கைச்சிட்டா – 3

This entry is part 3 of 8 in the series கைச்சிட்டா

அ) A Case of Exploding Mangoes

ராஜ்ஜியங்களின் தலைவர்கள் கொல்லப்படுவது என்பது எண்பதுகளில் சர்வ சாதாரணம். எகிப்து நாட்டின் ஜனாதிபதி அன்வர் சதத் 1981இல் தீர்த்துக் கட்டப்பட்டார். அதே ஆண்டில் பங்களாதேஷ் நாட்டின் ஜனாதிபதி ஜியா உர் ரெஹ்மான் அரசியல் காரணங்களுக்காக ஆட்கொலை செய்யப்பட்டார். 1984ல் இந்திரா காந்தி; 1986ல் ஸ்வீடன் நாட்டின் பிரதம மந்திரி ஒலொஃப் பால்மே. 1988ல் பாகிஸ்தானின் மொகமது ஜியா உல் ஹக்.

இவை எல்லாவற்றையும் பீட்டில்ஸ் புகழ் ஜான் லென்னன் துவங்கி வைத்தார் என்றுக் கூறலாம். தாம் யேசு கிறிஸ்துவைவிடப் புகழ் பெற்றவன் என்று லென்னன் கூற, அதைத் தாங்க முடியாத லென்னனின் பரம விசிறி அவரைக் கொன்று விடுகிறார். நான்தான் பெரியவன் என்று சொல்லும்போது, மற்ற பெருந்தலைகளைத் தொழுவோருக்குச் சலனம் உண்டாகிச் சாவைத் தோற்றுவிக்கிறது.

இந்த மாதிரி ஒவ்வொரு தலைவரும் ஏன் படுகொலை செய்யப்பட்டனர், எந்த மாதிரிச் சதிகளில் தப்பிக்காமல் மாட்டிக் கொண்டனர் என்பது சுவையான சரித்திர நாவல்களாகும். அவற்றுள் முக்கியமான ஒன்று, மொகமது ஹனீஃப் எழுதிய “வெடிக்கும் மாம்பழங்களின் வழக்கு.”

சுவாரசியமான நூல் குறித்த அறிமுகத்திற்குள் செல்லும்முன் நியு யார்க் டைம்ஸ் விமர்சனக் குறிப்பில் இருந்து:

Assassination has long been an appealing subject for male novelists. Geoffrey Household’s “Rogue Male” (1939), Richard Condon’s “Manchurian Candidate” (1959), Frederick Forsyth’s “Day of the Jackal” (1971), Don DeLillo’s “Libra” (1988) and James Ellroy’s “American Tabloid” (1995): all are fictions plotted by men about men plotting to murder other men.

ஜியா உல் ஹக் சாக வேண்டும் எனப் பலர் விரும்புகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் திட்டமிடுகின்றனர். அவர்களுக்கு தளபதி ஜியா உல் ஹக்கை ஏன் பிடிக்கவில்லை, எவ்வாறு தனித்தனியாகப் பாகிஸ்தான் நாட்டின் தலைவரை ஒழித்துக்கட்ட நினைத்தார்கள் என்பதை நகைச்சுவையாகவும், முரண்பாடுகளின் அணிவகுப்பாகவும் முன்வைக்கிறார் ஹனீஃப். ஹனீஃபிற்கு இது முதல் நாவல்.

கதாநாயகன் அலி ஷிக்ரி. அவனின் தந்தையும் இராணுவத்தில் இருந்தவர்; ஆனால், அபாண்டமாக அண்டப் பழி, ஆகாத பழி சுமத்தப்பட்டுத் தற்கொலை என ஜோடிக்கப்பட்ட கொலைக்கு உள்ளானவர். அலி ஷிக்ரி ஒரு போர் விமானி. அப்பாவின் மரணத்திற்குப் பழிவாங்க நினைக்கிறான். ஜனாதிபதி ஜியாவை கண்ணில் குத்த விரும்புகிறான். அதற்காகக் கத்தியைத் தீட்டி அதில் விஷத்தைத் தடவி நாள்தோறும் பயிற்சி செய்கிறான்.

நாயகன் அலி ஷிக்ரி ஒரு தற்பால் விரும்பி. அவனின் துணையாக ஒபைது வருகிறான். தன் துணைவன் அலிக்காக, ஒபைத் களத்தில் இறங்க நினைக்கிறான். ஒபைத்தின் விமானத்தை ஜியாவின் விமானம்மீது மோதி ஜனாதிபதியைக் கொல்லத் திட்டமிடுகிறான். ஆனால், ஒபைது சடாரென்று ஒருநாள் காணாமல் போய்விடுகிறான். கூட்டுக் களவாணி என சந்தேகிக்கப்பட்டு அலியைக் கைது செய்து லாஹூர் சிறையில் அடைக்கிறார்கள்.

