வண்டி ராஜேந்திரனிடம் வண்டி சத்தம் பேரத்தில் இருக்கும்போது, “அண்ணே இது என்ன மொகம் தெரியாத ஆளுகிட்ட பேசுரமாறி பேரம் எங்கிட்ட பேசுறீயே, எனக்கு தெரியதாண்ணே, உங்கள பத்தி, உங்க வீட்டை பத்தி, உங்க வீட்டு பொண்ணு என் கூட தானே கொஞ்ச நாள் இருந்திச்சி”, என்று சொல்லிவிட்டு  நாக்கை கடித்துக்கொண்டு வண்டி சத்தம் கூட வாங்காம போன ராஜேந்திரனும்,

“மாப்ள,கோவிக்காம கேக்குறதா இருந்தா சொல்றேன், நேத்திக்கு செகண்ட் ஷோ விஜயா டாக்கீஸ்ல பாக்கியம் அக்காவ பாத்தேன்டா, கூட ஒருத்தன் யாருன்னு தெரியலடா, அக்கா பக்கத்துல உக்காந்துகிட்டு இருந்தான். நான் போய் அவனை அடிச்சி தொரத்திட்டு, அக்காவ நான் தான் மாப்ள வீட்ல விட்டேன். பாத்துக்க மாப்ள”, என்று நண்பன் ஒருத்தன் தன்னிடம் சொல்லியதும் நினைவில் வந்தது, தில்லைநாதனுக்கு.

பாக்கியத்தை பார்த்த பொழுது, தெரு பஞ்சாயத்தில் சுப்பு, வண்டி ராஜேந்திரன், அக்கம் பக்கத்தினர், சொந்தக்காரர்கள், நண்பர்கள் பேசிய வார்த்தைகள் எல்லாம் மாரி மாரி ஒலித்தன. 

நடையில் கிடந்த சவுக்கை விறகை எடுத்து விளார் விளார் என்று சாத்தினான். சிலாம்புக்கள் பாக்கியத்தின் உடம்பில் பட்டுத் தெறித்தன. கறுத்த உடம்பில் இப்போது அங்கங்கே சிவந்த தடிப்புகள். கேவும் பாக்கியத்தின் குரல் வெளியே வந்துவிட கூடாது என்று அவளின் கழுத்தை நெரித்து கொண்டிருந்தது அவனின் இடது கை. 

திண்ணையிலிருந்து மாரியம்மாள் கிழவி விந்தி விந்தி வருவதற்குள், பழுக்க காய்ச்சிய ஊதாங்குழலால் இரண்டு இழுப்புகள் உள்ளங்கால்களில் வாங்கி இருந்தாள் பாக்கியம். வீட்டில் உள்ளவர்கள் தடுக்க நினைப்பதற்குள் அத்தனையும் நிழந்திருந்தது.

“நாமர்தா நாய, நாடுமாறி சிறுக்கி, ஓடுகாலி முண்ட, ஒன்னாலே ஒரு இடம் போய் வரமுடியுதா, ஊர் முழுக்க சொல்லுறான், முருகு மூத்தவ தேவிடியாளா போய்ட்டான்னு, ஏதாவது குளம் குட்டையில் விழுந்து செத்து தொலைக்க வேண்டியது தானேடி”, முருகு உடைந்து அழுதார்.

“எலே, ஒங் பெரிய மனுஷ தனத்த வெளியே வைச்சுக்கோ, இங்கே வந்து நாட்டாமை மயிரு பண்ணாதே, வந்திட்டான் என்னமோ இவனுக்கு தான் மான ரோசம் உள்ளதாட்டம். போட வெளியே” என்று உரத்து கத்தினார். 

உலர்ந்த பார்வையில் எல்லோரையும் பார்த்துவிட்டு, காயங்களில் ஆர்வமாக எச்சிலை துப்பி பூசிக் கொண்டிருந்த பாக்கியத்தின் உருவம், ஒரு நிழல் போல தில்லைநாதனின் நினைவில் ஒருசனம் வந்து மறைந்தது.

-8-

மண் சரியாத சதுர குழி. சின்னதாக உள்மாடம் வெட்டி, தயாராக இருந்தது. 

பாக்கியத்தின் உடல் இறுதி குளியலுக்காக கிடத்தப்பட்டது. பெண்கள் புடவையால் மறைப்பு கட்டினர். பாக்கியத்தின் மேல் சுத்தியிருந்த புடவை களையப்பட்டது. நிர்வாணமான உடல். பெண்ணின் உடல்.பாக்கியத்தின் உடல். குளியூட்டிய பெண்களின் அலறல் சத்தம் வெளியில் இருந்த ஆண்களை பதறவைத்தது. 

காய்ந்த சருகை விட சற்று கணம் கொண்டதாக இருந்தது அந்த உடல். ஊற்றிய மஞ்சள் கலந்த தண்ணீர் கழுதெலும்பு  குழியில் தேங்கி இருந்தது. வரி வரியான நெஞ்செழும்புக்குள் புதைந்திருந்தது முலைக்காம்புகள். பிள்ளைப்பெற்ற வயிறு ஒடுங்கி இருந்தது. முற்றிலும் சதை வற்றிபோய் இருந்தன கை கால்கள், சுருங்கி போயிருந்தத யோனி உதட்டை தவிர்த்து அந்த உடல் முழுக்க தழும்புகள், வடுக்கள்.

கை நடுங்கியபடி குழியில் மண்ணை அள்ளிப்போட்ட முருகுவை அணைத்தபடியே, தில்லைநாதன் பாக்கியத்தின் உடலை வெறித்து பார்த்து கொண்டே இருந்தான். அது அவளிடம் எதையோ கோருவது போல இருந்தது.

சுடுகாட்டு பனைமரங்கள் காற்றில் மெல்ல அசைந்தன.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.