மாரியின் மனைவி

மாரியின் மனைவியின்  வயது  முப்பத்தி எட்டு வருடம் மூன்று மாதம். முன் பல் கொஞ்சம் தூக்கல்.   பஞ்சாபிலிருந்து  இறக்குமதியான தமிழ் சினிமா நடிகையர் போல வனிலா  ஐஸ் கிரீம் நிறமும் கிடையாது.  படித்தது பன்னிரண்டாம் வகுப்பு வரை தான். இப்படிப்பட்ட மாரியின் மனைவி பற்றி  வேலை மெனக்கிட்டு நான் ஒரு கதை எழுத வேண்டியது அவசியமா என்று நீங்கள் கேட்கலாம்.   அவசியம் தான். ஏனென்றால் அவளால் நம் பாரத மணித் திரு நாட்டிற்க்கு  ஏற்பட்ட இழப்பின் மதிப்பு,  பல  கோடி  ரூபாய்கள்.  இன்னொரு கோணத்தில் பார்த்தால்  அவளால்  தவிர்க்கப் பட்ட உயிர் சேதம்  ஆயிரக் கணக்கில். எனவே மாரியின் மனைவி என்று நாம் விளிக்காமல்,  அஞ்சுகம் என்றே அழைப்போம்.

உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு  திங்கள் கிழமை ஒன்று தான்.    ஆஸ்டினில் சிலிகான் சில்லு தயாரித்தாலும், அமிஞ்சிக்கரையில்  காப்பி ஆற்றினாலும்  அனைவரையும்  தூக்கத்தின் மதிப்பை  உணரச்  செய்யும் ஒரு நாள்.  ஆனால் அந்த  திங்கள் கிழமை பொன்  காலைப்  பொழுதில்  மாரி  உற்சாகமாகவே  எழுந்திருந்தார். விடுமுறைக்கு வந்திருந்த அஞ்சுகத்தின் தம்பி ஊருக்கு போனது ஒரு காரணமாக இருக்கலாம். 

மாரி அணு ஆலை சீருடையை மாற்றிக் கொண்டு காலை உணவு  சாப்பிட அமர்ந்தார்.  மதிய உணவுக்கு டிஃபன் காரியர்  தயாராக இருந்தது.  

“அஞ்சுகம். இன்னிக்கு  காலைல  என்ன, இட்லியா?  உன்னோட மீன குழம்பு எங்க?. நேத்திக்கே சாப்பிட முடியல “

“இல்லீங்க. நேத்து தம்பி ஊருக்கு போகும்போது அவனுக்கு கைல குடுத்து அனுப்பி வைச்சுட்டேன். இன்னிக்கு கத்திரிக்கா கொழம்பு”

சிக்சர் அடிப்போம் என்ற சந்தோஷ எதிர்பார்ப்பில் இருந்த பாட்ஸ்மன் கேட்ச் கொடுத்து அவுட்டான ஏமாற்றம் வந்தது மாரிக்கு. அந்த ஏமாற்றம் கோபமாக வெளிவந்தது. அவர்  தனக்கு என்று பெரிய பட்டினம் மார்க்கெட்டில் பேரம் பேசி வாங்கிய மீன். தனக்கு  பிடிக்கும் என்று தெரிந்தும் அவள் தம்பிக்கு அஞ்சுகம் தாரை வார்த்துக் கொடுத்ததை அவனால் ஜீரணிக்க (!) முடியவில்லை.

“இது மட்டும் எதுக்கு? இத்தையும் உன் தம்பிகிட்ட போய் கொடுக்க வேண்டியது தானே?”

கோபத்தோடு காலை உணவை  சாப்பிடாமல்,  டிஃபன் காரியரையும்  எடுக்காமல்  பஸ்  பிடிக்க ஓடினார்.

 குடியிருப்பில் இருந்து பத்து  கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது மாரி  பணி  செய்து கொண்டு இருக்கும் அணு ஆலை.  வங்கக் கடலோரத்திலேயே குடியிருப்பும் ஆலையும் அமைந்து இருந்தன. ஆலை நிர்வாகமே போக்குவரத்து, குடியிருப்பு உட்பட அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து இருந்தது. 

 “என்ன தலைவரே!  ஓடி வரீங்க? லேட்டா எழுந்தீங்களா? நேத்து இராத்திரி பார்ட்டியா?” 

டிரைவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தன் இருக்கையில் அமர்ந்தார். எப்போதும் உட்காரும் ஜன்னலோர சீட் அன்று கிடைக்கவில்லை.  யாரோ இரண்டு செக்யூரிடி காவலர்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தனர்.

ஆலையின் மெய்ன் கேட்டருகில் செக்யூரிடி பரிசோதனை முடித்து உள்ளே வந்தவுடன் வயிறு “கொர்” என்றது. 