அங்கேதான் துப்புரவாளர் சங்கமும் ஜனாதிபதியின் கொலைக்குத் திட்டமிடுவதை நாம் அறிகிறோம். அலி மேட்டுக்குடி. துப்புரவளார்களை அவன் ஒரு பொருட்டாகவே மதிக்காததையும் உணர்கிறோம்.

இந்த நாவலின் முக்கியமான பாகம், குருடி ஜைனப் (அ) ஜீனப். வன்கொடுமைக்கு உள்ளானவளை நடத்தை கெட்டவள் என சித்திரிக்கிறது பாகிஸ்தான் நாடும், நாட்டுத் தலைவரும். ஜீனபுக்கு கண்பார்வை கிடையாது. ஆனால், பாகிஸ்தான் மதத்தின் சட்டப்படி, பாலியல் வன்முறைக்கு உள்ளானவள், தன்னை வன்புணர்ந்தவர்களை அடையாளம் காட்ட வேண்டும். அடையாளம் காட்டப்பட்டவர்களும், தாங்கள்தான் வன்புணர்ந்தோம் என ஒப்புதல் வாக்குமூலம் தரவேண்டும். அப்போதுதான் ஏதோ நாலைந்து வருடமாவது சிறைத் தண்டனை, குற்றவாளிக்குக் கிடைக்கும். ஜீனபோ குருடி! அவள் எங்கே குற்றவாளிகளைச் சுட்டிக் காட்டுவது? அவள் நடத்தை கெட்டவள் என மத குருமார்களும், நாட்டின் தலைவரும் சான்றிதழ் வழங்கி அவளைக் கல்லால் அடித்துக் கொல்ல தீர்ப்பு வழங்குகிறார்கள். அப்பொழுது ஜீனப் ஒரு சாபம் இடுகிறாள்: “உன் குருட்டுப் பார்வையைப் போன்று குருட்டுக் காகம் ஒன்று உன்னைத் தாக்கிக் கொல்லும்! இது சத்தியம்!!” என்கிறாள்.

அமெரிக்காவையும் இந்த நாவல் விட்டுவைக்கவில்லை. ஒசாமா பின் லாடென் கூட வருகிறார். ஜீனப் ஒழுக்கங்கெட்டவள் எனப் பட்டம் கொடுத்த ஜியா உல் ஹக், எவ்வாறு டெக்சாஸ் செனேட்டரின் மார்பகங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதைச் சொல்வதன் மூலம், இஸ்லாமின் பார்வையை மொஹமது குறிப்பால் உணர்த்துகிறார். ஜியாஔல் ஹக்கின் முதலிரவு, அதன்பின் நடந்த கதை என்று கிளுகிளுப்பிற்கும் பஞ்சமே இல்லை.

முஜாஹிதீன் கொன்றார்களா? அலி கொன்றானா? ஜைனப் விட்ட சாபம் பலித்து குருட்டுக் காகம் கொன்றதா? அல்லது அமெரிக்க சதியா? மாங்காய்களில் குண்டு துளைத்து வெடித்ததா? நூலை வாசியுங்கள்.

  • Print Length: 247 pages
  • Publisher: Vintage Books
  • Publication Date: October 1, 2011
  • Language: English

குறிப்பு: பாஸ்டன் பாலா

~oOo~

ஆ) கூந்தப்பனை – சு.வேணுகோபால்

குறுங்கதைகள் பிரபலமாகிக் கொண்டிருக்கும் காலத்தில் இந்த நான்கு குறுநாவல்கள் கொண்ட தொகுப்பை முன் வைப்பதில் புன்னகை வருகிறது!

சு.வேணுகோபால் தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய இடம் வகிப்பது ஏன் என்ற கேள்வி எழுமானால் இந்த தொகுப்பு ஓர் எளிய, அதே சமயம் முக்கிய, விடையாக அமையும்.

புறச்சூழ்நிலைகளை, காலநிலைகளை, அகச் சித்திரிப்புகளுக்கு, தத்தளிப்புகளுக்கு இணையாகச் சொல்லிக்கொண்டே செல்லும், வாசகனின் அகத்தில் பாவாக நெய்து வைக்கும் படைப்புகள்.

ஒவ்வொரு குறுநாவலின் ஜீவனையும் ஓர் வாக்கியத்தின் வழியாக வெளிச்சம் கொடுப்பதனால் “கண்ணிகள்” குறுநாவலிற்கு, “நிலத்தை மீட்டியே தீரணும்” எனலாம். விவசாயி ரெங்கராஜனுக்கு தோப்பை மீட்க, பணத்தேவையை அடைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியாகிறது. கண்ணிகள் எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் முளைத்தெழுகின்றன. அல்லது அங்கேயே இவரைப் போன்றோருக்காக காத்திருக்கின்றன. எதிர்பாராத திசையிலிருந்து நீளும் உதவிக் கரத்திற்கு ஓர் விலையுண்டு… கொடுக்க முடியாதா என்றால் கொடுக்க முடியும்தான்…

“வேதாளம் ஒளிந்திருக்கும்” – வேதாளம் என்றுமே நிரந்தரமாக விலகிப் போகாதது என்று நிதரிசனம் அறிந்தும் “ஒத்த வார்த்தை போதும் மாமா, நெலமைய மாத்துறதுக்கு!” என்ற பெரும் எதிர்பார்ப்புக் கொடுக்கும் இந்த வாக்கிய உத்வேகம் இருக்கிறதே…ஓர் எளிய கிராமத்துப் பெண்ணிற்கு, செங்காட்டு ஈஸ்வரிக்கு, விளங்கும் இத்தரிசனம் மட்டும் இவ்வுலகில் பெரும் முடிவுகளை எடுக்கும் பெரிய மனிதர்களுக்கு கிடைக்குமானால்… ஏக்கம் என்றுமே இன்னொரு வேதாளம்தான் 🙁

“அபாயச்சங்கு” -உறங்கிக்கொண்டிருக்கும் அகத்திக் கீரையைத் திருடன்கூட பறிக்கமாட்டான்தான். ஆனால் களவிற்கு இரவென்ன, பகலென்ன…

தேவைப்படும் நேரங்களில் தேவைப்படும் விஷயங்கள் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் எதையாவது பற்றிக்கொண்டு மேலெழுவதற்கான கொடிக்கம்பு கிடைக்காமல் அடிக்கும் காற்று திசையெல்லாம் திரும்பி அலைக்கழிந்து மண்ணாவதே இயற்கை. ஒரு அத்தியாத்தின் முடிவில் இருக்கும் வாக்கியத்தைப் போல்… ஊற்றெடுக்கும் சலனங்களில்தான் எத்தனை விதங்கள்..

“கூந்தப்பனை” – படைப்புகளின் தலைப்பு கொடுக்கும் அதிர்வு மிக நுட்பமானது, வலியது, பல்வேறு சாத்தியங்களைக் கொடுக்கும் தன்மையுடையது. காமம் என்பது உப்புப் போலத்தான். அதை மட்டுமே உண்ண முடியாதுதான். ஆனால் அது கொஞ்சம்கூட இல்லாத பத்திய உணவை எல்லாராலும் ஏற்றுகொள்ள வாய்ப்பதில்லை. சிறு உப்பானாலும் அது, உறுதியாக இருக்கவேண்டிய மனித உறவுகளை வெறும் காகிதச் சங்கிலிகளாக மாற்றும் விந்தையை, ஆய்வகங்களில் அறிய தீராத வேதியலை பேசிச் செல்கிறது. எங்கோ வைத்த வெடிகளால் இன்னொரு இடத்தில் திறக்கும் ஊற்றுக்கண்கள் தரும் திறப்பு அலாதியானது. தன் சுயத்தை, கதையின் இறுதியில் அறிந்து கொள்ளும் சதீஷின் கணத்தைச் சொல்வதனாலேயே இந்தக் குறுநாவல் தமிழின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக ஆகிறது.

  • 144 பக்கங்கள்
  • தமிழினி பதிப்பகம்
  • முதல் பதிப்பு – டிசம்பர் 2001; இரண்டாம் பதிப்பு – டிசம்பர் 2012

குறிப்பு: சிவா கிருஷ்ணமூர்த்தி

~oOo~

இ) தெலுங்குச் சிறுகதைகள் தொகுதி -1

ஃபேஸ்புக் வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுமத்தில் மந்திரமூர்த்தி அழகு எழுதியது:

சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புக் கதைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர் எழுத்தாளர் கௌரி கிருபானந்தன். சுமார் 75 தெலுங்கு நாவல்களைத் தமிழில் மொழி பெயர்ப்புச் செய்துள்ளார். தன்னை மிகவும் பாதித்த, பயணம் செய்யக்கூடிய கதைகளை மட்டுமே தன்னால் மொழிபெயர்க்க முடியும் என்கிறார். எழுத்தாளர் கௌரி கிருபானந்தன் அவர்கள் தமிழ் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினை 2015 -ஆம் ஆண்டில் பெற்றுள்ளார்.