கால்கள் தானாக கேண்டீனை நோக்கி நடை போட்டன! 

காண்டீனின் வாசலில்  சாக் பீஸால்  கலர் கலராக போர்டில்  மெனு எழுதியிருந்தது.   “திங்கள் கிழமை – உப்புமா – 20 ரூபாய்”.  ஆனால் மாரி  போர்டை பார்க்காமலே நேரே காஷியரிடம்  போய் “ஒரு மசால் தோசை ஒரு காப்பி” என்று பத்து  ரூபாயை  வைத்தார்..  

” என்ன மாரி? மறந்து போச்சா?  இன்னையில்  இருந்து வெல ஏறியாச்சு. டிபன் இருபது  ரூபாய். காபி  பத்து ரூபாய்.”    காஷியர் மணிக்கு மாரியை நன்றாகத் தெரியும். இருவரும் ஒரே யூனியன் தான். 

அந்த அணு ஆலை காண்டீனில் தொழிலாளர் நலனுக்காக எல்லாமே தள்ளுபடி விலையில் தான்  விற்றார்கள். அவ்வப்போது பணவீக்கத்தை ஒட்டி நிர்வாகம் கொஞ்சம் விலையை ஏற்றுவார்கள். யூனியனுடன் கலந்து ஆலோசித்த பின்பு தான் விலை ஏற்ற முடியும்.. அங்கு இரண்டு யூனியன்கள் இருந்தன. மாரியின் யூனியன் விலை ஏற்றத்திற்கு  சம்மதிக்கவில்லை. இன்னொரு யூனியன் சம்மதித்ததால் நிர்வாகம் விலையை ஏற்றி விட்டது. அதுவாவது பரவாயில்லை. மசால் தோசைக்குப் பதிலாக உப்புமாவைப் போட்டதை மாரியால் மன்னிக்க முடியவில்லை. டெஸ்லா காரை எதிர்பார்த்து வந்தவனுக்கு டாடா நானோ கிடைத்த உணர்வு வந்தது.

“என்ன உப்புமாவும் காபியும் தரட்டுமா? முப்பது ரூபாய்”

மாரியிடம்  அன்று பத்து  ரூபாய் மட்டுமே இருந்தது.  ஊரில்  சின்ன  பெட்டிக்கடையில் கூட கார்டு, செயலி வழியாக பண பரிவர்த்தனை  நடக்கும் போது  இந்த கான்டீன் மட்டுமே ஒரு விதி விலக்காக  இருந்தது.

“என்ன தோழரே? பணம் இல்லையா?  நான் தரட்டுமா?”

பின்னாலிருந்து ஒரு குரல் வந்தது. மாரிக்கு பரிச்சயமான குரல்.  கேட்டாலே கடுப்பு ஏற்றும்  குரல். மாற்று யூனியன்  தலைவர் சாலமன்.  அக்னிப்  பொறியாக  இருந்த மாரியின் கோபத்துக்கு LPG  சிலிண்டரை திறந்து  விட்டது போல வெடிக்க  வைத்தது.

“என்ன  கிண்டலா?  உங்களால் தானே இந்த விலை  ஏறிச்சு?  நிர்வாகத்துக்கு  ஜால்ரா  அடிப்பதும், தொழிலாளர் வயத்துல  அடிப்பதும் தானே உங்கள் வேலை?”

“தோழரே.  பாத்து பேசுங்க.  ஏதோ போனா  போகுதுன்னு  காசு கொடுத்தா வாய்  ரொம்ப நீளுது?”

“உன்னோட பிச்ச  காசு எனக்கு வேணாம்.  நிர்வாகம்  விலை குறைக்கணும்.   பழைய மெனுவை திரும்ப வைக்கணும்”

பேசிக் கொண்டே  மாரி  காண்டீனை பார்வையிட்டார் .   ஒரு ஐம்பது பேர் இருக்கலாம். பெரும்பான்மையோர் அவருடைய யூனியன் உறுப்பினர்கள் தான்.

“தோழர்களே!” மாரி குரலை உயர்த்தினார்.. 

“இன்னும் எத்தனை நாள் இந்த நிர்வாக அடக்குமுறையைப் பொறுத்துப் போவது? பொறுத்தது போதும்! பொங்கி எழுவோம்! நாம் யார் என்பதைக் காட்டுவோம். இன்று தனி மனிதனுக்கு தரமான உணவு இல்லை. நாம் சகத்தினை அழிக்க வேண்டாம். ஆனால் வெளிநடப்பு செய்வோம். வேலையை நிறுத்துவோம்! வருவீர்களா?”

“வருவோம்! வருவோம்I”   

என்று சில குரல்கள் எழுந்தன. பசியுடன் வரிசையில் நிற்பவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. காஷியர் மணி உடனே கவுண்டரை மூடிவிட்டார். 

இவையெல்லாம் கண்மூடித் திறக்கும் நேரத்துக்குள் நடந்து விட்டதால் சாலமனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரும் இந்த நிலைமையில் வெளியேறுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டார்.

காலை ஒன்பது மணிக்குள் அது தொழிலாளர் பிரச்சனையாக உருவெடுத்தது.

——

“டார்லிங். என்னுடைய காலை பானம் எங்கே?”, என்று டைனிங் டேபிளில்  தேடினார் முகுந்த் குல்கர்னி.

” ஓ! மன்னிக்கவும். நேற்று சொல்ல மறந்து விட்டேன். வெந்தயம் காலியாகி விட்டது. இன்று டிரைவரை அனுப்பி வாங்கி வைத்து விடுகிறேன். இன்று ஒரு நாள் மட்டும் டீ குடியுங்களேன்.”

முகுந்த் பதில் சொல்லாமல் பெருமூச்சு விட்டார். அவர் டீ. காபியை நிறுத்தி மூன்று வருடமாகி விட்டது. இருந்தாலும் அவருக்கான தேநீர் உபசரிப்பு நின்ற பாடில்லை. டீ, காபிக்குப் பதிலாக வெந்தயத்தை ஊர வைத்த நீரைப் பருகுவதை பழக்கமாகக் கொண்டார். அது போல மாலை ஆறுமணிக்குப் பின். காலை ஒன்பது மணி வரை ஒன்றும் சாப்பிடுவதில்லை. இன்டர்மிடன்ட் ஃபாஸ்டிங். ஏகாதசி விரதத்திற்கு ஒரு நவீன பெயர்.

முகுந்தின் உலகமே அணு ஆலை தான். படிப்படியாக உயர்ந்து இப்போது இயக்குனராக உள்ளார்.  இயற்கை வாழ்வில் மிகுந்த ஈடுபாடு. ஆலைக்குக் கூட முடிந்தவரை சைக்கிளில் செல்வதை வழக்கமாகக் கொண்டவர். நிர்வாகத்தில் கார், டிரைவருடன் கொடுத்து இருந்தாலும் ,  அவ்வப்போது பஸ்ஸிலும் பயணிப்பார். அவர் எங்கு சென்றாலும் அவர் கூடவே இரண்டு செக்யூரிடி காவலர்கள் வர வேண்டும். முதலில் சுதந்திரம் பறி போனது போல ஓர் உணர்வு. பின்னால் கொஞ்சம் பழகி விட்டது.

அன்று சைக்கிளைத் தள்ளிய போது தான் தெரிந்தது பஞ்சர் என்று.

செக்யூரிடி. “சாப், சைக்கிள் பஞ்சர் சாப்” என்றான்.  

” அதுதான் தெரிகிறதே!. நேற்றே பார்த்து சொல்ல வேண்டியது தானே”

“நான் காலை டூயூடி சாப்” 

செக்யூரிட்டி  முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும்  காட்டா  விட்டாலும்,  மனதுக்குள்  சிரிப்பதாக  முகுந்திற்கு 

 தோன்றியது.  காரில் போகலாமா, பஸ்ஸில் போகலாமா என்று ஒரு வினாடி சிந்தித்தார். காரை எடுத்துச் சென்றால் மறு நாளும் வெந்தய நீர் கிடைக்குமா என்று தெரியாது.

“டார்லிங். நான் இன்று பஸ்ஸில் போகிறேன். மறக்காமல் வெந்தயம் வாங்கி வைத்து விடு”

“கண்டிப்பாக. உங்கள் காலை உணவுக்கு இன்று ஆலு போஹா.  மதிய உணவு சாபுதானா கிச்சடி. இதோ உங்கள் டிபன் காரியர்”

மனைவி கொடுத்த காரியரை வாங்கிக் கொண்டு, இரு செக்யூரிடி காவலர்கள் சகிதம் பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தார் முகுந்த்.

பஸ் ஸ்டாப்பில் ஒரு நாலைந்து பேர் நடிகை நளினாவின் நாய்க்குட்டி குளிக்காமல் இருப்பது  பற்றி சுவாரசியமாகப் பேசிக் கொண்டு இருந்தனர்.  பிறக்க போகும்  குட்டிகளின்  தந்தை பற்றி  வதந்தி.  நடிகர்கள் அன்வர் கான், விக்கி   இருவரும் தங்கள்  நாய்களை அந்த “வேலை”யை செய்ததாக சொந்தம் கொண்டாடினர்.  நளினா  அன்று காலை  நாய் குட்டிகள்  பிறந்தவுடம்   DNA  பரிசோதனை செய்யப் போவதாக அறிக்கை விட்டாள்.  அது  பற்றி  விவாதித்துக்  கொண்டு இருந்தவர்கள் முகுந்த் வருவதைப் பார்த்தவுடன் சட்டென்று அமைதியானர். அவர்களின் வணக்கத்திற்கு முகுந்த் மெதுவாகத் தலையசைத்து ஏற்றுக் கொண்டார்.