புத்தகத்தில் மொத்தம் உள்ள 10 சிறுகதைகளையும் பத்து எழுத்தாளர்கள் எழுதி இருக்கின்றனர். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளைக் களமாகக் கொண்டே இந்தத் தொகுப்பின் ஒன்பது சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஒன்றாகவே இருக்கின்றன. முழுமையான அசல் தமிழ்ச் சிறுகதைகளாகவே இந்தக் கதைகள் அனைத்தும் அமைந்திருப்பது எழுத்தாளர் கௌரி கிருபானந்தனுக்கு தமிழ் மொழியின் மீதும், தமிழ்ச் சிறுகதைகளின் கட்டமைப்பின் மீதும் இருக்கின்ற ஆழமான ஆளுமையைக் காட்டுகிறது.

முதலாவது கதையாக கவனசர்மா என்ற எழுத்தாளர் எழுதிய ‘அவள் வீடு’ என்ற சிறுகதை. நடுத்தர வயதில் உள்ள வேலை பார்க்கின்ற ஓரளவு வசதியும் உள்ள ஒரு பெண் கதையின் நாயகி. தனது மகனின் திருமணத்தை முடித்த பிறகும், கணவனுடன் குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதில் அவளுக்குப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவளுடைய கணவன் தனது வீட்டில்தான் மனைவி இருக்கிறாள்; எனவே அவன் கூறுவதை ஏற்பதாக இருந்தால் மட்டுமே அவளுக்கு அந்த வீட்டில் குடியிருக்க உரிமை உண்டு என்று ஒரு பிரச்சனையின் காரணமாக அவளிடம் வாதிடுகிறான். மனம் காயம்பட்ட அவள் அதன் தொடர்ச்சியாக கணவன் இருக்கும் அதே ஊரில் தனியாக ஒரு வாடகை வீடு பார்த்துக் கொண்டு குடி செல்கிறாள். தனது வீடு என்று சொல்வதற்கு தனக்கு உரிமையாக ஒரு வீடு வேண்டும்; எனவே கணவன் அதனை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் தன்னுடன் அந்த வீட்டில் வந்து வசிக்கட்டும் என்கிறாள் அவள். அவளது கணவர், அவளது பிள்ளை, அவளது சகோதரன் எல்லோரும் வந்து அவளைச் சமாதானப்படுத்துகிறார்கள். தனது வீடு என்று சொல்வதற்கு உரிமையில்லாத வீட்டில் தன்னால் எப்படி இருக்க முடியும்? என்கிறாள் அவள். அப்பா தனது தம்பிக்கு தந்த வீடும் தனது வீடு இல்லை என்பதற்குக் காரணம் சொல்கிறாள். தனது பிள்ளை வீடும் தனது வீடு இல்லை என்பதற்கும் காரணம் சொல்கிறாள். காலம் முழுவதும் ஒரு பெண் அப்பா, கணவன், மகன் என யாரையாவது ஒருவரைச் சார்ந்து அவ்ர்களுடைய விருப்பு, வெறுப்புகளின் படி இருக்க வேண்டியதுதானா! தன்னுடைய வீடு எது? என்று அவள் தனது சொந்தங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கும் கேள்வி – கணவன், சகோதரன், அவளது பிள்ளை என அனைவரையும் துளைத்துக் கொண்டே இருக்கிறது.

இரண்டாவது கதையாக கே. ஆர். கே. மோகன் எழுதிய ‘சுப்புணியின் நாடக அரங்கேற்றம்’ என்ற சிறுகதை. திருத்ராஷ்ட்ரன் பாத்திரத்துக்கு நடிக்க வேண்டியவன் விபத்தின் காரணமாக நடிக்க முடியாமல் போனதால் அந்தப் பாத்திரத்துக்கு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடிக்க வந்த சுப்ரமணியனின் முதல் நாடக மேடை அனுபவத்தை நாம் வாய் விட்டுச் சிரிக்கும் படியாகப் பேசுகிறது.

ஜி.பதஞ்சலி சாஸ்திரி எழுதிய ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்ற சிறுகதை. வெளிநாட்டில் 6 வருடங்களுக்கு முன் வேலை செய்த போது திருமணத்திற்காகப் பார்த்து வேண்டாம் என்று சொன்ன பெண்ணை அங்கு வேலையில்லாமல் இந்தியாவிற்குத் திரும்பிய பின் மீண்டும் பார்த்துப் பேசுகிறான் அவன். இருவரும் நீண்ட நேரம் பார்த்துப் பேசிய பிறகு அவனுக்கு அவளை மிகவும் பிடித்துப் போகிறது. அவள் அவனை நிராகிரிப்பதுதான் கதை.

முன்னுரையை இங்கு வாசிக்கலாம்: நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..5

  • தெலுங்குச் சிறுகதைகள் தொகுதி -1
  • எழுத்தாளர் கௌரி கிருபானந்தன்
  • பதிப்பகம்: விருட்சம் ஆண்டு:2018
  • பக்கம்:120
  • விலை: ரூ 100
Series Navigation<< கைச்சிட்டா – 2கைச்சிட்டா – 4 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.