 பஸ்ஸில் கூட்டமில்லை. முதல் இரு சீட்டுகளிலும் செக்யூரிடி காவலர்களை உட்கார வைத்து விட்டு தான் பின் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார்.  அன்றைய தினம் குறித்து மனம் அசை போட்டது. அன்று அணு ஆலையின் சக்தியை 80% அதிகரிக்க திட்டம் இருந்தது. அது அவரது நீண்ட நாள் கனவு. அந்த அணு ஆலைகள்  எப்போதும் 50% சக்தியில் தான் இயங்கிக் கொண்டிருந்தது. சக்தியை அதிகரிக்க முயன்றால் இயந்திரக் கோளாறின் காரணமாக ட்ரிப் ஆகிக் கொண்டிருந்தது. முகுந்தின் லட்சியம் அணு ஆலைகளை நூறு சதவிகித சக்தியில் இயக்குவது. அதன் முதல் படி தான் அன்று. காலையில்  புதிதாக வேலைக்கு  சேர்ந்தவர்களுடன் ஒரு அறிமுகம். மனதில் முறுவலுடன் பஸ் ஜன்னலுக்கு வெளியே பார்த்தார். அடுத்த ஸ்டாப்பில் யாரோ ஓடி வந்து கொண்டிருந்தார். அவருக்கு நன்றாகத் தெரிந்த முகம்தான். யூனியன் தலைவர் மாரி.  மாரியைப் பார்த்தவுடன் தலையை உள்ளே இழுத்துக் கொண்டார் முகுந்த். இருவருக்கும் அவ்வளவாகச் சேராது. யூனியன் மீட்டிங்  நினைவுக்கு வந்து அவர் புன்னகையை அழித்தது. 

—–

” நண்பர்களே! உங்களை இந்த அணு ஆலைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்”

 முகுந்த் கான்பரன்ஸ் அறையில் அமர்ந்திருந்த இளைஞர்களை பார்வையிட்டார். மொத்தம் ஐந்து பேர். இரண்டு பெண்கள். மூன்று ஆண்கள்.  இந்தியாவில்  எங்கிருந்து வேண்டுமானாலும் வந்திருக்கலாம்.  ஒரு சர்தார் ஜியையும் , ஒரு  தமிழ் இளைஞனையும்  டர்பனையும், வீபூதியையும் வைத்து சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. பெயர் பட்டியலை ஒரு முறை  பார்த்தார்.  இன்னொரு இளைஞன்  ஜம்முவில் இருந்து வந்து இருந்தான்.  பெண்கள் இருவரும் தமிழ் நாடு  மற்றும்  ஆந்திராவில் இருந்து வந்து இருந்தார்கள்.  பட்டப்படிப்பை முடித்து விட்டு ஒரு வருடம் மும்பையில் அணு ஆலை குறித்த பயிற்சியை முடித்துக் கொண்டு அவருடைய ஆலையில் பணி புரிய வந்துள்ளனர்.  அவரும் இதைப் போலத்தான் முப்பது ஆண்டுகள் முன்னால் நிறைய கனவுகளுடன் சேர்ந்தார். அவருடன் கூடச் சேர்ந்தவர் எல்லாரும் இப்போது தனியார் கம்பெனிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று விட்டனர். இந்த ஐந்து பேர்களில் கூட எத்தனை பேர் வெளிநாடு போகாமல் ஐந்து வருடம் அங்கே நிலைத்து நிற்பார்கள் என்று சொல்ல இயலாது.

“சொல்லுங்கள். உங்களுக்கு இந்த அணு ஆலை பற்றி என்ன தெரியும்?”

“இது ஒரு அழுத்தப் பட்ட கனநீர் உலை”,  உடனே ஒரு பெண்ணிடம் இருந்து பதில் வந்தது.   

” அப்படி என்றால் என்ன?

“இதில் யுரேனியம் எரி பொருள். அது கதிரியக்கத்தால் வெப்பத்தை வெளிப் படுத்தும். அந்த வெப்பத்தை நீராவியாக மாற்றி நாம்  விசையாழி (டர்பைன்) மூலம் மின்சாரம் தயாரிக்கலாம்.” இன்னொரு பெண்.   

“சரியான விடைகள். இங்கு ஆண்களுக்கு எதுவும் பேசத் தெரியாதா? நாம் எப்படி அணு உலையைக் கட்டுப் படுத்துவது? கட்டுப்பாடு இல்லாவிடில் வெடித்து விடாதா?”  

“இல்லை. யுரேனியம் எரி பொருளைச் சுற்றி கனநீர் இருப்பதால் நியூகிளியர் சங்கிலி  எதிர்வினைகள் கட்டுப் பாட்டிற்குள் இருக்கும். தவிர நாம் காட்மியம் குச்சிகளை உபயோகப்படுத்தி சக்தியைக் கட்டுப் படுத்த முடியும்”

“ஆமாம். காட்மியத்திற்கு நியூட்ரான்களை சாப்பிட மிகவும் பிடிக்கும். உங்களுக்கு இட்லி சாப்பிடுவது போல” முகுந்த் விபூதி  இட்டுக்கொண்டு வந்திருந்த  ஒரு தமிழ் இளைஞனைப் பார்த்து சிரித்தார்.  

சாப்பாடு பற்றி நினைப்பு வந்ததும் தன்னிச்சையாக பின்னாலிருந்த கடிகாரத்தை பார்த்தார் முகுந்த். மணி எட்டே முக்கால். ஒன்பது மணிக்கு போஹா சாப்பிட வேண்டும்.

” அணு ஆலையை இயக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வில்லன், ஜெனான்.  நீ அதனைப் பற்றி விளக்குகிறாயா? ”  மறுபடியும் அவனிடமே கேள்வி கேட்டார்.

தான் அவருடைய இட்லி ஜோக்குக்கு சிரிக்காததால் வந்த விளைவு என்று தெரிந்தது அந்த இளைஞனுக்கு.

“ஜெனானை வில்லன் என்று சொல்ல முடியாது. அது நாயகன் கமலஹாசன் மாதிரி நல்லவனா, கெட்டவனா என்று பிரித்து சொல்ல முடியாத ஒரு பாத்திரம்”

முகுந்தைத் தவிர எல்லாரும் சிரித்தார்கள். 

“ஏனென்றால் கதிரியக்கத்தின் போது உருவாகின்ற ஒரு வாயுதான் ஜெனான்.  ஜெனானுக்கும்  காட்மியம் மாதிரி,  நியூட்ரான்  இட்லிகளை சாப்பிட பிடிக்கும். ஜெனான் அரசியல்வாதிகளின் தொண்டர் படை மாதிரி.  அவர்கள் இருந்தால் தான் அரசியல் கூட்டம் களை கட்டும். “

மீண்டும் தொடர்ந்தான்.

” ஆனால் ஜெனான் உற்பத்தி அணு ஆலையை நிறுத்தியவுடனே நிற்காது. லாரிகளில் தொண்டர் படையைக் கொண்டு வந்து விட்டு, பின்பு திடீரென்று கூட்டத்தை இரத்து செய்தால் என்ன ஆகும்? அத்தனை கூட்டமும் திரும்பிச் செல்லும் வரையில் வேறு ஒன்றும் செய்ய இயலாது. அது போல , ஆலையை நிறுத்தியவுடன் ஜெனான் கூட்டம் அதிகரிக்க ஆரம்பிக்கும். அவை தானாக வடியும் வரை ஆலையைத் திரும்ப துவக்க இயலாது. ஒரு நான்கைந்து நாட்கள் வரை கூட ஆகலாம் |”

முகுந்த்  பரவாயில்லையே என்று  மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

“நல்ல  விடைகள்.  நன்றாக புத்தகம் படித்து மனப்பாடம்  செய்து  இருக்கிறீர்கள்  என்று தெரிகிறது. அது மட்டும் போதாது. எனக்கு வேண்டுவது  உழைப்பு.  இந்த ஆலை  பல வருடங்களாக 50% சக்தியில் தான் இயங்கி கொண்டு இருக்கிறது.  இன்று முதல் முறையாக  அதன்  சக்தியை அதிகரிக்கப்  போகிறோம்.

மணி ஒன்பது ஆகப் போகிறது. உங்களை பத்து மணிக்கு கண்ட்ரோல்  அறையில் சந்திக்கிறேன். நீங்கள் ஆலையின் சக்தியை எப்படி அதிகரிக்கலாம் என்பதை நேரில் காணலாம்.”

——-

முகுந்த் அறைக்கு வந்து டிஃபன் காரியரைப் பிரிக்கும் சமயம் சரியாக, அறை வாசலில் தொழிலாளர் நல அலுவலர் ஆதித்தன் வந்து அவரை அழைத்தார். தொழிலாளர்களின் காண்டீன் பிரச்சனை பற்றி ஆதித்தன் கூறி அது ஒரு போராட்டமாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். மேலும் பிரச்சனையை பேசித் தீர்க்க உடனே தொழிலாளர்களை சந்திப்பது அவசியம் என்றார். முகுந்த்  காரியரை மூடி வைத்தார்.  

“சரி. பேசலாம். யூனியன் ஒப்புதல் பிறகு தானே விலையை ஏற்றினோம்?

“இது வேறே யூனியன், சார்”

” ஓ! அந்த மாரியின் யூனியன் தானே? அவருக்கு பஸ்ஸுக்குக் கூட சரியான நேரத்துக்கு வரத் தெரியாது. இவர்கள் எல்லாம் தலைவர்கள்!”

ஒன்பதரைக்கு துவங்க வேண்டிய மீட்டிங் பத்து மணிக்குத் தான் தொடங்கியது. அது மாரி எப்போதும் போல தாமதமாக வந்ததால் தான்.  ஆதலால் மீட்டிங் துவங்கும் போதே முகுந்த் ஏக கடுப்பில் இருந்தார். பசி வேறு. பேசாமல் போஹாவை சாப்பிட்டு விட்டே வந்திருக்கலாம்.

மனிதர்களுக்கு கடுப்பையும், எரிச்சலையும் ஊட்டுவது கார்டிசால் என்ற ஹார்மோன். அட்ரினலின் சுரப்பியினின் மூலமாக கார்டிசால் மனிதனுக்கு ஆபத்து வந்தால் சுரக்கும்.  ஆதி மனிதனுக்கு அது  உயிர் வாழ உதவியாக இருந்தது. வனவிலங்குகளைக் கண்டால் மனிதன் ஓடவோ, சிலை போல நிற்கவோ, போராடவோ அது பல விதத்தில் உதவி செய்தது. அதே போல் மனிதனுக்கு பசியைத் தூண்டுவது க்ரெலின் என்ற ஹார்மோன். சில சமயம் கார்டிசால் க்ரெலின் சுரப்பை அதிகரிக்கும். அதே போல க்ரெலினும் கார்டிசாலை தூண்டும். இரண்டும். சுருக்கமாக சொன்னால் மனித அணு உலையை இவை இரண்டும் சேர்ந்து வெடிக்க வைக்கலாம். அந்த அறையில் மாரி, முகுந்த் என்னும் இரண்டு பசித்த அணு உலைகள் எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற நிலமையில் இருந்தன.

மாரி தான் பேச்சு வார்த்தையை துவங்கினார்.

“இயக்குனர் அவர்களே! எனக்கு சுற்றி வளைத்து பேசத் தெரியாது. எங்களுக்கு வேண்டுவது நியாயம். காண்டீன் விலையைக் குறைக்க வேண்டும். நீங்கள் தொழிலாளர் வயிற்றில் அடிப்பதற்காக வெட்கப்பட வேண்டும் “

“இதில் வெட்கப் பட என்ன இருக்கிறது? விலைவாசிக்கு ஏற்றவாறு தான் விலையை ஏற்றி உள்ளோம். என்ன சாலமன். நீங்களும் தானே ஒப்புக் கொண்டீர்கள்.”

“அவரிடம் கேட்க என்ன இருக்கிறது? இங்கு இரண்டு யூனியன்கள். ஒருவரை மட்டும் கேட்டது பிரித்தாளும் சூழ்ச்சி. நீங்கள் இப்படி பிரிவினை செய்வதற்கு வெட்கப்பட வேண்டும்”

மாரிக்கு “வெட்கப்பட வேண்டும்” என்று ஒவ்வொரு வாக்கியத்தையும் நாடக பாணியில் முடிப்பது மிகவும் திருப்தியைத் தந்தது. அது முகுந்தை இன்னும் எரிச்சல் அடைய செய்தது.

“இதில் வெட்கப் பட என்ன இருக்கிறது? அதுதான் பெரிய யூனியன். நீங்கள் சாப்பாட்டில் காட்டும் அக்கறையை ஆலையை இயக்குவதில் காட்டினால் நாம்  மின் உற்பத்தியை 80% எப்போதோ செய்திருக்கலாம்”

“நிர்வாகத்தின் இயலாமைக்கு தொழிலாளர்களைக் குறை கூறுகிறீர்களா? எத்தனை முறை மக்கள் வரிப் பணத்தில் வெளிநாடு சென்று வந்தீர்கள்? அப்போது தொழிலாளர்களைக் கூட்டிச் சென்றீர்களா?   ஐந்து நட்சத்திர அறையில் ஓசி சாப்பாடு உங்களுக்கு. காண்டீனில் வேகாத உப்புமா எங்களுக்கு.  உழைக்கும் வர்க்கத்தை எல்லாவற்றிற்கும் குறை கூற நீங்கள் வெட்கப்பட வேண்டும்”

மாரியின் குரல் இப்போது உயர்ந்தது. முகுந்திற்கு தன் தவறு உறைத்தது. ஆலை உற்பத்தியைப் பற்றி இப்போது பேசியிருக்க வேண்டாம். மாரி வெளிநாட்டுப்பயணம் பற்றி சுட்டிக் காட்டியதும் அவரை எரிச்சலடையச் செய்தது. முகுந்தும் அவ்வப்போது வெளிநாடு சென்றது உண்டு. மாரிக்கு தகுந்த விடை அளிக்க முடியாத இயலாமை கோபக் கனலாக வெளிப் பட்டது. அவரது கோப கனலிற்கு கார்டிசாலும், க்ரெலினும் எண்ணெய் விட்டு நன்றாகத் தூண்டி விட்டன.  அவரால் அதற்கு மேலும் நா காக்க இயலவில்லை. இருக்கையை விட்டு எழுந்து நின்றார். 

“என்ன, திரும்பத் திரும்ப வெட்கப்பட வேண்டும், வெட்கப்பட வேண்டும் என்று உளறிக் கொண்டிருக்கிறாய்? இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? என் பேண்ட் ஜிப் திறந்திருக்கிறதா என்ன?”

முகுந்த் தன்னிலை மறந்து கத்தினார். சொல்லிழுக்குப்பட்டு  சோகாக்கும் நிலைமைக்கு  தள்ளப் பட்டார்.

அறையில் அமைதி .  அத்தனை  பேருக்கும்  முகுந்த் நாகரீகக் கோட்டை தாண்டி விட்டார் என்று தெளிவாக தெரிந்து இருந்தது.  அதை எப்படி  தங்களுக்கு  ஆதாயமாக மாற்றலாம்  என்று  மாரியும்,  சாலமனும்  ஒருவருக்கு  ஒருவர்  கண்ணாலேயே பேசிக் கொண்டனர்.   ஆதித்தன் இதை எப்படி சமாளிப்பது  என்று யோசிக்க ஆரம்பித்தார். 

——————

பத்து மணியில் இருந்து கண்ட்ரோல் அறையில் புதிதாகச் சேர்ந்த ஐவரும் காத்துக் கொண்டு இருந்தனர். ஆதித்தன் பத்தரை மணிக்கு வந்து கண்ட்ரோல் அறையின் தலைமைப் பொறியாளரிடம்  தொழிலாளர் வேலை நிறுத்தம் பற்றி கூறி ஆலையை நிறுத்துமாறு பணித்தார். முதல் நாளில்  ஆலை உற்பத்தி அதிகரிப்பை பார்க்க வந்த வேளையில், எதிர்பாராத விதமாக அணு ஆலையை நிறுத்தும் பணியைப் பார்க்கும் வாய்ப்பு அந்த ஐவருக்கும் கிட்டியது. 

அன்று  ஆலை முழுவதும் முகுந்த் பேண்ட் ஜிப் பற்றி பேசியது பரபரப்பாக விவாதிக்கப் பட்டது. ஒரு சாரார் அவர் ஜிப்பை அவிழ்த்தார் எனவும், சிலர் அது வெறும் வாய் வார்த்தை எனவும், சிலர் பாண்டேயே  அவிழ்த்து விட்டார்  எனவும் நடந்த  சம்பவத்திற்கு கண். காது,  மூக்கு வைத்து விவாதித்தனர். அந்த சம்பவத்தை சாக்காக வைத்து இரண்டு யூனியன்களும் இணைந்து பல கோரிக்கைகள் முன் வைத்தனர். அதில் ஒன்று முகுந்தின் நிபந்தனைகள் அற்ற பொது மன்னிப்பு. 

அன்று நான்கு மணிக்குள் முகுந்த் மன்னிப்புக் கடிதம் அளித்தார். நிர்வாகம் விசாரணை நடத்துவதாக வாக்குறுதி அளித்து, அதுவரை முகுந்தை ஸஸ்பெண்ட் செய்தது. காண்டீன் விலைகள் பழையபடி மாற்றப் பட்டன. பழைய மெனுவும் அமலுக்கு வந்தது. தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கிக் கொண்டது. ஆனால் ஐந்து நாட்கள் மின் உற்பத்தி தடை பட்டது. எனவே முதல் பாராவில் குறிப்பிட்டது போல் கோடிக்  கணக்கான மதிப்பில் தொழில் உற்பத்தி பாதிக்கப் பட்டது.

மாலையில் மாரி வீட்டுக்குள் நுழையும் போதே மீன் குழம்பு வாசனை மூக்கைத் துளைத்தது. 

“காலேல கோவிச்சுட்டு போயிட்டீங்களே! அதான் மறுபடியும் பெரிய பட்டணம் போய் மீன் வாங்கி கொளம்பு வைச்சிருக்கேன” என்று புன்னகைத்தாள் அஞ்சுகம்.

———————-

மாற்று யதார்த்தம் (alternate  reality ): 

நாம்  பெரும்பாலும்  என்ன நடந்தது  என்று ஆராய்ந்து, அது பற்றி கவலை பட்டு, முடிந்தால் யாரையாவது குற்றம் சொல்லி காலம் கடத்துவது வழக்கம்.  நாம் என்ன நடந்திருக்கலாம் என்று யோசித்தால் புதிய, மாற்று யதார்த்தங்கள், உண்மைகள் (alternate  reality ) வெளிப் படலாம்.  ஆனால், இந்த மாற்று யதார்த்தம் ஒரு சாத்திய  கூறு மட்டுமே. 

மாற்று யதார்த்தத்தின் கோணத்தின்  படி, மாரி காலை  மீன் குழம்பு சாப்பிட்டு  வேலைக்குப் போயிருந்தால்,  கான்டீன் விலை ஏற்றம் பற்றி  அன்றே  தெரிந்திருக்க  வாய்ப்பு இருந்திருக்காது.  அதே போல முகுந்த்  ஒன்பது மணிக்கு  மேல் ஆலு  போஹா  சாப்பிட்டு விட்டு நினைத்த  மாதிரி  அணு ஆலை  சக்தியை  அதிகரிக்க  முயன்று இருக்கலாம்.

எப்போது ஆலையின் சக்தியை  அதிகரிக்க முயன்றாலும்  அணு உலை  தானாகவே  ட்ரிப்  ஆகிவிடும்.   ட்ரிப் என்றால்  காட்மியம்  குச்சிகளை தாங்கி  பிடிக்கும்  மின் காந்தங்களின்  மின் இணைப்பு துண்டிக்க அவை “டொபு கடீர்” என அணு உலையின்  மத்தியில்  விழுந்து எல்லா நியூட்ரான்களையும்  கபளீகரம் செய்து விடும்.  இந்த முறை  அப்படி ஆகக் கூடாது என்பதற்காக மின் இணைப்புகளை மாற்றி  அமைத்து விட்டனர்.  இதில் தெரியாத விஷயம் என்னவென்றால்,  இந்த  புதிய மின் இணைப்பில் ஒரு சிக்கல்.  காட்மியம் குச்சிகளை  விரும்பியபடி  ஏற்றி இறக்க  முடியாது.

எனவே  ஆலையின் திறனை  80% கொண்டு சென்று இருந்தால்  என்ன நடந்து இருக்கும் என்று சொல்ல முடியாது.   நமது வில்லன்  ஜெனான் அந்த  சக்தியில்  எவ்வாறு  இட்லி சாப்பிடுவான் என்பது கேள்விக்குறி. அவன் இட்லிகளை குறைவாக சாப்பிட்டால்,  எதிர் பார்த்ததை விட  அதிகமாக உலையின் சக்தி அதிகரித்து இருக்கலாம்.  அதை குறைக்க முயன்றால்,  மாற்றிய  மின் இணைப்பின்  சிக்கல் காரணமாக  அதை குறைத்து இருக்க முடியாமல் போயிருக்கலாம்.  அதனால்  சக்தியின்  அதிகரிப்பு  கட்டு அடங்காமல்  போய்,  அணு உலை  வெடித்து இருக்கலாம்.  அதன் விளைவாக  உயிர் சேதம்  ஏற்பட்டு இருக்கலாம்.

இப்படி மாற்று யதார்த்தத்தில்  பல “லாம்” கள்  பற்றி நாம் கற்பனை செய்ய முடியும். இவை எல்லாம் அனுமானங்கள் தான். ஆனால்  இவை நடப்பதின்  நிகழ் தகவு (probability)  பூஜ்யமல்ல.  இவை  நடக்க முடியாது என்று யாரும் கூற இயலாது.

மாரியின் மனைவி  அணு ஆலையின் வேலை நிறுத்தத்திற்கு காரணமா?  அந்த வேலை நிறுத்தத்தினால், அணு ஆலையின் விபத்து தவிர்க்கப் பட்டதா?  ஒரு முடிவை வெறும் வாய்ப்பாகக் கூற முடியுமா அல்லது அது ஒன்றோடொன்று இணைந்த செயல்கள் மற்றும் சூழ்நிலைகளின் தொகுப்பா? 

உங்களுக்கு என்ன தோன்றுகிறது?  என்னை பொறுத்தவரை  எல்லாவற்றுக்கும் பெண்கள் மீது பழி போடுவது சரியல்ல.   அஞ்சுகத்தின் தம்பி தான் இதற்கு எல்லாம் மூல காரணம்!

~oOo~

பொறுப்பு துறப்பு  (Disclaimer):  இந்த  கதை கற்பனை மற்றும் கற்பனையின் படைப்பு. உண்மையான நிகழ்வுகள், நபர்கள் அல்லது இடங்களுடனான எந்தவொரு ஒற்றுமையும் முற்றிலும் தற்செயலானது. இந்தக் கதையில் சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரங்கள், உரையாடல்கள் மற்றும் நிகழ்வுகள் ஆசிரியரின் கற்பனையின் தயாரிப்புகள் மற்றும் உண்மையான தனிநபர்கள் அல்லது நிகழ்வுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல. இந்தக் கதையின் நோக்கம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு மற்றும் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.